”நினைத்திட நம்முள் நவநீதம் பொங்கும்
கனைத்திடக் காமம் கலங்கும் -மணத்துழாய்
திண்ணிய தோளில் துலங்கும் துவாபரக்
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்…..
துழாய் -துளஸி….
”நினைத்திட நம்முள் நவநீதம் பொங்கும்
கனைத்திடக் காமம் கலங்கும் -மணத்துழாய்
திண்ணிய தோளில் துலங்கும் துவாபரக்
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்…..
துழாய் -துளஸி….
மீ.விசுவநாதன்

அந்திப் பொழுதில் அருமைத் தமிழில் அரந்தனையே
சிந்தித் திருந்தால் சிதையா மனத்தைச் செதுக்கிடலாம் !
நந்தி மறையை நமது செவியுள் நகர்த்துவதை
மந்தி ரமாக மதித்தே துதித்தல் மகத்துவமே !
மெய்யாம் தவத்தை மெதுவாய்க் கலைத்த ஒருவனது
மெய்யை எரித்து விபூதி யளித்த சிவபெருமான்
மெய்யே எனநான் மிகவும் விரும்பித் தொழுவதற்குப்
பொய்யாம் உடம்பு புரியும் உதவி புகழுடம்பே!
(கட்டளைக் கலித்துறை)
(பிரதோஷ தினம் : 05.04..2016)
— க. பிரகாஷ்.
இணையம் இன்று உலக முழுவதிலும் பலகோடி மக்களின் பயன்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதுக்கண்டுபிடிப்பு என்று கூறலாம். மிகப் பழைய தகவல்களையும், இன்று புதிதாகத் தோன்றக் கூடிய பல புதிய தகவல்களையும் பெற இணையம் உதவி வருகின்றது. தகவல்களை அனுப்புவதற்கும், தகவல்களைப் பெறுவதற்கும், கருத்துகளைத் தெரிவிக்கவும், வாங்கவும், விற்கவும், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இணையத்தில் தகவல்கள் குவிந்து கிடக்கின்றன.
இணையத்தில் படைப்பாளர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு தகவல்களைச் சேமித்து வைத்துள்ளார்கள். அவை இலக்கியம், இலக்கணம், திரைப்படம், வரலாறு, புவியியல், வானியல், அறிவியல், கணிதம், சோதிடம், பக்தி, பொதுஅறிவு, மருத்துவம், சித்தம், யோகம், சமையல்குறிப்பு, ஓவியக்கலை, விளையாட்டு போன்ற எண்ணற்ற தலைப்புகளில் தகவல்களாகவும், நூல்களாகவும் வெளியிட்டுள்ளனர்.
உலகெங்கும் சிதறிக் கிடைக்கும் தகவல்களை இணையத்தில் இணைத்துவிட்டால் யாரும் எந்த நேரமும் சென்று அத்தகவல்களைப் பெற முடியும். முற்காலத்தில் ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமாயின் நூலகங்களுக்குச் சென்று அலைய வேண்டிய சூழல் இருந்தது. இப்பொழுது தேவையான ஒன்றையோ அல்லது கருத்தையோ, ஒருவர் பற்றிய தகவல்களையோ, தெரிந்து கொள்ள நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் கையடக்கக் கருவியான அலைபேசி மற்றும் திறன்பேசி, நுண்ணறிபேசி, வில்லை, மாத்திரை, மடிக்கணினி, கணினி போன்றவற்றில் இணைய வசதிபெற்று கருத்துகளைத் தெரிந்து கொள்ளலாம்.
இணையத்தில் செய்திகள் படிக்கலாம், படங்கள் பார்க்கலாம், பாடல்கள் கேட்கலாம், தகவல் பரிமாறலாம், பொழுதுபோக்கலாம், அறிவைப் பெருக்கலாம். இது போன்ற பல தகவல்களைப் பெற்று மனநிறைவு பெறச்செய்வது இணையமாகும். அந்த அளவிற்கு இணையம் இன்று வளார்ந்து கொண்டே வருகின்றது.
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்” ( குறள் – 666)
என்ற குறளில் எண்ணியவர் எண்ணியபடியே செயல் ஆற்றுவதில் உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவார் என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது போல் நீங்கள் எதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அதனை இணையத்தில் சென்று ஒரு சில நொடிகளில் தேடித் தெரிந்து கொள்ளலாம்.
இணையம் சொற்பொருள்:
உலகம் முழுவதும் உள்ள அனைத்துக் கணினிகளையும் ஒரே மின்னணு வலையில் சங்கிலிப்பிணைப்பு செய்யப் பெற்று ஒன்றாக்கப்பட்டது தான் இணையம். உலகெங்கும் கணிப்பொறியில் உள்ள செய்திகளின் இணைப்பே இணையம் ஆகும். உலகளாவிய வலை இதனை ஆங்கிலத்தில் World Wide Web என்பர். இதனைச் சுருக்கமாக WWW என்றும் W3 The Web என்றும் குறிப்பிடுவதுண்டு.
இணைய வரலாறு:
இன்றைய உலகம் இணைய வழிகாட்டுதலின்படி பீடுநடை போடுகிறது எனில் அது மிகையன்று. 1950 ஆம் ஆண்டிற்கு அண்மையில், தொடர்பியல் ஆய்வாளர்கள் கணினி மற்றும் பல்வேறு தொலைத்தொடர்பு வலையமைப்பின் பயன்கள் பொதுவான தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் கொள்ள ஆவன செய்ய வேண்டும் என எண்ணினர்.
இதன் விளைவாக மையக் கட்டுப்பாடற்ற வலையமைப்புகளை வரிசைப்படுத்தும் முறைகள் மற்றும் தரவுப்பொது நிலைமாற்றம் போன்ற துறைகளில் ஆய்வு செய்யத் துவங்கினார்.
இணையத் தந்தை என ஜே.சி.ஆர்.லிக்லைடர் என்பவரை அழைக்கின்றனர்.
அரியக்கண்டுபிடிப்புக்கு வித்திட்டவர்கள் பிரிட்டானிய நாட்டு அறிஞர்களான “சார்லஸ் காவ் மற்றும் ஜார்ஜ்ஸ் ஹாக்மேன்” ஆகியோர் ஆவார்.
1980 இல் பிரான்ஸ் நாட்டில் மினிடெல் என்பவர் தொலைபேசிக் கம்பி வழியிலான தகவலறியும் சேவையைத் துவக்கினார் 1992 நவம்பர் மாதம் டெல்ஃபி என்ற நிறுவனம் பெரிய அளவிலான தகவல் சேவையைத் தொடங்கியது.
1993 செப்டம்பர் 15 இல் மிகப்பெரும் அளவிலான தேசியத் தகவல் பரவலுக்கான திட்டம் ஒன்றை அமெரிக்க அரசு வரைவு செய்தது.
1993 இல் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் (National Centre for Super Computing) என்ற மையத்தைச் சார்ந்த மாணவர்கள் பல வசதிகள் கொண்ட இணையத் தேடலுக்கான மென்பொருள் திரையைக் கண்டறிந்தனர். இது மொசைக் என்றழைக்கப்பட்டது. இதனை மார்க் ஆண்டர்சன் மொசைக் என்பவர் கண்டறிந்தார்.
1996 இல் ஃபைபர் நூலிழையின் உதவியால் தகவல்களை ஒளிப் பிம்பங்களாக மாற்றி நெடுந்தொலைவு அனுப்ப முடியும் என்று கண்டுபிடித்தனர்.
வலைப்பின்னல் மையம்:
வலைப்பின்னல் என்பது மீள்கருவி மையம் என்று குறிப்பிடுவர். பல சுருளிணைகள் ஒளியிழை, ஈத்தர்நெட் கருவிகளை ஒன்றாக இணைத்து அவற்றை ஒற்றை வலைப்பின்னல் கூறாகச் செயல்பட உதவும் கருவியாகும்.
1994 இல் WWW என்ற வலைப்பின்னலாக அமைந்த அமைப்பு உலகின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் கருவியாக உருமாற்றம் பெற்றது. இதன் மூலம் தகவல்களை மட்டுமல்லாத படங்களையும் பார்க்க முடிந்தது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சொ்ன் என்னும் அணுத்துகள் இயற்பியல் நிறுவனம் உலகு தழுவிய விரிவு வலைமுறையைக் கொண்டு வந்தது.
1995 இல் கொரிய நாட்டில் பிறந்த பின் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற நாம் ஜீன் பெய்க் (Nam Jun Paik) எப்பர் டவுன் (Yber Town) என்ற ஒன்றை நிறுவி அதன் மூலம் பல்லாயிரக் கணக்கான மக்களை இணைத்தார்.
இணையத்தை வழிநடத்துவோர்:
இணையத்தைத் தனிமனிதரோ அல்லது குழுவோ கட்டுப்படுத்துவதில்லை எனினும் இணையத்தினை வழிநடத்த இணையக் கழகத்தைக் கணினி வல்லுநர்கள் இலாப நோக்கமின்றி நடத்தி வருகின்றனர். அவற்றுள் IAB, IETF ஆகிய இரண்டு கழகங்கள் குறிப்பிடத்தக்கன.
IAB – Internet Architecture Board
IETF – Internet Engineering Test Force
IAB – என்பது கணினிகளை இணையத்தில் இணைப்பதற்கான வரையறையாகும். இணையத்தில் இணைந்துள்ள கணினிகளுக்கு முகவரிகளை இது வழங்குகிறது. மேலும் தேவைப்படுகின்ற நேரங்களின் தேவைக்கேற்ப வரையறைகளை மாற்றி அமைக்கும் பணியையும் இக்கழகம் செய்கிறது.
IETF – என்பது கணினியின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் அதனால் இணையத்தில் ஏற்படுத்த வேண்டிய மாறுதல்கள் குறித்தும் முடிவு செய்கிறது.
இணைய விதிமுறைகளைக் கண்காணிப்பதற்காக The Internet Society Overseas for the Development of the Internet என்ற அமைப்பும் இணையத் தளங்களை மேற்பார்வையிடுவதற்காக World Wide Web Consortium என்ற அமைப்பு செயல்பட்டு வருகின்றன.
இணைய வசதி வழங்குவோர்:
இணைய வசதிகளை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கட்டணம் செலுத்தி இணைய இணைப்புப் பெற்றுக் கொள்ளலாம். இத்தகைய சேவையை வழங்கும் நிறுவனங்கள் ஆங்கிலத்தில் Service provider என்று அழைக்கப்படும். தமிழில் சேவை வழங்குநர் என்று கருதப்படுவதுண்டு.
அமெரிக்காவில் GTR, MCI, SEINT, UUNET, AOL ஆகிய நிறுவனங்கள் இணையச்சேவையை வழங்குகின்றன. இந்தியாவில் VSNL, BSNL, DISHNET, STFY, AIRTEL, RELIANCE, TATA INDICOM முதலிய பல நிறுவனங்கள் இச்சேவையை அளிக்கின்றன. இணையச்சேவை வசதி என்று குறிப்பிடுவதுண்டு.
இணைய இணைப்பு பெறத் தேவையானவை:
இணைய இணைப்பு பெறுவதற்குக் கணினி, தொலைபேசி, இணைப்பு மாற்றி (Modem) ஆகிய மூன்றும் இருந்தால் போதும், இணைய வசதி பெற்றிடலாம். இணைய வசதி வழங்கும் நிறுவனங்களிடம் கட்டணம் செலுத்தி இணைப்பை பெற்றுக் கொள்ளலாம். நாம் பயன்படுத்தும் அளவிற்கேற்ப உரியத் தொகையானது முன் தொகையாகவோ பின் தொகையாகவோ செலுத்தப்பட வேண்டும்.
இணைய முகவரி:
ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் மற்றும் முகவரி இருப்பது போல் ஒவ்வொரு இணையதளத்திற்கும் ஒரு பெயர் மற்றும் முகவரி இருக்கிறது. இதனை இணைய முகவரி என்று கூறுவதுண்டு. http://www.prakashtamil.blogspot.com இம்முகவரியில் ஐந்து பகுதிகள் உள்ளன.
http – Hypertext transport protocol என்பதன் சுருக்கமாகும் (மீயுரைப் பரிமாற்ற நெறிமுறை)
www – Worldwide web என்பதன் சுருக்கமாகும் (வைய வரி வலை)
prakashtami – குறிப்பிட்ட ஓர் இணையதளத்திற்கு வழங்கப்படும் பெயர் ஆகும்.
blogspo – தனியார் நிறுவனத்தின் பெயர்
com – Commerce என்பது சுருக்கமாகும். இணையதளத்தின் தன்மையைக் குறிப்பிடுவதாகும்.
“சுவிட்சர்லாந்து நாட்டில் ‘செர்ன்’ என்னும் அணுத்துகள் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. அங்கு டிம் பெர்னர்லீ என்ற இயற்பியல் வல்லுநர் பணியாற்றினார். இவர் 1989 இல் உலகளாவிய வலைப்பின்னலுக்கு WWW – world wide web என்ற பெயரிட்டார்.”
டிம்பெர்னா் லீ இணையத்துக்கு அடிப்படையான மூன்று கருத்துக்களை கண்டுபிடித்தார்.
அவை:
http
url
html
http – Hypertext transfer protocol என்பதன் சுருக்கமே ஆகும். (மீயுரைப் பரிமாற்ற நெறிமுறை) வையக வலையில் தகவலைப் பெறுவதற்கான விதிமுறை புரோட்டோக்கோல் எனப்படும். தொடக்கம், செய்தி, படம், எழுத்து, முடிவு இவையென இந்த விதிமுறைகள் மூலம் முன்பே தீர்மானித்தார்.
URL – Uniform Resource Locator என்பதன் சுருக்கம் ஆகும். சீரான தள இடங்காட்டி இணையத்தில் உள்ள தகவலின் இருப்பிடம் காட்டும் முகவரியே இதுவாகும். இந்த முகவரியைப் பயன்படுத்தியே உலாவிகள் இணைய தளங்களைக் கண்டறிகின்றன. http;//www.Google.com என்பது சீரான தவள இடங்காட்டிகளுள் ஒன்று ஆகும்.
HTML – Hyper Text Markup Language என்பதன் சுருக்கம் ஆகும். மீயுரைக் குறிப்பு மொழி இணையத்தில் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்குத் தாவிச் செல்ல குறிப்புகள் எழுதவேண்டும். இந்த குறிப்புகள் எழுதும் மொழியே மீயுரைக் குறிப்பு மொழி ஆகும். ஆவணத்தில் இரு பகுதிகள் உண்டு.
அவை:
தலை
உடல்
தலைப்புப்பகுதியில் ஆவணத்தின் தலைப்பும் உடல் பகுதியில் ஆவணமும் இருக்கும். 1991 மே மாதம் இந்த வையக விரிவு வலை அறிமுகமானது. காலாகாலத்திற்குச் சேமிக்க முடிவதால் இப்பொழுது வலையேகதி என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது.
இணைய முகவரியும் இணையச் செயல்பாடும்:
ஒவ்வொரு தொலைபேசி இணைப்பிற்கும் ஓர் எண் இருப்பதுபோல இணையத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு கணிப்பொறிக்கும் ஓர் அடையாள எண் உண்டு. இந்த எண்ணில் நான்கு பகுதிகள் இருக்கும். சான்றுக்கு 456-12-25-78 என்பது ஒரு முகவர் கணிப்பொறியின் அடையாள எண் ஆகும். இந்த அடையாள எண்களை நினைவில் வைத்திருப்பது கடினம். எண்ணிற்குப் பதிலாக எழுத்திலான பெயரைப் பயன்படுத்துகிறோம்.
நமக்குத் தேவையான முகவரியை உள்ளிட்டால் தேடும் பொறி அந்தக் கணிப்பொறியைக் கண்டுபிடித்து நம் கணிப்பொறித் திரையில் காட்டும். இதற்கு யாகு, கூகிள், அல்டாவிஸ்டா எனப் பல தேடும்பொறிகள் உள்ளன.
இணையச் செயல்பாடு:
இணைய இணைப்பைப் பெறத் தேவையானவை சில கருவிகள் உள்ளன. அவை:
கணிப்பொறி – Computer
தொலைபேசி – Tele communication
மாற்றி – Modem
தொடர்பு மென்பொருள் – Communication Software
இணையச் சேவை வழங்குபவர் – Internet Service Provide
இது போன்ற கருவிகளின் மூலம் இணைய வசதிகள் பெற முடிகின்றது. தொலைபேசி வழியே இணையத்தைப் பயன்படுத்துவதில் தொடர்பு மென்பொருள்கள் பெரிதும் உதவுகின்றன. இப்பொழுது ஒளியிழைத் தடங்கள் வழியே இணைய இணைப்பை எளிதிலும் விரைவாகவும் பெறமுடிகிறது.
கணிப்பொறியில் இணையச் சேவை பெறுவதற்கு முன்பே இணையம் செயல்படுவதற்கான மென்பொருள்களைப் பொருத்தி இருக்க வேண்டும். Landline net தொலை நிகர வசதியாகவும், Modem மாற்றி போன்ற முறையிலும் இணையச் சேவை கணிப் பொறியில் பெறமுடியும்.
இணையக்குறியீடுகள்:
இணையக்குறியீடு என்பது ஒவ்வொரு நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் வெளிநாட்டிற்கும், கல்வி, பல்கலைக்கழகம், இராணுவம் போன்ற பல நிறுவனங்களின் விரிவான பெயர்களை தான் இப்பொழுது இணையத்தில் சுருக்கமாக வடிவமைத்துக் குறிப்பிட்டுள்ளனர்.
அவை:
கல்வி – edu
பல்கலைக்கழகம் – univ
அரசு சாராநிறுவனம் – org
இராணுவம் – mil
வலைப்பராமரிப்பு – net
அரசாங்கம் – gov
தமிழ்நாடு – tn
இந்தியா – in
சிங்கப்பூர் – sg
கனடா – ca
இங்கிலாந்து – uk
ஒருவருக்கு எழுதப்படுகின்ற கடிதங்களில் சரியான முகவரி இருந்தால் அக்கடிதம் உரியவருக்கு உரிய நேரத்தில் சென்று கிடைக்கும். முகவரி சரியாக இல்லை என்றால் அக்கடிதம் உரியவருக்குச் சென்று சேர்வதில் காலதாமதம் ஏற்படும்.
பல நேரங்களில் அது உரியவருக்குக் கிடைக்காமலேயே போய்விடும். கடிதத்தில் முகவரியே இல்லையென்றால் அக்கடிதம் யாருக்குமே சென்று சேராது.
இணையதள முகவரி சரியாக இருந்தால் அத்தளத்தைச் சரியாகச் சென்றடையலாம். முகவரி சரியாக இல்லையென்றால் உரிய இணையதளத்தை உரிய நேரத்தில் சென்றடைவது கடினம். முகவரியே இல்லையென்றால் இணையதளத்தை அடையவே முடியாது.
ஒவ்வொரு இணையதளமும் எளிதில் அடையும் வகையில் ஒவ்வொரு இணையதள முகவரியைக் கொண்டு விளங்குகின்றன. நாம் எளிதில் மனதில் பதியவைத்து கொள்ளும் வகையில் முகவரிகள் அமைந்திருந்தாலும் கணினிக்கு முகவரிகள் தெரியாது.
முகவரிகளைக் கணினி எண்களைக் கொண்டே அடையாளம் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக 212.58.240.32 என்ற எண் ஒரு முகவரியின் இணையதளத்தைக் குறிக்கிறது. இதனை IP முகவரி என்று கூறுவதுண்டு. Internet Protocol என்பதன் சுருக்கம் IP ஆகும்.
இணையத்தில் தகவல் தேடும் வசதிகள்:
விரிந்து பரந்த இந்த உலகத்தில் ஒருவருக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப்பிடித்தல் என்பது எளிதன்று. ஆராய்ச்சி தொடர்பாக ஒருவர் நூலகத்திற்குச் சென்று தனக்கு வேண்டிய ஒரு நூலைத் தேடினால் அந்நூல் அங்கு இருக்கலாம், இல்லாமல் போகலாம், இருந்து யாராவது எடுத்துப் போயிருக்கலாம் இருந்தும் கூட நம் பார்வைக்கு வைத்தும் கிடைக்காமல் போகலாம்.
இணையம் என்பது அவ்வாறு அல்ல; தேடிய நேரத்தில் தேடியதைக் கண் முன்னே கொண்டு வந்து குவித்துவிடும். சில வேளைகளில் நாம் ஒன்றைத் தேட அதனைக் கொண்டு வந்து தருவதோடு மட்டுமன்றி அதனோடு தொடர்புடைய மேலும் பல தகவல்களை அள்ளித் தந்து நம்மை வியக்கவைக்கும் வகையில் இருக்கின்றது. ஆய்வுப் பணியில் ஈடுபடுவோருக்கு இணையம் மிகச்சிறந்த வழிகாட்டுதலாகவும் அமைகிறது.
வேண்டியதை வேண்டியவாறு மட்டுமன்றி கூடுதலாகவும் அதே வேளையில் தனியொரு மனிதனோ அல்லது ஒரு குழுவினரோ தேடிக் கண்டுபிடிக்க முடியாதவற்றையும் மிகுந்த காலம் தேவைப்படுகின்ற தேடுதல்களைக்கூட மிக எளிதாகவும் விரைந்தும் செய்து முடிகின்ற ஆற்றல் வாய்ந்ததுதான் இணையம்.
சிறப்பு மிக்க தேடுதல் வசதிகளைப் பல நிறுவனங்கள் இணையப் பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன.
தேடு பொறிகள்:
அலெக்ஸா Alexa
கூகிள் Google
யாஹூ Yahoo
ஸ்டார்வர் Starware
தமிழ் தேடல் W3 tamil Search
மொசிலா ஃபையர் ஃபாக்ஸ் Mozilla Firefox
எம்.எஸ்.என் MSN
அல்டாவிஸ்டா Alta vista
பிங்கு bing
ஆஸ்க்.காம் com
இவ்வாறு தேடு பொறிகளின் உதவியால் வேண்டிய செய்திகளைச் சில நொடிப் பொழுதில் இருந்த இடத்தில் இருந்தவாறே எளிதில் பெற முடியும்.
தேடு பொறியினால் விளையும் சில நன்மைகள் இருக்கின்றன. அவை கால விரயத்தினைத் தவிர்க்கலாம். குறைந்த செலவில் தகவல்களை விரைந்து பெறலாம். கூடுதல் தகவல்களையும் பெறலாம். தமிழ் மொழி வழியாகவும் தேடலாம்.
இணையத்தில் கலந்துரையாடல்:
இணைய வழிக் கலந்துரையாடல், இணையவழி அளவளாவுதல், இணையவழி பொழுது போக்குதல் என்று கூறுவர்.
பொழுது போக்கிற்காக நண்பர்கள் ஒன்று கூடி எதனையோ பற்றி பொழுது போக்காகப் பேசி மகிழ்வது ஆகும். இதில் மகிழ்ச்சியும் பொழுது போக்குமே முதன்மை நோக்கமாக இருக்கும்.
இணையவழிக் கலந்துரையாடல் என்பது ஏதேனும் ஒரு பொருள் பற்றி ஆக்கப்பூர்வமான முறையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணையம் வழிக் கூடிப் பேசுவது ஆகும். இக்கலந்துரையாடலுக்கு இ – குழு (e – Group) என்று குறிப்பிடுகின்றனர். இக்குழுவில் நண்பர்கள் ஓய்வான நேரங்களில் அமர்ந்து கொண்டு கணினியிலோ அலைப்பேசியிலோ நேருக்கு நேர் முகம் பார்த்து பேசுவதும் தகவல்கள் பரிமாறுவதும் போன்ற உணர்வையும் மகிழ்ச்சியையும் இம்முறையின் வழியாகப் பெற இயலும் என்பர்.
பல நிறுவனங்கள் இலவசமாக இச்சேவையை வழங்குகின்ற அவ்வகையில் www.chatting.com என்ற இணையதளம் குறிப்பிடத்தக்கது.
இணையத்தின் பயன்கள்:
இணைய உலகம் உண்மையிலேயே விந்தையானது ஒருவருக்கு ஓரளவு நேரமும் இணையத்தில் உலாவுவதற்குப் புரிதலும் இருந்து விட்டால் உலகையே அவன் தன் கைகளுக்குள் கொண்டு வந்து விடலாம்.
இணையம் விரிந்து பரந்து கிடக்கும் இந்த உலகையே நம் வீட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் வாய்ந்தது.
“இறந்தது காத்தல் எதிரது போற்றல்” – (தொ.பொ.மரபு) 1610
இணையத்தின் வழி புதியன புகுந்து, அறிவுப் பெருக்கி, சிந்தனை செழிக்கச் செய்கிறது. இதன் மூலம் தகவல்களைப் பெறலாம், அளிக்கலாம், வாங்கலாம், கல்வி பயிலலாம், பயிற்று விக்கலாம், எவரும் – எங்கிருந்தும் – எந்தத் தகவல்களையும் 24 மணி நேரமும் நாடு, இனம், மொழி, என்ற எத்தகைய வேறுபாடுகளும் இன்றிப் பெறும் ஊடகமாக இணையம் விளங்குகிறது.
இதன் மூலம் தொலைவில் இருப்பவர்களைக் கண்காணிக்க முடியும். இவற்றின் வழி சாதனங்களையும் தகவல்களையும், கருத்துக்களையும் பகிர முடியும்.
இணையத்தில் அ முதல் ஔ வரை எந்தச் செய்தியையும் பெற முடியும். இணைய தளத்தை நல்ல நண்பனாகவும், எவ்வளவு நேரம் உறவாடினாலும் சலிப்பு ஏற்படாமல் உற்சாகம் குறையாத உணர்விலும் தகவல்களை அளிக்கும் வகையில் இணையம் திகழ்கிறது.
_____________________________________________________
பார்வைநூல்கள்:
திருக்குறள் உணர்வுரை – இரா. கனகசுப்பரத்தினம்
தமிழில் இணைய இதழ்கள் – அண்ணா கண்ணன்
தொல்காப்பியம் – தமிழண்ணல்
_____________________________________________________
க.பிரகாஷ்
தமிழ்த்துறை
தொழில் நுட்ப கள ஆய்வுப் பணியாளார்
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 46
_____________________________________________________
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.04.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
”ஆத்துமாவில் ஓர்கையும், ஆவின்மேல் ஓர்கையும்
மாத்திமாத்தி வைத்தாடும் மந்தியே, -நேத்தி(சரி….முந்தா நேத்தி)
அலைகடல் தாண்டும் அனுமானாய் வந்தாய்
கிளைதாண்டும் இன்று குரங்கு(மனம்)’’….கிரேசி மோகன்…
அடிக்கடி மனம் மாறும் நாம் கூட(சரி…. நான் கூட) குரங்குதான்…. ஆவின்பால் ஆன்மனின் பால் என்று மாறும் நம் மனம் ….மனமென்ன நாமே(சரி…நானே) சத்வ, ரஜஸ், தாமஸக் கிளை தாவும் குரங்குதான்….சத்வம் மேலோங்கினால் சாகரம்(கடல்) தாண்டும் அனுமார்….ரஜஸ், தாமஸம் மேலோங்க வேர் கடலை கொரிக்கும் குரங்கு….டார்வின் சொன்னது ஞாபகம் வந்தது….இது என்னுடைய அனுமானம் தான்….கண்ண ஆத்துமாவிலும்,தின்ன சோத்துமாவிலும் மாத்திமாத்தி கால்வைக்கிறோம்(சரி வைக்கிறேன்)….மனத்துக்கு மாத்திமாத்தி வைக்கக் கால் கிடையாது கை உண்டு….!
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 09: ஊர்சூழ் வரி
“கதிரவனது சொல்லைக் கேட்ட கண்ணகி, எஞ்சிய ஒற்றைச் சிலம்பை ஏந்தி நகரினுள் புக்கு, நகர மாந்தரை நோக்கி முறையிட்டு அழுதல்“
கதிரவன் இங்ஙனம் மறுமொழி தந்தான்.
அதைக் கேட்டதும்,
சங்குகள் அறுக்கப்பட்டுச் செய்த
வளையல்களைக் கையில் அணிந்த கண்ணகி,
அங்கே கணமும் நில்லாமல்,
தன்னிடமிருந்த ஒற்றைச் சிலம்பைக் 
கையில் ஏந்தி
நகருக்குள் சென்றாள்.
“முறைதவறி நடக்கும் அரசனின்
ஊரில் வசிக்கின்ற
பத்தினிப் பெண்டிரே!
ஒரு செய்தி கேட்பீர்களாக!
என்னிடம் இருக்கும் இச்சிலம்பு
என் கணவன் இங்கு கொண்டுவந்த
சிலம்பினைப் போன்ற வேறு ஒன்று;
அதைக் காண்பீராக!
யாரும் படாத துன்பம் பெற்றேன்;
இந்த மாலை வேளையில் இங்ஙனம்
எவரும் அறிந்திராத
துயரம் நான் அடைய வேண்டியதுதானா?
இதுதான் என் வினைப்பயன் போலும்;
என் கணவன் கள்வன் அல்லன்;
எனது காற்சிலம்பை
விலை கொடுத்து வாங்க இயலாமல்
என் கணவன் கள்வன் எனப்
பழி சுமத்திவிட்டார்கள்.
இது மிகவும் அநியாயமான ஒன்று;
கற்புடைப்பெண்கள் உங்கள்
கண்கள் முன்னே
நான் என் கணவனைக் காண்பேன்;
அங்ஙனம் நான் என் கணவனைக் கண்டால்
அவன் வாயிலிருந்து வரும்
நல்மொழிகள் கேட்பேன்;
இது என் சபதமாகும்;
அவ்வாறு அவன் கூறும்
நல்மொழிகளை நான் கேட்காமல் போனால்,
கொலையாவதற்குச் சமமான
தீவினைகள் செய்தவள் இவள் என்று
என்னை இகழ்ந்து பேசுவீராக!
அப்படிப் பேச
இது உங்களுக்கு
ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்.” என்றாள்.
இவ்வாறு பேரிடர் உற்று அழும்
கண்ணகியைக் கண்டு வருந்திய
வளமான மதுரை மக்கள்
உண்மை என்ன என்று அறியாமல் குழம்பினர்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html
படத்துக்கு நன்றி: கூகுள்
செ. இரா.செல்வக்குமார்
இந்த வார வல்லமையாளர் 2 வயதுக் குழந்தைப் பருவத்திலேயே இசையுலகில் அரிய புகழீட்டியவர்.
இந்தவார வல்லமையாளர் சித்திரவீணை ந. இரவிக்கிரண் (இரவிகிரண்) அவர்கள் தன் 2-ஆவது அகவையிலேயே [1] இசைத்தேர்ச்சியை இசையறிஞர்கள் முன்னே வியப்பூட்டும் விதமாக வழங்கி, அரிய புகழீட்டியவர். இப்பொழுது தனது 49 ஆம் அகவையில் திருக்குறளின் 1330 குறட்பாக்களுக்கும் இசைவாணர்கள் தேனிசை எனப்போற்றும்படியாக கருநாடக இராகங்களில் இசையமைத்துள்ளார். மொத்தம் 169 இராகங்களில் அரிய தாள அமைப்புகளுடன் அமைத்து அரிய செயல் ஆற்றியிருக்கின்றார். நம்புதற்கு அரியதாய் வெறும் 16 மணிநேரத்திலேயே இதனை அமைத்தார் [2][3]
சித்திரவீணை இரவிக்கிரண் அவர்கள் பிப்பிரவரி 12, 1967 இல் மைசூரில் பிறந்தார். இவர் 1969 இலேயே இசைமேடையில் தன் இசைப்புலமையை வெளிப்படுத்தியவர். தன்னுடைய முதல் இசைக் கச்சேரியை தன் 5-ஆவது வயதில் நடத்தினார். குழந்தைமேதை எனப்புகழப்பட்டவர். இவருடைய குருவும் தந்தையும் சித்திரவீணைக்கைலைஞர் நரசிம்மன் அவர்கள். இரவிக்கிரணின் பாட்டனார் புகழ்பெற்ற கோட்டுவாத்தியக் கலைஞர் நாராயணர் அவர்கள். திரு. இரவிக்கிரணன் அவர்களை”இந்திய இசையின் மோட்ஃசார்ட்டு” என அமெரிக்காவின் விசுக்காசின் செர்னல் அறிவித்தது (“the Mozart of Indian Music” by the Wisconsin State Journal, USA) [4]
1969 இல் இரண்டு அகவையில் இசைமேடையில் குழந்தைமேதை இரவிக்கிரண் [5]
மிக இளமையான பருவத்திலேயே இந்தியக்குடியரசுத்தலைவரிடம் இருந்து சங்கீத நாடக அக்காதெமிப் பரிசைப் பெற்றார் [6]

குடியரசுத்தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களிடம் இருந்து சங்கீத நாடக அக்காதெமி பரிசைக் கலைஞர் இரவிக்கிரண் அவர்கள் பெறுதல் [5].
கலைஞர் இரவிக்கிரண் மிகப்பல விருதுகளையும் பெருமைகளையும் பெற்றவர். அரிய கோட்டுவாத்தியத்தை வாசித்து தன் பாட்டனார் வழியில் மீண்டும் இவ்விசைக் கருவியை வழக்கில் நிறுவியவராயினும், தானும் புதிய இசைக்கருவிகளையும் இசைவகைகளையும் தோற்றுவித்தவர்.
கோட்டுவாத்தியம் என்பது வீணைபோலவே தோற்றமளித்தாலும் விரற்கட்டை அல்லது ”மெட்டுகள்” எனப்படும் தடுப்புகள் இல்லா ஓர் இசைக்கருவி. இசை கமகங்களையும் அலைவுகளையும் ஒரு கட்டைபோன்ற உறுப்பால் நரம்புகள்மீது அல்லது கம்பிகளின் மீது அழுத்தித் தேய்த்து, இழைத்து இசையுருவாக்கப்படும். சித்திரவீணை என்னும் அரிய இசைக்கருவி 21 நரம்புகள் கொணடது. தனது 10 ஆவது வயதிலேயே இந்தச் சித்திரவீணையை வாசிக்கும் கலைஞராக மாறினார். 20 நரம்புகள் அல்லது இழைகள் கொண்ட நவச்சித்திரவீணை என்னும் புதிய கருவியையும் கண்டுபிடித்தார். மெல்ஃகார்மனி (“melharmony”) என்னும் புதிய இசைவடிவத்தை உருவாக்கினார். மேற்கத்திய ஒத்திசையெனப்படும் ”harmony” என்னும் வகையோடு சுரங்களால் ஆன இராகம் போன்ற ”மெலடி” என்பதையும் பிணைத்து மெல்ஃகார்மனி என்னும் இசைவடிவத்தை உருவாக்கினார்.
இவருக்குத் தமிழ்நாட்டின் கலைமாமணி விருதும், மத்தியப்பிரதேசத்தின் குமார் காந்தர்வ சம்மான் விருதும், இந்தியாவின் உயர்விருதாகிய சங்கீத நாடக அக்காதெமி விருதும் வழங்கப்பட்டன. பிறவிருதுகளின் பட்டியலை விக்கிப்பீடியாவில் காணலாம் [1]. சித்தார் கலைஞர் பண்டிதர் இரவிசங்கர் இவரைப் புகழ்ந்து கூறியபொழுது, ”கடவுளை நம்பாவிட்டால் இரவிக்கிரணைப் பாருங்கள்” (“If you don’t believe in God, look at Ravikiran.”) என்றார் [6].

சித்தார் கலைஞர் பண்டிதர் இரவிசங்கர் அவர்களுடன் சித்திரவீணைக் கலைஞர் இரவிக்கிரண் [7]
சித்திரவீணை அல்லது கோட்டுவாத்தியத்தின் படங்களை அடிக்குறிப்பு [8] இல் காட்டப்பட்டுள்ள தொடுப்பில் காணலாம். கீழே உள்ள படம் கோட்டுவாத்தியம் போன்ற விசித்திர வீணை என்னும் கருவியாகும்.
கோட்டுவாத்தியம் போன்ற விசித்திரவீணை எனப்படும் கருவி [9]
16 மணிநேரத்தில் 1330 திருக்குறளுக்கும் 169 இராகங்களில் அரிய தாளத்துடன் இசையமைத்துப் பேரினிய செயலாற்றிய கலைஞர் சித்திரவீணை இரவிக்கிரண் அவர்களை இந்தவார வல்லமையாளராகப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.
அடிக்குறிப்புகள்:
[1] https://en.wikipedia.org/wiki/N._Ravikiran ; தமிழ் விக்கிப்பீடியா ( https://ta.wikipedia.org/s/49q3 )
[2] https://www.youtube.com/watch?v=FS7T3E6Zzt8
[3] https://www.youtube.com/channel/UCKXaa7bnupptNV6ZBjlicMw
[4] http://host.madison.com/news/local/education/local_schools/school-spotlight-mozart-of-indian-music-visits-middleton-cross-plains/article_ccf9e83c-a080-11e2-bb5a-0019bb2963f4.html
[5] இரவிக்கிரண் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.
[6] Page 253 of “Another Garland, Biographies of Carnatic Composers and Musicians” – N Rajagopalan 1992
[7] Lata Ganapathy’s Facebook wall (விக்கிப்பீடியாவழியாக [1]), ஏப்பிரல் 2011.
[8] http://instrumundo.blogspot.ca/2012/12/gotuvadyam-chitravina-chitra-veena.html?_sm_au_=iVVkHt1v418sNSsR
[9] https://en.wikipedia.org/wiki/Gottuvadhyam#/media/File:Ch2.JPG
பவள சங்கரி
படைப்புகள் வெளியிட்ட பின்பு அது படைப்பாளிக்கு மட்டும் தனியுடைமை அல்ல .. பொதுவுடைமையாகிவிடுகிறது என்பார்கள். படைத்தவர்களே அதைத் தள்ளி நின்று ஒரு வாசகராகத்தான் காண முடியும்! இந்த யதார்த்த நிலைக்கு உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிகாசோ மட்டும் விதிவிலக்கா என்ன?
ஆம், ஒரு முறை பிகாசோ வீட்டில் தம் நண்பர்களுக்கு மிகப்பெரிய விருந்து வைத்துக்கொண்டிருந்தாராம். எல்லோரும் ஆனந்தமாகக் கொண்டாடிவிட்டு மகிழ்ச்சியின் எல்லையில் திளைத்தவாறு அமர்ந்து அளவளாவிக்கொண்டிருந்தார்களாம்.. அப்போது அவர்களில் ஒரு நண்பர் வீட்டை சுற்றிப்பார்த்துவிட்டு வந்தவர், சுவர்களையெல்லாம் கவனித்துவிட்டு, பிகாசாவின் ஒரு ஓவியம்கூட அவருடைய வீட்டுச் சுவற்றை அலங்கரிக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் , ‘ஏனப்பா உன் ஓவியம் உனக்கே பிடிக்காதா, ஒன்றுகூட இங்கு இல்லையே’ என்று கேட்டாராம்.
அதற்கு ஓவியர் பிகாசா மிக யதார்த்தமாக, ‘சுவரில் ஓவியங்களை மாட்டி அழகு பார்க்க எனக்கும் ஆசைதான். ஆனால் அதன் விலை எனக்குக் கட்டுப்படி ஆகாதே.. நான் என்ன செய்ய..?’ என்றாராம்!
மீ.விசுவநாதன்
சின்ன தாக வீடு கட்டி
சிறப்புடனே வாழ்வ தற்கும்
முன்ன தாக தான தர்மம்
கொஞ்சமேனும் செய்ய வேண்டும் !
தன்ன தான பொருள்க ளேதும்
தனக்கென்று கிடையா தென்னும்
உன்ன தமான எண்ணம் வந்தால்
உலகமெலாம் நமது வீடே !
ஓட்டு வீடு தங்கக் கூரை,
ஒருவேளை நல்ல தூக்கம்,
பாட்டி னாலே இன்பங் கொண்டு
பசிமறக்கும் அன்பு நட்பு,
கூட்ட மாகச் சேர்ந்து வாழ்தல்
கொற்றவனை வெல்லு மென்பேன் !
வாட்ட மேதும் கொள்ள வேண்டாம்
வருவதெல்லாம் இறைவன் சொத்து !
(03.04.2016)
அந்தமானில் நடைபெற உள்ள கம்பனில் இயற்கை கருத்தரங்க அழைப்பு
கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்க நிகழ உள்ளது. தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். எண்பதிற்கும் மேற்பட்ட கருத்தரங்கக் கட்டுரைகள் அக்கருத்தரங்கில் வாசிக்கப்பெற உள்ளன. அவற்றின் அச்சுவடிவ ஆய்வுக்கோவையும் அன்றே வெளியிடப்பெறுகிறது.
கம்பன் கண்ட இயற்கை நலத்தை வெளிப்படுத்துவதை மையமாகக் கொண்டு இக்கருத்தரங்கம் நிகழ்கிறது. ஒருநாள் முழுநிகழ்வாக நடக்க உள்ள இக்கருத்தரங்கின் அழைப்பினை இதனுடன் இணைத்துள்ளோம்.
இவ்வழைப்பினைத் தாங்கள் வருகை தர அன்புடன் வேண்டுகிறோம். மேலும் இவ்வழைப்பினைத் தாங்கள் பரவலாக்கம் செய்து உதவ அன்புடன் வேண்டுகிறோம்.
—
M.Palaniappan
muppalam2006@gmail.com
manidal.blogspot.com
9442913985
–செண்பக ஜெகதீசன்
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி. (திருக்குறள் -888: உட்பகை)
புதுக் கவிதையில்…
அரமது அறுக்க அறுக்க,
தேய்ந்து
வலுவிழக்கும் இரும்பு…
இதுபோல் இன்னலுறும்
உட்பகையால்
வலுவிழந்து குடியும்…!
குறும்பாவில்…
அரமறுக்கத் தேய்ந்திடும் இரும்பாய்,
உட்பகையால் உறவறுந்து இன்னலுறும்
உயர் குடியே…!
மரபுக் கவிதையில்…
அறுத்திடும் அரமதால் தேய்த்தாலே
-ஆற்றல் மிக்க இரும்பதுவும்
புறமும் அகமும் வலுவிழந்து
-பயனிலாப் பொருளாய் ஆவதுபோல்,
உறவா யிருக்கும் குடியதிலே
-உட்பகை விடமது புகுந்திட்டால்,
பறந்திடும் குடும்பப் பெருமையெலாம்
-பாழாய்ப் போகும் குடியுறவே…!
லிமரைக்கூ…
இரும்புகெடும் அரத்தால் அறுத்தால்,
உயர்குடியும் கெட்டுவிடும்
உட்பகையால் அவரை வெறுத்தால்…!
கிராமிய பாணியில்…
வேண்டாம்வேண்டாம் பகவேண்டாம்,
ஒருநாளும்வேண்டாம் உட்பகவேண்டாம்…
இரும்ப அறுக்கும் அரத்தால
எப்பவும் அறுத்தா இரும்பயே,
இல்லாமப்போவும் இரும்புந்தான்…
இதுபோல
ஒறவாயிருக்கக் குடியிலத்தான்
உட்பகவந்து புகுந்தாலே
ஒறவெல்லாஞ் செதஞ்சிபோவுமே
குடியெல்லாங் கெட்டுப்போவுமே…
வேண்டாம்வேண்டாம் பகவேண்டாம்,
ஒருநாளும்வேண்டாம் உட்பகவேண்டாம்…!
நிர்மலா ராகவன்

