மணிமேகலையில் கூறப்படும் கடல் பெண் தெய்வங்கள்
-முனைவர். இரா.ஜெயஸ்ரீ
பொங்கிப் பெருகி அலைமோதும் நீரைப் பார்த்த தமிழர்கள் அந்த நீருக்குக் கடல் என்று பெயரிட்டனர். கடத்தற்கு இயலாதது என்ற பொருளை இச்சொல் தாங்கி நிற்கிறது.
தமிழ்ப்பெரும் புலவர் தண்டமிழ் ஆசான் சாத்தனார் என்பவரால் புத்த சமயக் கருத்துக்களை நிறுவுவதற்கு எழுந்த காப்பியம் மணிமேகலை. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த இக்காப்பியம் பெண்ணின் பெருமைக்குப் பெருமை சேர்ப்பது. இயற்கைக்கு அப்பாற்பட்ட இயற்கை இறந்த காட்சிகள் இந்நூலுள் அதிகம். இக்கட்டுரை மணிமேகலையில் கூறப்படும் கடல் பெண் தெய்வங்கள் குறித்தும் கடல் குறித்தும் ஆராய்கிறது.
சம்பாபதி
மணிமேகலைக் காப்பியத்தின் பதிகத்திலேயே சம்பாபதி பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. சோழர் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்திற்கு அப்பெயரும், சம்பாபதியால்தான் உண்டானது என்று புனைந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரமதேவன் நாவலந்தீவிற்கே முதன்மையான பதியாக “சம்பாபதி” என்னும் கடல் தெய்வத்தின் பெயரால் இந்நகரை உருவாக்கினான் என்பது அதன் காலப்பழமையைச் சுட்டுகிறது.
“தெய்வக் கருவும் திசை முகக்கருவும்
செம்மலர் முதியோன் செய்த அந்நாள்
என் பெயர்ப் படுத்தவிவ் விடும்பெயர்; மூதூர்
நின்பெயர்ப் படுத்தேன் வாழிய என” (மணி. விழாவறை காதை-(28-31)
சம்பாபதி காவிரித்தாய்க்கு ஆசியுரை வழங்குவதுபோல் கூறப்படுகிறது. சம்பாபதி நாவலந்தீவின் காவல் தெய்வம். விரித்த செஞ்சடை, செவ்வொளியால் சிவந்த திருமேனி கொண்டு அழகு விளங்கும் மேருவின் உச்சியிலே தோன்றியவள் அவள். சக்கரவாளக்கோட்டமுரைத்த காதையில், தனது மகனை இழந்து தவிக்கும் கோதமை என்ற தாய்க்கு உளவியல் உண்மையை உரைப்பவளாக இவள் காட்டப்படுகின்றாள்.
மணிமேகலா தெய்வம்
மணிமேகலா தெய்வம் கோவலனின் குலதெய்வம். “அதன் பெயரையே மாதவி மகளுக்கு இடுக” என்று கோவலன் கூறிய செய்தியும் சிலம்பினுள் காணலாம். உதயகுமரனுக்கு அஞ்சி மணிமேகலை பளிக்கறை புகுந்தாள். அவன் அகன்றவுடன் மணிமேகலையை மணிமேகலா தெய்வம் வான்வழி எடுத்துச்சென்று மணிபல்லவத்தீவில் விடுகிறது.
“உருவுகொண்ட மின்னே போலத்
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியாள்” (சக்கரவாளக் கோட்டமுரைத்த காதை 9-10) என்று பெண்ணுருவம் கொண்டு வந்த ஒரு மின்னல் கொடியைப் போலவும், இந்திரவில்லைப் போலவும் ஒளிபரப்பி அழகினைத் தந்து கொண்டிருக்கின்ற திருமேனி உடையவளாகவும் அவள் தோற்றம் உரைக்கப்படுகிறது.
