விசாலம்

குரு பூர்ணிமா என்றாலே என் மனதில்  வந்து நிற்பது அந்த   தத்தாத்ரேயர்தான். சம்ஸ்கிருதத்தில் பூர்ணிமா என்பது நமது மொழியில் பௌர்ணமி  என்கிறோம். சூரியனின் ஒளி சந்திரன் மேல் விழுகிறது . சந்திரனுக்கு தனக்கென்று ஒளி ஒன்றும் இல்லை. சூரியன், பூமியின் நிழல்  சந்திரன் மேல் விழ  நம் கண்களுக்கு சந்திரன் பல பிறைகளாக  தோற்றமளித்து பின் பௌர்ணமி நிலவாக தெரிகிறது.

ஜோசியத்தில் சூரியன் ஆத்மாவாகவும் சந்திரன் மனமாகவும் சொல்லப்படுகிறது. இனி இதை நம் உடலில் வைத்துப்பார்க்கலாம். உடலில் இருக்கும் ஆன்மா எப்போதும் ஒளிவீசிக்கொண்டே இருக்கிறது.  அந்த ஒளியை உணர்ந்து கொள்பவர்கள்தான் மகானாகத் திகழ்கிறார்கள். சாதாரண மனிதன் இதைக்காணமுடிவதில்லை, ஏனென்றால் மாயை அந்த ஒளியை மறைத்துக்கொண்டிருக்கிறது. அந்த மாயையை அகற்றி உள்ளிருக்கும் ஆன்மாவைக்கண்டுக்கொள்ள ஒரு குரு தேவைப்படுகிறது.  மாயை என்பது ஒரே  இருட்டாக சரியான இடம்  போகத்தெரியாமல்  ஒருவனை திண்டாட வைக்கிறது. இதனால் அவன் அந்த மாயவலையில் மாட்டிக்கொண்டு வெளியே மீண்டுவரமுடியாமல்  தத்தளிக்கிறான். மனதுக்குள் இருக்கும் இந்த இருளைப்போக்கி ஒளியை நமக்குக் காட்டி சத் .சித் ஆனந்தத்தை  அனுபவிக்கச்செய்பவர் தான் குரு.

நாம் பல கலைகளைக் கற்றுக்கொள்கிறோம். அவைகளைப் போதிப்பவர் ஆசிரியர்கள். சம்ஸ்கிருதத்தில் ஆசார்யா என்று வரும்.  ஒவ்வொருவருக்கும் ஒரே குரு தான் இருக்க முடியும் ஆனால் ஆசார்யார்கள் பலர் இருப்பார்கள். ஒருவருக்கு இரண்டு மூன்று குருமார்கள் இருந்தால் அவர்கள் கொடுக்கும் தீட்சை வேறுபடும். .மந்திரம் வேறுபடும்.  அணுகுமுறையும் மாற வாய்ப்புண்டு. ஆகையால் ஒரே குருவைத்தேடி கடைசிவரை அவரையே ஆராதிக்க வேண்டும். ஆனால் சரியான குரு கிடைத்து  அவரால் பல நன்னமைகள் அடைந்து சத்சித் ஆனந்தம் அனுபவிக்கும் பாக்கியம் உடையவர் மிகச்சிலரே .

நான் முதலில் சொன்ன ஸ்ரீ தத்தாத்ரேயர் தனக்கென்று தனி குருவைத்தேடவில்லை. அவர்    இயற்கையிலிருந்தே  பல குருவைத் தேர்ந்தெடுத்தார். மும்மூர்த்திகளின் சங்கமமாக அத்ரி முனிவரின் தர்மபத்தினி அனுசுயா மூலம் அவதரித்த தத்தாத்ரேயர் சிறு வயதிலிருந்தே பெரிய ஞானியாக திகழ்ந்தார். அவரைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். தத்தாத்ரேயர் அவர்களைத் தவிர்க்க முயற்சிப்பார். ஒரு தடவை அவர்  ஒரு நதியில் ஸ்னானம் செய்ய இறங்கினார். ஆனால் அவர் நதியிலே மூழ்கி இருந்து மூன்று நாட்கள் வெளியில் வரவில்லை. மூன்றாவது நாள் அவர் வெளியில் வந்ததும் பார்த்தால்  அந்தக்கூட்டம் அப்படியே நின்றபடி இருந்தது. திரும்பவும் மூழ்கி தனது சக்தியினால் ஒரு கையில் மது புட்டியும் இன்னொரு பக்கம் ஒரு மாதுவை அணைத்தபடி  வெளியே வந்தார். அந்தக்கூட்டம் அவர் யோகா சக்தியிலிருந்து மாறி மாயையின் வலையில் விழுந்து விட்டதாக நினைத்து அவரை விட்டு விலகியது. அதன் பின் தத்தாத்ரேயர் தன்னுடைய உடலில் இருந்த ஒரு துண்டையும் வீசிப்போட்டுவிட்டு அவதூதராக மாறினார். பின் வேதாந்தத்தைப்பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். அவருடைய கீதை  “அவதூத கீதை” என பிரசித்தி பெற்றது . இதைப் படிக்க ஆத்மஞானம் பற்றி அநேக விஷ்யங்கள் தெரிய வரும் .

thathathreyarஒரு தடவை மன்னர் யது  தத்தாத்ரேயரைப் பார்த்தார்…,

“சுவாமி  நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் காரணம் என்னவோ? அந்த ரகசியத்தை எனக்கும் சொல்ல வேண்டும். தங்கள் குரு யார் ?”

“என் குரு என் ஆன்மாதான். அந்த ஆன்மாவை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன் அதுதான் என் ஆனந்தத்தின் காரணம். தவிர குரு என்று சொல்லப்போனால் இருபத்தினாலு குரு உள்ளனர். அவர்கள் மூலம் என் அறிவு வளர்ந்தது”

“அவர்கள் யார் யார் என தெரியப்படுத்துங்கள் “

“அவை  பூமி,  தண்ணீர், காற்று,  நெருப்பு,  ஆகாயம், நிலா, சூரியன், புறா , மலைப்பாம்பு, கடல் , விட்டிற்பூச்சி, வண்டு , தேன்  ,ஆண்யானை, மான், மீன், பிங்கலை ,  பறவை, குழந்தை , மாது , பாம்பு,  அம்பு செய்பவன், சிலந்தி , குளவி”

இவைகளிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களையும் விளக்கமாக சொன்னவுடன் மன்னர் யதுவும்  எல்லாம் துறந்து தவம் நாடிச்சென்றார்.

குரு பிரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர:
குரு சாட்சாத் பரப்பிரும்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம 

படம் உதவிக்கு நன்றி:  http://santhipriyaspages.blogspot.com/2011/10/blog-post_05.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *