–சு.கோதண்டராமன்

என்னதான் இருக்கிறது வேதத்தில் – 14

அக்னியின் சிறப்புகள்

agni

விண்ணில் உள்ள சூரியனும் அக்னியே. மண்ணில் உண்டாகும் தீயும் அக்னி தான். அக்னி தூய்மையானவர், பிறரையும் தூய்மைப்படுத்துபவர், புற இருளையும் அக இருளையும் விரட்டுபவர். புத்தியைத் தூய்மைப்படுத்தி நெறிப்படுத்துபவர். வேண்டுவோரின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம் தன் கடமையை நிறைவேற்றுகிறார். உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்னி அணுகுவதற்கு எளியவர். வஞ்சனை இல்லாதவர், பகைக்கும் நட்புக்கும் அப்பாற்பட்டவர், பக்குவம் இல்லாதவர்களிடத்தும் பரிவு காட்டுபவர், அனைத்து தேவர்களுக்கும் அவரே அவி உணவைச் சுமந்து செல்கிறார். மர்த்யனை ரிஷியாக ஆக்குபவர் என்ற பெயர் அக்னிக்கு அளிக்கப்படுகிறது.

அக்னியின் தோற்றம்
அக்னி எப்பொழுது தோன்றியவர்? யாருக்குத் தெரியும்? அவர் மிகப் பழமையானவர் என்பது மட்டும் தான் ரிஷிகளுக்குத் தெரிகிறது. அவர் எவ்வாறு தோன்றினார் என்பதை ஊகித்து உணர்த்துகிறார்கள். இது பல வகை அக்னிக்கும் பொருத்தமாக அமைகிறது.

“முதலில் அக்னி விண்ணிலிருந்தும், இரண்டாவதாக நம்மிடமிருந்தும், மூன்றாவதாக நீரிலிருந்தும் அக்னி தோன்றினார்”[1] எனப் பேசுகின்றனர்.

விண்ணில் உள்ள சூரியனும் அக்னியே. மண்ணில் உண்டாகும் தீயும் அக்னி தான். எனவே விண்ணும் மண்ணும் அவருடைய பெற்றோர்கள் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக, விண்ணைத் தந்தையாகவும் மண்ணைத் தாயாகவும் சொல்வது வேத வழக்கம். இதற்கு மாறாக, இரண்டையும் சேர்த்து ரோதஸீ என்ற பெயரில் சொல்லும்போது இரு பெண்கள் என்று சொல்வதும் வேதத்தில் உண்டு. எனவே அக்னி இரண்டு தாய்களின் மகன் என்று சொல்லப்படுகிறார்.

இன்னொரு வகையிலும் அவருக்கு இந்தப் பெயர் பொருந்துகிறது. இரண்டு அரணிக் குச்சிகளால் அவர் உருவாக்கப்படுவதாலும் இரு தாய்மார்களின் மகன் என்று கூறப்படுகிறார்.

மேலும், பகல் இரவு இரண்டும் அவருக்குத் தாய்கள் போல இருப்பதாலும் அவர் இரு தாய்களின் மகன் என்று கூறப்படுகிறார்.

பண்புச் சிறப்புகள்
அக்னி தூய்மையானவர், பிறரையும் தூய்மைப்படுத்துபவர், கட்டுப்பாடானவர், புனிதமானவர். நம் வாழ்வின் ஊற்று. தவறே செய்யாதவர்.

மாயா எனப்படும் அதிசய சக்தி, ஆச்சரியமான செயல் திறன், துணிச்சல், வேகம், வலிமை கொண்டவர். வ்ருஷபர் (காளை) என்றும் வலிமையின் மகன் எனப் பொருள் தரும் ஸஹஸஸ் ஸூனு, ஊர்ஜோ நபாத் ஆகிய அடைமொழிகளாலும் போற்றப்படுகிறார். போர்க்களங்களில் முதலில் நிற்பவர், விருத்திரனையும் 99 நகரங்களையும் அழித்தவர். ராட்சசர்களையும் பகைவர்களையும் அழிப்பவர், போட்டி இல்லாதவர்.

குழப்பமில்லாத தெளிந்த அறிவைச் செல்வமாகக் கொண்டவர், பிறக்கும்போதே எல்லாம் அறிந்தவர், உலகில் பிறந்துள்ள அனைத்தையும் அறிந்தவர் (ஜாதவேதஸ்), வருங்காலம் உணர்ந்தவர் (கவி), வித்வான், விப்ர (ரிஷி), கவிக்ரது, க்ரதுவித் (உலகைத் தூண்டுபவர்), அறிவைத் தூண்டுபவர் என்று போற்றப்படுகிறார். புற இருளையும் அக இருளையும் விரட்டுபவர். புத்தியைத் தூய்மைப்படுத்தி நெறிப்படுத்துபவர். இவருடைய திறமையால் கவிகள் பெருஞ் செயல்களைத் தனித்து நின்று செய்ய முடிகிறது.

மக்களின் தொண்டர்
பொதுவாக எல்லா வீடுகளுக்கும் அவரே தலைவர். குறிப்பாக, தேவர்களைப் போற்றும் இல்லங்களின் தலைவர். மக்களை ஒளியுள்ளவர்களாகவும் நல்ல வாழ்க்கை வாழ்பவர்களாகவும் ஆக்குகிறார்.

மக்கள் இனத்துக்கு விளக்காக மனு அவரை நிலைநாட்டினார், மனிதர்க்கு ஏற்படும் துன்பங்களை, அது தேவர்களால் கொடுக்கப்பட்டதாக இருந்தாலும், மனிதரால் ஏற்பட்டதாக இருந்தாலும், போக்க வல்லவர். வணங்கினோரைக்  காப்பவர். தாமதமின்றி வரம் அருள்பவர். சுபங்களின் நாயகர். நிகழ் காலத்துக்கும் வருங்காலத்துக்கும் நாயகர்.

வேண்டுவோரின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம் தன் கடமையை நிறைவேற்றுகிறார். உணவு, ஆரோக்யம், புஷ்டி, வெல்ல முடியாத வலிமை, மகிழ்ச்சி, புத்திரர்கள், புகழ், அமரத்தன்மை, வருணன் தரும் தண்டனையிலிருந்து பாதுகாப்பு, போரில் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு ஆகியவை அவர் தரும் கொடைகள். வீட்டின் செல்வத்தைக் காக்கிறார்.

தலைமை
ரயி, வஸு ஆகிய உயர் செல்வத்திற்கும் அவரே அதிபதி. மானிடர் வாழும் நாட்டின் அரசர். மலைகளுக்கும் நீர் நிலைகளுக்கும், செடி கொடிகளுக்கும் அரசர். ஸம்ராட் (பேரரசன்) என்றும் அழைக்கப்படுகிறார். பல வீரர்களைப் பெற்றிருப்பவர். தேவர்களும் மனிதரும் அவர் ஆணைக்குக் கீழ்ப்படிகின்றனர். அவரே விதிப்பவர்.

எளிமை
இவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்னி அணுகுவதற்கு எளியவர். வஞ்சனை இல்லாதவர், பகைக்கும் நட்புக்கும் அப்பாற்பட்டவர், பக்குவம் இல்லாதவர்களிடத்தும் பரிவு காட்டுபவர், காட்சிக்கு இனியர், மகிழ்ச்சியுடன் இருப்பவர், எல்லோராலும் விரும்பப்படுபவர். ரிஷி அக்னியிடம் உரிமையோடு கொஞ்சுகிறார், பாருங்கள்.

நான் உன் இடத்தில்- அக்னியாக- இருந்தால் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொடுப்பேன். செல்வத்தில் திளைக்கிறாயே, உன் அருளில் நாங்களும் பங்கு கொள்கிறோமே[2].

பிதிரரும் தீயும்
உயிர் வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல. இறந்தவர்களுக்கும் உதவுபவர் அக்னி. பிரேதங்களை அவரிடம் ஒப்படைக்கிறோம். பெற்ற தாய் தந்தையரை அக்னியில் இடும்போது ரிஷியின் மனம் கஷ்டப்படுகிறது. “அக்னியே, இந்த உடலை எரிக்காதே, பக்குவப்படுத்தி பித்ருக்களுடன் சேர்த்து விடு. உன் பங்குக்கான ஆட்டை எரித்து உண்க”[3] என்று வேண்டுகிறார். அவர் நமது பித்ருக்களைக் காப்பாற்றுவதாகவும், பித்ருக்களின் உதவிக்கு வருவதாகவும் போற்றுகிறார்.

அக்னியும் யக்ஞமும்
இவரே யாகத்தின் தலைவர். ஹோதா, அத்வர்யு முதலான 8 வகை யக்ஞ வேலைகளையும் செய்கிறார். குறிப்பாக, தேவர்களை அழைக்கும் ஹோதா என்ற பணியை மிகுதியாகச் செய்கிறார். ஹவிஸ்ஸாலும் ஸ்தோத்திரங்களாலும் செய்யப்படும் யக்ஞத்தால் வளர்பவர் அக்னி. மேதஸ் (கொழுப்பு), நெய் இவற்றால் மகிழ்கிறார். தேவர்களையும் மனிதர்களையும் தூண்டி புத்தியினால் யக்ஞத்தை நடத்தச் செய்கிறார். புரோகிதர்களின் அன்புக்குப் பாத்திரமானவர். அவரே யக்ஞத்தின் கேது (அடையாளம்), யக்ஞஸ்ய வித்வான் (வேள்வியை நன்கு அறிந்தவர்).

அக்னியும் தேவர்களும்    
அக்னி இயற்கையிலேயே தேவன், அதாவது ஒளியுடன் கூடியவர். தேவர்களுக்குப் போரில் ஆறுதல் கூறுகிறார். தேவர்களின் எதிரியான சம்பரனைக் கிழித்து, அவனது அரண்களை உடைத்தவர். வருணன், மித்ரன், அர்யமான் ஆகியோர் இவரால் வலிமையூட்டப்படுகின்றனர். தேவர்களின் நண்பன், தேவர்களின் தந்தை, தேவர்களின் மகன், தேவர்களின் கொடி.

அனைத்து தேவர்களுக்கும் அவரே அவி உணவைச் சுமந்து செல்கிறார். முப்பத்து மூன்று தேவர்களையும் வேள்விக்கு அழைத்து வருகிறார். தேவர்களோடு தர்ப்பையில் அமர்கிறார். வாயில் நெய்க் கரண்டி கொண்டவர் என்றும் தேவர்களின் நாக்கு என்றும் போற்றப்படுகிறார். நெய்யும் தேனும் உண்பதால் இனிய நாக்கு உடையவர். தேவர்கள் அமரத்வம் அடைந்தது அக்னியால் தான்[4].

மக்களுக்காக, தேவர்களைப் பூஜிக்கிறார். தேவர்களிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறார். மூரதேவர் எனப்பட்ட போலிக் கடவுளரின் பக்தர்களை அழிக்கிறார். தன் பக்தரைக் காக்கிறார். தேவரை வணங்காதாரைத் தன் கொம்புகளால் கிழிக்கிறார்.

அக்னி ஸ்வர்த்ருச (ஸ்வர்க்கத்தைப் பார்ப்பவர்), திவ: கேது (ஸ்வர்க்கத்தின் அடையாளம்) என்று போற்றப்படுகிறார். விண்ணின் தலையில் இருப்பவர் (திவ: மூர்தா). உலகம் முழுமையும் பார்ப்பவர் விச்வசர்ஷணி. மர்த்யனாகப் பிறக்கும் மனிதன் நரன், ரிஷி, மகோனன் என்று படிப்படியாக உயர்ந்து சூரி ஆவதை முன்பு பார்த்தோம். மர்த்யனை ரிஷியாக ஆக்குபவர் என்ற பெயர் அக்னிக்கு அளிக்கப்படுகிறது.

சூரி நிலையிலிருந்து தேவ நிலைக்கு அழைத்துச் செல்வது அக்னி தான். இரண்டாவது (தேவப்) பிறப்புக்கு ஆசைப்படும் சூரிக்கு மகிழ்ச்சி அளிக்கிறாய் என்கிறது ஒரு மந்திரம்[5].

ருதத்தின் நாயகன்
ஒவ்வொரு இயற்கைச் சக்திக்கும் உள்ள ஒரு தனி நியதி ருதம் என்றும் விரதம் என்றும் வேதத்தில் கூறப்படுகிறது. அக்னி இந்த ருதத்தை மீறாமல் தன் தனித் தன்மையோடு விளங்குவதை, ருதத்தில் தோன்றியவர், ருதத்தின் மடியில் கிடப்பவர், அதிலிருந்து என்றும் தவறாதவர் என்று போற்றுகிறார்கள் ரிஷிகள். “ருதத்தின் காந்தர்வப் பாதையில் நெய்யில் நிலை பெற்றிருப்பது அக்னியின் மேய்ச்சல் நிலம்” என்கிறது ஒரு மந்திரம். அக்னியின் குதிரைகள் ருதத்தின் கயிற்றால் கட்டப்பட்டுள்ளதாகக் கூறுகிறது மற்றொன்று.

ருதத்தின் கண்ணாகவும் காப்பானாகவும் விளங்குகிறார் அக்னி. தனது தீர்க்க திருஷ்டியால் ருதம் மீறப்படாமல் காக்கிறார். ருதப்படி (நியதிப்படி) ருதுக்களைக் (பருவகாலங்களை) காப்பார். ருதத்தைக் காக்க வரும்போது அவரே வருணனாகிறார். இயற்கை நியதியை அழிக்கும் அரக்கனை அக்னி அழிக்கிறார். அவர் ஸ்வதாவான், அதாவது இயற்கை நியதியின் சமநிலைப்படுத்தும் தன்மை.

நற்பண்புகள் பல கொண்டு, மக்களுக்குப் பல வகையிலும் உதவி புரிவதால் வழிபடத் தகுந்தவர். வழிபாட்டின் போது கூறப்படும் தோத்திரங்களை அக்னி விரும்பி ரசிக்கிறார். புகழுரைகள் அவரை வளர்க்கின்றன.

குறிப்புகள்:
1     10.45.1.
2    8.44.23, 8.44.24
3    10.16.1,4
4     5.3.4.
5     1.31.7.

படம் உதவிக்கு நன்றி: http://thishollowearth.wordpress.com/2010/11/15/god-of-the-week-agni/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *