கே.ரவி

கவிதை எழுதத் தொடங்கிய சில மாதங்களிலேயே காவியங்கள் எழுத வேண்டும் என்ற ஆசை என்னைப் பற்றிக் கொண்டது. முதல் முயற்சியாக, சாம்ராட் அசோகனின் மனமாற்றத்துக்கு வழிவகுத்த கலிங்கத்துப் போரை மையமாகக் கொண்டு ஒரு குறுங்காவியம் நாலைந்து நாட்களில் எழுதி முடித்தேன். கலிங்கத்துப் பரணியில் தொடங்கிய என் தமிழ்ப் பயிற்சி, அதற்குக் காலத்தால் மிகவும் முற்பட்ட அசோகனின் கலிங்கப் போரில் வளர்ந்தது பற்றி மகிழ்ந்தேன். “வீரமா ஈரமா” என்ற தலைப்பில் எழுதிய சாம்ராட் அசோகன் சரித்திரக் காவியத்தின் கைப்பிரதியை முதலில் என் ஆசான் தண்டமிழ்க் கொண்டலிடம் தந்தேன். தவறுகள் இருந்தால் திருத்திக் கொடுக்க வேண்டினேன். பல நாட்கள் ஆகியும் அவருக்கு ஏனோ அதைப் படித்துப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. “ராஜா, முதலில் இதைப் படித்துச் சரி பார்க்க குப்புசாமி வாத்தியாரிடம் கொடு, நான் பிறகு பார்க்கிறேன்,” என்று அவர் சொன்னதும் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியிலேயே இன்னொரு தமிழாசிரியராக இருந்த குப்புசாமி அவர்களிடம் அதைத் தந்தேன். மறுநாள் அவர் என்னை அழைத்து, கவிதை நாடகம் நன்றாக இருப்பதாகப் பாராட்டி விட்டு, “உன் வீடு எங்கே?” என்று கேட்டார். சென்னை, மந்தைவெளி, ராமகிருஷ்ணா மடம் சாலையில், ராணி மெய்யம்மை பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு எதிரில் என்று நான் சொன்னதும், வெகு அருகிலேயே இருக்கும் அவர் இல்லத்திற்கு மாலை 7 மணிக்கு என்னை வரச் சொன்னார். சென்றேன். தினமும் வரச் சொன்னார். இரண்டு வாரங்கள் தொடர்ந்து சென்றேன். என் கவிதை நாடகத்தின் ஒவ்வொரு பாடலையும் வரிவரியாகப் படித்து, சிறு திருத்தங்களும் செய்து, பல இடங்களில் நயம் வியந்து பாராட்டி, மிகப் பெரிய கவிஞர்களின் புகழ்மிக்க வரிகளுடன் ஒப்பு நோக்கி, இரண்டு வாரங்கள் தினமும் மாலை அவர் எனக்காகச் செலவழித்த கணங்களுக்கு என் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தாலும் போதாது. அந்த நாடகத்தின் கவிதைகளை நான் அடியோடு மறந்து விட்டாலும், நான் என்றும் மறக்க முடியாதவராய் என் நெஞ்சில் குப்புசாமி வாத்தியார் இடம்பெற்று விட்டார்.

கோழியைக் கேழி என்று எழுதிக் கேலிக்கு ஆளான நான் தமிழ் வகுப்பில் எழுதிய கட்டுரைகள் பாராட்டுப் பெற்றன. கண்ணகி பற்றிய ஒரு கட்டுரையை இப்படி முடித்திருந்தேன்: “கண்ணகியின் புகழைச் செங்குட்டுவன் வடித்த கல்லும் சொல்லும்; இளங்கோவின் சொல்லும் சொல்லும்”. அந்த வரிகளின் பக்கத்தில் என் ஆசான் தண்டமிழ்க் கொண்டல் எழுதியிருந்தார்:

கல்லும் சொல்லும் சொல்லும் சொல்லும்
என்னும் சொல்லும் என்னை வெல்லும்

ஓராண்டுக்கு முன் என் விடைத்தாளை விட்டெறிந்த ஆசானே இப்படி எழுதியதும் எனக்கு எப்படி இருந்திருக்கும்!

என் ஆசான் தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன் அவர்களிடம் நான் பயின்றது சொல்லாளுமை. சொற்கள் எப்படி அடுக்கடுக்காக நெருங்கி வர வேண்டும், அதே சமயத்தில் ஒன்றிலொன்று கோக்கப்பட்டு ஊடுபாவி இருக்க வேண்டும் என்ற நுட்பத்தை அவருடைய கவிதைகளில் இருந்தே கற்றுக் கொண்டேன். அருவிபோல் பொழியும் சொல்லோட்டம் அவர் நடையின் தனிச்சிறப்பு:

கொஞ்சுமொழி மழலையைக் கோலத் தியற்கையைக்ravi
கோயிலாக் கொண்ட இறைவா
அஞ்சுதலை உடையார்கள் ஆறுதலை அடைகின்ற
அற்புதம் புரிகின்றவா
தஞ்சமென யாங்களே பஞ்சனைய பதமலர்கள்
பற்றினோம் பற்றற்றவா
வஞ்சமறு நெஞ்சிலே விஞ்சுமருள் கொஞ்சவரு
வள்ளலே வரமருளவா

கருத்துச் செறிவும் சொல்லழகும் கைகோத்து நடக்கும் அவர் பாடல்களில்:

பாறைக் கதவைப் பார்க்கும் விதவை
கூறைப் புடவை கொடுவொரு தடவை

எழுத்தெண்ணிப் பாடும் கட்டளைக் கலித்துறைக்கு அவருடைய ஒரு பாடலே கட்டளைக்கல்:

துலங்குவெண் ணீறு துணிப்பிறைக் கோடு துணைக்கரங்கள்
இலங்குநற் றொந்தி இறைவனென் புந்தி இருக்கையிலே
விலங்கெனும் வாழ்வு விளங்கிடும் தாழ்வு விரைந்தழியும்
கலங்கிடும் உள்ளம் களிப்பெனும் வெள்ளம் கலந்திடுமே

இந்தச் சொற்கட்டுக்கோப்பே வெகுநாட்களுக்குப் பிறகு எனக்குள் இருந்து வியக்கத் தக்க கட்டளைக் கலித்துறை பாடல்களை வரவழைத்தது.

1984-ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வோர் ஆண்டும் சபரி மலை செல்லும் நான் எப்பொழுதும் மலையேற மிகவும் சிரமப் படுவேன். மூச்சுத்திணறித் திண்டாடுவேன். மலையில் இருந்து இறங்குவதில் எனக்கு அவ்வளவு சிரமம் நேர்ந்ததில்லை. பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை அதிக சிரமமில்லாமல் மலையில் ஏறிவிட்டதும் மகிழ்ச்சியாக, அடாடா, இவ்வளவு எளிதாக ஏறி வந்து விட்டேனே, இனி இறங்குவது இன்னும் சுலபமாக இருக்கப் போகிறது என்று மனத்துக்குள் சந்தோஷப் பட்டுக் கொண்டேன். ஆனால், அந்த ஆண்டு மலையில் இருந்து இறங்கும் போது, காலிரண்டும் துவள, உடல் ஒத்துழைக்க மறுக்க, முடியவில்லை ஐயப்பா என்று வாய்விட்டுக் கதறியழும் நிலை ஏனோ ஏற்பட்டது. காரணமே புரியவில்லை. எல்லாவற்றுக்கும் நமக்குக் காரணம் புரிந்து விடுகிறதா? என்ன சிகாமணி, சத்தமே காணோம்! அப்படி அழுது, தொழுது இறங்கியபின், சென்னை திரும்பும் வழியில்தான் ‘பிறவா வேட்கைப் பஞ்சகம்’ என்று ஐந்து கட்டளைக் கலித்துறைப் பாக்கள் வந்தன:

எழச்செய்தாய் சென்னி முடிதாங்கி மாமலை ஏறிவந்து
தொழச்செய்தாய் கால்கள் துவளத் துவள இறங்குகையில்
அழச்செய்தாய் ஆனால் அடுத்த பிறவிக் கருங்குகையில்
விழச்செய்தால் உன்னை விடமாட்டேன் வீர மணிகண்டனே

விழலுக் கிரைத்தநீர் இல்லை விரதம் நுதல்விழியின்
அழலுக் கெரிந்தவன் சாட்சி ஹரிஹரா உன்பதத்தின்
நிழலை அடைய நெடுந்தூரம் வந்தேன் மறுபிறவிச்
சுழலில் தவிக்க விடவேண்டாம் சோதி மணிகண்டனே

புகலின்றி வாழ்க்கைப் புதைமணல் சிக்கிப் புலம்புகின்றேன்
பகலை இரவாக்கும் பேரொளி யேயுந்தன் பாதமலர்
அகலா திருக்கும் அனுபூதி வேண்டும் கருவறையில்
புகச்செய்ய வேண்டாம் புனிதனே புண்ணிய பாலகனே

மறைவா யிருந்தாலும் காடு மலைகள் கடந்துவந்தே
இறைவா உனைநான் இருகண்க ளாலும் பருகிவிட்டேன்
மறவாமல் எந்தன் மனத்துக் கினிய வரம்தருவாய்
பிறவாமை யன்றிப் பிறிதொன்றும் வேண்டாப் பிடிவாதமே

துறவிக்கும் உண்டு துளியச்சம் நீடு துயில்நடுவே
மறலிக் குயிரைப் பறிகொடுக் கின்ற மரணபயம்
பிறவிப் பிணிதீர மட்டுமே நெஞ்சைப் பிணித்துவைத்தேன்
மறந்தும்நான் வேறு வரம்கேட்க மாட்டேன் மணிகண்டனே

மீண்டும், 1966-க்கே போவோம். வீரமா ஈரமா நாடகத்தைத் தொடர்ந்து, நூர்ஜஹான் கவிதை நாடகம், இன்னொரு சமூகக் கவிதை நாடகம், அதாவது, முற்றிலும் சொந்தச் சரக்கு, எழுதினேன். அந்த நாடகங்களின் பிரதிகள் எதுவுமே என் வசம் இல்லை. ஓரிரு பாடல்கள் மட்டும் நினைவில் உள்ளன.

நாட்டைக் காக்கும் பணியில் காதலன் போர்முனைக்குச் சென்றுவிடத் தனிமையில் அழுதபடிப் படுத்திருக்கும் காதலியின் நிலையைச் சொல்லும் ஒரு விருத்தம் நினைவுக்கு வருகிறது:

நீர்த்துளிகள் நித்திலத்தின் குவியல் போலே
நேரிழையின் கன்னத்தில் வழிய ஓசை
சேர்த்துளிகள் செதுக்காத சிற்பம் அங்கே
தேம்பிக்கொண் டிருந்ததுதன் மேனி யெங்கும்
வேர்த்திருப்ப தாலவளும் முனக லோடு
மெல்லத்தான் புரண்டுபடுத் தாள்அக் காட்சி
தேர்த்திருப்பம் போலிருந்த(து) அந்தத் தேரின்
தெய்வமோ போர்முனையில் இருந்த தம்மா

இப்படி என் கவிதைப் பயணம் நடந்து கொண்டிருந்த போது, 1967-ல் என்று ஞாபகம், திரைப்படத் துறையில் என் வளர்ப்புத் தந்தைக்குப் பரிச்சயமாயிருந்த கவிஞர் தேவநாராயணன் என் வீட்டுக்கு ஒருநாள் வந்திருந்தார். என் கவிதை ஈடுபாடு பற்றிக் கேள்விப் பட்டதும் அடுத்த வாரம் தம் வீட்டில் நடைபெற இருந்த ஒரு கவியரங்கத்தில் நான் பங்குபெற்றுக் கவிதை படிக்க வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டார். மறுநாள் சென்றேன், மந்தைவெளி, செயிண்ட் மேரிஸ் சாலையில் இருந்த அவர் இல்லத்துக்கு. சிறிய கூடத்தில் சுமார் இருபத்தைந்து நபர்கள் அமர்ந்திருந்தனர். ஒருவர் தலைமை. அவர் அழைக்க ஒவ்வொருவராகக் கவிதை படிக்க, வந்திருந்தோர் ரசிக்க, எனக்கு எல்லாமே அதிசயமாக இருந்தது. அது பாரதி கலைக் கழகம் என்ற நிறுவனத்தின் மாதமொரு கவியரங்க நிகழ்ச்சி என்று பிறகு தெரிந்து கொண்டேன். அன்று பாரதியின் புதிய ஆத்திசூடியில் இருந்து ஒவ்வொருவருக்கும் ஒரு வரி தலைப்பாகத் தரப்பட்டிருந்தது. எனக்குத் தரப்பட்ட வரி, “சைகையில் பொருளுணர்”. என் முறை வந்தது. எழுந்து நின்று என் கவிதையைப் படித்தேன்:

அன்றொருநாள் ஆலமரம் விரித்த நீழல்
அமைதியுடன் அழகுமிக அமைந்த சூழல்

கல்லால மரத்தடியில் மெளனமாக வீற்றிருந்து, சின்முத்திரை காட்டிச் சைகையில் பொருளுணர்த்திய தட்சிணாமூர்த்தி பற்றிய என் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நான் தொடர்ந்து பாரதி கலைக் கழகத்தின் கவியரங்குகளில் பங்கேற்று நிறைய கவிதைகள் படித்தேன். பாரதி கலைக் கழகத்தின் தலைவர் பாரதி சுராஜ் மிகப் பெரிய கவிதை ரசிகர். நான் சந்தித்த மிகநல்ல மனிதர்களில் ஒருவர். அவரைப் பற்றித் தனியாக ஒரு பகுதியில் பிறகு சொல்கிறேன்.

பல கவியரங்கங்களில் பங்கு கொண்டு பாராட்டுப் பெற்றேன். ஆனாலும், என் மனத்தில் ஏதோ நெருடல். நான் என் திறமையைக் காட்டிக் கொள்ளும் ஒரு சாதனமாகக் கவிதையைப் பயன்படுத்துவதில் மனோன்மணிக்குச் சம்மதம் இல்லை. அவள் முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள். விரைவில் நான் தலைப்புகளுக்குப் பாடல் எழுதுவதை நிறுத்தி விட்டேன். அந்தச் சூழலில்தான் ஏற்கனவே சொன்னதுபோல் கம்பன் வந்து கதவை இடித்ததும், வாத்ஸ்யாயனன் என்னை வம்புக் கிழுத்ததும். இலக்கியம், தத்துவம், அரசியல் சித்தாந்தம்; இப்படிப் பலதுறைகளிலும் நிறைய படித்தேன். நிறைய எழுதினேன். அந்தச் சமயத்தில்தான், முன்பகுதியில் குறிப்பிட்டது போல எனக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது; இல்லை, தரிசனம் கிட்டியது. அதற்கும் தேவநாராயணனே காரணமாக இருந்தார்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *