Blog

  • காற்று வாங்கப் போனேன் பகுதி – 21

    கே. ரவி

    ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் அருட்செல்வர் திரு.நா.மகாலிங்கம் அவர்கள் நடத்தி வரும் வள்ளலார்-காந்தியடிகள் விழாவில் ஒருநாள், 1970 என்று நினைக்கிறேன், கவிஞர் தேவநாராயணன் இறைவணக்கம் பாடினார். அவர் பாடிய பாடல், பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் வரும் கலைமகள் துதி.

    தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல்

    சிந்திப் பார்க்கே

    களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல

    காட்டல் கண்ணீர்த்

    துளிவரவுள் ளுருக்குதலிங் கிவையெல்லாம் நீயருளும்

    தொழில்க ளன்றோ

    ஒளிவளரும் தமிழ்வாணீ அடியனேற் கிவையனைத்தும்

    உதவு வாயே

    அவர் பாடும் போது ஏனோ தெரியவில்லை என் கண்கள் கலுழ்ந்தன. என்னைச் சுற்றி நிறைய பேர் இருந்தனர் என்பதை மறந்து நான் கண்ணீர் சொரிந்து நின்றது எனக்கே அதிசயமாய் இருந்தது. அது என்னை மீறி நடந்த செயல். காரணம் புரியவில்லை. என் அகங்காரத்தை ஊடுருவிச் சென்று உயிர்நிலையை அளாவிப் பிசைந்து, சுற்றம் மறக்கச் செய்து, ஏன், என்னையே நான் மறக்கச் செய்த அந்தப் பாட்டு வரிகளை எண்ணி எண்ணி வியந்தேன். ‘மெய்மறத்தல்’ என்பதை எனக்கு நிதர்சனமாக உணர்த்தியது அந்தப் பாடல். உருக்கம் விளைவிக்கும் ஆற்றல் கவிதைக்கு உண்டு என்பதை உணர்ந்து கொண்டேன். “அழுதால் உன்னைப் பெறலாமே” என்ற அரற்றலின் பொருள் புரியத் தொடங்கியது. இதுவே மெய்யான தரிசனம் என்று குதிக்கத் தொடங்கினாள் மனோன்மணி.

    சிகாமணியோ தன் வேலையைக் கச்சிதமாகச் செய்யத் தொடங்கினான்.

    “நமக்கு என்ன தெரியும் என்பதில் தெளிவு வேண்டும். அதைப் பிறர்க்குச் சொல்ல முயலும் போதும் தெளிவாகச் சொல்ல வேண்டும். சிந்திப்பார்க்கே களிபெருகுமாறு அவர்கள் உள்ளங்களில் ஆனந்தக் கனவுகள் பல காட்ட வேண்டும். கேட்போர் மனமுருக வைத்து, அவர்களறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்கச் செய்ய வேண்டும். ஈதனைத்தும் உன் அருளால் மட்டுமே கிடைக்கக் கூடியவை. இவை அனைத்தையும் எனக்கு நீ அருள வேண்டும். இவ்வாறு தன்னுள் தமிழ்க் கவிதைகள் ஊற்றெடுக்கும் சுடராக விளங்கும் கலைமகளை பாரதி வேண்டுகிறான்.”

    இப்படி ஒரு நீண்ட வியாக்யானப் பிரசங்கம் செய்தான் சிகாமணி. உண்மைதான், கவிஞனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவள் கலைவாணி. அந்தப் பாட்டை நான் கேட்கும் போதே, என் உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டி, என்னையறியாமல் கண்ணீர் பெருகும் உருக்கத்தை விளைவித்தவள் அந்த ஸ்வேத பத்மாஸனி தானே!

    மனோன்மணி அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஆனந்தக் கூத்தாடினாள். ஆனந்தக் கனவு பல காட்டுவதும், கண்ணீர்த் துளிவர உள்ளுருக்குவதும் ஆகிய இரண்டு தொழிலையும் ஒரே சமயத்தில் நடைபெறச் செய்யும் அதிசயத்தில் திளைத்துப் பரவசம் அடைகிறாள். தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் . . .!

    அர்த்தம் முழுதாகப் புரியாத போதும் வானொலியில் “ஓ துனியா கே ரக்குவாலே”, “ஓ ரே தால் மிலே நதீகி ஜல் மே” போன்ற ஹிந்தி பாடல்களைக் கேட்டு உருகிக் கண்பனித்திருக்கிறேன். அது த்வனியின் சிறப்பு. த்வனி என்ற தென்றல் வீசும் போது தலையசைக்கும் நாணல்தானே அர்த்தம்! கவிதையின் ஊற்றுக்கண் எங்கே என்பதை ஒருவாறு புரிந்து கொண்டேன்.

    என் கவிதைப் பயணத்தில் இரண்டு திருப்புமுனைகள்: பாரதி கலைக்கழகமாகிய அடியார்கள் திருக்கூட்டத்தில் நான் சேர்ந்தது ஒன்று; பாரதியின் விஸ்வரூப தரிசன அனுபவம் நேர்ந்தது மற்றொன்று. இரண்டுக்குமே கவிமாமணி தேவநாராயணன் காரணமானார்.

    ஆயிரம் மேதைகள் பிறந்திடலாம் – அதில்

    ஒருவந்தான் கவியம்மா – அந்த

    ஒருகவிஞன் சொல்லும் ஒவ்வொரு கவியும்

    உன்னருட் துளியம்மா – அதற்கிவ்

    வுலகம் விலையம்மா

    இப்படி மனம் நெகிழச் செய்யும் கவிதைகள் பல எழுதியவர் தேவநாராயணன். படிப்போர் நெஞ்சில் நம்பிக்கைச் சுடரேற்றும் வரிகளையும் வாரி வழங்கியவர் அவர்:

    உழைக்கத் தெரிந்த என்னை உலகம்deva

    ஒருநாள் உணருமடா

    ஒவ்வொரு கல்லாய் அடுக்கி வைத்தே – என்

    மாளிகை உயருமடா

    எப்பொழுதும் என் மனத்தின் ஒரு மூலைல் ஒலித்துக் கொண்டே இருக்கும் அவர் பாடல்:

    பாரதியே ஒரு பாரதம் – அவன்

    பாட்டெல்லாம் தமிழ் மாருதம்

    பாரத மண்ணின் காவிய வளம்தான்

    பாரதி தோன்றக் காரணம்

    அந்தப் பாட்டில் வரும் ஒரு வரி:

    ஏட்டில் எழுத்தில் இனிவரப் போகும் எழுச்சிகள் எல்லாம் பாரதி

    இந்தச் சத்தியப் பிரகடனத்தைச் செய்த அவருக்கு வெறும் சொற்களில் நான் புகழஞ்சலி செய்வதைக் காட்டிலும், அவர் அமரரானதும் அவருக்கு நண்பர் வ.வே.சு. சூட்டிய அற்புதமான கவிதைப் பாமாலையை நினைவு கூர்வதே பொருத்தம்:

    யுகமொன்று மறைந்ததைப்போல் உணர்வளித்துச் சென்றுவிட்டாய்;

    சகமீதோர் வெற்றிடத்தை சாட்சியெனத் தந்துவிட்டாய்;

    எங்கிருந்து வந்தாய்நீ; இன்றெங்கே சென்றுவிட்டாய்?

    தங்கிய காலமெல்லாம் தமிழிசைத்தே வாழ்ந்திருந்தாய்;

    கலைக்கழகக் கவியரங்கில் கணீரென்று நீபாடத்

    தலையசைத்து இரசிக்காதோர் தமிழறியாச் செவிடரன்றோ!

    பல்லவிகள் நீபாடப் பல்லக்காய் எம்செவிகள்

    அள்ளிச் சுமந்து ஆடியதை மறப்போமோ?

    உள்ளும் புறமும் வெள்ளையென வந்திடுவாய்;

    கள்ளமிலா நெஞ்சோடு கவிக்கணைகள் வீசிடுவாய்;

    பொய்ம்மைக்கு எதிரிநீ; புன்மைக்கு எதிரிநீ;

    இன்மைக்கு எதிரிநீ; இயலாமைக்கு எதிரிநீ.

    கடிவாளம் போடாத கவிதைப் புரவிகட்கும்

    பிடிதாளம் எனச்சொல்லிப் பின்னலிசை போட்டவன்நீ!

    உன் கவிதைகள் –

    உலாவரும் இடம்தான் உதடுகளே யன்றி

    உதிக்கின்ற இடமென்றும் உள்ளிருக்கும் இதயமன்றோ!

    பாடம் நாக நந்தியார் எடுக்கப்

    பாத்திரங்கள் நீ துலக்க

    நாடகம் நடத்தியதை யாமின்றும் மறப்போமோ!

    சகுனியென நீவந்து சபைகண்ட அழகெல்லாம்

    பகரவொணாப் பரவசந்தான் மாமனே மறப்போமோ!

    தேசமொழியில் வந்த தெய்வத் திருக்கதையை

    பாசமொழி நம்தமிழில் பேசவைத்துப் பார்த்தவனே!

    வண்ணத் திரையதனில் கண்ணனை ஆடவைத்தாய்;

    எண்ணத்தில் உயர்ந்ததனால் எங்கும் உயர்ந்து நின்றாய்;

    மண்வளத்தால் பிறந்தவன்நம் மாகவிஞன் என்றுரைத்தாய்;

    மண்ணுக்கு வளம்சேர்த்து மனதில் நிறைந்துவிட்டாய்.

    உனையிழந்த வருத்தம் எமக்குண்டு; உனக்கில்லை.

    வினைமுடிந்த நண்பர்களின் விருந்தாகச் செல்வதனால்;

    இளங்கார் வண்ணன்முதல் நாகநந்தி, நாசீ.வ.

    வளஞ்சார் வ.சா.ப., ரா.பு.த. என்று பலர்

    வரவேற்கக் காத்துள்ளார் வாயிற் படிகளிலே!

    ஞாலம் தந்த உறவா நம்முறவு இல்லையில்லை

    காலம்தந்த வரவு நம் கவிஞர்களின் உறவு;

    காலம் பிரிக்கும்; காலமே இணையவைக்கும்;

    காலம் பெரிது நம் களம்சிறிது; விடைபெறுவேன்

    எனக்குக் கவிதா தேவியின் தரிசனத்தை முதன்முதலாகக் காட்டிய தேவநாராயணனை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். அந்த தரிசனத்தில் விசுவரூபம் காட்டிய பாரதியே கீதாச்சாரியனாகிய கண்ணன். எவ்வளவு சொன்னாலும் தெளிவுபெறாத நானே பார்த்தன்.

    அடுத்த தரிசனம் நான்பெறக் காரணமானவர் கண்ணதாசன். அதைப் பற்றி அடுத்த சந்திப்பில் சொல்கிறேன்.

    Share
  • “பள்ளு இலக்கியம் – முக்கூடற் பள்ளு” – திரு சொ.வினைதீர்த்தான் உரை

    12.07.2014 சனிக்கிழமையன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க இலக்கியக் கூட்டத்தில் “பள்ளு இலக்கியம்-முக்கூடற்பள்ளு” குறித்துத் திரு சொ.வினைதீர்த்தான் சிறப்புரையாற்றினார். காரைக்குடியில் ஒவ்வொரு திங்களும் இரண்டாவது சனிக்கிழமையன்று மாலை சங்கத்தின் சார்ப்பாக இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 2004 தொடங்கி நடக்கிற நிகழ்வில் இது எழுபத்து நான்காவது கூட்டமாகும். காப்பியங்கள், பதினெண் கீழ்கணக்கு நூல்கள், இலக்கண நூல் வரிசை அனைத்தும் பேசப்பட்டுத் தற்போது சிற்றிலக்கியங்கள் வரிசை தொடங்கப்பட்டுள்ளது. சுப்பிரமணியபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வளாக வகுப்பறையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    முக்கூடற்பள்ளு இலக்கியத்தில் ‘கறைபட்டுள்ளது வெண்கலைத் திங்கள்’ “ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி”, ‘காயக் கண்டது சூரிய காந்தி,’ என்று தொடங்கும் மூன்று பாடல்களே தெரிந்த நிலையில் இணையத்திலிருந்து பள்ளு இலக்கியம் பற்றிய பதிவுகளைப் பார்த்தும் தமிழ் இணையப் பல்கலைக் கழகத் தளத்திலிருந்த உரையைப் படித்தும், முனைவர் நாகநாதன் உதவிய புலியூர்க் கேசிகன் உரையுடன் உள்ள செண்பகா பதிப்பக நூலை உள்வாங்கியும் தன் உரையை அமைத்துக்கொண்டதாகக் கூறித் திரு வினைதீர்த்தான் தன் உரையைத் தொடங்கினார்.

    அவர் உரையில் மேலும் கூறிய செய்திகள் வருமாறு:
    பள்ளத்தில் பயிர் செய்த மருத நில மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் இலக்கியம் பள்ளு இலக்கியமாகும். ஈழத்தில் எழுந்த 6 பள்ளு நூல்கள் உட்பட 35 பள்ளு நூல்களின் பெயர்கள் அறியப்பட்டுள்ளன. பள்ளு இலக்கியத்தில் தலை சிறந்த நூல் ‘முக்கூடற் பள்ளு’ ஆகும். இதில் கூறப்படுகிற காவை வடமலைப் பிள்ளை காலத்தை வைத்துப் பார்க்கும்போது இந்நூல் 1780ல் பாடப்பட்ட நூல் என்று தெரியவருகிறது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

    பொருநை நதி, சிற்றாறு என்னும் சித்ராநதி, காட்டாறு ஆகிய மூன்று நதிகள் கூடுகிற இன்று சீவலப்பேரி என்று அழைக்கப்படுகிற முக்கூடல் ஊரில் கோவில்கொண்டுள்ள அழகருடைய பண்ணையில் வேலை பார்ப்பவன் வடிவழகக்குடும்பன். திருமாலைத் தொழாத பேரை இரண்டுகால் மாடெனவே கொழுவில் பூட்டி விரட்டி உழுவேன் என்று சொல்லும் தீவீரமான வைணவன். அவனுக்கு மாமன் மகள் மூத்த பள்ளி. அவன் கண்டு ஆசைப்பட்டு இரண்டாவதாகக் கட்டிக்கொண்டவள் மருதூர்ப் பள்ளியாகிய இளைய பள்ளி. சிவநெறி சார்ந்தவள்.

    இவர்களுடைய வாழ்வில் பயிரிடும் ஒருபோகத்திற்கான பயிர்க்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் பதிவு இந்நூல். பலவகையான உழவுக் கருவிகள், பகல் உண்ட உணவு எந்த அரிசி என்று தெரியாத இக்காலத்தில் வியப்புடன் நாம் அறிய வேண்டிய அன்றிருந்த நெல்வகைகள், மாடுகள், அவற்றின் சுழிவகைகள், மீன் வகைகள் என நூலில் ஏராளமான செய்திகள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன என்று எடுத்துரைத்தார்.

    மேலும் கீழ்க்கண்ட சமுதாய, உளவியல் சிந்தனைகளை நூலிலுள்ள பாடல்கள் வழி ஆய்வுரையாகத் தொடர்ந்தார்.

    1.பள்ளர்களைத் தூரப் போ என்று விலக்கும் சமுதாய நிலை
    2. ஆனாலும் தக்க வேளாண்மை மூலம் மைக்கடல் முத்துக் கீடாய் மிக்கநெல் உண்டாக்கும் தான் தூரப் போகச் சொல்லும் மக்களின் பக்கமே என்றும் அழகர் என்று முக்கூடலுக்கு வந்தாரோ அன்றே அடியாராக வந்த பரம்பரை தன்னுடையது என்றும் பெருமிதம் கொள்ளும் குடும்பப் பள்ளன்.
    3.பண்ணைக்காரனை வேடிக்கை மனிதனாக வர்ணிப்பதின் மூலம் மக்கள் மனதில் பண்ணையின் கங்காணியான பண்ணைக்காரனின் தாழ் நிலை.
    4.ஆண்டை, நாயானார் என்று பண்ணைகாரனை அழைக்க வேண்டிய அடிமைத் தொழிலாளி.
    5.வேலை செய்யத் தவறிய பள்ளனுக்குக் காலில் கட்டையைக் கட்டித் தொழுவத்தில் அடைக்குமளவுக்குத் தண்டனை அளிக்கப் பண்ணைக்காரனுக்கு அதிகாரம் கொடுத்திருந்த அன்றிருந்த அரசியல் நிலை.
    6.விளைந்த நெல் விளைவித்தவனுக்கு உரிய அளவில் கிடைக்காமல் மடத்துக்கும், சுவாமி கட்டளைகளுக்கும், பிறவற்றிற்கும் சென்ற நிலை.
    7.இரண்டு மனைவிகளின் சக்களத்தி மனச்சிக்கல்கள், அதனால் குடும்பத்தில் விளையும் துன்பம், அங்கு ஆணின் நிலை.
    8.அந்த மனைவியரிடையே எழும் பூசல் அவரவரின் கடவுளர் வரை சென்று கடவுளரையும் தூற்றல்.
    9.தூற்றலிலும் கடவுளைப் போற்றும் உளவியல்.
    10.மக்களின் கடவுளர்கள். அவர்களுக்கு விரைய வெட்டும் செங்கிடாயும் குடத்திலிடும் கள்ளும்.
    11.ஆணும் பெண்ணும் சேர்ந்து அலுப்பில்லாமல் செய்யும் உழவு வேலைகள். இனக்கவர்ச்சியால் எழும் சிக்கல்கள்.
    12.கம்பனுக்கு ஈடாகக் கவிநயத்துடன் முக்கூடல் பள்ளு ஆசிரியன் காண விரும்பிய கற்பனை நாடு,

    சந்தமும், பண்ணும் அமைந்த நாடகப் பாடல்களின் சொல்நயமும் பொருள் நயமும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

    நண்பர்களைக் கீழ்க்கண்ட தளத்தில் நூலைப் படிக்க வேண்டி நன்றி தெரிவித்து உரை நிறைவுசெய்யப்பட்டது –  http://www.tamilvu.org/library/libindex.htm

    1

    2

    3

    4

    5

    6

    படங்கள்:
    1.சங்கத்தின் செயலர் திரு ஜனநேசனுடன் திரு வினைதீர்த்தான்
    2.திரு சொ.வினைதீர்த்தான்
    3.துணைவியார் திருமிகு அன்னபூரணியுடன்
    4.சங்கத் தலைவர் திரு மாதவன் திரு வினைதீர்த்தானுக்கு நினைவுப்பரிசு வழங்குதல்
    5.கற்றறிந்த ஆன்றோர் அவையினர்
    6.கருதுரைக்கும் பேரா. ஆறு.மெய்யாண்டவரும் காப்பியக் கவிஞர் மீனவனாரும் உள்ள ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    Share
  • தெய்வம் இருப்பது எங்கே?

    –கவிஞர்  காவிரிமைந்தன்
    sivaji
    ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
    அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை

    தெளிவாகத் தெரிவது ஒன்று!  தெளிவின்றி மறைவது ஒன்று!  எதை நாம் இருக்கிறது என்று உறுதி செய்ய முடியும்?  எதை நாம் இல்லையென்று மறுத்திட முடியும்?  கேள்விகள் பல எழலாம்!  விடைகள் தான் எங்கே? அறிவுக் கண்ணில் பார்க்கும்போது அதற்கும் எல்லைகள் உண்டு!  அகக்கண்ணால் பார்க்கும் போது அதற்கோர் உலகம் உண்டு! விஞ்ஞானம் கண்டுபிடிப்பதற்கு பன்னெடுங்காலம் முன்பாகவே மெய்ஞானம் கண்ட உண்மைகள் கோடி!

    அறிவின்வழி எதுவுமே உறுதி செய்யப்பட வேண்டும்! ஆன்மீகம் கண்டவர்கள் யார்? அதன்வழியே நின்றவர்கள் யார்? வழிவழியாய்  தொடரும் இந்தச் செவி வழிச்சங்கதிகளை செப்பேட்டிலும், பனை ஓலைச்சுவடிகளிலும் காணும்போது விஞ்ஞானத்தை மெய்ஞானம் விஞ்சியிருப்பதை உணரலாம்!  சூரிய கிரகணம், சந்திர கிரகணம் இவையெல்லாம்.. இந்த ஆண்டில்.. இன்ன தேதியில்.. இன்ன நேரத்தில் ஏற்படும் என்று நவீன உலகம் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, ஞானிகளும் மேதைகளும் தவசிகளும் தங்கள் மெய்யுணர்வால் கணக்கிட்டுச் சொன்னது எப்படி?

    அர்த்தமுள்ள இந்து மதத்தில் கவியரசர் கண்ணதாசன் அழகாக குறிப்பிடுகிறார். மாதா.. பிதா.. குரு.. தெய்வம்.. என்கிற பழமொழியில்.. மாதா என்பது சர்வ நிச்சயமான ஒன்று!  மாதா சொல்லித்தான் ‘பிதா’ அறிமுகாகிறார் – குழந்தைக்கு!  அக்குழந்தையை பிதா – குருவிடம் கொண்டு சேர்க்கிறார்! குருவோ.. தெய்வத்தை உணரச் செய்கிறார்!
    images3images2images1
    இறைவன் இருப்பது எங்கே என்கிற கேள்வி எழுவது இன்று நேற்றல்ல.. மறைபொருளின் கீர்த்தி அறியாத வரையில்.. உள்ளத்தில் உள்ளது கடவுள் என்பது உணராத வரையில்.. தெய்வத்தைத் தேடும் மனிதனின் வாழ்வில் மாற்றமில்லை.  ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற நம் முன்னோர்கள் ஒவ்வொரு ஊரிலும் கோவிலை உருவாக்கினார்கள். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் பழமொழி தந்தார்கள்.  கற்பக் கிரகத்தில் கற்சிலையாய் இருந்தாலும் அங்கே கடவுளுக்கு நடத்தப்படும் ஆராதனையின்போது அந்த தீப ஒளி ஒருசில மணித்துளிகளுக்குள் .. சட்டென்று கண்ணில்பட்டு மறைந்தாலும் அங்கே காணும் தெய்வ தரிசனம் மனதில் நின்றுவிடும்.  ஆலயவழிபாட்டில்கூட அனுஷ்டிக்கப்படும் ஆராதனையிலும் சூட்சுமங்கள் பொதிந்தே உள்ளன.  அவ்விடம் நின்று ஆண்டவன் எண்ணி அருளை வேண்டுவோர் உள்ளம் எப்படியிருக்க வேண்டும் என்பதைக்கூட கவியரசு கண்ணதாசன் இலக்கணம் வகுத்தாற்போல் ஒரு திரைப்பாடலில் தருகிறார் பாருங்கள்.. பாடலை மீண்டும் கேளுங்கள்..

    http://www.youtube.com/watch?v=Ry7xzM477BI

    காணொளி: http://www.youtube.com/watch?v=Ry7xzM477BI

     

    திரைப்படம்: சரஸ்வதி சபதம்
    பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: K.V. மஹாதேவன்

    தெய்வம் இருப்பது எங்கே
    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
    தெய்வம் இருப்பது எங்கே
    தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
    தெய்வம் இருப்பது எங்கே

    பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
    பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
    எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
    எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
    தெய்வம் இருப்பது எங்கே

    ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
    ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
    அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை
    அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை
    இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
    இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
    இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
    இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
    தெய்வம் ஏற்கும் உனது தொண்டு

    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
    தெய்வம் இருப்பது எங்கே

    Share
  • திருமால் திருப்புகழ் (143)

     

    கிரேசி மோகன்

     

    ஓவியம்  கேஷவ்
    ஓவியம் கேஷவ்

    அவையென இவையென அளவிடல் தவறென 
    கவிமணி மலையணில் கூட்டியதை 
    புவிதனில் ஏழையை பிள்ளையை வேழனை
    மகிழ்வுறச் செய்ததைக் காட்டினையே 
    தவியுற ஆய்க்குடி தளிர்விரல் தூக்கிட
    குளிர்மழை காத்தனை யாதவனே 
    கவிகளின் காப்புக் கடவுள்முன் தோப்புக் 
    கரணம்செய் காக்கும் மாதவனே”….(3)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ஓவியம்  கேஷவ்
    ஓவியம் கேஷவ்

    “அலமுவை கட்டினை அதிகடன் பட்டனை 
    அடைத்திடத் தொட்டனை ஏழுமலை 
    பலரிட உண்டியில் சிலறையை ஒண்டியாய் 
    புகல்ஜர கண்டியில் வாழயிலை
    துளசியை மென்றிட குறையிலை என்றிடும் 
    நிலைதர நின்றிடும் கோவிந்தா 
    அலைகடல் சேடனில் அணிமகள் கூடலில்
    வளர்துயி லாடிடும் வைகுந்தா”….(4)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    Share
  • திருமால் திருப்புகழ் (142)

    கிரேசி மோகன் 

    அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச(12) நாமத் துதி….

    “கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய ,வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”…..

    Gitacharya. Oil on canvas. #krishnafortoday - Keshav
    Gitacharya. Oil on canvas. #krishnafortoday – Keshav

    “களமுற பார்த்தனின் கலவர வேர்த்தலைக்
    கழுவிடு தீர்த்தமாம் கீதையதால்
    உளமுரம் கூட்டினை ஒருரதம் ஓட்டினை
    பலமுற காட்டினை பாதையதை
    பொலபொல என்றுதி காலையை முந்திடும்
    பரவசக் கோதையின் பாசுரத்தால்
    அலைகடல் விட்டுயர் பட்டரின் பெட்டையை
    கட்டிடக் கேட்டிடும் கேசவனே”….(1)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    Bhagavatha -- The Uddhava gita
    Bhagavatha — The Uddhava gita

    “சரியபி தாம்பரம் நழுவக தாயுதம்
    பிளிறும்க ஜேந்திரன் குரல்கேட்டு
    பறவைசு தாகரம் விரையவ னாந்திரம்
    எறியசு தர்சனம் விரல்விட்டு
    துரிதநி வாரண முனிகள்த போவனம்
    பறையும்க தாம்ருத காரணனே
    முரளிம னோகர கமலப தாம்புய
    அனந்தந ராயண பூரணனே”….(2)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    படங்களுக்கு நன்றி

    http://bhagavatham.blogspot.in/

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூலை 14, 2014

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  திரு. கிரேசி மோகன்  அவர்கள்

    கிரேசி மோகன்

    இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  “கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்” காலத்தில் இருந்து, ஒரு கால் நூற்றாண்டிற்கும் மேலாகத் தமிழர்கள் நன்கறிந்த நகைச்சுவை எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் அவர்கள்.  வல்லமையில் “தாம்புக் கட்டு”  என்ற தலைப்பில் அவர் சென்ற வாரம் எழுதிய கதைக்காகவும், வெப்துனியா செய்தித்தளத்தில் அவர் எழுதிய திரைப்பட விமர்சனத்திற்காகவும் வல்லமையாளராகத் தெரிவு செய்யப்படுகிறார்.  வல்லமையாளர் விருதிற்கு அவரைப் பரிந்துரைத்து தேர்வுக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர் வல்லமையின் வாசகர் திரு. சு. ரவி அவர்கள்.

    “தாம்புக் கட்டு”  கதை மிகவும் வித்தியாசமான கோணத்தைக் கொண்டிருக்கிறது.  இந்தியாவில் பிறந்து வளர்ந்த யாவருமே மகாபாரதக் கதைகளையும், குறும்புகள் நிறைந்த கண்ணன் பிறந்து வளர்ந்த  நிகழ்வுகளையும், பின்நாளில்   அவன் பார்த்தனுக்கு தேரோட்டியாகப் பணியாற்றி கீதை உரைத்ததையும் பலமுறை படித்திருக்கிறோம்.  ஆனாலும் கிரேசி மோகன் வழங்கிய கோணம் முற்றிலும் புதுமையானது.

    “தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும்” என்ற வானில் தோன்றிய ஒலியினால் எச்சரிக்கை அடைந்த கம்சன்  தங்கை தேவகியையும், மைத்துனன் வாசுதேவனையும், சிறையிலடைத்து அவர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் பிறந்தவுடன் கொன்றுகொண்டே வருகிறான். ஏழு குழந்தைகள் இவ்வாறு உயிரிழக்க நேரிடுகிறது.  எட்டவதாகப்  பிறந்த கண்ணனை கோகுலத்தை ஆண்ட நந்தகோபனிடமும், யசோதையிடமும் சேர்ப்பித்து அவர்களை வளர்க்கச் செய்ய  வாசு மாமாவும்  (அப்படித்தான் அந்தக் கதையின் நாயகியான சிறுமி வாசுதேவனை  அழைக்கிறாள்) முடிவெடுக்கிறார்.  அவருக்கு உதவி செய்கிறாள்  ஆயர்பாடியில் வசிக்கும்  சிறுமி ஒருத்தி.

    கண்ணன் பிறந்த அந்த மழைநாளில் ஆயர்பாடியில் உள்ள நந்தகோபன் இல்லத்தில் குழந்தைகளை மாற்ற உதவிய அந்தச் சிறுமி யார்?  இந்த உதவியைச் செய்ய அவள் என்ன பிரதிபலன் எதிர்பார்த்து வாசு மாமாவிடம் சத்தியம்  பெற்ற பின்னர் உதவி செய்தாள்? அவள் விருப்பம் என்ன? யாரவள்?  இவள் இல்லாவிட்டால் மகாபாரதமே இல்லாமல் போயிருக்கும் ஆபத்து உண்டு.  இவள் யாரென்ற கேள்விக்கு விடையை வெள்ளித்திரையில் … மன்னிக்கவும்… வல்லமையில் இந்த சுட்டி வழி சென்று  காண்க.  படிக்கும் வாசகர்கள் கதையைப் பற்றித்  தனது தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் முடிவினைத் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இதற்கு உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.

    “பால்கார அம்மா வசதியானவள்….வீடு தோப்பும் துரவுமாக பிரும்மாண்டமாக இருந்தது….சுற்றிலும் கோட்டை போல மதில் சுவர்….வந்த திருடன் வேறு வழியில்லாமல் மனம் திருந்தி நல்லவனாகும் அளவுக்கு வாசல் கதவு வீட்டையே மறைத்தது…”  

    “கஷ்க் முஷ்க் ” என்று கன்னங்கரேல் உருண்டையாய் (சிறுமி காதில் விழுந்தால் கோபிப்பாள்….நீல உருண்டையாய்) இருந்த அந்தப் பொருள் விளங்கா உருண்டையை…”

    கதையில் வரும் இந்த வர்ணனைகள்  கிரேசி மோகனின் “டச்”.  இக்கதை கிரேசி மோகனின் கற்பனைக்கு நல்லதொரு சான்று.  இது போன்ற மற்றொரு   வியக்கவைக்கும் கற்பனையை  மதுரை சித்திரைத் திருவிழாவை ஒட்டி அவர் வழங்கிய “மீனாட்சி திருக்கல்யாணம்” என்ற  கவிதைத் தொகுப்பிலும் காணலாம் …

    அந்தப் பாடலில் இருந்து சில வரிகள் இங்கு… முழுக்கவிதையும் இந்த சுட்டியில் கிடைக்கும்..

    கன்னிகாதானம்
    ——————

    தாரையை வார்க்கையில் தன்சார்பில் தந்தையாய்
    யாரை நிறுத்துவது என்றீசர் -பாரமுற
    பாக்கையில் வந்தார் பெரிய புராணத்து
    சேக்கிழார் சாமி சபைக்கு…

    பாம்பலையில் தூங்கும் பெருமாள் சுபாவமாம்
    சோம்பலை விட்டு சுறுசுறுப்பாய் -மாம்பலம்
    நல்லிகுப்பு சாமியிடம் செல்ல சகோதரிக்காய்
    அள்ளிவந்தார் சேலை அலைந்து…

    கண்ணைப் பறிக்கின்ற கூறைப் புடவையில்
    மின்னலென மேடையில் மீனாள்தன் -அண்ணன்
    மடியமர நான்முகன் மாங்கல்யம் ஏந்த
    முடிந்தான் அரன்முடிச்சு மூன்று…

    கிரேசி மோகன் அவருக்கு  கைவந்த கலையான “குப்பாச்சுலு VS கோடபட்ரி” என்ற நகைச்சுவை நாடகம் ஒன்றையும் , அத்துடன் மற்றொரு கைவந்த கலையான ஓவியங்களையும் வல்லமை வாசகர்களுக்குத் தந்திருக்கிறார்.  ஆம்… கிரேசி மோகன் ஒரு சிறந்த ஓவியரும் கூட, வல்லமையில் வெளியான அவரது ஓவியங்கள் ஒரு சில இங்கே  உங்கள் பார்வைக்கு…

    சென்ற வார இறுதியில் (2014 ஜூலை 11 அன்று) வெளிவந்த இயக்குனர் ஞானராஜசேகரன் அவர்களின்  ராமானுஜன் திரைப்படத்திற்கு   கிரேசி மோகன் அவர்கள் எழுதிய விமர்சனம் இது …

    எனது பொக்கிஷம் ஞானராஜசேகரனின் ‘பாரதியார்’ டிவிடி…. 100 தடவைகளுக்கு மேல் பார்த்துவிட்டேன்….இனி பார்ப்பேனா தெரியாது….!

    ‘பாரதியாருக்கு’ப் போட்டியாக இவரே ‘ராமானுஜன்’ எடுத்துவிட்டார்…. ராமானுஜன் டிவிடிக்காகக் காத்திருக்கிறேன்…. கணக்கு வழக்கு இல்லாமல் நான் பார்க்கப் போகும் ‘ராமானுஜன்’ திரைப்படம் நேற்று பார்த்தேன்….

    ‘ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ’ என்று தன் மனைவி ஜானகிக்கு அவர் கடிதம் எழுதும் போது, ஏனோ தெரியவில்லை புனித மேதை பெரும்புதூர் ஸ்ரீ ராமானுஜரையும், கணித மேதை கும்பகோணம் ராமானுஜரையும் ஒப்பிட்டு அடியேன் மனக் கணக்கு போட ஆரம்பித்தேன்…. இருவருமே அந்த ‘சேடரின்’ விசேட அம்சமாக எனக்குத் தோன்றியது….

    பெரும்புதூர் மாமுனி ஆதிசேடன் அவதாரம்… தொல்(பழைய) COBRA…. கும்பகோணம் ராமானுஜர் அல்ஜீப்ரா…. அவர் த்ரிகுணம் கடந்த மூர்த்தி….இவர் ட்ரிக்னாமெட்ரி…. அவர் எளியவர்களுக்கும் நாராயணன் நாமமிட்டு தீட்டும் திருமேனி ஆக்கினார்…. இவர் Cos THETA plus தியரியை தீட்டினார்…. அவர் உடையவர்…. இவர் கணக்கின் விடையவர்…. பெரிய கடவுள் பாரதியாரைக் கவிதையால் தடுத்தாண்டு கொண்டார்…. இவரைக் கணக்கால் தடுத்தாண்டு கொண்டார்….

    படம் பார்க்கும் போது எனக்கு ராமானுஜத்தை விட அவரது LAURELS ஸை வெளிக்கொணர்ந்த HARDY பாத்திரம் மிகவும் பிடித்தது….

    அமரர் வாலியின் ‘ஓராயிரம் ஈறாயிரம்’ பாடலும் ரமேஷ் வினாயகத்தின் இசையும் சூப்பர்….

    ‘எழுத்தையும்’ (பாரதியார்) ‘எண்ணையும்’ (ராமானுஜன்) எடுத்த ஞானராஜசேகரனிடம் ஒரு வேண்டுகோள்…. அடுத்ததாக ‘கண்ணெனத் தகும்’…. ‘பகவான் ஸ்ரீரமணரின்’ சரிதையை எடுங்கள் சார் ப்ளீஸ் ….

    தயாரித்தவர்களுக்கு ‘பல்லாண்டு பாடலாம்’….எனக்குப் பிடிச்ச கணக்கு….படத்துக்கு அடியேனின் மார்க் 100 / 100….

     

    அத்துடன் முத்தாய்ப்பாக,  படத்தின் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம் அவர்களைப் பாராட்டி,  அவர் இசை அமைத்த   “ராமானுஜன்” பட இசை அவரை இசைபட வாழவைக்க வேண்டும் என்றுவாழ்த்துறைத்து  ஒரு  வெண்பாவும்   பாடியுள்ளார் ….

    “புனிதமே தையும், கணிதமே தையும்,
    மனிதமே தையுன் மியூஸிக், -இனிதாக,
    கேட்டிடும் காதுக்குள் கூட்ட, இனியுந்தன்,
    காட்ல மழைவினாய கம்”

    திருமால் திருப்புகழ் என்ற தலைப்பில்  தினமும் வெண்பாக்கள்  புனைந்து வரும் கிரேசி மோகன், இதுவரை அந்த வெண்பாக்களை (இதுவரை 140  வெண்பா பதிவுகள்) வல்லமை மின்னிதழ் வாசகர்களுடனும், வல்லமை கூகிள் குழுவிலும் பகிர்ந்து வருகிறார். இவ்வாறு வெண்பாக்களையே உயிர்மூச்சாய் கொண்ட அவரை வெண்பாபாடி வாழ்த்துவதுதான் முறையல்லவா …ஆதலால்…

    “வெண்பா வடித்து வெகுமதியாய்  நாளுமொரு
    பண்பாடும் பாவல, நீவிர் திரையுலக
    எல்லை  கடந்திங்கே என்றும் புகழ்காணும்
    வல்லமை யாளர்தாம்  இன்று”   

    என்று வெண்பா சொல்லிப்  பாராட்டி …

    சிந்தனையைக் கவரும் கவிச்சுவை நிறைந்த வெண்பாக்ளையும், நகைச்சுவை நிறைந்த   நாடகம் மற்றும் கதைகளையும் பகிர்ந்துகொண்டு வல்லமை வாசகர்களை மகிழ்விக்கும்   கிரேசி மோகன்  அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    நன்றி:
    வெப்துனியா –
    http://tamil.webdunia.com/article/movie-review-in-tamil/crazy-mohan-on-ramanujan-movie-114071200014_1.html

    Share
  • நீ அழுவதற்காகப் பிறக்கவில்லை

    சு. ரவி

     

    7D83B7BE-1A74-4E7A-980C-FDCAA5E06091

    இளைஞனே,

    நீ அழுவதற்காகப் பிறக்கவில்லை.
    பிறந்ததற்காக அழுதால் பயனேதும் இல்லை.
    கண்ணீர் மன அழுத்தத்தைக் கரைக்கிறது என்பதெல்லாம் கட்டுக்கதை.
    அது உன் திறமையையும் தன்னம்பிக்கையையும் தகர்த்து விடுகிறது.

    அழுகை ஆன்மாவைப் புனிதமாக்குகிறது என்பது வேலையற்றவரின் வெட்டி வேதாந்தம்.

    என் இனிய இதயமே,

    உன் அழகிய விழிகளில் துளிர்த்து உதிர்வன உன் ஓராயிரம் நிறைவேறாத ஆசைகளே.
    உனக்காக நெகிழ்வதை நிறுத்து.

    “வாடிய பயிர்களைக் கண்டு” வாடினால் நீ வடலூர் வள்ளல் ஆகலாம்.
    அப்போது நீ உனக்காக அழமாட்டாய்- உலகத்து உயிர்களுக்காக அழுவாய்.
    அது உயர்ந்த யோக மார்க்கம்!

    என் நம்பிக்கையே,

    கண்ணீரும், அழுகையும் கோழையின் ஆயுதங்கள். பெண்மையின் பலவீனங்கள்.
    ஒரு துளி பன்னீர் கிடைக்க ஓராயிரம் ரோஜா மலர்கள் தேவை..
    ஆம் ஒரு ஞான யோகி உருவாகுமுன் இந்த மண்ணில் ஒராயிரம் கர்மயோகியர் அவதரிக்க வேண்டும்.

    உன் வாடைக்காலப் போர்வையை வீசி எறி. வஸந்தம் உன்னை வரவேற்கக் காத்திருக்கிறது.

    கர்மயோகியே,

    கண்ணீர் உலர்ந்து கடமை உணர்ந்து
    திண்மை செறிந்து நொய்ம்மை தவிர்த்து
    எழுந்திரு!

    நீ பிறந்தபோது அழுதாய். அது அறியாமல் செய்தபிழை.
    அது உன் வாழ்க்கைப் போராட்டத்தைத் தொடங்க
    நீ ஊதிய வெற்றி சங்க முழக்கமாகட்டும்.

    உன் புன்னகை மிளிரும் முகத்தில் நாளைய உலகின் அருணோதயம்
    தெரிகிறது.
    இதோ உன் கண்ணீர் நின்றுவிட்டதால் இந்தியத் தாயின் ஜீவநதிகள்
    பிரவாகமெடுத்து ஓடுகின்றன!
    கண்ணீரின் தடங்கள் மறைந்த பாதையில் உன் வீறு நடை போடு!

    என் இனிய இந்திய இளைஞனே,

    நீ அழுவதற்காகப் பிறக்கவில்லை
    பிறந்ததற்காக அழுதால் பயனேதும் இல்லை.

    சு.ரவி

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 127

    –மலர் சபா

    மதுரைக் காண்டம் – 02: வேட்டுவ வரி

    மறக்குடி மக்கள் குமரி ஒருத்திக்குக் கொற்றவையின் கோலம் புனைவித்து, வழிபடு பொருள்களுடன் ஐயையின் கோட்டம் செல்லுதல்  

    தம் பகைவர் தலையைத்
    தாமே அறுத்தெறிய வேண்டும் என்று                           kotravai 2
    எப்போதும் எண்ணுபவர்கள் மறவர் குடியினர்.
    அப்பகைவர் எவரும் தம்மை வென்றிடாதபடி
    மிக்க வீரம் கொண்ட அவர்
    தொல்குடி மக்களாவர்.

    அவர்கள் தம் குடியில் பிறந்த
    சாலினியைக் கொற்றவையைப் போல் அலங்கரித்தனர்.
    சிறிய வெள்ளிய பாம்பின் குட்டிபோல் இருந்த
    பொன் கயிற்றால் அவள் குறுகிய கூந்தலைக் கட்டினர்.

    முள்வேலியால் சூழப்பட்ட
    அவர்கள் தோட்டத்தில் புகுந்து,
    பயிர்களை அழித்த காட்டுப் பன்றியின்
    வளைந்திருந்த கொம்பைப் பிடுங்கி
    அவள் சடையில் இளம்பிறையாகச் சூடினர்.

    அஞ்சுவது என்பதை அறியாத வலிமைமிக்க
    புலியின் வாயைப் பிளந்து
    அதன் வெண்பற்களை எடுத்து
    வரிசையாகக் கோர்த்துத் தாலியாகக் கட்டினர்.
    வரிகளும் புள்ளிகளும் நிறைந்து காணப்படும்
    அதன் தோலை மேகலையாக அணிவித்தனர்.

    வயிரம் பாய்ந்த மூங்கில் வில்லை
    மிகவும் சிரமப்பட்டு வளைத்து நாண் ஏற்றி
    அவள் கையில் கொடுத்தனர்.
    முறுக்குடன் அமைந்த கொம்புகளையுடைய
    கலைமான் ஊர்தியில் அவளை அமர்த்தினர்.

    மதனப்பாவை, கிளி,
    சிறு முடிகளையும் அழகிய சிறகையும்
    உடைய காட்டுக்கோழி,
    நீலநிறம் பொருந்திய மயில்,
    பந்து, கழங்கு ஆகியவற்றை அவளுக்குத் தந்து
    அவளைக் கொற்றவையாக வழிபட்டனர்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  20 – 35
    http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:
    http://www.santabanta.com/photos/goddess-durga/9103043.htm

     

    Share
  • பயணத்தில்…

    -செண்பக ஜெகதீசன்

    பாலைவனமாக நனவு,
    பூங்காவாகப் பூத்துக்குலுங்கும்          Garden_Fountain
    கனவு…

    எதிர்மறைகள்
    எப்போதும் உள்ளவைதான்…

    நனவு
    பூங்கா ஆகிட
    நம்பிக்கை நீருற்று,
    துணிவை உரமாக்கு,
    துணைக்கரங்கள் தானேவரும்!

    கனவுத் தூக்கத்தைக்
    கலைத்துவிட்டு

    நனவுப் பயணத்தில்
    நம்பிக்கை வை!

    நம்பிக்கைகள்,
    அவை
    கைவிடுவதில்லை…!

    Share
  • Human Life

    -Raa. Parthasarathy

    Happiness and Sorrow as waves on the Sea                      yacht-in-rough-sea
    We all Sailing on the above,
    It is stumbling as Yacht on the Sea,
    Good and bad never we foresee.

    Time and Tide never wait and See,
    Ups and downs in our Life of Sea,
    In the World of Instability, we expect Stability,
    We sail on the boat of faith, with Reliability.

    Share
  • காற்று வாங்கப் போனேன் பகுதி 20

    கே.ரவி

    கவிதை எழுதத் தொடங்கிய சில மாதங்களிலேயே காவியங்கள் எழுத வேண்டும் என்ற ஆசை என்னைப் பற்றிக் கொண்டது. முதல் முயற்சியாக, சாம்ராட் அசோகனின் மனமாற்றத்துக்கு வழிவகுத்த கலிங்கத்துப் போரை மையமாகக் கொண்டு ஒரு குறுங்காவியம் நாலைந்து நாட்களில் எழுதி முடித்தேன். கலிங்கத்துப் பரணியில் தொடங்கிய என் தமிழ்ப் பயிற்சி, அதற்குக் காலத்தால் மிகவும் முற்பட்ட அசோகனின் கலிங்கப் போரில் வளர்ந்தது பற்றி மகிழ்ந்தேன். “வீரமா ஈரமா” என்ற தலைப்பில் எழுதிய சாம்ராட் அசோகன் சரித்திரக் காவியத்தின் கைப்பிரதியை முதலில் என் ஆசான் தண்டமிழ்க் கொண்டலிடம் தந்தேன். தவறுகள் இருந்தால் திருத்திக் கொடுக்க வேண்டினேன். பல நாட்கள் ஆகியும் அவருக்கு ஏனோ அதைப் படித்துப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. “ராஜா, முதலில் இதைப் படித்துச் சரி பார்க்க குப்புசாமி வாத்தியாரிடம் கொடு, நான் பிறகு பார்க்கிறேன்,” என்று அவர் சொன்னதும் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியிலேயே இன்னொரு தமிழாசிரியராக இருந்த குப்புசாமி அவர்களிடம் அதைத் தந்தேன். மறுநாள் அவர் என்னை அழைத்து, கவிதை நாடகம் நன்றாக இருப்பதாகப் பாராட்டி விட்டு, “உன் வீடு எங்கே?” என்று கேட்டார். சென்னை, மந்தைவெளி, ராமகிருஷ்ணா மடம் சாலையில், ராணி மெய்யம்மை பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு எதிரில் என்று நான் சொன்னதும், வெகு அருகிலேயே இருக்கும் அவர் இல்லத்திற்கு மாலை 7 மணிக்கு என்னை வரச் சொன்னார். சென்றேன். தினமும் வரச் சொன்னார். இரண்டு வாரங்கள் தொடர்ந்து சென்றேன். என் கவிதை நாடகத்தின் ஒவ்வொரு பாடலையும் வரிவரியாகப் படித்து, சிறு திருத்தங்களும் செய்து, பல இடங்களில் நயம் வியந்து பாராட்டி, மிகப் பெரிய கவிஞர்களின் புகழ்மிக்க வரிகளுடன் ஒப்பு நோக்கி, இரண்டு வாரங்கள் தினமும் மாலை அவர் எனக்காகச் செலவழித்த கணங்களுக்கு என் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தாலும் போதாது. அந்த நாடகத்தின் கவிதைகளை நான் அடியோடு மறந்து விட்டாலும், நான் என்றும் மறக்க முடியாதவராய் என் நெஞ்சில் குப்புசாமி வாத்தியார் இடம்பெற்று விட்டார்.

    கோழியைக் கேழி என்று எழுதிக் கேலிக்கு ஆளான நான் தமிழ் வகுப்பில் எழுதிய கட்டுரைகள் பாராட்டுப் பெற்றன. கண்ணகி பற்றிய ஒரு கட்டுரையை இப்படி முடித்திருந்தேன்: “கண்ணகியின் புகழைச் செங்குட்டுவன் வடித்த கல்லும் சொல்லும்; இளங்கோவின் சொல்லும் சொல்லும்”. அந்த வரிகளின் பக்கத்தில் என் ஆசான் தண்டமிழ்க் கொண்டல் எழுதியிருந்தார்:

    கல்லும் சொல்லும் சொல்லும் சொல்லும்
    என்னும் சொல்லும் என்னை வெல்லும்

    ஓராண்டுக்கு முன் என் விடைத்தாளை விட்டெறிந்த ஆசானே இப்படி எழுதியதும் எனக்கு எப்படி இருந்திருக்கும்!

    என் ஆசான் தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன் அவர்களிடம் நான் பயின்றது சொல்லாளுமை. சொற்கள் எப்படி அடுக்கடுக்காக நெருங்கி வர வேண்டும், அதே சமயத்தில் ஒன்றிலொன்று கோக்கப்பட்டு ஊடுபாவி இருக்க வேண்டும் என்ற நுட்பத்தை அவருடைய கவிதைகளில் இருந்தே கற்றுக் கொண்டேன். அருவிபோல் பொழியும் சொல்லோட்டம் அவர் நடையின் தனிச்சிறப்பு:

    கொஞ்சுமொழி மழலையைக் கோலத் தியற்கையைக்ravi
    கோயிலாக் கொண்ட இறைவா
    அஞ்சுதலை உடையார்கள் ஆறுதலை அடைகின்ற
    அற்புதம் புரிகின்றவா
    தஞ்சமென யாங்களே பஞ்சனைய பதமலர்கள்
    பற்றினோம் பற்றற்றவா
    வஞ்சமறு நெஞ்சிலே விஞ்சுமருள் கொஞ்சவரு
    வள்ளலே வரமருளவா

    கருத்துச் செறிவும் சொல்லழகும் கைகோத்து நடக்கும் அவர் பாடல்களில்:

    பாறைக் கதவைப் பார்க்கும் விதவை
    கூறைப் புடவை கொடுவொரு தடவை

    எழுத்தெண்ணிப் பாடும் கட்டளைக் கலித்துறைக்கு அவருடைய ஒரு பாடலே கட்டளைக்கல்:

    துலங்குவெண் ணீறு துணிப்பிறைக் கோடு துணைக்கரங்கள்
    இலங்குநற் றொந்தி இறைவனென் புந்தி இருக்கையிலே
    விலங்கெனும் வாழ்வு விளங்கிடும் தாழ்வு விரைந்தழியும்
    கலங்கிடும் உள்ளம் களிப்பெனும் வெள்ளம் கலந்திடுமே

    இந்தச் சொற்கட்டுக்கோப்பே வெகுநாட்களுக்குப் பிறகு எனக்குள் இருந்து வியக்கத் தக்க கட்டளைக் கலித்துறை பாடல்களை வரவழைத்தது.

    1984-ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வோர் ஆண்டும் சபரி மலை செல்லும் நான் எப்பொழுதும் மலையேற மிகவும் சிரமப் படுவேன். மூச்சுத்திணறித் திண்டாடுவேன். மலையில் இருந்து இறங்குவதில் எனக்கு அவ்வளவு சிரமம் நேர்ந்ததில்லை. பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை அதிக சிரமமில்லாமல் மலையில் ஏறிவிட்டதும் மகிழ்ச்சியாக, அடாடா, இவ்வளவு எளிதாக ஏறி வந்து விட்டேனே, இனி இறங்குவது இன்னும் சுலபமாக இருக்கப் போகிறது என்று மனத்துக்குள் சந்தோஷப் பட்டுக் கொண்டேன். ஆனால், அந்த ஆண்டு மலையில் இருந்து இறங்கும் போது, காலிரண்டும் துவள, உடல் ஒத்துழைக்க மறுக்க, முடியவில்லை ஐயப்பா என்று வாய்விட்டுக் கதறியழும் நிலை ஏனோ ஏற்பட்டது. காரணமே புரியவில்லை. எல்லாவற்றுக்கும் நமக்குக் காரணம் புரிந்து விடுகிறதா? என்ன சிகாமணி, சத்தமே காணோம்! அப்படி அழுது, தொழுது இறங்கியபின், சென்னை திரும்பும் வழியில்தான் ‘பிறவா வேட்கைப் பஞ்சகம்’ என்று ஐந்து கட்டளைக் கலித்துறைப் பாக்கள் வந்தன:

    எழச்செய்தாய் சென்னி முடிதாங்கி மாமலை ஏறிவந்து
    தொழச்செய்தாய் கால்கள் துவளத் துவள இறங்குகையில்
    அழச்செய்தாய் ஆனால் அடுத்த பிறவிக் கருங்குகையில்
    விழச்செய்தால் உன்னை விடமாட்டேன் வீர மணிகண்டனே

    விழலுக் கிரைத்தநீர் இல்லை விரதம் நுதல்விழியின்
    அழலுக் கெரிந்தவன் சாட்சி ஹரிஹரா உன்பதத்தின்
    நிழலை அடைய நெடுந்தூரம் வந்தேன் மறுபிறவிச்
    சுழலில் தவிக்க விடவேண்டாம் சோதி மணிகண்டனே

    புகலின்றி வாழ்க்கைப் புதைமணல் சிக்கிப் புலம்புகின்றேன்
    பகலை இரவாக்கும் பேரொளி யேயுந்தன் பாதமலர்
    அகலா திருக்கும் அனுபூதி வேண்டும் கருவறையில்
    புகச்செய்ய வேண்டாம் புனிதனே புண்ணிய பாலகனே

    மறைவா யிருந்தாலும் காடு மலைகள் கடந்துவந்தே
    இறைவா உனைநான் இருகண்க ளாலும் பருகிவிட்டேன்
    மறவாமல் எந்தன் மனத்துக் கினிய வரம்தருவாய்
    பிறவாமை யன்றிப் பிறிதொன்றும் வேண்டாப் பிடிவாதமே

    துறவிக்கும் உண்டு துளியச்சம் நீடு துயில்நடுவே
    மறலிக் குயிரைப் பறிகொடுக் கின்ற மரணபயம்
    பிறவிப் பிணிதீர மட்டுமே நெஞ்சைப் பிணித்துவைத்தேன்
    மறந்தும்நான் வேறு வரம்கேட்க மாட்டேன் மணிகண்டனே

    மீண்டும், 1966-க்கே போவோம். வீரமா ஈரமா நாடகத்தைத் தொடர்ந்து, நூர்ஜஹான் கவிதை நாடகம், இன்னொரு சமூகக் கவிதை நாடகம், அதாவது, முற்றிலும் சொந்தச் சரக்கு, எழுதினேன். அந்த நாடகங்களின் பிரதிகள் எதுவுமே என் வசம் இல்லை. ஓரிரு பாடல்கள் மட்டும் நினைவில் உள்ளன.

    நாட்டைக் காக்கும் பணியில் காதலன் போர்முனைக்குச் சென்றுவிடத் தனிமையில் அழுதபடிப் படுத்திருக்கும் காதலியின் நிலையைச் சொல்லும் ஒரு விருத்தம் நினைவுக்கு வருகிறது:

    நீர்த்துளிகள் நித்திலத்தின் குவியல் போலே
    நேரிழையின் கன்னத்தில் வழிய ஓசை
    சேர்த்துளிகள் செதுக்காத சிற்பம் அங்கே
    தேம்பிக்கொண் டிருந்ததுதன் மேனி யெங்கும்
    வேர்த்திருப்ப தாலவளும் முனக லோடு
    மெல்லத்தான் புரண்டுபடுத் தாள்அக் காட்சி
    தேர்த்திருப்பம் போலிருந்த(து) அந்தத் தேரின்
    தெய்வமோ போர்முனையில் இருந்த தம்மா

    இப்படி என் கவிதைப் பயணம் நடந்து கொண்டிருந்த போது, 1967-ல் என்று ஞாபகம், திரைப்படத் துறையில் என் வளர்ப்புத் தந்தைக்குப் பரிச்சயமாயிருந்த கவிஞர் தேவநாராயணன் என் வீட்டுக்கு ஒருநாள் வந்திருந்தார். என் கவிதை ஈடுபாடு பற்றிக் கேள்விப் பட்டதும் அடுத்த வாரம் தம் வீட்டில் நடைபெற இருந்த ஒரு கவியரங்கத்தில் நான் பங்குபெற்றுக் கவிதை படிக்க வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டார். மறுநாள் சென்றேன், மந்தைவெளி, செயிண்ட் மேரிஸ் சாலையில் இருந்த அவர் இல்லத்துக்கு. சிறிய கூடத்தில் சுமார் இருபத்தைந்து நபர்கள் அமர்ந்திருந்தனர். ஒருவர் தலைமை. அவர் அழைக்க ஒவ்வொருவராகக் கவிதை படிக்க, வந்திருந்தோர் ரசிக்க, எனக்கு எல்லாமே அதிசயமாக இருந்தது. அது பாரதி கலைக் கழகம் என்ற நிறுவனத்தின் மாதமொரு கவியரங்க நிகழ்ச்சி என்று பிறகு தெரிந்து கொண்டேன். அன்று பாரதியின் புதிய ஆத்திசூடியில் இருந்து ஒவ்வொருவருக்கும் ஒரு வரி தலைப்பாகத் தரப்பட்டிருந்தது. எனக்குத் தரப்பட்ட வரி, “சைகையில் பொருளுணர்”. என் முறை வந்தது. எழுந்து நின்று என் கவிதையைப் படித்தேன்:

    அன்றொருநாள் ஆலமரம் விரித்த நீழல்
    அமைதியுடன் அழகுமிக அமைந்த சூழல்

    கல்லால மரத்தடியில் மெளனமாக வீற்றிருந்து, சின்முத்திரை காட்டிச் சைகையில் பொருளுணர்த்திய தட்சிணாமூர்த்தி பற்றிய என் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    நான் தொடர்ந்து பாரதி கலைக் கழகத்தின் கவியரங்குகளில் பங்கேற்று நிறைய கவிதைகள் படித்தேன். பாரதி கலைக் கழகத்தின் தலைவர் பாரதி சுராஜ் மிகப் பெரிய கவிதை ரசிகர். நான் சந்தித்த மிகநல்ல மனிதர்களில் ஒருவர். அவரைப் பற்றித் தனியாக ஒரு பகுதியில் பிறகு சொல்கிறேன்.

    பல கவியரங்கங்களில் பங்கு கொண்டு பாராட்டுப் பெற்றேன். ஆனாலும், என் மனத்தில் ஏதோ நெருடல். நான் என் திறமையைக் காட்டிக் கொள்ளும் ஒரு சாதனமாகக் கவிதையைப் பயன்படுத்துவதில் மனோன்மணிக்குச் சம்மதம் இல்லை. அவள் முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள். விரைவில் நான் தலைப்புகளுக்குப் பாடல் எழுதுவதை நிறுத்தி விட்டேன். அந்தச் சூழலில்தான் ஏற்கனவே சொன்னதுபோல் கம்பன் வந்து கதவை இடித்ததும், வாத்ஸ்யாயனன் என்னை வம்புக் கிழுத்ததும். இலக்கியம், தத்துவம், அரசியல் சித்தாந்தம்; இப்படிப் பலதுறைகளிலும் நிறைய படித்தேன். நிறைய எழுதினேன். அந்தச் சமயத்தில்தான், முன்பகுதியில் குறிப்பிட்டது போல எனக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது; இல்லை, தரிசனம் கிட்டியது. அதற்கும் தேவநாராயணனே காரணமாக இருந்தார்.

    (தொடரும்)

    Share
  • அம்மா என்றழைக்காத உயிரில்லையே…

    –கவிஞர் காவிரிமைந்தன்

    mannan song

    கண்கள் பனிக்கும்! கருவறையில் உன்னைச் சுமக்கும் நொடி முதலாக தன்னை மறக்கும்! உன்னை நினைக்கும்! வண்ணக் கனவுகள் ஆயிரம் கண்டு உன்னை வளரத்திடும் பெண்மையின் பூரணம் தாய்!  கடவுள் ஒவ்வொரு வீட்டிலும் எடுக்கின்ற அவதாரம் ‘தாய்’ என்பதும் மிகையில்லை!  கருணை, அன்பு, பாசம், நேசம் என்று எத்தனையோ சொற்கள் தாயிடம்தானே குடிகொண்டுள்ளன.

    “அம்மா” என்கிற ஆதாரச் சொல்லிலே அன்பின் அடையாளங்கள்!  ‘அம்மா’ என்று அழைக்கும்போதே.. நமக்குள் எத்தனை சுகஸ்வரங்கள்?  பூமியைக்கூட தாய் என்றுதானே நாமும் அழைக்கிறோம்!  அறிவியல் ஆயிரமாயிரம் கண்டுபிடிப்புகளைத் தந்து இந்த பூமியை சொர்க்கபுரியாக்கலாம்!  ஆனால் அவையெல்லாம் தாயின் மடியில் தலைவைத்து படுக்கும்போது கிடைக்கின்ற நிம்மதி சொர்க்கத்தைவிட மேலானதல்லவா?
    VaaliilayarajaKJY
    கவிஞர் வாலியின் கருத்து முத்துக்கள் தாயைப் பற்றி ‘மன்னன்’ என்கிற திரைப்படத்தில் வெளியான பாடலில் இசைஞானி இளையராஜாவின் இசையில் பத்மஸ்ரீ கே.ஜே.யேசுதாஸ் குரலில் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை பண்டரிபாய் நடிப்பில்..

    http://www.youtube.com/watch?v=9CKTKjIYXLw

    காணொளி: http://www.youtube.com/watch?v=9CKTKjIYXLw

    படம் : மன்னன்
    இசை: இளையராஜா
    பாடல்: வாலி
    குரல்: கே.ஜே.யேசுதாஸ்
    நடிப்பு: ரஜினிகாந்த், பண்டரிபாய்

    அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    அம்மாவை வணங்காது உயர்வில்லையே
    அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    அம்மாவை வணங்காது உயர்வில்லையே
    நேரில் நின்று பேசும் தெய்வம்
    பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
    அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    அம்மாவை வணங்காது உயர்வில்லையே

    அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
    திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
    அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
    புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா
    பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
    அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
    அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
    மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
    அதை நீயே தருவாயே

    அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    அம்மாவை வணங்காது உயர்வில்லையே

    பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
    அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
    விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
    கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
    ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
    நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
    ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
    உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
    உன்னாலே பிறந்தேனே

    அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    அம்மாவை வணங்காது உயர்வில்லையே
    நேரில் நின்று பேசும் தெய்வம்
    பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
    அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    அம்மாவை வணங்காது உயர்வில்லையே
    அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    அம்மாவை வணங்காது உயர்வில்லையே…

    அட்சர வாசகங்கள் வார்த்தைக் கோலங்களாய் விழ.. அந்த அர்த்தப் புஷ்பங்களை கானமழைபொழியும் யேசுதாஸ் குரல் மெருகேற்றித்தர.. கண்களைப் பனிக்க வைக்கும் அரிய பாடலாய் காதில் விழுகிறது!

    இது குறித்து கவிஞர் வாலி அவர்களைச் சந்தித்து நெஞ்சாரப் பாராட்டிய நாளில்.. திரைப்படத்தில் இடம்பெறும்போது ஒருபாடல் எப்படி மக்களைச் சென்றடைகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

    இதைவிட 72 முறை ‘தாய்’ என்கிற சொல் பயன்படுத்தப்பட்டு தனிக் கவிதையில் தான் படைத்த தாய் கவிதைச் சரத்தை மடமடவென்று  உச்சரித்தார்!  (குமுதம் இதழில் வெளிவந்ததாக அறிகிறேன்)  மண்ணிலென்ன தோன்றக்கூடும் மழையில்லாதபோது.. மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது என்கிற கவிஞர் வாலியின் வரிகளே மீண்டும் நெஞ்சில்!!

    இன்னுமொரு செய்தி.. திருச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் திருக்கோயிலில் பளிங்குக்கல்லில் பதிக்கப்பட்டிருக்கிறது இந்தப் பாடல்..அம்மா என்றழைக்காத உயிரில்லையே..

     

     

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (141)

    கிரேசி மோகன்

    Trivikrama. Thiruvona Aashamsagal.
    Trivikrama. Thiruvona Aashamsagal.

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————–
    ஓணத்தின் போது எழுதியது….
    ————————————————

     

    Vamana. Happy Onam.
    Vamana. Happy Onam.

     

    Krishna vanquishes Kuvalayapeedam. Chinese brush, watercolour.
    Krishna vanquishes Kuvalayapeedam. Chinese brush, watercolour.

    பொன்னாழி வெண்மைப், புரிசங்கு கையிருக்க,
    கண்ணா யிரச்சேடன் கட்டிலில், -பெண்ணாழி,
    மார்பில் பதித்து, மலரும்கண் மாலவனின்
    சார்பாக கண்ணன் ஜனிப்பு….(364)

    சேணம் பிடித்தைவர், சேனை ஜெயித்திட,
    வானத்து வைகுண்டம் விட்டகன்ற, -ஓணத்தன்,
    வாத புரீசன், வடமதுரா மன்னவன்,
    கீதகோ விந்தந்தாள் காப்பு….(365)

    களித்தெமுனா, தீரத்தில், கோபியர் சூழ,
    குளித்தவர் காமத்தைக் கொன்று, -அளித்தனன்,
    ஞானத்தை; அந்தநந்த, நீலத்தை நாம்வணங்கி,
    ஓணத்தில் கொள்வோம் உவப்பு….(366)

    வானத்தை, மண்ணை, வரமாய் பலிதந்த,
    தானத்தை அன்றளந்த தெய்வத்தை, -ஓணத்து,
    வாமனக் குட்டனை, வாத புரீசனை,
    நீமனக் கட்டில் நிறுத்து….(367)

    ஆச்சு அறுபது, ஆண்டு களுருண்டு,
    போச்சாழி வண்ணா பரந்தாமா, -தாச்சு,
    உறங்கி எழுந்துண்டு, ஊர்கதை பேசும்,
    குரங்கிதை மாருதியாய்க் கொள்….(368)

    எழுத்தில் பிழையிருந்தும், ஏற்றுக்கொள் கண்ணா,
    வழுத்த வழியறியேன் வேறு, -பழுத்த,
    கவியாக்கு என்னை, குறையொன்றும் இல்லா,
    புவிவாழ்வை கோவிந்தா போடு….(369)

    —————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி

    http://kamadenu.blogspot.in/2013_09_01_archive.html

     

    Share
  • சரித்திரத்தில் பதிந்த முத்தே

     
    எம். ஜெயராமசர்மா .. [மெல்பேண் ]

     

    vairamuthu-award

     

     

    சரித்திரத்தில் பதிந்த முத்தே
    சங்கத்தமிழ் கண்ட முத்தே
    பொறுப்புடனே கவிதை சொல்லும்
    புகழ்மிக்க வைர முத்தேEndhiranSpecial31

    கறுத்தநிற வைர முத்தே
    கவித்துவத்தின் உயர்ந்த முத்தே
    செருக்குடனே கவிதை சொல்லும்
    சிறந்த நல்ல தமிழின்முத்தே

    கண்ணதாசன் வாலி ஒடு
    கவிதை நின்று போச்சுஎன
    கவலை கொண்ட மனத்தையெலாம்
    களிப்புக் கொள்ள வைத்தாயே

    எண்ண எண்ண இனிப்பதற்கு
    ஏற்றவகையில் கவிதை தந்து
    வர்ணஜாலம் செய்து நிற்கும்
    வைரமுத்து வாழ்க வாழ்க

    மீசை கொண்ட பாரதியாய்
    மிடுக்கொண்ட வைர முத்து
    ஆசைகொண்டு தமிழை ஆண்டு
    அனைவரையும் அணைத்து விட்டார்

    வெள்ளுடையில் வந்து நிற்பாய்
    தெள்ளுதமிழ் தந்து நிற்பாய்
    துள்ளுநடை ஓடி வரும்
    சுவையுடனே கவிதை வரும்

    அள்ள அள்ளக் குறையாத
    அழகுதமிழ் பாய்ந் தோடும்
    அனைவருமே நீந்தி அதில்
    ஆனந்தம் பெற்று நிற்போம்

    தேசிய விருதை வென்றாய்
    திசையெலாம் பயணம் செய்தாய்
    காவியம் இயற்றி நின்றாய்
    கவிதைகள் பலவும் தந்தாய்

    பாவிலே பயணம் செய்தாய்
    பட்டங்கள் பலவும் பெற்றாய்
    ஓவியக் கவிதை தந்த
    உயர்முத்தே வாழ்க வாழ்க

    படித்த பின் புலம்
    பாட்டில் தெரியும்
    எடுத்த பொருளும்
    எளிதில் புரியும்
    தடித்த குரலால்
    தமிழைத் தருவாய்
    வெடித்த சிரிப்பு
    விரிந்தே பரவும்

    அடுக்கு மொழியும்
    அள்ளித் தருவாய்
    மிடுக்கு நடையும்
    விட்டு விலகாய்
    தொடுத்த கவிதை
    சுவையாய் தருவாய்
    தெறித்துச் சிதறும்
    தீந்தமிழ் அங்கே

    கல்வியில் பட்டம் பெற்று
    கவிதையால் பட்டம் வென்று
    நல்லதோர் நிலையில் நிற்கும்
    நற்றமிழ் கவிஞ்ஞரே நீர்
    வல்லமை பெற்று நாளும்
    வையத்தில் வாழ்க என்று
    நல்லதாய் வாழ்த்து கின்றேன்
    நானும் ஓர் ரசிகனாவேன்

    Share
  • பிரபஞ்ச தோற்றத்துக்கு அகிலாண்ட மூலத் தூசியை [Cosmic Dust] சூப்பர் நோவா [மரண விண்மீன்] வெடிப்புகள் ஊட்டியுள்ளன.

    jay

     http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gsqRGM1JirU

    http://www.space.com/25288-supernova-survivor-massive-star-weathers-mega-blast-video.html

    +++++++++++++++

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

     

    காலவெளிக் கருங்கடலில்
    கோல மிடும் கட்டுமரத் தீவுகள்
    காலக்ஸி ஒளிமந்தை !
    தேயும் பூத விண்மீன் ஈர்ப்புத்  திணிவால்
    மாய மாய் வெடித்து
    வாயுவும், தூசியும் சிதறிப்
    புதிய அண்டம் பிறக்கும்,  எழுபிறப்பு
    மனிதச் சுழற்சி போல் !
    பிறப்பும், இறப்பும் ஊழ்விதி
    பிரபஞ்சத் தோற்றமும் அப்படியே !
    அகில வெளி அரங்கிலே
    முகில் வாயுவில் மிதக்கும் இரு
    காலக்ஸிகள் மோதினால்
    கைச்சண்டை புரியாமல்
    கைகுலுக்கிப்
    பின்னிக் கொள்ளும் !
    வாயு மூட்டங்கள்
    வாரித் தழுவி
    சேய் விண்மீன் உதிக்கும் !
    இட்ட எச்சத்தில்
    புதிய கோள்கள் உண்டாகும் !
    மரணச் சூரியன் வெடித்து
    தூசி வெளியேறி
    பிறக்கும் புதிய கோள்கள்  !
    காலக்ஸி ஒளிமந்தை
    தீவாய் மிதந்து
    கருங்கடலில் நகர்வது
    கருஞ்சக்தியால் !

    ++++++++++++

     

     

    அகிலவெளித் தூசிகளே பிரபஞ்சத் தோற்றத்துக்கு மூல காரணி :

    2014 ஜூலை 9 ஆம் தேதி வெளிவந்த “இயற்கை” [Nature] விஞ்ஞான இதழ் ஓர் மர்மப் புதிரை விடுவித்தது.  ஒரு சூப்பர்நோவா [Supernova : மரண விண்மீன்] வெடித்த சில வாரங்களுக்குள்  அகிலவெளித் தூசியைப் [Cosmic Dust] பேரளவில் வெளியேற்றுகிறது.  அவ்விதம் வெளியாவது கூடியவரை 2.5 ஆண்டுகள் நீடிக்கலாம்.   வெடிக்கும் விண்மீன் பெரு வடிவத் தூசிப் பரலாகத் [Oversize Dust Grains]  தோன்றுகின்றன.  வெடிப்பில் பரல்கள் வெளியேறுவது முதலில்  மிக மெதுவாகவும், பிறகு வெகு விரைவாகவும் நேர்கிறது. இவ்விதம் நிகழ்ந்த ஒரு  சூப்பர் நோவாவை [SN : 2010JL]  முதலில் 2010 இல் விண்ணோக்கி மூலம் ஒரு காலக்ஸி அருகில் நோக்கியவர் டென்மார்க் பல்கலைக் கழக வானியல் விஞ்ஞானி கிரிஸ்டா கால் [Christa Gal].  அவர் பயன்படுத்திய விண்ணோக்கி சில்லியில் உள்ள பூதப் பெரும் தொலைநோக்கி [Very Large Telescope in Cerro Paranal, Chile].  மரிக்கும் பூத விண்மீன்களில் மட்டுமே இப்படி வெடிப்பு நிகழ்கிறது.  நமது சூரியன் போன்ற சிறிய விண்மீன்களில் வெடிப்பு நேர்வதில்லை.  பூத விண்மீன்கள் மடிந்து வெடிக்கும் போது அவற்றிலிருந்து, இரும்பு, சோடியம், கால்சியம் போன்ற தனிம அட்டவணைக் கன மூலகங்கள் [Heavy Elements in the Periodic Tables] எல்லாம் உருவாகின்றன.

    விண்மீன்கள் தோன்றுவதற்கும், அண்டக் கோள்கள் உண்டாவதற்கும் முக்கியத் தேவை,  எவை என்றால், மின்னேறிய அகிலவெளித் தூசிகள் [Ionized Cosmic Dust] என்பதே அவற்றுக்குப் பதில்.   மேலும் அந்தத் தூசிகள்தான் உயிரினங்கள் உதிப்பதற்கும் கருவிப் பொருளாக அமைகின்றன.   ஆயினும், அந்த தூசிகளின் ஆதிமூலச் சுரப்பிகள் இதுவரை எவையெனத் தெரியாமல் போயிற்று. இப்போது பல வானியல் விஞ்ஞானிகள் தொலைநோக்கி வழியாகப் பார்த்து, மூலச் சுரப்பியைத் தெரிந்து கொண்டனர்.  சிறிய காலத்தில் மரிக்கப் போகும் பூதச் சூரியன்  வெடித்துச் சிதறும் வாயுவும், தூசியும் பிரபஞ்ச அண்டக் கோள்களின் மூலச் செங்கலாய்  உருவெடுத்து மீண்டும்  அண்டக் கோள்களைப் படைக்கும் திறமடைகின்றன.   மனிதப் பிறப்பு இறப்புச் சுழற்சியைப் போல் பிரபஞ்ச விண்மீன்களும் முதிர்ச்சி அடைந்து, மூப்பு எய்தி மரித்துப் பிறக்கின்றன.

     

    Life cycle of star   “இளம்பிராய வளர்ச்சியில் காலக்ஸிகள் வாயு முகிலை விண்மீனாய் மாற்றும் இயக்கம் குன்றிய திறனாக்கத்தில் (Less Efficient Process) நிகழ்கிறது.  ஆரம்ப காலத்தில் காலக்ஸிகளுக்கு அகிலத் தூசி (Cosmic Dust) உருவாக்கப் போதிய காலப் பொழுது இருப்பதில்லை.  அவ்விதம் தேவையான வாயு முகிலின்மையால் விண்மீன் வளர்ப்பரங்குகள் (Stellar Nurseries) உண்டாவதில் தாமதமாகிறது.  வாயு முகில் பரவலில் தூசி படிவுக்கும் விண்மீன் வடிவு ஆக்கத்துக்கும் ஓர் எளிய இணைப்பாடு உள்ளது.  நாங்கள் அந்த இணைப்பாட்டை முதல் முறையாக காலக்ஸி உருவாக்கக் கணனிப் போலி இயக்கத்தில் (Computer Simulations for Galaxy Formation) உண்டாக்க முயல்கிறோம்.” ஆன்ரே கிரவ்ஸ்டாவ் (Associate Professor of Astrophysics, University of Chicago) “ஒளிமந்தையில் நிரம்பியுள்ள ஊடகமான வாயு முகிலும், அகிலத் தூசியும் (Gas & Dust, Interstellar Medium – ISM) முகிலிலுள்ள கொந்தளிப்பால் பூத மூலக்கூறாகச் சேர்ந்து திணிவு நிலை மிகை யாகிறது. (Overdensity in Giant Molecular Cloud). குழந்தை விண்மீன்கள் தம்மிடம் உள்ள கதிர்வீச்சால் தம்மைச் சுற்றி இருக்கும் வாயு முகிலைப் புயல் கணைகளால் சூடேற்றுகின்றன.  மேலும் சுற்றியுள்ள வாயு முகிலை அயனிகளாய் ஆக்குகின்றன (Ionize the Gas Clouds) ! மார்க் குரும்கோல்ஸ் (கலிஃபோர்னியா பல்கலைக் கழகம்) “12 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிய மிகப் பளுவுள்ள ஒளிமயமான காலக்ஸிகள் பலவற்றை நாங்கள் பார்த்தோம்.  அப்போது பிள்ளைப் பிரபஞ்சத்தின் வயது சுமார் 1.5 பில்லியன் ஆண்டுகள் என்று யூகிக்கிறோம்.  அந்த முடிவுகள் காலக்ஸி உருவாகி வளர்ந்த கணித மாடல் முன்னறிவிப்புகளுக்கு உடன்பாடாய் இல்லாமல் முரண்படுகின்றன.” டானிலோ மார்செஸ்னி (Tufts University Astrophysicist) “நமது பால்வீதி காலாக்ஸி பக்கத்தில் நெருங்கும் ஆன்ரோமேடா காலாக்ஸியுடன் ஐந்து பில்லியன் ஆண்டுகள் கடந்து மோதப் போகிறது !  (எதிர்பார்க்கப்படும்) அந்த பிரபஞ்ச நிகழ்ச்சிக்குப் பிறகு வான மண்டலம் இரவில் எப்படித் தோன்றும் என்பது யாருக்கும் தெரியாது !” ஆப்ரஹாம் லோப் வானியல் பேராசிரியர், ஹார்வேர்டு பல்கலைக் கழகம் (Abraham Loeb) Life cycle of star -2   விண்மீன்களின் மூர்க்கத்தனமான வாயுத் தூசி இயக்க விண்வெளியில் பெரும்பானமை

    ​ ​

    யான காலாக்ஸிகள் மோதிக் கொந்தளித்து, ஒற்றை வடிவத்தில் முழுவதும் சேர்ந்து கொள்கின்றன !  பெரிய காலாக்ஸி சிறிய காலாக்ஸியுடன் பின்னிக் கொள்வது பொதுவாக விண்வெளியில் நேரும் ஒரு சாதாரண நிகழ்ச்சியே !  டேனியல் கிறிஸ்ட்லைன் (Daniel Christlein, Astronomer Yale University) “காலக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப் பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது.  முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன !  வாயுவும், தூசியும் பலவிதங்களில் பிணைந்து கருந்துளைகள் தோன்றவும், குவஸார்களைத் (Black Holes & Quasars) தூண்டவும் வழி வகுக்குகின்றன.” (Quasar is a Quasi-Steller Object which appears Starlike but emits more energy than 100 Giant Galaxies). டாக்டர் ஆன்ரூ பங்கர் (Dr. Andrew Bunker Anglo-Australian Observatory)   Fig 1 Galactic Fountains in Milkyway “காலக்ஸிகள் எப்படித் தோன்றின என்பது வானியல் பௌதிகத்திலே கேட்கப்படும் மிகப் பெரிய ஒரு கேள்வி.  அந்த வினாவுக்கு நெருங்கிய பதில் கிடைக்க புதிய தொலைநோக்கி அனுப்பிய படங்களும், கணனிப் போலி இயக்கங்களும் (Computer Simulations) பயன்படுகின்றன.” ஆன்ரே கிரவ்ஸ்டாவ் (Associate Professor of Astrophysics, University of Chicago & Physicist Fermi National Accelerator Laboratory) “பூர்வீக விண்மீன்களைப் பற்றி அறிவது பேபி பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்த்து

    ​ ​

    விட வானியல் விஞ்ஞானிகளுக்குப் பேருதவி செய்யும்.  முதன்முதலில் உதித்த விண்மீன்களின் பிறப்பை விட அவற்றின் இறப்பே விஞ்ஞானிகளுக்கு முக்கிய நிகழ்ச்சியாகும்.  பிரபஞ்சத்தின் பூர்வ காலப் பிண்டத்தில் உருவான முதற்பிறவி விண்மீன்கள் பெரும்பான்மையாக ஹைடிரஜன், ஹீலிய வாயுக்களாலும், சிறிதளவு லிதிய வாயுவாலும் உண்டானவை.  முதலில் தோன்றியவை பேரளவுப் பளுவில் இருந்ததால், அவை விரைவாக வாழ்ந்து முடிந்து, அற்ப ஆயுட் காலத்தில் பிறந்த 200 மில்லியன் ஆண்டுகளுக்குள் இறந்து போயின !”  ரே ஜெயவர்தனா வானியல் பேராசிரியர், டொராண்டோ பல்கலைக் கழகம், கனடா   ஹப்பிள் & கெக் தொலைநோக்கிகள் மூலமாக இப்போது ஒளிச் செந்நிறக் கடப்பு : 7 இல் (Redshift Light -7) குறிப்பிடும் (பிரபஞ்சம் தோன்றி ஒரு மில்லியன் வயதாகும்) பூர்வ காலாக்ஸிகளைப் பற்றி அறிய முடிகிறது ! ஈர்ப்பாற்றல் குவியாடி (Gravitational Lensing) நோக்கில் காணும் மங்கலான பூர்வ ஒளி மந்தைகள் பால்வீதியை (Milkyway Galaxy) விட 100 மடங்கு சிறியவை ! ரிச்சர்டு எல்லிஸ் வானியல் பேராசிரியர் (California Institute of Technology) [March 2008] “பூமிக்கு அப்பால் 11 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் இந்த (பூர்வாங்க) 18 நீல வண்ணச் சிறிய வடிவமைப்புகள் (Dim Blue Small Objects) தற்கால காலாக்ஸிகள் சிலவற்றின் வித்துக்களாய் இருக்கலாம் ! ஒவ்வோர் உண்டையிலும் (Clump) பல பில்லியன் விண்மீன்கள் உள்ளன.  இம்மாதிரியான பல்வேறு உண்டைகள் ஒன்றுடன் ஒன்று மோதிச் சேர்ந்து வெகு காலமாக ஒளிமயப் பூத காலாக்ஸிகளாக உருவாகி வந்தவை என்று வானியல் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.” ராஜர் வின்ட்ஹார்ஸ்ட் & ஸாமுவெல் பாஸ்காரெல் (அரிஸோனா மாநிலப் பல்கலைக் கழகம்) “விஞ்ஞானிகளின் முக்கிய வினா: ‘பூர்வாங்க விண்மீன்களின் சந்ததிகள் இப்போது எங்கே உள்ளன ? என்பதுவே.  அதற்குப் பதில், கருமைப் பிண்டம் சூடாக இருந்தால் பூர்வாங்க விண்மீன்கள் சில நமது பால்வீதி காலாக்ஸியில் திரிந்து கொண்டிருக்கும் !. . . . எங்களுடைய ஆராய்ச்சி விளைவுகள் பூர்வாங்க விண்மீன்களை அறிவதன் மூலம் கருமைப் பிண்டத்தின் இயற்கைப் பண்பாடைக் கற்றுக் கொள்ள முடியும்.  நமது பால்வீதி போல் மையத்தில் இருக்கும் பூதக் கருந்துளைகளைப் பற்றி அறிய அறிவிப்புச் சின்னத்தைக் (Tell-Tale Sign) காண முடியும்.” டாக்டர் டாம் தியூன்ஸ் (Dr. Tom Theuns, Researcher, Durham University U.K.) “வானியல் விஞ்ஞானம் ஒவ்வொருவர் ஆத்மாவையும் விண்ணை நோக்கக் கட்டாயப் படுத்துகிறது.  மேலும் நம்மை ஓர் உலகிலிருந்து மற்றோர் உலகிற்கும் அது வழிநடத்திச் செல்கிறது.” கிரேக்க மேதை பிளாடோ (கி.மு. 428-348)   பூதக் கணனிப் போலி இயக்கத்தில் காலக்ஸி தோற்ற ஆய்வுகள் நாசாவின் ஸ்பிட்ஸர் தொலைநோக்கியைப் பயன்படுத்தி விண் வெளியில் வானியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு மகத்தான வெடிப்பில் உருவாகும் விண்மீனைக் கண்டுள்ளார்.  அதிலிருந்து வெளிவரும் உட்புறச் சிவப்பொளி (Infrared Light) இரண்டு சுருள் காலக்ஸிகள் மோதும் போது உண்டாகும் பேரொளி போல் ஒளிர்ந்தது !  கண்ணுக்கு ஏறக்குறையத் தெரியாதபடி விண்மீன்கள் அகிலத் தூசி படர்ந்து மங்கலாக மற்ற ஒளியலை நீளங்களில் தென்பட்டன !  இணையும் தாய் காலக்ஸிகளின் மையத்துக்கு அப்பால் நிகழும் இது போன்ற ஒளிமயமான அதிசய விண்மீன் வெடிப்புக் (Starburst) காட்சியை இதுவரை யாரும் கண்டதில்லை.  அந்தப் பேரொளி மயம் பிரபஞ்சத்தில் இதுவரைக் கண்ட ஒளித்திரட்சி அளவை விடப் பத்து மடங்கு மிகை யானது ! “இந்தக் கண்டுபிடிப்பு இணையும் காலக்ஸிகள் தம் மையத்துக்கு அப்பால் பேரளவு விண்மீன் வெடிப்புக் காட்சியைக் காட்டும் என்பதை நிரூபிக்கிறது,” என்று காலிஃபோர்னியா பொறிநுணுக்கக் கூடத்தைச் (C.I.T) சேர்ந்த ஜப்பானிய வானியல் விஞ்ஞானி ஒருவர் கூறுகிறார். பிரபஞ்சத்தின் பூதநிறையுள்ள காலக்ஸிகள் தற்போது விஞ்ஞானக் கணனி மாடல்கள் முன்னறித்தது போலின்றிப் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே உருவாக்கப் பட்டன என்று இப்போது வானியல் இதழ் (Astrophysical Journal) ஒன்று அறிவிக்கிறது. “12 பில்லியன் ஆண்டு களுக்கு முன்னே தோன்றிய மிகப் பளுவுள்ள ஒளிமயமான காலக்ஸிகள் பலவற்றை நாங்கள் பார்த்தோம்.  அப்போது பிள்ளைப் பிரபஞ்சத்தின் வயது சுமார் 1.5 பில்லியன் ஆண்டுகள் என்று யூகிக்கிறோம்.  அந்த முடிவுகள் காலக்ஸி உருவாகி வளர்ந்த கணித மாடல் முன்னறிவிப்பு களுக்கு உடன்பாடாய் இல்லாமல் முரண்படுகின்றன,” என்று வானியல் கட்டுரை ஆசிரியர் டானிலோ மார்செஸ்னி (Tufts University Astrophysicist) கூறுகிறார்.  புதிதாகக் கண்ட காலக்ஸிகள் நமது பால்வீதி ஒளிமந்தையை விட 5 அல்லது 10 மடங்கு பெருநிறை கொண்டவை.  பிள்ளைப் பிரபஞ்சத்தின் வயது 1.5 அல்லது 2 பில்லியன் ஆண்டுகளாக இருந்த போது அவை தோன்றியவ. அதாவது அவற்றின் “செந்நிறக் கடப்பு” மூன்றுக்கும் நான்குக்கும் (Redshift 3 = < 4) இடைப்பட்டது.  ஒளியலையின் செந்நிறக் கடப்பு இயற்காட்சி (Phenomenon) நீட்சியாகி நீண்ட ஒளிப்பட்டை அலை வரிசையில் (Red End of the Spectrum) நகர்வதைக் குறிப்பிடுவது.   பூதக்கணனிப் போலி இயக்கத்தில் (Supercomputer Simulation) பால்வீதி-ஆன்ரோமேடா மோதலை இட்டுப் பார்த்த பல ஊகிப்பு நிகழ்ச்சிகளில் ஓர் எதிர்பார்ப்பு மோதல் காட்சி (Possible Collision Scenario) இது : அந்தக் காட்சி அரங்கில் ஒவ்வொரு சுருள் காலக்ஸியும் விண்மீன்கள் நிரம்பிய தட்டாக வைத்துச் சுற்றிலும் கோள வடிவுக் கூண்டில் கரும்பிண்டம் உள்ளதாக (Disk of Stars Surrounded by a Spherical Dark Matter Halo) எடுத்துக் கொள்ளப்பட்டது.  அந்தப் போலி இயக்கத்தில் 10 கோடிக்கும் மேற்பட்ட போலித் துகள்கள் (Virtual Particles) இடம் பெற்றன.  பால்வீதி காலக்ஸி கீழிருந்து மேலே எழுந்தது !  ஆன்ரோமேடா சாய்வாக மேலிருந்து கீழ்நோக்கி நெருங்கியது.  காணப்படும் தளத்தின் அகலம் : ஒரு மில்லியன் ஒளியாண்டு தூரம்.  நிகழ்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட காலம் : ஒரு பில்லியன் ஆண்டுகள்.  மோதலின் கொந்தளிப்பில் ஈர்ப்பு விசைகளும், அலையடிப்புகளும் பூமியின் கடல் கொந்தளைப்பு போல் சிக்கலான விளைவுகளை உண்டாக்கி காலக்ஸியை மாற்றி அமைத்தன ! ஒவ்வொரு காலாக்ஸி விண்மீன்களின் ஈர்ப்பு விசைகளும், கரும்பிண்டமும் பின்னி, ஊடுருவி, பெயர்த்து, திரித்து இறுதியில் ஒரு புதிய நீள்வட்ட காலக்ஸி படைக்கப் பட்டது.     அகிலத் தூசியும் வாயு முகிலும் விண்மீன் வடிவாக்கச் செங்கல்கள் ! விண்வெளியை ஆராயும் போது ‘அகிலத் தூசி’ (Cosmic Dust) அண்ட கோடிகளை மங்கலாக்கி மறைக்கிறது என்று விஞ்ஞானிகள் மன உலைச்சல் அடைகிறார். ஆனால் அகிலத் தூசி இல்லையேல் விண்மீன்கள் இல்லாத பிரபஞ்சத்தையே நாம் காண முடியும்.  விண்மீன்கள் உருவாவதற்குத் தேவையான முக்கிய உட்கூறு (Ingredient) அகிலத் தூசிதான் !  அத்துடன் பூர்வமாய்ப் பரவிய வாயு முகில் (Primordial Diffuse Gas Clouds) ஒன்று கூடிக் காலக்ஸிகளாய்ச் சேர்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது.  “காலக்ஸிகள் எப்படித் தோன்றின என்பது வானியல் பௌதிகத்திலே கேட்கப்படும் மிகப் பெரிய ஒரு கேள்வி.  அந்த வினாவுக்கு நெருங்கிய பதில் கிடைக்க புதிய தொலைநோக்கி அனுப்பிய படங்களும், கணனிப் போலி இயக்கங்களும் (Computer Simulations) பயன்படுகின்றன என்று ஆன்ரே கிரவ்ஸ்டாவ் (Associate Professor of Astrophysics, University of Chicago & Physicist Fermi National Accelerator Laboratory) கூறுகிறார்.  2010 ஜூன் 3 ஆம் தேதி ‘இயற்கை’ (Nature) விஞ்ஞான இதழில் இக்கருத்தை வானியல் விஞ்ஞானி கென்னிக்கட் (Kennicutt, Director of University of Cambridge’s Institute of Astronomy) என்பவரும் குறிப்பிட்டிருக்கிறார்.     விண்மீன் உருவாக்கப்படும் நியதி (Star Formation Law) விஞ்ஞானி கென்னிகட் வெளியிட்ட விண்மீன் உருவாக்க விதி இதுதான் : காலக்ஸிகளின் ஒரு குறிப்பிட்ட பரப்பில் உள்ள வாயு முகில் பரிமாணத்துக்கு ஏற்ப அதே பரப்பளவில் உருவாகும் விண்மீன்கள் எண்ணிக்கையைப் பொருத்தது (Kennicutt Star-Formation relates the amount of gas clouds in galaxies in a given area to the rate at which it turns into stars over the sama area).  இந்தப் புதிய விதி பிரபஞ்சம் தோன்றிய பிறகு முதலிரண்டு பில்லியன் ஆண்டுகளில் உருவான காலக்ஸிகளுக்கு ஒவ்வாத முறையில் உள்ளது என்று இரண்டு விஞ்ஞானிகள் (Arthur Wolfe, University of California & Hsiao-Wen Chen, University of Chicago) கூறுகிறார். காரணம் பிள்ளைப் பிரபஞ்சத்தில் வாயு முகில் மாற்றமாகி ஆரம்ப கால விண்மீன்கள் உருவாக்கத் திறமை குன்றிப் போய் இருந்தது என்று கிரவ்ஸ்டாவ் அறிவிக்கிறார். விண்மீன்கள் வளர்ச்சிப்பாடு (Stellar Evolution) அகிலத் தூசி பெருக்கத் துக்கு வழி வகுத்து ஹீலியத்தை விடக் கன மூலகங்களான கார்பன், ஆக்ஸிஜன், இரும்பு போன்றவை உற்பத்தியாகின்றன.  விந்தையாக அகிலத் தூசியில் முக்கியமாக அந்த மூன்று மூலகங்களே பெருமளவில் காணப் படுகின்றன.  அகிலவெளி விண்மீன் ஆக்கும் வாயு முகில் பேரளவில் திரண்டு திணிவு மிகையாகும் போது விண்மீன் உருவாகும் இயக்கம் ஆரம்பமாகிறது.  குளிர்ந்த வாயு முகில் உள்ள ஒரு சில அரங்குகளில் ஹைடிரஜன் ஹீலியம் ஆகிய அணுக்கள் இணைய ஆரம்பமாகி மூலக்கூறுகள் உண்டாகின்றன.  இரண்டு ஹைடிரஜன் அணுக்கள் சேர்ந்து ஒரு ஹைடிரஜன் மூலக்கூறு உண்டாகிறது. அப்படி உருவான ஹைடிரஜன் மூலக்கூறுகள் பேரளவு நிறையுள்ள இளம் விண்மீன்கள் வெளியேற்றும் தீவிரப் புறவூதா ஒளியில் எளிதில் முறிந்து அழியக் கூடியவை !     பால்வீதியில் சூப்பர்நோவா தூண்டும் காலக்ஸி வாயு ஊற்றுகள் ஆப்பம் போன்ற காலக்ஸி தட்டு வெப்பம் அகிலவெளி விண்மீன் ஊடகத்தைச் (Interstellar Medium) சூடாக்கி எழுப்பும் சூப்பர்நோவா வெடிப்புகள் (Supernova Explosions) நமது பால்வீதியில் காணப்படு வதைச் சமீபத்தில் ஈசாவின் நியூட்டான் விண்ணுளவி (ESA’s XMM Newton Space Probe) நோக்கி இந்த சூப்பர்நோவா வெடிப்பு வெப்ப வாயு ஊற்றுக்களை நமது பால்வீதியில் படமெடுத்திருக்கிறது.  தட்டுக்கு மேலும் கீழும் செங்குத்தாய் வெளியேறும் வாயு ஊற்றுகள் ஒருசில கிலோபார்செக் (kiloparsec kpc) (A unit used for measuring Large Astronomical Distances. 1 kpc = 1,000 parsecs = 3,259 light-years) உயரத்தில் எழுகின்றன.  அதனால் கதிர்வீச்சு உண்டாகிக் குளிர் முகிலாகி மீண்டும் தட்டிலே விழுகின்றன.  அதாவது பால்வீதி சூப்பர்நோவா வெடிப்புகளால் காலக்ஸி தட்டில் வாயு முகில் அகிலவெளி விண்மீன்களின் படைப்புக்கு உதவுகிறது என்பது தெரிகிறது.  அந்த வாயு முகில் தணிந்த திணிவு நிலையிலும் (Low Density) ஒருசில மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் எக்ஸ்ரே கதிர்களை வெளியாக்கிகிறது.   பூர்வீகக் காலக்ஸிகள் பிரபஞ்சத்தில் உருவாதல் பேரளவு ஹைடிரன் வாயு ஈர்ப்புச் சக்தியால் உருண்டு திரண்டு அடர்த்தி மிகுந்து விண்மீன்கள் ஒன்று வளரும் அல்லது கலைந்து போய்விடும் !  அவை பல்வேறு வடிவுகளிலும், பரிமாணத்திலும் உருவாகின்றன.  முதலில் சிதைந்த விண்மீன் சிறியதாய்த் திணிவு மிகுந்து வடிவு பெறும் !  பேரளவில் திரண்டவை மெதுவாக உருவாகிப் பிறகு சிதைந்து சிதறுகின்றன !  பிரபஞ்ச விரிவாக்கத்தின் ஆரம்ப காலங்களில் உண்டை களாகத் திரண்டு விடுவித்துக் கொண்டவை பெரும்பான்மையாக கரும்பிண்டமும், நடுத்தன்மை ஹைடிரஜனும், (Dark Matter & Neutral Hydrogen) ஓரளவு ஹீலிய வாயுவாகவும் கருதப்படுகிறது.  இந்த உண்டை (Object) தனது ஈர்ப்புச் சக்தியால் சிதைய ஆரம்பிக்குக் போது,  அது “பூர்வீகக் காலாக்ஸி” (Protogalaxy) என்று குறிப்பிடப் படுகிறது.  முதன்முதல் திரணட பூர்வாங்க காலாக்ஸிகள் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிச் சிதைந்து போயின !

    கருமைப் பிண்டம், சாதாரணப் பிண்டம் (Dark Matter & Ordinary Matter in the form of Hydrogen & Helium Gas) இரண்டும் இந்த சமயத்தில் பிரிகின்றன !  வாயுக்கள் மோதி வெப்பத்தை இழக்கின்றன. வாயுக்களில் உள்ள அணுக்கள் மோதி வெப்பம் உண்டாக்கி, உட்சிவப்பு ஒளிக்கதிராக (Radiate as Infrared Light) வீசுகின்றன !  விண்மீன்கள் உதிக்காவிட்டாலும் பூர்வாங்க காலாக்ஸிகள் உட்சிவப்பு ஒளிக்கதிர் வீசித் தம்மைக் காட்டிக் கொள்கின்றன !  ஆனால் அவை விண்வெளியில் வெகு தூரத்தில் (பல ஒளியாண்டுகள் தூரம்) மிக மிக மங்கலாகத் தெரிவதால், தொலைநோக்கிகள் மூலம் காண்பதுவும் சிரமமானது ! பேபி பிரபஞ்சத்தில் நேர்ந்த காலாக்ஸிகளின் மோதல்கள் ! பிரபஞ்சத்தில் நேரும் காலாக்ஸி மோதல்கள் பலவற்றைக் கண்கவரும் வண்ணப் படங்களில் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்துள்ளது !  அந்த ஹப்பிள் படத்தொகுப்பில் (Hubble Atlas) சில காலாக்ஸிகள் மோதுகின்றன !   சில காலாக்ஸிகள் பங்கெடுத்துப் பேரளவில் பின்னிச் சேர்ந்து கொள்கின்றன !  காலாக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப்பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது.  முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன !  வாயுவும், தூசியும் பலவிதங்களில் பிணைந்து கருந்துளைகள் தோன்றவும், குவஸார்களைத் (Black Holes & Quasars) தூண்டவும் வழி வகுக்குகின்றன.” (Quasar is a Quasi-Steller Object which appears Starlike but emits more energy than 100 Giant Galaxies). காலாக்ஸிகள் பின்னிச் சேர்ந்து கொள்ளும் போது விண்மீன்கள் வெடித்துப் பிறக்கின்றன !  அப்போது நீண்ட வாயு முகில் அலை வால்கள் (Tidal Tails of Gas & Dust) காலாக்ஸிகளைச் சுற்றி முளைக்கின்றன !  காலாக்ஸியில் பெரும்பகுதி வெற்றிடமாக உள்ளதால் அவை மோதிக் கொள்ளும் போது சிதைவடைவதில்லை.  பூர்வீக காலத்தில் பேபி பிரபஞ்சத்தில் பக்கத்தில் இருந்த காலாக்ஸிகளிடையே சேர்ப்புகள், கலப்புகள் பல நூறு மில்லியன் ஆண்டுகளாய் நிகழ்ந்து வந்துள்ளன.  இப்போது வானியல் நிபுணர் சுமார் ஒரு மில்லியன் காலாக்ஸிகளின் மோதலை அருகில் உள்ள பிரபஞ்சத்தில் காண்கிறார்கள். நாசா அனுப்பிய காலெக்ஸ் விண்ணோக்கி (GALEX Space Probe)

    2003 ஏப்ரல் 28 ஆம் தேதி நாசா பூமியைச் சுற்றிவரும் “காலெக்ஸ்” (GALEX Orbiting Space Telescope) என்னும் விண்ணோக்கியை ராக்கெட் மூலம் அனுப்பியது.  பிரபஞ்சத்தில் கடந்த 10 பில்லியன் ஆண்டுகளாக புறவூதா ஒளிவீசும் பூர்வாங்க காலாக்ஸிகளை நோக்கி அகிலத்தின் பூர்வீக வரலாற்றை (Cosmic History) 29 மாதங்கள் தொடர்ந்து காலெக்ஸ் விண்ணோக்கி அறிந்து வந்தது.  அந்த விண்ணோக்கு விளைவுகள் நமது பிரபஞ்சத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும், அது எவ்வாறு வளர்ச்சி அடைந்து மாறியது என்பதையும் விஞ்ஞானிகளுக்கு எடுத்துக் காட்டும்.  அத்துடன் காலெக்ஸ் பூர்வாங்க காலத்தில் விண்மீன்கள் உருவாக இருந்த மூல காரணங் களையும் உளவிக் காணும்,  மேலும் காலெக்ஸ் முதல் முறையாக பிரபஞ்சத்தில் உருவாகி வரும் காலக்ஸிகளைக் காட்டும் ஓர் விளக்கமான விண்வெளிப் படத்தைத் (Galaxy Map) தயார் செய்யும் !  அதன் மூலம் நமது பால்வீதி போன்ற காலாக்ஸிகள் எவ்விதம் உண்டாக்கப் பட்டன என்று நான் அறியலாம்.  காலெக்ஸ் கண்டு அனுப்பும் புறவூதா நோக்கு நிகழ்வுகள் நமது பால்வீதியில் எப்போது விண்மீன்கள் இரசாயன மூலகங்களை உற்பத்தி செய்தன என்னும் புதிரையும் விடுவிக்கும் !

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gsqRGM1JirU

    [தொடரும்] 

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; ESA, National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Milkyway Galaxy Form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 Science Daily : What Shape is The Universe ? Columbia Astronomers Have Clue !  [Feb 17, 1998]
    20 NASA – The Galaxy Evolution Explorer (GALEX Space Probe) (April 28, 2003)
    21 The Cosmic Star Formation History (www.mpa-garching.mpg.de/HIGHLIGHT/2002/)
    21 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40807241&format=html (Galaxy -1)
    21 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40712131&format=html (Galaxy -2)
    21 (c) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40807101&format=html (Galaxy -3)
    22 A Computer Model of Galaxy Formation
    23 How Galaxies Work By : Craig Freudenrich, Ph..D.
    24 Science Daily – Early Star Formationin The Universe Illuminated (Sep 18, 2007)
    25 Discover Magazine – Unseen Universe (Jan 31, 2007)
    26 Scientific American – The Secret Lives of Stars (Number 4 Issue 2004)
    27 Cosmos – In Search of the First Stars By : Ray Jayawardhana (Jan 31, 2007)
    28 Astronomy Magazine – Quest for the First Galaxies By : Richard Ellis [March 2008]
    29 Space Daily – New Evidence for Supernova-Driven Galactic Fountains in Milky Way (Nov 22, 2010)
    30 Daily Galaxy – Stunning Burst of Star Creation Beams as Much Light as an Entire Galaxy (Nov 24, 2010)
    31 Space Daily – Cosmic Dust & Gas Shape Galaxy Evolution (Nov 24, 2010)
    32 Space Daily – Massive Galaxy Formed When the Universe Was Young (Nov 25, 2010)
    33 Space Daily – Astronomers Probe ‘Sandbar’ Between Islands of Galaxies (Nov 25, 2010)
    34 Astronomy Magazine – New Research – How Stars Form -Stars Change from Cold Gas to Blazing Hot Fireballs (December, 2010)

    35. http://www.scientificamerican.com/article/supernova-reveals-origins-of-universe-s-dust/?print=true [July 9, 2014]

    36. http://www.hngn.com/articles/35791/20140710/cosmic-dust-formed-by-gigantic-supernova-explosions.htm  [July 10, 2014]

    37.  http://www.ibtimes.co.uk/mystery-cosmic-dust-origin-solved-explosive-death-supernovas-created-stardust-factories-1456128  [July 10, 2014]

    38.  http://www.space.com/26482-cosmic-dust-survives-star-explosions.html  [July 10, 2014]

    ******************
    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  July 12, 2014

    Share