கிரேசி மோகன்
பூபாரம் போக்கவந்த கோபாலன் கொண்டையில்,
பூ,பார கோபியர் பெண்கள்பார்: -வ்யாபார,
ஷேமமும், யோகமும், ஷேத்ரஞ்ஞன் கண்ணனே,
நாமமும் ரூபமும் நாம்’’….கிரேசி மோகன்….
பூ பார கோபியர்-மலர் சூடிய கோபியர்….
கிரேசி மோகன்
பூபாரம் போக்கவந்த கோபாலன் கொண்டையில்,
பூ,பார கோபியர் பெண்கள்பார்: -வ்யாபார,
ஷேமமும், யோகமும், ஷேத்ரஞ்ஞன் கண்ணனே,
நாமமும் ரூபமும் நாம்’’….கிரேசி மோகன்….
பூ பார கோபியர்-மலர் சூடிய கோபியர்….
கே. ரவி
மாண்டலின் ஶ்ரீநினிவாஸ் மாண்டனன் என்பதா
மன்புகழ்ப் பொன்னுடல் பூண்டனன் என்பதா
வேண்டலின் வேண்டாமை வித்தாகும் முக்திக்கு
காண்டலின் கேட்டலே கருத்துக்கு விருந்தாகும்
மாண்டலின் என்பதோர் கருவியா அருவியா
ஆண்டவ னேவியந்து அழைத்துவரச் சொன்னானோ
மாண்டலின் ஶ்ரீநினிவாஸ் மாண்டனன் என்பதா
மன்புகழ்ப் பொன்னுடல் பூண்டனன் என்பதா
நரம்புகள் மீட்டினான் ரசிகர்க ளின்நாடி
நரம்புகள் மீட்டினான் நாதப் பிரளயத்தின்
வரம்புகள் உடைந்தன வானமே அதிர்ந்ததாம்
திறம்புகல் வதற்கின்னும் தேடுவோம் சொற்களே
மாண்டலின் ஶ்ரீநினிவாஸ் மாண்டனன் என்பதா
மன்புகழ்ப் பொன்னுடல் பூண்டனன் என்பதா
தூண்டிலின் முனையிலே துடிக்கும் புழுவென
கூண்டிலே அடைபட்டுக் குமுறும் கிளியென
தோண்டியைப் போட்டுடைத் தாண்டியென் றாடவா
மாண்டிலன் ஶ்ரீநிவாஸ் என்றுதான் பாடவா
கே.ரவி
19-09-2014
கிரேசி மோகன்
அருச்சுன உவாச….குந்தி மகன் கேள்வி…..
———————————————————————————–
சுருதி ஒலிக்குள், பரிதி ஒளிக்குள்
இறுதிமுதல் இல்லா இறைக்குள் -கருதி
துதிக்கும் முனிவர்தம் தேடலுக்கு எட்டா
ஸ்திதிக்குப் புகன்றேன் சரண்….
பசுக்களை மேய்த்தோய் வசுதேவன் மைந்தோய்
விசுவமாய் எங்கும் விரிந்தோய் -அசையும்
அசையா பொருள்களுக்கு ஆதார மான
இசையே வணக்கம் உனக்கு….
படைத்துப் பறிமாறி பாதுகாத்(து) ஆவி
கடைத்தேற வைத்திடும் கண்ணா -துடைத்து
உலகேழை உண்டன்(று) உமிழ்ந்தோய் உனக்கிங்(கு)
இலையேகாண் ஓர்சக்தி ஈடு ….
அயனுக்கு வேதம் அறிவித்(து) அவன்தன்
வியனுலகில் மாயை விதைத்து -பயனுற
ஞானகர்ம பக்தியென்ற நாட்டம் அளித்தெம்மை
வானமர வைத்திடுவோய் வாழ்த்து….
பேருண்மை, மாயப் பெரும்பொய் பிரகிருதி
வேரொன்றும் இல்லா விருக்ஷம்நீ, -யாரென்று
கேட்டால் விளம்பிடுவோம் கேசவன் தானந்த,
சேட்டை புரிகின்ற சேய்….
ஸ்ரீபகவான் உவாச….கிருஷ்ணன் பதில்…..
————————————————————————————————
”கலக்கம் உறாதே விலக்கொணா கர்மம்
நிலத்தில் பிறப்பும் இறப்பும் -இலக்கணம்
பார்க்க இதுகவிதை இல்லைகாண் பார்த்தனே
பார்த்தால் புசிக்கும் பகை”….
”தீண்டும் இயற்கையின் தூண்டுதலால் வந்துபொகும்
யாண்டும் குளிர்,வெப்பம் இன்ப,துன்பம் ! -பாண்டு
மகனே பொறுப்பாய், மனதால் பொருப்பாய்
புகழாம் போரில் புகு”….
”வியப்பென பார்த்து, வியப்பென கூறி
வியப்பென கேட்டும் விளங்கா -வியப்பாம்
விவரிக்க ஒண்ணா விசித்திர ஆன்மா
எவருக்கும் எட்டா எழில்”….
”நாணை இழுத்திட நாணாதே நண்பனே
ஆனை படுத்தால் அசுவமட்டம் -சேனைக்
களம்நீங்க செல்லாத காசாவாய், வேந்தருன்
உளம்நோக வைப்பார் உவந்து”….
”நூறைநீ வென்றிட ஈரே(ழு) உலகாள்வாய்
மாரில் கணைதைத்து மாளுங்கால் -வீராநீ
சொர்கம் புகுவாய் சுதாரித்(து) எழுந்திரு
தர்கம் புரிதல் தவிர்”….
”சுகதுக்கம், பேறு, இழப்பு, பெரும்வெற்றி
புகும்தோல்வி யாவினையும் போற்றி -நிகராக
ஏற்றிடுவாய் வேற்றுமையை, நூற்றினைக்கொல் கூற்றனென
தோற்றிடும்பார் பாவம் தொலைந்து”….
”ஈங்கிதனைக் கேட்டோய் இதன்பெயர் கேண்மக்கள்
சாங்கியம் என்போர், இனியடுத்து -தாங்கிய
கர்மத் தளைகளின் கட்டவிழ்க்கும் யோகத்தின்
மர்மம் உரைப்போம் உமக்கு”….
”வீணாகிப் போகா விடாமுயற்சி யோகமிது
தானாக மீறாது தன்வரம்பை -வாநாளில்
எள்ளளவு செய்வோரை எப்பயம் சூழ்ந்தாலும்
உள்ளிருந்து காக்கும் உரை”….
”விண்ணென்று நானொத்து திண்ணென்ற புத்திக்கு
கண்ணொன்று காணுமது கட்டுறுதி -என்னென்றும்
ஏகா கிரகமாம் இவ்வுறுதி அற்றமனம்
சாகா வரம்பெற்ற சத்ரு”….
”விரையற்ற பூக்கள் விரயமாதல் போலே
உரையற்ற சொற்கள் உதிர்ப்பர் -மறையுற்ற
வாசகத்தில் மேம்போக்காய் மீதுலாவி கற்றோரைப்
பேசுவார் கேலி புரிந்து’….
———————————————————————————
சு. ரவி
வணக்கம்,வாழிய நலம்
இந்த பிறவிக் கலைஞனை என் நண்பன் க்ரேஸிமோஹன் வீட்டு விழாஒன்றில் சிறுபாலகனாகக் கண்டு கேட்டு பிரமித்திருக்கிறேன். ஏழெட்டு வயது இருக்கும்.. விரல்களின் வழியே வாணியின் வீணை இசையைப் பொழிந்த அச்சிறுவனுக்கு அப்போது வரைந்த காஞ்சி மஹாபெரியவரின் கோட்டோவியத்தைப் பரிசளித்துவிட்டு நெஞ்சம் நிறைய இசையோடு வீடு திரும்பினேன்.
பிறிதொரு நாளில் என் MBA வகுப்பில் “Relevance of Western Corporate Culture to Indian Management” என்ற தலைப்பில் உரையாற்றிய போது, அவ்வுரையின் இறுதியில் சுவாமி விவேகானந்தரை மேற்கோள்காட்டி, ” உங்கள் உடலுறுதியில் மேலைநாட்டினராகவும், ஆன்ம நிலைப்பாட்டில் இந்தியராகவும் இருங்கள்” எனச் சொல்லி, India needs to adapt the western Corporate Management Style & build it around OUR Indian Value Systems என்று நிறைவு செய்தேன்.
“இது சாத்தியமா என சந்தேகமிருப்பின், இதோ நிரூபணம் மேலைநாட்டின் மாண்டலின் இசைக்கருவியில் ஆன்மாவாக ஒலிக்கிறது நமது கர்நாடக இசை” என முத்தாய்ப்பாக மாண்டலின் ஸ்ரீநிவாஸ் அவர்களின் “வாதாபி கணபதிம்” இசை நாடாவை ஒலிக்க வைத்தேன்.
அரங்கம் அதிர்ந்தது.
இன்று இளம் வயதிலேயே தன் இசைப்பயணத்தை நிறைவு செய்து மறைந்த அந்த மாபெரும் இசை மேதைக்கு என் ஓவிய அஞ்சலி!
நாதப்ரம்மத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்!
சு.ரவி
பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் காலமானார்!
பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் அவர்கள் சென்னையில் இன்று காலமானார். ஆந்திர மாநிலம் பாலகோலில் 1969 பிப்ரவரி 28 ஆம் தேதி பிறந்த ஸ்ரீநிவாஸ், பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர்.
45 வயதான இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 9.30 மணிக்கு இயற்கை எய்தினார்.
-நாகினி
குறள் வெண்பாவில்
மருள் நீக்கிடும் 
அருள் பாக்களை
முப்பாலில் இலக்கியச்சுவை
குன்றா நயமோடு வழங்கியோன்…!
கல்வி கேள்விகளில்
கருத்தாய்ச் சிறந்து
கண்ணியமுடன் அரசு
கடமை ஆற்றும் பண்பைக்
கல்லில் எழுத்தெனப் பதித்தோன்…!
களவு கற்பு எனத்
திருமணவாழ்வுக்கு முன் பின்
காதல் உணர்வைத்
தரமான சொற்கோ(ர்)வையால்
களங்கமற்ற பாமாலையாக்கிக்
கபடறியா உண்மைக் காதலைத்
தரணிக்கு உணர்த்தியோன்…!
பாரில் மனிதம் நிலைக்க,
பகுத்தறிவு மனிதர் நற்பண்புகளைப்
பாங்குடன் கடைப்பிடிக்கவே
பக்குவமாய் நல்நெறிகளைப்
பசுமரத்தாணியென அறைந்தோன் …!
அறம்பொருள்இன்பம் எனும் முப்பாலை
133 அதிகாரம் என வகுத்து
ஒவ்வொன்றிலும் 10 பாக்கள் கூட்டி
1330 குறட்பாக்களாகப் பெருக்கெடுத்து
உலகோர் மனதில் குடிகொண்டுள்ள
பெருந்தகை திருவள்ளுவர் பதம் நினைந்து
நாளும் திருக்குறள் படித்து
நலமாய் வாழ்வில் உயர்ந்திடு தம்பி…!!
–சு.கோதண்டராமன்.
அச்வின்கள் எனப்படுவோர் இருவர். அவர்களில் ஒவ்வொருவருக்கும் தனிப் பெயரோ தனித் தன்மையோ கிடையாது. ஒரு பறவையின் இரு இறக்கைகள் போல இருப்பவர்கள் என்று சொல்லப்படும் அவர்கள், எப்பொழுதும் சேர்த்தே பேசப்படுகிறார்கள். இவர்கள் வேறு வேறு வகையில் பிறந்தவர்கள் என்கிறது ரிக் (5.73.4). பிறந்தது வேறு வேறு வகையானாலும் செயல் திறமையினால் ஒன்றானவர்கள் என அறியலாம்.
இவர்கள் யார்? நிருக்தக்காரர் கூறுவது போல விண்ணும் மண்ணுமா, இரவும் பகலுமா, சூரிய சந்திரர்களா, இதிஹாஸக் காரர்கள் கூறுவது போல, இரண்டு நேர்மையான இளவரசர்களா, சாயணர் சொல்வது போல இந்திரன் அக்னியா – ரிக் மந்திரங்களிலிருந்து இதை அறிய முடியவில்லை.
இவர்களுக்கு நாஸத்யா என்ற பெயரும் உண்டு. இதற்கு ந அஸத்யா என்று பிரித்து பொய்யில்லாதவர்கள் என்று ஒரு விளக்கம் அளிக்கப்படுகிறது. நாஸத்ய என்பது நாஸிகா ப்ரபவ- (மூக்கில் தோன்றியவர்கள்), அதாவது மூச்சுக் காற்று என்ற கருத்தும் உண்டு (8.5.23க்கு சாயணர் உரை).
அஹர்விதா (பகலை அறிந்தவர்கள்) என்று போற்றப்படும் இவர்களுடைய தேரில் சூர்யா (சூரியனின் மகள்) விரும்பி ஏறுகிறாள் என்றும், இவர்கள் உஷஸுடனும் சூர்யனுடனும் சேர்ந்து வருபவர்கள் என்றும் கூறப்படுவதால் இவர்கள் ஒளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது அறியப்படுகிறது. இவர்களது செயல் திறமைகளைப் பார்த்தால் இதிகாசக்காரர்கள் சொல்வது போல, பரோபகார சிந்தையுள்ள, திறமையுள்ள இரு மனிதர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம்.
மற்ற தேவர்களைப் போல அச்வின்களும் நரா (மனிதர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள். அச்வின்களுக்கு ஒரு சிறப்பு என்னவென்றால், மனிதருடன் பழமையான தோழமை கொண்டவர்கள் என்றும் மனிதருடன் பொதுவான மூதாதையர் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் மனிதராக இருந்து தங்கள் அருஞ் செயல்களால் தேவ நிலைக்கு உயர்ந்தவர்கள் (4.44.2).
அச்வின்களின் சாதனைகள் பல. அவர்களால் உதவப்பட்டோரின் பட்டியல் நீளமானது, இது ஆங்காங்குப் பல இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த தேவருக்கும் உதவி பெற்றோர் பட்டியல் இவ்வளவு விரிவாகக் கொடுக்கப்படவில்லை.
மீட்பு – ரேபன் மற்றும் வந்தனன் ஆகியோரைக் கிணற்றிலிருந்து மீட்டனர். அத்ரி என்பவரைக் குகையிலிருந்து மீட்டனர், அவரது உடல் வெப்பத்தைக் குறைத்தனர். புஜ்யு என்பவரைக் கடலிலிருந்து மீட்டனர். விச்வகனுக்குக் காணாமல் போன மகன் விஷ்ணாபுவை மீட்டுக் கொடுத்தனர். வர்த்திக என்னும் பறவையை ஓநாயின் வாயிலிருந்து மீட்டனர். ஜாஹுஷன் என்பவர் எதிரிகளிடம் சிக்கியபோது அவரைக் கடத்திக் கொண்டு வந்து மீட்டனர். ஆழத்தில் மூழ்க இருந்த அந்தகனைக் காப்பாற்றினர். த்ரிசோகன் என்பவரின் களவு போன மாடுகளை மீட்டுத் தந்தனர். குதிரையை இழந்த ப்ருதிக்கு அதை மீட்டுக் கொடுத்தனர்.
பொறியியல்– தாகத்தால் வருந்திய கோதமருக்குக் கிணறு ஒன்றைச் சீரமைத்துக் கொடுத்தனர். சரன் என்பவருடைய கிணற்றில் நீர் மட்டம் உயரச் செய்தனர். வணிகன் தீர்க்கச்ரவஸுக்கு இனிய நீர் கிடைக்கச் செய்தனர். வறண்ட ஆற்றில் மீண்டும் நீர் பெருகச் செய்தனர். சுசந்தி என்பவருக்கும் அத்ரிக்கும் வீடு அமைத்துக் கொடுத்தனர்.
