இந்த வார வல்லமையாளர்
செ. இரா.செல்வக்குமார்
இந்த வார வல்லமையாளர் 2 வயதுக் குழந்தைப் பருவத்திலேயே இசையுலகில் அரிய புகழீட்டியவர்.
இந்தவார வல்லமையாளர் சித்திரவீணை ந. இரவிக்கிரண் (இரவிகிரண்) அவர்கள் தன் 2-ஆவது அகவையிலேயே [1] இசைத்தேர்ச்சியை இசையறிஞர்கள் முன்னே வியப்பூட்டும் விதமாக வழங்கி, அரிய புகழீட்டியவர். இப்பொழுது தனது 49 ஆம் அகவையில் திருக்குறளின் 1330 குறட்பாக்களுக்கும் இசைவாணர்கள் தேனிசை எனப்போற்றும்படியாக கருநாடக இராகங்களில் இசையமைத்துள்ளார். மொத்தம் 169 இராகங்களில் அரிய தாள அமைப்புகளுடன் அமைத்து அரிய செயல் ஆற்றியிருக்கின்றார். நம்புதற்கு அரியதாய் வெறும் 16 மணிநேரத்திலேயே இதனை அமைத்தார் [2][3]
சித்திரவீணை இரவிக்கிரண் அவர்கள் பிப்பிரவரி 12, 1967 இல் மைசூரில் பிறந்தார். இவர் 1969 இலேயே இசைமேடையில் தன் இசைப்புலமையை வெளிப்படுத்தியவர். தன்னுடைய முதல் இசைக் கச்சேரியை தன் 5-ஆவது வயதில் நடத்தினார். குழந்தைமேதை எனப்புகழப்பட்டவர். இவருடைய குருவும் தந்தையும் சித்திரவீணைக்கைலைஞர் நரசிம்மன் அவர்கள். இரவிக்கிரணின் பாட்டனார் புகழ்பெற்ற கோட்டுவாத்தியக் கலைஞர் நாராயணர் அவர்கள். திரு. இரவிக்கிரணன் அவர்களை”இந்திய இசையின் மோட்ஃசார்ட்டு” என அமெரிக்காவின் விசுக்காசின் செர்னல் அறிவித்தது (“the Mozart of Indian Music” by the Wisconsin State Journal, USA) [4]
1969 இல் இரண்டு அகவையில் இசைமேடையில் குழந்தைமேதை இரவிக்கிரண் [5]
மிக இளமையான பருவத்திலேயே இந்தியக்குடியரசுத்தலைவரிடம் இருந்து சங்கீத நாடக அக்காதெமிப் பரிசைப் பெற்றார் [6]
குடியரசுத்தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களிடம் இருந்து சங்கீத நாடக அக்காதெமி பரிசைக் கலைஞர் இரவிக்கிரண் அவர்கள் பெறுதல் [5].
கலைஞர் இரவிக்கிரண் மிகப்பல விருதுகளையும் பெருமைகளையும் பெற்றவர். அரிய கோட்டுவாத்தியத்தை வாசித்து தன் பாட்டனார் வழியில் மீண்டும் இவ்விசைக் கருவியை வழக்கில் நிறுவியவராயினும், தானும் புதிய இசைக்கருவிகளையும் இசைவகைகளையும் தோற்றுவித்தவர்.
கோட்டுவாத்தியம் என்பது வீணைபோலவே தோற்றமளித்தாலும் விரற்கட்டை அல்லது ”மெட்டுகள்” எனப்படும் தடுப்புகள் இல்லா ஓர் இசைக்கருவி. இசை கமகங்களையும் அலைவுகளையும் ஒரு கட்டைபோன்ற உறுப்பால் நரம்புகள்மீது அல்லது கம்பிகளின் மீது அழுத்தித் தேய்த்து, இழைத்து இசையுருவாக்கப்படும். சித்திரவீணை என்னும் அரிய இசைக்கருவி 21 நரம்புகள் கொணடது. தனது 10 ஆவது வயதிலேயே இந்தச் சித்திரவீணையை வாசிக்கும் கலைஞராக மாறினார். 20 நரம்புகள் அல்லது இழைகள் கொண்ட நவச்சித்திரவீணை என்னும் புதிய கருவியையும் கண்டுபிடித்தார். மெல்ஃகார்மனி (“melharmony”) என்னும் புதிய இசைவடிவத்தை உருவாக்கினார். மேற்கத்திய ஒத்திசையெனப்படும் ”harmony” என்னும் வகையோடு சுரங்களால் ஆன இராகம் போன்ற ”மெலடி” என்பதையும் பிணைத்து மெல்ஃகார்மனி என்னும் இசைவடிவத்தை உருவாக்கினார்.
இவருக்குத் தமிழ்நாட்டின் கலைமாமணி விருதும், மத்தியப்பிரதேசத்தின் குமார் காந்தர்வ சம்மான் விருதும், இந்தியாவின் உயர்விருதாகிய சங்கீத நாடக அக்காதெமி விருதும் வழங்கப்பட்டன. பிறவிருதுகளின் பட்டியலை விக்கிப்பீடியாவில் காணலாம் [1]. சித்தார் கலைஞர் பண்டிதர் இரவிசங்கர் இவரைப் புகழ்ந்து கூறியபொழுது, ”கடவுளை நம்பாவிட்டால் இரவிக்கிரணைப் பாருங்கள்” (“If you don’t believe in God, look at Ravikiran.”) என்றார் [6].
சித்தார் கலைஞர் பண்டிதர் இரவிசங்கர் அவர்களுடன் சித்திரவீணைக் கலைஞர் இரவிக்கிரண் [7]
சித்திரவீணை அல்லது கோட்டுவாத்தியத்தின் படங்களை அடிக்குறிப்பு [8] இல் காட்டப்பட்டுள்ள தொடுப்பில் காணலாம். கீழே உள்ள படம் கோட்டுவாத்தியம் போன்ற விசித்திர வீணை என்னும் கருவியாகும்.
கோட்டுவாத்தியம் போன்ற விசித்திரவீணை எனப்படும் கருவி [9]
16 மணிநேரத்தில் 1330 திருக்குறளுக்கும் 169 இராகங்களில் அரிய தாளத்துடன் இசையமைத்துப் பேரினிய செயலாற்றிய கலைஞர் சித்திரவீணை இரவிக்கிரண் அவர்களை இந்தவார வல்லமையாளராகப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.
அடிக்குறிப்புகள்:
[1] https://en.wikipedia.org/wiki/N._Ravikiran ; தமிழ் விக்கிப்பீடியா ( https://ta.wikipedia.org/s/49q3 )
[2] https://www.youtube.com/watch?v=FS7T3E6Zzt8
[3] https://www.youtube.com/channel/UCKXaa7bnupptNV6ZBjlicMw
[4] http://host.madison.com/news/local/education/local_schools/school-spotlight-mozart-of-indian-music-visits-middleton-cross-plains/article_ccf9e83c-a080-11e2-bb5a-0019bb2963f4.html
[5] இரவிக்கிரண் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.
[6] Page 253 of “Another Garland, Biographies of Carnatic Composers and Musicians” – N Rajagopalan 1992
[7] Lata Ganapathy’s Facebook wall (விக்கிப்பீடியாவழியாக [1]), ஏப்பிரல் 2011.
[8] http://instrumundo.blogspot.ca/2012/12/gotuvadyam-chitravina-chitra-veena.html?_sm_au_=iVVkHt1v418sNSsR
[9] https://en.wikipedia.org/wiki/Gottuvadhyam#/media/File:Ch2.JPG
இசையுடன் பிறந்து, இசையோடு வளர்ந்த மிக அருமையான கலைஞர் ஒருவரைத் தேர்வு செய்து அவரது சமீபத்திய முயற்சியை அறியத் தந்து பாராட்டிய பேராசிரியர் செல்வா அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்.
மிக்க நன்றி தேமொழி அவர்களே 🙂
திருக்குறள் முழுமைக்கும் 16 மணி நேரத்தில் இசையமைத்த அருஞ்செயல், தமிழிசைக்கு ஊக்கம் தருவதோடு, புதிய களங்களில் குறளை இசைக்கவும் வழியமைக்கும். இந்தத் தொகுப்பின் சில பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தேன். மதுரத் தமிழை மனதினிக்கச் சுவைத்தேன்.
சிற்சில கருத்துகள். ஒவ்வொரு குறளையும் இரு முறை பாடியிருக்கலாம். பாடும்போது, அந்தக் குறள், திரையில் தோன்றுமாறு அமைத்திருக்கலாம். சிற்சில பதிவுகளில், பின்னணி இசை தூக்கலாக உள்ளது. குரல் எழும்போது, இசை தணிந்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும். மேலும், பாடகர்கள், ஒவ்வொரு குறளையும் தனித் தனியாகக் கையாண்டிருக்கலாம். ஒவ்வோர் அதிகாரத்தையும் ஒருவர் பாடியுள்ளதால், ஒரு குறள் முடிந்ததும், அடுத்த குறளை உடனே எடுக்கும் அவசரம் தெரிகிறது. இந்தக் குறள்களைச் செல்பேசியின் அழைப்பொலிகளாக அமைக்கவும் நிகழ்ச்சியின் விளம்பர இடைவெளிகளில் ஒற்றைக் குறளைத் தனியே இசைக்கவும் வாய்ப்பு உண்டு. அதற்கு ஏற்ற வகையில் தனித் தனியே எடுத்து முடித்திருக்கலாம்.
எனினும், இந்த முயற்சிக்குத் திருக்குறளைத் தேர்ந்தெடுத்து, பெரிதும் உழைத்து இசையமைத்து, தேர்ந்த கலைஞர்களைக் கொண்டு வழங்கிய வல்லமையாளர் இரவிக்கிரண் அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன். தங்கள் திறமும் தொண்டும் பயனும் புகழும் நாளும் பொழுதும் வளர்க.
சித்தார் கலைஞர் பண்டிதர் இரவிசங்கர் இவரைப் புகழ்ந்து கூறியபொழுது, ”கடவுளை நம்பாவிட்டால் இரவிக்கிரணைப் பாருங்கள்” (“If you don’t believe in God, look at Ravikiran.”) என்றார் [6].
ஒரு நினைவலை: His fans wanted the child prodigy Sir Yehudi Menuhin to play in the Metropolitan Opera House and to gain entry, he was taken to the Managing Trustee for audition. He declined to spare a few minutes. He was persuaded
anyway and the child . who was playing marbles, was brought in. Entranced, the Managing Trustee sat for an hour and exclaimed, “I saw God in this child’.
Narasimha and Ravikiran are acquaintances.
Excellent selection
Innamburan
வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரவிக்கிரணுக்கும் தேர்ந்தெடுத்த நண்பர் செல்வாவுக்கும் நன்றியும் வாழ்த்தும்.
இரவிக்கிரணின் திருக்குறள் இசையமைப்பு தனித்தொகுப்பாகக் கிடைக்குமா?
++++++++++
சில குறட்பாடல்களைக் கேட்டேன். சுமார்.
வீணை சண்முகவடிவுத்தாயார் சொல்லுவார்கள் … “வாய்விட்டுப் பாடு, பல்லைக்கடித்துக்கொண்டு பாடாதே, பொய்க்குரலில் பாடாதே” என்று.
அதோடு, தமிழின் மெல்லொலிகள் சிலவற்றை (ந், ண், ன்) ஒலிக்கும் முறை இரங்கத்தக்கது. இந்தவொலிகள் எல்லாமே பாடகர் வாயில் லகரத்திலும் ளகரத்திலுமே தொடங்குகிறது!!
எடுத்துக்காட்டாக … திருக்குறளின் ‘நீத்தார்பெருமை’ என்ற அதிகாரத்தின் கடைசிக்குறளைப் பாடியவரின் ஒலிப்பைக் கேட்கவும்:
குறள்:
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
இதைப் பாடியிருக்கும் பாடகரின் ஒலிப்பை மீண்டும் பல முறை கேட்டுப்பார்க்கவும்.
‘எல்ம்போர்’ … என்றுதான் எனக்குக் கேட்கிறது.
தொல்காப்பியரின் பிறப்பியல் நூற்பாவைப்பற்றி இவர்களுக்குத் தெரியுமா? இல்லை, வெண்பாவுக்கு ஏற்ற ஓசை ‘செப்பலோசை’ என்றாவது தெரியுமா?
அன்புள்ள முனைவர் இராசம் அவர்களே, வணக்கம்.
உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி. கட்டாயம்
நீங்கள் சொல்வதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
ஒரு முகனையான கருத்தை முன்வைக்க இடம்தருவீர்கள்
என நம்புகின்றேன். தொல்காப்பியத்திலே இசையில் திரிபுகள்
வரலாம், உயிரெழுத்துகளை 2 மாத்திரைக்குக்கூடுதலாகவும்
ஒலிக்கலாம், சில மெய்யொலிகளைக்கூட தொடர்ந்து ஒலிக்கலாம் என
விலக்குகள் தந்துள்ளார்கள். தண்டபாணி தேசிகர் அன்பு என்னும் சொல்லை
அம்பு என்பார். இதற்கான நூற்பாவை அடுத்தமடலில் தர முயல்கின்றேன்.
//‘எல்ம்போர்’ … என்றுதான் எனக்குக் கேட்கிறது.// — உண்மை.
”என்னை” என்பதைக் கூட ‘எல்னை” எனச்சொல்லக்கூடும். ஏனெனில், ”ல்” என்பதை நீட்டமுடியும், ”ன்” என்பதை நீட்டமுடியாது. ”அன்பு” என்பதை ”அம்பு” என்பதற்கும் இதுவே காரணமாகவிருக்கும். ஏனெனில் ”ம்” என்பதை நீட்டலாம்.
அன்புள்ள முனைவர் அண்ணாகண்ணன், இன்னபூரான் ஐயா அவர்களே, உங்கள் நன்மொழிக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.