கேள்வி: ஒருவருக்கு நிறைய நண்பர்கள் இருப்பது நல்லதுதானே?
விளக்கம்: எண்ணிக்கையைவிட, அந்த நண்பர்கள் எவ்வளவு தூரம் நமக்கு ஏற்றவர்கள் என்பதுதான் முக்கியம்.
நாம் பலருக்கும் உதவி புரிந்துகொண்டே இருந்தால், நிறைய நண்பர்கள் கிடைக்கலாம். ஆனால், எல்லாரும் நமக்கு நன்மைதான் புரிவார்களா? யோசிப்போம்.
நண்பர்களுக்குள் நேர்மையும், நம்பிக்கையும் அவசியம். எதிரே இருப்பவர் தன்னைப்பற்றி என்ன நினைத்துவிடுவாரோ என்ற கலக்கம் இல்லாது, மனதின் ஆழத்திலிருப்பதை ஒருவரிடம் பகிர்ந்துகொள்ள முடிந்தால், அவர் நல்ல நண்பர். அவர் நம் வெற்றியில் பெருமை கொண்டு, தாமே எதையோ சாதித்துவிட்டதைப் போன்று மகிழ்பவர். நாம் மனதைவிட்டு ஏதாவது சொல்லும்போது அநாவசியமாக இடைமறிக்காது, கவனமாகக் கேட்பவர். நம்மிடம் இருக்கும் பலவீனங்களைப் பெரிதுபடுத்தாது, அவைகளுடன் நம்மை ஏற்பவர்.
நம்மிடத்தில் இருக்கும் குணங்களே இன்னொருவருக்கும் இருப்பதைக் கண்டபின் ஏற்படுவதே உண்மையான நட்பு. இரு தரப்பினரும் ஒரே துறையைச் சார்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.
பலரும் தாம் கவனிக்கப்பட ஒரு நல்ல வாய்ப்பு நட்பின்மூலம்தான் என்று கருதும் காரியவாதிகளாக இருக்கிறார்கள்.
ஒருவர் பணமோ, புகழோ அடைந்துவிட்டால் அவரைப் புகழ்ந்து பேசியும், பரிசுப்பொருட்கள் அளித்தும், அடிக்கடி தொடர்புகொண்டும் அவர்களை நெருங்கிக் கொள்வார்கள். அதன்பின், `இன்னார் என்னுடைய நண்பர்!’ என்று பார்ப்பவர்களிடமெல்லாம் பெருமையாகப் பேசுபவார்கள்.
போனால் போகிறது என்று இதையெல்லாம் அலட்சியம் செய்துவிடலாம். ஆனால், கொஞ்சம் விட்டுக்கொடுத்தால், அவர்கள் விருப்பத்திற்கேற்றபடி நம்மை வளைக்க முயலுவார்கள். சுருங்கச் சொன்னால், இத்தகையவர் முதலில் நம் பின்னாலேயே வந்து, பின்னர் அவர்களை நாம் பின்தொடர வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
மனிதன் ஒரு தீவில்லை!’ (MAN IS NOT AN ISLAND) என்று சொல்வதுண்டு. குழந்தைப்பருவத்திலிருந்தே நண்பர்களை நாடும் குணம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. ஆனால், நமக்கு உண்மையானவர்களை எப்படித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்றுதான் புரிவதில்லை.
ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள், `இன்றும் என் சிநேகிதன் என்னுடன் சிநேகமாக இருப்பானோ, என்னவோ!’ (Will he ‘friend’ me today?) என்று பள்ளிக்கூடத்திற்குப் புறப்படுமுன் தாயிடம் சொல்லிக் கவலைப்படுவர்! தமக்குத் தெரிந்த வகையில், மிட்டாய், ரப்பர், சிறிய விளையாட்டுச் சாமான்கள் என்று பரிசுகள் கொடுத்து, பிறரைத் தம் வசப்படுத்த முயற்சிப்பார்கள். இவர்களுக்கு நண்பர்கள் முக்கியம். இருந்தாலும், உடன் படிப்பவர்களைக் கண்டு காழ்ப்புணர்ச்சி ஏற்படுவதை அவர்களால் தவிர்க்க இயலாது.
கதை: முதல் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த கண்ணனிடம் அவனுடன் படிக்கும் மாணவிகள் பாடங்களில் சந்தேகம் கேட்டு வருவது வழக்கம். அவன் அவர்களை இழிவாக நடத்தவில்லை என்பது காரணமாக இருந்திருக்கலாம்.
அவனுடைய நண்பர்களுக்கோ அவன் பலருக்கும் பிடித்தவனாக ஆகிவிட்டானே என்ற வயிற்றெரிச்சல். அதை வேறு விதமாகக் காட்டிக்கொண்டார்கள். `உனக்கு GIRL FRIEND இருக்கிறாள், டோய்!’ என்று கேலி செய்ய, அவமானம் தாங்காது, கண்ணனுக்கு ஒரே அழுகை! அந்த வயதில் இது பெருமைக்குரிய சமாசாரம் இல்லை.
சிறு பெண்களும் இப்படித்தான். மலேசியாவில் காலை ஏழரை மணிக்கே பள்ளிக்கூடம் ஆரம்பமாகிவிடும் என்ற நிலையில், எல்லாப் பெண்களுக்குமே அவர்கள் விருப்பை அலட்சியம் செய்து, தலைமயிரைக் குட்டையாகத்தான் வெட்டி வைத்திருப்பார்கள் தாய்மார்கள்.
இப்பெண்கள் நீண்ட பின்னலைக் கொண்ட ஒரு சிறுமியிடம், `உனக்குத் தலையில் பேன் இருப்பதால்தான் முடி இப்படி வளருகிறது!’ என்று கேலி செய்வதன்மூலம் அந்த வருத்தத்தைத் தீர்த்துக்கொண்டார்கள்.
`என் ஃப்ரெண்ட்ஸ் கேலி செய்கிறார்கள்!’ என்று எதற்காவது ஒரு குழந்தை தாயிடம் முறையிடும்போது, `இவர்கள் உன் நண்பர்களே இல்லை!’ என்று அடித்துச் சொல்லலாம். அச்சமயத்தில் குழந்தையிடம் இருக்கும் சிறப்பை விளக்குவது அவனுக்குத் தெம்பை ஊட்டுவது.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாது பழகுவதும், உதவி செய்வதும்தான் உண்மையான நட்பு.
கதை: என் மகன் அகால மரணம் அடைந்ததும், என் மனக்குமுறல்களை அனுதினமும் கேட்க என்னுடன் பணிபுரிந்த ஒரு சீன மாது நேரம் ஒதுக்கினாள். பேசும்போது நான் அழுதால் அவளுக்கும் கண்ணீர் வந்தது. நான் சொல்லவந்ததைப் புரிந்துகொண்டவளிடம் எனக்கு ஆழமான நட்பு ஏற்பட்டது.
இப்படி சில மாதங்கள் கழிந்தபின், என்னை அவளுடைய மதத்திற்கு மாற்ற பெரும் முயற்சி எடுத்துக்கொண்டாள். `என் மதம் மாறினால், என் மகன் திரும்பக் கிடைத்துவிடுவானா?’ என்று நான் மறுத்துவிட, அவளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விட்டது. அதற்குப்பின் நான் பேச முயன்றால், சிடுசிடுப்பாள். என் மனம் அமைதியடைய அவள் நிறைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறாள். ஆனால், அந்த நட்பிற்கு இப்படி ஒரு விலை நிர்ணயிக்க வேண்டுமா?
அதன்பின் அவள் மாற்றலாகிப் போய்விட்டாள். என்றாவது சந்தித்துக்கொண்டபோது, பழைய நெருக்கமோ, அந்த நட்பில் விளைந்த மகிழ்வோ இருக்கவில்லை என்பது வருத்தமான சமாசாரம். அவளைப் பொறுத்தவரையில், நான் அவளுக்குத் தோல்வியைத் தந்தவள்.
உண்மையான நண்பர்கள் நிழலைப்போல நம்மைத் தொடர வேண்டுவதில்லை. என்றாவது சந்தித்துக்கொண்டாலும், முகமன் இல்லாமல் உரையாடலை ஆரம்பிக்க முடியும். நாம் சொல்லவந்ததைப் புரிந்துகொள்வார் நண்பர். அவ்வப்போது ஏற்படும் மௌனத்திலும் ஓர் அலாதி அமைதி நிலவும்.
நல்ல நண்பன் நம்மிடம் மறைந்துகிடக்கும் நற்பண்புகளை வெளிக்கொணர வேண்டாமா! அதைவிட்டு, `நான் உன் நண்பன் என்றால், நான் சொல்வதை நீ அப்படியே ஏற்காமல் மறுத்துப் பேசுவாயா?’ என்று ஆரம்பித்தால், BLACKMAIL செய்கிறார் என்று அர்த்தம். இந்த வசனத்தால்தான் பல இளவயதினர் மது அருந்துதல், போதைப்பழக்கம் போன்ற தீய பழக்கங்களுக்கு உள்ளாவதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
வேறு சிலர், `இவன் நல்லவன்தான். சரியான சகவாசம் இல்லாததால் கெட்டுப்போய்விட்டான். நான் திருத்தி விடுவேன்!’ என்று நம்புகிறார்கள். பிறகென்ன! பன்றியுடன் கன்றும் கெட்ட கதைதான். நம்மால் பிறரை நல்வழிப்படுத்துவதைவிட, அவர்களால் நாம் கெடுவது எளிது. எல்லாரும் மகாத்மா ஆகிவிட முடியாது. இதற்குத்தான், `துஷ்டரைக் கண்டால் தூர விலகு!’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
பொதுவாக, மனிதன் மாறுதலை விரும்புவதில்லை. (THE ONLY ONE WHO LIKES A CHANGE IS A WET BABY!). ஏனெனில், புதிய இடத்தில் இருக்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்களோ என்ற கலக்கம். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு — அது பள்ளியோ, அலுவலகமோ — மாறிப்போகும் நிலை வரும்போது, நம்மை அதிகமாக வெளிக்காட்டாது இருப்பது அவசியம். முதல் சில நாட்கள் குறைந்த அளவில் பேசுவது நல்லது. பிறர் நம்மை எடைபோடக் காத்திருப்பார்கள். அப்போது நம்மை வீழ்த்திவிடுவது எளிது. வலுவில் வந்து நட்பு கொள்பவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
உடன் வேலை செய்பவர்கள் மட்டுமல்ல. புதிதாக ஒரு அலுவலகத்தில் பதவியேற்ற மேலதிகாரிகூடத் தன் கீழ் உத்தியோகம் பார்க்கும் ஒருவருடன் மிகுந்த தோழமையுடன் பழக முயற்சிப்பார். அதற்கும் ஏதாவது உட்காரணம் இருக்கும். அந்த அலுவலகத்தில் இருக்கும் பிறரைப்பற்றி அறிய இதைவிட எளிய சந்தர்ப்பம் கிடைக்குமா, என்ன! ஆனால், சற்று காலை ஊன்றிக்கொண்டதும், நண்பராக இருந்தவர் மாறிப்போவார். அதிகாரத்தைச் செலுத்தி, நம் மனதை நோகடிப்பார்.
மேலே கூறி இருப்பதெல்லாம் கணவன் மனைவியருக்கும் பொருந்தும். ஒருவர் கை மட்டுமே ஓங்கி இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால், தம்பதியருக்குள் தோழமையும், அதனால் கிடைக்கும் தன்னம்பிக்கையும் எப்படிக் கிடைக்கும்? (ஆனால், எல்லா ரகசியங்களையும் பகிர்ந்துகொள்வதால் பல தம்பதியருக்குள் விரிசல் விழுந்திருக்கிறது. பத்திரம்!)
தொடருவோம்
(https://www.youtube.com/
சிரம் தூக்கிப் படுத்துள்ள மனிதச் சிங்கம்
ஆபூ சிம்பெல் ஆலய விக்கிரகம்
நைல் நதி நாகரிகத் தோரணம்
மூவாயிரம் ஆண்டு தாண்டிய ஆலயம்
சிற்பம், சித்திரம் நிற்கும் களஞ்சியம்.
கற்பாறை குடைந்து கட்டிய அற்புதம்.
+++++++++++++++
‘உலகின் அற்புதங்களைக் காண்பதற்குப் பிற தேசங்களுக்குப் பயணம் செய்ய உங்களின் நட்பு எனக்கு வேண்டுமே தவிர, சோம்பித் திரிந்து கொண்டு வீட்டுக்குள்ளே முடங்கி மங்கிப் போய் முதுமையில் தேய்ந்து போக மாட்டேன். ‘
வில்லியம் ஷேக்ஸ்பியர் [In Two Gentlemen at Verona]

எகிப்தில் உள்ள உலகப் பெரும் மனித முகச் சிங்கம்
1798 ஆம் ஆண்டில் நெப்போலியனின் படை வீரர்கள் எகிப்தின் குறுக்கே சென்ற போது, மகாப் பெரும் மனிதத் தலைச் சிங்கம் மண்மூடி இருப்பது மீண்டும் கண்டுபிடிக்கப் பட்டது. புராண சிங்கத்தின் கட்டுமானக் காலம் கி.மு.2540 என்றும், அதனைக் கட்டியவர் கீஸாவில் இரண்டாவது பிரமிட் அமைத்த ஃபாரோ வேந்தரான காஃபிரேவாக [Pharao King Khafre] இருக்கலாம் என்றும் கருதப் படுகிறது! வெஸ்ட், ஸ்கோக் என்பவர் இருவரும் [John Anthony West & Robert Schock] சிங்க வடிவில் நீர் அரித்த தடங்களைக் [Water Erosion Marks] கண்டுபிடித்து ஸ்ஃபிங்ஸ் (7000-10,000) ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டப் பட்டிருக்கலாம் என்று மதிப்பிடுகிறார்கள்! ஸ்ஃபிங்ஸ் என்று சொல்லும் போது, பலர் எகிப்தின் மகாப் பெரும் மனிதத் தலை சிங்கம் ஒன்றைத்தான் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் எகிப்தில் மற்ற சிறு சிறு மனிதத் தலைச் சிங்கங்கள் பிற கிரேக்க, ரஷ்யக் கலாச்சாரங்களிலும் அவற்றைப் போல் இருப்பதாக அறியப் படுகிறது. 1854 இல் நினெவே என்னும் இடத்தில் [Nineveh (Assyria)] ஓர் அரண்மனையின் வாசல் புறத்தைத் தோண்டிய போது, 5 அடி நீளம், 5 அடி உயரமுள்ள இரண்டு அலபாஸ்டர் ஸ்ஃபிங்ஸ்கள் கண்டுபிடிக்கப் பட்டன என்று லேயார்டு [British Archaeological Pioneer, Austen Henry Layard] என்பவர் எழுதுகிறார். அந்த அதிசயச் சிங்கங்களுக்கு இறக்கைகள் இருந்ததோடு, ஆபரண மகுடமும், தாடி யில்லாமையும் தெரிந்தன!

எகிப்தின் பல்வேறு முகச் சிங்கங்கள்
மூன்று வித முகங்கள் கொண்ட சிங்கங்கள் எகிப்தில் இருந்ததை நாம் இப்போது அறிகிறோம். 1. கிரிஸோஃபிங்ஸ் என்னும் ஆட்டுத் தலைச் சிங்கம் [Crisophinx (Lion Body with Ram Head)] 2. ஹையரோஸ்ஃபிங்ஸ் என்னும் கழுகுத் தலைச் சிங்கம் [Hierocosphinx (Lion Body with Hawk Head)] 3. ஆன்ரோஸ்ஃபிங்ஸ் என்னும் மனிதத் தலைச் சிங்கம் [Androsphinx (Lion Body with Human Head)]. கோயில் வாசல்களில் பாதுகாப்பு வடிவங்களாய் வரிசையாக அமைக்கப் பட்டிருக்கும் சிங்கங்கள் சாதாரணமானவை. வரிசையாக அமர்ந்திருக்கும் ஆட்டுத் தலைச் சிங்கச் சிலைகளை எகிப்தின் லக்ஸர், கார்நாக் [Luxor & Karnak in Egypt] என்னும் இடங்களில் காணலாம். பல்லாயிரம் ஆண்டுகள் மணற்புயலில் மூழ்கிப் போன பண்டைய சிங்கச் சிலைகளும் புதிதாய்க் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

1994 ஆம் ஆண்டில் ஜான் வெஸ் எம்பரர் [Jean Yves Empereur] அலெக்ஸாண்டிரா துறைமுகத்தின் கடற்தளத்தைத் தோண்டி ஆராய்ந்ததில் ஃபாரோ காலத்திய கலங்கரைக் கோபுரத்தின் [Light House Tower] சிதைவுப் பகுதிகளைக் கண்டெடுத்தார். அத்துடன் 26 ஸ்ஃபிங்ஸ் சிற்பங்களைப் [From: 12 Dynasty Sesostris III (B.C.1991-1786) To 26 Dynasty Psamtik III (B.C.525)] புதைகடலில் கண்டெடுத்தார். ஸ்ஃபிங்ஸ் என்றால் கிரேக்க மொழியில் ‘கழுத்தை முறி ‘ என்று அர்த்தம் கொடுக்கும். அகப்படும் விலங்குகளின் கழுத்தைத் திருகிக் கொல்லும் சிங்கத்தைக் குறிப்பிடவே, கிரேக்கர் அவ்விதம் பெயரிட்டுஅழைத்தனர்.

பூத மனிதச் சிங்கத்தின் வயதும், வடிவமும்
கெய்ரோவுக்கு ஆறு மைல் மேற்கே உள்ள எகிப்தின் கீஸா பீட பூமியில் எல்லாவற்றுக்கும் பெரிய மனித முகச் சிங்கம் கட்டப் பட்டிருக்கிறது. அது ஃபாரோ வேந்தர்களின் பண்டைய தலைநகரான மெம்ஃபிஸ் [Memphis] பகுதியிலே கிழக்கு நோக்கி உள்ளது. அங்குதான் கூஃபு, காஃபிரே, மென்கெளரா [Khufu, Khafre, Menkaura] எனப்படும் முப்பெரும் பிரமிட்கள் நிறுவகமாகி யுள்ளன. கீஸாதான் எகிப்தின் பண்பாட்டுக் கலாச்சார நாகரீகம் செழித்த பகுதியாகக் கருதப் படுகிறது. வேந்தருக்குரிய பெரிய பிரமிட்களின் அருகே அவரது பட்டதரசிகளின் சிறிய பிரமிட்களும் எழுப்பப் பட்டிருக்கின்றன.

மகாப் பெரிய ஸ்ஃபிங்ஸ் உடல் ஆண் சிங்கத்தைப் போன்றும், சிரம் மனித முகத்தைப் பெற்றும், 241 அடி நீளம், 66 அடி உயரமும் கொண்டு பிரம்மாண்டமான தோற்றமுடன் படுத்திருக்கிறது. கீஸா பீட பூமியைத் தோண்டி, இயற்கையாக உள்ளமைந்த மென்மையான சுண்ணக் கல்லில் [Lime Stone] சிற்பமாய்ச் செதுக்கப் பட்டது. சிங்கத்தின் மனிதத் தலை மீது ஒரு காலத்தில் ‘நாக மகுடம் ‘ [Uraeus (Rearing Cobra Headpiece)] ஒன்று இருந்ததாகத் தெரிகிறது. கிளியோபாத்ராவின் கிரீடத்தில் உள்ளது போல் இருந்த தலை தூக்கிய சிங்கத்தின் நாகம், தீய சக்திகளிலிருந்து நாட்டைக் காப்பதற்கு வைக்கப் பட்டிருந்ததாகக் கருதப் படுகிறது. சிங்கத்தின் முன்பாக நீட்டிய கால்களுக்கிடையில் கி.மு.(1400-1390) ஆண்டில் ஆண்டு வந்த துத்மோஸ் [Thutmose IV] வேந்தனின் கல்வெட்டுத் தட்டு [Granite Stela] ஒன்று நிறுத்தப் பட்டுள்ளது. மேலும் கல்வெட்டுக்கு முன்பாக கி.மு.(1279-1213) இல் ஆண்ட வேந்தன் ராமிஸிஸ் [Rameses II] காலத்துக் கோயிற் பீடம் ஒன்றும் வரலாற்றுச் சின்னமாய் இருக்கிறது.

கி.மு.2540 இல் ஃபாரோ மன்னர்களின் பரம்பரையான காஃபிரி வேந்தன் கீஸாவில் தனக்குரிய பிரமிடைக் கட்டியதோடு அருகே, பிரமிக்கத் தக்க அந்த மனிதச் சிங்கத்தையும் அமைத்தான் என்று எகிப்திய வரலாறு ஒன்று கூறுகிறது. பிரிட்டாஷ் பூதளவாதி அண்டனி வெஸ்ட் எகிப்தின் பல நூற்றாண்டு காலநிலைச் சீர்போக்குகளை ஆய்ந்து, பாலைவனத்தில் அடிக்கும் மணற்புயலால் [Sand Storm] ஏற்படாது, நீர் அரிப்பால் [Water Erosion] மனிதத் தலைச் சிங்கத்தின் வடிவம் சீர்குலைந்து போனது என்று குறிப்பிடுகிறார். அக்கூற்றைப் பூதளவாதி ராபர்ட் ஸ்கோக்கும் சரியென்றே ஒப்புக் கொள்கிறார். மேலும் வெஸ்ட், ஸ்கோக் இருவரும் பூத வடிவான ஸ்ஃபிங்ஸ் (7000-10,000) ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்னும் வேறுபட்ட ஒரு கருத்தையும் குறிப்பிட்டிருகிறார்கள்!

பிரம்மாண்டமான ஆபூ சிம்பள் கற்குகை ஆலயங்கள்
5000 ஆண்டுகளுக்கு முன்பாக இயற்கையான பாறைக் குன்றுகளைக் குடைந்து பிரமிக்கத் தக்க முறையில் பேரெழிலுடன் செதுக்கிய அபூ சிம்பள் ஆலயங்கள் [Abu Simbel Temples] போன்று உலகிலே வேறு எந்த நாட்டிலும் காண முடியாது! அப்பெரும் இரண்டு ஆலயங்களை ஃபாரோ வேந்தன் ராமெஸிஸ் [Ramesses II] கி.மு.(1279-1213) ஆண்டுகளில் தனது பராக்கிரமத்தையும், தெய்வீக உணர்ச்சியையும் எடுத்துக் காட்ட ரிஹாராக்தே [Reharakhte] ஞாபகமாகவும், மனைவி நெஃபிர்டாரி [Nefertari] நினைவாகவும் அமைத்ததாக அறியப்படுகிறது. 1813 ஆம் ஆண்டில் எகிப்தின் நைல் நதி நாகரீகத்தைக் காண வந்த ஜே.எல் பர்காரெட் [J.L. Burckhardt] என்பவர் நைல் நதியைக் கடந்து குன்றுகளைப் பார்வை யிட்ட போது, மணல் மூடிய அழகிய ஓர் ஆலயத்தை நவீன சூடான் எல்லைப் பகுதியில் கண்டுபிடித்தார். நைல் நதியில் அமைக்கப் பட்டுள்ள உலகப் பெரும் அணைகளில் ஒன்றான அஸ்வான் உயர்ந்த பேரணையிலிருந்து சுமார் 170 மைல் தூரத்தில் வரலாற்றில் புகழ் பெற்ற அப்பெரும் இரண்டு ஆலயங்கள் கட்டப் பட்டிருகின்றன.

ராமெஸ்ஸிஸ் வேந்தர் தனக்காகக் கட்டிய முதல் ஆபூ சிம்பள் ஆலயத்தின் வாசலில் 67 அடி உயரமுள்ள நான்கு பூத வடிவான சிற்பச்சிலை மன்னர்கள் வீற்றிருக்கும் கம்பீரமான காட்சி காண்போரை பெரு வியப்பில் தள்ளிவிடும்! ஆலய முகப்பில் சிற்பச் சிலைகள் வீற்றிருக்கும் தளப்பகுதி மட்டும் 120 அடி அகலமும், 100 அடி உயரமும் கொண்டது! வேந்தரின் இரண்டு கற்சிலைகள் வலது புறமும், அவற்றைப் போல் இரண்டு கற்சிலைகள் இடது புறமும் பிரம்மாண்டமாக அமர்ந்துள்ளன. நான்கு பூதச் சிலைகளில் இடப்புறத்தில் உள்ள ஒன்று மட்டும் பூகம்பத்தால் உடைந்து போனதாக அறியப் படுகிறது! அந்த ஆலயம் கிழக்கு நோக்கி நிற்கிறது. சூரியக் கடவுளின் சிற்பம் தலை வாயிலின் மேலே உயரத்தில் செதுக்கப் பட்டிருக்கிறது. கோயில் நேரமைப்பு [Temple Alignment] முதலில் துள்ளயமாக நகர்த்தப் பட்டு, ஆண்டுக்கு இருமுறை பரிதி கடக்கும் போது, அதன் ஒளிக்கதிர்கள் உள்ளிருக்கும் சன்னிதியில் இருக்கும் தெய்வங்கள் மீது நேராக விழும்படி நூதனப் பொறியியற் திறமையுடன் கட்டப் பட்டுள்ளது!

நவீன உலகில் நைல் நதி தீரத்தில் அஸ்வான் உயரப் பேரணை [Aswan High Dam] கட்டப்பட்ட சமயத்தில் (1960-1970) நாஸர் ஏரியில் [Lake Nasser] நீர் மட்டம் உயர்ந்து, உலகப் புகழ்பெற்ற அவ்விரு புராதனக் கோயில்களையும் நிரந்தரமாய் மூழ்க்கிவிடப் பயமுறுத்தியது! உடனே எகிப்தின் அரசாங்கம் ஆலயத்தை மாற்றி அமைக்க ஐக்கிய நாடுகளின் விஞ்ஞானக் கலாச்சாரக் கல்விக் குழுவின் [UNESCO (United Nation Educational, Scientific, Cultural Organization)] உதவியை நாடியது. உதவியும் கிடைத்து (1964-1968) ஆண்டுகளில், இரண்டு கோயில்களும் பிரித்து நீக்கப்பட்டு, நாஸர் ஏரிக்கு அப்பால் 200 அடி [60 மீடர்] உயரத்தில் இருக்கும் மணற் பாறைக் குன்றின் மீது அமைக்கப்பட்டு, வரலாற்றிலே மகத்தான மீள்படைப்பு நிகழ்ச்சி நடத்திக் காட்டப் பட்டது!

ஆபூ சிம்பளின் அடுத்த ஆலயம் ஹாதர் [Hathor] என்னும் இடத்தில் உள்ளது. அதை ராமெஸிஸ் வேந்தன் காதலிசைத் தேவதைக்குச் சமர்ப்பணம் செய்து, தனது மனைவி நெஃபர்டாரி நினைவிற்குக் கட்டியதாக அறியப்படுகிறது. காதலிசை ஆலயத்தின் முன்பு 33 அடி உயரத்தில் ஆறு தூண்களில் பிரமிக்கத் தக்க ஆறு சிற்பச் சிலைகள் செதுக்கப்பட்டு கம்பீரமாக நிற்கின்றன! அப்பெரும் சிற்பங்களின் கீழே அவரது குழந்தைகளின் வடிவச் சிலைகளும் அமைக்கப் பட்டுள்ளன. அக்கோயில்கள் சூடானின் எல்லையில் இருப்பதால் பல நூற்றாண்டுகள் பலரும் அறியாத வண்ணம் 1813 ஆண்டுவரை மறைந்தே இருந்து விட்டன. 1817 இல் இரண்டு ஆலயங்களையும் இத்தாலிய எகிப்திய புதைச் சின்னவாதி [Egyptologist] கியோவன்னி பாட்டிஸ்டா பெல்ஸானி [Giovanni Batissta Belzoni] என்பரால் துருவி ஆராயப் பட்டு ஃபாரோ அரசர், அரசிகளின் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டன. சிற்பங்கள், சிலைகள், சித்திரங்கள் சீராக்கப் பட்டு, உலகிலே மிக உன்னத நாகரீகக் களஞ்சியங்களாய்ப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன!

(தொடரும்)
1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)
2. Atlas of the World History By: Harper Collins (1998)
3. The Ancient World, Quest for the Past (1984)
4. How in The World By: Reader ‘s Digest (1990)
5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)
6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)
7. The History of Art for Young People By: H.W. Janson.
8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)
9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/
10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]
11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)
12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)
13. http://www.history.com/
14. http://www.ancient-egypt-
15. https://en.wikipedia.org/
*******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] (March 22, 2016) (R-1)
Preview YouTube video The Revelation of the Pyramids / true english version (+русский)
-மேகலா இராமமூர்த்தி
மங்கைய ராகப் பிறப்பதற்கே – நல்ல
மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா
பங்கயக் கைநலம் பார்த்தலவோ – இந்தப்
பாரில் அறங்கள் வளரும் அம்மா! என்று மங்கையரைப் போற்றினார் கவிமணி. அத்தகைய மாதவத்தோரான மங்கையர் புன்னகைபூத்த முகத்தோடும், புதுவண்ணங்கள் வழியும் உடலோடும் புகைப்படத்தில் நின்றிருப்பது வாராதுபோல் வந்த வசந்தகாலத்தை வரவேற்கவோ?
திரு. ராஜ எடுத்திருக்கும் இந்த வண்ணப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். நன்றி இவ்விருவருக்கும்!
கவிஞர்களின் புத்தாக்கங்களைப் படித்துமகிழும் தருணமிது! புறப்படுங்கள்!
***
”சாயம்பூசி வசந்தம் கொண்டாடும் இந்த அழகுச் சிறுமலர்களைக் காமுகர்களிடமிருந்து காத்திடுங்கள் கடவுளரே” என்று மங்கையரின் நல்வாழ்வுக்காக மன்றாடுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
சாயம் உடலில் பூசிடினும்
சாயா அழகுச் சிறுமலர்கள்,
மாயம் மந்திரம் ஏதுமில்லை
மாறா வெகுளிப் புன்னகைகள்,
காயம் மனதில் உள்ளவர்தம்
காமப் பார்வை தனில்சிக்கிக்
காயம் படாமல் காத்திடவே
கணத்தில் வருவீர் கடவுள்களே!
***
அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என அறிந்துவருவோம்!
’பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்’ என்று பகர்ந்த தெய்வப்புலவன் அவதரித்த தமிழ்நாட்டில் இன்றோ வருணாசிரமத்தின் பெயரால் கருணையின்றி மனித உயிர்கள் காவுவாங்கப்படுகின்றன! சக மனிதர்களின் உணர்வுகளைப் புண்படுத்தி நம் பண்பாட்டை அழிப்போர் சகத்தில் வாழ்வது மாந்த இனத்திற்கே பெருத்த அவமானம் ஆகும்!
”வண்ணங்களால் வசந்தம் பூசிக்கொள்ளும் மனித மனத்தை, எண்ணங்களால் மனிதன் வேறுபடுத்துதல் வேதனைக்குரியது; வண்ணங்களே இயற்கைக்கு அழகூட்டுவன; புதிய சாலங்கள் காட்டுவன. அவற்றை மனிதனின் சுயநலம் சிதைக்கலாகாது” என்று நயமாய் உரைக்கும் கவிதை நெஞ்சைத் தொடுகின்றது!
வண்ணங்களே இங்கு
வாழ்க்கையாகின்றன….
எண்ணங்களால் அதை
பேதப்படுத்துகிறான் மனிதன்!
வண்ணங்களால் மனம்
வசந்தத்தைப் பூசிக்கொள்கிறது….
வார்த்தைகளால் அதன்
தட்பவெப்பநிலை மாறுபடுகிறது.
வண்ணங்களால் இயற்கை
எல்லையிலா எழில் பெறுகிறது…..
சுயநலத்தால் மனிதரதைச்
சிதைத்து விடுகின்றனர்.
வண்ணங்களால் இறைவனும்
வடிவழகைப் பெறுகின்றான்……
மதப்பூச்சால் வேறுபட்டு
மாகடவுள் நிறமிழக்கின்றான்.
வண்ணங்களால் சூழுலகு…அதன்
வடிவம் கெடாது கொண்டாடு பெண்ணே…
வண்ணத்துப்பூச்சிகளை இழந்துவிட்டு
அவையுதிர்த்த வண்ணங்களால் ஏதுபயன்?
வண்ணங்களை மனதிலிருந்தகற்றி
வாழ்க்கையினை வாழ்ந்து பார்!
புறவுலகின் பூக்களெலாம்
வண்ணங்களின் பாடம் புகட்டும்!
இன்னும் பலமுறை
பேதமிலாது
வண்ணங்கள் பூசிக்கொள்ளுங்கள்….
இருக்கின்ற உலகம்
அடடாவோ…..
எத்தனை எழில் கொள்ளும்!
புறவுலகின் பூக்கள் நம் அகவாழ்வுக்கு அழகுசேர்க்கட்டும் என்று இதமாய்ச் சொல்லுகின்ற இனிய இக்கவிதையை இயற்றியிருக்கும் திரு. இளவல் ஹரிஹரன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார்.
***
வறுமை மறந்து வானவில்லாய் ஆடுங்கள்; சாதி மறந்து சமத்துவ ஹோலி கொண்டாடுங்கள் என்று உற்சாகமூட்டும் கவிதை ஒன்று!
வறுமை மறந்து சிரித்திடவே
வானவில் லாட்டம் ஆடிடுங்கள் !
பெருமை சிறந்து திகழ்ந்திடவே
பொறுமை யாட்டம் இருந்திடுங்கள் !
கருணை கொண்ட விளங்கிடவே
கடவு ளாட்டம் மின்னிடுங்கள் !
சாதி மறந்து வாழ்ந்திடவே
சமத்துவ ஹோலியை விதைத்திடுங்கள் !
எளிய வரிகளில் அரிய வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்லியிருக்கும் திருமிகு. ஹிஷாலியைப் பாராட்டுகின்றேன்.
கவிஞர் பெருமக்களே! கவிதைகளின் வரவு இவ்வாரம் மிகவும் குறைந்திருக்கக் காண்கின்றேன். சிந்தனைச்செல்வம் நிரம்பப்பெற்ற உங்களிடமிருந்து அதிக ஆக்கங்களை வரும் வாரங்களில் எதிர்பார்க்கின்றேன். நன்றி!
அடுத்த ஜென்மத்தில் புலியாகப் பிறந்து மோகினி சுமந்த
மைந்தனை சுமக்க கண்ணனின் காலைக்(காதைக்) கடிக்குது
பசு….
”ஆவினம்தான் வன்புலித்தோல் ஆடை அணிந்தாயர்(அணிந்து ஆயர்)
கோவிந்தன் காலைக் கடிக்குது, -நாவினால்:
மோகினியாய் கண்ணனுரு மாறினால், மைந்தனின்(சபரி மணிகண்டர்)
வாகனமாய் ஆகும் விருப்பு’’….கிரேசி மோகன்….
காது எட்டாததால் காலைக் கடிக்குது கறவை….