Blog

  • திருமால் திருப்புகழ் (140)

     

    கிரேசி மோகன்

     

    Guru Krupa. Acrylic on canvas. #Gurupoornima Jul 12, 2014
    Guru Krupa. Acrylic on canvas. #Gurupoornima Jul 12, 2014

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————–
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————–

    இன்று குருபூர்ணிமா-வந்தே கிருஷ்ணம் ஜகத்குரும்….
    ———————————————————————————————-
    குருபூர்ணிமா வேண்டுதல் வெண்பா….
    ————————————————

    Divyam dadAmi thaey chakshu:' 'I give you divine eyes: Now look at Me' — Krishnam Vande Jagadgurum. #Gurupurnima  Keshav
    Divyam dadAmi thaey chakshu:’ ‘I give you divine eyes: Now look at Me’ — Krishnam Vande Jagadgurum. #Gurupurnima Keshav

     

    “சீதாப் பழம்தின்ற ஸ்ரீராமச் சந்திரா,
    கீதா உபதேச காகண்ணா, -போதாம்,
    குருபூர் ணிமையில், இருகார் முகில்காள்,
    தருவீர் எனக்குத் தவம்”….கிரேசி மோகன்….
    ——————————————————————–
    தங்கத்தில் திருவனந்தன் கோலத்தை கணினியில் கண்டு….
    ————————————————————————-
    அங்கம் ஜொலிக்க, அயனரன் பாதுகாப்பில்,
    தங்கமாய்த் தூங்கும் திருவனந்த, -சிங்கமே!,
    பாற்கடல் விட்டெதற்கு, பாதாளப் பள்ளிகொண்டீர்,
    வேர்க்கலையோ அங்குமக்கு விஷ்ணு….(357)

    பணம்தனில் தூங்கும், அனந்தனின் பூத,
    கணங்களின் காவலுற்ற காசை, -நினைந்திடும்,
    வேதாளங்கள் கையில், விலங்கிட வைத்திடும்,
    பாதாளம் பாய்ந்த பணம்….(358)

     

    THREE TIER PROTECTION FOR திருவனந்த புர ஸ்வாமிக்கு….
    ————————————————————————————

     

     

    Govinda. New forever series. #krishnafortoday
    Govinda. New forever series. #krishnafortoday

    –
    பாஞ்சாலி, ஆனை, பிரகலாதன், துன்பத்தில்,
    பூஞ்சோலை இன்பமாய் பூத்தவா, -ஏஞ்சாமி !,
    காப்புக் கடவுள்நீ, கேரளத்தில் முப்பாது
    காப்பில் கிடக்கலாமோ கூறு….(359)

    பணமுனக்கு வந்ததால், பத்தும்(அவதாரம்) மறந்து,
    பணஅரவப் பள்ளிகொண்டாய் பத்து !, -மனமிறங்கு,
    பாதாளப் பொக்கிஷம், போகட்டும் எக்கேடு
    தீதாளும் தேசத்தைத் தாங்கு….(360)

    போர்பாண்ட வர்க்காய், புரிந்தன்று பாரதப்,
    பார்மூண்ட பாரத்தைப் போக்கியவா, -மார்தாண்ட,
    வர்மனிடம் பொக்கிஷத்தின், நிர்வகிப்பை விட்டுச்செல்
    தர்மசம் ரக்ஷணத் திற்கு….(361)

    அடையார் அனந்த பத்பனாப ஸ்வாமி கோயிலில் எழுதியது
    —————————————————————————

     

     

     

     

     

    Ananda. New forever series. #krishnafortoday
    Ananda. New forever series. #krishnafortoday

     

    கடலேழில் தூங்கி, களைப்புற்றாய் போலும்,
    அடையாற்றில் பள்ளி அடைந்தோய், -மடல்வாழை,
    தென்னை மரம்சூழ், திருவனந்தா, ஐம்புலக்,
    கண்ணைப் பறித்தெனைக் காண்….(362)

    ஆடிவரும் பூரம், அவதரித்து, மார்கழியில்,
    பாடிவரும் ஆண்டாளின் பாசுரத்தை, -நாடிவரும்,
    வைகுண்டம் விட்டந்த, வில்லிபுதூர் வாழ்வுக்கு,
    பைகொண்ட பாம்பணைவோன் பார்….(363)
    ———————————————————————————————————————

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2014_05_01_archive.html

     

     

    Share
  • நானுனை மறவேன் நாராயணனே!

    சு.ரவி

    EEE844D4-9382-43A4-81EB-5B0A30E6A25D

    8A1CAC5D-6D89-4A1B-87C1-B1744B3A3E9F

    இராப் பகலாக இடருற்ற வேழம்
    அராற்றி ஆதி மூலமென் றலற
    கராப் படச் சக்கரம் கதுமென எறிந்த
    பராத் பரனே உன் பதம் மறவேனே!

    ஒருமனத் தோடுனை உடும்பெனப் பிடித்த
    துருவனை வானில் துலங்கு மீனாக்கிய
    கருட வாஹனா , கார்முகில் வண்ணனே
    நிருதி நெருக்கினும் நினை மறவேனே!

    பால்வீதி எங்கும் பரந்த கோளெலாம்
    கால்கழற் பரல்களாய்க் கணகணத் துருள
    வால்சுருண்டெழுந்த வராஹ மூர்த்தியே
    ஆலம் பொழியினும் அடிமறவேனே!

    நொடியி லோர்தூணை நூறிப் பிளந்து
    படியில் அமர்ந்தவா(று) இரணியன் பருவுடல்
    மடியுறக் கீண்ட இடிகுரற் சிம்மமே!
    அடிமை நானுந்தன் அடிமறவேனே!8A157ED5-0001-42AF-B530-9D839526AEDF

    தானம் இரந்த குறளனாய் வந்து
    வானம் அளந்த வளர் நெடு மாலே!
    ஊனம் செய்தென் உடல் வருத்திடினும்
    நானுனை மறவேன் நாராயணனே!

    அம்புவில் லேந்தி அடர்நெடுங் கானகம்
    தம்பியும் தாரமும் துணைவர நடந்த
    செம்பத மலர்கள் சேவித்தவாறே
    நம்பி எந்நாளும் நான் கிடப்பேனே!

    குரக்கரின் துணைகொடு குன்றுசூழிலங்கை
    அரக்கரதம் அரசின் ஆணிவேர் அறுத்தோய்!
    இரக்கமற்றென்னை இழிநர கிடினும்
    உரக்க நின் நாமம் ஓதிநிற் பேனே!

    மனம்வெறுப் பேறி மதம் கொண்ட வேந்தர்
    சினம்பெருத் தென் மேல் சீறிய போதும்
    புனல்கறுத் தோடும் யமுனைத் த்றைவனே,
    அனல்வறுத் திடினும் அடிமற வேனே!64045FAD-842D-4A33-B788-CB4914B4E61E

    திரிதரும் காலிகள் பின்சென்ற தெய்வமே!
    எரிதரும் நரகில் எனையிட்ட போதும்
    கிரிதரா உந்தன் கீர்த்தியே அன்றி
    பிறிதொரு வார்த்தை பேசகில்லேனே!

    ஓரா ழியும்,வெண் சங்கமும் ஏந்தும்
    ஆரா அமுதே ஆருயிர் நிலையே!
    நீரா ழியினுள் எனைஆழ்த் திடினும்
    சீரார் பதமலர் சிந்தை கொள்வேனே!

     

     

     

     

    85510988-C45B-40D3-A899-E3F7969BED6D98351337-30E3-458E-9439-87873559FEE7

    B76B39E2-29C6-4D03-AB7B-2A7F01DC77B6

     

    Share
  • காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாணவர் பயிலரங்கம்.

    1

    9.7.2014 அன்று காரைக்குடி இராம.சு.இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 80 மாணவ மாணவியருக்குத் தன்முன்னேற்றப் பயிலரங்கத்தினை தன்னார்வத் தொண்டு ஆர்வலர் திரு சொ.வினைதீர்த்தான் நடத்தினார். பாரம்பரியமிக்க இந்நகராட்சிப்பள்ளி 1938ல் தொடங்கப்பட்டு நடுநிலைப்பள்ளியாகச் செயல்பட்டு வந்தது. சென்ற ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு ஆற்றல்மிகு தலைமை ஆசிரியர் திரு ஆ.பீட்டர் ராசா வழிநடத்தலில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. திரு பீட்டர் ராசா பயிலரங்கு நடத்த ஆர்வத்துடன் தக்க ஏற்பாடுகள் செய்தார்.

    23

    பத்தாம் வகுப்புப் படிக்கும் 24 மாணவ மாணவியரும், ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் 60 பிள்ளைகளும் பயிற்சியில் கலந்துகொண்டனர்.

    46

    நேர நிர்வாகம், நினைவாற்றல் பெருக்கல், உறவுகளை மேம்படுத்தல் பற்றிச் சில சிந்தனைகளை இளம் மாணவர் நெஞ்சங்களில் விதைக்க முடிந்தது.

    கற்றல் பற்றி (Registration, Retention, Recall) வாசிப்பு, சிந்திப்பு, படைப்பு என்ற நிலைகள் ஆராயப்பட்டன. ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி நெஞ்சில் நிறுத்தல் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டது. “நான்கேட்கிறேன்; மறந்துவிடுகிறேன்; நான் பார்க்கிறேன்; நினைவுகூர்கிறேன்; நான் செய்கிறேன் புரிந்துகொள்கிறேன்!”என்பதனை ஒரு செயல் முறை மூலம் விளக்கப்பட்டது. நான் சொல்வதைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டு “உங்கள் ஆட்காட்டி விரலைக் கன்னத்தில் வையுங்கள்’ என்று கூறி அவர்கள் பார்க்க தன் பெருவிரலைத் தாடையில் பயிற்சியாளர் வைத்தார். பார்த்த மாணவர்கள் அனைவரும் அவ்வாறே அவரவர் பெருவிரலைத் தாடையில் வைத்தனர். பயிற்சியாளர் கூறியதான ஆள்காட்டி விரலை கன்னத்தில் வைக்கவில்லை. மாணவர்கள் பார்த்ததை செய்ததை ஆரவாரத்துடன் ஒத்துக்கொண்டார்கள். செயல்முறையால் I HEAR I FORGET; I SEE I REMEMBER; I DO I UNDERSTAND என்பதை உணர்ந்துகொண்டார்கள்.

    நினைவாற்றல் பெருக்கலில் ஒவ்வொரு கேள்விக்கான பதிலிலும் 4,5 சொற்களே பிரதானமாக உள்ளன என்பது எடுத்துக்காட்டுகளுடன் சுட்டப்பட்டது. படிக்கும்போது ஒரு பாடத்திலிலுள்ள ஒவ்வொரு கேள்விக்கான பதிலின் பிரதான 5,6 சொற்களைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்தக் குறிப்புப் புத்தகம் பாடத்தினை உணர்ந்து படிக்கவும் நினைவுபடுத்திக்கொள்ளவும் உதவும்.

