வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழா – ஒரு பார்வை

0
-மேகலா இராமமூர்த்தி
வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழா – ஒரு பார்வை
(செயின்ட் லூயி, மிசௌரி)
பகுதி – 1

poster-fp

அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்திலுள்ள செயிண்ட் லூயி நகரம் 250 வருடப் பழமையும் பாரம்பரியமும் கொண்டது. அதன் சிறப்பையும், பெருமையையும் மேலும் கூட்டும் வகையில் அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான FeTNA (Federation of Tamil Sangams of North America) தனது இருபத்தேழாவது ஆண்டுத் தமிழ்விழாவை சென்ற வாரம் (ஜூலை 3, 4, 5, 6) ஆகிய நான்கு நாட்கள் அங்குக் கொண்டாடியது.

மிசௌரி மாகாணத்தில் இயங்கிவரும் ஆற்றலும், துடிப்பும், தமிழ்ப்பற்றும் நிறைந்த தமிழ்ச் சங்கத்தினர் பேரவையின் தமிழ்விழாவைத் தங்கள் குடும்ப விழாவைப்போல் அத்துணைச் சிரத்தையுடனும் ஈடுபாட்டுடனும் செய்தனர் எனில் மிகையில்லை.

ஜூலை 3-ஆம் தேதி இரவு முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்ட ‘ஸ்டார் நைட்’ எனும் இரவு விருந்து விமரிசையாக நடைபெற்றது. அதில் பேரவையின் தலைவர்கள் மற்றும் உயர் பொறுப்புக்களில் இருப்போர், இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பேரவையின் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஜூலை 4, 5 ஆகிய இரு தினங்களும் காலை 8:30 மணிமுதல் இரவு 11 மணி வரை நடைபெற்றன. ஜூலை 6-ஆம் தேதியன்று நிகழ்ச்சிகள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை நடைபெற்றன.

விழாவைக் காண வந்திருந்த தமிழ் உறவுகளின் கண்களுக்கும் கருத்துக்கும் பெருவிருந்தாக அமைந்திருந்த அந்நிகழ்ச்சிகளின் தொகுப்பை வல்லமை வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்வும் பெருமிதமும் கொள்கின்றேன்.

இனி, நிகழ்ச்சிக்களுக்குச் செல்வோமா?

ஜூலை 4-ஆம் தேதியன்று காலை 8:30 மணிக்கு ’மறைஓதுதல்’ என்ற நிகழ்ச்சியோடு அன்றைய நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு ஆரம்பித்தது. தமிழ் மறையாம் திருக்குறளிலிருந்து சில அதிகாரங்களைக் குழந்தைகள் இசையோடு ஓதினர். அதனைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் முனைவர். தண்டபாணி அவர்கள் வரவேற்புரை நல்கினார். அடுத்து நடன நிகழ்ச்சிகள், அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பங்குபெற்ற பல்சுவை நிகழ்ச்சிகள் என விழா களைகட்டியது. சுவைஞர்கள் உற்சாக வரவேற்பளித்து பங்குபெற்ற கலைஞர்களுக்கு மகிழ்வூட்டினர்.

Iyotheedoss-Panditherஅடுத்ததாக, இவ்வாண்டில்(2014) தன் மறைந்த நூற்றாண்டினைக் காணும் தலித் இயக்க முன்னோடியும், சமூகச் சீர்திருத்தவாதியுமான அயோத்திதாச பண்டிதரைப் பற்றிய சொற்பொழிவொன்றை வழங்கி அரங்கத்திற்கு எழுச்சியூட்டினார் தமிழகத்திலிருந்து வந்திருந்த கவிஞரும், சித்த மருத்துவருமான குட்டி ரேவதி அவர்கள்.

தொடர்ந்து, திரைப்படத்தில் தமிழிலக்கியம் என்ற தலைப்பில் தமிழ்த் திரைப்பட வரலாற்றாளரான திரு. தியோடர் பாஸ்கரன் அவர்கள் சொற்பொழிவாற்றினார். பிறகு, பேரவை – 2014ஆம் ஆண்டுக்கான விழா மலர் வெளியிடப்பட்டது.

பகலுணவு இடைவேளைக்குப் பிறகு மதிய நிகழ்வுகள் தொடங்கின.

Robert_Caldwellஇவ்வாண்டைத் தன் இருநூறாவது பிறந்த ஆண்டாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும், திராவிட மொழியியலின் தந்தை என்று சிறப்பிக்கப்படும் இராபர்ட் கால்டுவெல் அவர்களைப் பற்றிய சிறப்புச் சொற்பொழிவை வழங்கினார் திரு. ஆல்பர்ட் செல்லதுரை அவர்கள்.

அடுத்து இடம்பெற்றது மற்றொரு சிறப்புச் சொற்பொழிவு. இவ்வாண்டைத் தன் நூற்றாண்டாகக் கொண்டாடும் பண்ணாராய்ச்சி வித்தகர், ஏழிசைத் தலைமகன் குடந்தை ப. சுந்தரேசனார் பற்றிய அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தினார் ’இலக்கணக் கொண்டல்’ என்ற சிறப்புப் பெயர் பெற்ற முனைவர் இராம. இராமமூர்த்தி அவர்கள்.

kudanthai-p-sundaresanar-300-jpg சுந்தரேசனாரின் இசைத்திறன் குறித்தும், இசை ஈடுபாடு குறித்தும் உணர்ச்சி பூர்வமாக விளக்கிய முனைவர் இராமமூர்த்தி அவர்கள், அம்மேதையைத் தான் நேரில் சந்திக்கும் பேறுபெற்றவன் என்று கூறியபோது அரங்கமே அதனைக் கரவொலி எழுப்பிப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

பேரவை நிகழ்ச்சிகளின் அணிவகுப்பில் அடுத்ததாய் இடம்பெற்றது கவிஞர் குட்டி ரேவதி தலைமையில் நடைபெற்ற கவியரங்கம். அரங்கம் நிறைந்த சுவைஞர்கள் கூட்டம் ஒவ்வொரு கவிஞரின் கவிதையையும் கேட்டும், ஆர்ப்பரித்தும் உற்சாக வரவேற்பளித்தது இந்நிகழ்ச்சியின் வெற்றியைப் பறைசாற்றியது.

விழாவின் முத்திரை நிகழ்ச்சிகளில் ஒன்றாகத் திகழ்ந்த ‘இலக்கிய விநாடி வினா’ அடுத்து இடம்பெற்றது. சங்க நூல்கள் அனைத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. விநாடிவினாவில் கலந்துகொண்ட இரு அணியினரும் சிறப்பாகப் பதில்சொல்லித் தம் புலமையை அழகாய் வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் 9-வயதுச் சிறுமி நிவேதிதா ராமன் குறிஞ்சிப்பாட்டிலுள்ள 99 வகையான மலர்களையும் ஒன்றுவிடாமல் கூறி அரங்கத்தினரை வியப்பில் ஆழ்த்தினார். விழாவைக் காண வந்திருந்த அனைவரும் எழுந்துநின்று விண்ணதிரக் கரவொலி எழுப்பித் தம் பாராட்டுக்களை அச்சிறுமிக்குத் தெரிவித்து மகிழ்ந்தனர்.  theeran-t

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை குறித்த நாட்டிய நாடகம் அடுத்து அரங்கேறி மக்களின் நாடி நரம்புகளிலெல்லாம் விடுதலை உணர்ச்சியைப் பாய்ச்சியது; அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

திரு. ஞானமணி ராஜப்ரியர் அவர்களின் தமிழிசை நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்றாக அடுத்து இடம்பெற்றது. 85 வயதைத் தாண்டிய முதியவராய் இருந்தபோதிலும் அவர் குரல் இளமை மாறாமல் இருந்தது வியப்பினும் வியப்பே! இனிய தமிழ்ப் பாடல்கள் பல பாடி அனைவரின் செவிகளிலும் இன்பத் தேனைப் பாய்ச்சினார் அவர்.

தமிழர்களின் வளர்ச்சிக்கு அடிப்படை உணர்வா? அறிவா? என்ற தலைப்பில் சூடான விவாதங்கள் அடங்கிய ’கருத்துக்களம்’ எனும் நிகழ்வு அடுத்து நடைபெற்றது. அனல் பறக்கும் அக்கருத்துப் போரை நெறிப்படுத்தி நடத்தினார் மருத்துவர் திரு. எழிலன் நாகநாதன் அவர்கள்.

பின்பு, சுற்றுப்புறச்சூழல் ஆர்வலரும், வங்கி அதிகாரியுமான திரு. ம. பா. நிர்மல் அவர்கள், குப்பைகள் இல்லாத சுகாதாரமான சுற்றுப்புறத்தை உருவாக்குவதன் அவசியத்தை விளக்கும் வகையில் ‘தமிழரின் எதிர்காலம்’ எனும் பொருளில் உரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து திரைப்பட நடிகர், அரசியல்வாதி, தொழிலதிபர் என்ற பன்முகங்கள் கொண்ட வெற்றியாளரான நடிகர் நெப்போலியன் தன் திரை வாழ்க்கைப் பயணத்தையும், அனுபவங்களையும் சுவைபடப் பகிர்ந்துகொண்டார்.

ஜூலை 4-ஆம் தேதி இரவின் இறுதி நிகழ்ச்சிகளான இரு நிகழ்ச்சிகள் மிகுந்த பாராட்டிற்குரியவைகளாக அமைந்திருந்தன. அவற்றில் முதலாவதாக அமைந்தது தெருக்கூத்து. இயல், இசை, நாடகம் என்று போற்றப்படும் முத்தமிழில் காலத்தால் மூத்தது கூத்துக்கலை. தெருக்களையே ஆடுகளமாக – அரங்கமாகக் கொண்டு நிகழ்த்தப்படும் கூத்து தெருக்கூத்து என்ற பெயரினைப் பெற்றது. பிற்கால மேடை நாடகங்களுக்கெல்லாம் தாயாக – அடிப்படையாகத் திகழ்ந்தது தெருக்கூத்தே என்பது நாடகவியலார் கருத்து.

அவ்வகையில், ’சிலம்பின் கதை’ என்ற பொருளில் பேரவை மேடையில் நடைபெற்ற தெருக்கூத்து, பண்டைய தமிழனின் பாரம்பரியக் கலையை மீட்டெடுக்கும் ஒரு சீரிய முயற்சியாக அமைந்தது; ரசிகர்கள் அனைவரின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது. பல்வேறு வேலைச் சுமைகளுக்கு நடுவிலும் தளராது, மிகக் கடினமாக உழைத்து இந்தத் தெருக்கூத்தை மேடையேற்றிய மினசோட்டா தமிழ்ச்சங்கக் குழுவினரை எவ்வளவு போற்றினாலும் தகும்!

அடுத்து அன்றைய இரவின் இறுதி நிகழ்ச்சியாக அமைந்தது, தோல்பாவைக் கூத்து என்னும் மற்றொரு கூத்து. 500 வருடப் பாரம்பரியம் கொண்ட இத்தோல்பாவைக்கூத்து இன்று பெரிய திரை, சின்னத்திரை போன்றவற்றின் ஆதிக்கத்தால் அழியும் தறுவாயில் இருந்துவருகிறது. இதனை அழியாமல் காக்கவேண்டும் என்ற உறுதியோடு உழைப்போர் வரிசையில் முதலிடம் பெறும் அம்மாப்பேட்டை திரு. கணேசன், திரு. மு. ஹரிகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தோல்பாவைக்கூத்து என்ற இந்தத் தொல்கலையை அரங்கேற்றி அழகுபார்த்தனர்; சுவைஞர்களும் உற்சாக வெள்ளம் கரைபுரண்டோட அதனைக் கண்டு களித்தனர்.

IMG_0304முக்கியமான நிகழ்ச்சிகள் பலவும் அனைவரும் காணும் வகையில் பொதுமேடையில் நடைபெற்ற அதே வேளையில், வேறு சில சுவையான நிகழ்ச்சிகள் பிற சிறிய அரங்கங்களிலும் நடத்தப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று ஜூலை 4ஆம் தேதி காலை 9 மணி தொடங்கி மதியம் 12 மணிவரை நடைபெற்ற அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ போட்டிகள். இதில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், தமிழிசை எனப் பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன. குழந்தைகளும் ஆர்வத்தோடு பங்கேற்றுப் பரிசுகளை வென்று குவித்தனர்.

ஜூலை 5ஆம் தேதியும் காலை 8:30 மணியிலிருந்தே பேரவை நிகழ்ச்சிகள் தொடங்கி அன்று முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றன. அவற்றின் விவரம் அடுத்த பகுதியில்…

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.