Blog

  • அழகு நிலா

     

    வெ.மீரா ஜனனி

    இரவு இருட்டில் வானத்தின் கருமையில்
    சிரிக்கும் சப்தத்தைக் கேட்டேன்,
    மேலே நட்சத்திரத்துடன் மின்னும்
    நிலவு தான் சிரிக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன்,
    “ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டதற்கு
    நான் தேய்ந்து மறைவேன் என்று உணராமல்
    என்னை ரசிப்பதைப் பார்த்து என்றது.
    அப்பொழுது நிலா நிலா ஓடி வா என்று ஒரு சிறுமி பாட
    அது மேலும் சிரித்து மகிழ்ச்சியானது.
    நான் ஓடி வந்து விட்டால் இரவில் வெளிச்சம் ஏது?  என்று வியப்பாய்க் கூறியது.
    மகிழ்ச்சியினால் அது இன்னும் அழகாய் ஜொலிக்க
    அந்த சிறுமி நிலா என்னை நோக்கி வருகிறது என்று ஆனந்தக் கூத்தாடினாள்.
    மற்றவர்களை மகிழ்விப்பதே வாழ்க்கை என்று உணர்த்தும் அழகு நிலா
    வானிலும் என் பார்வையிலும் மேலும் உயர்ந்தது.

    படத்துக்கு நன்றி

    http://www.all4myspace.com/layouts-2.0/moon-myspace-layouts-2.0/0

    Share
  • பணத்தை என்ன செய்வது ….

    செழியன்

     

    அவருக்கு பணமுண்டு .
    அதற்கோர்  பெட்டகமுண்டு .
    அந்த பணம் ….
    வந்ததற்கும்  கணக்கில்லை .
    வருவதற்கும்  கணக்கில்லை .
    வேலைக்கோர்  உணவுண்டு .
    விருந்திற்கோர்  ஆளுண்டு .
    அருந்தத்தான் தடை  அவருக்கு.
    ஆம்!…
    அவர் உதிரத்தில்
    மிகையாம்  கொழுப்பு சத்து …..அது
    பகையாம்  அவர் உயிருக்கு .
    மருத்துவர் தடை  இது .
    மறுக்கமுடியவில்லை ,,….அவரால் .
    மனம்  வெதும்புகிறார் .
    இவர் பல்லவி ….
    பணத்தை  என்ன செய்வது .
    அவருக்கோ …
    அடுக்கு மாடியுண்டு .
    அதிலே .அடுக்கிய
    நோட்டு கத்தையுண்டு .
    அதை  எண்ணி  பார்க்க நேரமில்லை .
    கத்தை வந்த
    வித்தையை  எண்ணவும் மனமில்லை .
    கலருக்கொரு  காருண்டு .
    காருக்கொரு  ஓட்டிண்டு.
    இருந்தென்ன ……
    காலார நடக்க வேண்டுகிறார்  மருத்துவர்.
    கொழுத்த உடம்பை
    குறைப்பதற்கு .
    இவர்  பல்லவி ….
    பணத்தை  என்ன பண்ணுவது .
    அவருக்கோ
    ஆலைகள்  பலவுண்டு .
    அதிலே வேலைக்களுமுண்டு பலருக்கு .
    ஆலையில்   வந்ததை
    சாலையில்  போவோருக்கும்
    சார்பு அற்றவருக்கும்
    ஆதரவாய்  அளித்தார் .
    அவர் ஆனந்தம்  கண்டு
    இவர் மகிழ்ந்தார் .
    ஆனால் …
    அள்ளி  அணைத்து..
    கொஞ்சி மகிழ
    அன்பு மனைவிக்கு
    கொடுக்க முடியவில்லை
    குழந்தை  செல்வத்தை .
    கோடி கோடியாய்…
    பணமிருந்தென்ன…..
    கொஞ்சு மொழி  கேட்க
    குழந்தை  இல்லையே .
    இவர் பல்லவி
    பணத்தை  என்ன   செய்வது ?


    Share
  • தீக்கொழுந்தில் பனித்துளி (17)

     

    முகில் தினகரன்

    அத்தியாயம்  – 17

    தேவி அவ்வாறு கேட்டதும்,

    சுந்தர் தவித்தான்….துடித்தான்…அந்த விநாடியே தன் உயிர் போய், தன்னை ஒரு மாபெரும் இக்கட்டிலிருந்து காப்பாற்றி விடாதா? என எண்ணி எண்ணி மாய்ந்தான்.

    ‘ஏற்கனவே இவ கல்யாணத்துக்காக நான் ஒரு கிட்னிய வித்துட்ட விபரத்தை யாருக்கும் தெரியாம மறைச்சு வெச்சிருக்கேன்… இப்ப திருடனுக்குத் தேள் கொட்டின கதையா இவளே தன் புருஷனுக்காக என்கிட்ட கிட்னி தானம் கேட்கிறாளே!…நான் என்ன பண்ணுவேன்?…எப்படி அந்த உண்மையைச் சொல்வேன்.?”

    முகம் வெளிறிப் போய் நின்ற சுந்தரை ஊடுருவிப் பார்த்த தேவி, ‘என்னண்ணே..நான் கேட்டுட்டே இருக்கேன்…நீ பதிலே பேசாம வேற எங்கியோ யோசனை பண்ணிட்டிருக்கே?”

    ‘இல்லம்மா…அது…வந்து….இப்ப…இப்ப…நான்…மா;ப்பிள்ளைக்கு கிட்னி தானம் குடுக்க முடியாத நிலைல இருக்கேன்மா… அதான்..அதைப் பத்தித்தான்…யோசனை..” தட்டுத் தடுமாறி அவன் சொல்லி முடிக்கையில், அவனே கண் கலங்கி விட்டிருந்தான்.

    ‘விருட்‘டென்று அவனை நிமிர்ந்து பார்த்த, ‘என்னண்ணா…என்ன சொல்றே?… முடியாதுன்னா சொல்றே?” கொஞ்சமும் நம்ப முடியாதவளாய்க் கேட்டாள்.

    அவன் மௌனம் சாதிக்க,

    ‘அண்ணா…ஒரு காலத்துல நான் எது கேட்டாலும் தட்டாமச் செய்வே!…எனக்காக எதையும் விட்டுக் குடுப்பே!….உனக்கு ஞாபகம் இருக்கா?..பள்ளிக் கூடத்துல டீச்சர் வீட்டுப்பாடம் செய்யாமப் போனா அடிப்பாங்கன்னு ராத்திரி பூராவும் உட்கார்ந்து என்னோட வீட்டுப்பாடங்களை கையொடிய எழுதிக் குடுத்திட்டு…காலைல உன்னோட டீச்சர்கிட்டப் போய் உன் வீட்டுப்பாடத்தை எழுதாதற்காக நீ அடி வாங்கிக்குவியே!…அந்த அண்ணனா? இப்ப நான் கேட்டும் மறுப்பது?”

    ‘அய்யோ…தேவி…இப்படியெல்லாம் பேசாதம்மா!”

    ‘அண்ணா…நான் உன்னை விட்டா வேற யாருகிட்டண்ணா போய்க் கேட்பேன்?… எனக்கு உன்னையத் தவிர வேற யாரைண்ணா தெரியும்?”

    அவள் அழுவதையும், அவன் சமாதானப்படுத்த முடியாமல் திண்டாடுவதையும்  அந்த வழியே நடந்து சென்ற இருவர; வித்தியாசமாய்ப் பார்த்தபடியே சென்றனர்.

    ‘ஆண்டவா…நான் என்ன சொல்லி இவளுக்குப் புரிய வைப்பேன்?…என் தங்கமே….உன் புருஷனுக்கு கிட்னி குடுக்க எனக்கு மனசு இருக்கும்மா… ஆனா…கிட்னிதாம்மா இல்லை!” மனசுக்குள் கதறினான்.

    புத்து நிமிடம் அழுது ஓய்ந்தவள், ‘சரிண்ணா பரவாயில்லைண்ணா… எனக்கு வேணா என் புருஷன் உயிர் பெரிசா இருக்கலாம்…உனக்கு உன் உயிர்தானே பெரிசு!… ஹூம்…என் கிட்னி வேற பொருந்தாமப் போச்சு… இல்லேன்னா…நானே கொடுத்திருப்பேன்… இப்படி கண்டவங்க கிட்டக் கெஞ்சிட்டிருக்கற நிலைமையே வந்திருக்காது!”

    ‘தே…வீ…” அவன் கத்திய கத்தலில் அந்த வராண்டாவில் ஆங்காங்கு நின்று கொண்டிருந்தவர;கள் திடுக்கிட்டுக் திரும்பினர;.

    ‘என்ன…என்ன வார;த்தை சொல்லிட்டே தேவி…என்னையா கண்டவங்கன்னு சொல்றே?..நான் உன்னோட அண்ணன்மா!…உனக்காக உடல்…பொருள்…ஆவி…அத்தனையையும் குடுக்கத் தயங்காத அண்ணன்மா!”

    ‘ஆனா..கிட்னி மட்டும் தரமாட்டே!….அப்படித்தானே?”

    சுந்தர; நொந்து போனான். ‘நான் என்ன செய்வேன்?…எப்படி இவகிட்ட என்னோட நிலைமைச் சொல்வேன்?” தவித்தான்.

    சில நிமிட அமைதிக்குப் பின், நீண்ட பெருமூச்சு விட்ட தேவி, ‘எனக்கு ஏண்ணா கல்யாணம் பண்ணி வெச்சே?…நானா வந்து உன்கிட்ட ‘எனக்குக் கல்யாணம் பண்ணி வை”ன்னு கேட்டேன்?…நீயே பாத்து இப்படியொரு நோயாளிப் புருஷனை என் தலைல கட்டி வெச்சிட்டு…இப்ப ‘எனக்கென்ன?…நீயாச்சு…உன் புருஷனாச்சு”ன்னுட்டு திரும்பிக்கிட்டுப் போறியே…இது நியாயமா?”

    ‘தேவி…வேண்டாம்மா…இப்படி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசாதம்மா”

    ‘பேசுவேன்..நான் பேசுவேன்…என்னால பொறுக்க முடியலை…அதான் பேசறேன்…எல்லோரோட சுயரூபமும் இப்பத்தான் தெரியுது!…’தங்கச்சி…தங்கச்சி”ன்னு தேனொழுகப் பேச மட்டும் தெரியும்!…அதே அவளோட தாலிக்கு ஒரு ஆபத்துன்னு வரும் போது உதவ மனசு வராது!…பாசமாவது மண்ணாங்கட்டியாவது…எல்லாம் வேஷம்…மோசம்…”

    தன் கணவன் உயிருக்கு ஆபத்து என்கிற நிலையில் எந்தப் பெண்ணுமே இப்படித்தான் பேசுவாள்!…அதற்கு தேவி ஒன்றும் விதி விலக்கல்ல, என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டதால் சுந்தருக்கு அவள் மேல் போபமே சிறிதும் தோன்றவில்லை…மாறாய் பரிதாபம்தான் ஏற்பட்டது.  இந்தச் சூழ்நிலையில் அவளுடன் மேலும் மேலும் பேசுவது அவள் கோபத்தை இன்னும் அதிகரித்து இதை விடத் தாறுமாறாய்ப் பேச வைத்துவிடும் என்பதை உணர;ந்து அமைதியாய் அந்த இடத்தை விட்டு அகன்றான்.

    ‘போறான் பாரு!…நான் பேசிக்கிட்டேயிருக்கேன் போறான் பாரு!…நான் எக்கேடு கெட்டா இவனுக்கென்ன?…நாளைக்கு நான் புருஷனைத் தொலைச்சிட்டு நின்னா பொறந்த வீட்டுக் கோடி போடவாது வருவியா?…இல்ல அதுவும் இல்லையா?”

    பீறிட்டு வந்த அழுகையை பல்லைக் கடித்துக் கொண்டு அடக்கியவாறே ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினான் சுந்தர;.

    தொடரும்

    Share
  • ரௌத்திரம் பழகு

     
    கோதை வெங்கடேஷ் 

    அதிகாலையில் அடிக்கும் அலாரம் மீது ஒரு கோபம்.
    அடிக்காதிருந்து  விட்ட அலாரம் மீது அதை விட கோபம்.

    பொறுக்க முடியாது வாயை சுட்டு விடும் உணவென்றால் ஒரு கோபம்.
    சூடு இல்லாத உணவென்றால் அதை விட கோபம்.

    வார்த்தைகளை வைப்புநிதியில் சேமித்து,உடைக்க தயங்குபவர்கள் மீதொரு கோபம்.
    ஓயாது ,பெருமழையென கொட்டி தீர்ப்பவர்கள் மீதும் கோபம்.

    பார்த்து,சிரித்து,வழியும் எதிர்ப் பால் மீதொரு கோபம்.
    பார்க்காமல்,சிரிக்காமல்,வழியாமல் சென்று விட்டால் அதிலும் கோபம்.

    கோபமென்று அறிந்தும் சமாதனப்படுத்த முயலாதவர்கள் மீதொரு கோபம்.
    ஒற்றை புன்னகையால் ,என் கோபத்தை குறை ஆயுளில் கொன்று விட்டதில் கூட ஒரு சிறு கோபம்.

    அழையா விருந்தாளியாய்  என்னோடு வந்து ,என்  நெருங்கிய சிநேகம் என  
    சுயஅறிமுகம் செய்து கொள்ளும் இந்த கோபத்தின் மீதே ஒரு கோபம்.

    படத்துக்கு நன்றி

    http://www.mindful.org/in-love-and-relationships/working-with-emotions/the-hidden-treasure-of-anger

    Share
  • பணத்துக்கு என்ன செய்வது “

    செழியன்
     

    உழைக்க  மனமுண்டு .

    உடைக்க மரமுண்டு.
    அவனுக்கு கூலி ..ஐம்பது  ரூபா  நோட்டு  இரண்டு .
    அவன் வாழ்வது ……
    ஐந்து  ஜீவன்களோடு .
    கட்டிலில்  மூன்று
    தொட்டிலில்  ஒன்று .
    எட்டிபார்க்கிறது .
     

     

    கட்டியவள்…தங்க ..                                       
    கட்டி’ யவள் .அவனுக்கு .
    கஞ்சி குடித்தபின்
    எஞ்சி  இருப்பது
    நெஞ்சு விடும்
    நிறைவான மூச்சே !
    நிறைவான  உணவு
    அவன் வாழ்வில்
    வளையாத  கேள்விக்குறி  ஒன்று
    வந்தாலே  உண்டு .
    அவன்  பல்லவியோ……
    பணத்திற்கு   என்ன செய்வது…
    அவன் ..
    வெட்டிய   மரம்   பல.

    வெட்டா  மரமும்  உள
    வறுமை  எனும்  மரத்தை
    வாழ்வெனும்  கோடாலியால்
    தினமும் வெட்டுகிறான்
    தின கூலி  பேசி .
    வயது  ஏறுகிறது ..
    வாங்குபவன்  கூலி  ஏறவில்லை
    வெட்டிய பின் மரம் தளைகிறது
    வெட்டியவன்  வாழ்வு  தளையவில்லை
    தட்டி கேட் க
    இவனால்  முடியவில்லை .
    எட்டியே  நிற்கிறான் .
    கட்டி கொள்ள என்று
    உடுப்பு  என்று  ஒன்று  இவன்
    இடுப்பிற்கு  உண்டு .
    அதுவும் கிழிந்தால் ….
    அதையும்  கோவணமாக்குகிறான்..
    அவன் பெற்ற
    அருஞ் செல்வங்களுக்கு ..
    அவன் பல்லவியோ ….
    பணத்துக்கு  என்ன  செய்வது?

    அவன் ….
    இரவிற்கு  குடிசை  உண்டு
    குடிசைக்கு  கூரைஉண்டு
    கூரையில்  பலகணிகள்  பலவுண்டு
    அவைகளில்  சந்திரனின்  ஒளியுண்டு
    நாட்டிலே …பவர்  கட்   உண்டு .
    இதனால்
    பலருக்கு  சங்கட முண்டு
    இவனுக்கு ஏது…அந்த சங்கடம் .
    சிரிக்க மனமுண்டு ..
    சேமிக்க  வறுமை உண்டு
    செலவுக்கு  உடல் உண்டு
    வரவுக்கு குழந்தை  உண்டு
    வந்ததற்கு  நோயுண்டு
    நோய்க்கு மருந்து  உண்டு .
    மருந்துக்கு  பணமுண்டோ ?
    பல்லவிதானே உண்டு.
    அவன் பல்லவி ….
    பணத்துக்கு என்ன செய்வது ?
     

    Share
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – (2)

     

    இன்னம்பூரான்

    ‘மேலும் சொல்ல இருக்கிறது’ என்ற எதிரொலி என் காதில் விழ ஒரு வருடம் ஆகி விட்டது. ஆம். வயது ஆக ஆக காது மந்தம். சரி. விஷயத்துக்கு வருவோம்.

    முதற்க்கண்ணாக, சென்னை பொது ஆஸ்பத்திரிக்கும், மதராஸ் மருத்துவக்கல்லூரிக்கும் நன்றி சொல்லவேண்டும். அவற்றின் வரலாறு எழுதிய டாக்டர் சுப்பா ரெட்டி காரு என் நண்பர். கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு அது ஒரு தர்ம ஆஸ்பத்திரியாக பணி புரிகிறது. சேவையில் ஏற்ற தாழ்வுகள் உள்ளன. எக்கச்சக்கமான தவறுகள் நடந்து கொண்டு வருகின்றன. அபார சாதனைகளும் நிகழ்ந்துள்ளன. டா. ரங்காச்சாரி, டா. ராஜம், டா. பி.ராமமூர்த்தி போன்றோர் செய்த அருந்தொண்டுகள் நிகரற்றவை. அவர்களை பற்றி, பிறகு ஒரு நாள், வாசகர்கள் விரும்பினால், பேசலாம். ஒரு அரசு மருத்துவமனையுடன் உரிமையுடன் உறவு வைத்துக்கொள்வது எப்படி என்று கூட நாம் கலந்தாலோசிக்கலாம்.

    மருத்துவ சேவை இடத்திற்கு இடம் வித்தியாசப்படுகிறது. இலவச மருத்துவ சேவையின் தரம் அபாயகரமாகக் குறைந்து விட்டதால், இந்தியாவில் மருத்துவம் அளிக்கும் கம்பெனிகளும், காப்புரிமை கழகங்களும் செல்வம் கொழிக்கின்றன. அமெரிக்காவில் யானை வாங்கலாம். டாக்டர்களிடம் போக முடியாது. அத்தனை செலவாகும். சர்வம் கலவரப்படுத்தும் காப்புரிமை அல்லது அரோஹரா. உழக்கு தவறினாலும் வழக்கு. இங்கிலாந்தில் மக்கள் நலம் பேணுவதை அடித்தளமாக வைத்து, அனூரின் பீவான், பார்பாரா கேஸில் போன்ற தீர்க்கதரிசிகள் அமைத்த நேஷனல் ஹெல்த் செர்வீஸ் பிரஜைகள் யாவருக்கும் வியக்கத்தக்க வகையில் இலவச மருத்துவப்பணி செய்து வருகிறது, அரை நூற்றாண்டுக்கு மேல். குற்றம் குறைகள் இல்லாமல் இல்லை. இருந்தாலும், இது ஒரு மாடல் என்பதில் ஐயமில்லை. மக்களுக்குப் புரியும் வகையில், தரமுயர்ந்த, அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பட்ட ஆலோசனைகளை, கூவி, கூவி இலவசமாக வழங்குவது இங்கு நல்லதொரு பணி. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வது, நன்மை பயக்கும் என்று நம்புகிறேன்.

    நான் டாக்டரல்ல. வாழ்நாள் முழுதும் குடும்பத்திலும், சுற்றத்திலும் உடல் நல சிக்கல்களுடன் போராடவேண்டியிருந்தது. கிடைத்தப் படிப்பினைகள் பல. உகந்த முறையில் அவற்றை பகிர்ந்து கொள்ளலாம். நான் எழுதுவதெல்லாம் மருத்துவ வேத வாக்கு அல்ல. விழிப்புணர்ச்சி நாடுமொரு பாதை மட்டுமே என்று எச்சரிக்கை செய்வது என் கடமை. இது ஏதோ என் மனநிறைவுக்காக மட்டும் எழுதப்படும் தொடரும் அல்ல. வாசகர்களுடன் அளவளாவி, வினவிய வினாக்களுக்கு விடை அளித்து, ஆதாரமுள்ள ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ அறிவுரைகள பகிர்ந்து கொண்டு இயங்க விழையும் பரஸ்பர சம்பாஷணை மையம். அந்த பணி திறன்பட நடப்பதற்காக உள்ள திட்டம்:

        எந்த கேள்வி எழுந்தாலும் பண்புடன் அதற்கான விடை, தேடல், பகிர்வு, பின்னூட்டங்கள் மூலம்.

        தனி மடல்களில் பிரத்யேக பதில் விரும்பினால், அதை அளிப்பது. வல்லமை ஆசிரியருக்கு அனுப்பலாம். ரகசியம் காப்பாற்றப்படும்.

        அடுத்த பகுதி என்ன என்றும், அது பற்றிய தொடர்புகளையும், முந்திய கட்டுரையில் அளிப்பது. அவரவர் வினா எழுப்ப அது உதவும்.

        தவிர்க்கமுடியாத இடங்களில், தெளிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆங்கிலத்திலும் எழுதுவது. நமது இலக்கு: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். தனித்தமிழ் அல்ல.

        வல்லமை ஆசிரியரும், வாசகர்களும் அளிக்கும் ஆலோசனைகளை முடிந்தவரை ஏற்று நடப்பது.

    இன்றைய விஷயம்: ‘டாக்டருக்கு எஃப். ஐ. ஆர். கொடுப்பது நாம் தான் என்பதும், அவரைச் சிறு தெய்வமாக அநேகர் கருதுவதும், அந்த நிலையில் நிறுத்தி வைக்கப்படுவதும்.’.

    மருத்துவம் செய்ய டாக்டருக்கு உறுதுணை: நாம் கொடுக்கும் எஃப்.ஐ. ஆர். தற்செயலாக, இப்போது நான் படித்துக்கொண்டிருக்கும் நூல்: Dr.Tom Smith (2007) How to Get the Best from Your Doctor: Oxford: ISIS Publishing Ltd. டாக்டருக்கும் அவரை நாடுவோருக்கும் இருக்கும்/இருக்கவேண்டிய உறவை பற்றிய அருமையான நூல், இது. இதிலிருந்து பல விஷயங்களை கறக்கவேண்டியிருக்கிறது. அவ்வவ்பொழுது பார்க்கலாம். அவரிடமிருந்து ஒரு குறிப்பு:  “ நாங்கள் என்றும் மறவாத மருத்துவக்கல்லூரி பாடம், நோயாளிகளுடன் டாக்டர் எப்படி உறவாடவேண்டும் என்பதை பற்றியது… துப்பறியும் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை எழுதியவர் ஒரு டாக்டர். ஷெர்லாக் ஹோம்ஸுக்கு லாஜிக் ஒன்றே குறி; உள்ளுணர்வு, உணர்ச்சி வசம் ஆகியவற்றிற்கு இடம் கிடையாது. மருத்துவமும் அப்படித்தான். அதற்கான மும்மந்திரங்கள்: PCO (patient complaining of) + HPC (history of the present complaint) + PMH (previous medical history).” இங்கிலாந்தில் பயன்படும் வகையில் அவர் பல விஷயங்களை அருமையாகவும், நுட்பமாகவும் அவர் எழுதியிருக்கிறார். நமக்கு வேண்டியதை, ஒவ்வொரு பதிவிலும், தவணை முறையில், எழுதுவதாக  பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அதே மாதிரி, என் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். மாதிரிக்கு ஒன்று: உசிலம்பட்டியில் சின்ன தாலுக்கா ஆஸ்பத்திரி, அந்த காலத்தில். போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்து, ‘டாக்டர்! முழங்காலில் சிராய்த்துவிட்டது. டிங்க்ச்சர் ஆஃப் அயோடீன் தடவுங்கள்’ என்றார். டாக்டரும் வினயமாக அதை செய்தார். ஒரே எரிச்சல் என்று முனகினார் காவல் தெய்வம். மருத்துவ சிறு தெய்வம், ‘இதற்கு மருந்து வேறே. நீங்கள் கேட்டதால், டிங்க்ச்சர் ஆஃப் அயோடீன் தடவினேன்’ என்றதே பார்க்கலாம்! படிப்பினை நம்பர் 1&2.

    இன்று: எஃப்.ஐ. ஆர். பற்றி டா. டாம் ஸ்மித்.

    ‘வலிக்கிறது’ என்று வருகிறார், ஒரு நோயாளி: எங்கே வலிக்கிறது? வலியின் தீவிரம் என்ன? வந்து, வந்து போகிறதா? இல்லை ‘யதாஸ்தானம் பிரதிஷ்டாபயமி’ (வந்துவிட்டேன்; நகரமாட்டேன் என்ற அடம்) என்று வலிக்கிறதா? மந்தமாக நீடித்த வலியா? தாங்கமுடியாத வலியா? அது பகல்/இரவு பேதம் பார்க்கிறதா? எப்போது வலிக்கிறது ~உடற்பயிற்சி/ உணவு உண்ட போது/அசைந்தால்? நீங்களே என்ன செய்தால் வலி குறைகிறது? கத்தி குத்தினமாதிரி வலிக்கிறதா இல்லை தடியால் அடித்த மாதிரி வலிக்கிறதா? நீங்களே யோசித்துப் பாருங்கள். இத்தனை கேள்விகளுக்கு பிறகு உங்கள் டாக்டர் மருந்து கொடுத்தாரா அல்லது வலி என்றவுடன் க்ரோசின் அல்லது இபுப்ருஃபென் (Crocin or Ibubrufen) கொடுத்து விரட்டி விட்டு, ‘நெக்ஸ்ட்’ என்று அடுத்தவரின் தொண்டையை பார்க்கப்போய்விட்டாரா?

    இந்த வினாத்தொடரை தலைவலி, வயிற்று வலி, இதய வலி என்று கேட்டுப்பார்த்தால், நான் சொல்வது புரியும்: (அதாவது) டாக்டரிடம் என்ன சொல்வது, என்ன கேட்பது என்பது பற்றி ஒத்திகை நடத்திக்கொள்ளுங்கள்.

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – (3) மன அழுத்தத்தை பற்றி. முன்கூட்டியே கேள்விகள் கேட்கலாம். அதற்கு உதவ, சில இணைய தள தொடர்புகள் இங்கே:

    Stress management: International Stress Management Association: www.isma.org.uk

    Stress at work: www.hse.gov.uk/stress

    Saneline: www.sane.org.uk

     

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விரைவாக மாறும் வெளிக்கருவால், பூமியின் காந்தப் புலமும், ஈர்ப்பு விசையும் பாதிக்கப் படுகின்றன.

     

                                                                 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    பூமியின் சுழற்சி திரவ வெளிக்கருவை
    ஆழியாய்க் கடைந்து
    மின் காந்தம் உற்பத்தி செய்யும் !
    சூரியக் கதிர் வீச்சுக்கு கவசச்
    சுவர் எழுப்பும் !
    கடற் தட்டு நர்த்தகம் புரிந்தால்
    திடீர்ச் சுனாமி !
    புவித் தட்டுகள் மோதினால்
    பூகம்பம் !
    குடற் தட்டுகள் நெளிந்தால்
    நில நடுக்கம் !
    தொங்கிடும் பூமியில்
    எங்கு வாழினும் இன்னல்தான் !
    ஏழு பிறப்பிலும் தொல்லைதான் !
    எப்புறம் நோக்கினும்
    இயற்கை யின்  கோர சீற்றம்தான் !
    அங்குமிங்கும் பூமியில்
    காந்த தளம் மாறுது
    கவர்ச்சி விசை மாறுது,
    உட்கருவின் திரவ இரும்பின்
    ஓட்டம் மாறுவதால் !
    பரிதிப் புயல் கதிர்த் துகள்கள் தாக்கி
    துருவத்தில்  ஒளிவண்ணத்
    தோரணக் காட்சி
    நேராகக் கண்கவரும் !

    ++++++++++++

    பூகாந்த ஆற்றல் தணிவதால், சூரியக் கதிர்த் துகள்கள் தீவிரமாய்த் தாக்க  புவி மேற்தள வாயுச் சூழ்வெளி திறக்கிறது.   துணைக்கோள் அனுப்பும் மின்தகவல் பூகாந்தத் தளம் [Geomagnetic field] தென்புற அட்லாண்டிக் அரங்கில் குன்றி வருவதாய்த் தெரிவிக்கிறது.  குறிப்பாக கிழக்குப் பிரேஸில் பகுதியில் உலகின் பிற இடங்களைக் காட்டிலும் ஒரு நீள்வட்டப் பரப்பில் மிகவும் குறைந்து விட்டதாக அறியப் படுகிறது.   இம்மாதிரி அரங்குகளில்தான் பூகாந்தக் கவசம் 60 மைல் உயரத்தில் தீவிரப் பரிதிக் கதிர்கள் தாக்கப் பேரளவு குறைந்துபோய் உள்ளது.   ஆனால் அந்தக் கதிர்கள் பூமியின் உஷ்ணத்தை பாதிப்பதில்லை.  மாறாக பரிதிக் கதிர்த்துகள்கள் ரேடியோ அலை வரிசைச் சாதனங்களைப் பாதிக்கும்.

    மயோரா மாந்தியா [Mioara Mandea, Scientist, German Geo-science Research Centre, Potsdam]

    துணைக்கோள் அனுப்பி வரும் மின்தகவல் ஆராய்ச்சி, எப்படி இடத்துக்கு இடம் விரைவாகப் பூமியின் வெளிக்கருவில் இரும்புத் திரவ ஓட்டம் மாறிக் கொண்டு வருகிறது என்று அறிவிக்கின்றது.  துணைக் கோள்  படவரைவு [Satellite Imagery] முறையைப் பின்பற்றி, ஆராய்ச்சியாளர் தொடர்ந்து புவிகாந்த ஏற்ற இறக்கம், புவியீர்ப்பு சிறிய மாறுதல்களை அளக்க முடிகிறது.

    பீட்டர் ஓல்ஸன் [Geophysics Professor, John Hopkins University, Baltimore, Maryland]

    ‘எனக்கு முன்பு அண்ட வெளியில் மனிதர் தேடிய இடத்தைத் தாண்டி, அதற்கும் அப்பால் என் கண்கள் பிரபஞ்சத்தை ஆழமாய் நோக்கிச் சென்றன.’

    வில்லியம் ஹெர்ச்செல் (1738-1822)

    உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது. கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது. ஆனால் கண்டு பிடிக்க முடியாதபடி மாபெரும் உண்மைக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது.

    ஸர் ஐஸக் நியூட்டன் (1642-1727)

    அகிலத் தூசி சேர்ந்து துகளாகி, துகள்கள் மண்ணாகி, மண் கட்டியாகி உருண்டு சிறு கோளாகி முடிவாக ஓர் பெரும் அண்டகோள் ஆனது ! இந்த “ஈர்ப்புத் திரட்சி முறையில்” (Accretion Process) 6 மைல் (10 கி.மீ.) விட்ட அளவுள்ள ஒரு சிறு பூமி உண்டாகச் சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் ஆகலாம் !

    ஆட்டோ ஸ்மித் (Otto Schmidt) (1944)

    பூமியின் இரும்புத் திரவ வெளிக்கரு ஓட்டம் விரைவாக மாறி வருகிறது.

    2008 ஜூன் 30 இல் செய்த ஓர் ஆராய்ச்சி அறிவிப்பு : பூமியின் இரும்புத் திரவ வெளிக்கரு [Liquid Iron Outer Core]  விரைவாக அடையும் மாறுதல்களால் புவித்தளத்தின் சில அரங்குகளில் காந்த தளத்தைப் பலவீனமாக்கி வருகிறது.   அதாவது திரவ வெளிக்கரு ஓட்டத்தில் ஏற்படும் திடீர் மாறுதல்கள், உடனே பூகாந்தம், புவியீர்ப்பு ஆகிய இரண்டையும் பாதித்து வருகின்றன.    அந்தக் கண்டுபிடிப்பில் மேலும் புவித் தளத்துக்கு கீழே 1900 மைல் [3000 கி.மீ.] ஆழத்தில் திரவ உலோகத்திலும் ஓட்டம் மாறுபட்டு வருகிறது என்றும் அறியப் படுகிறது.   பூமியின் நடுவில் சுழலும் திரவ இரும்பு, நிக்கல் ஓட்டத்தில் மின்னோட்டம் உதித்து, பூகாந்தம் உண்டாக்குகிறது.  ஒன்பது வருடத் துல்லிய துணைக்கோள் மின்தகவல் சேமிப்பு ஆராய்ச்சியில் செய்த இந்த விஞ்ஞான முடிவு  “இயற்கைப் புவியியல் விஞ்ஞான”   [Nature Geo-Science] இதழில் வெளியாகி உள்ளது.    இதன் விளைவு, பூமியின் பற்பல தூர அரங்குகளில் காந்த ஆற்றல்களில் ஏற்றம்-இறக்கம் இருப்பது  தெளிவானது.

    பூகாந்தம் பலவீனப்படும் போது மேற்தள வாயுச் சூழ்வெளி திறந்து பரிதிக் கதிர்வீச்சை உள்நுழைய விடுகிறது.  2003 ஆண்டில் விஞ்ஞானிகள் ஆஸ்திரேலியா பகுதியில் காந்தப் புலம் மிகையான அளவில் மாறி இருப்பதை அறிந்தனர்.  2004  ஆண்டில் தெற்கு ஆஃப்ரிக்கா பகுதியில்  காந்த தளம் மாறுபட்டு இருந்தது.  இந்த மாறுதல்கள் எல்லாம் பிற்காலத்தில் வரப் போகும் பூகாந்த துருவ மாறுதலை [Pole Reversal ஓரளவு அறிவிக்கிறது.   கடந்த ஒரு பில்லியன் ஆண்டுகளில்  பல நூறு தடவைகள் துருவ மாறுதல் பூமியில் நிகழ்ந்துள்ளன என்று தெரிகிறது.   சுமார் 800,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியில் துருவ மாறுபாடு நேரலாம் என்பது ஓர் வெளியீட்டில் அறியப்படுகிறது.

    திரவ வெளிக்கரு ஓட்ட மாறுதல் பூமியின் ஈர்ப்பு விசையைப் பாதிக்கிறது.

    நீர்க்கோள் பூமியின் நிறை, திரவ வெளிக்கரு ஓட்டத்தால் பூமியின் பல்வேறு அரங்குகளில் மாறுதல் அடைந்து, புவியீர்ப்பு ஆற்றலை ஏற்றி இறக்குகிறது.   இந்த ஆராய்ச்சி அறிவிப்பை ஜெர்மன் – பிரெஞ்ச புவியியல் விஞ்ஞானிகள் 2012 அக்டோபர் 23 இல் [Proceedings of the National Academy of Sciences of the United States] வெளிட்டிருக்கிறார்.    புவியீர்ப்பு விசையில் நுண்ணிய மாறுதல்களை புவிக்கருவில் நிகழும் உலோகத் திரவ நகர்ச்சி, நிறை நகர்ச்சியாக மாறிக் காட்டும்.

    பூகோளத்தின் புதிரான மேற்தட்டு, நடுத்தட்டு, உட்கரு

    விஞ்ஞானிகளுக்கு இன்றும் விடுவிக்க முடியாத ஒரு பெரும் புதிராக இருந்து வருவது பூகோளத்தின் கொந்தளிக்கும் விந்தையான உட்புற அமைப்பு ! ஆழமாய்த் துளையிட்டுப் பூமியின் மையத்தைக் கண்ணாலும், கருவியாலும் நோக்க முடியாது ! பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி சேயாகப் பிறந்த காலம் முதல் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. முதல் பில்லியன் ஆண்டுகளில் உருவான அதன் மேற்தட்டு, நடுத்தட்டு, உட்கரு (Crust, Mantle & Core) மூன்றும் மென்மேலும் விருத்தி அடைந் துள்ளதாக ஊகிக்கப்படுகிறது. ஆனால் அவை எப்படி உருவாயின என்பதற்கு உள்ள விஞ்ஞான ஆதாரங்கள் மிகச் சொற்பம். ஒருவேளை ஆரம்பித்திலே ஓரினச் சீர்மைத் திணிவு நிறை (Homogeneous Mass) ஓரளவு அல்லது பூராவும் உருகி ஈர்ப்புச் சக்தி கனமான பிண்டத்தில் பகுதியைத் திரவமாகவும், பகுதியைத் திடவமாகவும் (Partly Liquid & Partly Solid) திரட்டி யிருக்கலாம் ! திடவப் பிண்டம் (Solid Matter) உட்கருவாகவும், அதைப் போர்த்தும் சூடான திரவப் பிண்டம் (Liquid Hot Matter) நடுத்தட்டாகவும் அமைந்து விட்டன என்று கருதலாம் ! நடுத்தட்டுக்கு மேல் மெல்லியதான மேற்தட்டு பரவி 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே நிலையாகப் போனது ! அதற்குப் பிறகும் நீண்ட காலமாக மாறுபாடாகி சிக்கலான முறையில் மேற்தட்டு வடிவாகியுள்ளது.

    4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய குடும்பம் தோன்றியது என்று கணிக்கப் படுகிறது ! சுமார் 7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் பெரும்பான்மையான திணிவுப் பிண்டம் (Matter) சூபர்நோவா (Supernova) மூலமும் விண்மீன்களின் கொடையாலும் சேர்ந்தது என்றும் அறியப்படுகிறது. அதனால் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் முழு வடிவம் உருவாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப் படுகிறது. அதிலிருந்து பூகோளம் பல்வேறு முறைகளில் மாறியுள்ளது. ஆரம்பத்தில் பூமி உருவாகும் போது வெப்பத்தாலும், ஈர்ப்புச் சக்தியாலும் கொந்தளிப்புச் சேமிப்புடன் திரண்ட வடிவம் கரடுமுரடாக உருவானது. பரிதி மண்டலத்தின் மற்ற கோள்கள் உண்டான அதே சம காலத்தில்தான் பூகோளமும் சூரியனை மையமாக வைத்துச் சுற்றிக் கொண்டு உருவானது. அனுமானிக்கப் பட்ட கோள வடிவான சூப்பர்நோவா போன்ற ஒரு பேரண்டம் (Large Body Like Supernova) ஆப்பம் போல் சுற்றிக் கோள்கள் தோன்றின என்னும் கோட்பாடு ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது. முதலில் குளிர்ந்த சேய் பூமி (Proto Baby Earth) விரைவாகச் சூடாகி 100 மில்லியன் ஆண்டுகளில் அதன் உலோக உட்கரு (Metallic Core) உருவாகி யிருக்கலாம். ஆரம்ப காலத்தில் சேய் பூமியை அடுத்துத் தொடர்ந்து ஏராளமான விண்கற்கள், வால்மீன்கள், எரியும் விண்மீன்கள் (Asteroids, Comets & Meteorites) தாக்கின ! பேபி பூமியின் மேல் புறத்தில் கொந்தளிக்கும் திரவம் (Exterior Molten Skin) இருந்திருக்கலாம், அந்த கனல் திரவம் உஷ்ணம் தணிந்து பிறகு மேல்தட்டு (Crest) உண்டாகி இருக்கலாம்.

    அண்டக்கோள் (Planet) என்பது என்ன ?

    ஈர்ப்புத் திரட்சியால் (Accretion Process) சூப்பர்நோவாவின் வாயுப் பிண்டத்தை இழுத்துக் கோள வடிவமாகும் ஓர் அண்டம். ஒரு கோள் தன்னச்சில் சுழன்று முக்கியமாக ஒரு சுயவொளி விண்மீனை வட்ட வீதிலோ அல்லது நீள்வட்ட வீதிலோ சுற்றும். தனது சுற்றுவீதியில் குறுக்கிட்ட விண்கற்கள், வால்மீன்கள், எரி விண்மீன்கள், விண்தூசிகள் ஆகியவற்றைப் பற்றிக் கொள்ளும் திறமுடையது. அண்டக்கோள் ஓர் ஈர்ப்புக் கிணறு (Gravity Well). சுயவொளி விண்மீன் உண்டாக்கும் பிணைப்புச் சக்தியால் உற்பத்தியான மூலகங்களை இழுத்துக் கொள்ளும். பொதுவாக ஒரு காந்த மண்டலமும் கொண்டது.

    பூகோள வரலாற்றின் ஆரம்பத்திலே புற அண்டம் ஒன்று பூமியைத் தாக்கி அதன் துணைக்கோள் நிலவு தோன்றியது என்று கருதப்படுகிறது. இரண்டாம் முறைத் தாக்குதலில் பூமியின் மேற்தட்டு (Crest) அழிந்து போனது. 3.8 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு தற்காலம் வரைப் பிழைத்த பாறைகள் பஸால்ட் மூடிய ஸிலிகா பாறை மேற்தட்டாக (Crest of Silicic Rocks Embedded in Basaltic layer) உலகம் பூராவும் படிந்துள்ளன ! அப்போதுதான் “மேலெழுச்சி பூதட்டு நகர்ச்சி” (Convection-Driven Plate Tectonics) உந்தப்பட்டு பேபிக் கண்டங்கள் (Proto-Continents) நகரத் தொடங்கி இருக்க வேண்டும். ஆரம்ப காலத்துப் பூகோளத்தில் தோன்றிய வாயுச் சூழ்வெளியில் பெரும்பான்மையாக நைடிரஜன், கார்பன் டையாக்ஸைடு அம்மோனியா, மீதேன், சிறிதளவு நீரும் இருந்தன. இவை யாவும் இரசாயனச் சேர்க்கையில் பின்னால் ஆர்கானிக் மூலக்கூறுகள் ஆயின. 3.85 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவற்றிலிருந்துதான் பூர்வீக ஒற்றைச் செல் பாக்டீரியா (Primitive One-Celled Bacteria) உற்பத்தியானது. அதன் பின் உயிரின ஜந்துகள் பெருகி சூரிய ஒளிச்சேர்ப்பு முறையால் பேரளவு ஆக்ஸிஜன் சூழ்வெளியில் பெருக ஆரம்பித்தது.

    பூமியின் உள்ளமைப்புத் தோற்றம் !

    பூமியின் சிக்கலான உள்ளமைப்பைப் பொதுவாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். மற்றும் சில உட்பிரிவுகளோடு ஐந்து பகுதிகளாக வகுக்கலாம். மேற்தட்டு, மேல் நடுத்தட்டு, கீழ் நடுத்தெட்டு, உட்கரு, புறக்கரு. (Crust, Upper Mantle, Lower Mantle, Outer Core & Inner Core) என்று ஐந்து பகுதிகளாகப் பாகம்படும்.

    1. மேற்தட்டின் தடிப்பு மெல்லியது. பூமியில் 20 மைல் (32 கி.மீ) ஆழத்திலிருந்து ஆரம்பித்து இமயமலை உச்சி வரை உயர்ந்து மேடு பள்ளமாய் இடத்துக்கு இடம் மிகவும் மாறுபடுகிறது. காண்டங்களில் 5 மைல் (8 கி.மீ.) ஆழத்தில் பாறையாயும் (Granite), கடலுக்குக் கீழ் பஸால்டாகவும் (Basaltic) உள்ளன. மேற்தட்டு பலதடவை வெப்பத்தால் அழிந்து மீண்டும் உருவானது என்று கருதப் படுகிறது. கடுமையான சூரிய உஷ்ணத்தால் மேற்தட்டு உருகிச் சிதைந்தால் அதன் மீது வாழும் உயிரினங்கள் அனைத்தும் மாண்டு போகலாம். பூமியின் வாயுச் சூழ்வெளி குடை பிடித்து சூரியனின் உக்கிரக் கனல் மேற்தட்டைப் பாதிக்காமல் பாதுகாக்கிறது !

    2. மேற்தட்டுக்குக் கீழாக 375 மைல் (600 கி.மீ) ஆழம் வரை இருப்பதை மேல் நடுத்தட்டு என்ற பெயரில் குறிப்பிட்டு அதை மேலரங்கம், கீழரங்கம் (Upper Zone & Lower Zone) என்று இரண்டாக வெவ்வேறு P-அலை வேகத்தில் பிரிவு செய்யப்படுகிறது.

    3. கீழ் நடுத்தட்டு பூமியிலிருந்து 1800 மைல் (2900 கி.மீ) ஆழத்தில் செல்கிறது. மேல் நடுத்தட்டு, கீழ் நடுத்தட்டு இரண்டிலும் தாது மூலகப் பாறை (Peridotite – Mineral Rock) நிரம்பியுள்ளது.

    4. புறக்கரு பெரும்பான்மையாக திரவ இரும்பு, நிக்கல் உலோகத்தைக் கொண்டது. இந்த திரவ அரங்கம் 3200 மைல் (5120 கி.மீ.) ஆழம் வரைச் செல்வது. இந்த அரங்கத்தில் மேலெழுச்சிக் கொந்தளிப் போட்டம் (Dynamo Action of Convection Currents) உள்ளதால் பூமியின் காந்த மண்டல (Earth’s Magnetic Field) விரிப்புக்கு ஏற்புடையதாகிறது.

    5. உட்கரு 800 மைல் (1300 கி.மீ) விட்டமுள்ள ஓர் உலோகத் திடக் கோளம் (Solid Metal Globe) ! ஈர்ப்புச் சக்தியால் அங்குள்ள அழுத்தம் : பூதளத்தில் உள்ள அழுத்தத்தைப் போல் மூன்றரை மில்லியன் மடங்கு (35000 kg/mm^2) மிகையானது !

    ஓய்வில்லாமல் உப்பிடும் இன்றைய பூகோளம் !

    பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாக மிக மெதுவாகப் பூகோளத்தின் பூத வடிவம் மாறி வருகிறது ! 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆரம்ப காலத்து விட்டம் 4000 மைல் (6600 கி.மீ.). 3.5 பில்லியன் ஆண்டில் அதன் விட்டம் 4800 மைலாக (8000 கி.மீ.) விரிந்தது. 2.8 பில்லியன் ஆண்டில் 5280 மைல் (8800 கி.மீ) விட்டமும், 600 மில்லியன் ஆண்டுகளில் 7200 மைல் (12000 கி,.மீ.) விட்டமும் இருந்து, இப்போது 7850 மைல் (12750 கி.மீ.) விட்டம் கொண்டுள்ளது. பூமியின் பூமத்திய விட்டம் 100 ஆண்டுகளுக்கு 5 அங்குலம் வீதம் நீள்கிறது ! பூதள உள்ளமைப்பில் உள்ள உலோகக் கனல் திரவம் கொந்தளிப்பதால் மேலெழுச்சி ஓட்டங்கள் (Convection Currents) நிகழ்கின்றன ! அந்த ஓட்டமே பூகோளத்தின் உந்துசக்தியாக (Driving Force) மலை மேடுகளை உண்டாக்கியும், கண்ட நகர்ச்சியைத் (Continental Movement) தூண்டியும் வருகிறது !

    பூமியின் உள்ளமைப்பை மெய்யாக நமக்கு அறிவிப்பவை நேரிடைக் கணிப்பு ஆராய்ச்சிகள் இல்லை ! மாறாக பூமிக்குள் எப்போதாவது ஏற்படும் பூகம்ப நடுக்கத்தின் அதிர்ச்சி அலைகளே (Earthquake Shock Waves) பூமியின் உள்ளமைப்பை மறைமுகமாக நமக்கு அறிவிக்கின்றன ! மனிதரின் நேரிடை அறிவு பூமியின் மேற்தட்டை 5 மைல் (8 கி.மீ.) ஆழத் துளையிட்டுக் கண்டறிந்தவையே ! நிலவையும், செவ்வாய்க் கோளையும் தெரிந்துள்ள அளவு மனிதன் பூமிக்குக் கீழ் 20 மைல் (33 கி.மீ) ஆழத்தில் உள்ள அமைப்பை அறியக் கூடிய நேரிடைக் கருவிகளை இதுவரைப் படைக்க வில்லை !

    சூரியனைக் கோண வட்டத்தில் சுற்றும் பூமியும் நிலவும்

    பூமியின் கடல் அலைகளில் உயர்ச்சி நிலை, தாழ்ச்சி நிலை (High Tide & Low Tide) எனப்படும் இரண்டையும் நிலவும், பரிதியும் தனியாகவும், நேர்கோட்டில் அமைந்தும் உண்டாக்கும். அப்போது கடல் வெள்ளம் பூமியின் ஒருபுறம் நீளமாகும் போது மறுபுறம் குறுகும். பூமி சூரியனைச் சற்று முட்டை வடிவான வீதியில் சுற்றுகிறது. அதனால் ஒரு சமயம் பூமி தன் சராசரி தூரத்தை விட 1,500,000 மைல் (2,500,000 கி.மீ) விலகிச் செல்கிறது. ஆயினும் பூமி பாதுகாப்பான “உயிர்ச்சாதகக் கோளத்தில்” (Ecosphere) இயங்க முடிகிறது. இந்தப் பாதுகாப்பு வெப்ப அரங்கம் சுக்கிரன் சுற்றுவீதி முதல் செவ்வாய்ச் சுற்றுவீதி வரை நீடிக்கிறது. ஏதாவது இயற்கை விதி மீறி பூமியின் சுற்றுவீதி மாறிப் போய் சூரியனுக்கு அருகில் சென்றாலோ அல்லது விலகிச் சென்றாலோ பேரளவு வெப்ப மாறுதல் உண்டாகி உயிரினமும், பயிரினமும் பேரளவில் பாதிக்கப்படும். விலகிச் சென்றால் பூமியின் கடல் பூராவும் உறைந்து பனிக்கோள் ஆகிவிடும். நெருங்கிச் சென்றால் சுக்கிரனைப் போல் பூமியும் சுடுபாலையாய் ஆகிவிடும் !

    பூமியின் சாய்ந்த அச்சுக் கோணம் (23.45 டிகிரி)

    பூமி தோன்றிய காலத்தில் புற அண்டம் ஏதோ ஒன்று தாக்கி அதன் சுழல் அச்சு 23.45 டிகிரி சாய்ந்து போனது. அந்த சாய்ந்த அச்சால் பூமிக்குக் காலநிலை (வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம்) மாறுகிறது. இந்த சாய்ந்த அச்சின் கோணம் சுமார் 23.5 டிகிரியில் இம்மியளவு கோணம் கூடியோ அல்லது குன்றியோ பூமி சுற்றினால் காலநிலைக் கோளாறுகள் பேரளவு நேர்ந்து பூமியின் உயிர்னங்களும், பயிரினங்களும் பாதிக்கப்படும். சூடேறும் பூகோளமாய் ஒருபுறத்தில் ஆகும் போது, மறுபுறத்தில் குளிர் நடுங்கும் பனிக் கோளாய் ஆகிவிடும்.

    பூமியின் பூத காந்த மண்டலம் !

    சூரியனின் அசுரத்தனமான கதிர்ப்புயலைப் பாதுகாக்கும் ஒரு கவசமாகப் பூமியின் காந்த மண்டலம் உதவுகிறது. சூரியப் புயலில் அபாயகரமான மரண மின்னியல் கதிர்கள் பூமியை நோக்கி வீசுகின்றன. அவை யாவும் பூமியின் “வான் ஆலன் இரட்டை வளையங் களால்” (Van Allen Belts – Two Bands) தடுக்கப் படுகின்றன.

    பூமியின் பூர்வீக ஏகக் கண்டம் பாங்கியா (Super-Continent Pangaea)

    ஆரம்ப காலத்துப் பூகோளத்தில் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்போதுள்ள தனித்தனிக் கண்டங்கள் (ஆசியா, ஆ·பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென்னமெரிக்கா, அண்டார்க்டிகா) எல்லாம் நெருங்கி ஒட்டிக் கொண்டு இருந்தன ! அந்த ஒற்றைப் பெருங் கண்டம் “பாங்கியா பூதக்கண்டம்” (Super-Continent Pangaea) என்று குறிப்பிடப் படுகிறது. 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவை மெதுவாகப் பிரியத் தொடங்கின ! முதலில் பூதக்கண்டம் வடகோளம் (Laurasia), தென்கோளமாக இரண்டாய்ப் (Gondwana) பிரிந்தது. 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு பாதிகள் மேலும் பிரிந்து தற்போதுள்ள இடத்திற்கு நகர்ந்துள்ளன !

    [தொடரும்]

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? (April 2008)

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world (1998)

    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

    10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)

    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)

    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

    17 The Geographical Atlas of the World, University of London (1993).

    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

    19 The Origin of Earth (www.moorlandschool.co.uk/earth/earthorigin.htm)

    20 Structure & Composition of Earth’s Atmosphere (http//:ess.geology.ufl.edu/)

    21 History of Earth (www.mansfield.ohio-state.edu/) (March 31 2007)

    22.  National Geographic News – Earth’s Core, Magnetic Field Changing Fast, Study Says : By Kimberly Johnson [June 30, 2008]

    23   http://en.wikipedia.org/wiki/Solar_wind/   Effect of Solar Wind on the Earth’s Magnetic Field  [Oct 24, 2012]

    24  Rapid Changes of Earth’s Core :  The Magnetic Field and Gravity from a Satellite Perspective.  [Oct 23, 2012]

    ******************

    jayabarat@tnt21.com [October 26, 2012]

     

     

    Share
  • தமிழார்வம்: ‘திரிகடுகம் போலும் மருந்து’

     

    இன்னம்பூரான்

    1.1. பதினென் கீழ்க்கணக்கு என்ற சங்க கால இலக்கியத்தின் பிரிவில், நீதி நூல்கள் பல காணக்கிடைக்கின்றன. அவற்றில் திருக்குறள் மிகவும் பேசப்பட்ட, பற்பல உரைகள் கண்ட நீதி நூல். மற்ற நீதி நூல்களில், அக்காலத்திலேயே தமிழன் கண்டறிந்து பொருத்தமாக கையாண்டு பயன் பெற்ற மூலிகைகளை முன்னிறுத்தி அறிவுரை அளித்த நீதி நூல்கள் மூன்று. அநேகமாக யாவரும் அறிந்த மூலிகைகள் ஆன சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் வாழ்வாதாரம் தருபவை என்றால் மிகையாகாது. எனவே, நல்லாதனார் (நல்ல ஆதனார்: கி.பி. இரண்டாம் நூற்றாண்டு) இயற்றிய திரிகடுகம் (‘திரிகடுகம் சுக்கு மிளகு திப்பிலி’ என்கிறது, திவாகரம்.) என்ற நூல், இந்த ‘தமிழார்வ’ இழைத்தொகுப்பை ஆரம்பித்து வைப்பது, ஒரு நன்நிமித்தம். இந்த முயற்சியில், எனக்கு உறுதுணை: திருக்கோட்டியூர் இராமானுசாச்சாரியார்  செய்த உரை ( இனி: உரை): ஶ்ரீல.ஶ்ரீ. ஆறுமுக நாவலர் அவர்களின் பொருட்டு திரு.கா.சுப்ரமண்ய பிள்ளை 1934ல் பதித்தது  & வித்துவான், நாவலர் பு.சி. புன்னைவனநாத முதலியாரவர்களின் விருத்தியுரை (இனி:விருத்தியுரை):( சென்னை : திருநெல்வேலி,தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , 2003.) அவை இணைய தளத்தில் கிடைக்கின்றன. நிறைகள் அவர்களது. குறைகள் எனது. அவர்களிருவருக்கும் என் நன்றி உரித்ததாகுக.

    1.2. இந்த நூலை உயிர் மருந்து நூல் எனலாம். எடுத்தவுடனேயே, முதற்பாடலிலேயே ‘திரிகடுகம் போலும் மருந்து’ என்று நல்ல ஆதனார் பெயர்க்காரணத்தை உணர்த்துகிறார். திரிகடுகம் காப்புச் செய்யுள் உட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது. இம்மைக்கும் (கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் வகையறா) மறுமைக்கும் (அவாவறுத்தல், மெய்யுணர்தல் வகையறா) ஏற்புடைய நல்வழிகளை உணர்த்தி அறம் சாற்றும் நூல், இது. ‘இல்லறமல்லது நல்லறமன்று’ (கொன்றை வேந்தன் 3: ஒளவையார்)என்பதை 35 இடங்களில் படித்துப் படித்து சொல்லும் இந்த நூலின் ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன. அவற்றின் கோர்வை ஒரு தனிச் சிறப்பு. அவற்றின் தொடர்பாகவே, ஈற்றடியில் ஒரு பொதுக்கருத்து சொல்லப்படுவது, மேலும் ஒரு சிறப்பு.

    1.3. திரிகடுகம் அறம் சாற்றும் நூல். ‘அறம் செய்ய விரும்பு’ (ஆத்திச்சூடி 1: ஒளவையார்) என்று வழி காட்டும் நூல். நல்லறம் என்பது அறங்கள் பலவற்றின் ஒரு தொகுப்பு. இந்நூலின் அமைப்பு ஒரு குறித்த வரையறையுடன் அமைந்துள்ளது. அங்குமிங்குமாக, அவற்றில் சிலவற்றை முன் நிறுத்துவதை விட, நல்லாதனரின் பட்டியலை அனுசரித்து, அவருடைய வரிசைப்படி பயணித்து அவற்றை புரிந்து கொள்வது நலன் பயக்கும் என்பது என் கருத்து. அவ்வாறே செயல்படுகிறேன்.

    1.4. இறை வணக்கத்தில் துவக்குவது சங்ககாலத்திலிருந்து தமிழ் மரபு. அந்த காப்பு செய்யுட்களின் தனித்துவம் போற்றத்தக்கது. கடவுள் வணக்கம் இருவகைப்படும் ~ ஏற்புடைக் கடவுள் வணக்கம், வழிபடு கடவுள் வணக்கம். வழிபடுகடவுள் வணக்கம், இங்கே. காத்தற் கடவுளும் அந்த திருமாலே. இக் கடவுள் வாழ்த்துப் படர்க்கையிற் கூறப்பட்டுள்ளது; பிள்ளையாரும் சிறப்பாக வேண்டப்படுபவர் என்றும் பாடமுண்டு.

    1.5. நல்லாதனார் ‘திரிகடுகத்தின்’ காப்பு செய்யுளில், தர்ம சாஸ்திரத்தின் சிருஷ்டிகர்த்தாவான கிருஷ்ண பகவானின் புகழ் பாடுகிறார். திருமாலின் லீலாவிநோதங்களில், வாமனாவதாரமும், குருந்தை மரத்தை முறித்ததும், மாயச்சகடம் உதைத்ததும் பாலகர்களுக்குக் கூட தெரியும். அவற்றை கூறி, அந்த ‘பூவைப்பூ வண்ணன் அடி’ போற்றி வணங்குகிறார், நல்லாதனார். இதனால் அவர் வைணவமரபைச் சார்ந்தவர் என்போர் உண்டு.  எடுத்துக் கொண்ட இந்த நூல் இனிது வர வேண்டி இச் செய்யுளால் கடவுள் வணக்கம் செய்யப்பட்டது. இனி வரும் பாடல்களில் மூன்று மூன்று கருத்துக்களும், ஈற்றடியில் ஒரு பொது கருத்தும் கோர்க்கப்படுவது போல, இங்கும் மூன்று லீலாவிநோதங்களும், ஈற்றடியில் வணங்குதலும் பயின்று வரும் நுட்பத்தைசுவைப்போமாக.

    திரிகடுகம்
    காப்பு

    கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்

    தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் –

    நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம்

    இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி.

    1.6. உரைகளிலும் நடையழகு காணலாம். சான்றாக, இந்த மூன்று செயல்களையும் ‘அளந்த பொருள் (மூவுலகம்),சாய்த்த பொருள் (மரம்), உதைத்த பொருள் (சகடம்) என்று கூறுவர். இறைவனின் குணாதிசயங்களை ஒரு வரையறைக்குள் திணித்து வைக்கமுடியாது என்றாலும், ஒரு அனுபவ சுவை தென்படுகிறது, விருத்தியுரையில் கூறிய மாதிரி: திருமால் ஞாலத்தை அளந்தது பேரருளால். மரத்தை வீழ்த்தியது ஒரு பேராற்றல். சகடத்தை உதைத்து பேரறிவினால்(சமயோசிதம்). இறைவனின் குணாதிசயங்களை இவ்வாறு வருணிப்பது ‘பரிபாடல்’ என்ற சங்ககாலத்து பக்தி பாடலை நினைவுறுத்துகிறது.

    1.7. தற்காலத்தில் இலக்கியம் படிப்பவர்கள் குறைவு என்ற கருத்து நிலவுகிறது. இலக்கணம் என்றால் பிடி ஓட்டம்! ஆனால் நண்பர்களே, தமிழிலக்கணத்தின் சுவை அருமையானது. இது ஒரு சிறிய குறிப்பு கடுதாசி என்பதால், ஆங்காங்கே விருத்தியுரை அளித்துள்ள இலக்கண குறிப்புகளில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன். # சான்றாக: ‘அளந்ததூஉம்/ சாய்த்ததூஉம்/உதைத்ததூஉம்’ என்று வசன நடையின் புழக்கத்தில் இல்லாத ‘உம்’மில் முடிப்பது ஒரு ஒலி உத்தி. பாடலில் இன்னிசை கூடி வருவதற்காக, தமிழிலக்கணம் அனுமதிக்கும் இந்த அலங்காரத்துக்கு, இன்னிசையளபெடை என்று பெயர். வினையாலணையும்பெயரென்பர். செய்யுளில் செவிக்கு இனிய ஓசை தரும்பொருட்டு குற்றெழுத்து நெடிலாகி அளபெடுக்குஞ் சொல்லில் “உ” எனும் உயிரெழுத்து இருக்கும். அச்சொல் மூவசைச் சீராக இருக்கும்.‘அளந்ததூஉம்’ என்ற தொடரில் “து” எனும் குறில் “தூ” என நெடிலாகி அளபெடுத்துள்ளது.  #காமரு  என்னும் உரிச்சொல் உகரச்சாரியை பெற்று ‘காமரு’ ஆயிற்று.

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    28.10.2012

    சித்திரத்திக்கு நன்றி: http://img1.dinamalar.com/admin/Bookimages/247713.jpg

     

    Share
  • சொர்க்க வாசல்

    தமிழ்த்தேனீ

    இன்னிக்கு வைகுண்ட ஏகாதசி, நாங்க எல்லாரும் கோயிலுக்குப் போயி சொர்க்கவாசல் திறந்தவுடனே சுவாமியை நமஸ்காரம் செஞ்சிட்டு வரோம். வீட்டிலேயே இருங்க, கதவைத் தாப்பாள் போட்டுக்குங்க, போயிட்டு வந்துடறோம் என்றபடி கிளம்பினர் வீட்டிலுள்ள அனைவரும்.

    பெரியவர் ராமசாமிக்கு 88 வயசு காது கேக்கலை, கண்ணும் சரியாத் தெரியலை அவஸ்தைப் படறாரு. காலாகாலத்திலே மனுஷன் சீக்கிரமா போய்ச் சேர்ந்தா நல்லா இருக்கும் பாவம் என்று அங்கலாய்த்தாள் பக்கத்து வீட்டு பர்வதம்.

    அவருக்கு சொர்க்க வாசலை அடையும் நேரம் வந்து விட்டது. இவர்களுக்கு தெரியவில்லை என்று எண்ணமிட்டார் பெரியவர் ராமசாமி. அனுதாபச் சொற்கள் காதிலே விழவில்லை. அவர் மனம் பரபரத்துக் கொண்டிருந்தது.

    ஆயிற்று பொழுது விடிந்து ஆறு மணி ஆகிவிட்டது. திறந்திருப்பான் சொர்க்க வாசலை. கிளம்ப வேண்டியதுதான். நேத்து இராத்திரிலேருந்து தூக்கமே வரலை. புரண்டு புரண்டு படுத்து எப்போ விடியும்ன்னு காத்திட்டே இருந்து ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாகக் கழிச்சு தூங்காமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார் .

    இன்னும் நுண்ணிய உணர்வு ஒட்டிக் கொண்டிருக்கிறதே, அதை வைத்து ஒரு துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு சந்தடி இல்லாத நேரமாய்ப் பார்த்து கிளம்பினார். தட்டுத் தடுமாறி மாடிப்படியில் இறங்கி வாயிலைக் கடந்து தெருவில் இறங்கி ஓரமாகவே நடந்து போய் அவருடைய சொர்க்கவாசலில் நின்றார்.

    அவருடைய சொர்க்க வாசல் திறந்திருப்பானா? சரியாக நேற்று ராத்திரி படுக்கப் போகும்போது கடைசீ துளியும் தீர்ந்து விட்டது.இன்னிக்கு விட்டா ஒரு நாள் வீணாயிடுமே, இதயம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது .நல்ல வேளை! ஆஹா திறந்திருக்கிறது. எதிரே போய் நின்று கையை நீட்டினார்.

    ஐயா வாங்க வாங்க காணுமேன்னு பாத்துகிட்டே இருக்கேன் இந்தாங்க கட்டி வெச்சிருக்கேன் என்றபடி கடைக்காரர் ராயர் நீட்டிய பொட்டலத்தை வாங்கி பிரித்து ஒரு சிட்டிகை மூக்குப் பொடியை கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே எடுத்து அப்படியே உல்லாசமாய் காற்றில் இரண்டு முறை உதறி ஆனந்தமாக மூக்கில் வைத்து உறிஞ்சிவிட்டு கையை துண்டால் துடைத்தார்.

    அந்தப் பொடி கொடுத்த கிறக்கத்திலும் தள்ளாடாமல் மீண்டும் நிதானமாக ஒரு குத்து மதிப்பாக நடந்து வீட்டிற்கு வந்து மாடிப்படி ஏறி அவர் படுக்கையில் உட்கார்ந்து மிக கவனத்துடன் அந்த மூக்குப் பொடி பொட்டலத்தை பிரித்து, எப்போதும் பத்திரமாக வைத்திருக்கும் ஹார்மோனியப் பொட்டி போல் திறந்து மூடுகின்ற மாட்டுக் கொம்பினால் ஆன, அந்தச் சின்னப் பெட்டியில், சிந்தாமல் சிதறாமல் போட்டு அதைப் பத்திரமாக மூடி தலைகாணிக்கு அடியில் வைத்துவிட்டு நிமிர்ந்தார்.

    அவரையே குற்றப் பார்வையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் மருமகள் மீனாக்ஷி. அந்தப் பார்வைக்கு பொருள் அவருக்கு தெரியும். “எத்தனை தடவை சொல்றது, ஏதாவது வேணும்னா எங்க கிட்ட சொல்லுங்களேன் நீங்க எங்கேயாவது போயி விழுந்து வெச்சா யாரு அவஸ்தைப் படறது, சொன்னா ஏன் கேக்க மாட்டேங்கறீங்க”, என்றாள் அவள்.

    அதற்கு பதில் சொல்லாமல் ஒரு அசட்டுச் சிரிப்புடன் தலைகாணியில் தலை வைத்து நிம்மதியாகத் தூங்கத் தொடங்கினார் ராமசாமி. குறட்டை எட்டு ஊருக்கு கேட்கத் தொடங்கியது.

    Share
  • சட்டம் ஆலோசனைகள் (17)

    மோகன் குமார்

    கேள்வி : சுதாகர் சென்னை 

    வணக்கம். என் பெயர் சுதாகர். என் மாமனார் பெயரில் அவருடைய அப்பா எழுதி வைத்த வீடு உள்ளது. தற்போது அவருடைய தம்பி அந்த வீட்டில் குடி இருந்து கொண்டு வீடு எனக்கு வேண்டும் என்று சண்டைஇடுகிறான். அதனால் அந்த சொத்தை என் அப்பா பெயரில் எழுதி வைத்து விற்று கொடுக்கும் படி கூறினார். தற்போது எல்லா ஆவணங்களும் என் அப்பா பெயரில் உள்ளது. இருப்பினும் என் மாமனாரின் தம்பி அந்த வீட்டை விட்டு போக மறுக்கிறான். தயவு செய்து உரிய ஆலோசனை கூறவும்.

    பதில் : 

    ஒரு தந்தை சுய சம்பாத்தியத்தில் சம்பாதித்த சொத்தை ஒரு மகனுக்கு மட்டும் எழுதி வைத்துள்ளார். இன்னொரு மகன் அங்கு இருந்து கொண்டு காலி செய்ய மாட்டேன் என்று சொத்தில் உரிமை கோருகிறார். 

    தற்போது சொத்து உங்கள் தந்தை பெயரில் உள்ளது என்கிறீர்கள். உங்கள் தந்தை குறிப்பிட்ட நபரை காலி செய்ய சொல்லி நோட்டிஸ் அனுப்ப வேண்டும். அவர் ஒரு Permissive occupier தான். அவரை தற்காலிகமாக தான் அங்கு தங்க அனுமதி தரப்பட்டது என்றும், உடனடியே தங்கள் உபயோகத்துக்கு தேவை என்பதால் காலி செய்ய வேண்டும் என்றும் நோட்டிஸ் அனுப்புதல் நலம்.  

    அவர் காலி செய்யாத பட்சத்தில்  Ejection -க்கு   வழக்கு தொடுக்க வேண்டியிருக்கும். முதலில் செய்ய வேண்டியது அவருக்கு நோட்டிஸ் அனுப்பவது தான். 

    நீங்கள் உடனடியாக ஒரு வழக்கறிஞரை அணுகி இது சம்பந்தமாக பேசி நடவடிக்கை எடுக்கவும். 

    **********

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …………………….. (29)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    வணக்கங்களுடன் மனதின் மற்றொரு பக்கம் திறக்கிறது. மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது முதுமை. ஏழை, பணக்காரன், ஜாதி,மதம் என வேறுபாடு இன்றி அனைத்து மக்களையும் அணுகுவது முதுமை.

    இந்த முதுமையை நாம் எவ்வாறு அணுகுகிறோம்?

    பத்துகளின் முடிவில் இங்கிலாந்து நாட்டினுள் கால்வைத்த நான் இன்று ஐம்பதுகளின் நடுவில் அலசிக் கொண்டிருக்கிறேன்.

    வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லக்கூடிய வகையில் நான் ஒரு அறிஞனோ அன்றி ஒரு தத்துவஞானியோ அல்ல. வாழ்க்கையின் சகல திக்குகளுக்குள்ளும் நுழைந்து படக்கூடாத அடியெல்லாம் பட்டு தவற விடக்கூடாத சந்தர்ப்பங்களையெல்லாம் தவற விட்டு பட்டுத் தெளிந்த சாதாரண அனுபவவாதியாகவே இருக்கிறேன்.

    நான் ஒரு வாலிபனாக உடலில் இளரத்தம் துள்ளிப் பாய்ந்து கொண்டிருந்த போது வாழ்வில் அனுபவ முதிர்ச்சியடைந்தவர்களை நோக்கிய எனது பார்வை எப்படியிருந்தது எனும் அடிப்படையில் வாழ்வின் முதுமையை நோக்குகிறேன்.

    வயதில் மூத்த பலர் எனது தந்தை உள்ளடங்க அன்றைய காலகட்டத்தில் எனக்கு அறிவுரை என்று வழங்கிய அனுபவ மொழிகளை அதற்குரிய கெளரவத்தோடு ஏற்றுக் கொண்டேனா? எனும் கேள்விக்கு இல்லை என்பதுவே எனது உள்ளத்தில் இருந்து பிறக்கும் உண்மையான பதிலாகும்.

    கண்மூடித்தனமாக அவசரத்தில் எடுக்கும் முடிவுகளின் பலாபலன்களை அனுபவரீதியாக அவர்கள் விளக்க முற்பட்டபோது அதை அவர்கள் எனது முன்னேற்றப்பாதையில் போடும் தடைக்கற்களாகக் கருதிய காலங்களும் உண்டு 

    கவியரசர் கண்ணதாசன் ஓரிடத்தில்,

    “எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் நான் வாழ்ந்திருக்கிறேன். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்லும் யோக்கிதை எனக்குண்டு ” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    அவரது அந்த வரிகளில் புதைந்திருக்கும் உண்மை, அனுபவத்தின் அனுகூலத்தை, அனுபவத்தின் அதிசயத்தை ஆழப் பறைசாற்றி நிற்கிறது.

    ஆனால் நான் வாழும் இந்த இங்கிலாந்து நாட்டிலோ அன்றி நாம் தளிர்த்த பின்புல நாடுகளிலோ முதுமையின் மொழிகளுக்கு சரியான கெளரவம் அளிக்கப்படுகிறதா ? மிகவும் ஆழமாக இளையதலைமுறையினரால் தீர்க்கமாக விவாதிக்கப்பட வேண்டிய விடயம்.

    உடலில் வலுவிருக்கும் காலமெல்லாம் உழைத்து விட்டு, தமது அந்திமக் காலத்தில் ஓய்வூதியத்தை எதிர்பார்த்து ஓய்வு வாழ்க்கையை ஒருவர் தேர்ந்தெடுத்து விட்டால் அவரது உபயோகம் முடிந்து விட்டதா? சமுதாயத்தின் ஓரத்தில் மெளன‌மாக உட்கார்த்தி வைக்கப்பட வேண்டியவராகிறாரா ?

    இதுவே இன்றைய சமூகத்தின் முன்னால் நிற்கும் பூதாகரமான கேள்வி.

    அவசரமாக உருளும் இந்த உலகில் காலமாற்றம் என்பது தவிர்க்கப்படமுடியாத ஒன்று. காலத்தின் முன்னேற்றமும் அக்காலமாற்றத்தின் விளைவுகளால் ஏற்படும் சமுதாயத் தேவைகளின் மாற்றமும் பலபுதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாகின்றன.

    இவ்விஞ்ஞான முன்னேற்றத்தை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள், இவற்றிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று வயதில் முதிர்ந்தவர்களை ஒதுக்கி வைக்கும் பழக்கத்தை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

    சுமார் 13 வருடங்களின் முன்னால் காலமான என் தந்தையின் மனதில் அனைத்தையும் பற்றி ஓரளவு அறிந்து வைத்த தனக்கு கணினியைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் எழுந்துள்ளது என்று என்னிடம் கூறியபோது நான் அதை எத்தனை முக்கியமாக எடுத்தேன் என்பது எனக்கு இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    எனது தந்தை வாழந்த வாழ்க்கைமுறைகளை, அதற்காக அவர் கடைப்பிடித்த நெறிமுறைகள், அவர் வாழ்க்கையில் நடந்த எளிமையான பாதை, எதிர்கொண்ட தடங்களை எதுவித வலியுமின்றி அவர் கையாண்ட முறைகள் இவையனைத்தும் அவரின் மறைவுக்குப் பின்னால் எனக்கு ஆழ்ந்த அதிசயமாகப் படுகின்றது.

    ஏனென்கிறீர்களா?

    இன்று நானும் ஒரு தந்தையாக வாழ்வின் பல நெளிவு சுளிவுகளை அறிந்தவனாக பல அனுபவ அடிகளைப் பெற்றுக் கொண்ட ஒரு முதுமை வாசலுக்குள் காலடி வைத்த காரணமே !

    நான் விஞ்ஞானத்தில் எவ்வளவோ முன்னேறியிருக்கலாம், காலம் எத்தனையோ மாற்ற‌ங்களுக்கு உள்ளாகியிருக்கலாம். ஆனால் அவையெல்லாம் எமக்கு ஒரு புதிய தாய், தந்தையைரை உருவாக்கித் தந்து விட முடியுமா?

    முதுமை அளிக்கும் ஞானத்தை விஞ்ஞானம் ஆக்கிக் கொடுத்து விட முடியுமா? இந்த உண்மையை இன்றைய இளைய சமுதாயம் எத்தகைய அளவில் உள்வாங்கியிருக்கிறது என்பது கேள்விக்குறியே !

    பெரும்பான்மையாக பின்புலத்தில் வாழும் பெற்றோர்கள் தமது இளைப்பாறும் காலத்திற்காக என்று எதையும் சேர்த்து வைக்காமல் தமது எதிர்காலத்தை தமது குழந்தைகளின் முன்னேற்றத்தில் அடகு வைத்து விடுகிறார்கள். ஆனால் அவர்களின் இந்தத் தியாகத் தன்மையை, அவர்களது  குழந்தைகள், வளர்ந்து பெரியவர்களாதும் சரியான வகையில் புரிந்து கொள்கிறார்களா என்பது கேள்விக்குறியே !

    எங்கே?, எப்போது?, எப்படி? எனும் கேள்விகள் மனதில் எப்போதும் ஓங்கி ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

    மிகவேகமாக எமது பின்புலங்களில் வளர்ந்து வரும் முதியோர் இல்லங்கள் உணர்த்துவது என்ன?

    எம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களிடமிருந்து அவர்களின் ஓய்வுக்காலங்களில் நாம் எதிர்பார்ப்பது மிகையானவையே !

    பல சந்தர்ப்பங்களில் கூட்டுக் குடித்தனம் நடத்தும் இடங்களில் தமது குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்புக்களையும், சமையல் பொறுப்புகளையும் தம்முடன் வசிக்கும் ஓவ்வு பெற்ற பெற்றோர் வசம் ஒப்படைக்கும் நிலையைக் காண்கிறோம்.

    அப்படி ஒத்துழைப்புக் கிடைக்காத இடத்தில் அவர்கள் முதியோர் இல்லங்களை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.

    வாழ்க்கையின் அதிமுக்கிய திருப்பங்களில் முதியவர்களின் அறிவுரைகள் பல இடர்களைத் தவிர்க்கக்கூடிய சந்தர்ப்பங்களைக் கொடுக்கிறது. தமது உடலில் வலுவுள்ளவரை உழைத்து களைத்துப் போனவர்கள் வாழ்க்கையின் வளமான பாகத்தைச் சுவைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது இளைய சமுதாயத்தின் கடமையாகிறது.

    எனது இன்றைய அனுபவத்தில் புலம்பெயர்ந்த எமது சமுதாயங்களில் கூட பெற்றோரைத் தமது குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பை ஒப்படிக்கும் ஒரு சந்தர்ப்பமாகவே இளம் தலைமுறையினர் கருதுவது போலத் தோன்றுகிறது.

    அதேசமயம் தமது பேரக்குழந்தைகளைப் பராமரிப்பதையும், தமது பிள்ளைகளின் குடும்பத்தில் அவர்களுக்குத் துணையாக ஒத்தாசைகளைப் புரிவதையும் மிகவும் விரும்பித் தாமாகவே ஏற்றுக் கொண்டு வாழும் முதியோர்கள் பலருண்டு.

    அதேபோல தமது பெற்றோர் தமது ஓய்வுக் காலங்களில் எவ்வித சுமைகளுமின்றி வாழ்வைச் சுவைக்க வேண்டும் என்று எண்ணி அவர்களுக்கு அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்கும் பிள்ளைகள் இல்லாமலில்லை.

    அது மட்டுமல்ல !

    பல சந்தர்ப்பங்களில் தாம் முதுமையெய்தி விட்டோம் இனி தம்மால் இச்சமுதாயத்திற்கு எதையும் கொடுக்க முடியாது தாமாகவே ஒதுங்கிக் கொள்ளும் முதியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    முதுமை என்பது நோயல்ல அது இயற்கையின் நிகழ்வு அதை நாமனைவரும் மறந்து விடக்கூடாது.

    கவியரசரின் வரிகள்

    “கடந்தகாலமோ திரும்புவதில்லை
    நிகழ்காலமோ விரும்புவதில்லை
    எதிர்காலமோ அரும்புவதில்லை
    இதுதானே அறுபதின் நிலை “

    என்பவை இத்தகைய சூழலைப் புரிந்து கொள்ளத்தான் வரையப்பட்டதோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • மாற்று(ம்) திறனாளி

    முகில் தினகரன்

    மாலை ஏழு மணிவாக்கில் வீடு திரும்பிய குணசேகர் உள்ளே வரும் போதே ‘செல்விக்குட்டி….அப்பா உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் கண்டுபிடி’ என்று கூவிக்கொண்டே வந்தார். இரண்டு கைகளும் பின்புறம் எதையோ மறைத்துக் கொண்டிருந்தன. ஆனால் சோக முகத்துடன் சோபாவில் அமர்ந்திருந்த எட்டு வயது செல்வியின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை.

    ‘அடடே…என் ராசாத்திக்கு ஏதோ கோவம் போலிருக்கே..’ என்றபடி அவள் அருகில் அமர்ந்து அவள் தாடையைத் தொட்டு;த் தூக்கி ‘ஏண்டா செல்லம்…அம்மா திட்டிட்டாளா?’

    அது இட, வலமாய்த் தலையாட்டியது.

    ‘இல்லையா?…அப்ப ஸ்கூல்ல…டீச்சர் திட்டினாளா?’

    ‘ம்ஹூம்’ என்றவாறு உள் அறையில் தரையில் அமர்ந்து எதையோ வரைந்து கொண்டிருந்த தங்கை நிர்;மலாவைக் காட்டினாள்.

    செல்வியும் நிர்மலாவும் இரட்டைகள். ஓரே அச்சில் வார்த்தாற் போல் ஒரே நிறத்தில்….ஒரே பருமனில்….ஒரே உயரத்தில் இருக்கும் அவர்களிடத்தில் ஒரே வித்தியாசம் சின்னவள் நிர்மலாவின் வலது கால் கணுக்கால் பகுதி சற்று வளைந்திருப்பதும்….அதன் காரணமாய் அவள் நடக்கும் போது சற்று விந்தி விந்தி நடப்பதும்தான். பாவம் சிக்கலான ஆயுதப் பிரசவ போராட்டத்தின் விளைவு அது.

    சின்னவளை அவள் சுட்டிக் காட்டியதன் மூலம் நிலைமையை ஓரளவு யூகித்துக் கொண்ட குணசேகர் ‘ஓ….தங்கச்சிப் பாப்பா உன் கூட சண்டை போட்டுட்டாளா?’

    மறுபடியும் செல்வி இட, வலமாய்த் தலையாட்ட,

    ‘அய்யய்யோ…ஒண்ணும் புரிய மாட்டேங்குதே!’ என்று தலையைப் பிய்த்துக் கொண்டவர் சமையலறைப் பக்கம் திரும்பி ‘கலா…ஏய் கலா…’ மனைவியை அழைத்தார்.

    ‘என்னங்க…?’

    கையைத் துடைத்தபடி வந்தவளிடம் கேட்டார் ‘ஏண்டா செல்விக்குட்டி சோகமா இருக்கா?’

    ‘அதையேன் என்கிட்டக் கேட்கறீங்க…அவகிட்டவே கேளுங்க…’

    ‘அதுதான் வாயைத் திறந்து பேசவே மாட்டேங்குதே..’

    ‘என்ன?…பேச மாட்டேங்குதா?….அது செரி..இத்தனை நேரம் என்கிட்ட சரிக்கு சரி பேசி சண்டை போட்டாளில்ல…அதுல வாய் வலி கண்டிருக்கும்..’

    ‘ஓ…அப்ப நீதான் சண்டை போட்டிருக்க…’

    ‘அய்யய்யோ…சாமி…என்னை ஆளை விடுங்க..எனக்கு வேலையிருக்கு’ சொல்லிவிட்டு சமையலறையை நோக்கி அவள் ஓட்டமாய் ஓடி விட, உள் அறையிலிருந்து விந்தி விந்தி நடந்து வந்த சின்னவள் நிர்மலா குணசேகரின் தோளைத் தொட்டு ‘டாடி..நான் சொல்றேன்…’ என்றாள்.

    ‘சொல்லுடா…என் தங்கம்’

    ‘வந்து…வந்து….ஸ்கூல்ல பரத நாட்டியம் சொல்லித் தர்றாங்க…மாசம் ஐநூறு ரூபா ஃபீஸ்…’

    ‘அவ்வளவுதானே?…நான் சொல்றேன் நீ சேர்ந்துக்கடா செல்லம்…’ என்றான் குணசேகர் செல்வியைப் பார்த்து,

    அதுவரை அமைதி காத்து அமர்ந்திருந்த செல்வி திடீரென்று ஆவேசமாகி ‘நீ என்னைச் சேரச் சொல்லுறே…ஆனா இந்த அம்மா….என்னைய சேர வேண்டாம்…தங்கச்சி மட்டும் சேரட்டும்னு சொல்லுறா…’

    ‘சரி…சரி…ரெண்டு பேருமே சேருங்க…’

    ‘அது செரி…ரெண்டு பேருக்கு மாசம் ஆயிரம் ரூபாயை டான்ஸ் க்ளாஸூக்குக் குடுத்துட்டு…பற்றாக்குறைக்கு எங்க போறது?..ம்ஹூம்…அதெல்லாம் சரிப்பட்டு வராது…ஏதோ ஒருத்திக்குன்னா…கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணலாம்…’

    ‘அப்படின்னா பெரியவளைச் சேர்த்து விடலாமே…’

    ‘த பாருங்க…இந்த விஷயத்துல நான் எடுக்கறதுதான் முடிவு….சின்னவதான் சேர்றா…அவ்வளவுதான்…மேற்கொண்டு இதைப் பத்தி பேச வேண்டாம.;’ கறாராய்ச் சொல்லி விட்டு கணவன் அழைப்பதையும் செல்வி வாய் விட்டு அழுவதையம் சிறிதும் சட்டை செய்யாது சமையலறை நோக்கி நடந்தாள் கலா.

    ‘அன்னிக்கும் இப்படித்தான் டிராயிங் க்ளாஸூக்கு என்னை வேண்டாம்னுட்டு தங்கச்சிய சேர்த்து விட்டுச்சு….இப்ப டான்ஸ் க்ளாஸூக்கும் அதே மாதிரி செய்யுது இந்த அம்மா..’ அழுது ஆர்ப்பாட்டம் செய்த மூத்தவள் செல்வியை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது குணசேகருக்கு.

    ‘ச்சே…ஏன்தான் இந்தக் கலா இப்படிப் பிடிவாதம் பிடிக்கறாளோ?’

    இரவு. குழந்தைகள் இரண்டும் உறங்கியபின் தன்னிடம் வந்த கணவர் முகத்தை உற்று நோக்கினாள் கலா. அதில் வாட்டம் தெரிய அதற்கான காரணத்தை யூகித்துக் கொண்டவள் ‘என்னங்க…என் மேல் கோபமா?’ கேட்டாள்.

    ‘ம்ம்ம்…கோபம்னு இல்லை…ஒரு வருத்தம்…அவ்வளவுதான்..’

    ‘எனக்குத் தெரியும்…நான் பெரியவளை விட்டுட்டு சின்னவளை மட்டும் டான்ஸ் க்ளாஸ்ல சேர்த்து விடறேனே…அதுதான் உங்க வருத்தத்திற்குக் காரணம்….சரிதானே?’

    ‘ஆமாம்…அன்னிக்கு டிராயிங் க்ளாஸூக்கும் இப்படித்தான் செய்தே…ஏன்?…என்னாச்சு உனக்கு?’

    பதிலேதும் சொல்லாமல் மெலிதாய்ச் சிரித்தாள் கலா.

    அவளின் அச்சிரிப்பு அவனுள் கோபத்தை மூட்டி விட ‘ஏண்டி…சின்னவளே ஊனக்காலை வெச்சுக்கிட்டு…விந்தி விந்தி…நடந்திட்டிருக்கா…அவளுக்கு பரத நாட்டியம் ரொம்ப முக்கியமா?’ கத்தலாய்க் கேட்டான்.

    ‘ஆமாங்க…சொன்னாலும் சொல்லாட்டியும் அவளுக்குத்தாங்க அது ரொம்ப முக்கியம்…’ அவளும் கத்தலாகவே பதில் சொல்ல, வாயடைத்துப் போனார் குணசேகர்.

    சில அவஸ்தையான நிமிடங்களுக்குப் பிறகு ‘என்ன கலா…என்ன சொல்ற நீ?..கொஞ்சம் புரியம்படிதான் சொல்லேன்…’ தணிவாய்க் கேட்டார் குணசேகர்.

    ‘இங்க பாருங்க…நான் சொல்றதை நல்லாக் கேட்டுக்கங்க….பெரியவ செல்வியைப் பற்றிப் பிரச்சினையே இல்லைங்க…அவ நார்மலா இருக்கா…சுமாராப் படிச்சு..எதிர்காலத்துல ஒரு சுமார் லெவலுக்கே வந்தாலும் யாரும் அவளை ஏதும் குறை சொல்ல முடியாது…அவ கல்யாணம் கூட ஈஸியா நடந்திடும்…ஆக…ஒரு இயல்பான வாழ்க்கைங்கறது அவளுக்கு உத்தரவாதமாயிருக்கு..என்ன நான் சொல்றது சரிதானே?’

    ‘சரிதான்…’

    ‘ஆனா சின்னவளைப் பொறுத்தவரை அப்படியில்லை….அவ உடல்ல ஆண்டவன் ஒரு குறையை வெச்சிட்டான்…இப்ப….பெரியவ மாதிரியே இவளும் ஒரு சுமார் லெவல்ல இருந்தான்னு வெச்சுக்கங்க….அப்ப அவளோட குறை அவளுக்கும் சரி…மத்தவங்களுக்கும் சரி ஒரு பெரிய விஷயமாத் தெரியும்…அது அப்படித் தெரியக் கூடாதுன்னா…அவ படிப்பு தாண்டிய சில விஷயங்கள்ல திறமைசாலியா இருக்கணும்…’

    நெற்றியைச் சுருக்கியவாறே கேட்டுக் கொண்டிருந்த குணசேகருக்கு லேசாய்ப் புரிய ஆரம்பித்தது.