உதயகுமரனிடமிருந்து தப்பிச் செல்வதற்கு ஆலோசனைகள் கூறுகிறாள். வாழ்க்கையின் அரிய உண்மைகளை மணிமேகலா தெய்வம் கூறுவதுபோல,
“அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து
மிக்க நல்லறம் விரும்பாது, வாழும்
மக்களிற் சிறந்த மடவோர் உண்டோ?”
(சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை (101-104) என்று கூறுவதன் மூலம், “இறப்பு உறுதி என்பது தெரிந்தும் நல்லற நெறிகளில் விருப்பமின்றி மக்களுள் வாழ்வோரும் உள்ளனரே” என்ற உலகியல் உண்மைகளைச் சாத்தனார் உரைக்கிறார்.
மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடையே மணிமேகலையைக் கொண்டு போய்ச் சேர்த்தபின் இரவிலே புகாருக்கு வந்து அரசகுமாரனுக்கு அறிவுரையும் சொல்கிறது. பின்பு மணிமேகலையின் முற்பிறப்புக் கதையினைக் கூறியதோடு மூன்று மந்திரங்களையும் மணிமேகலைக்கு உபதேசித்து மறைந்தது.
தீவதிலகை
பாத்திரம் பெற்ற மணிமேகலையின் முன்னர்த் தீவதிலகை தோன்றினாள்.
“பழுதில் காட்சியிந் நன்மணிப் பீடிகை
தேவர்கோன் ஏவலிற் காவல் பூண்டேன்
தீவதிலகை என்பெயர் – இது கேள்” (பாத்திரம் பெற்றகாதை (27-29)
என்று, “ பழுதற்ற தோற்றத்தினை உடைய நன்மையைத் தரக்கூடிய இந்த மாணிக்கப் பீடிகையைக் காவல் காக்கும் பணியினை மேற்கொண்டிருக்கின்ற தீவதிலகை யான்” என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறாள். இலங்கையில் யாழ்ப்பாணப் பகுதியில் “இரத்தினகிரி” எனும் ஒரு நகரமும், “சமனெலை” எனவும் வழங்கப்படும் “சிவனொளி பாதமலை” இதுவே என்பாரும் உளர்.
மணிமேகலைக் காப்பியத்தின் பாவிகமான பசிப்பிணி போக்குதலைத் தீவதிலகை வாயிலாகக் கூறுகிறார் காப்பிய ஆசிரியர்.
குடிப்பிறப்பு அழிக்கும், விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாணணி களையும்; மாணெழில் சிதைக்கும்;
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்,
பசிப்பிணி எனும் பாவி” (பாத்திரம் பெற்றகாதை (76-80) என்று பசிப்பிணி பற்றிக்கூறி, அமுதசுரபியைக் கோமுகிப் பொய்கையிலே மணிமேகலை பெற்ற பின்பு தீவதிலகையின் திருவடிகளை வணங்கினாள் மணிமேகலை.
நாகநாடு
ஆதிரையாளின் கணவன் சாதுவன் மரக்கலம் ஏறிப்பொருள் தேடிவர மரக்கலத்தில் பயணம் செய்த காட்சியானது
“நளியிரு முந்நீர் வளிகலன் வெளவ”
ஒடிமரம் பற்றி ஊர்திரை உதைப்ப” (ஆதிரை பிச்சையிட்ட காதை (13-14) என்று கடல்சார் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.
மணிமேகலையில் 24, 28, 29 ஆகிய காதைகளில் சோழநகரம் கடலால் அழிந்து ஒழிந்த காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. கடல்கோளின் பேரழிவையும், முழு அழிவையும் நேரில் பார்த்தவர்கள் தமிழர்கள் எனலாம். அழிந்த நாகர்நாடு இன்றைய நாகப்பட்டினத்திற்குத் தென்கிழக்காக இருந்திருக்கலாம் என்பர் அறிஞர். க.பா.அறவாணன். (தமிழ் மக்கள் வரலாறு, 134).
கடல் சார்ந்த உவமைகள்
மணிமேகலையின் பாட்டி சித்திராபதி உதயகுமரனிடம் சென்று அவன் மணிமேகலையை மணம் செய்து கொள்ளவேண்டும் என்று கூறினாள். அப்போது அவன் அடைந்த மகிழ்ச்சியைக் குறிப்பிடும் போது,
“ஓங்கிய பௌவத்து உடைக்கலப் பட்டோன்
வான்புணைப் பெற்றென” (உதயகுமரன் அம்பலம் புக்க காதை 05-66)
என்ற உவமை குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அலைகள் மிக்கெழுந்து பொங்கிய கடலிடையே மரக்கலம் உடைபட்டுச் சிக்கிய ஒருவன். சிறந்ததோர் புணையினைத் தான் உயிர்தப்பிச் செல்வதற்கு உதவியாகப் பெற்றாற்போல உள்ளம் மகிழ்ந்தான்” என்று கடல் இங்கே காட்சி உவமையாக்கப்பட்டுள்ளது.
கந்திற்பாவை
உதயகுமரன் காஞ்சனனால் கொலை செய்யப்பட்ட பிறகு சாதாரண பெண்ணைப்போல அழுது புலம்பிய மணிமேகலையை கந்திற்பாவை தெளிவிக்கிறது. அவள் உயர்கதிக்குச் செல்ல இருப்பவள் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.
புண்ணியராசன்
நாகபுரத்தை அரசாள்வோன் பூமிசந்திரன் மகனாகிய புண்ணியராசன். அவன் மணிகேலையை நீ யார்? என்று வினவ, அவள் தன் கையிலுள்ள ஓடு அவனுடையதே என்றும், மணிபல்லவத்துப் பீடிகையைத் தொழுது பழம்பிறப்பு உணருமாறும் கூற அவனும் கப்பலில் புறப்படுகின்றான். தீவதிலகை புகார் கடலால் கொள்ளப்பட்டதைக் கூறுகிறாள்.
“அணிநகர் தன்னை அலைகடல் கொள்க”
என இட்டனள் சாபம், பட்டது இதுவால்” (ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை (199-200) என்று மணிமேகலா தெய்வம் புகார் நகரத்தைக் கடலுள் பட்டு அழியச் சாபமிட்ட செய்தி உரைக்கப்பட்டுள்ளது.
நாம் வாழுகின்ற இந்த புவிக்கோளின் பெரும்பகுதி நீரால் சூழப்பட்டு இருக்கின்றது. உலக நாடுகளின் மொத்தக் கடற்கரை நீளம் 3,15,000 மைல்கள். கடலில் உள்ள தண்ணீர் மொத்த எடை 1,450,00,00,00,00,000,0000 மெட்ரிக் டன்கள் புவியின் மொத்த எடையில் 0.0022 விழுக்காடு. தமிழகத்தில் 1000 கிலோ மீட்டர் நீளம் கடற்கரை உள்ளது. நாம் கடலுக்கு அருகிலேயே வசித்தாலும் அதைப்பற்றி சிந்திப்பதில்லை.
நமது பழந்தமிழ்ப் பெருமை மீட்போம்!
கடல் அறிவில் புகழ் குவிப்போம்!
***
ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்
1) ஐம்பெருங்காப்பியங்கள், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை (உ.ஆ) இளங்கனி பதிப்பகம், சென்னை.
2) மணிமேகலை, புலியூர்க் கேசிகன்.
3) க.ப.அறவாணன், தமிழ் மக்கள் வரலாறு, தமிழ்க்கோட்டம், சென்னை.
Excellent information about the tradition of Manimegalai. – by R.Parthasarathy
Very nice.Good information
“மணிமேகலையில் கூறப்படும் கடல் பெண் தெய்வங்கள்” என்ற தலைப்பிலான கட்டுரை அருமையாக, தகவல்கள் நிறைந்து காணப்படுகிறது. வாழ்த்துக்கள்..