சு.ரவி
Dear all,

https://archive.org/details/SuraviMurugarSongs

Click on the above link to listen to 2 songs on Lord Murugan written by me & sung by Sri SPB Musi Direction: Sri. Ramesh Vinayagam

Scroll below for a line drawings n an acrylic on paper by me.
கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை அவர்களின் அழகம்மை ஆசிரியவிருத்தம் ஏற்படுத்திய தாக்கத்தில் என்னைப் பள்ளிநாட்களில் பெரிதும் ஆட்கொண்ட திருமயிலைத் தலத்துக் கபாலீஸ்வரர் கோயிலில் குடிகொண்ட சிங்காரவேலவன் மீது இயற்றிய அஷ்டகம்.

கவிமணி அவர்கள்

“மார்த்தாண்ட வேழம் வழுவேதும் வாராமல்
காத்தாண்டு கொள்ளக் கடன்”
என்று காப்பு வெண்பா எழுதியதுபோல்

இக்கவிதைக்குக் காப்பாக மயிலை கபாலீஸ்வரத்தில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானைக்

“கூத்தாடும் பிள்ளையே குற்றம் குறையின்றிக்
காத்தாண்டு கொள்ளக் கடன்.

என்று அழைத்தேன்.
கேட்க, படிக்க,பார்க்க,ரசிக்க.

3D50DF05-1CBA-4315-BEC7-63A6564987AC

அழகுவேலன் விருத்தம்

மங்காப் புகழுடையோன் மன்னுமயில் ஏறிடுவான்

சிங்கார வேலவனின் சீருரைக்க- எங்கோவாம்

கூத்தாடும் பிள்ளையே குற்றம் குறையின்றிக்

காத்தாண்டு கொள்ளக் கடன்.

 

பார்தன்னில் சீர்தங்கும் ஊரெங்கள் ஊர்தன்னில்

பாலனாய்த் திகழ்ந்திருப்போய்!

பால்சிந்தும் முகமோடு வேல்கொண்ட கரமோடு

பக்தரைக் காத்து நிற்போய்!

தார்சூடும் மறலியைத் தன் தொண்டனுக்காகத்

தாளெற்று தேவனவனும்

தாழ்சடை தான்புரள ஆழ்கங்கையும் அசைய

தன் தலை தாழ்த்திநிற்க

கார்வண்ணன் உந்தியிற் றானின்ற நான்முகன்

கைகட்டிச் சிறையிருக்க

வேதங்கள் நான்குக்கும் ஆதாரஒலியினை

விளக்கிடும் தேவதேவா!

நீர்வளம், நிலவளம், சோர்விலா மனவளம்

நிறைந்திடும் தேவபுரியாம்

பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

பொலியு சிங்காரவேலே! (1)
எந்தனுளம் தன்னிலே சொந்தமும் பந்தமும்

எந்நாளும் எண்ணிவிட்டேன்

சிற்றின்ப உலகிலே மற்றின்பம் ஒன்றையே

சிந்தையிற் கொண்டுவிட்டேன்

உந்தனடி பற்றிவரும் சந்தமிகு வாழ்வினை

உணரா திருந்துவிட்டேன்

உழலுமாம் மனதிலே அழுகையை அன்றிவே

றொன்றையும் இன்றுகாணேன்

கந்தனே வள்ளிக்கு கந்திடும் காந்தனே

கதறினேன், காத்தருள்வாய்!

கடைசியில் காட்டினை அடைகின்ற போதிலே

கண்விழித் தேனருள்வாய்!

செந்தமிழ் தன்னிலே விந்தைபல செய்திடும்

பாவலர் நிறைந்தபுரியாம்

பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

பொலியு சிங்காரவேலே! (2)

முக்திக்கு வழிதரும் பக்திக்கு வித்திட்டு

வாழுமோர் வாழ்வுமறியேன்

முன்வினைப் பயனிங்கு என்வினை மோதிடும்

பின்வினை தன்னையறியேன்!

சக்தியை முத்திட்டு சரவணப் பொய்கையில்

சதிராடு கந்தவேளே

சற்றேனும் என்மனதை வற்றாத கருணையால்

சரவணப் பொய்கையாக்கு

மெத்தக்க றுத்தவள்கு றத்திக்கு மாலையிடும்

மேலானச் வேலவா என்

சித்தத்தி னில்என்றும் சித்திரம் போல்நின்ற

சிறுவனே, கார்த்திகேயா

தித்திக்கும் முத்தமிழும் எத்திக்கும் தான்பரவ

வைத்த்சீர் கொண்டபுரியாம்

பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

பொலியு சிங்காரவேலே! (3)

பொறியியல் தன்னிலே அறிவினைப் பெற்றுநான்

பட்டமும் சூடுவேனோ

பொருந்தாத வாழ்விலே வருந்தியே வாழ்வினைப்

பயனின்றி வாழுவேனோ

புரியாத தாகவே தெரியாது நின்றிடும்

புத்தியும்; கற்றகல்வி

‘புவனத்தி லே சற்று கவனம் இருந்திடிற்

புரியாத தேதுமில்லை

அறிவாய்’ எனப் புகலும்; எரிவாயில் வீழுமோர்

அன்றிலின் நிலையில் நானும்

இவ்வுலக வாழ்வுக்கும் அவ்வுலக அருளுக்கும்

இடையிலே ஆடுகின்றேன்

மறி,சூலம் கொண்டகா பாலியைக் கற்பகம்

மயிலுருக் கொண்டன்புசெய்

பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

பொலியு சிங்காரவேலே! (4)

தான்பெற்ற செல்வனைத் தாயுமொரு நாளுமே

ஏன்பெற்றோம் என்பதில்லை

தண்ணீரும் தன்மீது நின்றாடும் தாமரைப்

பூவினைத் தவிர்ப்பதில்லை

வானுற்ற மதியமும் மறுவுற்ற போதிலும்

வாஞ்சையாய் ஏற்றுவிட்டான்

வணங்காத சூரனும் அணங்கோடு நீயேற

வண்ணமயில் ஆகிவிட்டான்

கானுற்ற முனிவனாய்க் காவியும் சடையுமாய்த்

தத்துவம் கண்டதில்லை

நான்செய்த குற்றமும் தேனொத்த சொல்லினாய்

நீயெண்ணலாகுமோ சொல்

மீனொத்த கண்ணினாள் மானேந்தும் ஐயனை

மயிலுருக் கொண்டன்புசெய்

பொன்மவிலை யின்வாழும் என்னரிய செல்வமே

பொலியு சிங்காரவேலே! (5)

10ADC334-6BFD-4129-8EDA-98BA93A22C4F

வில்லுக் கருச்சுனன் மல்லுக்கு நிற்கையில்

வீசிடும் சாட்டைகொண்டு

பாதையைக் காட்டவே கீதையைச் சொல்லிடும்

பரமனின் செல்வமருகா!

சொல்லுக் ககத்தியன் கேட்கமுத் தமிழினைத்

தந்திடும் வெற்றிவேலா

குன்றத்தி லேநின்று குன்றாத அருள்பொழியும்

குமரனே கார்த்திகேயா!

பல்லுக்கு ஆலுண்டு சொல்லுக்கு நாலுண்டு

பக்தர்க்கு வேலுண்டுகாண்!

அஞ்சற்க! என்றுந்தன் கஞ்சக் கரங்கொண்டு

நெஞ்சுக்கு நீயருள்தா

முல்லைப் பூ நாணிட முறுவலைக் காட்டிடும்

முழுமுதற் கடவுளே,இப்

பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

பொலியு சிங்காரவேலே! (6)

முருகனே உன்னிடம் நெருங்கியே ஓரடி

உன்னன்பர் வந்துவிட்டால்

முன்னின்று வந்துநீ இன்னருள் தந்திடும்

தன்மையோன் என்றுரைப்பார்

உருகிடும் உள்ளமும், பெருகியே வெள்ளமாய்

ஓடுமென் விழியின் நீரும்

உந்தன் உளத்திலே கந்தனே உண்மையாய்

உறைக்கவே இல்லையோ சொல்!

இரும்பினால் ஆனதோ, இறுகிடும் பாறையால்

ஆனதோ உந்தனுள்ளம்?

இங்குநான் பட்டிடும் இன்னலும் அங்குனக்(கு)

இன்பமாய் ஆகுமோசொல்!

வருமலை மோதிடும் கரையினில் விளையாடும்

வலைஞர்கள் வாழுமூராம்

பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

பொலியு சிங்காரவேலே! (7)

004A2242-B27F-4816-BD13-146D13E1E34D

பன்னிருகை வேலனே, பரமனவன் பாலனே,

பழகுதமிழ்ச் சீலனே என்

பழவினைகள் யாவையும் அழகொழுகு தேவனே

பார்த்துநீ தீர்த்தருள்வாய்

என்னிருகை கூப்பியே உன்னருளை வேண்டினேன்

எழிலரச னேயருள்வாய்!

எப்பொருளும் எண்ணாது மெய்ப்பொருள் உன்னையே

ஏத்துகின் றேனிறைவா!

சின்னக் குழந்தையாய் சீரான நடையிட்டு

சிரித்துநீ ஓடிவாராய்

மங்கிடும் மாலையில் எங்குமிருள் சூழ்கையில்

மயக்கியே அன்புதாராய்!

சென்னையாம் நகரிலே அன்னையும், பின்னையும்

சேர்ந்தருள் செய்தபுரியாம்

பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

பொலியு சிங்காரவேலே! (8)

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அழகுவேலன் விருத்தம்

 1. வல்லமையில் சிங்கார வேலன் அஷ்டகம் படித்தேன். மகிழ்ந்தேன். அது குறித்து நான் எழுதியதை வல்லமையில் பதிவேற்ற முடியவில்லை. டெக்னிக்கல் பிரச்சினை!
  இஷ்டதெய் வத்துக்கோர் அஷ்டகம் பாடினாய்
  எழிலோ வியம்தீட்டி னாய்
  இனிமையுன் கவிதையே சரவணப் பொய்கையே
  எழுந்தருளு வான்வேல வன்
  நிஷ்டையில் காண்பதை நேரிலும் காணவே
  நிகழ்த்தினாய் கவிதையோ கம்
  நித்தமும் வேலன்ப தத்திலே வைத்தவுன்
  சித்தமே சாட்சியா கும்
  கே.ரவி

  Thanks Ravi,

  On your behalf, I am uploading it..

 2. இஷ்டதெய் வத்துக்கோர் அஷ்டகம் பாடினாய்
  எழிலோ வியம்தீட்டி னாய்
  இனிமையுன் கவிதையே சரவணப் பொய்கையே
  எழுந்தருளு வான்வேல வன்
  நிஷ்டையில் காண்பதை நேரிலும் காணவே
  நிகழ்த்தினாய் கவிதையோ கம்
  நித்தமும் வேலன்ப தத்திலே வைத்தவுன்
  சித்தமே சாட்சியா கும்
  கே.ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *