வளமான பாரதம் எப்போது?

0

பவள சங்கரி

தலையங்கம்

இந்தியாவில் 89% அதிகப்படியான மழையோ, பெய்யவேண்டிய அளவான மழையோ பெய்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 600 பேர் பெரும்மழையினால் உயிரிழந்துள்ளனர். இரண்டு இலட்சத்து இருபதினாயிரம் மக்கள் தங்கும் வீடுகள் இழந்து பாதுகாப்புப் பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அசாமில் மட்டும் 1 இலட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். வடக்கே கங்கை, பிரம்மபுத்ரா ஆகிய நதிகளிலும் பெரும் வெள்ளம். இந்த வெள்ளம் ஒரிசாவையே புரட்டிப் போட்டுள்ளது. குஜராத் மக்களும் தாங்கொணாத் துயரில் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் குடி நீர் கூட இல்லாமல் மக்கள் அல்லலுற்று தெருவில் இறங்கிப் போராடும் நிலையே உள்ளது. இப்படி இரண்டு பக்கங்களிலும் நேர் எதிராக வாழும் சூழலே நம் இந்தியாவில் நிலவுகிறது. மொழிவாரி மாநிலம் இருக்கட்டும் என்றாலும் நதிகள் மாநில வாரியாக இல்லாமல் அனைத்து நதிகளும் தேசிய உடைமையாக்கப்பட்டு கங்கை – காவேரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தினால் ஊழலற்ற பாரதமாக மட்டுமல்லாமல் வளமான பாரதமாகவும் மாறும் என்பது உறுதி. இதன் முதற்கட்டமாக அந்தந்த பகுதிகளில் இருக்கும் நதிகளை இணைத்து இந்த அரியப் பணியை தொடங்கி வைக்கலாம். இதற்கு பொருளாதாரம் ஒரு பிரச்சனை என்றால், நதிநீர் இணைப்பிற்காக ஒரு தனி வரியை ஏற்படுத்தினாலும் மக்கள் மனமுவந்து கட்டக்கூடும். வெள்ளத்தால் உயிரிழக்கும் துயரச் சம்பவங்களும் நடைபெறாமல் தவிர்க்கலாம். ஊழலற்ற பாரதம் என்பதோடு வளமான பாரதத்தையும் மக்கள் எதிர் நோக்கியுள்ளார்கள் என்பதே உண்மை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *