சான் ஃபிரான்சிஸ்கோ பயணக்கட்டுரை – பாகம் 1

1

செம்பூர் நீலு

நாப்பா வாலி

அமெரிக்க சுதந்திர தின விடுமுறை – ஜூலை 4ம் நாள். மனைவி, மகன் மருமகளுடன் சான் ஃபிரான்சிஸ்கோவின் 80 மைல் தொலைவிலூள்ள “நாப்பா வாலி” என்று அழைக்கப்படும் சுற்றுலா மையத்திற்கு சென்றோம். இந்த “நாப்பா வாலி” தரமானதும் விலை உயர்ந்த “வைன்” தயாரிப்புக்கு உலக அளவில் பேர் பெற்றது.

Picture 1

1858ம் வருடம் “ஜான் பச்செட்” என்பவர் ஒரு சிறிய வைன் தயாரிப்பை தொடங்கி ஒரு காலன் வைன் 2 டாலருக்கு விற்பனை செய்யத்துவங்கினார். பின்னர் 1861ம் ஆண்டு முதல் வைன் தயாரிப்பு தொழிலகம் (வைனெரி) “சார்ல்ஸ் கர்க்” என்பவரால் செயின்ட் ஹெலீனாவில் துவங்கப்பட்டது.

Picture 2

18ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் திராட்சை பயிரும் வைன் தயாரிப்பும் ஒரு வீழ்ச்சியை அடைந்தது. மேலும் 1920ம் ஆண்டு அமெரிக்க அரசின் மது ஒழிப்பு சட்டத்தினால் வைன் தொழிலகங்கள் மூடப்பட்டது. 1939ம் ஆண்டு வைனை முக்கிய கருத்தாகக் கொண்டு நாபா வாலி ஒரு சுற்றுலா நகரமாக புகழ் பெறத்தொடங்கியது. 1976ம் ஆண்டு உலகத்தில் தரம் வாய்ந்ததும் விலை உயர்ந்த வைன் தயாரிக்கும் இடமாகப் பெயர் பெற்றது. தற்சமயம் 450க்கும் மேற்பட்ட வைனரிகள் திராட்சை பயிர் / மற்றும் வித விதமான வைன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. வார இறுதி நாட்களிலும், மற்ற விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

மற்ற ஒரு சிறப்பு அம்சமாக விளங்குவது “வைன் ட்ரெயின்”
Picture 3

10 பெட்டிகள் கொண்ட இந்த ஸ்பெஷல் ட்ரைன் 1915-17 ம் வருடம் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகளை கொண்டது. இதில் டைனிங் கார், பவர் கார், பாண்ட்ரி கார், ஸ்பெஷல் கார் போன்றவை அடங்கும். 36 மைல் பிரயாணம், 3 மணி நேரம் பயணம்.  “மெக்ஸின்டரி தெரு” ஸ்டேஷனில் புறப்பட்டு வடக்கு திசையாக செயின்ட் ஹெலீனா வரை சென்று திரும்பும் இந்த ட்ரைன் வழியில் சில குறிப்பிட்ட வைனரிகள் இருக்கும் இடத்தில் நிற்கும். பயணிகள் இறங்கி வைனரியை சுற்றிபார்க்க அனுமதிக்கப் படுகிறார்கள். பின்னர் அங்கு தயாரிக்கும் வைன் வகைகளை ருசி பார்த்துவிட்டு திரும்பவும் ட்ரைனில் பயணம் செய்து புறப்பட்ட இடத்திற்கு வந்து சேருகிறார்கள். ட்ரைனிலேயெ ஸ்பெஷல் கோர்மே உணவும் வழஙகப்படுகிறது. இந்த பயணதிற்குக் கட்டணம் ஒருவருக்கு 200 டாலர் முதல் 350 டாலர் தான். தலை சுற்றுகிறது அல்லவா. ட்ரையினை வெளியிலிருந்து பார்த்துவிட்டு  நாபா வாலி டவுனான “காலிச்டோக” என்ற இடத்திற்குச் சென்றோம். 170 எக்கர் பரப்பளவில் “காஸில் டி அமொரோஸா” என்ற வைனரி இங்கு தான் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

காஸில் டி அமொரோஸா
Picture 4

இந்த வைனரி ஒரு புகழ் பெற்ற இத்தாலியை சேர்ந்த “டாரில் சட்டூயி” என்ற வைன் தொழிலதிபரால் உருவாக்கப்பட்டது. உலகத்தின் பல புகழ் பெற்ற புராதன கோட்டைகளை சுற்றிப் பார்த்து கடைசியில் இத்தாலியிலுள்ள 12ம் நூற்றாண்டு டஸ்கன் கோட்டையின் மாடலாக இந்த வைனரியை நிறமாணிக்க 1994ம் ஆண்டு அடிக்கல் நாட்டி துவங்கப்பட்டது.  மாரத்தான் மாதிரி கோட்டையை கட்டிமுடிக்க 13 ஆண்டுகள் ஆயிற்று. 2010ம் ஆண்டு பொது மக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்

