குறவன் பாட்டு – 10
சச்சிதானந்தம்
களிறுகளும் குறவனும்
அருவியில் நீர்பருக வருகின்ற யானைகள்,
அருகிலே செல்லாமல் கவனித்து நின்றான்,
தொலைவிலே தெரிகின்ற யானைகள் கூட்டம்,
கலைந்திடும் மெதுவாகப், பிளிறிடும் பெரிதாக! 77
யானையின் பிளிறலால் அருவியும் படபடக்கும்,
ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் நடைநடக்கும்,
களிறுகள் கடந்தபின்னர் அருவிமீண்டும் சலசலக்கும்,
வெளிரிடும் நதியில் கலந்து கதிரதன் ஒளிதெறிக்கும்! 78
யானை மயிர் சேகரித்தல்
களிறுதிர்த்த மயிரெடுத்து அருவிநீரில் நனைத்தெடுத்து,
கயிறுபோலத் திரித்தெடுத்துச் சுற்றி வைத்தான்,
வெதுவெதுப்புக் குறைந்திடாத சாணம் அள்ளிக்,
கொண்டுவந்த பையில் வைத்தான் குறவன்! 79
யானை நகம் சேகரித்தல்
கன்றாயிருந்த களிறு ஓடோடிருந்த ஆமை உதைத்துக்,
குதித்துக்குதித்து ஆடிய நினைவில், பின்நா ளொருசிறு
குன்றாயிருந்த பாறைகண்டு, ஆமையெனவே காலாலுதைக்க,
முன்னாலிருந்த நகங்கள்விண்டு சிப்பியைப் போலச் சிதறினவே! 80
சிப்பியைப் போலச் சிதறிய நகங்களை,
முத்தென மதித்துச் சேகரம் செய்து,
பத்திரப் படுத்திப் பையினில் வைத்து,
சத்தியக் குறத்திக்குக் கொடுக்க நினைத்தான்! 81
யானைக் கன்றுக்கு உதவுதல்
யானைக் கன்றொன்றைத் தனியே கண்டான்,
தாயைப் பிரிந்ததுயர் கண்ணில் கண்டான்,
உணவுண்ணத் தெரியாத கன்றுக்குத் தேனள்ளித்,
தனதன்புப் பிள்ளைக்குக் கொடுப்பதுபோல் கொடுத்தான்! 82
தாயோடு சேய்சேர வழியொன்று கண்டான்,
களிறைப்போல் பிளிறிக் கணநொடியில் மறைந்தான்,
பிளிறல் ஒலிகேட்ட பிடியின் கூட்டம்,
எளிதில் சேய்கண்டு ஒன்றாகச் சேரும்! 83
//சிப்பியைப் போலச் சிதறிய நகங்களை,
முத்தென மதித்துச் சேகரம் செய்து,
பத்திரப் படுத்திப் பையினில் வைத்து,
சத்தியக் குறத்திக்குக் கொடுக்க நினைத்தான்///
போன்ற அருமையான வரிகளுக்காகவே வெள்ளி தோறும் சிங்கியை எதிபார்த்து காத்திருக்கும் சிங்கா வைப்போல் குறவன் பாட்டுக்காக காத்திருக்கிறேன்.
“களிறுகள் கடந்தபின்னர் அருவிமீண்டும் சலசலக்கும்,
வெளிரிடும் நதியில் கலந்து கதிரதன் ஒளிதெறிக்கும்! ”
தெறித்திடும் ஒளியினில் சிறுகயல்கள் தாவிக்குதிக்கும்
பொறிகுவி நாரையதை மின்னலெனத் தாவி பிடிக்கும்
குறியது தவறிட தப்பியக்கெண்டை ஆவியது துடிக்கும்
அறிந்ததை அருகினிலிரு மாமரஅணில் வாய்விட்டேச்சிரிக்கும். 🙂
சும்மா தொடர்ச்சியா எழுதிப் பார்த்தேன்.
அருமை நண்பரே! பகிவிற்கு நன்றி!
தாயோடு சேய்சேரக் கண்ட வழிபோல்,
தனிவழியில் சிறப்பாய்க் கவிதை…!
கவிதைகளைப் படித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ள நண்பர்கள் திரு.தனுசு, திரு.ஆலாசியம் மற்றும் திரு.செண்பக ஜெகதீசன் அவர்களுக்கும் என் அன்பான நன்றிகள்.
வார்த்தைகளிலேயே கானகக் காட்சியை ஓவியமாகத் தீட்டிவிட்டீர்கள். படிக்கும் போதே, மனதுள், துள்ளியோடும் அருவியில் கதிரவன் ஒளி பட்டுத் தெறித்து வர்ணஜாலங்கள் காட்டியது. யானைகள் அழகாக, கூட்டமாக நடை போட்டன. க்டைசி வரிகளில்,குறவனின் தாயுள்ளம் கண்டு மனம் உருகியது. தொடர்ந்து வர மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
@@திருமதி.பார்வதி இராமச்சந்திரன்
//கடைசி வரிகளில்,குறவனின் தாயுள்ளம் கண்டு மனம் உருகியது.//
கவிதைகளைத் தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்தி வரும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.