அரைகுறை நம்பிக்கையுடன்
ஆர்ப்பாட்டமாய்
மழைக்காகக்
கூட்டுவழிபாடு செய்வோரைவிட,
நம்பிக்கையுடன்
குதூகலமாய்க்
குடை எடுத்துவந்தக்
குழந்தையை நேசிப்பவன்தான்
இறைவன்..
பெய்கிறது மழை
அந்தப்
பிள்ளைக்காக…!
படத்துக்கு நன்றி
அரைகுறை நம்பிக்கையுடன்
ஆர்ப்பாட்டமாய்
மழைக்காகக்
கூட்டுவழிபாடு செய்வோரைவிட,
நம்பிக்கையுடன்
குதூகலமாய்க்
குடை எடுத்துவந்தக்
குழந்தையை நேசிப்பவன்தான்
இறைவன்..
பெய்கிறது மழை
அந்தப்
பிள்ளைக்காக…!
படத்துக்கு நன்றி
*புகார்க்காண்டம்- 09. கனாத்திறம் உரைத்த காதை*
**
*தேவந்தி கூறிய தேறுதல் உரை*
**
கண்ணகி மொழி கேட்ட
தேவந்தி கூறினாள்:
“பொன்னாலான வளையணிந்தவளே!
நீ உன் கணவனால்
வெறுக்கப்பட்டவள் அல்லள்;
நின் முற்பிறப்பில் நின் கணவனுக்காய்க்
காத்து நின்றிருக்க வேண்டிய
நோன்பு ஒன்றினைச்
செய்யத் தவறிவிட்டாய்!
அதன் காரணமாய்
இன்று அவனைப் பிரிந்திருக்கின்றாய்;
அக்குற்றம் இன்றே நீங்கி விடட்டும்;
காவிரி கடலுடன் கலக்கும்
சங்கமத் துறையில்
பூக்கள் மடலவிழ்க்கும்
நெய்தல் நிலக் கானலிடத்துச்
சோமகுண்டம் சூரியகுண்டம் என
இரு பொய்கைகள் உள்ளன.
அவற்றின் துறைகளில் மூழ்கியெழுந்து
மன்மதக்கோட்டம் சென்று காமதேவனை
வழிபடும் மகளிர்
இப்பிறவியில் தம் கணவனைப் பிரியாது
கூடி வாழ்ந்து இன்புற்று,
மறு பிறவியிலும் இன்பம் தரும் பூமியில் பிறந்து
கணவனுடன் இன்புற்று மகிழ்வர்.
எனவே நாம் இருவரும்
அங்கு ஒரு நாள் சென்று
நீராடி வருவோம்” என்றாள்.
*கண்ணகியின் மறுமொழி*
அது கேட்ட கண்ணகி,
“அத்தகைய செயல்
எமக்குப் பெருமை தருவதன்று”
எனக்கூறி மறுத்துவிட்டாள்.
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 55 – 63
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html
பவள சங்கரி
தலையங்கம்
‘நான்கு குருடர்களும், ஒரு யானையும்’ என்ற கதையை பள்ளியில் படித்தது நினைவிருக்கும் இல்லையா? ஒரு ஊரில் நான்கு குருடர்கள் இருந்தார்கள். பிறவிக் குருடர்களான அவர்களுக்கு யானையைப் பார்க்க ஆசை. எதிர்பாராத விதமாக ஒரு யானை அங்கேயே வந்து பிளிருகிறது.. சத்தம் கேட்டு நான்கு பேரும், ‘அட யானை வந்துடிச்சின்னு’ சந்தோசப்படுகிறார்கள். சத்தம் கேட்டாச்சு. தொட்டுப் பார்த்து எப்படி இருக்கிறதென்று தெரிஞ்சுக்கலாம் என்ற ஆவலில் ஒரு குருடன், காலைத் தொட்டுப்பார்த்து, ‘தூணாட்டம் இருக்கு’ என்கிறான்.. வாலைத் தொட்டுவிட்டு, ‘யானை கயிறு போல இருக்கு’ என்கிறான் மற்றொருவன். தும்பிக்கையைத் தொட்டவன், ‘யானை நீட்டமா உலக்கையாட்டம் இருக்குது’ என்கிறான்.. நான்காவதாக வந்தவன் வயிறைத் தொட்டுப்பார்த்து ‘யானை மலையாட்டம் இருக்கு’ என்கிறான்.. நான்கு பேரும் சொன்னது ஒவ்வொரு விதத்தில் சரிதான் என்றாலும், மொத்தமாகப் பார்த்தால் யானையின் உருவத்திற்கான இந்த விளக்கம் சரிதானா?
இன்று நம் இந்திய நாட்டின் பொருளாதாரம்தான் யானை.. நம்மோட ரிசர்வ் வங்கி கவர்னர், நிதியமைச்சர், பாரதப் பிரதமர், (பொருளாதார வல்லுநர்) மத்தியில் உள்ள பொருளாதாரச் செயலாளர் என இவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான கருத்துக்களையல்லவா சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் திட்டமிட்டு செய்த செயல்களால்தான் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்து, ரூபாயின் மதிப்பு அதிகரித்து, தங்கத்தின் இறக்குமதியும் குறைந்ததா? தெளிவற்ற அணுகு முறைகளும், திறமையற்ற நிர்வாகமும் ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கும், அதன் தொடர்பாக நடந்த மற்ற நிகழ்வுகளுக்கும் காரணம் இல்லையா? இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் சரியாகத்தான் திட்டமிடப்பட்டது என்றால் இதை ஏன் முன்னமேயே செயல்படுத்தவில்லை? இப்படிப்பட்ட கேள்வி சாமான்யனுக்கும் தோன்றக்கூடிய ஒன்றுதானே? துக்ளக் தர்பார் போன்றல்லவா இருக்கிறது இது. 2 மாதம் முன்னால் பஞ்சை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்தார்கள். மீண்டும் திடீரென்று டன்னுக்கு 10,000 ரூபாய் வரி விதித்தார்கள். இது யாரை திருப்திபடுத்துவதற்காக செய்யப்படுகிறது என்று புரியவில்லை. நம்முடைய ரூபாய் மதிப்பு குறைந்ததற்கான மூல காரணம் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியால்தான் அல்லவா, நம்முடைய அன்னியச் செலாவணி பெருமளவில் கரைகிறது? இதற்காக என்ன திட்டங்களைத் தீட்டி, செயல்பாட்டிற்கு கொண்டுவந்திருக்கிறோம்? நேற்று மாலை தெருவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டிருந்தபோது, படிப்பறிவில்லாத இருவர் சர்வ சாதாரணமாக பேசிக்கொண்டு போவதைக் கேட்க முடிந்தது. “சிங்கப்பூர்ல இருக்கற மாதிரி நகருக்குள் எந்த வாகனமும் ஓட்டக்கூடாது என்று சட்டம் போட்டால் இவ்வளவு நெரிசல் இருகாதில்லையா, முக்கியமான இடங்களுக்குச் செல்ல வேண்டுமானால் அரசு போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தலாமே. இப்படியே போனால், சாதாரண நகரங்களில் கூட நாளடைவில் வாகனங்கள் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு செல்லும் நிலை அல்லவா ஏற்படக்கூடும்? ” என்று அவர்கள் பேசிக்கொண்டது என் காதில் விழுந்தது. உண்மைதானே இது. இப்படிச் செய்வதால் அன்னிய செலாவணியும் பாதிக்குப் பாதியாகக் குறையக்கூடிய வாய்ப்பும் இருக்கிறதே. இதையெல்லாம் விட்டுவிட்டு, பஞ்சை ஏற்றுமதி செய்து , உள் நாட்டில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பிரச்சனையை அதிகப்படுத்திக் கொண்டல்லவா இருக்கிறோம்?
தங்கத்தை இறக்குமதி செய்யத் தடை விதித்தது நல்ல திட்டம் என்றாலும்.. ஏற்றுமதி செய்ய என்ன திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது? தங்க நகை ஏற்றுமதிக்கு எந்த விதமான ஊக்குவிப்பும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லையே. யானை போன்ற பொருளாதாரத்தை சரியான நோக்கில் கண்டறிந்து தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் இன்று. நாளுக்கு நாள் குறைந்து கொண்டுவரும், நம்முடைய ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்வதற்கும் மற்றும் இரஷ்யாவில் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும், இந்திய ரூபாயை பரிவர்த்தனைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது போல, மற்ற இறக்குமதி பொருட்களுக்கும் பரிவர்த்தனைப் பொருளாக நம்முடைய பணத்தையேக் கொடுப்பதாக இருந்தால் மட்டுமே ரூபாயின் மதிப்பு உயரக் கூடிய வாய்ப்பு இருக்கும் அல்லவா? நெஞ்சு பொறுக்குதில்லையே!
-மேகலா இராமமூர்த்தி
(அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டில் நான் ஆற்றிய உரை)
சமீபத்தில் அமெரிக்காவிலுள்ள மேரிலாந்தில் (Maryland) நடைபெற்ற பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டில் உரையாற்றக் கூடிய ஓர் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இந்தியாவிலிருந்து வந்திருந்த அறிவுசால் தமிழறிஞர்களுக்கு இணையாக மேடையில் உரை நிகழ்த்துவதற்குக் கிடைத்த அவ்வாய்ப்பினை எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகவே கருதுகின்றேன்.
அம்மாநாட்டில் ‘புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் என் சொற்பொழிவு அமைந்திருந்தது. அதில் பேசப்பட்ட கருத்துக்களை நம் ’வல்லமை’ வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
கருத்தரங்கில் பங்குபெற்ற முனைவர் சிவயோகநாதன், கவிஞர் அறிவுமதி, மருத்துவர் சரோஜா இளங்கோவன் ஆகியோரோடு நான்….
இனி என் உரை….
சங்க இலக்கிய நூல்களாக அறியப்படுபவை எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகும். இவற்றில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாக வைத்தெண்ணப்படுவது புறநானூறு. பண்டைத் தமிழகத்தின் சமூக, அரசியல் வரலாறுகளையும், அவர்தம் பழக்கவழக்கங்கள், பண்பாடு, நாகரிகம் போன்ற அனைத்தையுமே அறிந்துகொள்ள உதவும் ஓர் சிறந்த ஆவணமாக, காலக் கண்ணாடியாக இன்றும் திகழ்வது வீரத்தையும், ஈரத்தையும் ஒருங்கே போற்றுகின்ற புறநானூறு. மிகப் பழைய நூல்களெல்லாவற்றிற்கும் பழையதெனக் கருதப்படும் தொல்காப்பியத்திற்கு முன்னே தோன்றிய செய்யுட்களையும் அதற்குப் பின்னே தோன்றிய செய்யுட்களையும் தன்னகத்தே கொண்டு, தமிழ் நாகரிகத்தின் தொன்மையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருப்பது இந்நூல் என்பது தமிழர்களாகிய நாம் அனைவருமே பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்று.
புறநானூற்றுப் பாடல்கள் அனைத்திலுமே அரசனின் புகழும், வீரமும் கொடைத்தன்மையும், அவன் பெற்ற வெற்றிகளுமே பேசப்படுகின்றன என்ற தவறான கருத்து நம் மக்கள் மத்தியில் (பரவலாக) நிலவி வருகின்றது; அஃது உண்மையில்லை. போரின் அவலம், வாழ்வின் நிலையாமை, கையறுநிலை, கைம்மைத் துன்பம், கைக்கிளை (ஒருதலைக் காதல்), மறக்குடி மகளிரின் வீரம் போன்ற பலதரப்பட்ட செய்திகளையும் புறநானூறு பரக்கப் பேசுகின்றது என்பதே உண்மை.
சங்கப் புலவர்கள் பலர் வறுமையில் உழன்றவர்கள்தாம்; பொன்னையும் பொருளையும் வள்ளல்களிடமும் அரசர்களிடமும் பெற்றுத் தம் வாழ்வை வளமாக்கிக் கொள்ளவே (பெரும்பாலும்) பாப்புனைந்தனர் என்பதும் உண்மையே. ஆயினும் அரசனோ, வள்ளலோ தம்மை மதியாது, அலட்சியமாகத் தருகின்ற பொருளை/பரிசிலை அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை; அதனைப் புறக்கணித்தனர். ‘வறுமையிலும் செம்மையாய்’, சுயமரியாதை மிக்கோராய், மனிதப் பண்புக்கே முதன்மை தருபவர்களாகவே இருந்திருக்கின்றார்கள் இப்புலவர் பெருமக்கள் என்பது புறநானூற்றை ஊன்றிப் படிப்போர்க்கு நன்கு புலனாகும் செய்தியாகும்.
இனி, புறநானூற்றில் புலப்படுகின்ற அரசியல் சிந்தனைகள் சில நம் கவனத்திற்கு….
பாண்டிய நாட்டின் மேற்குப் பகுதியில் கடும் வறட்சி, தண்ணீர்ப் பஞ்சம். குடிப்பதற்குக்கூட நீரின்றி மக்கள் வாடுகின்ற அவலமான சூழ்நிலை. இதற்கெல்லாம் காரணம் மன்னன் மக்கள் நலனில் அக்கறை காட்டாததே என்று மக்களுக்கு மன்னன்பால் கோபம்; ஆயினும் அதனை அவனிடம் எடுத்துச் சொல்வதற்கோ அவர்களுக்குத் துணிவில்லை. ஏனெனில் அப்போது மதுரையை ஆண்டவனோ பெருவீரன்; மிக இளம் வயதிலேயே அரசுக் கட்டில் ஏறி ஆட்சி செய்யத் தொடங்கிய பெருமைக்குச் சொந்தக்காரன்.
ஏழு அரசர்களைப் (தலையாலங்கானத்துப்) போர்க்களத்தில் தனியொருவனாய் வீழ்த்தித் ’தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்’ என்ற அடைமொழியோடு ஆட்சி செய்பவன். எழுவரை வென்ற இளையோனாகிய அவனுடைய போர் வெற்றியைக் கண்டு வியந்த ‘இடைக்குன்றூர் கிழார்’ எனும் புலவர் ’இச்செழியனோ இப்போதுதான் காலில் அணிந்த கிண்கிணி (ஆண் குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் கொலுசு) நீக்கி வீரக் கழல் அணிந்துள்ளான். இதுநாள்வரைப் பால் பருகிக் கொண்டிருந்தவன்(!) இன்றுதான் முதன்முறையாகச் சோறு உண்டான்; அவன் வெற்றி வாழ்க!’ என்று (சற்று மிகையாகத்தான்) புகழ்கின்றார்.
அத்தகைய மாவீரனிடம் பேசுவதற்கு யாரை அனுப்புவது என்று யோசித்துத் துணிவும், தமிழ்ப்புலமையும் ஒருங்கே கொண்ட புலவர் பெருந்தகையான ‘குடபுலவியனாரைத்’ தேர்ந்தெடுத்தனர் மக்கள். அவர் சொல்வன்மையும், அறிவு முதிர்ச்சியும் மிக்க தமிழ்ச்சான்றோர் ஆவார். மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நெடுஞ்செழியனைக் காணச் செல்கின்றார் அவர். மன்னனிடம் செல்வாக்கு மிக்கவராய் அவர் விளங்கிய காரணத்தினால் எளிதில் அவனைக் காணக்கூடிய வாய்ப்பமைந்தது. அந்த வாய்ப்பைச் சரியாய்ப் பயன்படுத்திக்கொண்ட அவர், மிகச் சிறந்த அறிவுரைகளை அரசனுக்கு வழங்குகின்றார்.
“மன்னா! மேலுலகத்தில் நீ மறுமை இன்பத்தைப் பெற விரும்பினாலும் சரி அல்லது பகைவர்கள் அனைவரையும் ஒழித்து இந்நிலவுலகிலே நீ ஒருவனே பேரரசனாய்ப் புகழ்பெற்று வாழ விரும்பினாலும் சரி….அதற்கான தகுதி என்ன தெரியுமா? சொல்கிறேன் கேள்! ’நீரின்றி அமையா இம்மானுட வாழ்வில் உணவு கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தவர்கள் ஆவர். உணவினால் ஆனதுதானே இம்மானுட உடம்பு! உணவெனப்படுவது நிலத்தொடு கூடிய நீர். (நிலத்திலிருந்து கிடைப்பது அரிசி உணவு; பருகுவதற்கு இன்றியமையாதது நீர்; ஆகவேதான் இப்புலவர் பெருந்தகை உணவெனப்படுவது நிலத்தொடு கூடிய நீர் என்கின்றார்.) எவனொருவன் நிலத்தையும் நீரையும் ஒன்றாகச் சேர்த்து வைக்கின்றானோ அவனே இவ்வுலகத்தின் உடம்பையும் உயிரையும் ஒன்றாய் இணைத்தவன் ஆகின்றான். (போற்றத்தக்க புதிய சிந்தனை அல்லவா!).
