Blog

  • பரதாஞ்சலி விழாவில் சத்ய பாரதி சுந்தரம் விருது வழங்கப்பட்டது

    பரதாஞ்சலி விழாவில் சத்ய பாரதி சுந்தரம் விருது வழங்கப்பட்டது

    வணக்கம்.

    நேற்று – நவம்பர் 23 – மாலை சென்னை பாரதிய வித்யா பவனில் நான் பெரிதும் வியந்து மதிக்கும் நடனகுரு திருமதி அனிதா குஹா அவர்களின் ‘பரதாஞ்சலி’. அவர் வணங்கும் பாபாவுக்கு அஞ்சலியாக நடத்திய விழாவில், பல ஆளுமைகளின் நடுவே என்னையும் அமர்த்தி எனக்கும் ஒரு விருது வழங்கினார்கள்.

    தொடர்ந்து நான் பாரதியைப் பற்றிப் பேசியும், எழுதியும் வருவதையும், ‘பாரதி யார்?’ நாடகத்தில் வசனம் தவிர, பாரதியாக வேடமேற்று நடிப்பதையும் மனத்தில் கொண்டு, எனக்கு, “சத்ய பாரதி சுந்தரம்” என்னும் விருதை வழங்கினார்கள்.

    என்பால் பேரன்பு கொண்டவர் பாரதிய வித்யா பவனின் இயக்குனர் திரு. ராமசாமி அவர்கள். என்னுடைய நிகழ்ச்சிகள் எத்தனையோ – நாடகம் உட்பட – அங்கே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    பாரதியின் பாடல்களை, பொருளறிந்து, கேட்போர் மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பாடி வருகின்ற இசைக் கலைஞர் திரு. ஓ.எஸ். அருண் அவர்கள்.

    பாரதக் கலைகள் அமெரிக்காவில் சிறப்பாகப் பரவுவதற்குப் பெரும் காரணமாக இயங்கிவரும், எங்கள் தாமிரபரணி தீரர், திரு. ‘க்ளீவ்லேண்ட்’ சுந்தரம் அவர்கள்.

    உலகப் புகழ்பெற்ற நடனமணி திருமதி லீலா சாம்சன் அவர்கள்.

    இவர்கள் மூலம் அந்த விருது எனக்கு வழங்கப்பட்டது.

    ஏற்புரையாக நான் ஒரு கவிதையை வாசித்தேன். அதை அனிதா வணங்கும் பாபாவைத் தொட்டு இயற்றியிருந்தேன்.

    இதோ அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் – என் குரலில் பதிவாகவும்:

    பரதாஞ்சலிக்கொரு கவிதாஞ்சலி
    அகமென்றும் புறமென்றும் சுகமென்றும் துயரென்றும்
    அலைபாயும் இவ்வாழ்விலேஅரைநொடியும் நில்லாமல் அல்லாடும் ஓடங்கள்
    ஆசைக ளின்பிள்ளைகள்
    இகமென்றும் பரமென்றும் இனம்காண முடியாமல்
    இடறுவதும் நடனமாமோ?
    இற்றுவிழும் இதயத்தில் பற்றின்னும் வீழா
    திறுக்குவதும் இசையாகுமோ?
    அகமுன்னை நாடாத அதிகாலை வேளையில்
    அருகிலே வந்த தேவா!
    அனிதாவின் நெஞ்சத்தில் அகலாமல் குடிகொண்ட
    அன்பனே சாயிநாதா!
    பற்றுவில காமல்படி தவறவுயிர் சிதறமனம்
    பதறஅடி இடற அங்கே
    பார்த்தவிழி யும்பார்வை யும்பாத மும்கரமும்
    பரிவும்புதுக் கமலங்களாய்
    சுற்றுமுற் றும்மக்கள் துவளமனம் நெகிழ்ந்துருக
    சுந்தரா! எதிரில் நின்றாய்
    சொல்லிரண் டைச்சொல்லிப் புல்லென எனைக்கிள்ளிச்
    சொக்கவைத் தாய்சிரித்தாய்
    அற்றன வினைகளென கொற்றவ உன் கண்முன்னில்
    ஆகாயம் நானாகினேன்!
    அனிதையெனும் வனிதையவள் புனிதமனம் தினம்நெகிழ
    அமர்ந்தருளும் சாயிநாதா!
    தன்பெயரைச் சொல்லாமல் உன்பெயரில் விருதுதரத்
    தாழ்மையுடன் அவளழைத்தாள்
    தரமேது மில்லானைத் தக்கோர்கள் வரிசையில்
    மனம்கூச அமர்த்திவிட்டாள்
    புன்னகையும் குறும்புமாய்ப் பொல்லாத திருமுகம்
    போட்டெனைப் புரட்டுகிறதே!
    பொலபொலென மனமுதிர சலசலென ஜதியதிரப்
    புதியகவி பூக்கின்றதே!
    அன்புமய மாகவுயிர் யாவும்வச மாகப் பெரும்
    அற்புதம்நி கழ்த்தும் தேவா!
    அனிதாவின் சித்தத்தின் முற்றத்தில் மொத்தமாய்
    அமர்ந்தருளும் சாயிநாதா!
    தேவதைகள் போல்நூறு பாவையரை நூல்கொண்ட
    பாவையென ஆட்டுகின்றாய்
    தேரசையும் தெருபோலப் பாவையரின் காலசையத்
    தேவருல கம்பதறுதே
    காவல்விலக மனது களவுபோக நினைவும்
    கனவும் கலந்தாடுதே
    கடவுளோர் கதியதோ கதியாக்கும் ஜதியரசி
    கால்கள் கவிதை பேசுதே
    தனதாந்த தனன தன
    அனிதாவின் நடனமொழி
    தகிடதிமி தனுஜனுகு
    அரம்பையரின் மனமுருகும்
    தனுஜனுகு தாம்தகிமி
    தனுமனுவும் ஓர்கதியில்
    தகதகிட கிடதகிட
    தலையடியும் ஒருசுதியில்
    தகதகிமி தகதகிமி தாம்தகிட தாம்தோம்
    வனிதையரின் வரிசையினில் வான்புவியில் கண்டோம்
    தாம்தீம்தோம் தாம்தகிட தாம்தகிட தோம்தோம்
    வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்துமிசை கேட்டோம்
    ஆடுவ தெல்லாம் அருவா? உருவா?
    அறவே தொலைந்த திருளா? மருளா?
    சூடுவ தேயவன் திருவடி தானா?
    சொல்லொவ் வொன்றும் சுடர்ந்திடும் தேனா?
    தேடுவ தெல்லாம் தேரினில் வந்தென்
    தெய்வம் புன்னகை செய்து கொடுத்ததில்
    தேவைக ளெல்லாம் தீர்ந்தது தானா?
    தெரியவில் லையிது நானா? வானா?
    பாரதம் என்பது மேடை, அதில்
    பரதம் பரமனின் ஜாடை
    ஓரடி விதியை மிதிக்கும், மற்
    றோரடி வானை யளக்கும், இதில்
    யாரடி யோகொடுங் கோடை வாடை
    அடைமழை வசந்தம் ஆயிரம் சுகந்தம்
    தேரடி தெருவெனத் தெய்வம் பலவெனத்
    தெரிந்து படைத்துச் சிரித்தாள்? அவள்
    நேரே இறங்கிச் சேலை அணிந்து
    பாரை அளந்த பதத்தாள்! அவள்
    பரதத் தில்புது விதத்தாள்!
    பாவனைகள் இதுபோலப் பார்கண்ட தில்லையே
    பார்ப்பதெல் லாம்தில்லையே!
    பாலைமனம் சோலைவன மாகவுரு மாறியதில்
    பகலிரவெ லாம்முல்லையே!
    தேவையெல் லாம்தீர்க்கும் தெய்வக் கலைத்தேரில்
    தெய்வமென வந்த பெண்ணே! உன்
    பரதாஞ்ச லிக்கிந்தப் பாமரன்ச மர்ப்பித்த
    கவிதாஞ்ச லியையேற்பாய்!
    ஆவதெல் லாமவன் அருளென்னும் அன்பென்று
    யாவரும் இசைபாடவே!
    அருளேதன் னுருவாக பரதமே உயிரான
    அனிதாகுஹா வாழ்கவே!

    கவிதையை என் குரலில் கேட்க: https://drive.google.com/…/1-yBJpkYWTCa9jc…/view…

    நிகழ்ச்சியை, 80 வயதிலும் கூர்மையும், உன்னதமான தமிழ் உச்சரிப்புக்கும், மெலிதான நகைச்சுவைக்கும் புகழ் கண்டவருமான திருமதி ரேவதி சங்கரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். அவரையும் அவர் கணவரையும் அமர்த்திவைத்து அனிதாஜி அவர்கள் சிறப்புச் செய்தது அந்த விழாவின் சிறப்பம்சம்.

    பரதாஞ்சலி நடன மணிகள் தேவலோகத்துப் பெண்களாக மாறி அருமையான நடன நிகழ்ச்சியொன்றை, இரு பகுதிகளாக வழங்கினார்கள். அதில், நடனக் கலைஞர்களுக்கு எவ்வாறு யோகா பயிற்றுவிக்கப்படுகிறது என்பதையும் காட்டினார்கள்.

    நேரம் போனதே தெரியவில்லை. வீட்டுக்குத் திரும்பும்போது என் நடையில் ஒரு விசைப்பு முளைத்திருப்பதை உணர்ந்தேன்.

    அன்புடன்,
    ரமணன்
    23.11.2022/புதன்/8,50

    புகைப்படங்களை அனுப்பி உதவிய திரு. ஐயப்பன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    Share
  • நெய்யாலே அபிஷேகம் செய்திடுவோம் ஐயப்பா

    நெய்யாலே அபிஷேகம் செய்திடுவோம் ஐயப்பா

    ‘நெய்யாலே அபிஷேகம் செய்திடுவோம் ஐயப்பா’ என்ற இனிய பக்திப் பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். சுவாமியே சரணம் ஐயப்பா!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தனித்தனி உலகம்

    தனித்தனி உலகம்

    பாஸ்கர்

    உனக்கும் வந்தது எனக்கும் வந்தது ஒரு கனவு
    உனக்கு எப்போதும் பிடித்த ஒரு பெரிய தோசை
    எனக்கு, கூர் தந்தங்களுடன் ஒரு காட்டு யானை
    நான் என் எதிரியை விரட்டுவதாக நினைவு
    உனக்கு வந்தது முகமூடி போட்ட மனிதன்
    நானும் எதிரியைப் பிடிக்க முடியவில்லை
    முகமூடி போட்டவன் யாரென உனக்கும் தெரியவில்லை
    நாம் உறங்குகிறோமா என இருவருக்கும் தெரியவில்லை
    இருவரும் உறக்கம் கலைந்து எழுந்துகொள்ளவில்லை
    கனவே சுகம் என இருவரும் இருந்துவிட்டோம்
    காலம் வரும் என்றாலும் பிரியவே எத்தனித்தோம்
    பிரிந்ததே சுகமெனப் பின்னாளில் புரிந்துகொண்டோம்
    இல்லையெனில் நமக்குள் கனவுகளே வந்திருக்காது
    நாமும் வாழ்ந்தோம் , காதலும் வாழ்ந்தது – வேறெங்கோ.

    Share
  • Mak N Bajji to Hak and Chill – Mylapore Gets a New Point of Munch

    Mak N Bajji to Hak and Chill – Mylapore Gets a New Point of Munch

    Baskar Seshadri

    I had posted on the wall few Months ago about the plans of a new Outlet by Mak N Bajji a triplicane based snack Joint. Now all are set and done and the same is open for the Mylaporeans and the name of the New Joint Hak and Chill.

    This Make in Bakshanam is famous in and around triplicane for its Murukku, Thattai, Ribbon pakoda and many more.

    They are also into the catering to Prepare Bakshanam for all occasions like Marriages, Seemantham and other special functions.

    The proprietor when i met him months ago told his long wish to open a outlet in Mylapore. The food and Bakshanams Including the Juice is prepared in Natural format and they don’t add any Preservatives or any colour fragrance for any added attraction.

    Few Of my friends who are regulars to him says the Podis Here are a special hit in His Place. And the choice of the Proprietor is to introduce the Elaneer Payasam a rare drink not available everywhere.

    And Mylapore is to have a Elaneer payasam Outlet and Be ready to make it one of these days. And so what’s Special In Elaneer payasam here? Its Served Chill and the taste as said by my friend is Heavenly. So whats Next? Ready, Steady and Go.

    Hak and Chill is at 11/4 South Mada street, Mylapore and its close to Old Netaji and National Seeval Shop and Kalyan Ghee stores. And i hope you remember the small passage which used to House the Old Ravi Book House. There are two shops in a row. One deals with Payasam and other sells Savouries.

    Kaliesraj is the Person behind this venture. He is a smart, Hard working and a very unassuming Person.

    This shop was opened two weeks ago. I literally saw him this morning standing on the road distributing the pamphlets of his shop.

    A young boy today may have some hesitation to do such work But Kaliesraj is bent on making this a success Venture. Good Luck Kaliesraj, You are sure to go Places. Just eat, drink or Munch whatever you like but share a word here on this wall on how you Liked it.

    If you wish to reach Kaliesraj Please call him at 97910 54039 .

    Share
  • அறிஞர் அண்ணா உரை | ஆசிரியர் துரைக்கண்ணன் படத்திறப்பு

    அறிஞர் அண்ணா உரை | ஆசிரியர் துரைக்கண்ணன் படத்திறப்பு

    ஆசிரியர் துரைக்கண்ணன் படத்திறப்பு விழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 58

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 58

    -மேகலா இராமமூர்த்தி

    இந்திரசித்தனின் பிரமாத்திரத்தால் தாக்குண்டு இலக்குவன் உள்ளிட்ட அனைவரும் உயிரற்ற உடல்களாய்த் தரையில் கிடப்பதைக் கண்டு மராமரம்போல் மண்ணில் சாய்ந்தான் இராமன்.

    போர்க்கள நிகழ்வுகளைக் கண்ட இராவணனின் தூதுவர்கள் அவனிடம் விரைந்துசென்று ”நின்சேய் விட்ட நெடுஞ்சரத்தால் படைவீரர்களும், இன்னுயிரனைய இளவல் இலக்குவனும் இறந்ததைக் கண்டு பெருந்துயருற்று இராமனும் மடிந்தான்; ஆதலால் முடிந்தது உன் பகை” என்றனர்.

    …..நின்  மைந்தன்தன்  நெடுஞ் சரத்தால்
     துணைவர் எல்லாம்  நிலம்சேர
    பின்வந்தவனும் முன்மடிந்த
    பிழையை நோக்கி பெருந்துயரால்
    முன்வந்தவனும் முடிந்தான் உன்
    பகைபோய் முடிந்தது என மொழிந்தார். (
    கம்ப: பிரமாத்திரப் படலம் – 8670)

    இராமன்   போர்க்களத்தில் நினைவிழந்து  கிடந்ததனை அவன் மரணமடைந்து விட்டதாய்த் தவறாகக் கருதிய தூதுவர் இராவணனுக்கு இங்ஙனம் அறிவிக்கின்றனர். அதுகேட்டு நனிமகிழ்ந்த இராவணன், வெற்றிவிழாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தான்.

    இராவணன் கட்டளைப்படி மருத்தன் எனும் அரக்கன் களத்தில் மாய்ந்துகிடந்த அரக்கர் சேனையைக் கடலில் எறிந்தான்; அதன் நோக்கம் அரக்கர் யாருமே களத்தில் மாயவில்லை எனும் தோற்றத்தைக் காண்போர்க்கு உண்டாக்குவதே!

    அடுத்ததாக இராம இலக்குவர் போர்க்களத்தில் மாண்டதைச் சீதைக்குக் காட்டவிரும்பிய இராவணன், அரக்க மகளிரை அழைத்து, ”சீதையைப் புட்பக விமானத்தில் ஏற்றி இராம இலக்குவரின் கதியை அவள் காணுமாறு காட்டுவீர்!” என்று ஏவ, அவர்களும் நடைபிணமாய் வாழ்ந்துவந்த நங்கை சீதையை விமானத்தில் ஏற்றிப் போர்க்களத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    தரையில் வீழ்ந்துகிடந்த தன் கணவன் உருவைக் கண்டாள் சீதை; விடத்தை உண்டதுபோல் உடலும் உள்ளமும் ஓய்ந்தாள்; குளிர்ந்த தாமரைப் பூவொன்று தழலில் வீழ்ந்ததுபோல் பெருந்துயரில் தீய்ந்தாள். இலக்குவனின் உயிரற்ற உடலைக் கண்டவள் மேலும் மனம்நொந்து அரற்றினாள். முடிவில் தானும் இராமன்மீது வீழ்ந்து இறக்க முடிவுசெய்து எழுந்தவளைத் தடுத்த திரிசடை, சீதையை ஆதரவாய்த் தழுவிக்கொண்டு,

    ”அன்னம் போன்ற அன்னையே! மாரீசனாகிய மாய மானை முன்பு விடுத்த தன்மையும், மாயா சனகனை உண்டாக்கிய தன்மையும், சென்றநாளில் இலக்குவன் முதலானோரைப் பிணித்த நாகபாசம் அழிந்துபோன தன்மையும் எண்ணிப் பார்! நன்னெறியில் செல்லாதவர்களாகிய இந்த அரக்கரின் மாயச் செயல்களை அறியாது நீ மாள நினைக்கின்றாயோ?”

    மாயமான் விடுத்தவாறும் சனகனை வகுத்தவாறும்
    போயநாள் நாகபாசம் பிணித்தது போனவாறும்
    நீஅமா நினையாய் மாள நினைதியோ நெறி இலாரால்
    ஆயமா மாயம் ஒன்றும் அறிந்திலை அன்னம் அன்னாய்!
    (கம்ப: சீதை களம்காண் படலம் – 8693)

    ”கவனித்துப் பார்! இராமனின் திருமேனியில் அம்பு ஒன்றும் அழுந்தவில்லை; இலக்குவனின் முகம் ஊழியிறுதியில் தோன்றும் சூரியனைப் போல் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றது! எனவே, அவ்விருவருக்கும் அழிவில்லை என்பதை உணர்ந்துகொள்! வீணில் வருந்தாதே!” என்று தேற்றினாள். பெற்ற தாயினும் உற்றதுணையினளாய்த் தனக்கு விளங்கிவந்த திரிசடையின் சொற்களைக் கேட்டு உள்ளம் தேறினாள் சீதை. புட்பக விமானம் மீண்டும் அசோக வனத்திற்குத் திரும்பியது.

    இராமன் ஆணைப்படி படையினர்க்கு உணவுகொண்டுவரச் சென்ற வீடணன், தான் கொணர்ந்த உணவைப் பாசறையில் வைத்துவிட்டுப் போர்க்களத்துக்குத் திரும்பினான். படையினர் களத்திலே உயிரற்று வீழ்ந்துகிடக்கும் காட்சிகண்டு மூர்ச்சையானவன், சற்றுநேரத்தில் மூர்ச்சைதெளிந்து எழுந்து இராமனைத் தேடிச்சென்றான்; இராமன் இலக்குவன்மீது மயங்கிச் சாய்ந்துகிடப்பதைக் கண்டான். அவன் மேனியில் அம்பின் வடுவில்லை என்பதனால் அவன் இறக்கவில்லை என்றுணர்ந்து, வேறு யாரும் உயிருடன் உள்ளனரா எனத் தேடிச் சென்றான். இறந்த யானைக் குவியல்களின்மேல் அனுமன் வாய்மடித்துக் கைகளை முறுக்கிய நிலையில் கிடப்பதைக் கண்ணுற்றான். புண்ணுற்ற அவன் மேனியிலிருந்த அம்புகளை மெல்லப் பிடுங்கி அவன் முகத்தில் குளிர்ந்தநீரைத் தெளித்தான்; உடன் கண்விழித்தான் அனுமன்! விழித்தவுடன் இராமனின் நிலையை வீடணனிடம் உசாவி அறிந்தான்.

    அதனைத் தொடர்ந்து, ”சாம்பன் (ஜாம்பவான் – கரடிவேந்தன்) எங்கே?” என்று வீடணனிடம் அனுமன் விசாரிக்க, ”அவன் உயிருடன் உள்ளானோ இறந்துபட்டானோ யானறியேன்” என வருத்தத்தோடு மொழிந்தான் வீடணன். ”அவனுக்கு அழிவில்லை; அவன் சிரஞ்சீவியாய் வாழும் பேறுபெற்றவன்; அவனைச் சென்று காண்போம்” என்று அனுமன் கூறவே அவனைத் தேடிச் சென்றனர் இருவரும்.

    மூப்பினாலும் புண்பட்ட வலியினாலும் சாய்ந்துகிடந்த சாம்பன், காலடி ஓசையால் வீரர் இருவர் அருகில் வருவதை அறிந்தான். அவர்கள் வீடணனும் அனுமனும் என்றறிந்து பூரித்தான். படையினரும் இராம இலக்குவரும் இருக்கும் நிலையறிந்த சாம்பன், ”மேருமலையையும் அதற்கு அப்பால் உள்ள நீலகிரி மலையையும் கடந்து சென்றால் மருந்துமலை ஒன்று உள்ளது. இறந்தவரை உயிர்பெறச் செய்யும் மருந்து ஒன்றும்; உடம்பு வெவ்வேறு பிளவுகளாய்க் கிழிந்தாலும் முன்புபோல் பொருந்தச் செய்யும் மருந்து ஒன்றும்; (உடம்பில் தைத்திருக்கும்) படைக்கலங்களை வெளிப்படுத்தும் மருந்து ஒன்றும்; பண்டைய உருவை மீட்டளிக்கும் மருந்து ஒன்றும் அங்குள்ளன எனச்சொல்லி அவற்றின் அடையாளங்களையும் எடுத்துரைத்து அவற்றை விரைவில் கொணர்வாய்” என்று அனுமனைப் பணித்தான். [இந்த மலையைத்தான் சஞ்சீவி மலை என்றழைப்பர்.]

    மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்
          உடல்வேறு வகிர்களாகக்
    கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும்
         படைக்கலங்கள் கிளைப்பது ஒன்றும்
    மீண்டேயும் தம்உருவை அருளுவது ஓர்மெய்ம்
         மருந்தும் உளநீ வீர
    ஆண்டுஏகி கொணர்தி என அடையாளத்தொடும்
         உரைத்தான் அறிவின் மிக்கான். (கம்ப: மருத்துமலைப் படலம் – 8729)

    மாண்டாரை   உய்விக்கும் மருந்து, மிருதசஞ்சீவினீ; உடற்கிழிவைப்
    பொருந்துவிப்பது,  ’சந்தானகரணீ;   படைக்கலங்கள் கிளைப்பது, விசல்யகரணீ; மீண்டும் தம் உருவை அருளுவது சாவர்ண்ய  கரணீ என்று மூலிகைகளின் பெயர்களை அளிக்கின்றது முதனூலாகிய வான்மீகம்.

    பேருருவெடுத்து மருந்துமலையை அடைந்த அனுமன், ”இங்கிருந்துகொண்டு சாம்பன் சொன்ன அடையாளப்படி, மூலிகைகளை ஆராயத் தொடங்கினால் நேரமாகும்; எனவே, இந்த மருந்துமலையை அப்படியே பெயர்த்துச் செல்வோம்” என்று எண்ணமிட்டவனாய் அதனைப் பெயர்த்தெடுத்துக் கொண்டு வான்வழியே விரைந்துசென்றான் இலங்கைப் போர்க்களம் நோக்கி!

    இதற்கிடையில் மயக்கம் தெளிந்து எழுந்த இராமன் தன்னருகில் அமர்ந்திருந்த சாம்பனையும் வீடணனையும் கண்டு நிகழ்ந்தவற்றுக்கு வருந்திக்கொண்டிருந்தான். அப்போது சாம்பன் இராமனிடம், ”மூலிகைகளைக் கொணர வடதிசைக்கண் அனுமன் சென்றுள்ளான்; அவன் அம்மூலிகைகளைக் கொண்டுவந்ததும் களத்தில் மாண்டோரெல்லாம் மீண்டெழுவர், வருந்தற்க!” என்று இராமனுக்குத் தேறுதல் உரைத்திருந்த வேளையில், பேர்த்தெடுத்த மருந்துமலையோடு வானில் ஆர்த்தபடி அவ்விடம் வந்துசேர்ந்தான் அனுமன். அந்த மருந்துமலையின் காற்றுப்பட்டதும் களத்தில் பட்டோரெல்லாம் பட்டென்று கண்விழித்தனர். சாம்பன் இயம்பியபடி மீண்டும் மருந்துமலையை அதனையெடுத்த இடத்திலேயே வைப்பதற்குச் சென்றான் அஞ்சனை மைந்தன்.

    இடைப்பிறவரலாய் இன்னொரு செய்தி: இந்தச் சஞ்சீவி மலையையும் அதிலுள்ள மூலிகைகளைச் சாப்பிடும் நாயகனும் நாயகியும் (குப்பன் – வஞ்சி) என்ன பயன் கண்டார்கள் என்பதையும் மையமாக வைத்துப் பாவேந்தர் பாரதிதாசன் ’சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ எனும் காப்பியம் ஒன்றைப் படைத்துள்ளார். பகுத்தறிவுக் கருத்துக்களைத் தமிழ்ச்சுவையோடு தாங்கிநிற்கும் அக்காப்பியமும் படித்தற்குரிய ஒன்று!

    இலங்கையில் இராவணன் அரண்மனை விழாக்கோலம் பூண்டிருந்தது. ”அயன்படை (பிரமாத்திரம்) பயன் நல்கியது; அதனால் பகையழிந்தது” என்றெண்ணிய இராவணன், தேவலோக மாதர்களின் ஆட்டத்தில் திளைந்திருந்தான். அப்போது வானரர்களின் ஆரவாரவொலியும் இராம இலக்குவரின் வில்நாணொலியும் கேட்கவே, நிகழ்ந்தவற்றை ஒற்றர் வாயிலாய் அறிந்த இராவணன் மகிழ்ச்சியைத் தொலைத்தவனாய் ஆலோசனை மண்டபம் அடைந்தான்.

    இராவணன் ஆலோசனை மண்டபம் சென்றதறிந்த இந்திரசித்தனும் மகோதரனும் பாட்டன் மாலியவானும் ஏனைய அரசியல் சுற்றத்தாரும் அங்கே வந்தனர்; அவர்களிடம் தன் துன்பத்தை விளக்கினான் இராவணன்.

    ”களத்தில்பட்ட அரக்கர்குழாத்தைத் தீய எண்ணத்தோடு நீ கடலில் எறியச்சொல்லாமல் இருந்திருந்தால் அவர்களும் மருந்துமலையின் உதவியால் பிழைத்திருப்பர்; பிரமாத்திரமே பயனற்றுப் போனபின் இனி எந்த அத்திரம் நமக்குப் பயனளிக்கப் போகின்றது?” என்றுரைத்த பாட்டன் மாலியவானைச் சினந்து நோக்கிய இராவணன்,

    ”என் மகனென்ன? மற்றவர்கள் என்ன? இவ்வாறு அச்சங்கொண்டவர்களாய் உயிர்வாழ்க்கையை விரும்பிய நீங்கள் பிழைத்துப் போங்கள்! நாளை, ஊழிக்காலத்து வடவைத் தீயைப்போல் பொங்கி, எனது சேனையை அழித்த அம்மனிதரோடு, அக்குரங்கினையும் (அனுமன்) சேர்த்தொழிப்பேன்” என்றான் வெந்திறல் அரக்க வேந்தன் இராவணன்.

    மைந்தன்என் மற்றையோர்என் அஞ்சினிர் வாழ்வு வேட்டிர்
    உய்ந்துநீர் போமின் நாளை ஊழிவெந் தீயின் ஓங்கி
    சிந்திய மனித்தரோடு அக் குரங்கினைத் தீர்ப்பென் என்றான்
    வெந்திறல் அரக்கர் வேந்தன்…(கம்ப: மாயாசீதைப் படலம் – 8849)

    அப்போது இந்திரசித்தன் எழுந்து, ”ஐய! பிரமனின் அத்திரத்தை நான் இராமனையும் கொன்றிடுக என்று சொல்லியே விடுத்தேன்! ஆனால், அவ் அத்திரம் அவனைத் தீண்டாது மீண்டது வியப்புக்குரியது. ஆதலால், அவன் மானிடனோ வானவனோ முனிவனோ அல்லன்; வீடணன் ஆய்ந்துசொன்னதுபோல் ’யான் எனது’ எனும் செருக்கறுத்த ஒப்பற்ற ஒருவன் ஆவான் என்பது தெளிவு” என்று இராமனின் இயல்பை இராவணனுக்கு உணர்த்திய இந்திரசித்தன், ”அவ்வுண்மை ஒருபுறம் இருக்கட்டும்! நீ வருந்தாதே! நான் நிகும்பலை எனும் கோயிலை விரைவில் அடைந்து வேள்வி இயற்றினால் உன் துன்பம் தீரும்!” என்றான்.

    அதுகேட்ட இராவணன், ”நல்லது! நிகும்பலையில் வேள்வி செய்க!” என்று உடனே தன் சம்மதத்தை இந்திரசித்தனிடம் தெரிவித்தான். ”செய்யலாம்! ஆனால் உன் தம்பி வீடணன் அந்த வேள்வி பற்றிய இரகசியத்தை இராம இலக்குவரிடம் கூறி அது முற்றுப்பெறாவண்ணம் தடுத்துவிட்டால் என்ன செய்வது?” என்று இராவணனைக் கேட்டான் இந்திரசித்தன். ”அவர்கள் அதனைத் தடுக்காவண்ணம் செய்வதற்கு உபாயம் ஏதுமில்லையா?” என்று இந்திரசித்தனை இராவணன் வினவ, சற்றுச் சிந்தித்த இந்திரசித்தன்,

    ”ஓர் உபாயம் உள்ளது! சீதையைப்போல் மாய உருவம் செய்து அவளை அனுமன் முன்பு கொண்டுபோய்க் கொன்றுவிட்டு, அயோத்திக்குப் போய் அங்குளோரையும் கொல்வேன் என்று அவனிடம் சொல்லி அயோத்தி அமைந்துள்ள வடக்குத் திசைநோக்கிச் செல்வதுபோல் சென்று நிகும்பலை புகுந்து என் வேள்வியை முடிப்பேன்; நின் பகைவரை வெல்வேன்” என்றான்.

    ”நல்லது; அவ்வாறே செய்!” என்றான் இராவணன். அதைத் தொடர்ந்து மாயா சீதை உருவத்தைச் சமைக்கச் செய்த இந்திரசித்தன், அவள் கூந்தலைப் பற்றி இழுத்துக்கொண்டு கோட்டைக்கு வெளியே வந்தான். மருந்துமலையை அதன் இருப்பிடத்தில் வைத்துவிட்டு ஆரவாரித்தபடித் திரும்பிவந்துகொண்டிருந்த அனுமனின் எதிரேபோய் நின்ற அவன், ”இப்போது சீதையை நான் கொல்லப்போகிறேன்” என்று கர்ச்சிக்கவே, இந்திரசித்தன் பற்றியிருப்பது உண்மையான சீதையே என நினைத்து அச்சமடைந்த அனுமன், “பெண்கொலை புரிதல் பெரும்பழியாகும்; இப்புன்செயல் உன் புகழினைக் கெடுக்கும்” என்றான் நடுக்கத்தோடு!

    அதனைப் பொருட்படுத்தாத இந்திரசித்தன் அனுமனிடம், “இவளைக் கொன்றுவிட்டு அயோத்திமேற் செல்வேன்; இராமன் தம்பியரையும் தாயரையும் கொல்வேன்” என்றுகூறி, மாயா சீதையை அனுமன் கண்முன்னர் வாளால் வெட்டிக்கொன்று மாய்த்துவிட்டுத் தன் சேனையோடு அயோத்தி செல்வதாய்ப் போக்குக் காட்டிவிட்டு, அத்திசையிலிருந்து மாறி நிகும்பலை புகுந்தான்.

    இங்கே அனுமனோ சீதையின் மறைவைத் தாளாது கண்ணீர் பெருக்கினான்; இராமனிடம் சென்று அவன் தாள்களில் வீழ்ந்து புரண்டழுதான். செய்தியறிந்த இராமனும் இலக்குவரும் மெய்சோர்ந்து மயங்கினர். அப்போது அனுமன் இந்திரசித்தன் இராமனின் தம்பியரையும் தாயரையும் அழிக்கவேண்டி அயோத்திக்குச் சென்றிருக்கும் செய்தியைக் கூறவே உணர்வுமீண்ட இராமன், உடனே அயோத்திக்குச் சென்று அவ் அழிவைத் தடுக்க விரும்பினான். அனுமனின் தோள்களில் ஏறிக்கொண்டு இராமனும் இலக்குவனும் அயோத்திநோக்கிப் புறப்பட எத்தனித்த வேளையில் அருகிலிருந்த வீடணன், ”ஐயனே! சீதையை இந்திரசித்தன் கொன்றசெயல் மாயம் என்று ஐயுறுகின்றேன்! பத்தினியாகிய சீதையை அப்பாதகன் தீண்டிக் கொன்றிருப்பானேல் மூவுலகும் வெந்து சாம்பலாகியிருக்கும்; அத்தோடு அவன் அயோத்திக்குப் போனான் என்ற வார்த்தையும் அதியசமாயிருக்கின்றது; அவை உண்மைதானா என்பதைச் சிறிது நேரத்தில் தெரிந்துகொள்ளலாம்” என்றான்.

    பத்தினி தன்னைத் தீண்டிப் பாதகன் படுத்தபோது
    முத்திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே
    அத்திறம் ஆனதேனும் அயோத்திமேல் போன வார்த்தை
    சித்திரம் இதனை எல்லாம் தெரியலாம் சிறிது போழ்தின்.
    (கம்ப: மாயா சீதைப் படலம் – 8926)

    தொடர்ந்தவன், ”ஐய! நான் இமைப்பொழுதில் அசோகவனத்துக்குச் சென்று சீதையின் நிலையறிந்து வருவேன்; பின்பு என்ன செய்வது என்று முடிவுசெய்வோம்” என்றான்.

    ”நீ சொன்னது பொருத்தமான யோசனைதான் வீடணா!” என்று இராமன் அதனை ஆமோதிக்கவே, தன் உருவை வண்டுபோல் மாற்றிக்கொண்ட வீடணன், அசோகவனம் நோக்கிப் பறந்துசென்றான் சீதையைக் கண்டுவர!

    [தொடரும்]

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 107

    சேக்கிழார் பாடல் நயம் – 107

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    யானையும், முத்தும்  சிறந்த   மலையாள நாட்டில் தோன்றிய  விறன்மிண்டர் சிவத்தலங்கள் தோறும் சென்று வழிபாடு செய்தவண்ணம் திருவாரூருக்கு  வந்தார். அங்கே அடியார்கள்  பலரும் வழிபாடு செய்யும் தேவாசிரய  மண்டபத்திலே அவர்களொடு  கலந்து மகிழ்ந்தார்.

    அவர் அடியார்களுடன் இணைந்து மகிழ்ந்திருக்கும் போது, அம்மண்ட பத்தின் வழியே சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவனையே  காணும் குறிக்கோளுடன் வழியில் இருந்த சிவனடியார்களைக்  காணாமல் சென்றார்.

    அவ்வாறு அடியாரை வணங்காமல் சென்ற சுந்தரரை, விறன்மிண்டர்  ‘’அடியாரைப்  பேணாமல் உள்ளே சென்றவர்  யாரானாலும் சிவபெருமானுக்குப் புறம்பானவரே !’’ என்று விலக்கி வைத்தார். பின்னர் இறைவனே  சுந்தரரிடம் அடியாரைப் பேணி வணங்காத செயல் அடியார் நெறிக்குப் புறம்பானது. என்று உணர்த்தினார், இவ்வாறு இறைவன் திருவருளைப் பெற்ற  விறண்மிண்டரின் உறுதியான சிவப்பற்றினை வேறு யார் பெறுவார்கள் என்ற சிறப்பைப் பெற்றார் .  இதனைச்  சேக்கிழார் ,  புகழ்ந்து பாடினார்.

    அருட்டிரு நிறைந்த பெருமை எந்நாளும் விளங்குகின்ற தேவாசிரிய மண்டபத்திற் பொலிந்து பொருந்தி வீற்றிருக்கின்ற சிவனடியார்களைத் தொழுது, அவர்கள்பால் வந்து அணையாமல் ஒரு புறமாக ஒதுங்கிச் செல்லும் வன்றொண்டன் புறகு என்று உரைப்பதற்குச் சிவபெருமானருளிற் பெருகுகின்ற பெரிய பேறு பெற்றார் இந்நாயனார். அதுவேயுமன்றி மேலும் பெறுதற்கமைந்து நின்றாரானார்,  மேலும் பாடினார் .

    சேணார்  மேருச்   சிலைவளைத்த  சிவனாரடியார்  திருக்கூட்டம்
    பேணாதேகும்   ஊரனுக்கும் , ‘’பிரானாந்தன்மைப் பிறைசூடிப்
    பூணாரரவம்  புனைந்தார்க்கும்  புறகு!’’ என்றுரைப்ப மற்றவர்பால்
    கோணா வருளைப்  பெற்றார்  மாற்றினியார் பெருமை  கூறுவார்

    என்று பாடினார். இதன் பொருள்

    சேணிடையிலும் உயர்ந்து நிறைந்த மேருமலையை வில்லாகவளைத்த சிவபெருமானடியார் திருக்கூட்டம் பேணாது செல்லும் நம்பியாரூரருக்கும் அவரை ஆண்ட தலைவராந் தன்மையுடைய, பிறையைச் சிரத்திற் சூடிப் பாம்பை அணியாக அணிந்த பெருமானுக்கும் புறகு என்றுரைப்ப மற்ற அவர்களிடமே கோணாத அருளைப் பெற்றார். இதனின் வேறு பெருமையும் யாவர் சொல்ல வல்லார்?

    என்பதாகும்.. “அகில காரணர் தாள்பணி வார்கடாம், அகில லோகமு மாளற்குரியர்“ ஆதலால் சிவப்பிரானைப் பேணி வணங்கும் விறன்மிண்டருக்குத் தலைமைப்பேறு கிட்டியது. இவ்வாறு அடியாரையும் ஆண்டவனையுமே புறகு என்று உரைக்கும் வலிமை பெற்றார் அவர். இவர் அவ்வாறு சினம் கொண்டதும் இறைவனையும் புறகு எனது தள்ளியதும் இறைவனின் நாடகமே யாகும்

    இறைவரும் உலகம் உய்யத்திருத்தொண்டத்தொகையினைத் தோற்றுவிப்பதும், நம்பிகளைத் திருக்கூட்டத்தினுட் கூட்டுவிப்பதும் ஆகிய இரண்டினையும் தாமே செய்வதினும் இந்நாயனாரைக் கொண்டு செய்விப்பது தக்கதென்று திருவுளம் பற்றி இவ்வாறு இவர் சொல்லுமாறு செய்தனர்     என்று உரையாசிரியர்  கூறுகிறார்.

    விறண்மிண்டருடைய செயலால் , அடியார் பெருமையை சுந்தரர் அறிந்து கொண்டார். இறைவனே சுந்தரருக்கு, ‘’தில்லைவாழ்அந்தணர்தம்  அடியார்க்கும்  மடியேன்’’ என்று அடியெடுத்துக்  கொடுத்தார். பின்னர் அவரைத் தொடர்ந்து பலரும் திருத்தொண்டர் பற்றிப் பாடினர். சேக்கிழார்  பெருந்தகையும் அவற்றை ஒட்டியே இப்புராணம் பாடினார்.  இதனால் விறன்மிண்டர் எஞ்ஞான்றும் எவ்விடத்திலும் வளையாத திருவருளைப் பெற்றார் என்பதைச் சேக்கிழார் ‘’;கோணா அருளை பெற்றார் ‘’ என்ற தொடரால் குறிக்கிறார்.

    இப்பாடல் விறன்மிண்டர் சினத்தால்  அவர்  பெருமை,  இறைவன் பெருமை, சுந்தரர் பெருமை, திருத்தொண்டர்  திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பி  பெருமை, சேக்கிழாரின் பெருமை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய சிறப்புடையதாயிற்று.

    Share
  • சேஷன் சம்மான் விருது அறிவிப்பு

    சேஷன் சம்மான் விருது அறிவிப்பு

    வணக்கம்.

    இன்று என் தந்தையாரின் நினைவு நாள். நவம்பர் 22, 2010 அவர் தன் அம்பிகையோடு இருக்கச் சென்று விட்டார்.

    என் குருநாதரின் அறிவுரைப்படி, அவருடைய பிறந்த நாளான பிப்ரவரி 14 அன்று, சில பெருந்தகையாளர்க்கு அவர் பெயரால் “சேஷன் சம்மான்” என்னும் விருதை நாங்கள் வழங்கி வருகிறோம்.

    விருதாளர்கள் பற்றிய அறிவைப்பை அவர் நினைவு நாளில் நான் தெரிவித்து வருகிறேன்.

    அவருடைய 100 ஆவது பிறந்த நாளான 14.02.2023ல் “சேஷன் சம்மான்” பெறப் போகிறவர்கள் இருவர். அந்த இருவருமே தந்தையாரின் மனத்துக்கு மிகவும் பிடித்தவர்கள்.

    1. பழம்பெரும் நாடகக் கலைஞர் திரு. காத்தாடி ராமமூர்த்தி அவர்கள்
    2. புகழ்பெற்ற பேச்சாளர், எழுத்தாளர் டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள்

    இந்த விருதை ஏற்க இசைந்த அந்த இருவருக்கும் எங்கள் குடும்பத்தாரின் சார்பில் என் நன்றி.

    விழா, எப்போதும் போல சென்னை மயிலாப்பூர் லஸ் முனைக்கு அருகிலுள்ள ஆர்கே கன்வென்ஷன் செண்டரில் நடைபெறும்.

    தேதியை இப்போதே குறித்துக் கொள்ளுங்கள்: 14.2.2023 – மாலை 5.30 மணி.

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • அறிஞர் அண்ணா உரை | நாட்டரசன்கோட்டை பெண்கள் பள்ளி

    அறிஞர் அண்ணா உரை | நாட்டரசன்கோட்டை பெண்கள் பள்ளி

    நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற பெண்கள் பள்ளித் திறப்பு விழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழறிஞர் ஒளவை நடராசன் மறைந்தார்

    தமிழறிஞர் ஒளவை நடராசன் மறைந்தார்

    தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், சிறந்த சொற்பொழிவாளர், தமிழறிஞர் ஒளவை நடராசன், 2022 நவம்பர் 21 அன்று சென்னையில் மறைந்தார். இது குறித்து அவர் மகன்கள் கண்ணன், அருள், பரதன் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள செய்தி:

    எந்தையும் இலமே !

    ஆக்கமும் – ஊக்கமுமாக இருந்த எந்தையார் வையம் போற்றும் பத்மஸ்ரீ முனைவர்
    ஒளவை நடராசன். ( 24 – 4 – 1936 ) எங்களை தத்தளிக்க விட்டு (21.11.2022)
    வானில் கலந்தார் ! இனி என்ன செய்வோம்!

    எந்தையே !
    நந்தா விளக்கனைய நாயகனே !!
    உங்கள் பிரிவு தாங்கொணாப் பிரிவாகும் …

    எப்பாரும் எப்பதமும் எங்ஙனமும்
    நாங்கள் சென்று உங்கள்
    திருப்பெயரை நவின்றே வளர்ந்தோம் – வளர்வோம் !

    அப்பா – நாங்கள் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

    ஆற்றொணாத் துயருடன்
    கண்ணன்
    அருள்
    பரதன்.
    21.11.2022 திங்கட்கிழமை.
    மாலை 7.50 மணிக்கு

    ஒளவை நடராசன் மறைவுக்கு அண்ணாகண்ணன் இரங்கல்:

    மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று எங்கே சென்றது? அறிஞர் ஒளவை நடராசன், அழகுத் தமிழால், மதுர மொழியால், நயம் கூட்டிய நாவரசர். அலட்டாமல், அதிர்ந்து பேசாமல், அரங்கை நிமிர வைத்த அன்பாளர். மக்கள் மனங்களை ஆண்ட மாண்பாளர். ராஜா ராஜா என என்னையும் இளையோர் பலரையும் வாயார அழைத்தவர். என் மேல் அன்பைப் பொழிந்தவர். ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி.

    ஒளவை நடராசன் அவர்களின் மறைவுக்கு வல்லமை மின்னிதழ், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

    Share
  • Aroor Das – The Man with Mighty Pen, No More

    Aroor Das – The Man with Mighty Pen, No More

    Baskar Seshadri

    Famed Dialogue Writer and Story Man Aroor Das Passed away this evening (20th Nov) at T Nagar.

    He was ailing for some time and the end came this evening at 6. 40 pm Hailing from Thiruvarur he settled in Chennai and became friend with Gemini Ganesan who Referred him to SivajI Ganesan who introduced him in Pasamalar in 1961.

    And from there on there was no Turn back. Such is the Power of His Pen and many heroes approached him to pen dialogues for their Project and Dass was glad to accept the challenge and did his best.

    Later when Tamil cinema changed hands to many newcomers,

    Aroor was still able to match his standard. One such Film was Vidhi. A sujatha starrer film Produced by Sujatha’s Balaji casting Mohan and Poornima Jayaram in 1981 proved this.

    Dass took the challenge and penned dialogue after a break in 1967 when he Wrote for Thangai. The film was a super duper success.

    Aroor Das was 91 and Lives in Nathamuni Street, T Nagar Near Murugan Idli. Who can forget the sharp, Punch, emotional and lovable dialogue of Paasa Malar?

    Good Bye Daas Iyya. Pranams.

    Share
  • அறிஞர் அண்ணா உரை | அரசுப் பணியாளர் சங்க விழா

    அறிஞர் அண்ணா உரை | அரசுப் பணியாளர் சங்க விழா

    அரசிதழில் பதிவு பெறாத அரசுப் பணியாளர் சங்க விழாவில், 1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(426)

    குறளின் கதிர்களாய்…(426)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(426)

    செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
    டெய்த வுணர்ந்து செயல்.

    -திருக்குறள் – 516 (தெரிந்து வினையாடல் )

    புதுக் கவிதையில்

    செய்யும் செயலொன்றைச்
    செய்கிறவனின் தகுதியைச்;
    செவ்வனே அறிந்து,
    செயலின் தன்மையை நன்கறிந்து,
    செயல்பட தக்க காலத்தோடு
    பொருந்துமாறு எண்ணிச்
    செயல்பட விடவேண்டும்…!

    குறும்பாவில்

    செயலொன்றைச் செய்பவனை அவனது
    தகுதியறிந்து செயலின் தன்மையறிந்து பொருந்தும்
    காலமறிந்து செயல்பட விடவேண்டும்…!

    மரபுக் கவிதையில்

    செயல தொன்றைச் செய்யுமுன்னே
    செய்யு மொருவன் தகுதியுடன்
    செயலின் தன்மை யதனையுமே
    செம்மை யாக அறிந்தபின்னே
    பயனைப் பெறவே தக்கதாகப்
    பணியின் காலம் தனையறிந்தே
    செயலைத் தொடங்கி நன்முறையில்
    செய்ய அவனை விடுவாயே…!

    லிமரைக்கூ

    செய்பவன் தகுதி யுடனே
    செயலின் தன்மை ஆய்ந்தறிந்தே காலமறிந்தவனைச்
    செயவிடல் நமது கடனே…!

    கிராமிய பாணியில்

    செயல்படணும் செயல்படணும்
    தெரிஞ்சி செயல்படணும்,
    எல்லாத்தயும் நல்லமொறயில
    தெரிஞ்சி செயல்படணும்..

    ஓருசெயலச் செய்யப்போறவன்
    தகுதிய நல்லாத் தெரிஞ்சிக்கிட்டு,
    செயலோட தன்மய
    ஆராஞ்சறிஞ்ச பெறகு,
    செய்யப்போறது
    பொருத்மான காலந்தானாங்கிறத
    கண்டறிஞ்சி அப்புறமா
    அவனச் செயல்பட உடணும்..

    அதால
    செயல்படணும் செயல்படணும்
    தெரிஞ்சி செயல்படணும்,
    எல்லாத்தயும் நல்லமொறயில
    தெரிஞ்சி செயல்படணும்…!

    Share
  • நாசாவின் ராக்கெட் ஆர்டிமிஸ்-1 நிலவை ஆராய ஏவப்பட்டுள்ளது

    நாசாவின் ராக்கெட் ஆர்டிமிஸ்-1 நிலவை ஆராய ஏவப்பட்டுள்ளது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    https://appel.nasa.gov/2020/11/23/nasa-publishes-plan-for-lunar-exploration/

    2022 நவம்பர் 16 ஆம் தேதி பிளாரிடா கென்னடி ஏவு தளத்தில் நாசா & ஈசா விஞ்ஞானிகள் 100 மீடர் [ 322 அடி ] உயரமுள்ள ஆர்டிமிஸ் -1 ராக்கெட், ஓரியன் விண்சிமிழை ஏந்திக் கொண்டு, மீண்டும் நிலவை நோக்கிச் சென்று ஆராய ஏவப்பட்டுள்ளது. அந்த விண்வெளி விண்சிமிழ் ஒரியன், நிலவை நெருங்கி 4000 மைல் தூரத்தில் ஆராய்ச்சிகள் அடுத்து நடத்த தகுதியான ஓரிடத்தைத் தேடுவது, விண்வெளி நிலா நிலையம் ஒன்றை நிறுவி நிரந்தரமாய்ச் சுற்றி வருவது, அந்த நிலையம் விண்வெளிப் பயணிகளுக்கு, விமானிகளுக்கு விடுதியாய் அமைப்பது போன்ற எதிர்காலத் திட்டங்களுக்கு வசதியாய் இருக்கும்.

    முதல் ஆர்டிமிஸ் ஓரியன் விண்சிமிழ் விமானிகள் இல்லாமல், நிலவை நெருங்கி இரண்டு வாரங்கள் ஆய்வுகள் செய்து, தானாய் பூமிக்கு மீளும்.

    ஆர்ட்மிஸ் 85 mph வேகத்தில் புயல் அடிப்பினும் எதிர்த்துச் செல்லும் ஆற்றல் உள்ளது. ஓரியன் விண்சிமிழ் 450,000 கி.மீடர் [280,000 மைல்] தூரமுள்ள நிலவை நெருங்க 14 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நவம்பர் 16 இல் ஏவப்பட்ட ஓரியன் மின்சிமிழ், ஆய்வுகள் நடத்தி டிசம்பர் 11 தேதி பசிபிக் கடலில் பாராசூட் குடையில் வந்திறங்கும். 50 ஆண்டுகட்கு முன், மனிதர் இயக்கும் அப்பொல்லோ -11 விண்சிமிழ் நிலவைச் சுற்றி அதில் இறங்கியது.

    ஓரியன் பூமிக்கு மீளும் போது 25,000 mph வேகத்தில் 5000 டிகிரி F உஷ்ணச் சூழ்வெளி கடந்து கடலில் வீழும். 2023 இல் ஆர்டிமிஸ் – II விமானிகள் இயக்கும் பயணம் 10 நாட்கள் நீடிக்கும். மனிதர் நால்வர் செல்லும் ஆர்டிமிஸ் -III நிலவில் கால்வைக்கும் திட்டம் 2024 இல் நிறைவேறும்.

    நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையம் அமைக்க, ஏவப் போகும் அசுர ராக்கெட் ஆர்டிமிஸ் -1

    NASA’s Space Launch System rocket with the Orion spacecraft aboard is seen atop a mobile launcher at Launch Pad 39B as preparations for launch continue, Friday, August 26, 2022, at NASA’s Kennedy Space Center in Florida.

    Artemis-1 is a mission like no other—a long-duration trip to the Moon, way past it and back again. The first in an increasingly complex series of missions, Artemis I will test NASA’s new heavy-lift rocket, the Space Launch System (SLS) and Orion spacecraft as an integrated system prior to crewed flights to the Moon.

    2022 ஆகஸ்டு 28 ஆம் தேதி நாசா நிலவுக்கு ஏவும் அசுர ராக்கெட் ஆர்டிமிஸ் -1

    50 ஆண்டுகட்குப் பிறகு நாசா புது வலுமிக்க ராக்கெட் ஆர்டிமிஸ்-1 தயார் செய்து, மீண்டும் நிலவுக்குப் பயணம் செய்யப் போகிறது. 1969-1972 ஆண்டு பொறிநுணுக்கமான அப்பொல்லோ -11 ராக்கெட் [Saturn V in 1973. பயன் Orion Capsule] படுத்தப்பட்டு முதன் முதலில் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் கருநிலவில் 1969 ஜூலையில் தனது பூதத் தடம் வைத்து வரலாற்று முதன்மை பெற்றார். இரண்டாம் தடவை நிலவுக்குச் செல்லும் நாசா இம்முறை நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையத்தைக் கட்டமைக்கப் போகிறது. அந்த வரலாற்று முக்கிய பயணம் பிலாரிடா கென்னடி ஏவுகணை மையத்தில், 2022 ஆகஸ்டு 28 ஆம் தேதி, காலை 10:30 மணிக்கு, காலநிலைச் சூழ்வெளித் தடைகள் ஏதுமின்றி அனுமதி தந்தால், பச்சைக் கொடி பயணத்துக்கு காட்டப்படும்.

    மனிதர் இயக்காத இந்தப் புதிய திட்டம் ஆர்டிமிஸ் -1 விண்வெளியில் 42 நாட்கள் நீடிக்கும். 322 அடி உயரத்தில் நிற்கும் அசுர ராக்கெட் [ 8.8 million pounds (3.9 million kg) of thrust, SLS is the most powerful rocket ever produced.] முனையில் உள்ள ஓரியன் விண்சிமிழ் [Orion Capsule] நிலவைச் சுற்றி வரும். அந்த ராக்கெட்டை டிசைன் செய்து அமைக்க 20 பில்லியன் டாலர், அதை நிலவுக்கு விண்சிமிழைத் தூக்கிச் செல்ல மேலும் 4.1 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கு தேவைப்பட்டது. இனி அடுத்து மூவர்/நால்வர் இயக்கும் ஆர்டிமிஸ் -3 விண்சிமிழ் 2024 ஆண்டு தாமதத் தயாரிப்புக்கு 2 பில்லியன் மேலும் செலவு.

    இருமுறை ஏவிடப் பயணம் தயாராக இருந்தும், சில இடையூறுகளால் ஆர்டிமிஸ் -1 திட்டம் நிறைவேறாமல் தடைப்பட்டது.

    *******************************************

    1. https://www.forbes.com/sites/jamiecartereurope/2022/08/24/artemis-1-exactly-when-where-and-how-to-watch-nasa-launch-the-most-powerful-rocket-ever-made/?sh=7504a25590c3
    2. https://tidymails.com/national-geographic/nasas-most-powerful-rocket-ever/341142/
    3. https://www.bbc.com/news/science-environment-62563720
    4. https://appel.nasa.gov/2020/11/23/nasa-publishes-plan-for-lunar-exploration/

    Share
  • அண்ணா எழுச்சி நாள் உரை | 1967

    அண்ணா எழுச்சி நாள் உரை | 1967

    சேலம் உருக்காலை, தூத்துக்குடி ஆழ்கடல் திட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி, 1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா, சிவகங்கையில் ஆற்றிய எழுச்சி நாள் உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share