மருத்துவம்– இவர்கள் சிறந்த மருத்துவர்கள். தண்ணீரிலும், செடிகளிலும், மரங்களிலும் உள்ள மருந்துகளை அறிந்து வைத்திருக்கிறார்கள், கர்ப்பத்தைத் தாங்குகிறார்கள் என்கிறது வேதம். கண்வருக்குக் கண் பார்வை தந்தனர். தந்தையால் கண் குருடாக்கப்பட்ட ரிஜ்ராச்வன் என்பவருக்குக் கண் பார்வை தந்தனர். ச்யாவன் என்பவர் மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டார். இவர்கள் அவரை மீண்டும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தனர். கால் வெட்டுப்பட்ட விச்பலா என்ற பெண்ணுக்கு இரும்புக்கால் அமைத்துக் கொடுத்தனர், காலில்லாத பராவ்ரஜனை நடக்க வைத்தனர். ச்யவனரின் பழைய தோலைக் கவசம் போல் கழற்றிவிட்டுப் புதிய தோல் வளரச்செய்து, மீண்டும் இளமையாக்கினர். ருதுஸ்துபருக்கு சத்துணவு தந்தனர். மிகுதியாகக் குடித்த வம்ரனை அவனது நோயிலிருந்து மீட்டனர். தத்யங் என்பவருக்குக் குதிரைத் தலை அமைத்துக் கொடுத்து அவரிடமிருந்து த்வஷ்டாவின் வித்தையைக் கற்றனர்.
வத்ரிமதியின் கணவனுக்கு வைத்தியம் செய்து பிள்ளை பாக்கியம் ஏற்படுத்திக் கொடுத்தனர், ச்யாவன் என்பவருக்கு நோயை நீக்கி மனைவி கிடைக்கச் செய்தனர். கோஷா என்பவள் வயதாகியும், நோயின் காரணமாகத் திருமணம் ஆகாமல் தந்தை வீட்டில் இருந்த போது அவளது நோயை நீக்கி திருமணம் நடக்கச் செய்தனர். மனைவியை அடைந்த கலி என்பவர் இளமையாக்கப்பட்டு ஆயுள் நீட்டிக்கப்பட்டார்.
அச்வின்களின் மருத்துவம் மனிதர்க்கு மட்டுமல்லாமல் பிற உயிர்களுக்கும் பயன்பட்டது. ஷயு என்பவரின் மரத்துப் போன பசு மீண்டும் பால் கொடுக்க வைத்தனர். தேனீக்கள் இனிய தேன் தரச் செய்தனர், இவை இவர்களது மருத்துவ சாதனைகள்.
பிற உதவிகள்– விமதன் என்பவர் புருமித்ரனின் மகளை மணந்து கொள்ள உதவினர். பேது என்பவருக்கு வெள்ளைக் குதிரை ஒன்றைத் தந்து அவர் வெற்றி பெற உதவினர். கக்ஷிவான் என்பவருக்காகத் தங்களது குதிரைக் குளம்பிலிருந்து 100 ஜாடி மது பெருகச் செய்தனர். வசன் என்பவர் தினமும் நிறைய செல்வம் பெற வழி செய்தனர். ஸுதாஸன், திவோதாஸன் என்போருக்கு செல்வ உதவி செய்தனர்.
போர்– சர்யாதன், புருகுத்ஸர், க்ருசானு, பத்தர்வா ஆகியோருக்குப் போர்க்களத்தில் வெற்றி பெற உதவினர்.
அத்ரிகு, பக்தன், பப்ரு, உபஸ்துத, கர்க்கந்து, குத்ஸர், ச்ருதர்யன், மேதாதிதி, வசன், தசவ்ரஜன், சிஞ்ஜாரன், துர்வீதி, தபீதி, த்வஸந்தி, ப்ரியமேத, பரத்வாஜன், ப்ருச்னிகு, மந்தாதா, வய்யன், ச்யூமரச்மி என்போரும் இவர்களிடமிருந்து உதவி பெற்றவர்களில் அடங்குவர். இவை எத்தகைய உதவிகள் என்பது குறிப்பிடப்படவில்லை.
குதிரை இல்லாத தேர் ஓட்டினர். சூரியனை வலம்வந்தனர். பஞ்சம், நோய் இவற்றை நீக்கினர். மனுவுக்கு உணவு தந்தனர் (விவசாய முறையைக் கற்றுக் கொடுத்தனர் என்கிறார் சாயணர்). கிணறு தோண்டினர், மகிழ்ச்சி தருபவர் என்ற பொருளில் மயோபூ, சம்பு என அழைக்கப்படுகிறார்கள். மாத்வீ (இனிமையானவர்கள்), புரணா (போஷிப்பவர்கள்), ஸுப்ரணீதி (நல்ல வழி காட்டுபவர்கள்) என்ற சிறப்புகளும் இவர்களுக்கு உண்டு.
பிரார்த்தனை செய்தால் இவர்கள் உதவிக்கு வருவார்கள். மனோ வேகத்தில் வருகிறார்கள் (மனோஜுவா). வேதம் இவர்களை விட இவர்களது ரதத்தைத்தான் வெகுவாகப் புகழ்கிறது. அது க்ருதவர்த்தனி (நீர் வழியிலும் போகக்கூடியது), ஹிரண்யவர்த்தனீ (ஒளியுள்ள பாதையை உடையது), மூன்று தூண், மூன்று சக்கரம் கொண்டது, முக்கோண வடிவம் உடையது. எளிதில் இயங்குவது. மனத்தினால் பூட்டப்படும் குதிரைகளைக் கொண்டது (மனோயுஜாச்வாஸா). இது ரிபுக்களால் உருவாக்கப்பட்டது.
மழையும் வலிமையும் ஒளியும் இவர்களது செல்வமாகக் கூறப்படுகிறது. அதை ஒட்டி இவர்களுக்கு வழங்கும் சிறப்புப் பெயர்கள்- வ்ருஷண்வஸு, வாஜினீவஸு, ஸூர்யாவஸு.
மற்ற தேவர்களுடன் இவர்களது உறவு சிறப்பாகப் போற்றப்படுகிறது. இந்திரனோடு சவாரி செய்பவர்கள், வாயுவுடன் வாசம் செய்பவர்கள், ரிபுக்களுடனும் ஆதித்யர்களுடனும் மகிழ்பவர்கள், விஷ்ணுவுடன் பயணம் செய்பவர் என்று கூறப்படுகிறது. உஷாவுக்கு முன் வருபவர்கள் என்றும் சூரியனைத் தன் தேரில் சுமந்து வருபவர்கள் என்றும் கூறப்படுகிறார்கள்.
தேவர்கள் தனி்த்தனியாகப் போற்றப்பட்டாலும் ரிஷிகளின் ஒரு மன நிலையில் இந்த வேறுபாடு மறைந்து போகிறது. அதன்படி அச்வின்களும் மருத்துகளைப் போல ருத்ரனின் மக்களாகக் கூறப்படுகிறார்கள்.
மற்ற தேவர்களைப் போல இவர்களும் ருதத்தை அனுசரிப்பவர்கள், ருதத்தைக் காப்பவர்கள். உஷஸைப் போல, இந்திரனைப் போல அச்வினின் குதிரைகளும் ருதத்தால் பூட்டப்பட்டவை. இவர்களும் வ்ருத்ரஹந்தமா (விருத்திரனைக் கொல்வதில் சிற்தவர்கள்).
எல்லா வேள்விகளிலும் அச்வின்களுக்குச் சிறப்பிடம் உண்டு. இவர்கள் காலையில் பிழிந்து எடுக்கப்படும் ஸோம பானத்திற்கு உரியவர்களாகக் கூறப்-படுகிறார்கள். வேறு எந்தத் தேவருடைய வழிபாடும் இல்லாத இடத்திலும் அச்வின்களின் வழிபாடு நடைபெறுகிறது (8.10.4) என்பது மற்ற தேவர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு. அச்வின்கள் தாஸர்களின் உணவை அனுபவிக்கிறார்கள் (8.5.31) என்பதால் இவர்கள் எல்லோருக்கும் இனியவர்கள் என்பது தெரிகிறது.
படம் உதவி: http://totreat.blogspot.com/2012/10/ashvins-ayurveda-flying-doctor-family.html
கே. ரவி
இதுவரை மெளனமாக இருந்த புத்தி சிகாமணி கேட்கிறான்: “நீ என்ன சொன்னாலும் சரிப்பா, ஆனா நான் இல்லாம, அதாவது புத்தியைப் பயன்படுத்தாம, ஒரு கவிதை எழுதவே முடியாதுப்பா”.
ஒப்புக் கொள்கிறேன் சிகாமணி. ஆனால் ஒரு கவிதை, வடிவம் பெறுவதற்குத்தான் உன் உதவி தேவை. அதை மறுப்பதற்கில்லை. அது ஜனிப்பதற்கு உன் உதவி தேவையில்லை.
“என்னப்பா குழப்புகிறாய்! விளக்கமாகச் சொல்லுப்பா”, சிகாமணி கேட்கிறான்.
சொல்கிறேன். நான் கேட்டு நீ கதை சொன்னது போக, இப்போது நீ கேட்டு நான் கதை சொல்வது போலாகிவிட்டதே! நல்ல வேடிக்கையப்பா!
இனம்தெரியாத ஏதோ ஓர் ஈர்ப்பினால் உந்தப்பட்டு, மிக உயரத்திற்கு அல்லது ஆழத்திற்கு மனம் சிறகடித்துப் பறக்கும் போது, அது சில அனுபவக் களங்களைச் சந்திக்க நேர்கிறது. அந்தக் களங்கள் வரலாற்று நிகழ்ச்சிகளாக இருக்கலாம்; அல்லது, வெறும் எண்ண எழுச்சிகளாகவோ, சலனங்களாகவோ இருக்கலாம்; அல்லது, நேரில் பார்த்திராத ஒரு காட்சியாக இருக்கலாம். எந்தக் களத்துக்கு ஏற்றவாறு அந்த மனத்தின் அப்போதைய அதிர்வுகள் உள்ளனவோ, அந்தக் களம் அந்த மனத்தைத் தன்வயப் படுத்திக் கொள்கிறது. அது சில கணங்களுக்கு மட்டுமே. அந்தக் களத்தின் அதிர்வுகளும், அந்த மனத்தின் அதிர்வுகளும் கிட்டத்தட்ட ஒரே அலைவரிசையில் சங்கமிக்கும் போது எழும் புதிய சலனங்களை மொழியாக்கம் செய்யும் திறம் அந்த மனம் சார்ந்த அறிவுக்கு இருந்தால் அந்தச் சலனங்கள் ஒரு கவிதையாக வெளிப்படலாம். அல்லது, அச்சலனங்களை வேறு விதமாக வெளிப்படுத்தும் ஆற்றல் அந்த மனத்துக்கு இருந்தால், அச்சலனங்கள் ஓர் ஓவியமாகவோ, சிற்பமாகவோ, சங்கீதமாகவோ, வேறு கலைவடிவிலோ உருவம் பெறலாம். அந்தச் சலனங்கள் ஜனிப்பதில் அறிவின் பங்கு அதிகம் இல்லை. எந்த அனுபவக் களம் அந்த மனத்தை அந்தக் கணத்தில் வரவேற்றுத் தன்வயப் படுத்திக் கொள்கிறது என்பது வேண்டுமானால் ஓரளவு அந்த மனம்சார்ந்த அறிவைப் பொறுத்து அமையலாம். ஆனால், அந்தச் சங்கமத்தில் ஜனிக்கும் சலனங்களுக்கு அதற்கு மேல் அறிவு பொறுப்பாக முடியாது. அச்சலனங்கள் உருவம் பெற்று வெளிப்பட நிச்சயம் அறிவின் துணை வேண்டும். அப்படித் துணை செய்யும் போது அறிவு தன் அதிகப் பிரசங்கித்தனத்தை அடக்கிக் கொண்டு அந்தச் சலனங்களை அப்படியே பிரதிபலிக்கும் வடிவம் இழைப்பதில் மட்டும் உதவினால், அந்தப் படைப்பில் அந்த அனுபவக் களம் கச்சிதமாக அமர்ந்து கொள்ளும். அப்படியின்றி, அறிவு தன் மேல்பூச்சுகளை அந்த வடிவத்தில் அதிகம் இழைக்கத் தலைப்பட்டால், அந்தப் படைப்பு, ரசிகர்களின் அறிவு நிலையைக் கடந்து ஆழத்துக்குச் செல்ல முடியாமல் தடுமாற நேரிடும். அப்படிப்பட்ட படைப்பு, காலம் வென்று நிற்கும் படைப்பாக உருவாக முடியாது. ஏனென்றால், ரசிகரின் அறிவு நிலையைக் கடந்து, அவர்களுடைய அந்தரங்கத்தை ஊடுருவிச் சென்று, அவர்களுக்குள் தான் ஜனித்த அனுபவக் களத்தை மீண்டும் உருவாக்கி அவர்களை அந்தக் களத்துக்குக் கடத்திச் செல்லும் ஆற்றல் அத்தகைய படைப்புக்கு இருக்காது.
நான் இளங்கலை (பி.ஏ.) வகுப்பில் பயிலும் போது, எங்களுக்கு இந்திய மெய்யியல் பாடம் நடத்திய பேராசிரியர் ராதாகிருஷ்ணன் என்பவர் சொன்ன ஒரு கதை நினைவுக்கு வருகிறது. அதற்கு மூலம் எதுவென்று நினைவில்லை. ஓர் ஊரின் எல்லையில் ஒரு யோகி தவம் செய்து கொண்டு வாழ்ந்திருந்தார். அந்த ஊர் மக்களுக்கு அவரிடம் மிகுந்த மரியாதை இருந்தது. எல்லாரும் அந்த வழியே செல்ல நேரிடும் போது அவரை வணங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஒருநாள், ஓர் இளம் பெண் அவ்வழியே போகும் போது அவரை வணங்கினாள். திடீரென்று, அவர் அந்தப் பெண்ணிடம் வலிந்து உடலுறவு கொள்ள முயற்சி செய்தார். அந்தப் பெண் திமிறிக் கொண்டு விடுபட்டு ஓடிப்போய் நடந்ததை ஊர்மக்களிடம் சொல்லவும், அவர்கள் திரண்டு வந்து அந்த யோகியைத் தாக்க முற்பட்டனர். ஊர் பெரியவர் ஒருவர் அவர்களை அடக்கி விட்டு, “ஏன் சாமி இப்படிச் செஞ்சீங்க?” என்று கேட்டதும், சில மாதங்கள் கழித்து வந்தால் பதில் சொல்வதாகச் சொல்லி அந்த யோகி அவர்களை அனுப்பி வைத்தார். சில மாதங்கள் கழித்து ஊர் மக்கள் மீண்டும் அவரிடம் சென்று கேட்டதும், அவர்களை அருகில் ஓரிடத்துக்கு அழைத்துச் சென்று ஒரு கழுதை சில மணித்துளிகளுக்குமுன் ஈன்ற கன்றைக் காட்டி, “இந்த ஜீவன் உடல்பெறத் துடித்துக் கொண்டிருந்ததைச் சில மாதங்களுக்கு முன் நான் பார்த்த போது, அதற்கு மனிதப் பிறவி கொடுக்கலாமே என்று நினைத்து நான் எடுத்த முயற்சிதான் அது. ஆனால் இறைவனின் சித்தம் அந்த ஜீவன் கழுதையாகப் பிறக்க வேண்டும் என்று இருக்கும் போது அதை மாற்ற நான் யார்?” என்று சொன்னாராம். இந்தக் கதை முக்கியமில்லை. இதில் வரும் யோகியின் சமாதானம் ஏற்றுக் கொள்ளத் தக்கதா என்ற விவாதத்திலும் நான் ஈடுபடப் போவதில்லை. ஆனால், கவிதையின் ஜனன ரகசியத்தை ஓரளவு புரிந்து கொள்ள இக்கதை சற்றே உதவக் கூடும் என்பதால் அதை இங்கே சொன்னேன். இந்தத் தொடரே என் கவிதையின் வரலாறுதானே!
கவிதை எப்படி ஜனிக்கிறது என்பதை விளக்க நான் ஏன் இவ்வளவு பாடுபட வேண்டும்? நல்ல கவிதைகளைப் பகிர்ந்து கொண்டாலே போதுமே!
மழை, காற்று, வானம், மின்னல் என்று பாடவந்த பாரதி எப்படி ஓர் அனுபவக் களத்திற்கு உந்தப்பட்டு, அங்கே ஒரு கவிதையின் ஜனனத்துக்குக் கருவியாகி, அந்தக் கவிதையின் மூலம், காலகாலத்துக்கும் தன் வாசகர்களை அதே அனுபவக் களத்துக்குக் கடத்திக் கொண்டிருக்கும்படி அந்தக் களத்தை நிரந்தரமாக்கி விட்டான் என்பதைப் பார்ப்போம்:
மழைபொழிந்திடும் வண்ணத்தைக் கண்டுநான்
வானிருண்டு கரும்புயல் கூடியே
இழையும் மின்னல் சரேலெனப் பாயவும்
ஈர வாடை இரைந்தொலி செய்யவும்
உழையெலாம் இடையின்றி இவ்வானநீர்
ஊற்றும் செய்தி உரைத்திட வேண்டுங்கால்
மழையும் காற்றும் பராசக்தி செய்கைகாண்
வாழ்க தாயென்று பாடுமென் வாணியே
வான் இருண்டு போவதும், புயல் கருப்பாக இருப்பதும் கட்புலனுக்கு. ஈரப்பதத்தோடு வீசும் வாடைக் காற்றோ நாசிப்புலனுக்கு. காற்று வீசும் ஆரவாரமோ செவிப்புலனுக்கு. வானத்திலிருந்து பொழியும் மழை நீரோ உற்றறியும் தீண்டல் புலனுக்கு. இப்படியாகத் தான் பார்த்த ஒரு காட்சிக்கு கண், காது, மூக்கெல்லாம் வைத்துப் பாடுகிறான் பாரதி. கண், மூக்கு, காது, மெய் என்று நாலு புலன்களுக்கு விருந்து தந்தவன், மிக முக்கியமாக விருந்துச் சுவைக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் நாவை மட்டும் விட்டு விட்டானோ? இல்லை. ‘வாழ்க தாய்’ என்பதே நாவுக்கு விருந்து என்று முடிக்கிறான். எப்படி ஒரு சிறு பொறியைப் பெரு நெருப்பாக்கி ஐந்து புலன்களுக்கும் விருந்து படைக்கிறான் பாருங்கள், கேளுங்கள், நுகருங்கள், தீண்டுங்கள், சுவைத்து அருந்துங்கள்!
உழையெலாம் இடையின்றிப் பொழியும் வான நீரை, “இவ் வான நீர்” என்று சொல்லி, நம்மை அந்த அனுபவக் களத்துக்குள்ளேயே நிற்கச் செய்துவிடுகிறானே! ‘வாழ்க தாய்’ என்ற குரல் எங்கே இருந்து வருகிறது? அது “என் வாணியின் குரல்” என்கிறான். ஆங்கிலத்தில் ‘மை ம்யூஸ்’ (my muse) என்பார்களே, அதைத்தான் அவன் சொல்கிறான். அந்த அனுபவக் களம் அவனுடைய அகத்தின் ஆழத்தில் இருப்பதைத்தான் அவன் சுட்டிக் காட்டுகிறான். ‘இவ்வான நீர்’ என்ற சொற்றொடரிலுள்ள ‘இவ்’ என்ற சொல்லும், ‘என் வாணி’ என்பதில் உள்ள ‘என்’ என்ற சொல்லுமே இந்தக் கவிதையின் உயிர்ச் சொற்கள். இந்தக் கவிதையின் அனுபவக் களத்துக்கு வாசகனைக் கடத்திச் செல்லும் மந்திரச் சொற்கள். கவிஞன், தனக்குள் வாசகனை வரவேற்று, அழைத்துச் சென்று, அங்கே மழை பொழியும் ஓர் அனுபவக் களத்தில் அவனை நிற்கச் செய்து, அவனை மழையில் நனைய வைத்து, அவனுடைய ஐந்து புலன்களுக்கும் விருந்து படைத்து, அவனைத் திக்குமுக்காட வைக்கும் ஓர் உயர்ந்த கவிதை இது.
சமஸ்க்ருதத்தில் ‘ப்ரதீபா சக்தி’ என்று குறிப்பிடுவதைத்தான் நான் விளக்க முற்பட்டேன். மொழிவடிவம் பெறுவதற்கு முன்பே கவிதை ஜனித்து விடுகிறது. அது உயிருள்ளது. மொழி அதற்கு உடல் மட்டுமே வழங்குகிறது. உடலும் மிகவும் முக்கியம்தான். அந்த உடலாகிய மொழிவடிவம் ஏற்க உதவும் மகத்தான பணியைச் செய்யும் புத்தி சிகாமணியைப் புறக்கணிக்க முடியாது. ஆனால், அவன் முந்திரிக் கொட்டைபோல் ப்ரதீபா சக்திக்குள் அத்து மீறிப் பிரவேசித்து விடக் கூடாது. அங்கே அவனுக்கு வேலையில்லை. அது மனோன்மணியின் ஆட்சித்தளம்; ஆண் வாடையற்ற அல்லி அரசாங்கம்!
ப்ரதீபா சக்தி என்ற திறன்வாய்க்கப் பெற்றவர்களே மஹாகவிகள். அவர்கள் தீர்க்கதரிசிகள். வரப்போவதை முன்கூட்டியே ஞான திருஷ்டியில் கண்டு சொல்லக் கூடியவர்கள். இப்படித்தான் நான் நினைத்திருந்தேன். பாரதியே அதற்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் தோன்றினான். அவன் சொன்ன படியே நடந்த செய்திகள் எத்தனை! நூறாண்டுகளுக்கு முன் அவன் பாடிய போது, “சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்று நாம் கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லையே! சந்தி தெருப்பெருக்குதல் ஒரு சாத்திரமாக, விஞ்ஞானமாக வளரும் என்று நினைத்தோமா? அணுக்களுக்கு ஆங்கிலத்தில் ‘ஸ்பின்’ எனப்படும் சுழற்சி உண்டு என்பது 1925-ஆம் ஆண்டு கெளட்ஸ்மிட் என்ற ஜெர்மானிய விஞ்ஞானி சொல்லும்வரை நமக்குத் தெரியாத போது, பாரதிக்கு மட்டும் எந்த இயல்நூலார் அது பற்றிச் சொல்லி, அவனைப் பாஞ்சாலி சபதக் காவியத்தில், “இடையின்றி அணுக்களெல்லாம் சுழலுமென இயல்நூலார் இயம்பக் கேட்டோம்” என்று பாட வைத்தனர்? “இடையின்றி” என்ற சொல்லின் கனபரிமாணங்களை முழுதும் விளக்க இது இடமில்லை. வியப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். அப்பப்பா, இது என்ன தீர்க்க தரிசனம்! என் வியப்புக்குச் சரியான விடை தந்தவர் ஒரு பெரிய மஹான். அந்த விடையைப் பற்றிச் சொல்வதற்கு முன், அவரோடு எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தைச் சொல்ல வேண்டும்.
அந்த மஹானும், என் தாத்தா, அதாவது, என் தந்தையின் தந்தை, ம்ருத்யுஞ்ஜய தீக்ஷிதரும் கரூரில் ஒருசாலை மாணாக்கர்களாம். அதாவது, ஒரே பள்ளியில் படித்த பால்ய நண்பர்கள். என் தாத்தாவுக்குத் திருமணம் ஆன பிறகு அவர் இல்லத்தில் என் பாட்டி பாலசுந்தராம்பாள் பரிமாற, என் தாத்தாவோடு அந்த மஹான் பலமுறை உணவருந்திய செய்தியும் நான் கேள்விப்பட்டுள்ளேன். என் தாத்தா நான் பிறப்பதற்கு வெகு காலத்துக்கு முன்பே, என் தந்தை பள்ளிச் சிறுவனாக இருந்த போதே இறந்து விட்டார்.
எனக்கு வயது 7 அல்லது 8 இருக்கும், 1960-61 என்று நினைக்கிறேன். என் வீட்டுக்கு அருகில் உள்ள மண்டபத்திற்கு அந்த மஹான் விஜயம் செய்திருந்தார். அவரைப் பார்க்க என் பாட்டி என்னை அழைத்துச் சென்றிருந்தார். அவர் அந்த மண்டபத்தின் மேடையில் வீற்றிருந்தார். மேடையிலிருந்து வெகு தொலைவில் இருந்த ஒரு தூண் மறைவில் பாட்டி அமர்ந்து கொண்டு ஒரு வாழைப்பழத் தட்டை என்னிடம் தந்து, போய் அதை அந்த மாஹனிடம் தந்து ம்ருத்யுஞ்ஜய தீக்ஷிதரின் பேரன் என்று சொல்லி வணங்கி வரச்சொன்னாள். அவர் இருந்த மேடைக்கும், நாங்கள் இருந்த தூணுக்கும் நடுவில் ஐந்நூறுக்கு மேற்பட்டவர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். அவர்களை எல்லாம் தாண்டிக் கொண்டு எப்படியோ மேடையில் ஏறி அவரிடம் தட்டை வைத்து விட்டு வணங்கினேன். நான் இன்னார் பேரன் என்று சொல்ல வாயெடுத்தேன். அவரை அருகில் கண்ட மலைப்பில் வார்த்தை வரவில்லை. நான் எதுவும் சொல்வதற்கு முன்பே, அவர் முந்திக் கொண்டு, “ம்ருத்யுஞ்ஜயன் பேரனா?” என்று கேட்டு விட்டு, நான் கொடுத்த வாழைப்பழச் சீப்பிலிருந்தே ஒரு பழத்தை எடுத்து எனக்குத் தந்து ஆசி வழங்கி அனுப்பியதும், வியர்த்து, விறுவிறுத்துப் போனேன். அவர் சொன்னதைப் பாட்டியிடம் வந்து சொல்லி வியந்ததும், பாட்டி “அவர் ஒரு தீர்க்கதரிசி” என்று சொன்ன போதுதான் அந்தச் சொல்லை நான் முதலில் கேள்விப்பட்டேன். அன்று மயிலை, சமஸ்க்ருதக் கல்லூரியில் சந்தித்த காஞ்சி மஹாபெரியவர்தான் கவிஞர்களின் ப்ரதீபா சக்தி பற்றியும், தீர்க்க தரிசனம் பற்றியும் எனக்கு ஒரு தெளிவு ஏற்படுத்தினார்.
காஞ்சி மஹாபெரியவரின், ‘தெய்வத்தின் குரல்’ என்ற நூலை நான் பிறகு படிக்க நேர்ந்தது. அதில் அந்த மஹானின் கருத்து நேர்மையும், நடைத் தெளிவும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. அவர் சொல்லியிருந்த சில கருத்துகளில் அப்படியே உடன்பட என் சிற்றறிவு தயங்கினாலும், அதன் பல செய்திகள் என்னை மிகவும் பாதித்ததை நான் மறுப்பதற்கில்லை. அதன் நான்காம் பாகத்தில், அவர் ஒரு செய்தி சொல்கிறார். காளிதாசனிடம் தனக்கு ஒரு சரமகவி பாடுமாறு போஜராஜன் கேட்டுக் கொண்டும், கட்டளையிட்டும், காளிதாசன் மறுத்து விடுவதற்கு நிறைய காரணங்களை அவர் அதில் சொல்கிறார். அப்படிப் பாடினால் நிஜமாகவே போஜன் உயிர் பிரிந்துவிடும் என்று காளிதாசனுக்குத் தெரியும் என்பதும் ஒரு காரணம் என்று சொல்கிறார். அந்தக் கருத்துச் சூழலில் மஹாபெரியவர் எழுதுகிறார்:
இன்னொரு காரணத்தாலும் அவன் கல்பனையாகச் சரமகவி பாட முடியாமலிருந்தது. ரிஷிகளைப் பற்றி பவபூதி “உத்தரராம சரித”த்தில் ஸ்ரீ ராம சந்த்ர மூர்த்தியின் வாயிலாக ஒரு உண்மையைச் சொல்கிறார். “ஏனைய மக்கள் என்ன நடக்கிறதோ அதைச் சொல்வார்கள். ரிஷிகளோ என்ன சொல்கிறார்களோ அது நடந்துவிடுகிறது. ஒரு விஷயத்தை மற்றவர்கள் வார்த்தையாகச் சொல்கிறார்களென்றால், ரிஷிகளைப் பொறுத்தமட்டிலே அவர்கள் சொல்கிற வார்த்தையை விஷயம் ஓடிப்போய்ப் பிடித்துக்கொண்டு நிஜமாகிவிடுகிறது – வாசம் அர்த்தோ (அ) நுதாவதி” என்று ராமர் வஸிஷ்டரைக் குறித்துச் சொல்வதாக பவபூதி ஒரு General truth -ஐ (பொது உண்மையை) ச் சொல்கிறார்.
ரிஷியும், தெய்வாநுக்ரஹம் பெற்ற அருட்கவியும் ஒன்று என்பதற்கேற்ப, அம்பாளின் பரிபூர்ண க்ருபையைப் பெற்றிருந்த காளிதாஸனின் வாக்குக்கும் இப்படிப்பட்ட சக்தி இருந்தது. அதாவது அவன் வாக்கால் என்ன கவிதை வந்தாலும் அது நிஜமாகிவிடும். அவன் கல்பனையாகச் சொல்வதே ஸத்யமாகிவிடும்.
பாரதி தீர்க்கதரிசி, அவன் பின்னால் வரப்போவதைத் தன் ஞானக் கண்ணால் முன்கூட்டியே கண்டுரைத்தவன் என்று நினைத்துக் கொண்டிருந்த என்னை காஞ்சிப் பெரியவரின் கட்டுரை மாற்றி விட்டது. பாரதி போன்ற மஹாகவிகள் கண்டு சொன்னார்கள் என்பதை விட, அவர்களுடைய உள்ளத்தில் உண்மையொளி இருந்ததால் அவர்களுடைய வாக்கினிலும் ஒளியுண்டாகியது; அவர்கள் சொன்னதெல்லாம் அப்படியே பலித்தது, நிகழ்ந்தது என்று எனக்குப் புரிய வைத்தவர் மஹாபெரியவர்.
