Featuredஇலக்கியம்பத்திகள்

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (74)

சக்தி சக்திதாசன்doctorlaw sym

அன்பினியவர்களே !

அடுத்த மடலில் உங்களோடு இணையும் போதுதான் வாரத்தின் கால்களின் வலிமை புரிகிறது.

குழந்தை  இறைவனது வரப்பிரசாதம். குழந்தைப் பேறு எனும் மகத்துவம் கிடைக்காமல் ஏங்கித் தவிக்கும் தாய்மார்கள் இவ்வகிலத்தில் எத்தனையோ ஆயிரம். .

மற்றொருபுறத்தில் கிடைத்த குழந்தையைப் பறிகொடுத்துத் தவிக்கும் பெற்றோர் பலர். ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு சமுதாயமும் தம்மைப் அடையாளப்படுத்திக் கொள்ள தமது வருங்காலத்தை வளப்படுத்திக் கொள்ள அவர்களது சந்ததியிலேயே தங்கியுள்ளனர்.

உலகத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவளல்ல என்பதை எடுத்துக்காட்ட புராண இதிகாசங்களில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. எந்த மதமும் , எந்த கலாச்சாரமும் வெளிப்படையாக ஆணுக்குப் பெண் சளைத்தவள் என்று சொல்லுவதில்லை, போதிப்பதில்லை அத்தகைய போதனைகள் சட்டவிரோதமாகப் பலநாடுகளில் பார்க்கப்படுகின்றன.

எமது பின்புல நாடுகளிலே தமது வயோதிப கால வாழ்க்கைக்கு ஓய்வூதியமோ அன்றி காப்புறிச் சாசனங்களோ அந்த நாட்களில் இருந்திருக்கவில்லை. பெற்றோர்கள் தம் கையிருப்புகளை எல்லாம் தம் குழந்தைகளின்ன்ன்ன் முன்னேற்றத்துக்காக செல்வழித்து விடுவார்கள்.

பின் தமது வயோதிப கால வாழ்க்கைக்கு .. . . . . ?

தம்முடைய பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி தம்மைப் பார்த்துக் கொள்வார்கள் எனும் நம்பிக்கையே அவர்களை வாழ வைத்தது.

அந்தக் காலங்களிலே பெண்கள் வேலைக்குப் போவது அரிது, ஆண்களே உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் நிலை இருந்தது.

எனவே பெற்றோரின் கனவு தமது முதலாவது குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் எனும் வகையில் அமைந்தது.

இதன்  தேவை காலப்போக்கில் ஒரு சமுதாய கெளரவமாக மாறுதலடைந்து விட்டது. இதனால் மிகவும் மோசமாக,  பெண் குழந்தைகளை வெறுக்கும் நிலைகூடத் தென்பட்டது.

என்ன எதற்காக சக்தியின் இம்மடல் இந்தத் திக்கு நோக்கிப் பயணிக்கிறது என்று எண்ணுகிறீர்களா?

சமீபத்தில் இங்கிலாந்துச் செய்திகளில் மிகவும் பிரபலமாக வலம் வரும் ஒரு செய்தியைப் பற்றிக் கூறவே இவ்விளக்கத்தினூடாகப் பயணித்தேன்.

பத்திரிகைகள் சம்யங்களில் “விசாரணை ஊடகவியல் (Investigative Journalism)” எனும் ஒருவகை ஊடக விசாரணையை நடத்துவதுண்டு.
அவ்வழியில் இங்கிலாந்தின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான “த டெய்லி டெலிகிராப் (The Daily Telegraph) “ எனும் பத்திரிகையின் ஒரு செய்தியாளர் இரு டாக்டர்களின் எதிர்காலத்தையே சின்னாபின்னமாக்கி விட்டுள்ளார். அந்த டாக்டர்களே தாம் வெட்டிய குழிக்குள் தாமே விழுந்து விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும்.

இங்கிலாந்தில் கருவுற்று இருக்கும் ஒரு பெண்ணின் கருவை தகுந்த வைத்திய காரணங்கள் இல்லாமல் கலைப்பது சட்டப்படி குற்றமாகும்.

ஆனால் இவ்விரு டாக்டர்களும்,  வேடமிட்டு வந்த பத்திரிகைச் செய்தியாளரிடம் தாம் “பெண் சிசு” எனும் காரணத்திற்காக அவரின் கருவைக் கலைக்கச் சம்மதித்துள்ளதை, அவர்களுக்கு  தெரியாமல் மறைத்து வைத்திருந்த வீடியோ கேமேரா மூலம் படம் பிடித்துள்ளார்.

இது அனைத்துத் தரப்பிலிருந்தும் பயங்கரமான் எதிர்ப்பலைகளையும் , காரசாரமான விமர்சனங்களையும் கிளப்பி விட்டுள்ளன.

அனைத்திற்கும் மேலாக இவ்விரு டாக்டர்களையும் சட்டத்தின் முன்னால் நிறுத்த எடுத்த முயற்சிகள்,  அரசு தரப்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் மக்களின் நலனுக்கு எவ்வகையிலும் உதவ மாட்டா எனும் காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டது.

இச்செய்தி வெளிவந்ததும் இது பொதுமக்களிடையிலே இவ்விவாதத்தின் மீது மேலும் சூட்டைக் கிளைப்பி விட்டுள்ளது.

இவையனைத்திற்கும் முடிசூட்டுவது போல இவ்விரு டாக்டர்களும் ஆசியர்கள், அதுவும் தமிழர்கள் என்பது மேலும் அதிக கவனயீர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர்கள் பணி என்பது பணம் சம்பாதிக்கும் நோக்கம் மட்டும் கொண்ட ஒரு பணி அல்ல. இது சமுதாய நலனை முன்னெடுக்கும் பணியாகும். ஒரு டாக்டர் உயிர்களைக் காப்பாற்றுவதையே தனது தலையாய பணியாகக் கொண்டிருப்பது அவசியம். தர்க்கரீதியான “பெண் குழந்தை” வேண்டாம் எனும் காரணத்திற்காக ஒரு உயிரை அழிக்கும் செய்கையானது டாக்டர் எனும் அந்தப் புனிதமான பணியையே கொச்சைப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமைகிறது.

முக்கியமாக அந்த டாக்டர்கள் ஆசியக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்டிருப்பவர்கள் என்றால் அவர்களது செய்கை ஆசியப் பின்னணியைக் கொண்ட எம் அனைவருக்குமே ஒரு ஏற்க முடியாத வெட்கித் தலைகுனியப் பண்ணும் செய்கையாகத் தென்படுகிறது.

“பணம் பாதாளம் வரை பாயும்” என்று எம்முன்னோர்கள் இதற்காகத்தான் சொல்லி வைத்தார்களோ ?

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com

http://www.facebook.com/sakthi.sakthithasan

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க