கே. ரவி

இதுவரை மெளனமாக இருந்த புத்தி சிகாமணி கேட்கிறான்: “நீ என்ன சொன்னாலும் சரிப்பா, ஆனா நான் இல்லாம, அதாவது புத்தியைப் பயன்படுத்தாம, ஒரு கவிதை எழுதவே முடியாதுப்பா”.

ஒப்புக் கொள்கிறேன் சிகாமணி. ஆனால் ஒரு கவிதை, வடிவம் பெறுவதற்குத்தான் உன் உதவி தேவை. அதை மறுப்பதற்கில்லை. அது ஜனிப்பதற்கு உன் உதவி தேவையில்லை.

“என்னப்பா குழப்புகிறாய்! விளக்கமாகச் சொல்லுப்பா”, சிகாமணி கேட்கிறான்.

சொல்கிறேன். நான் கேட்டு நீ கதை சொன்னது போக, இப்போது நீ கேட்டு நான் கதை சொல்வது போலாகிவிட்டதே! நல்ல வேடிக்கையப்பா!

இனம்தெரியாத ஏதோ ஓர் ஈர்ப்பினால் உந்தப்பட்டு, மிக உயரத்திற்கு அல்லது ஆழத்திற்கு மனம் சிறகடித்துப் பறக்கும் போது, அது சில அனுபவக் களங்களைச் சந்திக்க நேர்கிறது. அந்தக் களங்கள் வரலாற்று நிகழ்ச்சிகளாக இருக்கலாம்; அல்லது, வெறும் எண்ண எழுச்சிகளாகவோ, சலனங்களாகவோ இருக்கலாம்; அல்லது, நேரில் பார்த்திராத ஒரு காட்சியாக இருக்கலாம். எந்தக் களத்துக்கு ஏற்றவாறு அந்த மனத்தின் அப்போதைய அதிர்வுகள் உள்ளனவோ, அந்தக் களம் அந்த மனத்தைத் தன்வயப் படுத்திக் கொள்கிறது. அது சில கணங்களுக்கு மட்டுமே. அந்தக் களத்தின் அதிர்வுகளும், அந்த மனத்தின் அதிர்வுகளும் கிட்டத்தட்ட ஒரே அலைவரிசையில் சங்கமிக்கும் போது எழும் புதிய சலனங்களை மொழியாக்கம் செய்யும் திறம் அந்த மனம் சார்ந்த அறிவுக்கு இருந்தால் அந்தச் சலனங்கள் ஒரு கவிதையாக வெளிப்படலாம். அல்லது, அச்சலனங்களை வேறு விதமாக வெளிப்படுத்தும் ஆற்றல் அந்த மனத்துக்கு இருந்தால், அச்சலனங்கள் ஓர் ஓவியமாகவோ, சிற்பமாகவோ, சங்கீதமாகவோ, வேறு கலைவடிவிலோ உருவம் பெறலாம். அந்தச் சலனங்கள் ஜனிப்பதில் அறிவின் பங்கு அதிகம் இல்லை. எந்த அனுபவக் களம் அந்த மனத்தை அந்தக் கணத்தில் வரவேற்றுத் தன்வயப் படுத்திக் கொள்கிறது என்பது வேண்டுமானால் ஓரளவு அந்த மனம்சார்ந்த அறிவைப் பொறுத்து அமையலாம். ஆனால், அந்தச் சங்கமத்தில் ஜனிக்கும் சலனங்களுக்கு அதற்கு மேல் அறிவு பொறுப்பாக முடியாது. அச்சலனங்கள் உருவம் பெற்று வெளிப்பட நிச்சயம் அறிவின் துணை வேண்டும். அப்படித் துணை செய்யும் போது அறிவு தன் அதிகப் பிரசங்கித்தனத்தை அடக்கிக் கொண்டு அந்தச் சலனங்களை அப்படியே பிரதிபலிக்கும் வடிவம் இழைப்பதில் மட்டும் உதவினால், அந்தப் படைப்பில் அந்த அனுபவக் களம் கச்சிதமாக அமர்ந்து கொள்ளும். அப்படியின்றி, அறிவு தன் மேல்பூச்சுகளை அந்த வடிவத்தில் அதிகம் இழைக்கத் தலைப்பட்டால், அந்தப் படைப்பு, ரசிகர்களின் அறிவு நிலையைக் கடந்து ஆழத்துக்குச் செல்ல முடியாமல் தடுமாற நேரிடும். அப்படிப்பட்ட படைப்பு, காலம் வென்று நிற்கும் படைப்பாக உருவாக முடியாது. ஏனென்றால், ரசிகரின் அறிவு நிலையைக் கடந்து, அவர்களுடைய அந்தரங்கத்தை ஊடுருவிச் சென்று, அவர்களுக்குள் தான் ஜனித்த அனுபவக் களத்தை மீண்டும் உருவாக்கி அவர்களை அந்தக் களத்துக்குக் கடத்திச் செல்லும் ஆற்றல் அத்தகைய படைப்புக்கு இருக்காது.

நான் இளங்கலை (பி.ஏ.) வகுப்பில் பயிலும் போது, எங்களுக்கு இந்திய மெய்யியல் பாடம் நடத்திய பேராசிரியர் ராதாகிருஷ்ணன் என்பவர் சொன்ன ஒரு கதை நினைவுக்கு வருகிறது. அதற்கு மூலம் எதுவென்று நினைவில்லை. ஓர் ஊரின் எல்லையில் ஒரு யோகி தவம் செய்து கொண்டு வாழ்ந்திருந்தார். அந்த ஊர் மக்களுக்கு அவரிடம் மிகுந்த மரியாதை இருந்தது. எல்லாரும் அந்த வழியே செல்ல நேரிடும் போது அவரை வணங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஒருநாள், ஓர் இளம் பெண் அவ்வழியே போகும் போது அவரை வணங்கினாள். திடீரென்று, அவர் அந்தப் பெண்ணிடம் வலிந்து உடலுறவு கொள்ள முயற்சி செய்தார். அந்தப் பெண் திமிறிக் கொண்டு விடுபட்டு ஓடிப்போய் நடந்ததை ஊர்மக்களிடம் சொல்லவும், அவர்கள் திரண்டு வந்து அந்த யோகியைத் தாக்க முற்பட்டனர். ஊர் பெரியவர் ஒருவர் அவர்களை அடக்கி விட்டு, “ஏன் சாமி இப்படிச் செஞ்சீங்க?” என்று கேட்டதும், சில மாதங்கள் கழித்து வந்தால் பதில் சொல்வதாகச் சொல்லி அந்த யோகி அவர்களை அனுப்பி வைத்தார். சில மாதங்கள் கழித்து ஊர் மக்கள் மீண்டும் அவரிடம் சென்று கேட்டதும், அவர்களை அருகில் ஓரிடத்துக்கு அழைத்துச் சென்று ஒரு கழுதை சில மணித்துளிகளுக்குமுன் ஈன்ற கன்றைக் காட்டி, “இந்த ஜீவன் உடல்பெறத் துடித்துக் கொண்டிருந்ததைச் சில மாதங்களுக்கு முன் நான் பார்த்த போது, அதற்கு மனிதப் பிறவி கொடுக்கலாமே என்று நினைத்து நான் எடுத்த முயற்சிதான் அது. ஆனால் இறைவனின் சித்தம் அந்த ஜீவன் கழுதையாகப் பிறக்க வேண்டும் என்று இருக்கும் போது அதை மாற்ற நான் யார்?” என்று சொன்னாராம். இந்தக் கதை முக்கியமில்லை. இதில் வரும் யோகியின் சமாதானம் ஏற்றுக் கொள்ளத் தக்கதா என்ற விவாதத்திலும் நான் ஈடுபடப் போவதில்லை. ஆனால், கவிதையின் ஜனன ரகசியத்தை ஓரளவு புரிந்து கொள்ள இக்கதை சற்றே உதவக் கூடும் என்பதால் அதை இங்கே சொன்னேன். இந்தத் தொடரே என் கவிதையின் வரலாறுதானே!

கவிதை எப்படி ஜனிக்கிறது என்பதை விளக்க நான் ஏன் இவ்வளவு பாடுபட வேண்டும்? நல்ல கவிதைகளைப் பகிர்ந்து கொண்டாலே போதுமே!

மழை, காற்று, வானம், மின்னல் என்று பாடவந்த பாரதி எப்படி ஓர் அனுபவக் களத்திற்கு உந்தப்பட்டு, அங்கே ஒரு கவிதையின் ஜனனத்துக்குக் கருவியாகி, அந்தக் கவிதையின் மூலம், காலகாலத்துக்கும் தன் வாசகர்களை அதே அனுபவக் களத்துக்குக் கடத்திக் கொண்டிருக்கும்படி அந்தக் களத்தை நிரந்தரமாக்கி விட்டான் என்பதைப் பார்ப்போம்:

மழைபொழிந்திடும் வண்ணத்தைக் கண்டுநான்images

வானிருண்டு கரும்புயல் கூடியே

இழையும் மின்னல் சரேலெனப் பாயவும்

ஈர வாடை இரைந்தொலி செய்யவும்

உழையெலாம் இடையின்றி இவ்வானநீர்

ஊற்றும் செய்தி உரைத்திட வேண்டுங்கால்

மழையும் காற்றும் பராசக்தி செய்கைகாண்

வாழ்க தாயென்று பாடுமென் வாணியே

வான் இருண்டு போவதும், புயல் கருப்பாக இருப்பதும் கட்புலனுக்கு. ஈரப்பதத்தோடு வீசும் வாடைக் காற்றோ நாசிப்புலனுக்கு. காற்று வீசும் ஆரவாரமோ செவிப்புலனுக்கு. வானத்திலிருந்து பொழியும் மழை நீரோ உற்றறியும் தீண்டல் புலனுக்கு. இப்படியாகத் தான் பார்த்த ஒரு காட்சிக்கு கண், காது, மூக்கெல்லாம் வைத்துப் பாடுகிறான் பாரதி. கண், மூக்கு, காது, மெய் என்று நாலு புலன்களுக்கு விருந்து தந்தவன், மிக முக்கியமாக விருந்துச் சுவைக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் நாவை மட்டும் விட்டு விட்டானோ? இல்லை. ‘வாழ்க தாய்’ என்பதே நாவுக்கு விருந்து என்று முடிக்கிறான். எப்படி ஒரு சிறு பொறியைப் பெரு நெருப்பாக்கி ஐந்து புலன்களுக்கும் விருந்து படைக்கிறான் பாருங்கள், கேளுங்கள், நுகருங்கள், தீண்டுங்கள், சுவைத்து அருந்துங்கள்!

உழையெலாம் இடையின்றிப் பொழியும் வான நீரை, “இவ் வான நீர்” என்று சொல்லி, நம்மை அந்த அனுபவக் களத்துக்குள்ளேயே நிற்கச் செய்துவிடுகிறானே! ‘வாழ்க தாய்’ என்ற குரல் எங்கே இருந்து வருகிறது? அது “என் வாணியின் குரல்” என்கிறான். ஆங்கிலத்தில் ‘மை ம்யூஸ்’ (my muse) என்பார்களே, அதைத்தான் அவன் சொல்கிறான். அந்த அனுபவக் களம் அவனுடைய அகத்தின் ஆழத்தில் இருப்பதைத்தான் அவன் சுட்டிக் காட்டுகிறான். ‘இவ்வான நீர்’ என்ற சொற்றொடரிலுள்ள ‘இவ்’ என்ற சொல்லும், ‘என் வாணி’ என்பதில் உள்ள ‘என்’ என்ற சொல்லுமே இந்தக் கவிதையின் உயிர்ச் சொற்கள். இந்தக் கவிதையின் அனுபவக் களத்துக்கு வாசகனைக் கடத்திச் செல்லும் மந்திரச் சொற்கள். கவிஞன், தனக்குள் வாசகனை வரவேற்று, அழைத்துச் சென்று, அங்கே மழை பொழியும் ஓர் அனுபவக் களத்தில் அவனை நிற்கச் செய்து, அவனை மழையில் நனைய வைத்து, அவனுடைய ஐந்து புலன்களுக்கும் விருந்து படைத்து, அவனைத் திக்குமுக்காட வைக்கும் ஓர் உயர்ந்த கவிதை இது.

சமஸ்க்ருதத்தில் ‘ப்ரதீபா சக்தி’ என்று குறிப்பிடுவதைத்தான் நான் விளக்க முற்பட்டேன். மொழிவடிவம் பெறுவதற்கு முன்பே கவிதை ஜனித்து விடுகிறது. அது உயிருள்ளது. மொழி அதற்கு உடல் மட்டுமே வழங்குகிறது. உடலும் மிகவும் முக்கியம்தான். அந்த உடலாகிய மொழிவடிவம் ஏற்க உதவும் மகத்தான பணியைச் செய்யும் புத்தி சிகாமணியைப் புறக்கணிக்க முடியாது. ஆனால், அவன் முந்திரிக் கொட்டைபோல் ப்ரதீபா சக்திக்குள் அத்து மீறிப் பிரவேசித்து விடக் கூடாது. அங்கே அவனுக்கு வேலையில்லை. அது மனோன்மணியின் ஆட்சித்தளம்; ஆண் வாடையற்ற அல்லி அரசாங்கம்!

ப்ரதீபா சக்தி என்ற திறன்வாய்க்கப் பெற்றவர்களே மஹாகவிகள். அவர்கள் தீர்க்கதரிசிகள். வரப்போவதை முன்கூட்டியே ஞான திருஷ்டியில் கண்டு சொல்லக் கூடியவர்கள். இப்படித்தான் நான் நினைத்திருந்தேன். பாரதியே அதற்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் தோன்றினான். அவன் சொன்ன படியே நடந்த செய்திகள் எத்தனை! நூறாண்டுகளுக்கு முன் அவன் பாடிய போது, “சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்று நாம் கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லையே! சந்தி தெருப்பெருக்குதல் ஒரு சாத்திரமாக, விஞ்ஞானமாக வளரும் என்று நினைத்தோமா? அணுக்களுக்கு ஆங்கிலத்தில் ‘ஸ்பின்’ எனப்படும் சுழற்சி உண்டு என்பது 1925-ஆம் ஆண்டு கெளட்ஸ்மிட் என்ற ஜெர்மானிய விஞ்ஞானி சொல்லும்வரை நமக்குத் தெரியாத போது, பாரதிக்கு மட்டும் எந்த இயல்நூலார் அது பற்றிச் சொல்லி, அவனைப் பாஞ்சாலி சபதக் காவியத்தில், “இடையின்றி அணுக்களெல்லாம் சுழலுமென இயல்நூலார் இயம்பக் கேட்டோம்” என்று பாட வைத்தனர்? “இடையின்றி” என்ற சொல்லின் கனபரிமாணங்களை முழுதும் விளக்க இது இடமில்லை. வியப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். அப்பப்பா, இது என்ன தீர்க்க தரிசனம்! என் வியப்புக்குச் சரியான விடை தந்தவர் ஒரு பெரிய மஹான். அந்த விடையைப் பற்றிச் சொல்வதற்கு முன், அவரோடு எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தைச் சொல்ல வேண்டும்.

அந்த மஹானும், என் தாத்தா, அதாவது, என் தந்தையின் தந்தை, ம்ருத்யுஞ்ஜய தீக்ஷிதரும் கரூரில் ஒருசாலை மாணாக்கர்களாம். அதாவது, ஒரே பள்ளியில் படித்த பால்ய நண்பர்கள். என் தாத்தாவுக்குத் திருமணம் ஆன பிறகு அவர் இல்லத்தில் என் பாட்டி பாலசுந்தராம்பாள் பரிமாற, என் தாத்தாவோடு அந்த மஹான் பலமுறை உணவருந்திய செய்தியும் நான் கேள்விப்பட்டுள்ளேன். என் தாத்தா நான் பிறப்பதற்கு வெகு காலத்துக்கு முன்பே, என் தந்தை பள்ளிச் சிறுவனாக இருந்த போதே இறந்து விட்டார்.

எனக்கு வயது 7 அல்லது 8 இருக்கும், 1960-61 என்று நினைக்கிறேன். என் வீட்டுக்கு அருகில் உள்ள மண்டபத்திற்கு அந்த மஹான் விஜயம் செய்திருந்தார். அவரைப் பார்க்க என் பாட்டி என்னை அழைத்துச் சென்றிருந்தார். அவர் அந்த மண்டபத்தின் மேடையில் வீற்றிருந்தார். மேடையிலிருந்து வெகு தொலைவில் இருந்த ஒரு தூண் மறைவில் பாட்டி அமர்ந்து கொண்டு ஒரு வாழைப்பழத் தட்டை என்னிடம் தந்து, போய் அதை அந்த மாஹனிடம் தந்து ம்ருத்யுஞ்ஜய தீக்ஷிதரின் பேரன் என்று சொல்லி வணங்கி வரச்சொன்னாள். அவர் இருந்த மேடைக்கும், நாங்கள் இருந்த தூணுக்கும் நடுவில் ஐந்நூறுக்கு மேற்பட்டவர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். அவர்களை எல்லாம் தாண்டிக் கொண்டு எப்படியோ மேடையில் ஏறி அவரிடம் தட்டை வைத்து விட்டு வணங்கினேன். நான் இன்னார் பேரன் என்று சொல்ல வாயெடுத்தேன். அவரை அருகில் கண்ட மலைப்பில் வார்த்தை வரவில்லை. நான் எதுவும் சொல்வதற்கு முன்பே, அவர் முந்திக் கொண்டு, “ம்ருத்யுஞ்ஜயன் பேரனா?” என்று கேட்டு விட்டு, நான் கொடுத்த வாழைப்பழச் சீப்பிலிருந்தே ஒரு பழத்தை எடுத்து எனக்குத் தந்து ஆசி வழங்கி அனுப்பியதும், வியர்த்து, விறுவிறுத்துப் போனேன். அவர் சொன்னதைப் பாட்டியிடம் வந்து சொல்லி வியந்ததும், பாட்டி “அவர் ஒரு தீர்க்கதரிசி” என்று சொன்ன போதுதான் அந்தச் சொல்லை நான் முதலில் கேள்விப்பட்டேன். அன்று மயிலை, சமஸ்க்ருதக் கல்லூரியில் சந்தித்த காஞ்சி மஹாபெரியவர்தான் கவிஞர்களின் ப்ரதீபா சக்தி பற்றியும், தீர்க்க தரிசனம் பற்றியும் எனக்கு ஒரு தெளிவு ஏற்படுத்தினார்.

காஞ்சி மஹாபெரியவரின், ‘தெய்வத்தின் குரல்’ என்ற நூலை நான் பிறகு படிக்க நேர்ந்தது. அதில் அந்த மஹானின் கருத்து நேர்மையும், நடைத் தெளிவும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. அவர் சொல்லியிருந்த சில கருத்துகளில் அப்படியே உடன்பட என் சிற்றறிவு தயங்கினாலும், அதன் பல செய்திகள் என்னை மிகவும் பாதித்ததை நான் மறுப்பதற்கில்லை. அதன் நான்காம் பாகத்தில், அவர் ஒரு செய்தி சொல்கிறார். காளிதாசனிடம் தனக்கு ஒரு சரமகவி பாடுமாறு போஜராஜன் கேட்டுக் கொண்டும், கட்டளையிட்டும், காளிதாசன் மறுத்து விடுவதற்கு நிறைய காரணங்களை அவர் அதில் சொல்கிறார். அப்படிப் பாடினால் நிஜமாகவே போஜன் உயிர் பிரிந்துவிடும் என்று காளிதாசனுக்குத் தெரியும் என்பதும் ஒரு காரணம் என்று சொல்கிறார். அந்தக் கருத்துச் சூழலில் மஹாபெரியவர் எழுதுகிறார்:

இன்னொரு காரணத்தாலும் அவன் கல்பனையாகச் சரமகவி பாட முடியாமலிருந்தது. ரிஷிகளைப் பற்றி பவபூதி “உத்தரராம சரித”த்தில் ஸ்ரீ ராம சந்த்ர மூர்த்தியின் வாயிலாக ஒரு உண்மையைச் சொல்கிறார். “ஏனைய மக்கள் என்ன நடக்கிறதோ அதைச் சொல்வார்கள். ரிஷிகளோ என்ன சொல்கிறார்களோ அது நடந்துவிடுகிறது. ஒரு விஷயத்தை மற்றவர்கள் வார்த்தையாகச் சொல்கிறார்களென்றால், ரிஷிகளைப் பொறுத்தமட்டிலே அவர்கள் சொல்கிற வார்த்தையை விஷயம் ஓடிப்போய்ப் பிடித்துக்கொண்டு நிஜமாகிவிடுகிறது – வாசம் அர்த்தோ (அ) நுதாவதி” என்று ராமர் வஸிஷ்டரைக் குறித்துச் சொல்வதாக பவபூதி ஒரு General truth -ஐ (பொது உண்மையை) ச் சொல்கிறார்.

ரிஷியும், தெய்வாநுக்ரஹம் பெற்ற அருட்கவியும் ஒன்று என்பதற்கேற்ப, அம்பாளின் பரிபூர்ண க்ருபையைப் பெற்றிருந்த காளிதாஸனின் வாக்குக்கும் இப்படிப்பட்ட சக்தி இருந்தது. அதாவது அவன் வாக்கால் என்ன கவிதை வந்தாலும் அது நிஜமாகிவிடும். அவன் கல்பனையாகச் சொல்வதே ஸத்யமாகிவிடும்.

asrபாரதி தீர்க்கதரிசி, அவன் பின்னால் வரப்போவதைத் தன் ஞானக் கண்ணால் முன்கூட்டியே கண்டுரைத்தவன் என்று நினைத்துக் கொண்டிருந்த என்னை காஞ்சிப் பெரியவரின் கட்டுரை மாற்றி விட்டது. பாரதி போன்ற மஹாகவிகள் கண்டு சொன்னார்கள் என்பதை விட, அவர்களுடைய உள்ளத்தில் உண்மையொளி இருந்ததால் அவர்களுடைய வாக்கினிலும் ஒளியுண்டாகியது; அவர்கள் சொன்னதெல்லாம் அப்படியே பலித்தது, நிகழ்ந்தது என்று எனக்குப் புரிய வைத்தவர் மஹாபெரியவர்.

ஒரு மாஹாகவியை மஹரிஷிகளுக்கு ஈடாகக் கருதினார் மஹாபெரியவர். ஆம், உயிருள்ள கவிதைகளைப்asr1 படைப்பதால், மஹாகவிகள் கடவுளுக்கே நிகரானவர்கள். இதை எழுதும் போதே எனக்கு ஒருவர் நினைவுக்கு வருகிறார். மிகப்பெரிய கவிதை ரசிகராகவும், அதே சமயத்தில் குழந்தைகளுக்காக எழுதுவதையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டும் வாழ்ந்த அமரர் பூவண்ணனைத்தான் குறிப்பிடுகிறேன். முன்பின் அவரை எனக்கு அறிமுகம் இல்லாத போது, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கவியரங்கத்தில் நான் அவரைச் சந்திக்க நேர்ந்தது. சென்னை, மைய நூலக வளாகத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் அவர் பேசிய போது, என்னைப் பற்றிக் குறிப்பிட்டு என் கவிதை ஒன்றை, மனப்பாடமாகச் சொல்லிக் காட்டியதும் நான் மிகவும் வியப்படைந்தேன், மகிழ்ச்சியும் அடைந்தேன். அவர் சொன்ன என் கவிதை இதுதான்:

தீப்பிழம்பைக் கையில் அள்ளிச் சாறெடுக்கும் போது

தேன்வடிந்த தென்று சொல்லித் துள்ளுபவன் யாரு

தேன்வடிந்த துளிகளிலே பூவாசம் வைத்துத்

தென்றலிலே தூவியிசை கொள்ளுபவன் யாரு

கனவென்ற தேர்கொண்டவன் – ஒரு

கவிஞனெனப் பேர்கொண்டவன்

பெருவியப்பை ஒருசொல்லின் கூர்முனையில் வைத்துப்

பேரொளியை அதற்குள்ளே போட்டடைத்து வைத்து

மறுசொல்லுக் கிடையிலொரு மெளனத்தை வைத்து

மந்திரமாய்ச் சொல்லுகிற மானிடனும் யாரு

கடவுளையே நேர்கண்டவன் -ஒரு

கவிஞனெனப் பேர்கொண்டவன்

சொல்வதொரு பாதியவன் சொல்வதில்லை மீதி

சொல்லியதே சொல்லாத தையுணர்த்தும் நீதி

வெல்லுவதும் இன்பமதில் தோற்பதுவும் இன்பம்

வேற்றுமை யிலாதவனை ஏற்பதுவும் இன்பம்

காலத்தின் சீர்கொண்டவன் -ஒரு

கவிஞனெனப் பேர்கொண்டவன்

கடவுளையே நேர்காண்பது சாத்தியமா? இதற்கு விடை தேடித்தானே நரேந்திரன் பித்துப்பிடித்து அலைந்தான்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *