கே.ரவி

என்னிடம் மிகுந்த பாசத்தோடு பழகியவர், அன்பே வடிவான கவியரசி செளந்தரா கைலாசம் அம்மையார். பத்து ஆண்டுகளுக்கு முன், ‘மின்னற் சுவை‘ என்ற என் நூலுக்கு நான் அவர்களுடைய அணிந்துரை வேண்டுமென்று கேட்ட போது கண்நோயால் பாதிக்கப்பட்டுப் படிக்க முடியாத நிலையில் தாம் இருந்த போதும், மறுக்காமல், தருகிறேன் என்று சொல்லிக் கவிமாமணி, புதுவயல் செல்லப்பன் அவர்களைக் கொண்டு முழு நூலையும் படிக்கச் சொல்லிக் கேட்டு, மிக நல்ல அணிந்துரை வழங்கினார். அவருடைய அன்பை நான் மறக்க முடியுமா?

அவர் ஒரு சிறந்த கவிஞர். கவிதையின்மேல் அளவு கடந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தெய்வ பக்தியும், தேச பக்தியுமே தம் இரு கண்களாகக் கொண்டிருந்தார். இந்திய சுதந்திரப் பொன்விழாவை ஒட்டி வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பில் ஒரு கவியரங்கம் ஏற்பாடு செய்த போது அவரை அழைக்க நான் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது, என்னைத் தம் இல்லத்தின் பூஜை அறைக்குள் அழைத்துச் சென்று அங்கே வைக்கப் பட்டிருந்த ஒரு கலசத்தைக் காட்டினார். அதில் வெறும் மண் இருந்தது. “தம்பி, இது வெறும் மண் இல்லீங்க. நான் இந்த பாரத நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அங்கிருந்து ஒரு பிடி மண் எடுத்து வந்து இந்தக் கலசத்தில் போட்டு வைப்பேன். இது எப்பொழுதும் பூஜை அறையில்தான் இருக்கும். இதை நான் பாரத மாதாவாகவே ஆவாகனம் செய்து பூஜை செய்து வருகிறேன்” என்று அவர் சொன்னதும் நான் நெகிழ்ந்து போனேன். அவர் எப்போதும் சிரித்த முகமாகவே காணப்பட்டதற்கு, அவருடைய அசைக்க முடியாத தெய்வ பக்தியே காரணம். அவரே கவிதையிலேயே இதைச் சொல்கிறார்:

சுடும்போதும் சிரிப்பேன் துன்பம் சுட்டபின் தென்றல் வந்து

தொடும்போதும் சிரிப்பேன் தீய சொல்லினால் நெஞ்சில் காயப்

படும்போதும் சிரிப்பேன் இந்தப் பாரெலாம் போற்றி மாலை

இடும்போதும் சிரிப்பேன் என்றன் இதயமே இறைவன் சோலை

கொதிக்கும் சுண்ணாம்புக் காளவாயில் நின்று கொண்டு, சிவபெருமான் திருவடியை எண்ணித் தம் ஐம்புலன்களுக்கும் அது குளிர்ச்சி தந்த பரவசத்தை ஒரு பெருங்கிழவர் பாடினாரே, அந்தப் பாட்டு இதில் எதிரொலிக்கிறதே!

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே

1999, கார்கில் போர் நடந்த போது, நம் வீரர்களுக்கு உற்சாகமும், உத்வேகமும் தர வானவில் பண்பாட்டு மையம் ஒரு முழுநாள் கவியரங்கம் நடத்தியது. அந்தக் கவியரங்கத்தில், சென்னையில் இருந்த முன்னணிக் கவிஞர்கள் அத்தனைப் பேரும் கலந்து கொண்டு கவிதை படித்தார்கள். அந்தக் கவியரங்கம் முழுதும் ஒலிப்பேழையாகப் பதிவு செய்யப்பட்டது. அதன் நூறு பிரதிகளை எடுத்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்று தீவுத் திடலுக்குப் பின்புறம், ஜிம்கானா கிளப்புக்கு எதிரில் உள்ள போர்ப்படைத் தளபதி அலுவலகத்தில் தலைமைத் தளபதியைச் சந்தித்து அவரிடம் நேரில் வழங்கத் திட்டமிட்டோம். அந்த ஒலிப்பேழைகளைப் போர்முனையில் இருந்த தமிழ் தெரிந்த வீரர்களுக்கு கொண்டு சேர்க்குமாறு அவரிடம் கேட்டுக் கொள்ளவும் தீர்மானித்தோம். நடக்க முடியாமல் கால் எலும்புகள் பாதிக்கப்பட்டிருந்த போதும் கவியரசி அம்மையார் தாமே முன் வந்து, அந்த ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கிப் படைத்தளபதியிடம் அந்தப் பேழைகளைத் தந்த நிகழ்ச்சியை மறக்கவே முடியாது.

1

நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதை முழக்கங்களைக் கொண்ட இசைப்பேழைகளைப் போர்முனைக்குக் கட்டாயம் அனுப்பி வைப்பதாக அன்றைய படைத்தளபதி உறுதியளித்தார்.

2

‘கவிதைகளைப் போர்முனைக்கு அனுப்பிய முதல் ஆள் நீதானப்பா’ என்று புத்தி சிகாமணி முணுமுணுக்கிறான்.

‘அப்பா சிகாமணி, முன்காலத்தில் போர்க்களத்திலேயே நின்று புலவர்கள் போர்ப்பரணி பாடியிருக்கிறார்கள். ஜயங்கொண்டான் என்ற புலவர் அப்படிப் பாடிய காவியம்தான் ‘கலிங்கத்துப் பரணி’. சாதாரண வார்த்தைகளை விடக் கவிஞர்களின் கவிச்சொற்களுக்கு வலிமை அதிகம் என்பதுதான் என் கட்சி. ‘வல்லமை’ மின்னிதழில் நம் இலக்கியப் பேழைக்கு என்ன பெயர் கொடுத்திருக்கிறார்கள் பார்த்தாயா? சொற்சதங்கை! மற்றவர் நாவில் நடக்கும் சொற்கள், கவிஞர் நாவில் மட்டுமே நடனமாடும். அந்தத் தாண்டவத்தை, அதுவும் ருத்ர தாண்டவத்தை நம் போர் வீரர்கள் கண்டால், போர்முனையில் அவர்களுக்கு மேலும் வீர உணர்ச்சி உண்டாகும். நீ ஏட்டுச் சுரைக்காய், இதெல்லாம் உனக்கு விளங்காது, விடு’ என்கிறேன்.

3

இந்த விவாதத்தை ஒதுங்கி நின்று கேட்டுக் கொண்டிருந்த மனோன்மணி திடீரென்று குரல் எடுத்துக் கலிங்கத்துப் பரணியிலிருந்து ஒரு பாடலைத் தன் கணீரென்ற குரலெடுத்துப் பாடுகிறாள்.

பொருதடக்கை வாளெங்கே மணிமார்(பு) எங்கே

போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத

பருவயிரத் தோளெங்கே எங்கே என்று

பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்

மனோன்மணியின் குரல் அதிர்வுகளுக்கு ஏற்றவாறு பைரவியின் நடன அசைவுகள் நிழற்படங்களாக, என் நினைவுத் திரையில் மெல்ல . . மெல்ல. .! மெய்சிலிர்க்கிறது! அட, ஒரு நோக்கில் மனோன்மணிதான் பைரவியோ!

சிகாமணி சொல்கிறான்: ‘நீர் சொன்னதெல்லாம் எனக்கு வெளங்கலே. ஆனா அவ பாடினதும் புரிஞ்சுடுத்து ஓய், பாட்டு எப்படி வீர உணர்ச்சியத் தூண்டும்னு. மயிர்க்கூச்செறியுது!!’

எனக்குள் இருந்து பாரதியின் குரல் ஒலிக்கிறது:

பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா

. . . . . . .

பூதங்கள் ஒத்துப் புதுமைதரல் விந்தையெனில்

நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ!

நான் கவிதை எழுதத் தொடங்கிப் பல நாட்கள், இல்லை, பல ஆண்டுகள் கழித்தே பாரதிக்கு நான் முழுமையாக ஆட்பட்டேன். நான் விரும்பிய கவிஞர்களில் ஒருவனாக மட்டுமே இருந்த அவன் என் நெஞ்சின் நாயகனாக விஸ்வரூபம் எடுத்தது ஒரே கணத்தில். அந்த தரிசனத்தை எனக்கு முதலில் சூசகமாகக் காட்டியவர் கவிமாமணி தேவநாராயணன். அது நடந்தது சென்னை ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில், 1971-ஆம் ஆண்டு. பிறகு அந்த தரிசனத்தில் என்னை முழுமையாக மூழ்கச் செய்தவர் அருமைக் கவிஞர் கண்ணதாசன்; அது நடந்தது 1975-ல் என்று நினைக்கிறேன். இந்த இரண்டு தரிசனங்களையும் பற்றி விரிவாகச் சொல்ல வேண்டும்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.