மாண்டலின் ஶ்ரீநிவாஸ்
கே. ரவி
மாண்டலின் ஶ்ரீநினிவாஸ் மாண்டனன் என்பதா
மன்புகழ்ப் பொன்னுடல் பூண்டனன் என்பதா
வேண்டலின் வேண்டாமை வித்தாகும் முக்திக்கு
காண்டலின் கேட்டலே கருத்துக்கு விருந்தாகும்
மாண்டலின் என்பதோர் கருவியா அருவியா
ஆண்டவ னேவியந்து அழைத்துவரச் சொன்னானோ
மாண்டலின் ஶ்ரீநினிவாஸ் மாண்டனன் என்பதா
மன்புகழ்ப் பொன்னுடல் பூண்டனன் என்பதா
நரம்புகள் மீட்டினான் ரசிகர்க ளின்நாடி
நரம்புகள் மீட்டினான் நாதப் பிரளயத்தின்
வரம்புகள் உடைந்தன வானமே அதிர்ந்ததாம்
திறம்புகல் வதற்கின்னும் தேடுவோம் சொற்களே
மாண்டலின் ஶ்ரீநினிவாஸ் மாண்டனன் என்பதா
மன்புகழ்ப் பொன்னுடல் பூண்டனன் என்பதா
தூண்டிலின் முனையிலே துடிக்கும் புழுவென
கூண்டிலே அடைபட்டுக் குமுறும் கிளியென
தோண்டியைப் போட்டுடைத் தாண்டியென் றாடவா
மாண்டிலன் ஶ்ரீநிவாஸ் என்றுதான் பாடவா
கே.ரவி
19-09-2014