காற்று வாங்கப் போனேன் பகுதி – 21

கே. ரவி

ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் அருட்செல்வர் திரு.நா.மகாலிங்கம் அவர்கள் நடத்தி வரும் வள்ளலார்-காந்தியடிகள் விழாவில் ஒருநாள், 1970 என்று நினைக்கிறேன், கவிஞர் தேவநாராயணன் இறைவணக்கம் பாடினார். அவர் பாடிய பாடல், பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் வரும் கலைமகள் துதி.

தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல்

சிந்திப் பார்க்கே

களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல

காட்டல் கண்ணீர்த்

துளிவரவுள் ளுருக்குதலிங் கிவையெல்லாம் நீயருளும்

தொழில்க ளன்றோ

ஒளிவளரும் தமிழ்வாணீ அடியனேற் கிவையனைத்தும்

உதவு வாயே

அவர் பாடும் போது ஏனோ தெரியவில்லை என் கண்கள் கலுழ்ந்தன. என்னைச் சுற்றி நிறைய பேர் இருந்தனர் என்பதை மறந்து நான் கண்ணீர் சொரிந்து நின்றது எனக்கே அதிசயமாய் இருந்தது. அது என்னை மீறி நடந்த செயல். காரணம் புரியவில்லை. என் அகங்காரத்தை ஊடுருவிச் சென்று உயிர்நிலையை அளாவிப் பிசைந்து, சுற்றம் மறக்கச் செய்து, ஏன், என்னையே நான் மறக்கச் செய்த அந்தப் பாட்டு வரிகளை எண்ணி எண்ணி வியந்தேன். ‘மெய்மறத்தல்’ என்பதை எனக்கு நிதர்சனமாக உணர்த்தியது அந்தப் பாடல். உருக்கம் விளைவிக்கும் ஆற்றல் கவிதைக்கு உண்டு என்பதை உணர்ந்து கொண்டேன். “அழுதால் உன்னைப் பெறலாமே” என்ற அரற்றலின் பொருள் புரியத் தொடங்கியது. இதுவே மெய்யான தரிசனம் என்று குதிக்கத் தொடங்கினாள் மனோன்மணி.

சிகாமணியோ தன் வேலையைக் கச்சிதமாகச் செய்யத் தொடங்கினான்.

“நமக்கு என்ன தெரியும் என்பதில் தெளிவு வேண்டும். அதைப் பிறர்க்குச் சொல்ல முயலும் போதும் தெளிவாகச் சொல்ல வேண்டும். சிந்திப்பார்க்கே களிபெருகுமாறு அவர்கள் உள்ளங்களில் ஆனந்தக் கனவுகள் பல காட்ட வேண்டும். கேட்போர் மனமுருக வைத்து, அவர்களறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்கச் செய்ய வேண்டும். ஈதனைத்தும் உன் அருளால் மட்டுமே கிடைக்கக் கூடியவை. இவை அனைத்தையும் எனக்கு நீ அருள வேண்டும். இவ்வாறு தன்னுள் தமிழ்க் கவிதைகள் ஊற்றெடுக்கும் சுடராக விளங்கும் கலைமகளை பாரதி வேண்டுகிறான்.”

இப்படி ஒரு நீண்ட வியாக்யானப் பிரசங்கம் செய்தான் சிகாமணி. உண்மைதான், கவிஞனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவள் கலைவாணி. அந்தப் பாட்டை நான் கேட்கும் போதே, என் உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டி, என்னையறியாமல் கண்ணீர் பெருகும் உருக்கத்தை விளைவித்தவள் அந்த ஸ்வேத பத்மாஸனி தானே!

மனோன்மணி அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஆனந்தக் கூத்தாடினாள். ஆனந்தக் கனவு பல காட்டுவதும், கண்ணீர்த் துளிவர உள்ளுருக்குவதும் ஆகிய இரண்டு தொழிலையும் ஒரே சமயத்தில் நடைபெறச் செய்யும் அதிசயத்தில் திளைத்துப் பரவசம் அடைகிறாள். தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் . . .!

அர்த்தம் முழுதாகப் புரியாத போதும் வானொலியில் “ஓ துனியா கே ரக்குவாலே”, “ஓ ரே தால் மிலே நதீகி ஜல் மே” போன்ற ஹிந்தி பாடல்களைக் கேட்டு உருகிக் கண்பனித்திருக்கிறேன். அது த்வனியின் சிறப்பு. த்வனி என்ற தென்றல் வீசும் போது தலையசைக்கும் நாணல்தானே அர்த்தம்! கவிதையின் ஊற்றுக்கண் எங்கே என்பதை ஒருவாறு புரிந்து கொண்டேன்.

என் கவிதைப் பயணத்தில் இரண்டு திருப்புமுனைகள்: பாரதி கலைக்கழகமாகிய அடியார்கள் திருக்கூட்டத்தில் நான் சேர்ந்தது ஒன்று; பாரதியின் விஸ்வரூப தரிசன அனுபவம் நேர்ந்தது மற்றொன்று. இரண்டுக்குமே கவிமாமணி தேவநாராயணன் காரணமானார்.

ஆயிரம் மேதைகள் பிறந்திடலாம் – அதில்

ஒருவந்தான் கவியம்மா – அந்த

ஒருகவிஞன் சொல்லும் ஒவ்வொரு கவியும்

உன்னருட் துளியம்மா – அதற்கிவ்

வுலகம் விலையம்மா

இப்படி மனம் நெகிழச் செய்யும் கவிதைகள் பல எழுதியவர் தேவநாராயணன். படிப்போர் நெஞ்சில் நம்பிக்கைச் சுடரேற்றும் வரிகளையும் வாரி வழங்கியவர் அவர்:

உழைக்கத் தெரிந்த என்னை உலகம்deva

ஒருநாள் உணருமடா

ஒவ்வொரு கல்லாய் அடுக்கி வைத்தே – என்

மாளிகை உயருமடா

எப்பொழுதும் என் மனத்தின் ஒரு மூலைல் ஒலித்துக் கொண்டே இருக்கும் அவர் பாடல்:

பாரதியே ஒரு பாரதம் – அவன்

பாட்டெல்லாம் தமிழ் மாருதம்

பாரத மண்ணின் காவிய வளம்தான்

பாரதி தோன்றக் காரணம்

அந்தப் பாட்டில் வரும் ஒரு வரி:

ஏட்டில் எழுத்தில் இனிவரப் போகும் எழுச்சிகள் எல்லாம் பாரதி

இந்தச் சத்தியப் பிரகடனத்தைச் செய்த அவருக்கு வெறும் சொற்களில் நான் புகழஞ்சலி செய்வதைக் காட்டிலும், அவர் அமரரானதும் அவருக்கு நண்பர் வ.வே.சு. சூட்டிய அற்புதமான கவிதைப் பாமாலையை நினைவு கூர்வதே பொருத்தம்:

யுகமொன்று மறைந்ததைப்போல் உணர்வளித்துச் சென்றுவிட்டாய்;

சகமீதோர் வெற்றிடத்தை சாட்சியெனத் தந்துவிட்டாய்;

எங்கிருந்து வந்தாய்நீ; இன்றெங்கே சென்றுவிட்டாய்?

தங்கிய காலமெல்லாம் தமிழிசைத்தே வாழ்ந்திருந்தாய்;

கலைக்கழகக் கவியரங்கில் கணீரென்று நீபாடத்

தலையசைத்து இரசிக்காதோர் தமிழறியாச் செவிடரன்றோ!

பல்லவிகள் நீபாடப் பல்லக்காய் எம்செவிகள்

அள்ளிச் சுமந்து ஆடியதை மறப்போமோ?

உள்ளும் புறமும் வெள்ளையென வந்திடுவாய்;

கள்ளமிலா நெஞ்சோடு கவிக்கணைகள் வீசிடுவாய்;

பொய்ம்மைக்கு எதிரிநீ; புன்மைக்கு எதிரிநீ;

இன்மைக்கு எதிரிநீ; இயலாமைக்கு எதிரிநீ.

கடிவாளம் போடாத கவிதைப் புரவிகட்கும்

பிடிதாளம் எனச்சொல்லிப் பின்னலிசை போட்டவன்நீ!

உன் கவிதைகள் –

உலாவரும் இடம்தான் உதடுகளே யன்றி

உதிக்கின்ற இடமென்றும் உள்ளிருக்கும் இதயமன்றோ!

பாடம் நாக நந்தியார் எடுக்கப்

பாத்திரங்கள் நீ துலக்க

நாடகம் நடத்தியதை யாமின்றும் மறப்போமோ!

சகுனியென நீவந்து சபைகண்ட அழகெல்லாம்

பகரவொணாப் பரவசந்தான் மாமனே மறப்போமோ!

தேசமொழியில் வந்த தெய்வத் திருக்கதையை

பாசமொழி நம்தமிழில் பேசவைத்துப் பார்த்தவனே!

வண்ணத் திரையதனில் கண்ணனை ஆடவைத்தாய்;

எண்ணத்தில் உயர்ந்ததனால் எங்கும் உயர்ந்து நின்றாய்;

மண்வளத்தால் பிறந்தவன்நம் மாகவிஞன் என்றுரைத்தாய்;

மண்ணுக்கு வளம்சேர்த்து மனதில் நிறைந்துவிட்டாய்.

உனையிழந்த வருத்தம் எமக்குண்டு; உனக்கில்லை.

வினைமுடிந்த நண்பர்களின் விருந்தாகச் செல்வதனால்;

இளங்கார் வண்ணன்முதல் நாகநந்தி, நாசீ.வ.

வளஞ்சார் வ.சா.ப., ரா.பு.த. என்று பலர்

வரவேற்கக் காத்துள்ளார் வாயிற் படிகளிலே!

ஞாலம் தந்த உறவா நம்முறவு இல்லையில்லை

காலம்தந்த வரவு நம் கவிஞர்களின் உறவு;

காலம் பிரிக்கும்; காலமே இணையவைக்கும்;

காலம் பெரிது நம் களம்சிறிது; விடைபெறுவேன்

எனக்குக் கவிதா தேவியின் தரிசனத்தை முதன்முதலாகக் காட்டிய தேவநாராயணனை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். அந்த தரிசனத்தில் விசுவரூபம் காட்டிய பாரதியே கீதாச்சாரியனாகிய கண்ணன். எவ்வளவு சொன்னாலும் தெளிவுபெறாத நானே பார்த்தன்.

அடுத்த தரிசனம் நான்பெறக் காரணமானவர் கண்ணதாசன். அதைப் பற்றி அடுத்த சந்திப்பில் சொல்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காற்று வாங்கப் போனேன் பகுதி – 21

  1. அன்பு ரவி
    தெய்வக் கவிஞர் தேவநாராயணனுக்கு நான் வடித்த அஞ்சலிப் பாடல் என்னிடமே இல்லை. அந்த அற்புதக் கவிஞனுக்கு நானளித்த அஞ்சலிப் பூக்களை ஆவணப்படுத்தியதற்கு நன்றி. கட்டுரையைப் படித்த கணமுதல் அவர் நினைவில் மனம் நெகிழ்கிறது. கொஞ்சம் தனிமையில் அழ வேண்டும் போலிருக்கிறது.இதோ எழுதிவிட்டேன். இன்னும் சிலமணி நேரங்களுக்கு தனித்திருக்க விரும்புகிறேன்……

    அன்புடன்
    வவேசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *