கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
அருச்சுன உவாச….குந்தி மகன் கேள்வி…..
———————————————————————————–
சுருதி ஒலிக்குள், பரிதி ஒளிக்குள்
இறுதிமுதல் இல்லா இறைக்குள் -கருதி
துதிக்கும் முனிவர்தம் தேடலுக்கு எட்டா
ஸ்திதிக்குப் புகன்றேன் சரண்….
பசுக்களை மேய்த்தோய் வசுதேவன் மைந்தோய்
விசுவமாய் எங்கும் விரிந்தோய் -அசையும்
அசையா பொருள்களுக்கு ஆதார மான
இசையே வணக்கம் உனக்கு….
படைத்துப் பறிமாறி பாதுகாத்(து) ஆவி
கடைத்தேற வைத்திடும் கண்ணா -துடைத்து
உலகேழை உண்டன்(று) உமிழ்ந்தோய் உனக்கிங்(கு)
இலையேகாண் ஓர்சக்தி ஈடு ….
அயனுக்கு வேதம் அறிவித்(து) அவன்தன்
வியனுலகில் மாயை விதைத்து -பயனுற
ஞானகர்ம பக்தியென்ற நாட்டம் அளித்தெம்மை
வானமர வைத்திடுவோய் வாழ்த்து….
பேருண்மை, மாயப் பெரும்பொய் பிரகிருதி
வேரொன்றும் இல்லா விருக்ஷம்நீ, -யாரென்று
கேட்டால் விளம்பிடுவோம் கேசவன் தானந்த,
சேட்டை புரிகின்ற சேய்….
ஸ்ரீபகவான் உவாச….கிருஷ்ணன் பதில்…..
————————————————————————————————
”கலக்கம் உறாதே விலக்கொணா கர்மம்
நிலத்தில் பிறப்பும் இறப்பும் -இலக்கணம்
பார்க்க இதுகவிதை இல்லைகாண் பார்த்தனே
பார்த்தால் புசிக்கும் பகை”….
”தீண்டும் இயற்கையின் தூண்டுதலால் வந்துபொகும்
யாண்டும் குளிர்,வெப்பம் இன்ப,துன்பம் ! -பாண்டு
மகனே பொறுப்பாய், மனதால் பொருப்பாய்
புகழாம் போரில் புகு”….
”வியப்பென பார்த்து, வியப்பென கூறி
வியப்பென கேட்டும் விளங்கா -வியப்பாம்
விவரிக்க ஒண்ணா விசித்திர ஆன்மா
எவருக்கும் எட்டா எழில்”….
”நாணை இழுத்திட நாணாதே நண்பனே
ஆனை படுத்தால் அசுவமட்டம் -சேனைக்
களம்நீங்க செல்லாத காசாவாய், வேந்தருன்
உளம்நோக வைப்பார் உவந்து”….
”நூறைநீ வென்றிட ஈரே(ழு) உலகாள்வாய்
மாரில் கணைதைத்து மாளுங்கால் -வீராநீ
சொர்கம் புகுவாய் சுதாரித்(து) எழுந்திரு
தர்கம் புரிதல் தவிர்”….
”சுகதுக்கம், பேறு, இழப்பு, பெரும்வெற்றி
புகும்தோல்வி யாவினையும் போற்றி -நிகராக
ஏற்றிடுவாய் வேற்றுமையை, நூற்றினைக்கொல் கூற்றனென
தோற்றிடும்பார் பாவம் தொலைந்து”….
”ஈங்கிதனைக் கேட்டோய் இதன்பெயர் கேண்மக்கள்
சாங்கியம் என்போர், இனியடுத்து -தாங்கிய
கர்மத் தளைகளின் கட்டவிழ்க்கும் யோகத்தின்
மர்மம் உரைப்போம் உமக்கு”….
”வீணாகிப் போகா விடாமுயற்சி யோகமிது
தானாக மீறாது தன்வரம்பை -வாநாளில்
எள்ளளவு செய்வோரை எப்பயம் சூழ்ந்தாலும்
உள்ளிருந்து காக்கும் உரை”….
”விண்ணென்று நானொத்து திண்ணென்ற புத்திக்கு
கண்ணொன்று காணுமது கட்டுறுதி -என்னென்றும்
ஏகா கிரகமாம் இவ்வுறுதி அற்றமனம்
சாகா வரம்பெற்ற சத்ரு”….
”விரையற்ற பூக்கள் விரயமாதல் போலே
உரையற்ற சொற்கள் உதிர்ப்பர் -மறையுற்ற
வாசகத்தில் மேம்போக்காய் மீதுலாவி கற்றோரைப்
பேசுவார் கேலி புரிந்து’….
———————————————————————————