சரித்திரத்தில் பதிந்த முத்தே

 
எம். ஜெயராமசர்மா .. [மெல்பேண் ]

 

vairamuthu-award

 

 

சரித்திரத்தில் பதிந்த முத்தே
சங்கத்தமிழ் கண்ட முத்தே
பொறுப்புடனே கவிதை சொல்லும்
புகழ்மிக்க வைர முத்தேEndhiranSpecial31

கறுத்தநிற வைர முத்தே
கவித்துவத்தின் உயர்ந்த முத்தே
செருக்குடனே கவிதை சொல்லும்
சிறந்த நல்ல தமிழின்முத்தே

கண்ணதாசன் வாலி ஒடு
கவிதை நின்று போச்சுஎன
கவலை கொண்ட மனத்தையெலாம்
களிப்புக் கொள்ள வைத்தாயே

எண்ண எண்ண இனிப்பதற்கு
ஏற்றவகையில் கவிதை தந்து
வர்ணஜாலம் செய்து நிற்கும்
வைரமுத்து வாழ்க வாழ்க

மீசை கொண்ட பாரதியாய்
மிடுக்கொண்ட வைர முத்து
ஆசைகொண்டு தமிழை ஆண்டு
அனைவரையும் அணைத்து விட்டார்

வெள்ளுடையில் வந்து நிற்பாய்
தெள்ளுதமிழ் தந்து நிற்பாய்
துள்ளுநடை ஓடி வரும்
சுவையுடனே கவிதை வரும்

அள்ள அள்ளக் குறையாத
அழகுதமிழ் பாய்ந் தோடும்
அனைவருமே நீந்தி அதில்
ஆனந்தம் பெற்று நிற்போம்

தேசிய விருதை வென்றாய்
திசையெலாம் பயணம் செய்தாய்
காவியம் இயற்றி நின்றாய்
கவிதைகள் பலவும் தந்தாய்

பாவிலே பயணம் செய்தாய்
பட்டங்கள் பலவும் பெற்றாய்
ஓவியக் கவிதை தந்த
உயர்முத்தே வாழ்க வாழ்க

படித்த பின் புலம்
பாட்டில் தெரியும்
எடுத்த பொருளும்
எளிதில் புரியும்
தடித்த குரலால்
தமிழைத் தருவாய்
வெடித்த சிரிப்பு
விரிந்தே பரவும்

அடுக்கு மொழியும்
அள்ளித் தருவாய்
மிடுக்கு நடையும்
விட்டு விலகாய்
தொடுத்த கவிதை
சுவையாய் தருவாய்
தெறித்துச் சிதறும்
தீந்தமிழ் அங்கே

கல்வியில் பட்டம் பெற்று
கவிதையால் பட்டம் வென்று
நல்லதோர் நிலையில் நிற்கும்
நற்றமிழ் கவிஞ்ஞரே நீர்
வல்லமை பெற்று நாளும்
வையத்தில் வாழ்க என்று
நல்லதாய் வாழ்த்து கின்றேன்
நானும் ஓர் ரசிகனாவேன்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சரித்திரத்தில் பதிந்த முத்தே

 1. இன்றொருவர் பிறந்தநாள் என்பது மட்டுமல்ல..
  இன்பத்தமிழ்க் கவிஞரின் 75வது பிறந்தநாள்..
  என்பதனைக் கருத்தில்கொண்டு வடித்தகவிதை!
  எண்ணமெலாம் தித்திக்க வைத்ததே!!

  மென்பொருளாம் கணிணியிலே தமிழே ஆள..
  மெல்போர்னிலிருந்து சொல்வளமே கூடிவர..
  கண்ணிமைக்கும் நொடியில்கூட கவிதையாக்கும்..
  என்னினிய நண்பரிவர் என்பதிலே பெருமை!

  எழுதுகோலெடுத்து எழுதுவது அக்காலம்..
  தொடுவிரலால் எழுத்துக்களைக் கோர்ப்பது இக்காலம்
  சடசடவென கவிச்சரமே தொடுக்கின்றார்..
  ஜெயராம்ஐயரிவர் செந்தமிழில் செழிக்கின்றார்!!

  உள்ளமெல்லாம் உவகையுடன் உன்கவிதை ஓடிவர..
  சொல்லழகும் சுவையழகும் கலந்திருக்கும் அமுதமென..
  ஒவ்வொரு முறையும் பரிமாறும் கவியே.. உன்
  வண்டமிழை வரவேற்க.. காத்திருப்பேன்..இனியே!

  அன்புடன்
  காவிரிமைந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *