பரதாஞ்சலி விழாவில் சத்ய பாரதி சுந்தரம் விருது வழங்கப்பட்டது

வணக்கம்.

நேற்று – நவம்பர் 23 – மாலை சென்னை பாரதிய வித்யா பவனில் நான் பெரிதும் வியந்து மதிக்கும் நடனகுரு திருமதி அனிதா குஹா அவர்களின் ‘பரதாஞ்சலி’. அவர் வணங்கும் பாபாவுக்கு அஞ்சலியாக நடத்திய விழாவில், பல ஆளுமைகளின் நடுவே என்னையும் அமர்த்தி எனக்கும் ஒரு விருது வழங்கினார்கள்.

தொடர்ந்து நான் பாரதியைப் பற்றிப் பேசியும், எழுதியும் வருவதையும், ‘பாரதி யார்?’ நாடகத்தில் வசனம் தவிர, பாரதியாக வேடமேற்று நடிப்பதையும் மனத்தில் கொண்டு, எனக்கு, “சத்ய பாரதி சுந்தரம்” என்னும் விருதை வழங்கினார்கள்.

என்பால் பேரன்பு கொண்டவர் பாரதிய வித்யா பவனின் இயக்குனர் திரு. ராமசாமி அவர்கள். என்னுடைய நிகழ்ச்சிகள் எத்தனையோ – நாடகம் உட்பட – அங்கே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பாரதியின் பாடல்களை, பொருளறிந்து, கேட்போர் மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பாடி வருகின்ற இசைக் கலைஞர் திரு. ஓ.எஸ். அருண் அவர்கள்.

பாரதக் கலைகள் அமெரிக்காவில் சிறப்பாகப் பரவுவதற்குப் பெரும் காரணமாக இயங்கிவரும், எங்கள் தாமிரபரணி தீரர், திரு. ‘க்ளீவ்லேண்ட்’ சுந்தரம் அவர்கள்.

உலகப் புகழ்பெற்ற நடனமணி திருமதி லீலா சாம்சன் அவர்கள்.

இவர்கள் மூலம் அந்த விருது எனக்கு வழங்கப்பட்டது.

ஏற்புரையாக நான் ஒரு கவிதையை வாசித்தேன். அதை அனிதா வணங்கும் பாபாவைத் தொட்டு இயற்றியிருந்தேன்.

இதோ அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் – என் குரலில் பதிவாகவும்:

பரதாஞ்சலிக்கொரு கவிதாஞ்சலி
அகமென்றும் புறமென்றும் சுகமென்றும் துயரென்றும்
அலைபாயும் இவ்வாழ்விலேஅரைநொடியும் நில்லாமல் அல்லாடும் ஓடங்கள்
ஆசைக ளின்பிள்ளைகள்
இகமென்றும் பரமென்றும் இனம்காண முடியாமல்
இடறுவதும் நடனமாமோ?
இற்றுவிழும் இதயத்தில் பற்றின்னும் வீழா
திறுக்குவதும் இசையாகுமோ?
அகமுன்னை நாடாத அதிகாலை வேளையில்
அருகிலே வந்த தேவா!
அனிதாவின் நெஞ்சத்தில் அகலாமல் குடிகொண்ட
அன்பனே சாயிநாதா!
பற்றுவில காமல்படி தவறவுயிர் சிதறமனம்
பதறஅடி இடற அங்கே
பார்த்தவிழி யும்பார்வை யும்பாத மும்கரமும்
பரிவும்புதுக் கமலங்களாய்
சுற்றுமுற் றும்மக்கள் துவளமனம் நெகிழ்ந்துருக
சுந்தரா! எதிரில் நின்றாய்
சொல்லிரண் டைச்சொல்லிப் புல்லென எனைக்கிள்ளிச்
சொக்கவைத் தாய்சிரித்தாய்
அற்றன வினைகளென கொற்றவ உன் கண்முன்னில்
ஆகாயம் நானாகினேன்!
அனிதையெனும் வனிதையவள் புனிதமனம் தினம்நெகிழ
அமர்ந்தருளும் சாயிநாதா!
தன்பெயரைச் சொல்லாமல் உன்பெயரில் விருதுதரத்
தாழ்மையுடன் அவளழைத்தாள்
தரமேது மில்லானைத் தக்கோர்கள் வரிசையில்
மனம்கூச அமர்த்திவிட்டாள்
புன்னகையும் குறும்புமாய்ப் பொல்லாத திருமுகம்
போட்டெனைப் புரட்டுகிறதே!
பொலபொலென மனமுதிர சலசலென ஜதியதிரப்
புதியகவி பூக்கின்றதே!
அன்புமய மாகவுயிர் யாவும்வச மாகப் பெரும்
அற்புதம்நி கழ்த்தும் தேவா!
அனிதாவின் சித்தத்தின் முற்றத்தில் மொத்தமாய்
அமர்ந்தருளும் சாயிநாதா!
தேவதைகள் போல்நூறு பாவையரை நூல்கொண்ட
பாவையென ஆட்டுகின்றாய்
தேரசையும் தெருபோலப் பாவையரின் காலசையத்
தேவருல கம்பதறுதே
காவல்விலக மனது களவுபோக நினைவும்
கனவும் கலந்தாடுதே
கடவுளோர் கதியதோ கதியாக்கும் ஜதியரசி
கால்கள் கவிதை பேசுதே
தனதாந்த தனன தன
அனிதாவின் நடனமொழி
தகிடதிமி தனுஜனுகு
அரம்பையரின் மனமுருகும்
தனுஜனுகு தாம்தகிமி
தனுமனுவும் ஓர்கதியில்
தகதகிட கிடதகிட
தலையடியும் ஒருசுதியில்
தகதகிமி தகதகிமி தாம்தகிட தாம்தோம்
வனிதையரின் வரிசையினில் வான்புவியில் கண்டோம்
தாம்தீம்தோம் தாம்தகிட தாம்தகிட தோம்தோம்
வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்துமிசை கேட்டோம்
ஆடுவ தெல்லாம் அருவா? உருவா?
அறவே தொலைந்த திருளா? மருளா?
சூடுவ தேயவன் திருவடி தானா?
சொல்லொவ் வொன்றும் சுடர்ந்திடும் தேனா?
தேடுவ தெல்லாம் தேரினில் வந்தென்
தெய்வம் புன்னகை செய்து கொடுத்ததில்
தேவைக ளெல்லாம் தீர்ந்தது தானா?
தெரியவில் லையிது நானா? வானா?
பாரதம் என்பது மேடை, அதில்
பரதம் பரமனின் ஜாடை
ஓரடி விதியை மிதிக்கும், மற்
றோரடி வானை யளக்கும், இதில்
யாரடி யோகொடுங் கோடை வாடை
அடைமழை வசந்தம் ஆயிரம் சுகந்தம்
தேரடி தெருவெனத் தெய்வம் பலவெனத்
தெரிந்து படைத்துச் சிரித்தாள்? அவள்
நேரே இறங்கிச் சேலை அணிந்து
பாரை அளந்த பதத்தாள்! அவள்
பரதத் தில்புது விதத்தாள்!
பாவனைகள் இதுபோலப் பார்கண்ட தில்லையே
பார்ப்பதெல் லாம்தில்லையே!
பாலைமனம் சோலைவன மாகவுரு மாறியதில்
பகலிரவெ லாம்முல்லையே!
தேவையெல் லாம்தீர்க்கும் தெய்வக் கலைத்தேரில்
தெய்வமென வந்த பெண்ணே! உன்
பரதாஞ்ச லிக்கிந்தப் பாமரன்ச மர்ப்பித்த
கவிதாஞ்ச லியையேற்பாய்!
ஆவதெல் லாமவன் அருளென்னும் அன்பென்று
யாவரும் இசைபாடவே!
அருளேதன் னுருவாக பரதமே உயிரான
அனிதாகுஹா வாழ்கவே!

கவிதையை என் குரலில் கேட்க: https://drive.google.com/…/1-yBJpkYWTCa9jc…/view…

நிகழ்ச்சியை, 80 வயதிலும் கூர்மையும், உன்னதமான தமிழ் உச்சரிப்புக்கும், மெலிதான நகைச்சுவைக்கும் புகழ் கண்டவருமான திருமதி ரேவதி சங்கரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். அவரையும் அவர் கணவரையும் அமர்த்திவைத்து அனிதாஜி அவர்கள் சிறப்புச் செய்தது அந்த விழாவின் சிறப்பம்சம்.

பரதாஞ்சலி நடன மணிகள் தேவலோகத்துப் பெண்களாக மாறி அருமையான நடன நிகழ்ச்சியொன்றை, இரு பகுதிகளாக வழங்கினார்கள். அதில், நடனக் கலைஞர்களுக்கு எவ்வாறு யோகா பயிற்றுவிக்கப்படுகிறது என்பதையும் காட்டினார்கள்.

நேரம் போனதே தெரியவில்லை. வீட்டுக்குத் திரும்பும்போது என் நடையில் ஒரு விசைப்பு முளைத்திருப்பதை உணர்ந்தேன்.

அன்புடன்,
ரமணன்
23.11.2022/புதன்/8,50

புகைப்படங்களை அனுப்பி உதவிய திரு. ஐயப்பன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *