புக்கெட் (Phuket) (பயணக் கட்டுரை)

நிர்மலா ராகவன்

தாய்லாந்தில் உள்ள புக்கெட் சுற்றுச்சூழலால் பாதிக்கப்படாத வெகு சுத்தமான, ஆகவே அரிதான, கடற்கரைப் பகுதி. அந்தமான் கடலால் சூழப்பட்டிருக்கும் இத்தீவிற்கு உலகெங்கும் உள்ள உல்லாசப்பயணிகள், குறிப்பாக குளிர் பிரதேசங்களில் வசிப்பவர்கள், வருகிறார்கள்.

IMG_20170716_123346

சுமார் இருபது வருடங்களுக்குமுன் மீனவர் கிராமமாக இருந்தது புக்கெட். இப்போதோ, அகில உலக விமான நிலையம். தாய்லாந்தின் தென்கோடியில் இருப்பதால், கோலாலம்பூரிலிருந்து விமானப்பயணம் ஒன்றேகால் மணிதான். Air Asia -வில் போனால்அவ்வளவாகக் கையைக் கடிக்காது.

பொதுவாக, நீல வண்ணம் என்றுதானே கடல் வர்ணிக்கப்படுகிறது? இங்கிருக்கும் அந்தமான் கடல் se green என்ற வகை. வெளிர் பச்சைநிறக் கடல் கொள்ளை அழகு.

கடை வெளியே அழகுப் பதுமை

நாங்கள் தங்கியிருந்த கரோன் கடற்கரையை ஒட்டி தென்னை மரமும் சவுக்கு மரமும் அடர்ந்திருந்தன. எதிர்ப்புறம் தெருக்கள். தெருக்களுக்குப் பின்னால் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள்.

அண்மையில் டெங்கிக் காய்ச்சல் கண்டு, பலவீனமாக இருந்த என் உடல் தேறுவதற்காக என்னுடன் வந்திருந்தாள் என் இளைய மகள் சித்ரா. கடலைப் பார்த்தாலே எனக்கு உற்சாகமாகி விடும் என்று புரிந்தவள்.

ஆங்காங்கே, `இங்கு குளிக்கக் கூடாது!’ என்று அபாய அறிவிப்பு செய்யும் சிவப்புக் கொடிகள். `குளிக்கப் போவதில்லை. சும்மா காலை நனைத்துக் கொண்டால் என்ன!’ என்று நான் துணிந்து (அசட்டுத்தனமாக?) போக, ஒரு பேரலை எதிர்பாராவிதமாக என்னை வீழ்த்திவிட்டது. கையை ஊன்றி, ஒரு காலை மடித்து உட்கார்ந்து, சிரிக்க ஆரம்பித்தேன்.

“இந்த இடத்தில் காலைக்கூட நனைக்க முடியாது. அப்படியே வீழ்த்திவிடும்!” என்று உள்ளூர்க்காரி ஒருத்தி என்னிடம் எச்சரிக்கையாகக் கூறினாள். நான் ஏன் வாயைத் திறக்கிறேன்!

விடுமுறைக்காலம் முடிந்துவிட்டதால், கைத்தடியை ஊன்றி நடந்த, வயது முதிர்ந்த வெள்ளைக்காரர்கள்தாம் அவ்விடத்தில் அதிகம் காணப்பட்டனர். வாழ்க்கை என்றால் ஒரே இடத்தில் இருப்பதில்லை, எத்தனை வயதானாலும், உயிர் உடலில் ஒட்டிக்கொண்டிருந்தால் இயன்றவரை வாழ்ந்து பார்க்கவேண்டும் என்ற பாராட்டத்தக்க குறிக்கோள் உடையவர்கள் அவர்கள்.

`வயசாயிடுத்து. ஒண்ணுமே முடியலே!’ என்று சுயபரிதாபத்துடன், இருந்த இடத்திலேயே இருப்பது அறிவீனம் என்பது நல்ல பாடமாக அமைந்தது. மனம் இன்னும் தளர வழி செய்வதுபோல்தானே அது?

தாய்லாந்தில் பெரும்பாலான மக்கள் புத்த மதத்தினர். (ஆங்காங்கே மசூதிகளும் காணப்பட்டன). இங்கு எக்காலத்திலும் காலனித்துவம் இருக்கவில்லை. அதனாலோ என்னவோ, உயர்வு, மட்டம் என்று (பிறர் ஏற்படுத்திவிட்டுப் போகும்) வித்தியாசமும் கிடையாது. எல்லாரையும் அணைத்துப்போகும் குணம். `அலி’ என்று நாம் குறிப்பிடுபவர்கள் சமூகத்தில் பிறரைப்போல சமமாகக் கருதப்படுகின்றனர்.

எந்தவித கண்டிப்பும் கிடையாது என்பதால் வீதிகளில் ஒரு சாண் அகல பிகினி அணிந்துபோகும் ஆண்களும் பெண்களும் சர்வ சாதாரணமான காட்சி. (முன்பு நிர்வாணக் குளியல் இருந்தது). குளிரால் பாதிப்பு அடையாதிருக்க விட்டமின் D உட்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தவர்களுக்கு எவ்வித பிரயத்தனமும் இல்லாது சூரியனே அதை அளிக்கும்போது, மூடி மறைத்துக்கொள்வானேன்! உச்சி வெயிலில், மூன்று மணி நேரம் நீச்சல் குளத்துள் காய்ந்தவர்களைப் பார்த்து எனக்கு ஒரே வியப்பு.

உல்லாசப்பயணிகளை நம்பித்தான் வாழ வேண்டியிருக்கிறது என்ற நிலையில், பல இடங்களில் சர்வசாதாரணமாகக் காணப்பட்டபோலித்தனம் எனக்கு எரிச்சலை மூட்டியிருக்கிறது. புக்கெட் தீவில் உள்ளவர்களின் சிரிப்பில் எவரையும் ஏற்கும் நல்ல குணம்தான் தெரிந்தது.

ஒரு கடை சாப்பாட்டுக்கடை என்றால், அடுத்தது மசாஜ் பார்லர். `உடலை இளைக்க வைக்கும் மசாஜ்’ என்று ஒரு வகை! பலருக்கும் அவசியம்தான் என்று தோன்ற, சிரிப்பு வந்தது. பின்னே? மலிவாகக் கிடைக்கிறதே என்று, வேளை பொழுது பாராது வகைவகையாக உள்ளே தள்ளினால்?

IMG_20170717_171737

“தேங்காய் எண்ணை மசாஜ் செய்து, உடலை பழுப்பு நிறமாக்குகிறோம்!” என்று ஒரு பலகை அறிவித்தது. நாமோ, முகத்தை வெண்மையாக்கும் கிரீம்களை நாடுகிறோம்! கருப்பாக இருக்கும் பெண்களுக்குக் கல்யாணம் ஆவதுகூட கடினம் என்ற நிலை! நல்ல உலகம்!

தாய்லாந்தில் செய்யும் மசாஜ் உலகப் பிரசித்தமானதாகையால், தினமும் போனோம். எண்ணையைத் தடவி கையால் உடம்பை நீவிப் பிடித்துவிடுதல் ஒருவிதம். மூலிகைகளைத் துணியில் சுற்றி, சூடு காட்டி ஒத்தடம் கொடுப்பதுபோல் இன்னொன்று. இம்முறையைச் செய்பவர்கள் விசேடப் பயிற்சி பெற்றவர்கள். முதலில் கைகளையும் கால்களையும் முறுக்கினாள் எனக்கு மசாஜ் செய்தவள், கடினமான யோகப்பயிற்சியை ஒரே நாளில் கற்றுக்கொடுக்க விழைவதுபோல். வலி உயிர் போவதுபோல் இருந்தாலும், அதன்பின் புத்துணர்வு பிறந்தது. கண்கள் தெளிவாகின. குறித்த நேரத்துக்குமேல், நமக்குத் தேவையானவரை செய்கிறார்கள்.

தீவானதால், இங்கு கடல்வாழ் இனங்களைக்கொண்டு ஆக்கப்பட்ட உணவுவகைகள் மலிவு. அதற்காகவே அண்டைநாடுகளிலிருந்து பயணிகள் வருகிறார்கள். காய் கனிகளும் மலிவு. ஒரு சாமானை விலை கேட்டு, வாங்காவிட்டால் கடைக்கார்கள் கோபிப்பதில்லை. புன்சிரிப்புடன், கைகூப்பி நமஸ்காரம் செய்கிறார்கள், `காபுன்கா’ (kapunka) என்று. (பெண்களுக்கு முகமன் கூறுவது, விடைபெறுவது இரண்டிற்கும் அதே வார்த்தைதான்).

ஒரே மாதிரியான அக்கம்பக்கத்துக் கடைச் சிப்பந்திகளுக்குள் போட்டி இல்லை, நட்புடன் பழகுகிறார்கள் என்பது என்னை ஆச்சரியப்படுத்திய மற்றொரு சமாசாரம்.

புக்கெட் தீவிலுள்ள எல்லாக் கடைகளிலும் ஒரு குறிப்பிட்ட பொருளுக்கோ, வாகன வசதிக்கோ ஒரே விலைதான். (இரண்டுமே அதிக விலை). அதனால் பேரம் என்பதே இல்லை.

சைவ உணவில், மீனுக்குப் பதில் (fish stock) தேங்காய்ப்பால் சேர்த்துச் சமைத்துக் கொடுக்கிறார்கள். வருகிறவர்கள் திருப்தியாக உணவருந்தி மகிழ வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் ஆக்குவதாலோ, என்னவோ, எல்லா இடங்களிலும் நல்ல ருசி. பெரிய அளவில் கொடுக்கிறார்கள்.

ஒரு நாள், நான் நிறைய நடந்துவிட்டு, களைப்புடன் ஒரு சாப்பாட்டுக்கடையில் நுழையுமுன்னர், வாசலிலிருந்த இளைஞன் அருமையாக, “Mamma! Come!” என்று என் தோளைப்பற்றி, சற்று உயரமாக இருந்த வாசற்படியைக் கடக்கவைத்து, உள்ளே அழைத்துச் சென்றான். என்னைப் பிரத்தியேகமாகக் கவனித்தான்.

திரும்பிப் போகையில், “உன் தாய் உன்னுடன் இல்லையா?” என்று விசாரித்தேன்.

“வெகு தூரத்தில், பாங்காக்கில் இருக்கிறார்கள்!” என்று வருத்தத்துடன் கூறிவிட்டு, “எனக்கு நீங்கள்தான் அம்மா,’ என்றான்.

ஆதரவுடன் அவன் தோளைத் தட்டிக்கொடுத்தேன். அவனுக்குப் பரம சந்தோஷம். “Take care of Mamma!” என்று என் மகளுக்கு அறிவுரை வழங்கினான்!

காற்றோட்டமாக இருந்ததால், நிறைய நடக்க முடிந்தது. எந்த வேலையும் கிடையாது. வெயில் வேளையில் உறக்கம். உடலும் மனமும் ஒருங்கே லேசானதில், கற்பனையில் ஒரு நாட்டியப் பாடலும் எழுந்தது. போனதற்கு ஒரு நற்பயன்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க