    கற்க! கசடறக் கற்க!!
    கற்பவை கற்க! கற்றபின் கற்க!!
    நிற்கக் கற்க!

    என்று குறளைப் பிரித்துச் சொல்லி ஒருமுகக் கல்வி, பன்முறை படித்தலும் உரைத்தலும், பயனுறு கல்வி (FOCUSED LEARNING, POWER OF REPETITION, PURPOSE OF LEARNING) ஆகியவை வலியுறுத்தப்பட்டது.

    5

    நேர நிர்வாகத்தில் நேரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் ஆற்றும் செயல்களைத் திட்டமிட்டு ஒழுங்குபடித்திக்கொள்ளுதலே நேர நிர்வாகம் என்பது விளக்கப்பட்டது. ஒருவர் செய்யும் செயல்கள் 1.அவசியம்/அவசரம், 2.அவசியம்/அவசரமில்லை, 3.அவசியமில்லை/அவசரம்,4.அவசிமும் இல்லை/அவசரமும் இல்லை என்று நான்கு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அலசப்பட்டன.

    அவசியமான செயல்களான 1.உடலினை உறுதி செய்தல், 2.அறிவையும் திறனையும் பெருக்கல், 3.உறவுகளை மேம்படுத்தல் வலியுறுத்தப்பட்டன. அவசியமான செயலைத் தாமதப்படுத்தும்போது அது அவசரமான செயலாகிவிடுகிறது. படிப்பினை நாளை பார்க்கலாம் எனத் தள்ளிப்போடும்போது தேர்வு நெருங்கிப் படிக்க முடியாது மதிப்பெண் குறைந்துவிடுகிறது.

    ‘என்றும் ஒருவுதல் வேண்டும் புகழ்
    நன்றி பயவா வினை.’

    குறிப்பிட்ட செயலைச் செய்யும்போது புகழோ நன்றியோ கிடைக்காவிட்டால் அச்செயலை என்றும் செய்யக்கூடாது என்றார் வள்ளுவர். அது அவசியமும் அவசரமும் இல்லாத செயல். அச்செயல் நேரத்தை வீணடிக்கும். ஒரு செயல் செய்யும்போது அது செய்பவரின் திறனை வளர்த்து அவர் புகழ் பெற உதவ வேண்டும். அல்லது அச்செயல் பிறருக்குப் பயன்பட்டு நன்றியுடைவர்களாக ஆக்கவேண்டும். தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்துகொண்டு கிரிக்கெட்டோ அல்லது சினிமாவோ பார்ப்பதாலும் செல்போனில் வேண்டாதவற்றைப் பேசுவதாலும் புகழும் வராது, நன்றியும் கிடைக்காது என்பதை மாணவர்கள் ஒத்துக்கொண்டார்கள்.

    மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள். தாங்கள் பயிற்சியில் அறிந்துகொண்டவை பற்றிக் கருத்துரை (Feed back) எழுதிக்கொடுத்தார்கள்.

    Share
  • மன இருள் நீக்கி

    —விசாலம்

    குரு பூர்ணிமா என்றாலே என் மனதில்  வந்து நிற்பது அந்த   தத்தாத்ரேயர்தான். சம்ஸ்கிருதத்தில் பூர்ணிமா என்பது நமது மொழியில் பௌர்ணமி  என்கிறோம். சூரியனின் ஒளி சந்திரன் மேல் விழுகிறது . சந்திரனுக்கு தனக்கென்று ஒளி ஒன்றும் இல்லை. சூரியன், பூமியின் நிழல்  சந்திரன் மேல் விழ  நம் கண்களுக்கு சந்திரன் பல பிறைகளாக  தோற்றமளித்து பின் பௌர்ணமி நிலவாக தெரிகிறது.

    ஜோசியத்தில் சூரியன் ஆத்மாவாகவும் சந்திரன் மனமாகவும் சொல்லப்படுகிறது. இனி இதை நம் உடலில் வைத்துப்பார்க்கலாம். உடலில் இருக்கும் ஆன்மா எப்போதும் ஒளிவீசிக்கொண்டே இருக்கிறது.  அந்த ஒளியை உணர்ந்து கொள்பவர்கள்தான் மகானாகத் திகழ்கிறார்கள். சாதாரண மனிதன் இதைக்காணமுடிவதில்லை, ஏனென்றால் மாயை அந்த ஒளியை மறைத்துக்கொண்டிருக்கிறது. அந்த மாயையை அகற்றி உள்ளிருக்கும் ஆன்மாவைக்கண்டுக்கொள்ள ஒரு குரு தேவைப்படுகிறது.  மாயை என்பது ஒரே  இருட்டாக சரியான இடம்  போகத்தெரியாமல்  ஒருவனை திண்டாட வைக்கிறது. இதனால் அவன் அந்த மாயவலையில் மாட்டிக்கொண்டு வெளியே மீண்டுவரமுடியாமல்  தத்தளிக்கிறான். மனதுக்குள் இருக்கும் இந்த இருளைப்போக்கி ஒளியை நமக்குக் காட்டி சத் .சித் ஆனந்தத்தை  அனுபவிக்கச்செய்பவர் தான் குரு.

    நாம் பல கலைகளைக் கற்றுக்கொள்கிறோம். அவைகளைப் போதிப்பவர் ஆசிரியர்கள். சம்ஸ்கிருதத்தில் ஆசார்யா என்று வரும்.  ஒவ்வொருவருக்கும் ஒரே குரு தான் இருக்க முடியும் ஆனால் ஆசார்யார்கள் பலர் இருப்பார்கள். ஒருவருக்கு இரண்டு மூன்று குருமார்கள் இருந்தால் அவர்கள் கொடுக்கும் தீட்சை வேறுபடும். .மந்திரம் வேறுபடும்.  அணுகுமுறையும் மாற வாய்ப்புண்டு. ஆகையால் ஒரே குருவைத்தேடி கடைசிவரை அவரையே ஆராதிக்க வேண்டும். ஆனால் சரியான குரு கிடைத்து  அவரால் பல நன்னமைகள் அடைந்து சத்சித் ஆனந்தம் அனுபவிக்கும் பாக்கியம் உடையவர் மிகச்சிலரே .

    நான் முதலில் சொன்ன ஸ்ரீ தத்தாத்ரேயர் தனக்கென்று தனி குருவைத்தேடவில்லை. அவர்    இயற்கையிலிருந்தே  பல குருவைத் தேர்ந்தெடுத்தார். மும்மூர்த்திகளின் சங்கமமாக அத்ரி முனிவரின் தர்மபத்தினி அனுசுயா மூலம் அவதரித்த தத்தாத்ரேயர் சிறு வயதிலிருந்தே பெரிய ஞானியாக திகழ்ந்தார். அவரைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். தத்தாத்ரேயர் அவர்களைத் தவிர்க்க முயற்சிப்பார். ஒரு தடவை அவர்  ஒரு நதியில் ஸ்னானம் செய்ய இறங்கினார். ஆனால் அவர் நதியிலே மூழ்கி இருந்து மூன்று நாட்கள் வெளியில் வரவில்லை. மூன்றாவது நாள் அவர் வெளியில் வந்ததும் பார்த்தால்  அந்தக்கூட்டம் அப்படியே நின்றபடி இருந்தது. திரும்பவும் மூழ்கி தனது சக்தியினால் ஒரு கையில் மது புட்டியும் இன்னொரு பக்கம் ஒரு மாதுவை அணைத்தபடி  வெளியே வந்தார். அந்தக்கூட்டம் அவர் யோகா சக்தியிலிருந்து மாறி மாயையின் வலையில் விழுந்து விட்டதாக நினைத்து அவரை விட்டு விலகியது. அதன் பின் தத்தாத்ரேயர் தன்னுடைய உடலில் இருந்த ஒரு துண்டையும் வீசிப்போட்டுவிட்டு அவதூதராக மாறினார். பின் வேதாந்தத்தைப்பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். அவருடைய கீதை  “அவதூத கீதை” என பிரசித்தி பெற்றது . இதைப் படிக்க ஆத்மஞானம் பற்றி அநேக விஷ்யங்கள் தெரிய வரும் .

    thathathreyarஒரு தடவை மன்னர் யது  தத்தாத்ரேயரைப் பார்த்தார்…,

    “சுவாமி  நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் காரணம் என்னவோ? அந்த ரகசியத்தை எனக்கும் சொல்ல வேண்டும். தங்கள் குரு யார் ?”

    “என் குரு என் ஆன்மாதான். அந்த ஆன்மாவை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன் அதுதான் என் ஆனந்தத்தின் காரணம். தவிர குரு என்று சொல்லப்போனால் இருபத்தினாலு குரு உள்ளனர். அவர்கள் மூலம் என் அறிவு வளர்ந்தது”

    “அவர்கள் யார் யார் என தெரியப்படுத்துங்கள் “

    “அவை  பூமி,  தண்ணீர், காற்று,  நெருப்பு,  ஆகாயம், நிலா, சூரியன், புறா , மலைப்பாம்பு, கடல் , விட்டிற்பூச்சி, வண்டு , தேன்  ,ஆண்யானை, மான், மீன், பிங்கலை ,  பறவை, குழந்தை , மாது , பாம்பு,  அம்பு செய்பவன், சிலந்தி , குளவி”

    இவைகளிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களையும் விளக்கமாக சொன்னவுடன் மன்னர் யதுவும்  எல்லாம் துறந்து தவம் நாடிச்சென்றார்.

    குரு பிரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர:
    குரு சாட்சாத் பரப்பிரும்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம 

    படம் உதவிக்கு நன்றி:  http://santhipriyaspages.blogspot.com/2011/10/blog-post_05.html

    Share
  • மன நல ஆலோசனை: கேள்வி பதில்கள்

    –கார்த்திகேயன், விமலதாரணி.

    கேள்வி : 1
    என் மகனுக்கு வயது 7. இரண்டாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் விருப்பமின்றி இருக்கிறான். படிக்கச்  சொன்னாலே பசிக்குது சாப்பிட்டு படிக்கிறேன் என்றோ, டாய்லட் போக வேண்டும் என்றோ எதாவது சாக்கு சொல்வான். நானும் என் கணவரும் வேலை முடித்து வர இரவு ஏழாகி விடுவதால் ட்யூஷன் சேர்த்துள்ளோம். அங்கும் இப்படித்தான் செய்கிறானாம். ஞாபகமும் குறைவாக இருக்கிறது. அவனுக்குப் படிப்பில் ஆர்வம் வர என்ன செய்ய வேண்டும்?

    பதில் :
    உங்கள் குழந்தைக்கு படிப்பில் ஆர்வமில்லாதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பள்ளி ஆசிரியரை சந்தித்து அவன் நடவடிக்கைகளை விசாரியுங்கள். குழந்தையின் ஐக்யூ குறைவாக இருந்தாலும் அவனுக்கு கற்கும் திறன், சிந்திக்கும் மற்றும் நினைவு கொள்ளும் திறன் குறைவாக இருக்கும். இதனைப் பள்ளி ஆசிரியரும் உறுதி செய்தால் அவனை நல்ல சைக்காலஜிஸ்டிடம் அழைத்து செல்லுங்கள் அவனுக்கு ஐக்யூ டெஸ்ட் செய்ய வேண்டும். ஐக்யூ குறைவாக இருந்தால் ஆக்குபேஷனல் தெரபி கொடுக்க வேண்டியிருக்கும். மேழும் அவனுக்கு டிஸ்லெக்சியா பிரச்சனை உள்ளதா என்பதற்கான டெஸ்ட்களை செய்து அதற்கான தீர்வை கூறுவார்கள். எல்லாம் சரியாக இருக்குமானால் குழந்தையுடன் நீங்கள் செலவிடும் நேரம் குறைவு என்றோ, அவனுக்கு பயம், பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகள் இருப்பது இப்பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம்.  குழந்தைக்கு சிறு சிறு இலக்குகளை நிர்ணயித்து அதை அடைந்தால் பரிசுப் பொருள் கொடுங்கள். அவன் மனதில் தோல்வி பயத்தை போக்கி வெற்றி பெற ஊக்கமளியுங்கள். இசை நடனம் போன்ற ஒன்றை கற்றுக் கொடுங்கள். நன்கு வேர்க்கும்படியான விளையாட்டு ஒன்றில் சேர்த்து விடுங்கள் இவையெல்லாம் அவன் திறனை அதிகரித்து படிப்பில் கவனம் செல்ல உதவும்.

    கேள்வி : 2
    நானும் என் கணவரும் நல்ல பணியில் இருக்கிறோம். எங்களுக்கு ஒரே மகள். செல்லமாக அவளை வளர்த்திருக்கிறோம். அவள் 11 வகுப்பு படிக்கிறாள். அவள் கடந்த சில மாதங்களாக எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறாள். கேட்டால் கோபத்தில் பொருட்களை உடைக்கிறாள். வீசி எறிகிறாள். அவளை நினைத்து கவலையாக இருக்கிறது. இதற்கு முன் அவள் இப்படி இல்லை.

    பதில் :
    உங்கள் மகளைக் செல்லமாக வளர்த்திருக்கிறீர்கள் ஆனால் சுதந்திரமாக வளர்க்கவில்லையென்றே தோன்றுகிறது. கடந்த சில மாதங்களாகத்தான் அவள் இப்படி இருக்கிறாள் என்பதால் அவளுக்கு ஏதோ வெளியே சொல்ல முடியாத பிரச்சனை இருக்கலாம்.  ஒரே குழந்தையாக இருப்பவர்களுக்கு தன் பொருளையோ, உணர்வுகளையோ பகிர்ந்து கொள்வது சற்று சிரமம் தான். இதை குழந்தையிலிருந்தே பெற்றோர் சொல்லி வளர்க்க வேண்டும். யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாததாலேயே உங்கள் மகள் கோபப்படுகிறாள். அவளிடம் மனம் விட்டுப்பேசுங்கள். அவள் நடத்தையை குறை சொல்லாமல் பொறுமையாக இருந்து பாருங்கள். அவள் தோழிகளிடம் பேசிப்பாருங்கள்.  அவளுக்கு என்ன பிரச்சனை என்றாலும் அதை சரி செய்யாலாம் என்ற நம்பிக்கை கொடுங்கள். அவளாக தன் பிரச்சனை சொன்னால் ஒழிய நீங்களாக துருவித்துருவிக் கேட்காதீர்கள். உங்களின் பக்குவமான அணுகுமுறையினால்  ஒன்று அவள் பிரச்சனை உங்களிடம் பகிர்ந்து கொள்வாள் அல்லது தானாகவே சரி செய்துக் கொண்டு சகஜமாகி விடுவாள்.

    படம் உதவிக்கு நன்றி:  www.123rf.com

    Share
  • திருமால் திருப்புகழ் (139)

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

     
    ”கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————-
    கோகுலாஷ்டமி நாளில் எழுதியது….
    ——————————————————-

    Gitamrita series. #krishnafortoday - Keshav
    Gitamrita series. #krishnafortoday – Keshav

     

    ஆகுலம் மேய்த்து, அருங்கீதை உரைத்துநம்,
    ஆகுலம் தீர்க்க அவனியில், -கோகுலம்,
    வந்தநம் கண்ணனை, வாழ்த்த மொழியில்லை,
    வந்தனம் சொல்லுவோம் வா….(351)

    இன்று சிறைவந்(து), இரவோ(டு) இரவாய்,
    கன்றுகள் மேய்த்திட கோகுலம், -சென்று,
    புகுந்தநாள் நாளை, முகுந்தனுக்கு நெஞ்சம்,
    உகந்தநாள் ராதை உதிப்பு….(352)

    அப்பம், முறுக்கு, அதிரசம், வெண்ணெய்நெய்
    வெப்பம் தணிக்க, விளையாடச், -சொப்பும்,
    உனக்களிப்பேன் கண்ணா, உகந்துனது நட்பை,
    எனக்களிக்கப் புள்ளமர்ந்து ஏகு….(353)

    வண்ண மயிற்பீலி, வேய்ங்குழல், மாம்பழக்
    கன்னம் குழைய, களித்தபடி, -கன்னங்,
    கருத்த இரவைப், பொருத்த உருவில்
    ஒருத்தி மகனாய் உதிப்பு….(354)

    அஷ்டமி ரோகிணியில், ஆயர்தம் பாடியில்,
    இஷ்ட இடைச்சியர் இல்லம்போய், -துஷ்டனாய்,
    சாமள வண்ணன், சளைக்காது வெண்ணெய்வாய்,
    ஆமளவு உண்ண உதிப்பு….(355)

    அய்யர்க்கு நேற்றவன், அய்யங்கார்க்(கு) இன்றவன்,
    கையிருப்பு பக்ஷணம் கொள்வதற்கு, -மையிருட்டு
    வண்ணனவன் இல்லம், வருவான் தினம்தினம்
    கன்னமிடும் கோல்கைக் கொண்டு….(356)

    ————————————————————————————————————

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/

     

    Share
  • வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழா – ஒரு பார்வை

    -மேகலா இராமமூர்த்தி
    வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழா – ஒரு பார்வை
    (செயின்ட் லூயி, மிசௌரி)
    பகுதி – 1

    poster-fp

    அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்திலுள்ள செயிண்ட் லூயி நகரம் 250 வருடப் பழமையும் பாரம்பரியமும் கொண்டது. அதன் சிறப்பையும், பெருமையையும் மேலும் கூட்டும் வகையில் அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான FeTNA (Federation of Tamil Sangams of North America) தனது இருபத்தேழாவது ஆண்டுத் தமிழ்விழாவை சென்ற வாரம் (ஜூலை 3, 4, 5, 6) ஆகிய நான்கு நாட்கள் அங்குக் கொண்டாடியது.

    மிசௌரி மாகாணத்தில் இயங்கிவரும் ஆற்றலும், துடிப்பும், தமிழ்ப்பற்றும் நிறைந்த தமிழ்ச் சங்கத்தினர் பேரவையின் தமிழ்விழாவைத் தங்கள் குடும்ப விழாவைப்போல் அத்துணைச் சிரத்தையுடனும் ஈடுபாட்டுடனும் செய்தனர் எனில் மிகையில்லை.

    ஜூலை 3-ஆம் தேதி இரவு முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்ட ‘ஸ்டார் நைட்’ எனும் இரவு விருந்து விமரிசையாக நடைபெற்றது. அதில் பேரவையின் தலைவர்கள் மற்றும் உயர் பொறுப்புக்களில் இருப்போர், இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    பேரவையின் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஜூலை 4, 5 ஆகிய இரு தினங்களும் காலை 8:30 மணிமுதல் இரவு 11 மணி வரை நடைபெற்றன. ஜூலை 6-ஆம் தேதியன்று நிகழ்ச்சிகள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை நடைபெற்றன.

    விழாவைக் காண வந்திருந்த தமிழ் உறவுகளின் கண்களுக்கும் கருத்துக்கும் பெருவிருந்தாக அமைந்திருந்த அந்நிகழ்ச்சிகளின் தொகுப்பை வல்லமை வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்வும் பெருமிதமும் கொள்கின்றேன்.

    இனி, நிகழ்ச்சிக்களுக்குச் செல்வோமா?

    ஜூலை 4-ஆம் தேதியன்று காலை 8:30 மணிக்கு ’மறைஓதுதல்’ என்ற நிகழ்ச்சியோடு அன்றைய நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு ஆரம்பித்தது. தமிழ் மறையாம் திருக்குறளிலிருந்து சில அதிகாரங்களைக் குழந்தைகள் இசையோடு ஓதினர். அதனைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் முனைவர். தண்டபாணி அவர்கள் வரவேற்புரை நல்கினார். அடுத்து நடன நிகழ்ச்சிகள், அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பங்குபெற்ற பல்சுவை நிகழ்ச்சிகள் என விழா களைகட்டியது. சுவைஞர்கள் உற்சாக வரவேற்பளித்து பங்குபெற்ற கலைஞர்களுக்கு மகிழ்வூட்டினர்.

    Iyotheedoss-Panditherஅடுத்ததாக, இவ்வாண்டில்(2014) தன் மறைந்த நூற்றாண்டினைக் காணும் தலித் இயக்க முன்னோடியும், சமூகச் சீர்திருத்தவாதியுமான அயோத்திதாச பண்டிதரைப் பற்றிய சொற்பொழிவொன்றை வழங்கி அரங்கத்திற்கு எழுச்சியூட்டினார் தமிழகத்திலிருந்து வந்திருந்த கவிஞரும், சித்த மருத்துவருமான குட்டி ரேவதி அவர்கள்.

    தொடர்ந்து, திரைப்படத்தில் தமிழிலக்கியம் என்ற தலைப்பில் தமிழ்த் திரைப்பட வரலாற்றாளரான திரு. தியோடர் பாஸ்கரன் அவர்கள் சொற்பொழிவாற்றினார். பிறகு, பேரவை – 2014ஆம் ஆண்டுக்கான விழா மலர் வெளியிடப்பட்டது.

    பகலுணவு இடைவேளைக்குப் பிறகு மதிய நிகழ்வுகள் தொடங்கின.

    Robert_Caldwellஇவ்வாண்டைத் தன் இருநூறாவது பிறந்த ஆண்டாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும், திராவிட மொழியியலின் தந்தை என்று சிறப்பிக்கப்படும் இராபர்ட் கால்டுவெல் அவர்களைப் பற்றிய சிறப்புச் சொற்பொழிவை வழங்கினார் திரு. ஆல்பர்ட் செல்லதுரை அவர்கள்.

    அடுத்து இடம்பெற்றது மற்றொரு சிறப்புச் சொற்பொழிவு. இவ்வாண்டைத் தன் நூற்றாண்டாகக் கொண்டாடும் பண்ணாராய்ச்சி வித்தகர், ஏழிசைத் தலைமகன் குடந்தை ப. சுந்தரேசனார் பற்றிய அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தினார் ’இலக்கணக் கொண்டல்’ என்ற சிறப்புப் பெயர் பெற்ற முனைவர் இராம. இராமமூர்த்தி அவர்கள்.

    kudanthai-p-sundaresanar-300-jpg சுந்தரேசனாரின் இசைத்திறன் குறித்தும், இசை ஈடுபாடு குறித்தும் உணர்ச்சி பூர்வமாக விளக்கிய முனைவர் இராமமூர்த்தி அவர்கள், அம்மேதையைத் தான் நேரில் சந்திக்கும் பேறுபெற்றவன் என்று கூறியபோது அரங்கமே அதனைக் கரவொலி எழுப்பிப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

    பேரவை நிகழ்ச்சிகளின் அணிவகுப்பில் அடுத்ததாய் இடம்பெற்றது கவிஞர் குட்டி ரேவதி தலைமையில் நடைபெற்ற கவியரங்கம். அரங்கம் நிறைந்த சுவைஞர்கள் கூட்டம் ஒவ்வொரு கவிஞரின் கவிதையையும் கேட்டும், ஆர்ப்பரித்தும் உற்சாக வரவேற்பளித்தது இந்நிகழ்ச்சியின் வெற்றியைப் பறைசாற்றியது.

    விழாவின் முத்திரை நிகழ்ச்சிகளில் ஒன்றாகத் திகழ்ந்த ‘இலக்கிய விநாடி வினா’ அடுத்து இடம்பெற்றது. சங்க நூல்கள் அனைத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. விநாடிவினாவில் கலந்துகொண்ட இரு அணியினரும் சிறப்பாகப் பதில்சொல்லித் தம் புலமையை அழகாய் வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் 9-வயதுச் சிறுமி நிவேதிதா ராமன் குறிஞ்சிப்பாட்டிலுள்ள 99 வகையான மலர்களையும் ஒன்றுவிடாமல் கூறி அரங்கத்தினரை வியப்பில் ஆழ்த்தினார். விழாவைக் காண வந்திருந்த அனைவரும் எழுந்துநின்று விண்ணதிரக் கரவொலி எழுப்பித் தம் பாராட்டுக்களை அச்சிறுமிக்குத் தெரிவித்து மகிழ்ந்தனர்.  theeran-t

    விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை குறித்த நாட்டிய நாடகம் அடுத்து அரங்கேறி மக்களின் நாடி நரம்புகளிலெல்லாம் விடுதலை உணர்ச்சியைப் பாய்ச்சியது; அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

    திரு. ஞானமணி ராஜப்ரியர் அவர்களின் தமிழிசை நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்றாக அடுத்து இடம்பெற்றது. 85 வயதைத் தாண்டிய முதியவராய் இருந்தபோதிலும் அவர் குரல் இளமை மாறாமல் இருந்தது வியப்பினும் வியப்பே! இனிய தமிழ்ப் பாடல்கள் பல பாடி அனைவரின் செவிகளிலும் இன்பத் தேனைப் பாய்ச்சினார் அவர்.

    தமிழர்களின் வளர்ச்சிக்கு அடிப்படை உணர்வா? அறிவா? என்ற தலைப்பில் சூடான விவாதங்கள் அடங்கிய ’கருத்துக்களம்’ எனும் நிகழ்வு அடுத்து நடைபெற்றது. அனல் பறக்கும் அக்கருத்துப் போரை நெறிப்படுத்தி நடத்தினார் மருத்துவர் திரு. எழிலன் நாகநாதன் அவர்கள்.

    பின்பு, சுற்றுப்புறச்சூழல் ஆர்வலரும், வங்கி அதிகாரியுமான திரு. ம. பா. நிர்மல் அவர்கள், குப்பைகள் இல்லாத சுகாதாரமான சுற்றுப்புறத்தை உருவாக்குவதன் அவசியத்தை விளக்கும் வகையில் ‘தமிழரின் எதிர்காலம்’ எனும் பொருளில் உரை நிகழ்த்தினார்.

    அதனைத் தொடர்ந்து திரைப்பட நடிகர், அரசியல்வாதி, தொழிலதிபர் என்ற பன்முகங்கள் கொண்ட வெற்றியாளரான நடிகர் நெப்போலியன் தன் திரை வாழ்க்கைப் பயணத்தையும், அனுபவங்களையும் சுவைபடப் பகிர்ந்துகொண்டார்.

    ஜூலை 4-ஆம் தேதி இரவின் இறுதி நிகழ்ச்சிகளான இரு நிகழ்ச்சிகள் மிகுந்த பாராட்டிற்குரியவைகளாக அமைந்திருந்தன. அவற்றில் முதலாவதாக அமைந்தது தெருக்கூத்து. இயல், இசை, நாடகம் என்று போற்றப்படும் முத்தமிழில் காலத்தால் மூத்தது கூத்துக்கலை. தெருக்களையே ஆடுகளமாக – அரங்கமாகக் கொண்டு நிகழ்த்தப்படும் கூத்து தெருக்கூத்து என்ற பெயரினைப் பெற்றது. பிற்கால மேடை நாடகங்களுக்கெல்லாம் தாயாக – அடிப்படையாகத் திகழ்ந்தது தெருக்கூத்தே என்பது நாடகவியலார் கருத்து.

    அவ்வகையில், ’சிலம்பின் கதை’ என்ற பொருளில் பேரவை மேடையில் நடைபெற்ற தெருக்கூத்து, பண்டைய தமிழனின் பாரம்பரியக் கலையை மீட்டெடுக்கும் ஒரு சீரிய முயற்சியாக அமைந்தது; ரசிகர்கள் அனைவரின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது. பல்வேறு வேலைச் சுமைகளுக்கு நடுவிலும் தளராது, மிகக் கடினமாக உழைத்து இந்தத் தெருக்கூத்தை மேடையேற்றிய மினசோட்டா தமிழ்ச்சங்கக் குழுவினரை எவ்வளவு போற்றினாலும் தகும்!

    அடுத்து அன்றைய இரவின் இறுதி நிகழ்ச்சியாக அமைந்தது, தோல்பாவைக் கூத்து என்னும் மற்றொரு கூத்து. 500 வருடப் பாரம்பரியம் கொண்ட இத்தோல்பாவைக்கூத்து இன்று பெரிய திரை, சின்னத்திரை போன்றவற்றின் ஆதிக்கத்தால் அழியும் தறுவாயில் இருந்துவருகிறது. இதனை அழியாமல் காக்கவேண்டும் என்ற உறுதியோடு உழைப்போர் வரிசையில் முதலிடம் பெறும் அம்மாப்பேட்டை திரு. கணேசன், திரு. மு. ஹரிகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தோல்பாவைக்கூத்து என்ற இந்தத் தொல்கலையை அரங்கேற்றி அழகுபார்த்தனர்; சுவைஞர்களும் உற்சாக வெள்ளம் கரைபுரண்டோட அதனைக் கண்டு களித்தனர்.

    IMG_0304முக்கியமான நிகழ்ச்சிகள் பலவும் அனைவரும் காணும் வகையில் பொதுமேடையில் நடைபெற்ற அதே வேளையில், வேறு சில சுவையான நிகழ்ச்சிகள் பிற சிறிய அரங்கங்களிலும் நடத்தப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று ஜூலை 4ஆம் தேதி காலை 9 மணி தொடங்கி மதியம் 12 மணிவரை நடைபெற்ற அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ போட்டிகள். இதில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், தமிழிசை எனப் பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன. குழந்தைகளும் ஆர்வத்தோடு பங்கேற்றுப் பரிசுகளை வென்று குவித்தனர்.

    ஜூலை 5ஆம் தேதியும் காலை 8:30 மணியிலிருந்தே பேரவை நிகழ்ச்சிகள் தொடங்கி அன்று முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றன. அவற்றின் விவரம் அடுத்த பகுதியில்…

    (தொடரும்)

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில் ? –14

    –சு.கோதண்டராமன்.

    என்னதான் இருக்கிறது வேதத்தில் – 13

    என்னதான் இருக்கிறது வேதத்தில் – 15

    வேத ரிஷிகளின் கவிதைச் சிறப்பு 

     

    அரவிந்த கோஷ் சொல்வதாகப் பாரதி கூறுகிறார், “வலியவனாகிச் சுடர் வீசிக் கொண்டு நிற்கும் இந்த அக்னி தேவனைப் பற்றிய மந்திரங்களிலே கவிதை மிகவும் செழிப்புற்றிருக்கின்றது. ஸூக்ஷ்மப் பொருள் ஆழ்ந்து நிற்கிறது. தெய்வ வெறி தெளிந்து நிலவுகிறது. பாட்டுக்கொள்ளுகிற அக்கினி தேவனுடைய தழலும், அவன் உறுமுதலும் ஒளியும் பாடுகிற ரிஷிகளின் அறிவிலே தாவி விட்டன போலும்.”

    vedas_puranas

    வேத ரிஷிகள் உலக வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவையும் ரசித்து ரசித்து அனுபவித்தவர்கள். பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும், கேட்கும் ஒவ்வொரு ஒலியிலும் அவர்களுக்கு இன்பம் பொங்கி வருவது தெரிகிறது. சாதாரணமாக நாம் பார்ப்பது போல அல்லாமல், அவர்கள் ஒரு குழந்தையின் நிலையில் இருந்து பார்க்கிறார்கள். எதையும் வியப்புடன் நோக்கும் குழந்தைப் பண்பை இழக்காமல் அவர்கள் தம்மைச் சுற்றியுள்ள பொருள்களை உற்றுநோக்கினர்.

    தம் மனதில் எழுந்த எண்ணங்களை வெளிப்படுத்தும்பொழுது, அவர்கள் குழந்தையாக இல்லாமல் கற்பனை வளம் மிக்க, தேர்ந்த புலவனின் திறமையைக் காட்டுகிறார்கள். குழந்தைத் தனத்தையும் புலமையையும் இணைத்து, எதையும் மறைபொருளாகவே தெரிவிக்கும் வேத மொழிநடைச் சிறப்பை வாசகர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ரிக் வேதத்தில் அக்னி பற்றிப் பல இடங்களில் காணப்படும் புகழ் மொழிகளில் சில இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.

    எரிபொருள் இருக்குமிடத்தில் அடுத்த அடுத்த இடங்களுக்கு அக்னி பரவிக்கொண்டே இருப்பதையும் எளிதில் நகர்ந்து, நெடுந்தூரம் செல்வதையும் “அவர் சுகமான ரதம் கொண்டவர்” (சுக தம ரத:)  என வர்ணிக்கின்றனர்.

    மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் நாம் விளக்கேற்றுகிறோம். இருள் நீங்குகிறது. இது நமக்குச் சர்வ சாதாரணமான விஷயம். ஆனால் ரிஷி இதைக் கவித்துவக் கண்ணால் பார்க்கிறார். “வலிமையான குதிரைகளுடன் உன் ஒளி வலையை வீசிக் கொண்டு இருளாகிய கரு நிறப் போர்வையைக் கிழித்துக் கொண்டு நீ முன்னேறுகிறாய். அந்த இருளை, மறையும் சூரியனின் கிரணங்கள் நீரில் ஆழ்த்துகின்றன” என்கிறார்.[1]

    அக்னிக்கென்று நாம் ஹோம குண்டம், அடுப்பு போன்ற இருப்பிடங்கள் அமைத்துக் கொடுக்கிறோம். நாம் அமைக்காத இடங்களில் தீ பரவ நாம் விடுவதில்லை அல்லவா? இதனால் “தன் இருப்பிடத்திலேயே வளர்பவர் ” (ஸ்வே தமே வர்தமான: ) என்ற அடைமொழியால் அழைக்கின்றனர்.

    காற்று வெப்பம் மிகுந்த இடம் நோக்கி வீசும். நீர் பள்ளத்தை நோக்கிப் பாயும். அது போல, அக்னி நகர்வதற்குக் குறிப்பிட்ட திசை உண்டா? இல்லை அல்லவா? இதை, “அவரது முகம் எல்லா திசைகளிலும் பார்க்கிறது, அவர் நான்கு கண் உடையவர்” (விச்வதோமுக:, சதுரக்ஷ: ) என்கிறார் ரிஷி.

    தீ எரியும் அழகைக் கவி ரசிக்கிறார். ஜ்வாலைகள் நாக்குகளைப் போல் உள்ளன. அதனால் அக்னி ஸப்த ஜிஹ்வா – ஏழு நாக்குகள் உள்ளவர் – என்று கூறப்படுகிறார். அவை அவருடைய கேசம் போல் உள்ளன. அதனால் அக்னி ஒளியுள்ள கேசம் உடையவர் (சோசிஷ்கேச) என்று கூறப்படுகிறார். பார்ப்பதற்கு அழகானவர் (தர்சத) என்றும் புகழப்படுகிறார். நெய்யினால் அக்னி வளர்வதை நெய்யினால் மகிழ்பவர் என்று குறிப்பிடுகிறார். அவர் நெய் முதுகு உடையவர் (க்ருதப்ருஷ்ட) என்றும் சொல்லப்படுகிறார்.

    “அக்னி பிறக்கும் போது வெள்ளையாகவும் வலுத்த பின்னர் சிவப்பாகவும் ஆகிறார்” (ச்வேதம் ஜஞானம், அருஷம் மஹித்வா) என்றும் “சிவப்புக் குதிரை கொண்டவர்” (ரோஹிதாச்வ) என்றும் ரசித்துப் போற்றுகிறார் ரிஷி.

    அக்னி உள்ள இடத்தில் புகை இருக்கும். எனவே அவர் புகைக் கொடியார் (தூமகேது) எனப்படுகிறார். தீக்குச்சியை உராய்வதால் உண்டாகும் அக்னி குச்சியையே அழித்து விடுகிறது. ரிஷி பேசுகிறார், “விண்ணே, மண்ணே, இந்த அதிசயமான இயற்கை நியதியைக் கேளுங்கள், பிறந்ததும் பெற்றோரை விழுங்குகிறான் இந்த சிசு.”[2]

    அக்னியை பகலில் ஹோமம், சமையல் முதலானவற்றிற்காகவும் இரவில் வெளிச்சம் தருவதற்காகவும் மூட்டும் நிகழ்ச்சியைக் கவித்துவத்துடன் ரிஷி வர்ணிக்கிறார்,

    “இந்த அக்னிக் குழந்தைக்கு இரவு என்னும் பெண்ணும் பகல் என்னும் பெண்ணும் மாறி மாறிப் பாலூட்டினர்.”[3]

    பகல் இரவு இரண்டும் அவருக்குத் தாய்கள் போல இருப்பதால் அவர் இரு தாய்களின் மகன் என்று கூறப்படுகிறார்.

    மூட்டப்பட்டவுடன் தீயைக் காற்று அணைக்காமல் விரல்களால் மூடிக் காப்பாற்றும் நிகழ்ச்சியை முனிவர் வர்ணிக்கும் முறை அழகானது. “மணமாகாத பத்து சகோதரிகள் சேர்ந்து புதிதாகப் பிறந்த அந்தக் குழந்தையைப் பற்றுகிறார்கள்.” என்கின்றனர்.[4]

    அதே நிகழ்ச்சிக்கு இதோ இன்னொரு உவமை. வனத்தில் உள்ள இரு திருடர்கள் பல கயிறுகளால் வழிப்போக்கனைக் கட்டி நகர விடாமல் செய்வது போல இரு கைகளும் பத்து விரல்களால் தீயை அணையாமல் காக்கின்றன. [5]

    குறிப்புகள்:
    1    4.13.4.
    2    10.79.4.
    3    1,96.5.
    4    3,29.13.
    5    10.4.6.

    படம் உதவிக்கு நன்றி: http://www.hinduismnet.com/hinduism-vedas.htm

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 19

    கே.ரவி

    என்னிடம் மிகுந்த பாசத்தோடு பழகியவர், அன்பே வடிவான கவியரசி செளந்தரா கைலாசம் அம்மையார். பத்து ஆண்டுகளுக்கு முன், ‘மின்னற் சுவை‘ என்ற என் நூலுக்கு நான் அவர்களுடைய அணிந்துரை வேண்டுமென்று கேட்ட போது கண்நோயால் பாதிக்கப்பட்டுப் படிக்க முடியாத நிலையில் தாம் இருந்த போதும், மறுக்காமல், தருகிறேன் என்று சொல்லிக் கவிமாமணி, புதுவயல் செல்லப்பன் அவர்களைக் கொண்டு முழு நூலையும் படிக்கச் சொல்லிக் கேட்டு, மிக நல்ல அணிந்துரை வழங்கினார். அவருடைய அன்பை நான் மறக்க முடியுமா?

    அவர் ஒரு சிறந்த கவிஞர். கவிதையின்மேல் அளவு கடந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தெய்வ பக்தியும், தேச பக்தியுமே தம் இரு கண்களாகக் கொண்டிருந்தார். இந்திய சுதந்திரப் பொன்விழாவை ஒட்டி வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பில் ஒரு கவியரங்கம் ஏற்பாடு செய்த போது அவரை அழைக்க நான் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது, என்னைத் தம் இல்லத்தின் பூஜை அறைக்குள் அழைத்துச் சென்று அங்கே வைக்கப் பட்டிருந்த ஒரு கலசத்தைக் காட்டினார். அதில் வெறும் மண் இருந்தது. “தம்பி, இது வெறும் மண் இல்லீங்க. நான் இந்த பாரத நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அங்கிருந்து ஒரு பிடி மண் எடுத்து வந்து இந்தக் கலசத்தில் போட்டு வைப்பேன். இது எப்பொழுதும் பூஜை அறையில்தான் இருக்கும். இதை நான் பாரத மாதாவாகவே ஆவாகனம் செய்து பூஜை செய்து வருகிறேன்” என்று அவர் சொன்னதும் நான் நெகிழ்ந்து போனேன். அவர் எப்போதும் சிரித்த முகமாகவே காணப்பட்டதற்கு, அவருடைய அசைக்க முடியாத தெய்வ பக்தியே காரணம். அவரே கவிதையிலேயே இதைச் சொல்கிறார்:

    சுடும்போதும் சிரிப்பேன் துன்பம் சுட்டபின் தென்றல் வந்து

    தொடும்போதும் சிரிப்பேன் தீய சொல்லினால் நெஞ்சில் காயப்

    படும்போதும் சிரிப்பேன் இந்தப் பாரெலாம் போற்றி மாலை

    இடும்போதும் சிரிப்பேன் என்றன் இதயமே இறைவன் சோலை

    கொதிக்கும் சுண்ணாம்புக் காளவாயில் நின்று கொண்டு, சிவபெருமான் திருவடியை எண்ணித் தம் ஐம்புலன்களுக்கும் அது குளிர்ச்சி தந்த பரவசத்தை ஒரு பெருங்கிழவர் பாடினாரே, அந்தப் பாட்டு இதில் எதிரொலிக்கிறதே!

    மாசில் வீணையும் மாலை மதியமும்

    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

    ஈசன் எந்தை இணையடி நீழலே

    1999, கார்கில் போர் நடந்த போது, நம் வீரர்களுக்கு உற்சாகமும், உத்வேகமும் தர வானவில் பண்பாட்டு மையம் ஒரு முழுநாள் கவியரங்கம் நடத்தியது. அந்தக் கவியரங்கத்தில், சென்னையில் இருந்த முன்னணிக் கவிஞர்கள் அத்தனைப் பேரும் கலந்து கொண்டு கவிதை படித்தார்கள். அந்தக் கவியரங்கம் முழுதும் ஒலிப்பேழையாகப் பதிவு செய்யப்பட்டது. அதன் நூறு பிரதிகளை எடுத்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்று தீவுத் திடலுக்குப் பின்புறம், ஜிம்கானா கிளப்புக்கு எதிரில் உள்ள போர்ப்படைத் தளபதி அலுவலகத்தில் தலைமைத் தளபதியைச் சந்தித்து அவரிடம் நேரில் வழங்கத் திட்டமிட்டோம். அந்த ஒலிப்பேழைகளைப் போர்முனையில் இருந்த தமிழ் தெரிந்த வீரர்களுக்கு கொண்டு சேர்க்குமாறு அவரிடம் கேட்டுக் கொள்ளவும் தீர்மானித்தோம். நடக்க முடியாமல் கால் எலும்புகள் பாதிக்கப்பட்டிருந்த போதும் கவியரசி அம்மையார் தாமே முன் வந்து, அந்த ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கிப் படைத்தளபதியிடம் அந்தப் பேழைகளைத் தந்த நிகழ்ச்சியை மறக்கவே முடியாது.

    1

    நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதை முழக்கங்களைக் கொண்ட இசைப்பேழைகளைப் போர்முனைக்குக் கட்டாயம் அனுப்பி வைப்பதாக அன்றைய படைத்தளபதி உறுதியளித்தார்.

    2

    ‘கவிதைகளைப் போர்முனைக்கு அனுப்பிய முதல் ஆள் நீதானப்பா’ என்று புத்தி சிகாமணி முணுமுணுக்கிறான்.

    ‘அப்பா சிகாமணி, முன்காலத்தில் போர்க்களத்திலேயே நின்று புலவர்கள் போர்ப்பரணி பாடியிருக்கிறார்கள். ஜயங்கொண்டான் என்ற புலவர் அப்படிப் பாடிய காவியம்தான் ‘கலிங்கத்துப் பரணி’. சாதாரண வார்த்தைகளை விடக் கவிஞர்களின் கவிச்சொற்களுக்கு வலிமை அதிகம் என்பதுதான் என் கட்சி. ‘வல்லமை’ மின்னிதழில் நம் இலக்கியப் பேழைக்கு என்ன பெயர் கொடுத்திருக்கிறார்கள் பார்த்தாயா? சொற்சதங்கை! மற்றவர் நாவில் நடக்கும் சொற்கள், கவிஞர் நாவில் மட்டுமே நடனமாடும். அந்தத் தாண்டவத்தை, அதுவும் ருத்ர தாண்டவத்தை நம் போர் வீரர்கள் கண்டால், போர்முனையில் அவர்களுக்கு மேலும் வீர உணர்ச்சி உண்டாகும். நீ ஏட்டுச் சுரைக்காய், இதெல்லாம் உனக்கு விளங்காது, விடு’ என்கிறேன்.

    3

    இந்த விவாதத்தை ஒதுங்கி நின்று கேட்டுக் கொண்டிருந்த மனோன்மணி திடீரென்று குரல் எடுத்துக் கலிங்கத்துப் பரணியிலிருந்து ஒரு பாடலைத் தன் கணீரென்ற குரலெடுத்துப் பாடுகிறாள்.

    பொருதடக்கை வாளெங்கே மணிமார்(பு) எங்கே

    போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத

    பருவயிரத் தோளெங்கே எங்கே என்று

    பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்

    மனோன்மணியின் குரல் அதிர்வுகளுக்கு ஏற்றவாறு பைரவியின் நடன அசைவுகள் நிழற்படங்களாக, என் நினைவுத் திரையில் மெல்ல . . மெல்ல. .! மெய்சிலிர்க்கிறது! அட, ஒரு நோக்கில் மனோன்மணிதான் பைரவியோ!

    சிகாமணி சொல்கிறான்: ‘நீர் சொன்னதெல்லாம் எனக்கு வெளங்கலே. ஆனா அவ பாடினதும் புரிஞ்சுடுத்து ஓய், பாட்டு எப்படி வீர உணர்ச்சியத் தூண்டும்னு. மயிர்க்கூச்செறியுது!!’

    எனக்குள் இருந்து பாரதியின் குரல் ஒலிக்கிறது:

    பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா

    . . . . . . .

    பூதங்கள் ஒத்துப் புதுமைதரல் விந்தையெனில்

    நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ!

    நான் கவிதை எழுதத் தொடங்கிப் பல நாட்கள், இல்லை, பல ஆண்டுகள் கழித்தே பாரதிக்கு நான் முழுமையாக ஆட்பட்டேன். நான் விரும்பிய கவிஞர்களில் ஒருவனாக மட்டுமே இருந்த அவன் என் நெஞ்சின் நாயகனாக விஸ்வரூபம் எடுத்தது ஒரே கணத்தில். அந்த தரிசனத்தை எனக்கு முதலில் சூசகமாகக் காட்டியவர் கவிமாமணி தேவநாராயணன். அது நடந்தது சென்னை ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில், 1971-ஆம் ஆண்டு. பிறகு அந்த தரிசனத்தில் என்னை முழுமையாக மூழ்கச் செய்தவர் அருமைக் கவிஞர் கண்ணதாசன்; அது நடந்தது 1975-ல் என்று நினைக்கிறேன். இந்த இரண்டு தரிசனங்களையும் பற்றி விரிவாகச் சொல்ல வேண்டும்.

    (தொடரும்)

    Share
  • சான் ஃபிரான்சிஸ்கோ பயணக்கட்டுரை – பாகம் 1

    —செம்பூர் நீலு

    நாப்பா வாலி

    அமெரிக்க சுதந்திர தின விடுமுறை – ஜூலை 4ம் நாள். மனைவி, மகன் மருமகளுடன் சான் ஃபிரான்சிஸ்கோவின் 80 மைல் தொலைவிலூள்ள “நாப்பா வாலி” என்று அழைக்கப்படும் சுற்றுலா மையத்திற்கு சென்றோம். இந்த “நாப்பா வாலி” தரமானதும் விலை உயர்ந்த “வைன்” தயாரிப்புக்கு உலக அளவில் பேர் பெற்றது.

    Picture 1

    1858ம் வருடம் “ஜான் பச்செட்” என்பவர் ஒரு சிறிய வைன் தயாரிப்பை தொடங்கி ஒரு காலன் வைன் 2 டாலருக்கு விற்பனை செய்யத்துவங்கினார். பின்னர் 1861ம் ஆண்டு முதல் வைன் தயாரிப்பு தொழிலகம் (வைனெரி) “சார்ல்ஸ் கர்க்” என்பவரால் செயின்ட் ஹெலீனாவில் துவங்கப்பட்டது.

    Picture 2

    18ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் திராட்சை பயிரும் வைன் தயாரிப்பும் ஒரு வீழ்ச்சியை அடைந்தது. மேலும் 1920ம் ஆண்டு அமெரிக்க அரசின் மது ஒழிப்பு சட்டத்தினால் வைன் தொழிலகங்கள் மூடப்பட்டது. 1939ம் ஆண்டு வைனை முக்கிய கருத்தாகக் கொண்டு நாபா வாலி ஒரு சுற்றுலா நகரமாக புகழ் பெறத்தொடங்கியது. 1976ம் ஆண்டு உலகத்தில் தரம் வாய்ந்ததும் விலை உயர்ந்த வைன் தயாரிக்கும் இடமாகப் பெயர் பெற்றது. தற்சமயம் 450க்கும் மேற்பட்ட வைனரிகள் திராட்சை பயிர் / மற்றும் வித விதமான வைன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. வார இறுதி நாட்களிலும், மற்ற விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

    மற்ற ஒரு சிறப்பு அம்சமாக விளங்குவது “வைன் ட்ரெயின்”
    Picture 3

    10 பெட்டிகள் கொண்ட இந்த ஸ்பெஷல் ட்ரைன் 1915-17 ம் வருடம் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகளை கொண்டது. இதில் டைனிங் கார், பவர் கார், பாண்ட்ரி கார், ஸ்பெஷல் கார் போன்றவை அடங்கும். 36 மைல் பிரயாணம், 3 மணி நேரம் பயணம்.  “மெக்ஸின்டரி தெரு” ஸ்டேஷனில் புறப்பட்டு வடக்கு திசையாக செயின்ட் ஹெலீனா வரை சென்று திரும்பும் இந்த ட்ரைன் வழியில் சில குறிப்பிட்ட வைனரிகள் இருக்கும் இடத்தில் நிற்கும். பயணிகள் இறங்கி வைனரியை சுற்றிபார்க்க அனுமதிக்கப் படுகிறார்கள். பின்னர் அங்கு தயாரிக்கும் வைன் வகைகளை ருசி பார்த்துவிட்டு திரும்பவும் ட்ரைனில் பயணம் செய்து புறப்பட்ட இடத்திற்கு வந்து சேருகிறார்கள். ட்ரைனிலேயெ ஸ்பெஷல் கோர்மே உணவும் வழஙகப்படுகிறது. இந்த பயணதிற்குக் கட்டணம் ஒருவருக்கு 200 டாலர் முதல் 350 டாலர் தான். தலை சுற்றுகிறது அல்லவா. ட்ரையினை வெளியிலிருந்து பார்த்துவிட்டு  நாபா வாலி டவுனான “காலிச்டோக” என்ற இடத்திற்குச் சென்றோம். 170 எக்கர் பரப்பளவில் “காஸில் டி அமொரோஸா” என்ற வைனரி இங்கு தான் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    காஸில் டி அமொரோஸா
    Picture 4

    இந்த வைனரி ஒரு புகழ் பெற்ற இத்தாலியை சேர்ந்த “டாரில் சட்டூயி” என்ற வைன் தொழிலதிபரால் உருவாக்கப்பட்டது. உலகத்தின் பல புகழ் பெற்ற புராதன கோட்டைகளை சுற்றிப் பார்த்து கடைசியில் இத்தாலியிலுள்ள 12ம் நூற்றாண்டு டஸ்கன் கோட்டையின் மாடலாக இந்த வைனரியை நிறமாணிக்க 1994ம் ஆண்டு அடிக்கல் நாட்டி துவங்கப்பட்டது.  மாரத்தான் மாதிரி கோட்டையை கட்டிமுடிக்க 13 ஆண்டுகள் ஆயிற்று. 2010ம் ஆண்டு பொது மக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்

    Picture 5

    121,000 சதுர அடி பரப்புள்ள இந்த கோட்டையில் 107 அறைகள் (90 அறைகள் வைன் தயாரிப்பிற்கும் அதை மர பாரெல்களில் அடைத்துவைத்து பராமரிப்பதற்கும் உபயோகபடுத்தப்படுகிறது) ஒரு பெரிய வரவேற்பறை அதன் சுவர்களில் புராதன இத்தாலியன் பெயிண்டிங்குகள், ரோமானிய பாணியில் அமைக்கப்பட்ட தளங்கள், கோட்டையின் மதில் சுவர்களுக்காக 8,000 டன் எடை கையுளியால் செதுக்கப்பட்டு உருவாக்கிய கருங்கற்கள், செங்கல்கள், கூரை ஓடுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. புராதன கால படிகட்டுக்கள், புராதன மாதாகோவில், பாதாள சிறைச்சாலை, பார், சித்திரவதை அறை. நிலத்திற்கு கீழெ 4 லெவெல் அறைகள்,

    50 பேர் அமரும் டைனிங் டேபிள்

    Picture 6

    நிலத்திற்கு மேல் 4 லெவெல் மாடி அறைகள், மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்கு ஏற்றால் போல் ஒளியளிக்கும் மின்சார விளக்குகள். கோட்டை அறைகளில் நுழையும் போதே எதோ புராதன கால அறைக்குள் செல்லுகிறோமோ என்ற ஒரு பயம் கலந்த உணர்வு. 50 பேர் வரிசையாக இரண்டு புறமும் அமரக்கூடிய மர டைனிங் டேபிள்
    750 காலென் வைன் வைப்பதற்கான மர பாரல்கள் இன்னும் எத்தனை எத்தனையோ.

    750 காலன் மர பாரல்
    Picture 7
    வைன் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை ஒரு ஆடியொ விஷுவல் திரைப்படம் மூலம் பெரிய ஃப்ளாட் டி.வி. ஸ்க்ரீனில் விளக்குகிறார்கள். என்னதான் வைன் எவெர்சில்வெர் பாத்திரஙளில் தையார் செய்தாலும் அதை மர பாரல்களில் தான் சேமித்து வைக்கிறார்கள். அதில் தான் அதன் சுவை மாறாமல் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெடாமலிருக்கும்

    வைன் பாட்டில்கள்
    Picture 8   

    Picture 9
    புராதன கை வண்டி
    Picture 10
    வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பார்த்து அனுபவிக்கவேண்டும். 35 டாலர் கட்டணம் ஒருவருக்கு – கோட்டையை சுற்றிப் பார்ப்பதற்கும் 4 விதமான வைன்களை ருசிப்பதற்கும். அதற்கும் மேல் அவரவர்களுடைய சக்திக்கும் பர்சின் கனத்திற்கும் ஏற்றால் போல் பரிசுப் பொருட்களையும் வைன் பாட்டில்களையும் வாங்கலாம். நான் ஒரு பாட்டில் “வைன் ஸீட் ஆயில்” வாங்கினேன். இதை கலந்தால் பச்சை காய்கறிகள் ஸாலடின் ருசி இன்னும் அதிகரிக்கும்.

    Picture 11

    4 விதமான வைனை ருசித்து ரசித்து ஸிப் செய்துவிட்டு கோட்டையின் வெளியில் இருக்கும் புல் வெளியில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு. பின்னர் 50 மைல் தொலைவில் இருக்கும் “உக்காய்” நகருக்கு பயணமானோம். புகழ் பெற்ற 1000 உருவச்சிலைகள் கொண்ட புத்தர் கோவில் இருக்கும் இடம். அதைப் பற்றி பாகம் 2ல் புகைப்படஙளுடன் விவரிக்கிறேன்.

     

     

    நீலகண்டன் (செம்புர் நீலு)
    ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
    09-07-2014

    Share
  • உள்ளமெல்லாம் தள்ளாடுதே…..

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    Capture

    அன்புமொழிபேசி என் ஆசைவலைவீசி
    கன்னிமீனை அள்ளிக்கொள்ள கை தாவுதே!

    அழகியல் என்பது அகம் சார்ந்தது.  எனவேதான் காதல் மனதிற்குள் பூக்கிறது!  அந்த ஒற்றை வார்த்தைக்கான அர்த்தம் மட்டும் இந்த உலகமெங்கும் வியாபித்து நிற்கிறது!

    எத்தனை முறை இரவுகள் வந்தாலும் அந்த இரவில் ‘நிலா’ அழகுதானே!  புத்தம் புதியதாய் காட்சி தருவது ஒன்றும் புதிதில்லையே.. கற்பனைகள் கட்டவிழ்ந்துவிடும்போது உள்ளமெல்லாம் தள்ளாடுவது நியாயமாகிவிடுகிறது!

    இன்பம்பொங்கும் வெண்ணிலாவை அன்று எழுதித் தந்தவர் இயற்றியிருக்கும் இன்னொரு பாடலிது!  கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியன் இயற்றி இந்தி இசையமைப்பாளர் சலீல் செளத்ரி அவர்கள் அமைத்த இசையில் கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி இணைந்து பாடிய பாடல்!

    வற்றாத கடலோரம் காதல் வலைக்குள் அகப்பட்ட காதலர்களின் உற்சாக ராகமிதோ..

    உள்ளமெல்லாம் தள்ளாடுதே..
    உள்ளுக்குள்ளே ஏதோ எண்ணங்கள் போராடுதே..
    துள்ளுமலை தொட்டு என் காலை முத்தமிட்டு
    வெள்ளிநிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே!!

    உள்ளமெல்லாம் தள்ளாடுதே..
    உள்ளுக்குள்ளே ஏதோ எண்ணங்கள் போராடுதே..
    அன்புமொழிபேசி என் ஆசைவலைவீசி
    கன்னிமீனை அள்ளிக்கொள்ள கை தாவுதே!

    SalilChowdhury1002k.vijayan
    விஜய்காந்த் பூர்ணிமா ஜோடியில் ‘தூரத்து இடி முழக்கம்’ திரைப்படத்திற்காக.. கே.விஜயன் இயக்கத்தில் வார்க்கப்பட்ட இப்பாடல் வரிகளாலும் இசையாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது!

    http://youtu.be/GzIrzj1X82w
    காணொளி: http://youtu.be/GzIrzj1X82w

    திரைப்படம்: தூரத்து இடி முழக்கம்
    இயக்கம்: கே.விஜயன்
    பாடல்: கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியன்
    இசை: சலீல் சௌத்திரி
    பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி

    உள்ளமெல்லாம் தள்ளாடுதே..
    உள்ளுக்குள்ளே ஏதோ எண்ணங்கள் போராடுதே..
    துள்ளுமலை தொட்டு என் காலை முத்தமிட்டு
    வெள்ளிநிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே!!

    உள்ளமெல்லாம் தள்ளாடுதே..
    உள்ளுக்குள்ளே ஏதோ எண்ணங்கள் போராடுதே..
    அன்புமொழிபேசி என் ஆசைவலைவீசி
    கன்னிமீனை அள்ளிக்கொள்ள கை தாவுதே!

    வாய்மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா
    வண்டுவந்து தீண்டாமல் பூவாகுமா
    கொண்ட ஆசைகள் கை கூடுமா?..
    எல்லையில்லா இன்பங்கள் கொண்டாட்டமா
    எண்ணும் யோகங்கள் உண்டாகுமா?

    ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா
    நம்பியுள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா
    எந்தன் சொந்தங்கள் வீணாகுமா?
    தாலிகட்டி வேலிகட்டி காப்பாற்றுவேன்
    தங்கம் போல் உன்னைப் பாராட்டுவேன்!

     

     

     

     

    Share
  • முக்கோணக் கிளிகள் படக்கதை – 12

    –சி. ஜெயபாரதன்.

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 12

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​______________

    Mukkonakkilikal - 45

    Mukkonakkilikal - 46

    Mukkonakkilikal - 47

    Mukkonakkilikal - 48

    தொடரும்…

    ***********************************************************************************************************************

    பின் சேர்க்கை :

    வசன கர்த்தா திரு. வையவன்:

    mukonakkiligal 1வையவன் என்ற பெயரில் அறியப்படும் எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில்  வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு  அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். 33 ஆண்டுகள் ஆசிரியப்பணி புரிந்து, ஓய்வு பெற்று சென்னையில் புகழ்பெற்ற யுராலாஜி  மருத்துவரான டாக்டர் எம்.ஜீவகன் என்ற தம் மகனுடன் அடையாரில் வசித்து வருகிறார். 58 ஆண்டுகளாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வரும் இவர் இணையவெளி என்ற வலையிதழை நான்கு ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார்.அது அச்சுப் பதிப்பாகவும் வருகிறது. தவிர சொந்தமாக பதிப்பகத் தொழில் புரியும் வையவன் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல் வெளியீடு விற்பனை செய்கிறார். ஒரு மகன், ஒரு மகள். 1000 சிறுகதைகள், 10 குறுநாவல்கள், 10 நாவல்கள் மற்றும் எண்ணற்ற கவிதைகள் எழுதி வெளியிட்டவர்.
    http://innaiyaveli.blogspot.in/2014/06/blog-post_3024.html ,  http://innaiyaveli.blogspot.in/

    ஓவியக் கலைஞர் தமிழ்:

    tamizhselvanஓவியர் தமிழ் என்று அழைக்கப்படும் திரு. செந்தமிழ்ச் செல்வன் தமிழ் இதழ்களில் [மங்களம் வார வெளியீடு, சந்தா மாமா குழுவைச் சேர்ந்த பொம்மை, கேளிக்கைப் புத்தகப் [காமிக்ஸ்] படங்கள் பிறமொழி நூல் வெளியீடுகள்] 1990 ஆண்டு முதல் படங்கள் வரைந்து வருகிறார். கணபதி போன்ற தெய்வப் படங்கள், மகாத்மா காந்தி போன்ற உலக மேதைகளின் படங்களையும் வரைந்துள்ளார். அவரைத் தமிழ் இதழ்களிலும், நூல்களிலும் ஓவியங்கள் வரைய ஆதிமுதல் ஊக்குவித்தவர் திரு. வையவன். ஓவியக் கலைஞர் தமிழ்த் திரைப் படங்களுக்கும், தொலைக் காட்சித் தொடர்களுக்கும் வசனம் எழுதி வருகிறார்.

    ***********************************************************************************************************************

    Share
  • காதல் நாற்பது – 12: காதலை அழைத்தது காதல் !

    –சி. ஜெயபாரதன்.

     

    Elizabeth Browing

    காதல் நாற்பது (12)
    காதலை அழைத்தது காதல் !
    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    இதயத்தி லிருந்து பொங்கிப்
    புருவம் வரை எழும்பும்
    இம்மெய்க் காதல்
    பெருமை ஊட்டும் எனக்கு !
    மகுடம் சூட்டும்
    மாபெரும்
    மாணிக்கக் கற்களால் !
    ஆடவர் கண்களை ஈர்க்கும் !

    எனது தகுதி யாவும்
    உள்ளத்தின் உள்ளிருக்கும்
    ஆத்ம மதிப்பீடை நிரூபிக்கும்,
    புற உலகுக்கு !
    உன் கண்ணும் என் கண்ணும்
    ஒன்றை ஒன்று
    எதிர் நோக்கும் வேளையில்
    நேசிப்பது எப்படி யென
    நீ உதாரணம் காட்டாமல் நான்
    நேசிக்கக் கூடாது
    நின்னை மனப் பூர்வமாய் !

    காதலை அழைத்தது காதல் !
    பதிலின்றி இனிதெனக்
    காதலை
    வெளிப் படுத்தக் கூடாது
    எனக்குரிய தென்று !
    உன் ஆத்மா வானது
    வலுவின்றி மயங்கி விட்ட
    என் ஆத்மாவை
    இழுத்துக் கொண்டு போய்
    பொன்னா சனத்தில் அமர வைக்கும்
    உன்னருகே !

    அந்தோ ஆத்மாவே !
    அவசியம்
    பணிவு வேண்டும்
    நமக்கு !
    உன்னைத் தனியே நேசிக்கும்
    எனக்கு
    உன்னருகில் மட்டுமே இருக்க
    விருப்பு !

    ********************

    Poem -12
    Sonnets from the Potuguese
    By: Elizabeth Browing

    Indeed this very love which is my boast,
    And which, when rising up from breast to brow,
    Doth crown me with a ruby large enow
    To draw men’s eyes and prove the inner cost,–
    This love even, all my worth, to the uttermost,
    I should not love withal, unless that thou
    Hadst set me an example, shown me how,
    When first thine earnest eyes with mine were crossed,
    And love called love. And thus, I cannot speak
    Of love even, as a good thing of my own:
    Thy soul hath snatched up mine all faint and weak,
    And placed it by thee on a golden throne,
    And that I love (O soul, we must be meek!)
    Is by thee only, whom I love alone.

    **********

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(115)

    –சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்..

    பரபரப்பான வாழ்க்கை, நவீன விஞ்ஞான யுகத்தின் அதியுயர் கட்டத்தில் நாம் இன்று நின்று கொண்டிருக்கிறோம்.

    இருபத்தி நான்கு மணிநேர ஊடக யுகமிது. பிரசித்தி பெர்றவர்களின் 24 மணிநேர நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து எங்கே ஒரு சிறு தளும்பல் ஏற்படுகிறதோ அதனை உடனே அம்பலத்திற்குக் கொண்டு வருவதே இவ்வூடகங்கள் தமது திறமைகளுக்கு விடுத்துள்ள சவாலாகும்

    இத்தகைய ஒரு சூழலில் மிகவும் பிரபல்யமடைந்த கலைஞர்கள், பிரசித்திப் பெற்றவர்களின் பிள்ளைகள் இவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பது மிகவும் நுணுக்கமாகக் கவனிக்கப்பட வேண்டியதொன்றே.

    உதாரணமாகப் புகழ் பெற்ற கலைஞர் ஒருவருக்கு மகனாகவோ அன்றி மகளாகவோ பிறந்து விட்டால் சாதாரணமானவர்கள் அனுபவிக்கும் சாதாரண மகிழ்ச்சியைக் கூட அனுபவிக்க முடியாமல் போய்விடுவது ஒரு துரதிர்ஷ்டமே !

    இத்தகைய சமுதாய அழுத்தங்களுக்குள்ளாகி பல பிரபல்யமடைந்தவர்கள் போகக்கூடாத வழிகளில் போய் தமது வாழ்வைச் சீரழித்துக் கொள்வதைக் கண்கூடாகப் பார்க்கக் கூடியதாக உள்ளது.

    இங்கிலாந்தின் பிரபல்யமான பொப்பிசைப் பாடகர் “பாப் கெல்டோவ் (Bob Geldof) என்பவரைப் பற்றி அநேகம் பேர் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகின் பல ஏழ்மை நாடுகளின் ஏழ்மை நிலையைப் போக்க உதவும் முகமாக பல நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டிக் கொடுத்துப் பெயர் பெற்றவர்.

    அவரது மனைவியும் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் பாடகியுமாக இருந்தவர். அவர் பெயர் “போலா யேட்ஸ் (Paula Yates) அவர் கூட தனது பிரபல்யம் வாழ்க்கையில் கொடுத்த அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போதை வஸ்துகளுக்கு அடிமையாகி இருந்தார்.

    பின்பு ஒருநாள் யதேச்சையாக அளவுக்கதிமாக போதை வஸ்துகளை உட்கொண்டதால் மரணமடைந்தார்.

    Peachesஇவர்களது மகளின் பெயர் “பீச்சஸ்” (Peaches) இவர் கூட சில மாதங்களுக்கு முன்னால் தன் தாயைப் போன்று அளவுக்கதிகமாகப் போதை வஸ்துகளை உட்கொண்டதால் மரணமடைந்தார்.

    25 வயது நிரம்பிய, இரண்டு சிறு குழந்தைகளுக்குத் தாயான இவரின் கணவர் கூட ஒரு பிரபல்யமான இசைக்கலைஞர்.

    இவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் “த ஸ்பெக்டெட்டர்” (The Spectator) என்னும் ஒரு பிரபலமான இதழுக்கு இவர் பேட்டியளித்திருந்தார். அப்பேட்டி இவர் இறந்து சில மாதங்களின் பின்னால் அவரது மரண விசாரணை முடிந்த பின்னால் இப்பொழுதே பிரசுரிக்கப்பட்டுள்ளது. அப்பேட்டியில் பேட்டி கண்டவரிடம் “நான் இளமையானவள் ஆனால் வாழ்க்கையில் எது கொடியது தெரியுமா? எம்மைப் பற்றி மக்கள் மனதில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட பிழையான அபிப்பிராயங்களே” என்று தனது மன ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

    அதுமட்டுமல்ல தனது தாயின் அகால மரணம் தனக்குக் கூட மிகவும் அவப்பெயரைத் தேடித்தந்துள்ளது என்று கூறுகிறார். அவரைத் தெரிந்த அனைவரும் இவருக்கும் இவரது தாயாரைப் போன்றே முடிவு ஏற்படும் என்று முடிகட்டி விட்டார்கள் என்றும் கூறியுள்ளார். தன்னைப் பற்றிய தப்பபிப்ராயம் கொண்டவர்களின் தன் மீதான பார்வையை மாற்றியது தன்னிரு குழந்தைகளே என்றும் கூறியிருக்கிறார்.

    போதைவஸ்துக்களின் மிகவும் ஆபத்தான “கெரோயின்” (Heroin) என்றழைக்கப்படும் போதை வஸ்து அதை உபயோகிப்போர் மீது கொண்டுள்ளா அழுத்தமான பிடியைப் பற்றி விபரிக்கும் இவர், இப்போதைவஸ்து பல அரும்பெரும் கலைஞர்களின் வாழ்வைச் சீரழித்ததை எண்ணிப் பார்க்கும் போது தனக்கு வேதனையாக உள்ளது என்றும் கூறியிருந்திருக்கிறார். இப்படியெல்லாம் தனது வாழ்க்கையின் பிரச்சனைகளை புரிந்து வைத்துக் கொண்ட ஒருவரே இப்போதைவஸ்துவுக்கு அடிமையாகி 25 வயதே நிரம்பிய நிலையில் இரு குழந்தைகளைப் பரிதவிக்க விட்டுச் சென்றது போதைவஸ்துகளின்பாவனையின் ஆபத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

    வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் உழைத்து முன்னேறி பிரபல்யமடைந்து விட்டு பின் அந்த வாழ்க்கையை போதைவஸ்துவிற்கு அடிமையாக்குவதின் அநியாய விளைவினை எமது இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இம்மடலின் அடிப்படை நோக்கமாகும்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • புலிக்கொடியின் மாட்சி

    –விசாலம்.
    சோழன்

    முன்னுரை:
    என் பூர்வீகம் தஞ்சாவூர். நான் அங்கு அடிக்கடி போய் அமரும் இடம்   தஞ்சை  பெரிய கோயில்.   அருள் மிகு பிரகதீஸ்வரர் கோயில். கல்லிலே கலை வண்ணம் கண்டேன்  என் மனதில் அழியா இடம் பெற்ற பேரரசர் திரு ராஜராஜ  சோழன். அவரது சரித்திரத்தை ஒரு கவிதை போல எழுத வேண்டும் என்ற ஆவலால் இதை எழுதினேன். எழுதும் போது என் கண் முன் அந்த மன்னரையே கண்டேன். அவர் பின்னால் தஞ்சைப்பெரிய கோயிலும் கம்பீரமாக நின்றது.

    அது  ஒரு பொற்காலம் ………….

    சோழ வள நாடாம், அதில் உயர் தஞ்சைக் கண்டு,
    தூயத்தமிழ் நாட்டின் தலைமை அதைக் கொண்டு,
    புகழ்  உச்சி  ஏணியில்  புலிக் கொடி நாட்டி,
    “அருள் மொழி வர்மனாம்” அருளைக் காட்டி,
    சிவனுடைய அருள் முழுமை பெற்று,
    ஒவ்வொரு மூச்சிலும்  சிவனே நின்று,
    கண்டறியாத அற்புதமாய்  நின்றது தஞ்சைக்  கோவில்
    ஆயிரம் வருடங்கள் ஆனாலும் அழியாத கற்கோவில்,
    கலை நுட்பம் சிறந்த அழகுத்திருகோயில் ,
    கண்டவர் பரவசம், காண்பவர் வியக்கும் கோவில்
    பிரும்மாண்ட சிவலிங்கம் அருள்  புரியும் கோயில்
    அவனைப்பார்க்கும்  நந்தியோ மனதை அள்ளும் கோயில்
    மலர் மணக்கும் கோவில்கள்
    மா பெரும்  விழாக்கள்.
    ஒன்றுபட்ட மனத்தாலே உழைத்திடும்  கரங்கள்,
    சாலை இரு புறமும் நிழல் கொடுக்கும் மரங்கள்.

    அது ஒரு பொற்காலம், மக்கள் மகிழ்காலம்
    அருள்மொழிவர்மன் திரு ராஜராஜன் வாழியவே

    ராஜகேசரி வர்மன்   நீதானே
    மும்முடி சோழன்  நீதானே,
    சிவபாத சேகரா நீதானே
    ஸ்ரீ ராஜராஜனும்  நீதானே
    சிவனருள் பெற்றவன்  நீதானே
    தமிழ் நாட்டின்  பெருமையும் நீதானே

    அது ஒரு பொற்காலம் மக்கள்  மகிழ்ந்தக்  காலம்
    அருள்மொழி வர்மன்  திரு ராஜ ராஜன் வாழியவே !

    எங்கும்  புலிக்கொடியின்  மாட்சி கொடிக்கட்டி பறந்தது ஆட்சி
    அருளோங்க, ஒளியோங்க   மகிழ்வோங்க, வாழ்வோங்க
    பொருள் வளம் ஓங்க, புலமை எழில்  ஓங்க  சிவ நாமம்  ஓங்க
    மாவீரன் எனப் பெயரோங்க சோழவளநாடு புகழோங்க
    நாற்றிசையும்  வெற்றிப் பேரிகையும்  ஓங்க சீரும் சிறப்புமோங்க,
    சொற்சுவையும் பொருட்சுவையும்  ஒருங்கே ஓங்க
    அயல்  நாட்டிலும் செந்தமிழ்   ஓங்க,
    வேற்றுமை நீங்கி  ஒற்றுமை  ஓங்க
    கலைகளும் சுடர் விட  காவியமும்  பெருகிட,
    தாயின் அன்பில் கோவிலும் எழும்பிட,
    அரசில் புதுமைகள்  தின்ந்தோரும் தோன்றிட,
    வைணவமும்  மதித்து  திருமால் கோவிலும் எழுப்பிட,
    ‘சூடாமணிவிஹாரா” என்ற புத்தக் கோவிலும்  வந்திட,
    கங்கைக் கொண்ட சோழபுரமாம் வானளாவ

    அது ஒரு பொற்காலம் மக்கள்  மகிழ்ந்தக்  காலம்
    அருள்மொழி வர்மன்  திரு ராஜ ராஜன் வாழியவே !

    தஞ்சை திருச்சி  முதல் ஆட்சி ,
    வட ஆற்காட்டிலும் புலிக்கொடி மாட்சி,
    பாஸ்கரவர்மனும்  தோல்வி கண்டான்,
    அமரபுஜங்கனும்  மாட்டிக் கொண்டான்,
    கண்டலூரிலும் புலிக்கொடி பறக்க
    கப்பற்படைகள்   தோல்வி அடிக்க,
    வில்லினம்  துறைமுகம்  சோழன்  கையில்
    எல்லா துறைமுகம்  அவன்  வசத்தில்
    கங்குவர்  நொலம்பர்   யாவரும்  பணிய,
    வேங்கி, குடகு  எல்லாம்  அவன்  கீழ்,
    தக்கிணத்திலும் “சாலுக்யா
    தோல்வி் கண்டான்  “சத்யஸ்ரயா ‘
    சேர பாண்டியன்  உடன்படிக்கை,
    இலங்கை  அரசனுக்கு உதவும் கை,
    சீறி எழுந்தது புலிக்கொடி
    எங்கும்  பறந்தது  வீரக்கொடி ,
    அரசன் மஹீந்தரன்  தோல்வி,
    சோழனின்   கொடிக்கு வெற்றி

    அது ஒரு பொற்காலம் மக்கள்  மகிழ்ந்தக்  காலம்
    அருள்மொழி வர்மன்  திரு ராஜ ராஜன் வாழியவே !

     

    படம் உதவிக்கு நன்றி: https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTn3wClbq7QjvXHtP1Jkdg8zjtoqlUZz7brRnmxb2T5wnpBqCFF

    Share