குன்றக்குடி அடிகள்

26. பொறுமை போற்றுக!

இந்த உலகில் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்; நியதியும்கூட! ஆனால் அப்படி எல்லாம் நடப்பதில்லையே! என்ன செய்வது? நாம் விரும்பாதன பல நடக்கின்றன! நன்மைகளைப்போலக் காட்டித் தீமைகள் செயல்படுகின்றன. பொய்யர்களின் மெய் அரங்கேறுகிறது. பழிதூற்றும் படலமே ஓதப் பெறுகிறது.

நண்பர்கள் பகைவர்களாகின்றனர்! மலடிகள் மகப்பேறு மருத்துவ ஆலோசனைகள் கூறுகின்றனர். அதுவும் கருவுயிர்க்கும் அறையில் அல்ல; அரங்கில்! என்ன செய்வது? ஆத்திரப்படுவதில் பயனில்லை. பொறுமையாக இருத்தல் வேண்டும்!

பயன்படு வாழ்க்கைக்கு வாயில் பொறுமையே! மற்றவர்கள் தீயையே அள்ளிக் கொட்டினாலும் பொறையுடைய வாழ்க்கையை ஒன்றும் செய்யாது! கூளம், குப்பையாக இருந்தால் பற்றி எரியும்! இல்லையானால் தீ அவியும். இதுவே நடைமுறை!

பொறுமைக்கும் எல்லையுண்டு என்பர் சிலர்! இது தவறு. பொறுமைக்கு எல்லையே இல்லை! அப்படியே எல்லை உண்டு என்று கருதினாலும் அந்த எல்லை, “தீங்கு செய்பவன் திருந்தி நலம் செய்பவனாக மாறுவதே பொறுமையின் எல்லை” என்றார் முகமது நபி.

நிலம் பயன்பாடுடையது. பயன்படு பொருள்கள் பலப்பல தருவது. நிலமின்றேல் வாழ்வு இல்லை. இந்த நிலத்தையே நாம் அகழ்ந்தும் துன்புறுத்துகின்றோம். ஆயினும் நிலம் அக்ழ்வாருக்குத் தீங்கு தருவதில்லை. மாறாகப் பயன்களையே தந்து வாழ்விக்கிறது.

அதுபோல் நாம் நம்மை இகழ்வார் மேல் கோபம் கொள்ளகூடாது. முடிந்தால் குற்றங்களைத் திருத்த வேண்டும் அல்லது பொறுக்க வேண்டும். பொறுத்தாற்றும் பண்பு ஒரு வலிமை; வெற்றிகளைத் தருவது; இன்பம் தருவது.

“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”

(குறள் – 151)

 

 

 

 

_________________________________
REF:  http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வாழ்க்கை நலம் – 26

  1.  அருமை…
    அடிகளாரின் கருத்தில் விளைந்தக் கவிதைகள்..
     
    ஆன்றோர் பற்று ஐம்புலன் அடங்கலே 
    சான்றோர் கூற்று சாகாவரம்வழி சாற்றே 
    வான் உறைவோர்க்கு வசப்படாத வீடை 
    ஆன்கொள் நினைவார்முதற் தவம்பொறையே.

    பொறையாவன வரும் வழியோ மன 
    நிறைவான அன்பெனும் வாயிலே அஃதும் 
    கறையிலா கருணை திறலேயது பெருக்கும் 
    மறையாம் வள்ளுவம் காட்டுநெறியே 

    பகிர்விற்கு நன்றிகள் சகோதரியாரே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *