பவள சங்கரி
தலையங்கம்
‘நான்கு குருடர்களும், ஒரு யானையும்’ என்ற கதையை பள்ளியில் படித்தது நினைவிருக்கும் இல்லையா? ஒரு ஊரில் நான்கு குருடர்கள் இருந்தார்கள். பிறவிக் குருடர்களான அவர்களுக்கு யானையைப் பார்க்க ஆசை. எதிர்பாராத விதமாக ஒரு யானை அங்கேயே வந்து பிளிருகிறது.. சத்தம் கேட்டு நான்கு பேரும், ‘அட யானை வந்துடிச்சின்னு’ சந்தோசப்படுகிறார்கள். சத்தம் கேட்டாச்சு. தொட்டுப் பார்த்து எப்படி இருக்கிறதென்று தெரிஞ்சுக்கலாம் என்ற ஆவலில் ஒரு குருடன், காலைத் தொட்டுப்பார்த்து, ‘தூணாட்டம் இருக்கு’ என்கிறான்.. வாலைத் தொட்டுவிட்டு, ‘யானை கயிறு போல இருக்கு’ என்கிறான் மற்றொருவன். தும்பிக்கையைத் தொட்டவன், ‘யானை நீட்டமா உலக்கையாட்டம் இருக்குது’ என்கிறான்.. நான்காவதாக வந்தவன் வயிறைத் தொட்டுப்பார்த்து ‘யானை மலையாட்டம் இருக்கு’ என்கிறான்.. நான்கு பேரும் சொன்னது ஒவ்வொரு விதத்தில் சரிதான் என்றாலும், மொத்தமாகப் பார்த்தால் யானையின் உருவத்திற்கான இந்த விளக்கம் சரிதானா?
இன்று நம் இந்திய நாட்டின் பொருளாதாரம்தான் யானை.. நம்மோட ரிசர்வ் வங்கி கவர்னர், நிதியமைச்சர், பாரதப் பிரதமர், (பொருளாதார வல்லுநர்) மத்தியில் உள்ள பொருளாதாரச் செயலாளர் என இவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான கருத்துக்களையல்லவா சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் திட்டமிட்டு செய்த செயல்களால்தான் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்து, ரூபாயின் மதிப்பு அதிகரித்து, தங்கத்தின் இறக்குமதியும் குறைந்ததா? தெளிவற்ற அணுகு முறைகளும், திறமையற்ற நிர்வாகமும் ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கும், அதன் தொடர்பாக நடந்த மற்ற நிகழ்வுகளுக்கும் காரணம் இல்லையா? இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் சரியாகத்தான் திட்டமிடப்பட்டது என்றால் இதை ஏன் முன்னமேயே செயல்படுத்தவில்லை? இப்படிப்பட்ட கேள்வி சாமான்யனுக்கும் தோன்றக்கூடிய ஒன்றுதானே? துக்ளக் தர்பார் போன்றல்லவா இருக்கிறது இது. 2 மாதம் முன்னால் பஞ்சை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்தார்கள். மீண்டும் திடீரென்று டன்னுக்கு 10,000 ரூபாய் வரி விதித்தார்கள். இது யாரை திருப்திபடுத்துவதற்காக செய்யப்படுகிறது என்று புரியவில்லை. நம்முடைய ரூபாய் மதிப்பு குறைந்ததற்கான மூல காரணம் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியால்தான் அல்லவா, நம்முடைய அன்னியச் செலாவணி பெருமளவில் கரைகிறது? இதற்காக என்ன திட்டங்களைத் தீட்டி, செயல்பாட்டிற்கு கொண்டுவந்திருக்கிறோம்? நேற்று மாலை தெருவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டிருந்தபோது, படிப்பறிவில்லாத இருவர் சர்வ சாதாரணமாக பேசிக்கொண்டு போவதைக் கேட்க முடிந்தது. “சிங்கப்பூர்ல இருக்கற மாதிரி நகருக்குள் எந்த வாகனமும் ஓட்டக்கூடாது என்று சட்டம் போட்டால் இவ்வளவு நெரிசல் இருகாதில்லையா, முக்கியமான இடங்களுக்குச் செல்ல வேண்டுமானால் அரசு போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தலாமே. இப்படியே போனால், சாதாரண நகரங்களில் கூட நாளடைவில் வாகனங்கள் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு செல்லும் நிலை அல்லவா ஏற்படக்கூடும்? ” என்று அவர்கள் பேசிக்கொண்டது என் காதில் விழுந்தது. உண்மைதானே இது. இப்படிச் செய்வதால் அன்னிய செலாவணியும் பாதிக்குப் பாதியாகக் குறையக்கூடிய வாய்ப்பும் இருக்கிறதே. இதையெல்லாம் விட்டுவிட்டு, பஞ்சை ஏற்றுமதி செய்து , உள் நாட்டில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பிரச்சனையை அதிகப்படுத்திக் கொண்டல்லவா இருக்கிறோம்?
தங்கத்தை இறக்குமதி செய்யத் தடை விதித்தது நல்ல திட்டம் என்றாலும்.. ஏற்றுமதி செய்ய என்ன திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது? தங்க நகை ஏற்றுமதிக்கு எந்த விதமான ஊக்குவிப்பும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லையே. யானை போன்ற பொருளாதாரத்தை சரியான நோக்கில் கண்டறிந்து தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் இன்று. நாளுக்கு நாள் குறைந்து கொண்டுவரும், நம்முடைய ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்வதற்கும் மற்றும் இரஷ்யாவில் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும், இந்திய ரூபாயை பரிவர்த்தனைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது போல, மற்ற இறக்குமதி பொருட்களுக்கும் பரிவர்த்தனைப் பொருளாக நம்முடைய பணத்தையேக் கொடுப்பதாக இருந்தால் மட்டுமே ரூபாயின் மதிப்பு உயரக் கூடிய வாய்ப்பு இருக்கும் அல்லவா? நெஞ்சு பொறுக்குதில்லையே!

Leave a Reply