ஆகவே, போரிலே பெருவிருப்பம் கொண்ட செழியனே! நீர்நிலைகளிலெல்லாம் நீண்ட கரையெடுத்து அந்நீரைத் தேக்கி வைப்பாயாக. அப்போதுதான் உன்னுடைய புகழும், காலத்தை வென்று நிலைத்து வாழும் என்கின்றார்.
இப்புலவரின் அறிவுரை எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடியதாகவே இருக்கின்றது. ‘Conservation of water resources’ என்று நாம் இன்று பேசிக்கொண்டிருக்கிறோமே, இதைத்தான் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே இப்புலவர் பாண்டிய நெடுஞ்செழியனிடம் வலியுறுத்துகின்றார். அவர் இந்த அறிவுரையை மன்னனுக்கு வழங்கி இருபது நூற்றாண்டுகள் கடந்த பின்னும்கூட அது இன்றுவரைச் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதே வரலாறு காட்டும் உண்மை. ஆம்…இன்றுவரை நம் தமிழகத்தில் போதிய அணைகள் கட்டப்படவில்லை. நீர் மேலாண்மையில் நாம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளோம் என்பதை வருத்தத்தோடு ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்.
அற்புதமான கருத்துக்களை அரசனுக்கு அறிவுறுத்திய ’குடபுலவியனாரின்’ அப்பாடல் இதோ..
”……………………………………………… வயவேந்தே
செல்லு முலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ யாகல் வேண்டினுஞ் சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினு மற்றதன்
தகுதி கேளினி மிகுதி யாள
நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரி யோரீ ண்டு
உடம்பு முயிரும் படைத்திசி னோரே
…………………………………………………………………
—————————————————————–
அடுபோர்ச் செழிய இகழாது வல்லே
நிலனெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம இவண்தட் டோரே
தள்ளா தோரிவண் தள்ளா தோரே. (புறம் – 18)
படித்து இன்புறவேண்டிய அருமையான பாடல் இல்லையா?
அடுத்து, ஓர் அரசன் குடிமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதனைச் சற்றுக் கடுமையாகவே (அரசனுக்கு) அறிவுறுத்துகின்றார் ஓர் புலவர். அரசர்களிடம் தாம் காணுகின்ற குறைகளைப் புலவர்கள் சற்றுக் கடுமையான மொழிகளில் கூறித் திருத்த முயல்வதனைச் ‘செவியறிவுறூஉ’ என்கின்றது தமிழிலக்கிய மரபு. ஒரு சாதாரணப் புலவர் அரசனையே கண்டிக்கின்றார் என்றால் அதற்கு எத்துணை துணிச்சல் வேண்டும். அந்த வீரப்புலவர் அரசனிடம் அப்படி என்னதான் கூறியிருப்பார்?
(தொடரும்)
தேமொழி
அசுரனின் தலையை வெட்ட வெட்டப் புதிய தலை முளைப்பது, அல்லது கையை வெட்டினால் புதிய கை முளைப்பது போன்ற நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் உள்ள புராணக்கதைகளில் நாம் படித்திருக்கலாம். ஆனால் உண்மையில் இது சாத்தியமா? சில உயிரினங்களிடம் இந்தப் பண்பு காணப் படுகிறது. காட்டாக, கடலில் வாழும் நட்சத்திர மீன்கள் சேதமடைந்த பகுதியைப் புதுப்பித்துக் கொள்வதையும், வாலை இழந்த பல்லிக்கு புது வால் முளைப்பதையும் நாம் அறிவோம்.
எனினும் பரிணாம வளர்ச்சியில் மிகவும் மேம்பட்ட, சிக்கலான உடலமைப்பைப் பெற்றுள்ள மனித இனத்திற்கு இது சாத்தியமல்ல. சேதமடைந்து இழந்த உடலுறுப்பு இழந்ததுதான், மீண்டும் அதனை வளரவைக்க முடியாது. உறுப்பு தானமாக வழங்கப்பட்டால், பதிலுக்கு அது பொருத்தப்பட்டு குறையை நீக்கும் வகையில் தற்கால மருத்துவம் முன்னேறியுள்ளது. ஆனால், நம்மால் இழந்த உறுப்பை புராணக் கதைகள் குறிப்பிடப்படுவது போல வளர்த்துக் கொள்ள இயலாது. இருப்பினும், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ‘மறுவளர்ச்சி மருத்துவம்’ (regenerative medicine) என்ற முறையை வெகு முனைப்புடன் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.
மனிதர்கள் இருவரின் உடலமைப்பும், அதற்கேற்ற மருத்துவ சிகிச்சைத் தேவைகளும் ஒரே போன்று ஒத்திருப்பதன் வாய்ப்பு மிக மிகக் குறைவு. இதற்குக் காரணம், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் நமக்குத் தேவையான உடல்நலம் மற்றும் சுகாதாரத் தேவைகள் ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறாகவே அமைந்திருப்பதே. அறிவியல் அறிஞர்களும் மருத்துவர்களும் மருத்துவச் சிகிச்சைகளை ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைக்கேற்றவாறு வடிவமைக்க விரும்பித் தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகின்றனர்.
இந்த முயற்சிக்கு அடிப்படையாக விளங்குவது ‘மூலஉயிரணுக்கள்’ ஆராய்ச்சி (Stem Cells Research) . இந்த மூலஉயிரணுக்கள் கொண்ட பண்பின் சிறப்பு, உயிரினங்களின் உடல் செயல்பாட்டில் அவைகளின் பங்கு என்ன என்பது வரையறுக்கப்படாததே. இவ்வாறு வேறுபடுத்தப்படாத மூலஉயிரணுக்கள் குறிப்பிட்ட எந்த வேலையையும் அவற்றிற்கு என்று நிர்ணயிக்கபடாத நிலையில் இருக்கின்றன.
தோலின் உயிரணுக்கள் (skin cells), தசை உயிரணுக்கள் (muscle cells), நரம்பு உயிரணுக்கள் (nerve cells), என உடலின் ஒவ்வொரு வகை உயிரணுக்களுக்கும் முறையே பாதுகாப்பு, சுருங்கிவிரிதல், சமிக்கைகளைக் கடத்துதல் என்ற செயல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் மூலஉயிரணுக்களின் செயல்கள் இவையிவை என வரையறுக்கப்படாததால், மற்ற எந்த உயிரணுவாகவும் மாற்றம் கொண்டு அந்தப் பணிகளை அவைகளால் செய்ய இயலும். அதனால் உடலின் மற்ற உயிரணுக்கள் பழுதடைந்தோ அல்லது இறந்தோ போகும் பொழுது மூலஉயிரணுக்கள் அவற்றினை ஈடு செய்யும் வகையில் அந்த உயிரணுக்களாக மாற்றம் அடைந்து செய்ய வேண்டியப் பணியை தொடர்ந்து மேற்கொள்ளும்.
காட்டாக, நம் சிறுகுடலின்(intestine) சுவரின் உயிரணுக்கள் நான்கு நாட்களுக்கொருமுறை முற்றிலும் புதியதாக மாற்றியமைக்கப்படுகிறது. சிறுகுடலின் சுவரின் அடியில் அமைந்திருக்கும் மூலஉயிரணுக்கள், சிறுகுடலின் சுவரின் உயிரணுக்கள் பழுதடைய பழுதடைய அந்த உயிரணுக்களாக மாறி அச்சுவரினைப் புதுப்பிக்கிறது. இது போலவே தினமும் பல்லாயிரக் கணக்கான இரத்த உயிரணுக்களும் புதுப்பிக்கப் படுகின்றன.
மூலஉயிரணுக்களின் இத்தகைய பண்பினால் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அவற்றைக் கொண்டு ‘தனித்துவம் கொண்ட சிறப்பு மருத்துவச்சிகிச்சை’ (individualized treatment) முறையை மேற்கொள்ள ஆராய்ந்து வருகிறார்கள். தேவையேற்பட்டால் பழுதடைந்த நமது உடலுறுப்புக்களை நீக்கிவிட்டு, பதிலுக்கு நம் உடலுறுப்புக்களையே வைத்து செயற்படுத்தும் ‘மறுவளர்ச்சி மருத்துவம்’ என்ற முறையைப் பயன்படுத்த முயல்கிறார்கள்.
சுருங்கச் சொல்லின், பழுதடைந்த உடல் உறுப்புக்களின் பகுதிகளில் உள்ள சேதமடைந்த திசுக்களுக்குப் (tissues) பதில், மூலஉயிரணுக்கள் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய திசுக்களைக் கொண்டு மாற்றியமைக்கும் முயற்சியே மறுவளர்ச்சி மருத்துவம் ஆகும்.
இப்பொழுது இரத்தத்தின் வெள்ளையணுப் புற்றுநோய்க்கு (leukemia, blood cancer) மூலஉயிரணுக்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப் படுகிறது. வெள்ளையணுப் புற்றுநோய் நம் உடலின் எலும்பு மஞ்ஞையைத் (bone marrow) தாக்குகிறது. எலும்பு மஞ்ஞையில் இருந்து இரத்ததிற்குத் தேவையான உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெள்ளையணுப் புற்றுநோய் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி உற்பத்தியாகி வெள்ளையணுப் புற்றுநோய் கொண்டவரின் எலும்பு மஞ்ஞையில் உள்ள மூலஉயிரணுக்களைச் சூழ்ந்து கொண்டு அவற்றைத் தாக்கி அழிக்கின்றன. இந்நோய் கண்டவர்களுக்கு புதிய மூலஉயிரணுக்கள் உடலினுள் செலுத்தப்படுகிறது (stem cells transplant). இவை உடலுக்குத் தேவையான இரத்த உயிரணுக்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன.
மூன்று வகையான மூலஉயிரணுக்களை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிகளில் பயன் படுத்துகிறார்கள். அவை:
1. திசு நிர்ணயிக்கப்பட்ட மூலஉயிரணுக்கள் (Adult/Tissue specific stem cells)
2. பல்லாற்றல் கொண்ட மூலஉயிரணுக்கள் (Embryonic stem cells/ Pluripotent stem cells)
3. பல்லாற்றல் தூண்டப்பெற்ற மூலஉயிரணுக்கள் (Induced Pluripotent stem cells)
1. திசு நிர்ணயிக்கப்பட்ட மூலஉயிரணுக்கள்:
இந்த மூலஉயிரணுக்கள் இயற்கையிலேயே நம் உடலுறுப்புகளின் திசுக்களில் குறைந்த எண்ணிக்கையில் இடம் பெற்றிருக்கின்றன. இவை உடலுறுப்புகளின் திசுக்கள் தேய்ந்து அழியும் பொழுது அத்திசுவின் உயிரணுக்களாக மாற்றம் பெற்று உடலுறுப்புகளைப் புதுப்பித்து அவற்றின் பணியை மேற்கொள்ளும்.
2. பல்லாற்றல் கொண்ட மூலஉயிரணுக்கள்:
இவை கருவில் உள்ள மூலஉயிரணுக்கள் ஆகும். செயற்கைமுறைக் கருத்தரிப்பு நிலையங்களில் (fertility clinic) பயன்படுத்தப்படாத கருக்கள் அவற்றின் உரிமையாளர்களால் ஆராய்சிகளுக்கு மனமுவந்து நன்கொடையாக வழங்கப்படும். இது போன்ற கருவில் உள்ள மூலஉயிரணுக்களின் பண்பு, அவை எந்த உயிரணுவாக செயல் பட வேண்டும் என்பதோ அதன் பணி என்ன என்பதோ நிர்ணயிக்கப் படாததால் இவை எந்த ஒரு திசுவாகவும் வளர்சியடைந்து அந்தத் திசுவின் பணியை மேற்கொள்ளும் ஆற்றல் கொண்டதாகும். அதனால் பல்லாற்றல் கொண்ட மூலஉயிரணுக்கள் என அவை அழைக்கப்படுகின்றன (pluripotent stem cells /iPS cells).
3. பல்லாற்றல் தூண்டப்பெற்ற மூலஉயிரணுக்கள்:
இயற்கையாக தோல், நரம்பு, தசை போன்ற உடலுறுப்புகளின் திசுக்களில் உள்ள உயிரணுக்களே இவை. ஆராய்ச்சியாளர்கள் செயற்கையாக அறிவியல் முறைப்படி இவ்வுயிரணுக்களைத் தூண்டி, பல்வேறு திசுக்களின் உயிரணுக்களாகவும் மாறும் பண்புள்ள மூலஉயிரணுக்களாக இவற்றை மாற்றமுறச் செய்கிறார்கள். இவை கருவில் உள்ள மூலஉயிரணுக்கள் போன்றே எந்த ஒரு திசுவாகவும் உருவெடுத்து அதன் பணிகளை மேற்கொள்ளும் பண்பினைப் பெற்றுவிடுகின்றன.
மருத்துவ, உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் மறுவளர்ச்சி மருத்துவ முறைகளுக்கு மூலஉயிரணுக்களைப் பயன்படுத்துவதுடன், இவற்றின உதவியுடன் மேலும் ஆராய்ந்து உடலின் செயல்பாடுகளையும் நன்கு அறிந்து கொள்ளவும் முடியும். மேலும், மூலஉயிரணுக்கள் திசுவாக வளர்ந்து குறிப்பிட்ட ஒரு உடலுறுப்பாக மாறுவதையும், அவ்வாறு அவை மாறும் செயல்முறைகளையும் பற்றி கண்காணிப்பு நிறைந்த ஆய்வுக் கூட ஆராய்சிகளின் வழியாக அறிவியல் அறிஞர்கள் அறிந்து கொள்ள இந்த ஆராய்சிகள் வழி வகுக்கிறது.
இவ்வாறு ஆராய்ச்சி வழி பெரும் தகவல்கள்: 1. மறுவளர்ச்சி மருத்துவச் சிகிச்சை முறை, 2. தனிப்பட்ட தேவைக்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறை, 3. நோயுற்றிற்கும் பொழுதோ அல்லது உடல் நலத்துடன் இருக்கும்போழுதோ உடல் இயங்கும் விதம் பற்றி அறிந்து நோய் தடுக்கும் முறைகளை வடிவமைக்க உதவி செய்யும்.
இவ்வாரத்தில் வெளியான செய்திகளின் படி (செப்டம்பர் 11, 2013), ஆராய்ச்சியாளர்கள் உயிருள்ள எலிகளின் உடல்களிலேயே, அவற்றின் வளர்ச்சியடைந்த உயிரணுக்களை மூலஉயிரணுக்களாக மாற்றமடையச் செய்ய மேற்கொண்ட சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது என்பது தெரிய வருகிறது. ஆராய்ச்சிக் கூடத்தில் கலன்களில் வளர்க்கப்படாது, உயிரினங்களின் உடலிலேயே மூலஉயிரணுக்களை தேவைகேற்ப வளரச் செய்வது மறுவளர்ச்சி மருத்துவத் துறையில் ஒரு முக்கியமானத் திருப்புமுனையாகும். எதிர்காலத்தில் சேதமடைந்த இதயத்தின் தசையையோ, தண்டுவடத்தையோ மாற்றியமைத்து மனிதர்களின் இதய, தண்டுவட நோய்களைக் குணப்படுத்தும் முறைக்கு இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் நம்பிக்கைத் தருவதாக அமைந்திருக்கிறது.
மனித குல உயர்வுக்காக வளர்ச்சியடைந்து வரும் இந்த மூலஉயிரணுக்கள் ஆராய்ச்சித் துறை, நன்னெறி வழிகளைச் சார்ந்ததா என்ற கேள்விகளையும், சர்ச்சைகளையும், போராட்டத்தையும் எதிர்கொண்டே வளர்ந்து வருகிறது.
References:
[1]
New possibilities in regenerative medicine: Researchers grow new stem cells in living mice, September 11, 2013, Kate Kelland, Reuters News.
http://medcitynews.com/2013/09/new-possibilities-in-regenerative-medicine-researchers-grow-new-stem-cells-in-living-mice/
[2]
Scientists Force Mature Cells to Revert to Stem Cells, September 11, 2013, Elizabeth Lopatto, Bloomberg.
http://www.bloomberg.com/news/2013-09-11/scientists-force-mature-cells-to-revert-to-stem-cells.html
[3]
A step closer to regenerative medicine, September 12, 2013, R. Prasad, The Hindu.
http://www.thehindu.com/sci-tech/science/a-step-closer-to-regenerative-medicine/article5117603.ece
[4]
Stem Cell Information, National Institutes of Health, U.S. Department of Health and Human Services – http://stemcells.nih.gov/info/basics/pages/basics1.aspx
[5]
What are stem cells? Craig A. Kohn. TED-Ed – http://ed.ted.com/lessons/what-are-stem-cells-craig-a-kohn
[6]
Regenerative medicine – http://en.wikipedia.org/wiki/Regenerative_medicine
படம் உதவி:
http://www.news-medical.net/health/What-are-Stem-Cells.aspx
அறிவியல் கலைச்சொற்கள் உதவி:
மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம், மணவை முஸ்தபா.
(http://www.tamilvu.org/library/nationalized/pdf/MaanavaiMustappa/009-MARUTHUVAKKALAICHOLKALANCHIYAM.pdf)
அன்பினியவர்களே !
அடுத்த மடலில் உங்களோடு இணையும் போதுதான் வாரத்தின் கால்களின் வலிமை புரிகிறது.
குழந்தை இறைவனது வரப்பிரசாதம். குழந்தைப் பேறு எனும் மகத்துவம் கிடைக்காமல் ஏங்கித் தவிக்கும் தாய்மார்கள் இவ்வகிலத்தில் எத்தனையோ ஆயிரம். .
மற்றொருபுறத்தில் கிடைத்த குழந்தையைப் பறிகொடுத்துத் தவிக்கும் பெற்றோர் பலர். ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு சமுதாயமும் தம்மைப் அடையாளப்படுத்திக் கொள்ள தமது வருங்காலத்தை வளப்படுத்திக் கொள்ள அவர்களது சந்ததியிலேயே தங்கியுள்ளனர்.
உலகத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவளல்ல என்பதை எடுத்துக்காட்ட புராண இதிகாசங்களில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. எந்த மதமும் , எந்த கலாச்சாரமும் வெளிப்படையாக ஆணுக்குப் பெண் சளைத்தவள் என்று சொல்லுவதில்லை, போதிப்பதில்லை அத்தகைய போதனைகள் சட்டவிரோதமாகப் பலநாடுகளில் பார்க்கப்படுகின்றன.
எமது பின்புல நாடுகளிலே தமது வயோதிப கால வாழ்க்கைக்கு ஓய்வூதியமோ அன்றி காப்புறிச் சாசனங்களோ அந்த நாட்களில் இருந்திருக்கவில்லை. பெற்றோர்கள் தம் கையிருப்புகளை எல்லாம் தம் குழந்தைகளின்ன்ன்ன் முன்னேற்றத்துக்காக செல்வழித்து விடுவார்கள்.
பின் தமது வயோதிப கால வாழ்க்கைக்கு .. . . . . ?
தம்முடைய பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி தம்மைப் பார்த்துக் கொள்வார்கள் எனும் நம்பிக்கையே அவர்களை வாழ வைத்தது.
அந்தக் காலங்களிலே பெண்கள் வேலைக்குப் போவது அரிது, ஆண்களே உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் நிலை இருந்தது.
எனவே பெற்றோரின் கனவு தமது முதலாவது குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் எனும் வகையில் அமைந்தது.
இதன் தேவை காலப்போக்கில் ஒரு சமுதாய கெளரவமாக மாறுதலடைந்து விட்டது. இதனால் மிகவும் மோசமாக, பெண் குழந்தைகளை வெறுக்கும் நிலைகூடத் தென்பட்டது.
என்ன எதற்காக சக்தியின் இம்மடல் இந்தத் திக்கு நோக்கிப் பயணிக்கிறது என்று எண்ணுகிறீர்களா?
சமீபத்தில் இங்கிலாந்துச் செய்திகளில் மிகவும் பிரபலமாக வலம் வரும் ஒரு செய்தியைப் பற்றிக் கூறவே இவ்விளக்கத்தினூடாகப் பயணித்தேன்.
பத்திரிகைகள் சம்யங்களில் “விசாரணை ஊடகவியல் (Investigative Journalism)” எனும் ஒருவகை ஊடக விசாரணையை நடத்துவதுண்டு.
அவ்வழியில் இங்கிலாந்தின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான “த டெய்லி டெலிகிராப் (The Daily Telegraph) “ எனும் பத்திரிகையின் ஒரு செய்தியாளர் இரு டாக்டர்களின் எதிர்காலத்தையே சின்னாபின்னமாக்கி விட்டுள்ளார். அந்த டாக்டர்களே தாம் வெட்டிய குழிக்குள் தாமே விழுந்து விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும்.
இங்கிலாந்தில் கருவுற்று இருக்கும் ஒரு பெண்ணின் கருவை தகுந்த வைத்திய காரணங்கள் இல்லாமல் கலைப்பது சட்டப்படி குற்றமாகும்.
ஆனால் இவ்விரு டாக்டர்களும், வேடமிட்டு வந்த பத்திரிகைச் செய்தியாளரிடம் தாம் “பெண் சிசு” எனும் காரணத்திற்காக அவரின் கருவைக் கலைக்கச் சம்மதித்துள்ளதை, அவர்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த வீடியோ கேமேரா மூலம் படம் பிடித்துள்ளார்.
இது அனைத்துத் தரப்பிலிருந்தும் பயங்கரமான் எதிர்ப்பலைகளையும் , காரசாரமான விமர்சனங்களையும் கிளப்பி விட்டுள்ளன.
அனைத்திற்கும் மேலாக இவ்விரு டாக்டர்களையும் சட்டத்தின் முன்னால் நிறுத்த எடுத்த முயற்சிகள், அரசு தரப்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் மக்களின் நலனுக்கு எவ்வகையிலும் உதவ மாட்டா எனும் காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டது.
இச்செய்தி வெளிவந்ததும் இது பொதுமக்களிடையிலே இவ்விவாதத்தின் மீது மேலும் சூட்டைக் கிளைப்பி விட்டுள்ளது.
இவையனைத்திற்கும் முடிசூட்டுவது போல இவ்விரு டாக்டர்களும் ஆசியர்கள், அதுவும் தமிழர்கள் என்பது மேலும் அதிக கவனயீர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர்கள் பணி என்பது பணம் சம்பாதிக்கும் நோக்கம் மட்டும் கொண்ட ஒரு பணி அல்ல. இது சமுதாய நலனை முன்னெடுக்கும் பணியாகும். ஒரு டாக்டர் உயிர்களைக் காப்பாற்றுவதையே தனது தலையாய பணியாகக் கொண்டிருப்பது அவசியம். தர்க்கரீதியான “பெண் குழந்தை” வேண்டாம் எனும் காரணத்திற்காக ஒரு உயிரை அழிக்கும் செய்கையானது டாக்டர் எனும் அந்தப் புனிதமான பணியையே கொச்சைப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமைகிறது.
முக்கியமாக அந்த டாக்டர்கள் ஆசியக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்டிருப்பவர்கள் என்றால் அவர்களது செய்கை ஆசியப் பின்னணியைக் கொண்ட எம் அனைவருக்குமே ஒரு ஏற்க முடியாத வெட்கித் தலைகுனியப் பண்ணும் செய்கையாகத் தென்படுகிறது.
“பணம் பாதாளம் வரை பாயும்” என்று எம்முன்னோர்கள் இதற்காகத்தான் சொல்லி வைத்தார்களோ ?
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
தமிழ்த்தேனீ
“மந்திரமாவது நீறு”
மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம்,துளசி வேப்பிலை, மஞ்சள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான். ஆகவே நாம் அவைகளை கையில் வைத்துக் கொண்டு மனமார ப்ரார்த்தனை செய்து அவகளை வணங்கிவிட்டு உபயோகித்தால் எப்படிப்பட்ட வியாதியும், திருஷ்டிகளும் விலகும் என்பது நான் கண்கூடாகப் கண்டவன் நான் என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். மானசா என்கிற ஜரத்காரு தேவி என்கிற சக்தியின் ஸ்லோகம் ஒன்று இருக்கிறது
“ஓம் ஐம் ஹரீம் ஸ்ரீரீம் க்லீம் ஜம் மனஸா தேவ்யை நமஹ“
கையில் கொஞ்சம் திருநீறு வைத்துக் கொண்டு, இந்த ஸ்லோகத்தை மானசீகமாக, ஜரத் காரு தேவியைப் ப்ரார்த்தித்து 108 தடவைகள் உச்சரித்து பயத்தால் அல்லது த்ருஷ்டியால் அழும் குழந்தைகளுக்கு, நெற்றியில் இந்த திருநீற்றினை இட்டுப் பாருங்கள், உடனே பலன் கிடைக்கும் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு விளையாடத் துவங்கும். இது என் அனுபவ பூர்வமான உண்மை.
“மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம்,துளசி வேப்பிலை, மஞ்சள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான்”. மந்திர ஒலிகள் அமைதி, சாந்தம், ஆழ்நிலை உட்ப்ரயானம், இவை அத்தனைக்கும் முந்தைய படிதான் ஒலி,சப்தம், மொழி, எல்லாமே ஒவ்வொரு மனிதனும் பிறப்பதிலிருந்து பயபக்தி, இறை கானங்கள், உச்சாடனங்கள் இவைகள் போதிக்கப் பட்டு வளர்க்கப் படுகிறான்.
இறைவனை நம்புவோர்கள் மட்டுமே இதை நம்புவார்கள் ஆனால் இவை எல்லாமே ஒவ்வொரு படிக்கட்டுக்கள். ஒவ்வொன்றாக தாண்டவேண்டும், அமைதியாக, சாந்தமாக, ஆழ்நிலை உட்ப்ரயாணம் செய்ய, மந்திர உச்சாடனத்துக்கு நிச்சயமாக பலன் இருக்கிறது.
அதன் ஒலி அதிர்வுகள் ஏற்படுத்தும் ஒன்று கூடிய மஹாசக்தி, எப்படிப்பட்ட நல்ல விளைவுகளையும் மிக எளிதாக ஏற்படுத்தும்.
நம்முடைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அத்தனை விஞ்ஞான முன்னேற்றமும் “கண்டு பிடிக்கப் பட்டவையே, உருவாக்கப்பட்டவை அல்ல” ஆக ஏற்கெனெவே இந்த ப்ரபஞ்ஜத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கிறார்கள் அல்லது மெய்ஞானிகள் உணர்கிறார்கள் அவ்வளவே
ஒவ்வொரு விஞ்ஞானி ஒவ்வொருகண்டுபிடிப்பை நிகழ்த்தும் போதும் அவர்களுடைய அறிய செயல் திறன் அதிர்வுகளும் ப்ரபஞ்சத்தின் இயற்கையான அதிர்வுகளும் அல்லது அலை வரிசைகளும் ஒரு இணையாக சந்திக்கும் போது நிகழ்வதுதான் கண்டுபிடிப்புகள் அல்லது மெய்ஞானிகள் தங்களுடைய ஆசார அனுஷ்டான வழிமுறைகளால் தம்மை உணர்ந்து உள்ளுக்குள்ளே இருக்கும் ஆன்ம சக்தியை அடைந்து அந்த ஆத்ம சக்தியின் மூலமாக ப்ரபஞ்சத்தின் உன்னதமான சக்தியின் அலைவரிசையை தொடர்பு கொண்டு தம்முடைய ஆத்ம சக்தியை அந்த அலைவரிசையோடு ஒத்துப் போகச் செய்து அதன் மூலமாக தாம் உணர்ந்த அற்புதங்களை கண்டு பிடிப்பாக மக்களுக்கு சொல்லி அவர்களை உய்யச்செய்வது.
இவை தான், மந்திர அல்லது தந்திர அல்லது விஞ்ஞான அல்லது, மெய்ஞான வழிகள் ப்ரசாதம் இறைவனை நம்புகிறவர்கள் மட்டுமே ப்ரசாதம் என்னும் சொல்லையே நம்புவர். ப்ரசாதம் என்பது நாம் அதாவது மானிடர்களாகிய நாம் நம்மைப் படைக்கும் முன்னரே நாம் உயிர் வாழ்வதற்காக, பிணியில்லாமல் இருப்பதற்காக,அப்படியும் மீறி பிணிகள் வந்தால் அவற்றைப் போக்கிக் கொள்வதற்காக அனைத்து வழிகளையும் படைத்த இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்தான் அதிலும் குறிப்பாக ப்ரசாதம் என்கிற வார்த்தையை நம்புகிறவர்களிடம் நான் நகைச் சுவையாக ஒரு கேள்வி கேட்பதுண்டு ப்ரசாதமாக படைக்கும் உணவை நீங்கள் எந்த தெய்வத்துக்குப் படைக்கிறிர்களோ அந்த தெய்வம் உண்மையிலேயே உண்டு மிகுதியை உங்களுக்கு ப்ரசாதமாக தருகிறது என்று நம்புகிறீர்களா…….? என்று ஆமாம் நம்புகிறோம் என்று பதில் சொன்னவர்களிடம் நகைச்சுவையாக மீண்டும் அப்படியானல் சரி நீங்கள் படைக்கும் உணவுப் பொருட்களை உண்மையிலேயே இறைவன் உண்பதானால் நீங்கள் அளித்த உணவின் அளவு கொஞ்சமாவது குறைந்திருக்க வேண்டுமே என்று அதற்கு இதுவரை பதிலளித்தவர்கள் இல்லை, நட்ட கல்லும் தெய்வமே நம்முள் நாதன் இருந்தால் ,நம்பிக்கைதான் வாழ்க்கை மேலும் நாம் அளிக்கும் எதுவாக இருந்தாலும் சரி நம்மைப் படைத்த இறைவனுக்குநாம் செலுத்தும் நன்றிக் கடனாக நாமே ஏற்படுத்திக் கொண்ட விஷயங்கள்தான்.
ப்ரசாதம் படைப்பது என்பது உண்மையிலேயே நாம் படைப்பதை இறைவன் ஏற்றுக் கொண்டு இறைவன் அதை உண்ண ஆரம்பித்து விட்டால் நாம் அடுத்தமுறை படைப்போமா என்பது சந்தேகமே ப்ரசாதம் என்பதன் தாத்பரியமே நாம் செலுத்தும் நன்றிக் கடன், மேலும் நம் நம்பிக்கை சர்வ வல்லமை படைத்த இறைவனுக்கு படைத்துவிட்டு நாம் சாப்பிட்டால் அந்த உணவு வகைகளில் ஏதேனும் தோஷங்கள்,அல்லது மருத்துவ நிபுணர்கள் கூறுவது போல ஏதேனும் ஒவ்வாமையான விஷயங்கள் இருக்குமானால் அவைகளை இறைவன் நீக்கிவிடுவான் என்னும் நம்பிக்கை.
இவ்வவளவே “மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம்,துளசி,வேப்பிலை, மஞ்சள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான் “அதே இறைவன் இவை எல்லாவற்றையும் உபயோகித்து பலன் அடையும் சக்தியையும் நமக்களித்திருக்கிறான்
ஆகவே நம்பிக்கை உள்ளவர்கள், அல்லது இறைவன் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் யார் உபயோகித்தாலும் இவை நிச்சயமாக பலன் தரும் வண்ணம் அருள் செய்திருக்கிறான் கருணை மனம் கொண்ட இறைவன் திரு நீறு + திருநாமம் திரு நீறு என்பதே பசுமாட்டின் சாணம் அதைக் காய வைத்து அதை நெருப்பிலிட்டு அதன் மூலமாக வரும் சாம்பல் பசுமாட்டின் சாணம் ஒரு கிருமி நாசினி என்று விக்ஞான பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம் அதனால்தான் நம் முன்னோர்கள் சுகாதாரம் கருதி பசுமாட்டின் சாணத்தை தண்ணீரிலே கலந்து தாங்கள் வாழும் பகுதிகளில் தெளித்து நோய்க் கிருமிகளிடமிருந்து ஓரளவு தப்பித்து வாழ்ந்தனர் நம்முடைய மூத்தோர்களால் மெய்ஞானம் என்று சொல்லப் பட்ட அனைத்துமே விஞ்ஞானம்தான்
அக்காலத்தில் மக்களுக்கு விஞ்ஞானம் என்றால் புரியாது அதனால் மெய்ஞானம் என்று சொல்லி வைத்தனர் நான் ஒரு கவிதையில்” வேதியல் படித்தால் தெரியும், வேதம் படித்தாலும் புரியும், வேதியல் விந்தை, வேதம் தான் வேதியலின் தந்தை, வேதம், வேதியலின் வர்க மூலம், என்று எழுதி உள்ளேன்
இயற்கையாகவே கிருமி நாசினியாக செயல் படும் விபூதி,திருநீறு இவைகளை நாம் கையில் வைத்துக் கொண்டு மந்திர உருவேற்றினால் இன்னும் கூடுதலாக சக்தி பெற்று நம்மை பல நோய்களிலிருந்து காப்பாற்றும் என்பதில் சந்தேகமே இல்லை .