ஒரு மாஹாகவியை மஹரிஷிகளுக்கு ஈடாகக் கருதினார் மஹாபெரியவர். ஆம், உயிருள்ள கவிதைகளைப்
படைப்பதால், மஹாகவிகள் கடவுளுக்கே நிகரானவர்கள். இதை எழுதும் போதே எனக்கு ஒருவர் நினைவுக்கு வருகிறார். மிகப்பெரிய கவிதை ரசிகராகவும், அதே சமயத்தில் குழந்தைகளுக்காக எழுதுவதையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டும் வாழ்ந்த அமரர் பூவண்ணனைத்தான் குறிப்பிடுகிறேன். முன்பின் அவரை எனக்கு அறிமுகம் இல்லாத போது, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கவியரங்கத்தில் நான் அவரைச் சந்திக்க நேர்ந்தது. சென்னை, மைய நூலக வளாகத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் அவர் பேசிய போது, என்னைப் பற்றிக் குறிப்பிட்டு என் கவிதை ஒன்றை, மனப்பாடமாகச் சொல்லிக் காட்டியதும் நான் மிகவும் வியப்படைந்தேன், மகிழ்ச்சியும் அடைந்தேன். அவர் சொன்ன என் கவிதை இதுதான்:
தீப்பிழம்பைக் கையில் அள்ளிச் சாறெடுக்கும் போது
தேன்வடிந்த தென்று சொல்லித் துள்ளுபவன் யாரு
தேன்வடிந்த துளிகளிலே பூவாசம் வைத்துத்
தென்றலிலே தூவியிசை கொள்ளுபவன் யாரு
கனவென்ற தேர்கொண்டவன் – ஒரு
கவிஞனெனப் பேர்கொண்டவன்
பெருவியப்பை ஒருசொல்லின் கூர்முனையில் வைத்துப்
பேரொளியை அதற்குள்ளே போட்டடைத்து வைத்து
மறுசொல்லுக் கிடையிலொரு மெளனத்தை வைத்து
மந்திரமாய்ச் சொல்லுகிற மானிடனும் யாரு
கடவுளையே நேர்கண்டவன் -ஒரு
கவிஞனெனப் பேர்கொண்டவன்
சொல்வதொரு பாதியவன் சொல்வதில்லை மீதி
சொல்லியதே சொல்லாத தையுணர்த்தும் நீதி
வெல்லுவதும் இன்பமதில் தோற்பதுவும் இன்பம்
வேற்றுமை யிலாதவனை ஏற்பதுவும் இன்பம்
காலத்தின் சீர்கொண்டவன் -ஒரு
கவிஞனெனப் பேர்கொண்டவன்
கடவுளையே நேர்காண்பது சாத்தியமா? இதற்கு விடை தேடித்தானே நரேந்திரன் பித்துப்பிடித்து அலைந்தான்.
(தொடரும்)
—சக்தி சக்திதாசன்.
மற்றொரு வாரமடலில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.
இவ்வாரம் இம்மடலை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும்.
அட என்ன இது? எதைப் பற்றிய கருத்தாடல் இது என்று எண்ணுகிறீர்களா?
செப்டெம்பர் மாதம் 18ம் திகதி வியாழக்கிழமை ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியான ஸ்காட்லாந்து நாடு தனது எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடந்து முடிந்து இருக்கும்.
அதன் முடிவு என்னவாயிருக்கும் என்பதை அறியாமலே தான் நான் இந்த மடலை வரைகிறேன்.
ஸ்காட்லாந்து நாடு ஐக்கிய இராச்சியத்தினின்றும் நீங்கி தனியான நாடாக இயங்க வேண்டும் என்று ஒரு பகுதியினரும், இல்லை ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இணைந்திருப்பதே ஸ்காட்லாந்து நாட்டிற்கு மிகவும் உகந்தது என்று மற்றொரு பகுதியினரும் பலகாலமாக வாதாடி வந்தனர்.
2010ம் ஆண்டு தேர்தலில் அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றி கூட்டரசாங்கம் அமைத்துக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரும், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமருமான டேவிட் கமரன் அவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் ஸ்காட்லாந்து நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க ஸ்காட்லாந்து நாட்டு மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்து அதற்கான திகதியையும் குறித்துக் கொடுத்தார்.
ஸ்காட்லாந்து நாட்டின் மாநில அரசான ஸ்காட்லாந்து தேசியக் கட்சி தமது நீண்டகால அபிலாஷையான ஸ்காட்லாந்து நாட்டின் பிரிவினையை நனவாக்கிக் கொள்லும் முயற்சியில் அதற்கான பிரசாரத்தில் இறங்கினார்கள்.
அதேநேரம் ஐக்கிய இராச்சியத்தின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளும், இப்பிரிவினை ஐக்கிய இராச்சியத்தின் எஞ்சிய பகுதிகளுக்கோ அன்றி ஸ்காட்லாந்து நாட்டிற்கோ பயன் தரப்போவதில்ல்லை எனும் நிலைப்பாட்டில் இப்பிரிவினையை எதிர்த்தார்கள்.
அவர்களின் சார்பில் பிரச்சாரத்தை முன்னை நாள் லேபர் அரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்தவரும், ஸ்காட்லாந்தை பிறப்பிடமாகக் கொண்டவருமான அலிஸ்டர் டார்லிங் முன்னெடுத்தார்.
அவருக்கு உதவியாக முன்னைய லேபர் அரசாங்கப் பிரதமராகவிருந்த கோர்டன் பிரவுன் அவர்கள் செயற்பட்டார்.
கடந்த இருவாரங்களுக்கு முன்னால் மட்டும் இப்பிரிவினை வாதத்திற்கு எதிராகவே ஸ்காட்லாந்து மக்களின் பொது வாக்கெடுப்பின் முடிவுகள் இருக்கும் என்றே பொதுவான கருத்துக் கணிப்பாக இருந்தது.
ஆனால் இவ்வாக்கெடுப்பின் திகதி நெருங்க நெருங்க பிரசாரம் தீவிரமடைந்தது. இரண்டு பிரிவினர்களின் தலைவர்களுக்கு மத்தியில் தொலைக்காட்சியில் பகிரங்க விவாதங்கள் நடைபெற்றன.
இவற்றின் விளைவாக மக்கள் மத்தியில் இவ்வாக்கெடுப்பின் முக்கியத்துவம் துலங்கத் தொடங்கியது.
என்னே ஆச்சரியம் பிரசாரம் தொடங்கிய காலம் முதல் இப்பிரிவினைக்கெதிராகவே மக்கள் தீர்ப்பு இருக்கும் எனும் நிலை மாறி பிரிவினையை ஆதரிப்போர் விகிதாசாரம் முதல்முறையாக உயர்ந்தது.
தூக்கத்திலிருந்து விழித்தவர்கள் போல பிரதமர் டேவிட் கமரன், துணைப்பிரதமர் நிக் கிளேஹ், எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் மில்லிபாண்ட் என மூன்று முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்றாக ஸ்காட்லாந்து நாட்டிற்கு படையெடுத்தார்கள்.
மூலைமுடுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்தார்கள். பிரிவினை என்பது இலேசான விடயம் அல்ல அதன் பக்க விளைவுகளும், பின்விளைவுகளும் ஸ்காட்லாந்து நாட்டினருக்கும், எஞ்சிய ஐக்கிய இராச்சியத்திற்கும் பாதகமாகவே அமையும் என்பதைப் பறைசாற்றினார்கள்.
ஐக்கிய இராச்சியத்தின் முன்னனி வியாபார ஸ்தாபனங்களின் நிர்வாகிகள் இப்பிரிவினை இடம்பெற்றால் தமது வியாபார ஸ்தலங்களின் ஸ்காட்லாந்து நடவடிக்கைகளை ஐக்கிய இராச்சியப் பகுதிகளுக்கு மாற்ற வேண்டி வரும் என்றும் மறைமுகமாக அது ஸ்காட்லாந்து மக்களின் வேலைகளைப் பறிக்கும் என்றும் எச்சரித்தார்கள்.
இங்கிலாந்து நாட்டின் அரச வங்கியான பாங்க் ஆப் இங்கிலாந்து நிறுவனத்தின் முகாமையாளர் இப்பிரிவினையால் ஸ்காட்லாந்து நாட்டின் நிதிநிலைமைகள் பாதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
விளைவாக கருத்துக் கணிப்புகள் இப்பிரிவினைக்கு எதிரானவர்களின் வெற்றியை நோக்கித் திசை திரும்பியுள்ளது.
பிரிவினைப் பிரசாரத்தை முன்னெடுக்கும் ஸ்கொட்லாந்தின் முதலமைச்சரோ… சே! இதெல்லாம் வெறும் பூச்சாண்டி! இப்பிரிவினைக்கெதிரானவர்களின் தூண்டுதல்களினால் இத்தகைய பயமுறுத்தல்கள் மக்களின் நோக்கத்தைத் திசைதிருப்ப விடுக்கப்படுகின்றன என்கிறார்.
இம்மடலை நான் வரைந்து கொண்டிருக்கும் இன்றுதான் பிரச்சாரத்திற்குரிய கடைசிநாள். நாளை பொது வாக்கெடுப்பு.
இதிலிருந்து எமக்கு உறுதியாகத் தெரிவது என்னவென்றால் , இவ்வாக்கெடுப்பின் முடிவு எதுவாக இருந்தாலும் ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் எழுதப்படத்தான் போகிறது.
எப்படி என்கிறீர்களா ?
ஸ்காட்லாந்து பிரிவினையை ஆதரித்து அம்மக்கள் வாக்களித்தால் அம்மாற்றம் ஸ்காட்லாந்து மட்டுமல்ல ஏனைய ஐக்கிய இராச்சிய பகுதிகளையும் மிகவும் பாதிக்கும்.
ஐக்கிய இராச்சியத்தின் தேசியக்கொடி மாற்றப்பட வேண்டும்.
இப்பிரிவினைய எதிர்த்து தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியத்தில் ஸ்காட்லாந்து அங்கம் வகிக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் தீர்மானித்தால் ஐக்கிய இராச்சியத்தின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளின் படி ஸ்காட்லாந்து நாட்டு மாநில அரசுக்கான அதிகாரப்பரவலாக்கல் மேலும் விஸ்தரிக்கப்பட் வேண்டும்.
இதை நடைமுறுத்த வேண்டுமானல் ஏனைய மாநில அரசுகளான “வேல்ஸ்”, “வட அயர்லாந்து” ஆகிய மாநில அரசுகளின் அதிகாரங்களும் இதற்கு இணையாக பரவலாக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் “இங்கிலாந்து” எனும் மாநில அரசு ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும்.
இவைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானல் ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் சாசனம் மாற்றி எழுதப்பட வேண்டும்.
சில வாரங்களுக்கு முன்னால் பிரபல ஊடகவியலாளர் அண்ட்ரூ நீல் அவர்களினால் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் இவ்வாக்கெடுப்பின் முடிவினால் ஏற்படும் பாதிப்புகள் விரிவாக விளக்கப்பட்டது.
ஸ்காட்லாந்து மக்கள் பிரிந்து போனால் போகட்டும் அவர்களை அப்படியே விட்டுவிடுவோம் என்று இதனை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஏனைய ஐக்கிய இராச்சியப் பகுதி மக்கள் அனைவரும் அவதானமாக பார்க்க வேண்டிய மிகவும் முக்கியமான நிகழ்ச்சி இது.
இதன் பாதிப்புகளின் ஆழம் நாமனைவரும் இதனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாதவாறு அமைந்துள்ளது.
இதைப்பற்றி விரிவாக மற்றொரு மடலில் பார்ப்போம்.
எது எப்படியாயினும் ஐக்கிய இராச்சியத்தின் முன்னூறு ஆண்டுகால அரசியல் வரலாறு, அதன் வடிவமைப்பு மாற்றியமைக்கப்படுவது நிச்சயமாகிறது.
சரி ஸ்காட்லாந்து மக்கள் தமது விதியை நிர்ணயிக்க வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது, அதனால் பாதிக்கப்படப்போவது அவர்கள் மட்டுமல்லவே ஏனைய ஐக்கிய இராச்சிய மக்களுமல்லவா ?
அப்படியாயின் அவர்களின் எண்ணப்பிரதிபலிப்புகளை நிர்ணயிக்க அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இல்லையா ?
அர்த்தமிகுந்த கேள்வி காலம் விடை பகருமா?
மீண்டும் அடுத்த மடலில்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
—காவிரிமைந்தன்.
இசையின் மொழியை முற்றிலும் அறிந்த குயில் எம்.எஸ். சுப்புலஷ்மி …
மீரா திரைப்படத்தில் வரும் இந்த கானம் காற்றினிலே வரும் கீதம்…
இயற்றியிருக்கிறார் கல்கி கிருஷ்ணமூர்த்தி.. எத்தனையோ பாடல்கள் நம் காதில் விழுந்தாலும் எத்தனையோ கானங்கள் நம் நெஞ்சம் நுழைந்தாலும் … இந்த கானம் தருகிற அமைதியும் ஆனந்தமும் அலாதியானது.
எந்த அலம்பலும் இல்லாமல் அன்பின் மொழியாக … நந்தவனத்திற்குள் வருகின்ற தென்றல் போலே கேட்போரை நிம்மதியின் சன்னதிக்கு அழைத்துசெல்கிறார்.
கண்ணனை எண்ணி மனம் உருகி.. உச்சநிலையில் உள்ளம் தொடுகிற பணியை இந்தப் பாடல் எந்த ஆர்பாட்டமுமின்றி செய்துவிடுகிறது.
கர்நாடக சங்கீதத்தில் முதல் நிலையில் விளங்கிய இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மி பாடிய ஒரு சில திரைப்பாடல்களில் இதுவும் ஒன்று.
எஸ். வி. வெங்கட்ராமன் அவர்களின் இசையில் இழைந்தோடிவரும் இன்ப கானம்!
மனம் ஒருமிக்க இந்தப் பாடலில் மயங்கலாம்…
இறை அருள் பெற்ற இசையரசியின் குரல் கேட்டு இன்புறலாம் …
http://www.youtube.com/watch?v=Fg1XYA0atg8
காணொளி: http://www.youtube.com/watch?v=Fg1XYA0atg8
……………………………………………………..
படம்: மீரா (1945)
பாடல்: கல்கி கிருஷ்ணமூர்த்தி
இசை: எஸ். வி. வெங்கட்ராமன்
குரல்: எம்.எஸ். சுப்புலஷ்மி
……………………………………………………..காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே…
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொளி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுரமோகன கீதம்
நெஞ்சினிலே
நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்சுனை வண்டுடன் சோலைக்குயிலும்
மனங் குவிந்திடவும்
வானவெளிதனில் தாரா கணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆ.. என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில்
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்
காற்றினிலே வரும் கீதம்..
காற்றினிலே வரும் கீதம்..
காற்றினிலே..
கிரேசி மோகன்
“பூவைக் குமிடத்தில் பொன்வைப்போன் வள்ளலென்றால்,
பூவைக்கும் பாதத்தில் பிள்ளையை -நீவைத்தாய்;
கர்ண மகாப்பிரபு கேசவ் கலக்கும்நீ
வர்ண மகாப்பிரபு வே”…..கிரேசி மோகன் ….
“எதிர்காத்(து) இருப்பவர்க்கு ஏமாற்றம் தந்து
எதிர்காத்தாய் வீசும் எவர்க்கோ -மதில்மேலே
பூனைக்கீ டாமிரெண்டும்; பிள்ளை அழைத்தாலோ
தூணைப் பிளந்துதெய்வம் தொப்….
குழந்தை தெய்வமும் கேசவ் கொண்டாடும் தெய்வமும்….
நம் நலம் பேணும் தாயும் சேயும் நலம் ….
“ஓணமும் ஆதிரையும் ஒன்றிக் கலந்திட
கானில் பிறந்தமணி கண்டனே ,-ஞானமே,
தாய்மோ கினியவள் தாளில் பசித்திராய்
போய்வன் புலிப்பால் பருகு”….கிரேசி மோகன் ….
ஓணம் -அரி , திருவாதிரை -அரன்
கானில் -காட்டில்….
அன்புடையீர்!
வணக்கம்.
நேற்று மாலை (15.09.2014) நான் நிகழ்த்திய ”கடவுளும் கவிஞனும்” என்னும் சொற்பொழிவின் ஒளிப்பதிவை நீங்கள் இங்கே காணலாம்:
http://www.kalakendra.com/shopping/isaikkavi-ramanan-kadavulum-kavignanum-free-streaming-p-3612.html
பதிவுகளைச் செய்துவரும் Swathi Soft Solutions நிறுவனத்திற்கும், தொடர்ந்து உழைத்துவரும் நண்பர் திரு. ரஞ்சித் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
அன்புடன்,
ரமணன்