    ‘இப்பவே அவளுக்கு ஓவியம் நல்லா வருது….இன்னும் டிராயிங் க்ளாஸ்ல சேர்த்து அதை அவ டெவலப் பண்ணினா நிச்சயம் ஓவியத்துல ஒரு சாதனையைப் படைப்பா…அதே மாதிரிதான் பரத நாட்டியம்…இப்ப இருந்தே பயிற்சியில் ஈடுபட்டா நாட்டியத்துல ஒரு சாதனையாளரா அவ வர முடியும்…அது மாதிரியான சாதனைகளை அவ நிகழ்த்தும் போது அவ மாற்றுத் திறனாளியா மத்தவங்க கண்ணுக்குத் தெரிய மாட்டா…குறைகளை மாற்றும் திறனாளியாத்தான் தெரிவா…அதனாலதான்….’

    தன் மனைவியின் அற்புதமான தொலை நோக்குப் பார்வையில் மெய் சிலிர்த்துப் போன குணசேகர் அவளை பெருமையாய்ப் பார்த்து பொறுமையாய் அணைத்தார்.

    (முற்றும்)

    Share
  • கன்யா குமரி


     தமிழ்த்தேனீ

    விடிகாலை நேரம்

    ஆதவனே வரத் தயங்கும்

    காரணம் என்னவென்று காணுதற்கு

    வாசற்கதவு திறந்தேன்

     

    எதிர் வீட்டு குடிசையின் வாசலில்

    ஏற்கெனெவே உதயமாகி மாக்கோலம்

    போடுகின்ற கன்னிப் பெண் உருவத்தில்

    வந்தானோ சூரியன்

     

     வண்ணக் கோலம் போடும் கன்னியவள்

    மனம் மயக்க மதி வதனம் காண வேண்டி

    பார்வையை கூர்மையாக்கினேன்

     

    நிழற் படமாய் நின்று அவள்

    நெற்றியில் சுருண்டு விழுந்த

    கருமேகக் கீற்றை புறங்கையால்

    ஒதிக்கிவிட்டு    நிமிர்ந்தாள்

     

    கன்னங் கரேலென்ற காரிருளின்

    சாயமதை தோய்த்தெடுத்து

    கன்னியாய் உருக் கொண்டு

    பூவுலக காரிருளை போக்குதற்கு

     

    தானே கருப்பான விக்ரகமாய்

    கருணை அன்னை ஆகி நின்று

    அருள் புரியும் விந்தையினை

    நான் காண நிமிர்ந்தாள் அவள்

     

    காதிலே தாடங்கமோ ,கால்களிலே

    கொலுசோ ஏதுமில்லை,ஆனாலும்

    சர்வாங்க பூஷிதையாய் கண நேரம்

    கண்களிரண்டில் கருணைக் காந்தமோடு

     

    காட்சி  தந்தாள்  கயல் விழிகளை 

    ஒரு சுழற்று சுழற்றி விட்டு,

    திரும்பினாள் அவள் முகம் பார்த்தேன்,

    அதில் பார்த்தேன்  அன்னை

     

    அகிலாண்டேஸ்வரியை கன்னியாகுமரியை

    கருவறையின் மூல விக்ரஹ கணநேரத்

    தோற்றம் போல் இதமான புன்சிரிப்பு

    பாதாரவிந்தமது மெல்லடி நடக்க

     

    மனம் முகிழ்த்தது தாமரையாய்

    கடையவனை கரை சேர்க்க

    வந்திட்ட தெய்வம் போல்

    காட்சி தந்த கருணைதெய்வம் !!!!!

     

    பாதாதி கேசம் வரையில் படர்ந்து

    படுமாற் போல் பூமியதில்

    நெடுண்ஞாண்கிடையாக நீண்டு வீழ்ந்து

    கும்பிட்டு மீண்டு மெழுந்து கை யெடுத்து

     

    அவள் இருந்த திசை நோக்கி கும்பிட்டேன்

    அட சூரிய நமஸ்காரமா நல்ல வழக்கம்

    போகிற போக்கில் சொல்லிவிட்டுச்

    சென்றான்  ஒரு பால்காரன்!

      படத்துக்கு நன்றி

    http://www.hindudevotionalblog.com/2011/06/kanyakumari-devi-temple-in-tamilnadu.html


    Share
  • சந்தேகம்…

    செண்பக ஜெகதீசன்

    ஏகப்பட்ட மனைவிக்கார தந்தை
    எந்த நிலையிலும்
    சந்கேப்படாதபோது,
    அவன் மகன்
    ஏகபத்தினிக்காரன்
    ஏன்
    சந்கேப்பட்டான் சீதைமீது…!

     படத்துக்கு நன்றி       

    http://religion-faith.com/hindu-and-hinduism/hindu-gods-goddesses/goddess-sita.html

    Share
  • விஜயதசமி

    விசாலம்

    விஜயதசமி என்றால் எல்லோருக்கும் முதலில் நடக்கும் முத்தேவிகளின் ஆராதனையும்  பின் ஆயுதபூஜையும் உடனே ஞாபகம் வரும் ,நான் தினமும் ஷீரடியின் சாயி ஸச்சரிதா படிப்பேன். அதில் “சாவடி ஊர்வலம் “என்ற பகுதி இரவு படுக்கும் முன் படிக்க அல்லது கண்முன் அந்தக் காட்சியைக்காண  மிகவும்  நன்மைப் பயக்கும்,  ஷீரடியில் இன்றும் விஜயதசமி அன்று ஊர்வலம் நடக்கிறது .சிறப்பு என்னவென்றால் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் மற்ற எல்லா மதப் பிரிவுகளும் இதில் பங்கு ஏற்கின்றனர் ,ஒருவித சச்சரவுமில்லாமல் அமைதியாகச் சிறப்புடன் நடைப்பெறுகிறது அன்பும் பாசமும் கலந்த ஊர்வலம் ,பிரசாதமும் எல்லாவித
    உணவும் கலந்த ஒன்று ,சீரடிபாபா ஒரு ஜோலிப்பையில்  எல்லோரும் கொடுக்கும் உணவைச் சேகரித்து பின் அதைக்கலந்து எல்லோருக்கும் வினோகித்து பின் காக்கை குருவி நாய் பூனை போன்றவைகளுக்கும் போட்டு பின் அவர் சாப்பிடுவாராம். இதே விஜயதசமி அன்றுதான் அவர் சித்தி அடைந்தார் அவர் வாழ்ந்த வாழ்க்கை மிக எளிமை ஆன ஒன்று .ஷீரடிக்குள்முதன் முதலாக அவர்  நுழைந்தப்போது  அவர் சீதனம் ஒரு செங்கலும் இரண்டு சாக்குகளும்தான்,”சாயி”என்றால் கூட வாழும் இறைவன் “என்று பொருள் கொள்ளலாம் அவரின் ஒரே மந்திரம் “அல்லா மாலிக்”. பல கோடி மக்கள் இன்று அந்தப் பக்கிரி பாபாவின் பொற்கமலங்களைப்பற்றி அமைதி காணுகிறார்கள்.

    பாபா தான் படுக்கப் போகும் போது தான் கொண்டு வந்தச் செங்கலை ஒரு பழைய துணியில் சுற்றி அதில் தலை வைத்துக் கொள்வார்.அவருக்கு உதவ ஒரு குட்டிப்பையன். பாபாகூடவே இருந்து அவர் படுக்கப் போகும் முன் தூசியும் தட்டி அந்த இடத்தைக் கூட்டுவான் ,அவர் இறக்கும்  சில தினங்களுக்கு முன் அவன் தான் கூட்டும் போது குப்பை   செங்கலில் விழ்க்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் செங்கலை ஒரு துணியில் சுற்றத்  தூக்கினான ஆனால் அது கைத்தவறி கீழே விழுந்து இரண்டாகி விட்டது மிகவும் வருந்தி அழ ஆரம்பித்தான். பாபா வெளியில் போயிருந்தவர் உள்ளே வந்தார். செங்கல் உடைந்ததைக் கண்டார் ,அந்தச் செங்கலில் தலை வைக்க  புதுப்புது சிந்தனைகளும் ஞானமும்  பூககளாக மலருவது அவருக்குத்தான்  தெரியும் அது உடைந்தது அவருக்கு  தன் ஆயுள் முடியும் தருணம் வந்து விட்டது என்று புரிந்தது .

    சீரடியில் ராமசந்தரபடேல் என்பவருக்குக் கடும் காய்ச்சல் . ஏற்பட்டது. .உடல் நிலை நாளுக்கு நாள் குன்றியது தான் பிழைப்பது அரிது என அவர் தன் கடைசி  நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார் , ஒரு நாள் அவர் படுக்கையின் அருகில்  பாபா  வந்து நின்றார் . அவரைக்கண்ட  படேல்  அவர் காலைக்கெட்டியாக பிடித்துக் கொண்டார். “பாபா நான் இனி பிழைக்க மாட்டேன் .என்னால் இந்த வேதனை தாங்க முடியவில்லை .எனக்கு எப்போது மரணம் ? தயவு செய்து சொல்லுங்கள் ‘அவரையே கருணையாக  பார்த்த பாபா ” என் அன்பு படேல்  ஏன் கவலைப்படுகிறாய்? ?உன் மரணம் தடுக்கப்பட்டது . நீ இனி கொஞ்ச, கொஞ்சமாக தேறிவிடுவாய் . .ஆனால்  தாத்யாபடேலை நினைத்தால் வருத்தமாக உள்ளது .அவர்  விஜயதசமி அன்று இந்த உலகை விட்டுப்போய்விடுவார் . இதை உன்  மனதிலேயே வைத்துக்கொள் .தாத்யாபடேலிடம்  சொல்லாதே . அவர் பயத்திலேயே கலங்கிவிடுவார் “

    ராமசந்தர  படேலின்  உடல் தேறியது  ஆனால் உள்ளம்  வரப்போவதை நினைத்து வருந்தியது. “தாத்யா படேலைக்காப்பாற்ற முடியாதா? நாள் நெருங்கி வந்து விஜயதசமியும் வந்துவிடுமே ” என்று கவலை மனதை அரித்தது .ஒருவரிடம் இதைச்சொல்லாமல் ரஹஸ்யமாக வைத்திருக்க முயற்சித்தும் கடைசியில் தன் தையற்காரர் பாலா ஷிம்பி என்பவரிடம் இந்த விஷயத்தைஸ் சொல்லிவிட்டார் .நாட்கள் ஓட நவராத்திரி யும் ஆரம்பித்தது  பாபா சொன்னது போல் ஸ்ரீதாத்யாபடேல் சுரத்துடன் படுக்கையில் விழுந்தார் .சீரடி பாபாவைத் தினமும் தரிசிக்கப்போவது நின்றுவிட்டது .  பாபாவைப்பார்க்க முடியாமல் மனம் வருந்தினார். பின் மிக நம்பிக்கையுடன்’  பாபா  தாங்கள் என்னுடன் இருக்க எனக்கு என்ன பயம் ! என் உடலுக்கு ஒன்றும் ஆகாது . எல்லாம் உங்களிடமே  சமர்ப்பணம் ” என்று படுத்த படுக்கையிலேயே  வேண்டிக்கொண்டார் .பாபா இப்போது என்ன செய்வார் ? தன்னை நம்பியவரை கைவிடலாமா ?அவரைக்காப்பாற்ற எண்ணம் கொண்டார் .அவருடைய கர்மாவை தான் ஏற்றுக்கொண்டு மரணத்திற்கும் தயாரானார்

    அந்த மரணமும் அவர் தன் பக்தனின்  ஆயுள் முடிவைக் காப்பாற்ற,  தான் அதை ஏற்றுக் கொண்டு விட்டார் ,,,,,,,,,,,,,

    அவருடைய மிகவும் விருப்பமான  சில  தொண்டர்கள் கனவில்  வந்து தன்னுடைய மரணத்தைப்பற்றியும் சூசகமாக கூறியிருக்கிறார். தாஸகணு என்பவர் கனவில் வந்து  “மஸ்ஜித சாய்ந்து விழுந்துவிட்டது .  சில எண்ணெய் வியாபாரிகள்  .கடைக்காரர்கள் என்னை மிகவும் கிண்டல் செய்து விட்டனர் நான் விடை   பெறுகிறேன் .  நீ உடனேஅந்த இடம்சென்று என்னைப் பூக்களால் மூடிவிடு ”    என்று சொல்லி மறைந்து விடுகிறார் .தாஸ்கணுவும் அவர் சொன்னபடி பூக்களுடன்  அங்கு சென்று பஜன் கீர்த்தன் பாடி .பாபாவின் பெயரில் அன்னதானம் செய்தார். இந்த விஜயதசமியன்று “சாயி சச்சரிதா” படித்தால் சாயியின்  அருள் பரி பூர்ணமாகக்  கிடைக்கும்  . இதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

    ,,,போலோ சச்சிதானந்த சத்குரு சாயி ம்ஹராஜ் கி ஜெய்           

    http://www.kollyinsider.com/2011/10/happy-vijayadashami-from-kollyinsider.html

    Share