அதே போல் வைணவர்கள் தரிக்கும் நாமம் என்று சொல்லப்படும் வெள்ளை கட்டி அதைக் குழைத்து நெற்றியிலே இட்டுக் கொள்ளும் போது நாமக்கட்டி என்று சொல்லப்படுகின்ற அதில் சுண்ணாம்பும் கலந்திருக்கின்ற காரணத்தால் நாமமும் அதன் நடுவிலே இட்டுக் கொள்ளும் ஸ்ரீ சூர்ணம் என்னும் சிவப்புக் கோடு மஞ்சள் என்னும் கிருமி நாசினியை உபயோகித்து உருவாக்கப்பட்டிருப்பதால் நாம் நம் நெற்றியில் இவைகளைத் தரிக்கும் போது நெற்றியின் நடுப் பகுதியான முக்கியமான சைனஸ் என்னும் நரம்புகளில் அனாவசியமாக சேரும் தண்ணீர் நமக்கு ஏற்படுத்தும் தலைவலி கழுத்து வலி போன்ற நோய்களை தடுக்கும் கிருமி நாசினியாக செயல் படுவதால் நம் முன்னோர்கள் முன்னரே அறிந்து தீர்கதரிசனத்துடன் கண்டு பிடித்து வைத்திருக்கும் இவைகளை இறைவன் ப்ரசாதமாக நாம் நினைத்து அணிவதனால் செயற்கையாக தயாரிக்கும் மாத்திரைகளை உபயோகிக்கும் நிலை நிச்சயமாக குறையும்.
அரசமரம், வில்வ மரம் இவைகள் வெளியிடும் காற்று இயல்பாகவே மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்க வல்லது என்று விஞ்ஞானிகளே ஒத்துக் கொண்டுள்ளனர்.
புற்று நோய் என்னும் கொடிய நோய் வில்வ இலைகளை தினமும் சேர்த்துக் கொண்டால் தீர்ந்துவிடும் என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்வர்.
சூட்டுக்கு சூடு தான் நல்வினை பயக்கும் மருந்து, ஆகவே நம் உடல் சூடுஅதிகமாகும்போது வில்வ இலையின் சூடு நம் உடலில் சேரும்போது இயல்பாகவே நாம் சமனப் பட்டு நோய் தீரும்.
அதை இறைவனுக்கு அவன் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டு ப்ரசாதமாக சேர்த்துக் கொண்டால் அவன் அருளும் சேர்ந்து நாம் பூரண குணமடைவோம் எனபதில் என்ன சந்தேகம்….? அரச மரத்தின் காற்று பெண்களின் கர்பஸ்தானத்தில் இருக்கும்.
பல ஒவ்வாமைகளை சரி செய்து அவர்களுக்கு. மகப் பேறு அளிக்க வல்லது அதனால்தான் பெரியவர்கள். மகப் பேறு கிட்டாதவர்களை அரச மரத்தை ப்ரதட்ஷனமாக வரச் செய்வர் . அவர்கள் ப்ரதட்ஷணமாக வரும்போது அந்த அரச மரக் காற்றில் இருக்கும் நல்ல விளைவுகள் ஏற்படுத்தக் கூடிய வாசம் அப் பெண்களுக்கு குறைகளை களைந்து புத்திரபாக்கியத்தை ஏற்படுத்தும் என்று சொல்லுகிறார்கள்.
“துளசி, வேப்பிலை, மஞ்சள் “சைவ ஆலயங்களில் திருநீறு,மற்றும் வில்வ இலைகள் அவைகளை ப்ரசாதமாக கொடுக்கும் வழக்கமும் வைணவ ஆலயங்களில் துளசிகலந்த தீர்த்தமும் மஞ்சள் கலந்த குங்குமமும் ப்ரசாதமாக அளிக்கும் வழக்கமும் மிகவும் யோசித்து பெரியோர்களால் ஏற்படுத்தப்பட்டது “முன்னோரெல்லாம் மூடர்களல்ல நமக்குண்டு பண்பாடு ” என்கிற கண்ணதாசனின் கவிதை வரிகள் நமக்கு வலுவூட்டுகிறது
சைவம், வைணவம் அதன் பின்னே சாக்தம் என்று சொல்லக்கூடிய சக்தி வழிபாட்டுக் காரர்கள் வேப்பிலையில் மஞ்சளைப் பூசி அதை அம்மனாகிய சக்திக்கு அணிவித்து ,அதையே ப்ரசாதமாக வாங்கி தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.
நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் வேப்ப மரத்தை நட்டு வளர்ப்பார்கள். நல்ல வெய்யில் காலத்தில் வேப்ப மரத்தடியின் கீழ் அமர்ந்து பாருங்கள் எவ்வவளவு குளிர்ச்சியாய் இருக்கிறதென்று. மஞ்சளும் வேப்பிலையும் குளிர்ச்சி ஆகவேதான் வேனல் காலங்களில் வரும் கட்டிகள் அம்மை போன்ற நோய்கள்தீர வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்து தடவுகின்றனர் வேப்பிலையும் மஞ்சளும் கருணையோடு நம்மைக் காக்கும் உலகமாதா வான அன்னையின் அருளும் அதில் சேரும்போது நோய்கள் தீரும் என்பதில் என்ன சந்தேகம்….?
“சிவன் “ சிவன் அபிஷேகப் பிரியன் ஏனென்றால் ஒரு கையில் அக்னி உடல் முழுவதும் சுடுகாட்டுச் சாம்பல் என்று நம்முடைய பாபங்களைத் தீர்க்க பெற்ற தாய் போல அவன் தாங்கிக் கொண்டிருக்கிறான் அத்தனை வெப்பத்தையும். அந்த வெப்பம் தணிய அவன் அபிஷேகப் பிரியனாயும் வில்வ இலை தரித்தும் பசுஞ்சாணத்தல் செய்யப்பட்ட திருநீறையும், குளிர்ச்சியான சந்திரனையும் கங்கையையும் தலையிலே அணிந்து கொண்டு பனிமலையிலே,அதாவது கையிலாயத்திலே வாசம் செய்கிறான்
“மஹாவிஷ்ணு” மஹாவிஷ்ணு படுத்துக் கொண்டிருப்பதே பாற்க்கடலில். அவன் மிகக் குளிர்ச்சியானவன், இல்லையென்றால் எப்படி அவன் நாபிக் கமலத்திலிருந்து தாமரை முளைக்கும் அதில் எப்படி நான்முகன் அமரமுடியும்….? அதனால்தான் பக்தர்களின் குளிர் கால நோய்கள் தீர்க்க எல்லாக் குளிரையும் தான் தாங்கிக் கொண்டு இருப்பதால் அதைச் சமன் செய்ய அவன் திருமகளை மார்பிலே தாங்கிக் கொண்டு
ஆடை ஆபரணங்கள் பூண்டு, சுகவாசி போல் தோற்றமளித்துக் கொண்டு நம் பாவங்கள், பிணிகள் இவைகளைப் போக்க நெய், தேன், பால், பலகாரங்கள் இன்ன பிற வசதிகளைச் செய்து கொண்டு நம்மைக் காத்துக் கொண்டிருக்கிறான் ஆம் விஷ்ணு அலங்காரப் பிரியன் என்று சொல்வார்கள்
“சக்தி” அது மஹா விஷ்ணுவாக இருக்கட்டும் ஈசன் சிவனாக இருக்கட்டும் அனைவருக்கும் சக்தியாய் ஒளிர்பவள் சக்தி அதனால்தான் சக்தியானவள் அனைவருக்கும் அருள்பாலிக்கும் படியாக மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம், துளசி வேப்பிலை, மஞ்சள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான் என்று சொல்லக் கூடிய இறைவனுக்கே சக்தி கொடுப்பவள் அன்னை .
ஆதலால் தான் அவள் திருநீறு, வில்வம்,துளசி வேப்பிலை, மஞ்சள், குங்குமம் இவைகள் அனைத்துக்கும் சக்தி கொடுப்பவளாக அத்தனையையும் தான் தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு ப்ரசாதமாக அளித்துக் காக்கிறாள்.
என்னை இந்த உன்னதமான கட்டுரையை எழுதவைத்த சக்தி, அன்னையின் அருள் அவள் திருவடி தொழுது இக்கட்டுரையை அளிக்கிறேன். அன்னை அருள் பாலிக்கட்டும்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
சச்சிதானந்தம்
களிறுகளும் குறவனும்
அருவியில் நீர்பருக வருகின்ற யானைகள்,
அருகிலே செல்லாமல் கவனித்து நின்றான்,
தொலைவிலே தெரிகின்ற யானைகள் கூட்டம்,
கலைந்திடும் மெதுவாகப், பிளிறிடும் பெரிதாக! 77
யானையின் பிளிறலால் அருவியும் படபடக்கும்,
ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் நடைநடக்கும்,
களிறுகள் கடந்தபின்னர் அருவிமீண்டும் சலசலக்கும்,
வெளிரிடும் நதியில் கலந்து கதிரதன் ஒளிதெறிக்கும்! 78
யானை மயிர் சேகரித்தல்
களிறுதிர்த்த மயிரெடுத்து அருவிநீரில் நனைத்தெடுத்து,
கயிறுபோலத் திரித்தெடுத்துச் சுற்றி வைத்தான்,
வெதுவெதுப்புக் குறைந்திடாத சாணம் அள்ளிக்,
கொண்டுவந்த பையில் வைத்தான் குறவன்! 79
யானை நகம் சேகரித்தல்
கன்றாயிருந்த களிறு ஓடோடிருந்த ஆமை உதைத்துக்,
குதித்துக்குதித்து ஆடிய நினைவில், பின்நா ளொருசிறு
குன்றாயிருந்த பாறைகண்டு, ஆமையெனவே காலாலுதைக்க,
முன்னாலிருந்த நகங்கள்விண்டு சிப்பியைப் போலச் சிதறினவே! 80
சிப்பியைப் போலச் சிதறிய நகங்களை,
முத்தென மதித்துச் சேகரம் செய்து,
பத்திரப் படுத்திப் பையினில் வைத்து,
சத்தியக் குறத்திக்குக் கொடுக்க நினைத்தான்! 81
யானைக் கன்றுக்கு உதவுதல்
யானைக் கன்றொன்றைத் தனியே கண்டான்,
தாயைப் பிரிந்ததுயர் கண்ணில் கண்டான்,
உணவுண்ணத் தெரியாத கன்றுக்குத் தேனள்ளித்,
தனதன்புப் பிள்ளைக்குக் கொடுப்பதுபோல் கொடுத்தான்! 82
தாயோடு சேய்சேர வழியொன்று கண்டான்,
களிறைப்போல் பிளிறிக் கணநொடியில் மறைந்தான்,
பிளிறல் ஒலிகேட்ட பிடியின் கூட்டம்,
எளிதில் சேய்கண்டு ஒன்றாகச் சேரும்! 83
சு.ரவி
வணக்கம், வாழியநலம்
நமக்குத் தெற்கில் நவராத்திரி போல, மஹாராஷ்ட்ராவில் குறிப்பாக புனே நகரின் நாயகன் விநாயகன் தான். விநாயக சதுர்த்தி தொடங்கி 10 நாட்கள், காணும் திசையெல்லாம் கணபதி!
பிறந்தநாள்கொண்டாட்டத்தில் குஷியாக ஆடிக்களிக்கும் இந்த விநாயகரையும் ரசிப்போமா…?
குன்றக்குடி அடிகள்
26. பொறுமை போற்றுக!
இந்த உலகில் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்; நியதியும்கூட! ஆனால் அப்படி எல்லாம் நடப்பதில்லையே! என்ன செய்வது? நாம் விரும்பாதன பல நடக்கின்றன! நன்மைகளைப்போலக் காட்டித் தீமைகள் செயல்படுகின்றன. பொய்யர்களின் மெய் அரங்கேறுகிறது. பழிதூற்றும் படலமே ஓதப் பெறுகிறது.
நண்பர்கள் பகைவர்களாகின்றனர்! மலடிகள் மகப்பேறு மருத்துவ ஆலோசனைகள் கூறுகின்றனர். அதுவும் கருவுயிர்க்கும் அறையில் அல்ல; அரங்கில்! என்ன செய்வது? ஆத்திரப்படுவதில் பயனில்லை. பொறுமையாக இருத்தல் வேண்டும்!
பயன்படு வாழ்க்கைக்கு வாயில் பொறுமையே! மற்றவர்கள் தீயையே அள்ளிக் கொட்டினாலும் பொறையுடைய வாழ்க்கையை ஒன்றும் செய்யாது! கூளம், குப்பையாக இருந்தால் பற்றி எரியும்! இல்லையானால் தீ அவியும். இதுவே நடைமுறை!
பொறுமைக்கும் எல்லையுண்டு என்பர் சிலர்! இது தவறு. பொறுமைக்கு எல்லையே இல்லை! அப்படியே எல்லை உண்டு என்று கருதினாலும் அந்த எல்லை, “தீங்கு செய்பவன் திருந்தி நலம் செய்பவனாக மாறுவதே பொறுமையின் எல்லை” என்றார் முகமது நபி.
நிலம் பயன்பாடுடையது. பயன்படு பொருள்கள் பலப்பல தருவது. நிலமின்றேல் வாழ்வு இல்லை. இந்த நிலத்தையே நாம் அகழ்ந்தும் துன்புறுத்துகின்றோம். ஆயினும் நிலம் அக்ழ்வாருக்குத் தீங்கு தருவதில்லை. மாறாகப் பயன்களையே தந்து வாழ்விக்கிறது.
அதுபோல் நாம் நம்மை இகழ்வார் மேல் கோபம் கொள்ளகூடாது. முடிந்தால் குற்றங்களைத் திருத்த வேண்டும் அல்லது பொறுக்க வேண்டும். பொறுத்தாற்றும் பண்பு ஒரு வலிமை; வெற்றிகளைத் தருவது; இன்பம் தருவது.
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”
(குறள் – 151)
_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்
மின்பதிப்பாக்க உதவி: தேமொழி
ஆர்.எஸ்.மணி
வாழ்வே இதுதான்: சுழலும் உலகம்.
இரவும், பகலும், வருமே மாறியே (வாழ்வே இதுதான்)
காலை ஒளியும், மாலை இருளும்,
உறவும், முறிவும், வருமே மாறியே (வாழ்வே இதுதான்)
சுற்றம் என்ன, சூழல் என்ன,
நிலையானதாகுமோ?
சொந்தம் என்ன, பந்தம் என்ன
செல்லாமலே நில்லுமோ?
ஒருநாள் இன்பம், ஒருநாள் துன்பம்,
மாறாதே இக்கோலம். (வாழ்வே இதுதான்)
கன்னி என்ன, காதல் என்ன,
வண்ணம் எல்லாம் மாறுமே!
பாசம் என்ன, நேசம் என்ன,
வந்து பின்னே போகுமே!
ஒருநாள் இங்கே, ஒருநாள் அங்கே
எங்கே எந்தன் வீடும்! (வாழ்வே இதுதான்)
—ஆர்.எஸ்.மணி
(கேம்ரிஜ், ஆன்டேரியோ, கனடா)
கிஷோர் குமாரின் “ஏ ஜீவன் ஹை” என்னும் ஹிந்தி பாட்டின் மெட்டில் எழுதி,
என் குரலில் பதிவு செய்யப் பட்டது..
அன்பு நண்பர்களே,
வணக்கம். நம் வல்லமை ஆசிரியர் குழுவில் இன்று பர்வத வர்தினி நம்மோடு இணைகிறார். இவர் ஏற்கனவே அறிமுகமானவர்தான். ‘கால இயந்திரம் ’, என்ற ஒரு தொடரின் மூலம் நம் அனைவரையும் கவர்ந்தவர். பல அரிய படைப்புகளை நம் வல்லமைக்கு வழங்கியுள்ள இவர், ஒரு பட்டயக் கணக்கர் (Chartered Accountant). இவரது சொந்த ஊர் சென்னை. படித்து முடித்ததும் சென்னையில் ஐடி துறையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளாக கணவர் மற்றும் குழந்தைகளுடன் குவைத்தில் வசித்து வருகிறார். சில காலம் குவைத்தில் பணிபுரிந்தாலும், தற்சமயம் முழு நேர இல்லத்தரசியாக இருக்கிறார். நாவல்கள், குறிப்பாக சரித்திர நாவல்கள் படிப்பது தனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்கிறார் இவர். பர்வத வர்தினியை வாழ்த்தி வரவேற்போம். வருக.. வருக வர்தினி!
வல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு (2013)
அன்புடன்
பவள சங்கரி