இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …………………….. (29)
வணக்கங்களுடன் மனதின் மற்றொரு பக்கம் திறக்கிறது. மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது முதுமை. ஏழை, பணக்காரன், ஜாதி,மதம் என வேறுபாடு இன்றி அனைத்து மக்களையும் அணுகுவது முதுமை.
இந்த முதுமையை நாம் எவ்வாறு அணுகுகிறோம்?
பத்துகளின் முடிவில் இங்கிலாந்து நாட்டினுள் கால்வைத்த நான் இன்று ஐம்பதுகளின் நடுவில் அலசிக் கொண்டிருக்கிறேன்.
வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லக்கூடிய வகையில் நான் ஒரு அறிஞனோ அன்றி ஒரு தத்துவஞானியோ அல்ல. வாழ்க்கையின் சகல திக்குகளுக்குள்ளும் நுழைந்து படக்கூடாத அடியெல்லாம் பட்டு தவற விடக்கூடாத சந்தர்ப்பங்களையெல்லாம் தவற விட்டு பட்டுத் தெளிந்த சாதாரண அனுபவவாதியாகவே இருக்கிறேன்.
நான் ஒரு வாலிபனாக உடலில் இளரத்தம் துள்ளிப் பாய்ந்து கொண்டிருந்த போது வாழ்வில் அனுபவ முதிர்ச்சியடைந்தவர்களை நோக்கிய எனது பார்வை எப்படியிருந்தது எனும் அடிப்படையில் வாழ்வின் முதுமையை நோக்குகிறேன்.
வயதில் மூத்த பலர் எனது தந்தை உள்ளடங்க அன்றைய காலகட்டத்தில் எனக்கு அறிவுரை என்று வழங்கிய அனுபவ மொழிகளை அதற்குரிய கெளரவத்தோடு ஏற்றுக் கொண்டேனா? எனும் கேள்விக்கு இல்லை என்பதுவே எனது உள்ளத்தில் இருந்து பிறக்கும் உண்மையான பதிலாகும்.
கண்மூடித்தனமாக அவசரத்தில் எடுக்கும் முடிவுகளின் பலாபலன்களை அனுபவரீதியாக அவர்கள் விளக்க முற்பட்டபோது அதை அவர்கள் எனது முன்னேற்றப்பாதையில் போடும் தடைக்கற்களாகக் கருதிய காலங்களும் உண்டு
கவியரசர் கண்ணதாசன் ஓரிடத்தில்,
“எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் நான் வாழ்ந்திருக்கிறேன். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்லும் யோக்கிதை எனக்குண்டு ” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அவரது அந்த வரிகளில் புதைந்திருக்கும் உண்மை, அனுபவத்தின் அனுகூலத்தை, அனுபவத்தின் அதிசயத்தை ஆழப் பறைசாற்றி நிற்கிறது.
ஆனால் நான் வாழும் இந்த இங்கிலாந்து நாட்டிலோ அன்றி நாம் தளிர்த்த பின்புல நாடுகளிலோ முதுமையின் மொழிகளுக்கு சரியான கெளரவம் அளிக்கப்படுகிறதா ? மிகவும் ஆழமாக இளையதலைமுறையினரால் தீர்க்கமாக விவாதிக்கப்பட வேண்டிய விடயம்.
உடலில் வலுவிருக்கும் காலமெல்லாம் உழைத்து விட்டு, தமது அந்திமக் காலத்தில் ஓய்வூதியத்தை எதிர்பார்த்து ஓய்வு வாழ்க்கையை ஒருவர் தேர்ந்தெடுத்து விட்டால் அவரது உபயோகம் முடிந்து விட்டதா? சமுதாயத்தின் ஓரத்தில் மெளனமாக உட்கார்த்தி வைக்கப்பட வேண்டியவராகிறாரா ?
இதுவே இன்றைய சமூகத்தின் முன்னால் நிற்கும் பூதாகரமான கேள்வி.
அவசரமாக உருளும் இந்த உலகில் காலமாற்றம் என்பது தவிர்க்கப்படமுடியாத ஒன்று. காலத்தின் முன்னேற்றமும் அக்காலமாற்றத்தின் விளைவுகளால் ஏற்படும் சமுதாயத் தேவைகளின் மாற்றமும் பலபுதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாகின்றன.
இவ்விஞ்ஞான முன்னேற்றத்தை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள், இவற்றிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று வயதில் முதிர்ந்தவர்களை ஒதுக்கி வைக்கும் பழக்கத்தை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
சுமார் 13 வருடங்களின் முன்னால் காலமான என் தந்தையின் மனதில் அனைத்தையும் பற்றி ஓரளவு அறிந்து வைத்த தனக்கு கணினியைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் எழுந்துள்ளது என்று என்னிடம் கூறியபோது நான் அதை எத்தனை முக்கியமாக எடுத்தேன் என்பது எனக்கு இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.
எனது தந்தை வாழந்த வாழ்க்கைமுறைகளை, அதற்காக அவர் கடைப்பிடித்த நெறிமுறைகள், அவர் வாழ்க்கையில் நடந்த எளிமையான பாதை, எதிர்கொண்ட தடங்களை எதுவித வலியுமின்றி அவர் கையாண்ட முறைகள் இவையனைத்தும் அவரின் மறைவுக்குப் பின்னால் எனக்கு ஆழ்ந்த அதிசயமாகப் படுகின்றது.
ஏனென்கிறீர்களா?
இன்று நானும் ஒரு தந்தையாக வாழ்வின் பல நெளிவு சுளிவுகளை அறிந்தவனாக பல அனுபவ அடிகளைப் பெற்றுக் கொண்ட ஒரு முதுமை வாசலுக்குள் காலடி வைத்த காரணமே !
நான் விஞ்ஞானத்தில் எவ்வளவோ முன்னேறியிருக்கலாம், காலம் எத்தனையோ மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கலாம். ஆனால் அவையெல்லாம் எமக்கு ஒரு புதிய தாய், தந்தையைரை உருவாக்கித் தந்து விட முடியுமா?
முதுமை அளிக்கும் ஞானத்தை விஞ்ஞானம் ஆக்கிக் கொடுத்து விட முடியுமா? இந்த உண்மையை இன்றைய இளைய சமுதாயம் எத்தகைய அளவில் உள்வாங்கியிருக்கிறது என்பது கேள்விக்குறியே !
பெரும்பான்மையாக பின்புலத்தில் வாழும் பெற்றோர்கள் தமது இளைப்பாறும் காலத்திற்காக என்று எதையும் சேர்த்து வைக்காமல் தமது எதிர்காலத்தை தமது குழந்தைகளின் முன்னேற்றத்தில் அடகு வைத்து விடுகிறார்கள். ஆனால் அவர்களின் இந்தத் தியாகத் தன்மையை, அவர்களது குழந்தைகள், வளர்ந்து பெரியவர்களாதும் சரியான வகையில் புரிந்து கொள்கிறார்களா என்பது கேள்விக்குறியே !
எங்கே?, எப்போது?, எப்படி? எனும் கேள்விகள் மனதில் எப்போதும் ஓங்கி ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
மிகவேகமாக எமது பின்புலங்களில் வளர்ந்து வரும் முதியோர் இல்லங்கள் உணர்த்துவது என்ன?
எம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களிடமிருந்து அவர்களின் ஓய்வுக்காலங்களில் நாம் எதிர்பார்ப்பது மிகையானவையே !
பல சந்தர்ப்பங்களில் கூட்டுக் குடித்தனம் நடத்தும் இடங்களில் தமது குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்புக்களையும், சமையல் பொறுப்புகளையும் தம்முடன் வசிக்கும் ஓவ்வு பெற்ற பெற்றோர் வசம் ஒப்படைக்கும் நிலையைக் காண்கிறோம்.
அப்படி ஒத்துழைப்புக் கிடைக்காத இடத்தில் அவர்கள் முதியோர் இல்லங்களை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.
வாழ்க்கையின் அதிமுக்கிய திருப்பங்களில் முதியவர்களின் அறிவுரைகள் பல இடர்களைத் தவிர்க்கக்கூடிய சந்தர்ப்பங்களைக் கொடுக்கிறது. தமது உடலில் வலுவுள்ளவரை உழைத்து களைத்துப் போனவர்கள் வாழ்க்கையின் வளமான பாகத்தைச் சுவைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது இளைய சமுதாயத்தின் கடமையாகிறது.
எனது இன்றைய அனுபவத்தில் புலம்பெயர்ந்த எமது சமுதாயங்களில் கூட பெற்றோரைத் தமது குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பை ஒப்படிக்கும் ஒரு சந்தர்ப்பமாகவே இளம் தலைமுறையினர் கருதுவது போலத் தோன்றுகிறது.
அதேசமயம் தமது பேரக்குழந்தைகளைப் பராமரிப்பதையும், தமது பிள்ளைகளின் குடும்பத்தில் அவர்களுக்குத் துணையாக ஒத்தாசைகளைப் புரிவதையும் மிகவும் விரும்பித் தாமாகவே ஏற்றுக் கொண்டு வாழும் முதியோர்கள் பலருண்டு.
அதேபோல தமது பெற்றோர் தமது ஓய்வுக் காலங்களில் எவ்வித சுமைகளுமின்றி வாழ்வைச் சுவைக்க வேண்டும் என்று எண்ணி அவர்களுக்கு அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்கும் பிள்ளைகள் இல்லாமலில்லை.
அது மட்டுமல்ல !
பல சந்தர்ப்பங்களில் தாம் முதுமையெய்தி விட்டோம் இனி தம்மால் இச்சமுதாயத்திற்கு எதையும் கொடுக்க முடியாது தாமாகவே ஒதுங்கிக் கொள்ளும் முதியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
முதுமை என்பது நோயல்ல அது இயற்கையின் நிகழ்வு அதை நாமனைவரும் மறந்து விடக்கூடாது.
கவியரசரின் வரிகள்
“கடந்தகாலமோ திரும்புவதில்லை
நிகழ்காலமோ விரும்புவதில்லை
எதிர்காலமோ அரும்புவதில்லை
இதுதானே அறுபதின் நிலை “
என்பவை இத்தகைய சூழலைப் புரிந்து கொள்ளத்தான் வரையப்பட்டதோ ?
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்


முதியவர்கள் அவரவரது இளமையை மறக்காமல் இருந்தால், முதுமையின் தள்ளாமை குறையும். அறுபது வயது இளமை தான். திரைகடலோடி திரவியம் தேட வேண்டிய அவசியம் குறைந்த பின், அளவிடன் ஓய்வு, ஆர்வத்துடன் தனக்கு பிடித்ததை செய்வது, உடல் நலம் பேணுவது, தன் காரியத்தைத் தானே செய்வது ஆகியவை தள்ளாமையை தணிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, வயதில் முதியவர்கள், சமுதாயம் தமக்கு செய்த உதவிகளை மறக்காமல், சமுதாயத்துக்கு தன்னால் இயன்றதை செய்தால், அதில் புத்துணர்ச்சி பிறக்க வாய்ப்பு உண்டு.