மன நல ஆலோசனை: கேள்வி பதில்கள்
–கார்த்திகேயன், விமலதாரணி.
கேள்வி : 1
என் மகனுக்கு வயது 7. இரண்டாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் விருப்பமின்றி இருக்கிறான். படிக்கச் சொன்னாலே பசிக்குது சாப்பிட்டு படிக்கிறேன் என்றோ, டாய்லட் போக வேண்டும் என்றோ எதாவது சாக்கு சொல்வான். நானும் என் கணவரும் வேலை முடித்து வர இரவு ஏழாகி விடுவதால் ட்யூஷன் சேர்த்துள்ளோம். அங்கும் இப்படித்தான் செய்கிறானாம். ஞாபகமும் குறைவாக இருக்கிறது. அவனுக்குப் படிப்பில் ஆர்வம் வர என்ன செய்ய வேண்டும்?
பதில் :
உங்கள் குழந்தைக்கு படிப்பில் ஆர்வமில்லாதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பள்ளி ஆசிரியரை சந்தித்து அவன் நடவடிக்கைகளை விசாரியுங்கள். குழந்தையின் ஐக்யூ குறைவாக இருந்தாலும் அவனுக்கு கற்கும் திறன், சிந்திக்கும் மற்றும் நினைவு கொள்ளும் திறன் குறைவாக இருக்கும். இதனைப் பள்ளி ஆசிரியரும் உறுதி செய்தால் அவனை நல்ல சைக்காலஜிஸ்டிடம் அழைத்து செல்லுங்கள் அவனுக்கு ஐக்யூ டெஸ்ட் செய்ய வேண்டும். ஐக்யூ குறைவாக இருந்தால் ஆக்குபேஷனல் தெரபி கொடுக்க வேண்டியிருக்கும். மேழும் அவனுக்கு டிஸ்லெக்சியா பிரச்சனை உள்ளதா என்பதற்கான டெஸ்ட்களை செய்து அதற்கான தீர்வை கூறுவார்கள். எல்லாம் சரியாக இருக்குமானால் குழந்தையுடன் நீங்கள் செலவிடும் நேரம் குறைவு என்றோ, அவனுக்கு பயம், பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகள் இருப்பது இப்பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம். குழந்தைக்கு சிறு சிறு இலக்குகளை நிர்ணயித்து அதை அடைந்தால் பரிசுப் பொருள் கொடுங்கள். அவன் மனதில் தோல்வி பயத்தை போக்கி வெற்றி பெற ஊக்கமளியுங்கள். இசை நடனம் போன்ற ஒன்றை கற்றுக் கொடுங்கள். நன்கு வேர்க்கும்படியான விளையாட்டு ஒன்றில் சேர்த்து விடுங்கள் இவையெல்லாம் அவன் திறனை அதிகரித்து படிப்பில் கவனம் செல்ல உதவும்.
கேள்வி : 2
நானும் என் கணவரும் நல்ல பணியில் இருக்கிறோம். எங்களுக்கு ஒரே மகள். செல்லமாக அவளை வளர்த்திருக்கிறோம். அவள் 11 வகுப்பு படிக்கிறாள். அவள் கடந்த சில மாதங்களாக எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறாள். கேட்டால் கோபத்தில் பொருட்களை உடைக்கிறாள். வீசி எறிகிறாள். அவளை நினைத்து கவலையாக இருக்கிறது. இதற்கு முன் அவள் இப்படி இல்லை.
பதில் :
உங்கள் மகளைக் செல்லமாக வளர்த்திருக்கிறீர்கள் ஆனால் சுதந்திரமாக வளர்க்கவில்லையென்றே தோன்றுகிறது. கடந்த சில மாதங்களாகத்தான் அவள் இப்படி இருக்கிறாள் என்பதால் அவளுக்கு ஏதோ வெளியே சொல்ல முடியாத பிரச்சனை இருக்கலாம். ஒரே குழந்தையாக இருப்பவர்களுக்கு தன் பொருளையோ, உணர்வுகளையோ பகிர்ந்து கொள்வது சற்று சிரமம் தான். இதை குழந்தையிலிருந்தே பெற்றோர் சொல்லி வளர்க்க வேண்டும். யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாததாலேயே உங்கள் மகள் கோபப்படுகிறாள். அவளிடம் மனம் விட்டுப்பேசுங்கள். அவள் நடத்தையை குறை சொல்லாமல் பொறுமையாக இருந்து பாருங்கள். அவள் தோழிகளிடம் பேசிப்பாருங்கள். அவளுக்கு என்ன பிரச்சனை என்றாலும் அதை சரி செய்யாலாம் என்ற நம்பிக்கை கொடுங்கள். அவளாக தன் பிரச்சனை சொன்னால் ஒழிய நீங்களாக துருவித்துருவிக் கேட்காதீர்கள். உங்களின் பக்குவமான அணுகுமுறையினால் ஒன்று அவள் பிரச்சனை உங்களிடம் பகிர்ந்து கொள்வாள் அல்லது தானாகவே சரி செய்துக் கொண்டு சகஜமாகி விடுவாள்.
படம் உதவிக்கு நன்றி: www.123rf.com