குறளின் கதிர்களாய்…(426)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(426)
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த வுணர்ந்து செயல்.
-திருக்குறள் – 516 (தெரிந்து வினையாடல் )
புதுக் கவிதையில்…
செய்யும் செயலொன்றைச்
செய்கிறவனின் தகுதியைச்;
செவ்வனே அறிந்து,
செயலின் தன்மையை நன்கறிந்து,
செயல்பட தக்க காலத்தோடு
பொருந்துமாறு எண்ணிச்
செயல்பட விடவேண்டும்…!
குறும்பாவில்…
செயலொன்றைச் செய்பவனை அவனது
தகுதியறிந்து செயலின் தன்மையறிந்து பொருந்தும்
காலமறிந்து செயல்பட விடவேண்டும்…!
மரபுக் கவிதையில்…
செயல தொன்றைச் செய்யுமுன்னே
செய்யு மொருவன் தகுதியுடன்
செயலின் தன்மை யதனையுமே
செம்மை யாக அறிந்தபின்னே
பயனைப் பெறவே தக்கதாகப்
பணியின் காலம் தனையறிந்தே
செயலைத் தொடங்கி நன்முறையில்
செய்ய அவனை விடுவாயே…!
லிமரைக்கூ…
செய்பவன் தகுதி யுடனே
செயலின் தன்மை ஆய்ந்தறிந்தே காலமறிந்தவனைச்
செயவிடல் நமது கடனே…!
கிராமிய பாணியில்…
செயல்படணும் செயல்படணும்
தெரிஞ்சி செயல்படணும்,
எல்லாத்தயும் நல்லமொறயில
தெரிஞ்சி செயல்படணும்..
ஓருசெயலச் செய்யப்போறவன்
தகுதிய நல்லாத் தெரிஞ்சிக்கிட்டு,
செயலோட தன்மய
ஆராஞ்சறிஞ்ச பெறகு,
செய்யப்போறது
பொருத்மான காலந்தானாங்கிறத
கண்டறிஞ்சி அப்புறமா
அவனச் செயல்பட உடணும்..
அதால
செயல்படணும் செயல்படணும்
தெரிஞ்சி செயல்படணும்,
எல்லாத்தயும் நல்லமொறயில
தெரிஞ்சி செயல்படணும்…!