Picture 5

121,000 சதுர அடி பரப்புள்ள இந்த கோட்டையில் 107 அறைகள் (90 அறைகள் வைன் தயாரிப்பிற்கும் அதை மர பாரெல்களில் அடைத்துவைத்து பராமரிப்பதற்கும் உபயோகபடுத்தப்படுகிறது) ஒரு பெரிய வரவேற்பறை அதன் சுவர்களில் புராதன இத்தாலியன் பெயிண்டிங்குகள், ரோமானிய பாணியில் அமைக்கப்பட்ட தளங்கள், கோட்டையின் மதில் சுவர்களுக்காக 8,000 டன் எடை கையுளியால் செதுக்கப்பட்டு உருவாக்கிய கருங்கற்கள், செங்கல்கள், கூரை ஓடுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. புராதன கால படிகட்டுக்கள், புராதன மாதாகோவில், பாதாள சிறைச்சாலை, பார், சித்திரவதை அறை. நிலத்திற்கு கீழெ 4 லெவெல் அறைகள்,

50 பேர் அமரும் டைனிங் டேபிள்

Picture 6

நிலத்திற்கு மேல் 4 லெவெல் மாடி அறைகள், மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்கு ஏற்றால் போல் ஒளியளிக்கும் மின்சார விளக்குகள். கோட்டை அறைகளில் நுழையும் போதே எதோ புராதன கால அறைக்குள் செல்லுகிறோமோ என்ற ஒரு பயம் கலந்த உணர்வு. 50 பேர் வரிசையாக இரண்டு புறமும் அமரக்கூடிய மர டைனிங் டேபிள்
750 காலென் வைன் வைப்பதற்கான மர பாரல்கள் இன்னும் எத்தனை எத்தனையோ.

750 காலன் மர பாரல்
Picture 7
வைன் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை ஒரு ஆடியொ விஷுவல் திரைப்படம் மூலம் பெரிய ஃப்ளாட் டி.வி. ஸ்க்ரீனில் விளக்குகிறார்கள். என்னதான் வைன் எவெர்சில்வெர் பாத்திரஙளில் தையார் செய்தாலும் அதை மர பாரல்களில் தான் சேமித்து வைக்கிறார்கள். அதில் தான் அதன் சுவை மாறாமல் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெடாமலிருக்கும்

வைன் பாட்டில்கள்
Picture 8   

Picture 9
புராதன கை வண்டி
Picture 10
வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பார்த்து அனுபவிக்கவேண்டும். 35 டாலர் கட்டணம் ஒருவருக்கு – கோட்டையை சுற்றிப் பார்ப்பதற்கும் 4 விதமான வைன்களை ருசிப்பதற்கும். அதற்கும் மேல் அவரவர்களுடைய சக்திக்கும் பர்சின் கனத்திற்கும் ஏற்றால் போல் பரிசுப் பொருட்களையும் வைன் பாட்டில்களையும் வாங்கலாம். நான் ஒரு பாட்டில் “வைன் ஸீட் ஆயில்” வாங்கினேன். இதை கலந்தால் பச்சை காய்கறிகள் ஸாலடின் ருசி இன்னும் அதிகரிக்கும்.

Picture 11

4 விதமான வைனை ருசித்து ரசித்து ஸிப் செய்துவிட்டு கோட்டையின் வெளியில் இருக்கும் புல் வெளியில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு. பின்னர் 50 மைல் தொலைவில் இருக்கும் “உக்காய்” நகருக்கு பயணமானோம். புகழ் பெற்ற 1000 உருவச்சிலைகள் கொண்ட புத்தர் கோவில் இருக்கும் இடம். அதைப் பற்றி பாகம் 2ல் புகைப்படஙளுடன் விவரிக்கிறேன்.

 

 

நீலகண்டன் (செம்புர் நீலு)
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
09-07-2014

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சான் ஃபிரான்சிஸ்கோ பயணக்கட்டுரை – பாகம் 1

  1. சான் பிரான்சிஸ்கோ (ஸ்பானிஷ் மொழியில்) என்றால் செயின்ட் பிரான்சிஸ்கோ அல்லது புனித பிரான்சிஸ் என்று பொருள். இதைப் பற்றியும் சிறிது கூறியிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.