தனித்தனி உலகம்

பாஸ்கர்
உனக்கும் வந்தது எனக்கும் வந்தது ஒரு கனவு
உனக்கு எப்போதும் பிடித்த ஒரு பெரிய தோசை
எனக்கு, கூர் தந்தங்களுடன் ஒரு காட்டு யானை
நான் என் எதிரியை விரட்டுவதாக நினைவு
உனக்கு வந்தது முகமூடி போட்ட மனிதன்
நானும் எதிரியைப் பிடிக்க முடியவில்லை
முகமூடி போட்டவன் யாரென உனக்கும் தெரியவில்லை
நாம் உறங்குகிறோமா என இருவருக்கும் தெரியவில்லை
இருவரும் உறக்கம் கலைந்து எழுந்துகொள்ளவில்லை
கனவே சுகம் என இருவரும் இருந்துவிட்டோம்
காலம் வரும் என்றாலும் பிரியவே எத்தனித்தோம்
பிரிந்ததே சுகமெனப் பின்னாளில் புரிந்துகொண்டோம்
இல்லையெனில் நமக்குள் கனவுகளே வந்திருக்காது
நாமும் வாழ்ந்தோம் , காதலும் வாழ்ந்தது – வேறெங்கோ.