தமிழார்வம்: ‘திரிகடுகம் போலும் மருந்து’

 

இன்னம்பூரான்

1.1. பதினென் கீழ்க்கணக்கு என்ற சங்க கால இலக்கியத்தின் பிரிவில், நீதி நூல்கள் பல காணக்கிடைக்கின்றன. அவற்றில் திருக்குறள் மிகவும் பேசப்பட்ட, பற்பல உரைகள் கண்ட நீதி நூல். மற்ற நீதி நூல்களில், அக்காலத்திலேயே தமிழன் கண்டறிந்து பொருத்தமாக கையாண்டு பயன் பெற்ற மூலிகைகளை முன்னிறுத்தி அறிவுரை அளித்த நீதி நூல்கள் மூன்று. அநேகமாக யாவரும் அறிந்த மூலிகைகள் ஆன சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் வாழ்வாதாரம் தருபவை என்றால் மிகையாகாது. எனவே, நல்லாதனார் (நல்ல ஆதனார்: கி.பி. இரண்டாம் நூற்றாண்டு) இயற்றிய திரிகடுகம் (‘திரிகடுகம் சுக்கு மிளகு திப்பிலி’ என்கிறது, திவாகரம்.) என்ற நூல், இந்த ‘தமிழார்வ’ இழைத்தொகுப்பை ஆரம்பித்து வைப்பது, ஒரு நன்நிமித்தம். இந்த முயற்சியில், எனக்கு உறுதுணை: திருக்கோட்டியூர் இராமானுசாச்சாரியார்  செய்த உரை ( இனி: உரை): ஶ்ரீல.ஶ்ரீ. ஆறுமுக நாவலர் அவர்களின் பொருட்டு திரு.கா.சுப்ரமண்ய பிள்ளை 1934ல் பதித்தது  & வித்துவான், நாவலர் பு.சி. புன்னைவனநாத முதலியாரவர்களின் விருத்தியுரை (இனி:விருத்தியுரை):( சென்னை : திருநெல்வேலி,தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , 2003.) அவை இணைய தளத்தில் கிடைக்கின்றன. நிறைகள் அவர்களது. குறைகள் எனது. அவர்களிருவருக்கும் என் நன்றி உரித்ததாகுக.

1.2. இந்த நூலை உயிர் மருந்து நூல் எனலாம். எடுத்தவுடனேயே, முதற்பாடலிலேயே ‘திரிகடுகம் போலும் மருந்து’ என்று நல்ல ஆதனார் பெயர்க்காரணத்தை உணர்த்துகிறார். திரிகடுகம் காப்புச் செய்யுள் உட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது. இம்மைக்கும் (கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் வகையறா) மறுமைக்கும் (அவாவறுத்தல், மெய்யுணர்தல் வகையறா) ஏற்புடைய நல்வழிகளை உணர்த்தி அறம் சாற்றும் நூல், இது. ‘இல்லறமல்லது நல்லறமன்று’ (கொன்றை வேந்தன் 3: ஒளவையார்)என்பதை 35 இடங்களில் படித்துப் படித்து சொல்லும் இந்த நூலின் ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன. அவற்றின் கோர்வை ஒரு தனிச் சிறப்பு. அவற்றின் தொடர்பாகவே, ஈற்றடியில் ஒரு பொதுக்கருத்து சொல்லப்படுவது, மேலும் ஒரு சிறப்பு.

1.3. திரிகடுகம் அறம் சாற்றும் நூல். ‘அறம் செய்ய விரும்பு’ (ஆத்திச்சூடி 1: ஒளவையார்) என்று வழி காட்டும் நூல். நல்லறம் என்பது அறங்கள் பலவற்றின் ஒரு தொகுப்பு. இந்நூலின் அமைப்பு ஒரு குறித்த வரையறையுடன் அமைந்துள்ளது. அங்குமிங்குமாக, அவற்றில் சிலவற்றை முன் நிறுத்துவதை விட, நல்லாதனரின் பட்டியலை அனுசரித்து, அவருடைய வரிசைப்படி பயணித்து அவற்றை புரிந்து கொள்வது நலன் பயக்கும் என்பது என் கருத்து. அவ்வாறே செயல்படுகிறேன்.

1.4. இறை வணக்கத்தில் துவக்குவது சங்ககாலத்திலிருந்து தமிழ் மரபு. அந்த காப்பு செய்யுட்களின் தனித்துவம் போற்றத்தக்கது. கடவுள் வணக்கம் இருவகைப்படும் ~ ஏற்புடைக் கடவுள் வணக்கம், வழிபடு கடவுள் வணக்கம். வழிபடுகடவுள் வணக்கம், இங்கே. காத்தற் கடவுளும் அந்த திருமாலே. இக் கடவுள் வாழ்த்துப் படர்க்கையிற் கூறப்பட்டுள்ளது; பிள்ளையாரும் சிறப்பாக வேண்டப்படுபவர் என்றும் பாடமுண்டு.

1.5. நல்லாதனார் ‘திரிகடுகத்தின்’ காப்பு செய்யுளில், தர்ம சாஸ்திரத்தின் சிருஷ்டிகர்த்தாவான கிருஷ்ண பகவானின் புகழ் பாடுகிறார். திருமாலின் லீலாவிநோதங்களில், வாமனாவதாரமும், குருந்தை மரத்தை முறித்ததும், மாயச்சகடம் உதைத்ததும் பாலகர்களுக்குக் கூட தெரியும். அவற்றை கூறி, அந்த ‘பூவைப்பூ வண்ணன் அடி’ போற்றி வணங்குகிறார், நல்லாதனார். இதனால் அவர் வைணவமரபைச் சார்ந்தவர் என்போர் உண்டு.  எடுத்துக் கொண்ட இந்த நூல் இனிது வர வேண்டி இச் செய்யுளால் கடவுள் வணக்கம் செய்யப்பட்டது. இனி வரும் பாடல்களில் மூன்று மூன்று கருத்துக்களும், ஈற்றடியில் ஒரு பொது கருத்தும் கோர்க்கப்படுவது போல, இங்கும் மூன்று லீலாவிநோதங்களும், ஈற்றடியில் வணங்குதலும் பயின்று வரும் நுட்பத்தைசுவைப்போமாக.

திரிகடுகம்
காப்பு

கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்

தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் –

நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம்

இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி.

1.6. உரைகளிலும் நடையழகு காணலாம். சான்றாக, இந்த மூன்று செயல்களையும் ‘அளந்த பொருள் (மூவுலகம்),சாய்த்த பொருள் (மரம்), உதைத்த பொருள் (சகடம்) என்று கூறுவர். இறைவனின் குணாதிசயங்களை ஒரு வரையறைக்குள் திணித்து வைக்கமுடியாது என்றாலும், ஒரு அனுபவ சுவை தென்படுகிறது, விருத்தியுரையில் கூறிய மாதிரி: திருமால் ஞாலத்தை அளந்தது பேரருளால். மரத்தை வீழ்த்தியது ஒரு பேராற்றல். சகடத்தை உதைத்து பேரறிவினால்(சமயோசிதம்). இறைவனின் குணாதிசயங்களை இவ்வாறு வருணிப்பது ‘பரிபாடல்’ என்ற சங்ககாலத்து பக்தி பாடலை நினைவுறுத்துகிறது.

1.7. தற்காலத்தில் இலக்கியம் படிப்பவர்கள் குறைவு என்ற கருத்து நிலவுகிறது. இலக்கணம் என்றால் பிடி ஓட்டம்! ஆனால் நண்பர்களே, தமிழிலக்கணத்தின் சுவை அருமையானது. இது ஒரு சிறிய குறிப்பு கடுதாசி என்பதால், ஆங்காங்கே விருத்தியுரை அளித்துள்ள இலக்கண குறிப்புகளில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன். # சான்றாக: ‘அளந்ததூஉம்/ சாய்த்ததூஉம்/உதைத்ததூஉம்’ என்று வசன நடையின் புழக்கத்தில் இல்லாத ‘உம்’மில் முடிப்பது ஒரு ஒலி உத்தி. பாடலில் இன்னிசை கூடி வருவதற்காக, தமிழிலக்கணம் அனுமதிக்கும் இந்த அலங்காரத்துக்கு, இன்னிசையளபெடை என்று பெயர். வினையாலணையும்பெயரென்பர். செய்யுளில் செவிக்கு இனிய ஓசை தரும்பொருட்டு குற்றெழுத்து நெடிலாகி அளபெடுக்குஞ் சொல்லில் “உ” எனும் உயிரெழுத்து இருக்கும். அச்சொல் மூவசைச் சீராக இருக்கும்.‘அளந்ததூஉம்’ என்ற தொடரில் “து” எனும் குறில் “தூ” என நெடிலாகி அளபெடுத்துள்ளது.  #காமரு  என்னும் உரிச்சொல் உகரச்சாரியை பெற்று ‘காமரு’ ஆயிற்று.

(தொடரும்)

இன்னம்பூரான்

28.10.2012

சித்திரத்திக்கு நன்றி: http://img1.dinamalar.com/admin/Bookimages/247713.jpg

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *