-மேகலா இராமமூர்த்தி

இந்திரசித்தனின் பிரமாத்திரத்தால் தாக்குண்டு இலக்குவன் உள்ளிட்ட அனைவரும் உயிரற்ற உடல்களாய்த் தரையில் கிடப்பதைக் கண்டு மராமரம்போல் மண்ணில் சாய்ந்தான் இராமன்.

போர்க்கள நிகழ்வுகளைக் கண்ட இராவணனின் தூதுவர்கள் அவனிடம் விரைந்துசென்று ”நின்சேய் விட்ட நெடுஞ்சரத்தால் படைவீரர்களும், இன்னுயிரனைய இளவல் இலக்குவனும் இறந்ததைக் கண்டு பெருந்துயருற்று இராமனும் மடிந்தான்; ஆதலால் முடிந்தது உன் பகை” என்றனர்.

…..நின்  மைந்தன்தன்  நெடுஞ் சரத்தால்
 துணைவர் எல்லாம்  நிலம்சேர
பின்வந்தவனும் முன்மடிந்த
பிழையை நோக்கி பெருந்துயரால்
முன்வந்தவனும் முடிந்தான் உன்
பகைபோய் முடிந்தது என மொழிந்தார். (
கம்ப: பிரமாத்திரப் படலம் – 8670)

இராமன்   போர்க்களத்தில் நினைவிழந்து  கிடந்ததனை அவன் மரணமடைந்து விட்டதாய்த் தவறாகக் கருதிய தூதுவர் இராவணனுக்கு இங்ஙனம் அறிவிக்கின்றனர். அதுகேட்டு நனிமகிழ்ந்த இராவணன், வெற்றிவிழாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தான்.

இராவணன் கட்டளைப்படி மருத்தன் எனும் அரக்கன் களத்தில் மாய்ந்துகிடந்த அரக்கர் சேனையைக் கடலில் எறிந்தான்; அதன் நோக்கம் அரக்கர் யாருமே களத்தில் மாயவில்லை எனும் தோற்றத்தைக் காண்போர்க்கு உண்டாக்குவதே!

அடுத்ததாக இராம இலக்குவர் போர்க்களத்தில் மாண்டதைச் சீதைக்குக் காட்டவிரும்பிய இராவணன், அரக்க மகளிரை அழைத்து, ”சீதையைப் புட்பக விமானத்தில் ஏற்றி இராம இலக்குவரின் கதியை அவள் காணுமாறு காட்டுவீர்!” என்று ஏவ, அவர்களும் நடைபிணமாய் வாழ்ந்துவந்த நங்கை சீதையை விமானத்தில் ஏற்றிப் போர்க்களத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தரையில் வீழ்ந்துகிடந்த தன் கணவன் உருவைக் கண்டாள் சீதை; விடத்தை உண்டதுபோல் உடலும் உள்ளமும் ஓய்ந்தாள்; குளிர்ந்த தாமரைப் பூவொன்று தழலில் வீழ்ந்ததுபோல் பெருந்துயரில் தீய்ந்தாள். இலக்குவனின் உயிரற்ற உடலைக் கண்டவள் மேலும் மனம்நொந்து அரற்றினாள். முடிவில் தானும் இராமன்மீது வீழ்ந்து இறக்க முடிவுசெய்து எழுந்தவளைத் தடுத்த திரிசடை, சீதையை ஆதரவாய்த் தழுவிக்கொண்டு,

”அன்னம் போன்ற அன்னையே! மாரீசனாகிய மாய மானை முன்பு விடுத்த தன்மையும், மாயா சனகனை உண்டாக்கிய தன்மையும், சென்றநாளில் இலக்குவன் முதலானோரைப் பிணித்த நாகபாசம் அழிந்துபோன தன்மையும் எண்ணிப் பார்! நன்னெறியில் செல்லாதவர்களாகிய இந்த அரக்கரின் மாயச் செயல்களை அறியாது நீ மாள நினைக்கின்றாயோ?”

மாயமான் விடுத்தவாறும் சனகனை வகுத்தவாறும்
போயநாள் நாகபாசம் பிணித்தது போனவாறும்
நீஅமா நினையாய் மாள நினைதியோ நெறி இலாரால்
ஆயமா மாயம் ஒன்றும் அறிந்திலை அன்னம் அன்னாய்!
(கம்ப: சீதை களம்காண் படலம் – 8693)

”கவனித்துப் பார்! இராமனின் திருமேனியில் அம்பு ஒன்றும் அழுந்தவில்லை; இலக்குவனின் முகம் ஊழியிறுதியில் தோன்றும் சூரியனைப் போல் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றது! எனவே, அவ்விருவருக்கும் அழிவில்லை என்பதை உணர்ந்துகொள்! வீணில் வருந்தாதே!” என்று தேற்றினாள். பெற்ற தாயினும் உற்றதுணையினளாய்த் தனக்கு விளங்கிவந்த திரிசடையின் சொற்களைக் கேட்டு உள்ளம் தேறினாள் சீதை. புட்பக விமானம் மீண்டும் அசோக வனத்திற்குத் திரும்பியது.

இராமன் ஆணைப்படி படையினர்க்கு உணவுகொண்டுவரச் சென்ற வீடணன், தான் கொணர்ந்த உணவைப் பாசறையில் வைத்துவிட்டுப் போர்க்களத்துக்குத் திரும்பினான். படையினர் களத்திலே உயிரற்று வீழ்ந்துகிடக்கும் காட்சிகண்டு மூர்ச்சையானவன், சற்றுநேரத்தில் மூர்ச்சைதெளிந்து எழுந்து இராமனைத் தேடிச்சென்றான்; இராமன் இலக்குவன்மீது மயங்கிச் சாய்ந்துகிடப்பதைக் கண்டான். அவன் மேனியில் அம்பின் வடுவில்லை என்பதனால் அவன் இறக்கவில்லை என்றுணர்ந்து, வேறு யாரும் உயிருடன் உள்ளனரா எனத் தேடிச் சென்றான். இறந்த யானைக் குவியல்களின்மேல் அனுமன் வாய்மடித்துக் கைகளை முறுக்கிய நிலையில் கிடப்பதைக் கண்ணுற்றான். புண்ணுற்ற அவன் மேனியிலிருந்த அம்புகளை மெல்லப் பிடுங்கி அவன் முகத்தில் குளிர்ந்தநீரைத் தெளித்தான்; உடன் கண்விழித்தான் அனுமன்! விழித்தவுடன் இராமனின் நிலையை வீடணனிடம் உசாவி அறிந்தான்.

அதனைத் தொடர்ந்து, ”சாம்பன் (ஜாம்பவான் – கரடிவேந்தன்) எங்கே?” என்று வீடணனிடம் அனுமன் விசாரிக்க, ”அவன் உயிருடன் உள்ளானோ இறந்துபட்டானோ யானறியேன்” என வருத்தத்தோடு மொழிந்தான் வீடணன். ”அவனுக்கு அழிவில்லை; அவன் சிரஞ்சீவியாய் வாழும் பேறுபெற்றவன்; அவனைச் சென்று காண்போம்” என்று அனுமன் கூறவே அவனைத் தேடிச் சென்றனர் இருவரும்.

மூப்பினாலும் புண்பட்ட வலியினாலும் சாய்ந்துகிடந்த சாம்பன், காலடி ஓசையால் வீரர் இருவர் அருகில் வருவதை அறிந்தான். அவர்கள் வீடணனும் அனுமனும் என்றறிந்து பூரித்தான். படையினரும் இராம இலக்குவரும் இருக்கும் நிலையறிந்த சாம்பன், ”மேருமலையையும் அதற்கு அப்பால் உள்ள நீலகிரி மலையையும் கடந்து சென்றால் மருந்துமலை ஒன்று உள்ளது. இறந்தவரை உயிர்பெறச் செய்யும் மருந்து ஒன்றும்; உடம்பு வெவ்வேறு பிளவுகளாய்க் கிழிந்தாலும் முன்புபோல் பொருந்தச் செய்யும் மருந்து ஒன்றும்; (உடம்பில் தைத்திருக்கும்) படைக்கலங்களை வெளிப்படுத்தும் மருந்து ஒன்றும்; பண்டைய உருவை மீட்டளிக்கும் மருந்து ஒன்றும் அங்குள்ளன எனச்சொல்லி அவற்றின் அடையாளங்களையும் எடுத்துரைத்து அவற்றை விரைவில் கொணர்வாய்” என்று அனுமனைப் பணித்தான். [இந்த மலையைத்தான் சஞ்சீவி மலை என்றழைப்பர்.]

மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்
      உடல்வேறு வகிர்களாகக்
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும்
     படைக்கலங்கள் கிளைப்பது ஒன்றும்
மீண்டேயும் தம்உருவை அருளுவது ஓர்மெய்ம்
     மருந்தும் உளநீ வீர
ஆண்டுஏகி கொணர்தி என அடையாளத்தொடும்
     உரைத்தான் அறிவின் மிக்கான். (கம்ப: மருத்துமலைப் படலம் – 8729)

மாண்டாரை   உய்விக்கும் மருந்து, மிருதசஞ்சீவினீ; உடற்கிழிவைப்
பொருந்துவிப்பது,  ’சந்தானகரணீ;   படைக்கலங்கள் கிளைப்பது, விசல்யகரணீ; மீண்டும் தம் உருவை அருளுவது சாவர்ண்ய  கரணீ என்று மூலிகைகளின் பெயர்களை அளிக்கின்றது முதனூலாகிய வான்மீகம்.

பேருருவெடுத்து மருந்துமலையை அடைந்த அனுமன், ”இங்கிருந்துகொண்டு சாம்பன் சொன்ன அடையாளப்படி, மூலிகைகளை ஆராயத் தொடங்கினால் நேரமாகும்; எனவே, இந்த மருந்துமலையை அப்படியே பெயர்த்துச் செல்வோம்” என்று எண்ணமிட்டவனாய் அதனைப் பெயர்த்தெடுத்துக் கொண்டு வான்வழியே விரைந்துசென்றான் இலங்கைப் போர்க்களம் நோக்கி!

இதற்கிடையில் மயக்கம் தெளிந்து எழுந்த இராமன் தன்னருகில் அமர்ந்திருந்த சாம்பனையும் வீடணனையும் கண்டு நிகழ்ந்தவற்றுக்கு வருந்திக்கொண்டிருந்தான். அப்போது சாம்பன் இராமனிடம், ”மூலிகைகளைக் கொணர வடதிசைக்கண் அனுமன் சென்றுள்ளான்; அவன் அம்மூலிகைகளைக் கொண்டுவந்ததும் களத்தில் மாண்டோரெல்லாம் மீண்டெழுவர், வருந்தற்க!” என்று இராமனுக்குத் தேறுதல் உரைத்திருந்த வேளையில், பேர்த்தெடுத்த மருந்துமலையோடு வானில் ஆர்த்தபடி அவ்விடம் வந்துசேர்ந்தான் அனுமன். அந்த மருந்துமலையின் காற்றுப்பட்டதும் களத்தில் பட்டோரெல்லாம் பட்டென்று கண்விழித்தனர். சாம்பன் இயம்பியபடி மீண்டும் மருந்துமலையை அதனையெடுத்த இடத்திலேயே வைப்பதற்குச் சென்றான் அஞ்சனை மைந்தன்.

இடைப்பிறவரலாய் இன்னொரு செய்தி: இந்தச் சஞ்சீவி மலையையும் அதிலுள்ள மூலிகைகளைச் சாப்பிடும் நாயகனும் நாயகியும் (குப்பன் – வஞ்சி) என்ன பயன் கண்டார்கள் என்பதையும் மையமாக வைத்துப் பாவேந்தர் பாரதிதாசன் ’சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ எனும் காப்பியம் ஒன்றைப் படைத்துள்ளார். பகுத்தறிவுக் கருத்துக்களைத் தமிழ்ச்சுவையோடு தாங்கிநிற்கும் அக்காப்பியமும் படித்தற்குரிய ஒன்று!

இலங்கையில் இராவணன் அரண்மனை விழாக்கோலம் பூண்டிருந்தது. ”அயன்படை (பிரமாத்திரம்) பயன் நல்கியது; அதனால் பகையழிந்தது” என்றெண்ணிய இராவணன், தேவலோக மாதர்களின் ஆட்டத்தில் திளைந்திருந்தான். அப்போது வானரர்களின் ஆரவாரவொலியும் இராம இலக்குவரின் வில்நாணொலியும் கேட்கவே, நிகழ்ந்தவற்றை ஒற்றர் வாயிலாய் அறிந்த இராவணன் மகிழ்ச்சியைத் தொலைத்தவனாய் ஆலோசனை மண்டபம் அடைந்தான்.

இராவணன் ஆலோசனை மண்டபம் சென்றதறிந்த இந்திரசித்தனும் மகோதரனும் பாட்டன் மாலியவானும் ஏனைய அரசியல் சுற்றத்தாரும் அங்கே வந்தனர்; அவர்களிடம் தன் துன்பத்தை விளக்கினான் இராவணன்.

”களத்தில்பட்ட அரக்கர்குழாத்தைத் தீய எண்ணத்தோடு நீ கடலில் எறியச்சொல்லாமல் இருந்திருந்தால் அவர்களும் மருந்துமலையின் உதவியால் பிழைத்திருப்பர்; பிரமாத்திரமே பயனற்றுப் போனபின் இனி எந்த அத்திரம் நமக்குப் பயனளிக்கப் போகின்றது?” என்றுரைத்த பாட்டன் மாலியவானைச் சினந்து நோக்கிய இராவணன்,

”என் மகனென்ன? மற்றவர்கள் என்ன? இவ்வாறு அச்சங்கொண்டவர்களாய் உயிர்வாழ்க்கையை விரும்பிய நீங்கள் பிழைத்துப் போங்கள்! நாளை, ஊழிக்காலத்து வடவைத் தீயைப்போல் பொங்கி, எனது சேனையை அழித்த அம்மனிதரோடு, அக்குரங்கினையும் (அனுமன்) சேர்த்தொழிப்பேன்” என்றான் வெந்திறல் அரக்க வேந்தன் இராவணன்.

மைந்தன்என் மற்றையோர்என் அஞ்சினிர் வாழ்வு வேட்டிர்
உய்ந்துநீர் போமின் நாளை ஊழிவெந் தீயின் ஓங்கி
சிந்திய மனித்தரோடு அக் குரங்கினைத் தீர்ப்பென் என்றான்
வெந்திறல் அரக்கர் வேந்தன்…(கம்ப: மாயாசீதைப் படலம் – 8849)

அப்போது இந்திரசித்தன் எழுந்து, ”ஐய! பிரமனின் அத்திரத்தை நான் இராமனையும் கொன்றிடுக என்று சொல்லியே விடுத்தேன்! ஆனால், அவ் அத்திரம் அவனைத் தீண்டாது மீண்டது வியப்புக்குரியது. ஆதலால், அவன் மானிடனோ வானவனோ முனிவனோ அல்லன்; வீடணன் ஆய்ந்துசொன்னதுபோல் ’யான் எனது’ எனும் செருக்கறுத்த ஒப்பற்ற ஒருவன் ஆவான் என்பது தெளிவு” என்று இராமனின் இயல்பை இராவணனுக்கு உணர்த்திய இந்திரசித்தன், ”அவ்வுண்மை ஒருபுறம் இருக்கட்டும்! நீ வருந்தாதே! நான் நிகும்பலை எனும் கோயிலை விரைவில் அடைந்து வேள்வி இயற்றினால் உன் துன்பம் தீரும்!” என்றான்.

அதுகேட்ட இராவணன், ”நல்லது! நிகும்பலையில் வேள்வி செய்க!” என்று உடனே தன் சம்மதத்தை இந்திரசித்தனிடம் தெரிவித்தான். ”செய்யலாம்! ஆனால் உன் தம்பி வீடணன் அந்த வேள்வி பற்றிய இரகசியத்தை இராம இலக்குவரிடம் கூறி அது முற்றுப்பெறாவண்ணம் தடுத்துவிட்டால் என்ன செய்வது?” என்று இராவணனைக் கேட்டான் இந்திரசித்தன். ”அவர்கள் அதனைத் தடுக்காவண்ணம் செய்வதற்கு உபாயம் ஏதுமில்லையா?” என்று இந்திரசித்தனை இராவணன் வினவ, சற்றுச் சிந்தித்த இந்திரசித்தன்,

”ஓர் உபாயம் உள்ளது! சீதையைப்போல் மாய உருவம் செய்து அவளை அனுமன் முன்பு கொண்டுபோய்க் கொன்றுவிட்டு, அயோத்திக்குப் போய் அங்குளோரையும் கொல்வேன் என்று அவனிடம் சொல்லி அயோத்தி அமைந்துள்ள வடக்குத் திசைநோக்கிச் செல்வதுபோல் சென்று நிகும்பலை புகுந்து என் வேள்வியை முடிப்பேன்; நின் பகைவரை வெல்வேன்” என்றான்.

”நல்லது; அவ்வாறே செய்!” என்றான் இராவணன். அதைத் தொடர்ந்து மாயா சீதை உருவத்தைச் சமைக்கச் செய்த இந்திரசித்தன், அவள் கூந்தலைப் பற்றி இழுத்துக்கொண்டு கோட்டைக்கு வெளியே வந்தான். மருந்துமலையை அதன் இருப்பிடத்தில் வைத்துவிட்டு ஆரவாரித்தபடித் திரும்பிவந்துகொண்டிருந்த அனுமனின் எதிரேபோய் நின்ற அவன், ”இப்போது சீதையை நான் கொல்லப்போகிறேன்” என்று கர்ச்சிக்கவே, இந்திரசித்தன் பற்றியிருப்பது உண்மையான சீதையே என நினைத்து அச்சமடைந்த அனுமன், “பெண்கொலை புரிதல் பெரும்பழியாகும்; இப்புன்செயல் உன் புகழினைக் கெடுக்கும்” என்றான் நடுக்கத்தோடு!

அதனைப் பொருட்படுத்தாத இந்திரசித்தன் அனுமனிடம், “இவளைக் கொன்றுவிட்டு அயோத்திமேற் செல்வேன்; இராமன் தம்பியரையும் தாயரையும் கொல்வேன்” என்றுகூறி, மாயா சீதையை அனுமன் கண்முன்னர் வாளால் வெட்டிக்கொன்று மாய்த்துவிட்டுத் தன் சேனையோடு அயோத்தி செல்வதாய்ப் போக்குக் காட்டிவிட்டு, அத்திசையிலிருந்து மாறி நிகும்பலை புகுந்தான்.

இங்கே அனுமனோ சீதையின் மறைவைத் தாளாது கண்ணீர் பெருக்கினான்; இராமனிடம் சென்று அவன் தாள்களில் வீழ்ந்து புரண்டழுதான். செய்தியறிந்த இராமனும் இலக்குவரும் மெய்சோர்ந்து மயங்கினர். அப்போது அனுமன் இந்திரசித்தன் இராமனின் தம்பியரையும் தாயரையும் அழிக்கவேண்டி அயோத்திக்குச் சென்றிருக்கும் செய்தியைக் கூறவே உணர்வுமீண்ட இராமன், உடனே அயோத்திக்குச் சென்று அவ் அழிவைத் தடுக்க விரும்பினான். அனுமனின் தோள்களில் ஏறிக்கொண்டு இராமனும் இலக்குவனும் அயோத்திநோக்கிப் புறப்பட எத்தனித்த வேளையில் அருகிலிருந்த வீடணன், ”ஐயனே! சீதையை இந்திரசித்தன் கொன்றசெயல் மாயம் என்று ஐயுறுகின்றேன்! பத்தினியாகிய சீதையை அப்பாதகன் தீண்டிக் கொன்றிருப்பானேல் மூவுலகும் வெந்து சாம்பலாகியிருக்கும்; அத்தோடு அவன் அயோத்திக்குப் போனான் என்ற வார்த்தையும் அதியசமாயிருக்கின்றது; அவை உண்மைதானா என்பதைச் சிறிது நேரத்தில் தெரிந்துகொள்ளலாம்” என்றான்.

பத்தினி தன்னைத் தீண்டிப் பாதகன் படுத்தபோது
முத்திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே
அத்திறம் ஆனதேனும் அயோத்திமேல் போன வார்த்தை
சித்திரம் இதனை எல்லாம் தெரியலாம் சிறிது போழ்தின்.
(கம்ப: மாயா சீதைப் படலம் – 8926)

தொடர்ந்தவன், ”ஐய! நான் இமைப்பொழுதில் அசோகவனத்துக்குச் சென்று சீதையின் நிலையறிந்து வருவேன்; பின்பு என்ன செய்வது என்று முடிவுசெய்வோம்” என்றான்.

”நீ சொன்னது பொருத்தமான யோசனைதான் வீடணா!” என்று இராமன் அதனை ஆமோதிக்கவே, தன் உருவை வண்டுபோல் மாற்றிக்கொண்ட வீடணன், அசோகவனம் நோக்கிப் பறந்துசென்றான் சீதையைக் கண்டுவர!

[தொடரும்]

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *