–சு.கோதண்டராமன்.

என்னதான் இருக்கிறது வேதத்தில் – 13

என்னதான் இருக்கிறது வேதத்தில் – 15

வேத ரிஷிகளின் கவிதைச் சிறப்பு 

 

அரவிந்த கோஷ் சொல்வதாகப் பாரதி கூறுகிறார், “வலியவனாகிச் சுடர் வீசிக் கொண்டு நிற்கும் இந்த அக்னி தேவனைப் பற்றிய மந்திரங்களிலே கவிதை மிகவும் செழிப்புற்றிருக்கின்றது. ஸூக்ஷ்மப் பொருள் ஆழ்ந்து நிற்கிறது. தெய்வ வெறி தெளிந்து நிலவுகிறது. பாட்டுக்கொள்ளுகிற அக்கினி தேவனுடைய தழலும், அவன் உறுமுதலும் ஒளியும் பாடுகிற ரிஷிகளின் அறிவிலே தாவி விட்டன போலும்.”

vedas_puranas

வேத ரிஷிகள் உலக வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவையும் ரசித்து ரசித்து அனுபவித்தவர்கள். பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும், கேட்கும் ஒவ்வொரு ஒலியிலும் அவர்களுக்கு இன்பம் பொங்கி வருவது தெரிகிறது. சாதாரணமாக நாம் பார்ப்பது போல அல்லாமல், அவர்கள் ஒரு குழந்தையின் நிலையில் இருந்து பார்க்கிறார்கள். எதையும் வியப்புடன் நோக்கும் குழந்தைப் பண்பை இழக்காமல் அவர்கள் தம்மைச் சுற்றியுள்ள பொருள்களை உற்றுநோக்கினர்.

தம் மனதில் எழுந்த எண்ணங்களை வெளிப்படுத்தும்பொழுது, அவர்கள் குழந்தையாக இல்லாமல் கற்பனை வளம் மிக்க, தேர்ந்த புலவனின் திறமையைக் காட்டுகிறார்கள். குழந்தைத் தனத்தையும் புலமையையும் இணைத்து, எதையும் மறைபொருளாகவே தெரிவிக்கும் வேத மொழிநடைச் சிறப்பை வாசகர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ரிக் வேதத்தில் அக்னி பற்றிப் பல இடங்களில் காணப்படும் புகழ் மொழிகளில் சில இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.

எரிபொருள் இருக்குமிடத்தில் அடுத்த அடுத்த இடங்களுக்கு அக்னி பரவிக்கொண்டே இருப்பதையும் எளிதில் நகர்ந்து, நெடுந்தூரம் செல்வதையும் “அவர் சுகமான ரதம் கொண்டவர்” (சுக தம ரத:)  என வர்ணிக்கின்றனர்.

மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் நாம் விளக்கேற்றுகிறோம். இருள் நீங்குகிறது. இது நமக்குச் சர்வ சாதாரணமான விஷயம். ஆனால் ரிஷி இதைக் கவித்துவக் கண்ணால் பார்க்கிறார். “வலிமையான குதிரைகளுடன் உன் ஒளி வலையை வீசிக் கொண்டு இருளாகிய கரு நிறப் போர்வையைக் கிழித்துக் கொண்டு நீ முன்னேறுகிறாய். அந்த இருளை, மறையும் சூரியனின் கிரணங்கள் நீரில் ஆழ்த்துகின்றன” என்கிறார்.[1]

அக்னிக்கென்று நாம் ஹோம குண்டம், அடுப்பு போன்ற இருப்பிடங்கள் அமைத்துக் கொடுக்கிறோம். நாம் அமைக்காத இடங்களில் தீ பரவ நாம் விடுவதில்லை அல்லவா? இதனால் “தன் இருப்பிடத்திலேயே வளர்பவர் ” (ஸ்வே தமே வர்தமான: ) என்ற அடைமொழியால் அழைக்கின்றனர்.

காற்று வெப்பம் மிகுந்த இடம் நோக்கி வீசும். நீர் பள்ளத்தை நோக்கிப் பாயும். அது போல, அக்னி நகர்வதற்குக் குறிப்பிட்ட திசை உண்டா? இல்லை அல்லவா? இதை, “அவரது முகம் எல்லா திசைகளிலும் பார்க்கிறது, அவர் நான்கு கண் உடையவர்” (விச்வதோமுக:, சதுரக்ஷ: ) என்கிறார் ரிஷி.

தீ எரியும் அழகைக் கவி ரசிக்கிறார். ஜ்வாலைகள் நாக்குகளைப் போல் உள்ளன. அதனால் அக்னி ஸப்த ஜிஹ்வா – ஏழு நாக்குகள் உள்ளவர் – என்று கூறப்படுகிறார். அவை அவருடைய கேசம் போல் உள்ளன. அதனால் அக்னி ஒளியுள்ள கேசம் உடையவர் (சோசிஷ்கேச) என்று கூறப்படுகிறார். பார்ப்பதற்கு அழகானவர் (தர்சத) என்றும் புகழப்படுகிறார். நெய்யினால் அக்னி வளர்வதை நெய்யினால் மகிழ்பவர் என்று குறிப்பிடுகிறார். அவர் நெய் முதுகு உடையவர் (க்ருதப்ருஷ்ட) என்றும் சொல்லப்படுகிறார்.

“அக்னி பிறக்கும் போது வெள்ளையாகவும் வலுத்த பின்னர் சிவப்பாகவும் ஆகிறார்” (ச்வேதம் ஜஞானம், அருஷம் மஹித்வா) என்றும் “சிவப்புக் குதிரை கொண்டவர்” (ரோஹிதாச்வ) என்றும் ரசித்துப் போற்றுகிறார் ரிஷி.

அக்னி உள்ள இடத்தில் புகை இருக்கும். எனவே அவர் புகைக் கொடியார் (தூமகேது) எனப்படுகிறார். தீக்குச்சியை உராய்வதால் உண்டாகும் அக்னி குச்சியையே அழித்து விடுகிறது. ரிஷி பேசுகிறார், “விண்ணே, மண்ணே, இந்த அதிசயமான இயற்கை நியதியைக் கேளுங்கள், பிறந்ததும் பெற்றோரை விழுங்குகிறான் இந்த சிசு.”[2]

அக்னியை பகலில் ஹோமம், சமையல் முதலானவற்றிற்காகவும் இரவில் வெளிச்சம் தருவதற்காகவும் மூட்டும் நிகழ்ச்சியைக் கவித்துவத்துடன் ரிஷி வர்ணிக்கிறார்,

“இந்த அக்னிக் குழந்தைக்கு இரவு என்னும் பெண்ணும் பகல் என்னும் பெண்ணும் மாறி மாறிப் பாலூட்டினர்.”[3]

பகல் இரவு இரண்டும் அவருக்குத் தாய்கள் போல இருப்பதால் அவர் இரு தாய்களின் மகன் என்று கூறப்படுகிறார்.

மூட்டப்பட்டவுடன் தீயைக் காற்று அணைக்காமல் விரல்களால் மூடிக் காப்பாற்றும் நிகழ்ச்சியை முனிவர் வர்ணிக்கும் முறை அழகானது. “மணமாகாத பத்து சகோதரிகள் சேர்ந்து புதிதாகப் பிறந்த அந்தக் குழந்தையைப் பற்றுகிறார்கள்.” என்கின்றனர்.[4]

அதே நிகழ்ச்சிக்கு இதோ இன்னொரு உவமை. வனத்தில் உள்ள இரு திருடர்கள் பல கயிறுகளால் வழிப்போக்கனைக் கட்டி நகர விடாமல் செய்வது போல இரு கைகளும் பத்து விரல்களால் தீயை அணையாமல் காக்கின்றன. [5]

குறிப்புகள்:
1    4.13.4.
2    10.79.4.
3    1,96.5.
4    3,29.13.
5    10.4.6.

படம் உதவிக்கு நன்றி: http://www.hinduismnet.com/hinduism-vedas.htm

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “என்னதான் இருக்கிறது வேதத்தில் ? –14

  1. தீக்குச்சியை உராய்வதால் உண்டாகும் அக்னி குச்சியையே அழித்து விடுகிறது. ரிஷி பேசுகிறார், “விண்ணே, மண்ணே, இந்த அதிசயமான இயற்கை நியதியைக் கேளுங்கள், பிறந்ததும் பெற்றோரை விழுங்குகிறான் இந்த சிசு.”// ரிக் வேத காலத்தில் தீதீக்குச்சி இருந்ததா என்ன? பிறகு ஏன் இந்த உதாரணம்? ரிக் காலத்தில் எதற்கு இது உவமையாக கூறப்பட்டிருக்கும்? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.