இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(115)

–சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !
இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்..

பரபரப்பான வாழ்க்கை, நவீன விஞ்ஞான யுகத்தின் அதியுயர் கட்டத்தில் நாம் இன்று நின்று கொண்டிருக்கிறோம்.

இருபத்தி நான்கு மணிநேர ஊடக யுகமிது. பிரசித்தி பெர்றவர்களின் 24 மணிநேர நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து எங்கே ஒரு சிறு தளும்பல் ஏற்படுகிறதோ அதனை உடனே அம்பலத்திற்குக் கொண்டு வருவதே இவ்வூடகங்கள் தமது திறமைகளுக்கு விடுத்துள்ள சவாலாகும்

இத்தகைய ஒரு சூழலில் மிகவும் பிரபல்யமடைந்த கலைஞர்கள், பிரசித்திப் பெற்றவர்களின் பிள்ளைகள் இவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பது மிகவும் நுணுக்கமாகக் கவனிக்கப்பட வேண்டியதொன்றே.

உதாரணமாகப் புகழ் பெற்ற கலைஞர் ஒருவருக்கு மகனாகவோ அன்றி மகளாகவோ பிறந்து விட்டால் சாதாரணமானவர்கள் அனுபவிக்கும் சாதாரண மகிழ்ச்சியைக் கூட அனுபவிக்க முடியாமல் போய்விடுவது ஒரு துரதிர்ஷ்டமே !

இத்தகைய சமுதாய அழுத்தங்களுக்குள்ளாகி பல பிரபல்யமடைந்தவர்கள் போகக்கூடாத வழிகளில் போய் தமது வாழ்வைச் சீரழித்துக் கொள்வதைக் கண்கூடாகப் பார்க்கக் கூடியதாக உள்ளது.

இங்கிலாந்தின் பிரபல்யமான பொப்பிசைப் பாடகர் “பாப் கெல்டோவ் (Bob Geldof) என்பவரைப் பற்றி அநேகம் பேர் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகின் பல ஏழ்மை நாடுகளின் ஏழ்மை நிலையைப் போக்க உதவும் முகமாக பல நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டிக் கொடுத்துப் பெயர் பெற்றவர்.

அவரது மனைவியும் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் பாடகியுமாக இருந்தவர். அவர் பெயர் “போலா யேட்ஸ் (Paula Yates) அவர் கூட தனது பிரபல்யம் வாழ்க்கையில் கொடுத்த அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போதை வஸ்துகளுக்கு அடிமையாகி இருந்தார்.

பின்பு ஒருநாள் யதேச்சையாக அளவுக்கதிமாக போதை வஸ்துகளை உட்கொண்டதால் மரணமடைந்தார்.

Peachesஇவர்களது மகளின் பெயர் “பீச்சஸ்” (Peaches) இவர் கூட சில மாதங்களுக்கு முன்னால் தன் தாயைப் போன்று அளவுக்கதிகமாகப் போதை வஸ்துகளை உட்கொண்டதால் மரணமடைந்தார்.

25 வயது நிரம்பிய, இரண்டு சிறு குழந்தைகளுக்குத் தாயான இவரின் கணவர் கூட ஒரு பிரபல்யமான இசைக்கலைஞர்.

இவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் “த ஸ்பெக்டெட்டர்” (The Spectator) என்னும் ஒரு பிரபலமான இதழுக்கு இவர் பேட்டியளித்திருந்தார். அப்பேட்டி இவர் இறந்து சில மாதங்களின் பின்னால் அவரது மரண விசாரணை முடிந்த பின்னால் இப்பொழுதே பிரசுரிக்கப்பட்டுள்ளது. அப்பேட்டியில் பேட்டி கண்டவரிடம் “நான் இளமையானவள் ஆனால் வாழ்க்கையில் எது கொடியது தெரியுமா? எம்மைப் பற்றி மக்கள் மனதில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட பிழையான அபிப்பிராயங்களே” என்று தனது மன ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல தனது தாயின் அகால மரணம் தனக்குக் கூட மிகவும் அவப்பெயரைத் தேடித்தந்துள்ளது என்று கூறுகிறார். அவரைத் தெரிந்த அனைவரும் இவருக்கும் இவரது தாயாரைப் போன்றே முடிவு ஏற்படும் என்று முடிகட்டி விட்டார்கள் என்றும் கூறியுள்ளார். தன்னைப் பற்றிய தப்பபிப்ராயம் கொண்டவர்களின் தன் மீதான பார்வையை மாற்றியது தன்னிரு குழந்தைகளே என்றும் கூறியிருக்கிறார்.

போதைவஸ்துக்களின் மிகவும் ஆபத்தான “கெரோயின்” (Heroin) என்றழைக்கப்படும் போதை வஸ்து அதை உபயோகிப்போர் மீது கொண்டுள்ளா அழுத்தமான பிடியைப் பற்றி விபரிக்கும் இவர், இப்போதைவஸ்து பல அரும்பெரும் கலைஞர்களின் வாழ்வைச் சீரழித்ததை எண்ணிப் பார்க்கும் போது தனக்கு வேதனையாக உள்ளது என்றும் கூறியிருந்திருக்கிறார். இப்படியெல்லாம் தனது வாழ்க்கையின் பிரச்சனைகளை புரிந்து வைத்துக் கொண்ட ஒருவரே இப்போதைவஸ்துவுக்கு அடிமையாகி 25 வயதே நிரம்பிய நிலையில் இரு குழந்தைகளைப் பரிதவிக்க விட்டுச் சென்றது போதைவஸ்துகளின்பாவனையின் ஆபத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் உழைத்து முன்னேறி பிரபல்யமடைந்து விட்டு பின் அந்த வாழ்க்கையை போதைவஸ்துவிற்கு அடிமையாக்குவதின் அநியாய விளைவினை எமது இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இம்மடலின் அடிப்படை நோக்கமாகும்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *