Blog

  • இந்த வார வல்லமையாளர்!

    டிசம்பர் 22, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு எழுத்தாளர் வையவன் அவர்கள் 

    வையவன் படம்

     

    வல்லமை மின்னிதழின் இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் வல்லமையின் நலம்விரும்பிகளில் ஒருவரும், இந்த வாரம் தனது பவளவிழாவைக் கொண்டாடவிருக்கும் எழுத்தாளர் திரு.வையவன் அவர்கள். இவரை வல்லமை விருது தேர்வுக் குழுவினரின் பார்வைக்குக் கொண்டு வந்தவர் வல்லமையின் அறிவியல், இலக்கிய எழுத்தாளரான திரு. ஜெயபாரதன் அவர்கள்.

    எழுத்தாளர் வையவன் என்ற பெயரில் அறியப்படும் திரு. எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். இவரது முத்தாத்தா முருகையா அவர்களின் பெயரை வைக்குமாறு அவரே ஆசீர்வதித்ததன் காரணமாக ‘முருகேசன்’ என்று அழைக்கப்பட்டார். எழுத்துலகில் இவர் நுழையும்பொழுது இவர் தானே விரும்பிச் சூட்டிக்கொண்ட வையவன் என்ற பெயரில் அடியெடுத்து வைத்துள்ளார். தனது தந்தையிடம் இருந்து படிக்கும் பழக்கத்தையும், தாயிடம் இருந்து கதை சொல்லும் கற்பனைத் திறத்தையும் பெற்றார்.

    பள்ளி நாட்களில் “தமிழொளி” என்ற இதழின் ஆசிரியப்பொறுப்புகளை ஏற்று அந்த இதழில் கட்டுரைகளும், சிறுகதைகளும், தலையங்கங்களும் எழுதினார், தமிழ்ச்சங்கச் செயலாளர் பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். இவரது முதல் சிறுகதை 1956 ஆம் ஆண்டு ‘அமுதசுரபி’ இதழில் வெளியானது. இவரது முதல் புதினம் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்பதில் தொடங்கி, ஜமுனா, ஜங்க்ஷனிலே ஒரு மேம்பாலம், மணல்வெளி மான்கள், கன்னியராகி நிலவினிலாடி என்று தொடர்ந்து பத்து புதினங்களையும், பத்து குறும்புதினங்களையும், வெளியிட்டுள்ளார். அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் என்பதை பெரும்பாலான அவரது படைப்புகளின் மையக் கருத்தாகக் கொண்டு எழுதியும் வந்துள்ளார். இவரது படைப்புகளில் இவர் கையாண்ட சமுதாயக் கண்ணோட்டதிற்காக இவர் பெரிதும் பாராட்டப்பட்டவருமாவார். இவரது ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற முதல் புதினம் தமிழக அரசின் பரிசையும், இரண்டாவது புதினம் ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருதையும் வென்றன.

    தனது பதின்ம வயதில் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து சற்றொப்ப 60 ஆண்டுகளாக எழுதுவதை தனது கடமையாகக் கொண்டு வருகிறார். இதுவரை 1000 த்திற்கும் அதிகமாக படைப்புகளை சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல வடிவங்களிலும் உருவாக்கியுள்ள வையவன் அவற்றில் நூறு படைப்புகளை நூலாகவும் வெளியிட்டுள்ளார். இவருடைய படைப்புகள் தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கைகளான குமுதம், கல்கி, ஆனந்தவிகடன் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவர் படைப்புகளில் மாணவர்களுக்காக இவரெழுதிய நூல்களும், மொழிபெயர்ப்பு நூல்களும், கவிதைகளும் அடங்கும்.

    பற்பல தொழிலில் அறிமுகம் கிடைத்து பற்பல வேலைகளைச் செய்தாலும், மலேரியா ஒழிப்பு திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, இவரது மேலாளர் இவரது எழுத்துப்பணிக்கு கண்டனம் தெரிவித்த பொழுது, தனது எழுத்தார்வத்திற்கு ஆசிரியத் தொழிலே ஆக்கபூர்வமாக உதவும் என்று எண்ணி ஆசிரியப்பணியில் சேர்ந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் என இரு முதுகலை பட்டங்கள் பெற்றுள்ள வையவன், ஆசிரியப்பணிக்கான பட்டங்களும் பெற்று சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் தமிழ்ப் பண்டிதராகவும் 33 ஆண்டுகள் ஆசிரியப்பணியாற்றினார். பணி ஓய்விற்குப் பிறகு தனது முழு நேரத்தையும் இலக்கியப்பணிக்காக அர்ப்பணித்துள்ளார். மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிகளும் நன்கறிந்த வையவன் அவர்கள் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வைக்கம் முகம்மது பஷீரின் நாவலை ‘ஒரு காதல் டைரி’ (2001) என்றும், பிற மலையாள எழுத்தாளர் படைப்புகளையும் மொழிபெயர்த்துள்ளார். இவர் எழுதிய “மகாபலியின் மக்கள்”(1982) என்ற கேரளாவையும், கேரளமக்களையும் பற்றிய கட்டுரைத்திரட்டு நூல், பிற மாநிலம் பற்றி எழுதப்பட்ட சிறந்த நூல் என்ற பிரிவில் தமிழக அரசின் பரிசினைப் பெற்றது.

    வையவன் படம்0

    சிறந்த இலக்கிய விமர்சகரான வையவன் அவர்கள் ‘ஜெகசிற்பியன் ஒரு பார்வை’ (1987), ‘மகாகவி’ (1993) என்ற இலக்கிய விமர்சக நூல்களையும் எழுதியுள்ளார். இவரது மகாகவி நூல், பாரதியைப் பற்றிய பல புதிய பரிமாணங்களை முன் வைத்ததால் ஒரு சிறந்த நூல் என்று தேர்வு செய்யப்பட்டு அமுதசுரபி-ஸ்ரீராம் அறக்கட்டளையின் விருதையும், பாரதியின் மீது எழுதப்பட்ட சிறந்த நூல் என்று ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் பாரதி பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து வழங்கிய விருதையும் பெற்றது. இவரது “Nation builder Nehru” மற்றும் “Loving Animals” ஆகிய ஆங்கிலநூல்கள் ‘இந்திய அரசின் கரும்பலகைத் திட்டம்’ (Blackboard Scheme of Government of India) கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டன. லவ்விங் அனிமல் நூல் விலங்குகளின் நலத்தினைப் பேணும் முக்கியத்துவத்தை முன்வைத்ததால் அத்துறை அமைச்சரின் பாராட்டையும் பெற்றது. “நிசப்த கோபுரம்”(1995), “வெடி வாழைப்பூ”(1999) என்ற கவிதை நூல்களையும் எழுதியுள்ளார்.

    வையவன் படம் 01

    ‘ஆனந்த பவன்'(1998) , ‘இடிபாடுகள்'(2001) என்ற நாடங்களையும் இவர் எழுதியுள்ளார். ஆனந்தபவன் நாடகம் ஸ்டேட் வங்கியின் சிறந்த நாடகம் என்றப் பரிசினைப் பெற்றது. ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷன் நிதியுதவி பெற்று சோழா கிரியேஷன் தயாரித்த ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற குறும்படத்திற்கு கதை வசனத்தையும் எழுதியுள்ளார் வைரவன். இவ்வாறு தமிழ், ஆங்கிலம், பிறமொழிகளின் மொழிபெயர்ப்பு, கவிதை, கதை, கட்டுரைகள், புதினங்கள், பல இணையதளங்களில் வலைப்பூ கட்டுரைகள் என எழுதி வரும் வையவன் அவர்களின் எழுத்துக்களில் சிலவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு,  இளநிலை, முதுநிலை ஆய்வுக்கட்டுரைகளும், முனைவர் ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தனது பணியைப் பற்றிய பெருமைகளையும் விருதுகளையும் பொருட்படுத்தாத வையவன் அவர்களின் கருத்து:

    ‘Fruits I prefer; not fanfare and fireworks. When compared to the pioneers and literary personalities I am nothing; just another beginning. That’s all.’

    Manavaalan.pmd

    அரசின் “அறிவொளி” திட்டத்தின் செயல்பாடான மாற்றுக்கல்வி வளர்ச்சியில் பங்குபெற்று பலமாநிலங்களுக்கும் சென்று மாற்றுவழிக்கல்வி பற்றிய நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பணியில் தன்னை உட்படுத்திக் கொண்டமைக்காக “மால்கம் ஆதிசேஷய்யா” விருது பெற்றுள்ளார். கல்விப் பணிக்காக ‘ஐக்கியா டிரஸ்ட்’ (‘Aikya’ – Amalgamaetion of Indigenous Knowledge for Youtful Action) என்ற அறக்கட்டளையை உருவாக்கி பள்ளிப்படிப்பை முடிக்க இயலாதவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதில் உதவி வருகிறார். எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பல போட்டிகளை அறிமுகப்படுத்தியும், பணிகளும் செய்து வருகிறார். அவரது மகளின் பெயரில் துவக்கப்பட்ட “தாரிணிப் பதிப்பகம்” என்ற பதிப்பகம் மூலம் நூல்களை வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

    நமது வல்லமை மின்நிதழுடன் இணைந்து சிறுகதைகள் போட்டியொன்றை 2013 ஆண்டு நடத்தி, வெற்றிபெற்ற சிறுகதைகளை “வல்லமைச் சிறுகதைகள்” என்ற தலைப்பில் அவரது தாரிணிப் பதிப்பகம் மூலம் நூலாக வெளியிட்டு, வல்லமையாளர்களுக்குப் புத்தகப் பரிசுகள் அனுப்பி வளரும் பல புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தார்.

    பொதுத்தொண்டில் உள்ள ஆர்வம் காரணமாக கவிஞர் ஜி. ஜே. தமிழ்ச்செல்வி அவர்கள் துவக்கிய மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் “ஹார்ட் பீட் டிரஸ்ட் அறக்கட்டளை” வளரவும் உதவி வருகிறார். அந்த அறக்கட்டளையின் “இதயத்துடிப்பு” என்ற செய்தி மடலை அறக்கட்டளையின் சார்பாக வெளியிடவும் உதவி வருகிறார்.

    இடையீடின்றித் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் திரு. வையவன் அவர்களின் பணிகள் மேன்மேலும் சிறக்க வேண்டும் என்று வாழ்த்திப் பாராட்டி, பவளவிழா கொண்டாடும் இவ்வார வல்லமையாளருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் கூறிக் கொள்கிறோம்.

    வல்லமையாளரைத் தொடர்பு கொள்ள தகவல் …
    திரு. வையவன்
    தாரிணி பதிப்பகம்
    பிளாட் எண்: 4-ஏ, ரம்யா பிளாட்ஸ்
    32/79, காந்தி நகர் 4ஆவது பிரதான சாலை
    அடையாறு, சென்னை – 600020
    மின்னஞ்சல்: vaiyavan.mspm@gmail.com
    தொலைபேசி: 9940120341
    வலைப்பூ “இணையவெளி “: http://innaiyaveli.blogspot.com/
    கூகுல் ப்ளஸ்: https://plus.google.com/102825432314914852934/about

    தகவல்கள் வையவன் அவர்கள் பற்றிய சாகித்திய அகாடமி வெளியிட்ட ஆங்கிலக்குறிப்புகள் கொண்ட வலைப்பூவிலிருந்தும், வையவன் அவர்களின் வலைத்தளப் பதிவுகளில் இருந்தும் சேகரிக்கப்பட்டன.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • காதல் நாற்பது – 28

    என் காதல் கடிதங்கள் !

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    jay

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடித்த என் கடிதங்கள்  யாவும்
    செத்த காகிதங்கள் !
    வாய் பேசாதவை,
    வெளுத்துப் போனவை !  ஆயினும்
    உயிருடன் உள்ளன இன்னும், 
    நடுங்கிய வண்ணம் !
    பதறும் எனது
    கைகள் கயிற்றை அவிழ்த்துக்
    கடிதங்கள்
    கால்மேல் விழ விட்டன !

    இந்த கடிதம் சொன்னது :
    “நான் அவரது கண்கள்
    காணும்படி இருக்க வேண்டுமாம்”.
    ஒருநாள் குறித்து நண்பர் போல்
    வசந்த காலத்தில்
    வந்தென் கையைத் தொடுவதாய்
    வாக்களித்தார் !
    ஒரு சிறு சந்திப்பு ஆயினும்
    அதற்கு ஏங்கி
    அழுகை வந்தது எனக்கு !

    மெல்லிய இந்தக் காகிதம்
    சொல்லியது :
    “கண்ணே உன்னை நேசிக்கிறேன்,” என்று
    கடந்த என் வாழ்வின் மீது
    கடவுளின்
    எதிர்கால இடித்தாக்கல் போல்
    வீழ்ந்தேன் ! குறுகினேன் !
    “நான் உனக்குரியவன்,” என்று
    நவிலும் அடுத்த கடிதம்.
    விரைவாய்த் துடிக்கும் என் நெஞ்சில்
    தேங்கிக் கிடந்து
    வெளுத்து போனது எழுத்து மை !

    அடுத்தொன்றில் இப்படி:
    “ஓ என் காதலி !
    உன் வாய்ச் சொற்கள் பயன்படா” என்று;
    அப்படிச் சொல்லியது
    உறுதி யாயின்
    இறுதியில் துணிவோடு எதிர்ப்பேன்
    மறுமுறை.

    ************

    Poem -28

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    My letters! all dead paper, mute and white!
    And yet they seem alive and quivering
    Against my tremulous hands which loose the string
    And let them drop down on my knee to-night,
    This said,–he wished to have me in his sight
    Once, as a friend: this fixed a day in spring
    To come and touch my hand . . . a simple thing,
    Yet I wept for it!–this, . . . the paper’s light. . .
    Said, Dear, I love thee; and I sank and quailed
    As if God’s future thundered on my past.
    This said, I am thine–and so its ink has paled
    With lying at my heart that beat too fast.
    And this . . . O Love, thy words have ill availed
    If, what this said, I dared repeat at last!

    **********

    Share
  • குறளின் கதிர்களாய்…(51)

    -செண்பக ஜெகதீசன்

    துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த
    னளியின்மை வாழு முயிர்க்கு. (திருக்குறள்-557:கொடுங்கோன்மை)

    புதுக் கவிதையில்…

    மழை விழுந்தால்,
    மண் குளிர்ந்து
    வளம்பெருகும் வையத்தில்…
    மழை இல்லையெனில்,
    மன்பதை வாடும்,
    மக்கள் வாடுவர் அதுபோல்,
    ஆட்சியாளர்தம்
    அரவணைப்பு இல்லையேல்…!

    குறும்பாவில்…

    மாநிலம் வாடும் மழையில்லையெனில்,
    மக்கள் வாடுவர்
    முறையற்ற அரசியலாரால்…!

    மரபுக் கவிதையில்…

    மண்ணில் வீழும் மழைத்துளிதான்
    மன்பதை வளத்தைப் பெருக்கிடுமே,
    எண்ணிப் பாரிதை, மழையிலையேல்
    எல்லாம் காய்ந்திடும் பூமியிலே,
    கண்ணின் இமையாய்க் காத்துநிற்கும்
    கருணை யில்லா ஆட்சியரால்
    மண்ணில் மாந்தர் நிலையதுவும்
    மழையிலா நிலம்போல் மாறிடுமே…!

    லிமரைக்கூ…

    மழையில்லா பூமியது பாலையாய்க் காட்சி,
    நலிவர் மக்கள் பாழ்நிலம்போல்
    நடந்திடில் நாட்டில் நலம்பேணார் ஆட்சி…!

    கிராமிய பாணியில்…

    காஞ்சிபோச்சி காஞ்சிபோச்சி
    காடெல்லாங் காஞ்சிபோச்சி,
    ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல
    மண்ணுலத்தான் ஒண்ணுமில்ல
    மழயில்லாம ஒண்ணுமில்ல…

    கதயிதுதான் கதயிதுதான்
    ராசாங்கக் கதயிதுதான்,
    சனங்களுக்கு ஒதவத்தான்
    சத்தில்லா அரசாங்கத்தால
    மொத்தமாப் பயனில்ல,
    பயனில்ல பயனில்ல
    காஞ்சிபோன நெலம்போல
    பயனில்ல பயனில்ல…!

     

    Share
  • அருள்மிகு ஸ்ரீவீரமாசக்தி பத்ரகாளியம்மன் துதி

    பாபநாசம் தாலுகா, அரையபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்
           அருள்மிகு ஸ்ரீவீரமாசக்தி பத்ரகாளியம்மன் துதி

    ஆக்கம்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர்,
    பாரதி இலக்கியப் பயிலகம், திருவையாறு.

                                        காப்பு
    புன்னைநல்லூர் மாரியம்மா, சமயபுரத் தாயே!

    சென்னையின் வேற்காட்டில் வாழுகின்ற மாரி!
    கன்யாகுமரி வாழ் கன்னித்தாய் குமரி
    பன்னாரி அம்மா, பகவதியம்மன் தாயே,
    ஊர்மக்கள் போற்றுகின்ற உக்ரகாளி அம்மா
    உறையூரை ஆளுகின்ற வெக்காளி அம்மா
    கருவூரில் குடிகொண்ட மாரியம்மா தாயே
    அரையபுரம் வாழ்கின்ற அருள்சக்தி காளி!
    நின்னைச் சரணடைந்த அடியார்கள் எல்லாம்
    பணிந்து நிற்கின்றார், அருள் செய்வாயம்மா!

                                          பாயிரம்
    அண்டமெலாம் படைத்தவளை அன்பருள்ளம் வாழ்பவளை
    எண்ணமெலாம் உணர்ந்தவளை இரங்கியருள் புரிபவளைக்
    கண்ணாரக் கண்டு உளமார வணங்கி மனதாரப் புகழ்ந்து
    தொண்டடிமை செய்து வணங்குவோம் பணிந்து.

                                             நூல்
    நீயே சரணமெனக் கூவி அழைத்திடுவோம்
    தாயே எமக்குறுதி தந்து காத்திடுவாய்
    வாயால் தாய்புகழை அனவரதம் பேசிடுவோம்
    ஓயாமல் உனதருளை அள்ளித் தந்திடுவாய்.          1.

    காளீ! வீரமாசக்தி எங்கள் பத்ரகாளியம்மா
    நாளும் நின்மலர்த்தாள் நாடிப் பணிகின்றோம்
    தாளில் வணங்கி அபயம் வேண்டுகின்றோம் 
    ஒளிகண்டு மலர்கின்ற மலர்போல அருள்புரிவாய்.    2.

    எண்ணுகின்ற காரியங்கள் இனிதே முடித்திடுவாய்
    பண்ணுகின்ற பணிகளிலே வெற்றியைத் தந்திடுவாய்
    துணையாக அம்மையே எப்போதும் இருந்திடுவாய்
    நண்ணுகின்ற செயலனைத்தும் நின்னுடைச் செயலன்றோ? 3.

    எண்ணிலா நன்மைகளைக் கணக்கின்றித் தந்துவிடு
    விண்ணவர் போலநாங்கள் வாழ்ந்திட வரம்தந்து 
    மண்ணிலே ஈடெவரும் இல்லையெனும் நிலையடைந்து
    வண்மையும் வளமையும் வழங்கி அருள்செய்வாய்.   4.

    தானமும் தவமும் கல்வியும் தான்தருவாய்
    வானத்துத் தாரகைபோல் வாழ்க்கையைத் தந்திடுவாய்
    மானத்தொடு வீரமும் மாண்பும் மிகத்தந்து
    ஞானக் குழந்தைகளாய் வாழும்வகை செய்திடுவாய். 5.

    பூதங்கள் ஐந்தும் ஒன்றாய் சேர்ந்ததுபோல்
    போதமாகி நின்றாய், பொறிகளைநீ கடந்தாய்
    தீதனைத்தும் நீக்கி தெய்வஅருள் தருவாய்
    வேதங்கள் உன்னுருவில் என்றும் நிலைத்திருக்கும். 6.

    காலத்தைக் கடந்தவள் நீ, கடிதினில் வந்திடுவாய்
    மாலவனின் தங்கையே எம் மனதினுள் புகுந்திடுவாய்
    எல்லாத் திசைகளிலும் அண்டங்கள் அனைத்தினிலும்
    செல்லும் திக்கனைத்தும் நின்புகழே நிலைத்திருக்கும்.      7.

    நீயே சரணமென நித்தநித்தம் கூவிடுவோம்
    தாயே எங்களுக்கு நெஞ்சினில் உரம் தருவாய்
    ஓயோம் ஒருபொழுதும் நின்புகழைப் பேசாமல்
    பேய்மனம் கொண்டோர்க்கும் நற்கதியைத் தந்திடுவாய்.     8.

    சித்தத்தில் துணிவுகொண்டு சிந்தையில் அன்புகொண்டு
    எத்திசையும் புகழ்மணக்கச் சீர்கொண்டு செல்வம்சேர
    இத்தரையில் வாழ்ந்திருக்கும் இனிதான நாட்களெல்லாம்
    புத்தியில் நினைவைத்துப் புகழோடு வாழ்ந்திருப்போம்.     9.

    மையுற்ற கண்களும் பொன்னணி கலன்களும்
    செய்கின்ற தீமைகளை உலகுக்குக் காட்டி
    பொய்யுறு வாழ்க்கையை அண்டாமல் ஓட்டி
    ஐயுறவின்றியே வாழ்வளிப்பாய் தாயே!               10.

    கோதுடையார் உறவில் மயங்கியே களித்து
    காதலும் இன்பமும் கணந்தோறும் வளர்த்து
    எதுவும் இவ்வுலகில் இயல்பென நினைத்து
    பூதலத்து வாழ்வின் இன்பத்தில் திளைத்து            11.

    இன்பமும் துன்பமும் உணர்விடை வைத்து
    முன்னும் பின்னும் துயர்களைக் கொடுத்து
    துன்பம் நீங்கிட நினதடி பணிந்து
    அன்பில் ஒன்றி நின்னையே சார்ந்தோம்.             12.

    தீது நேரிடினும் அச்சம் எமக்கில்லை
    எதுவும் நடப்பதிங்கு நின்றன் செயலாலன்றோ?
    ஆதரித்து இங்கு அருள்புரிய வேண்டுகின்றோம் 
    போத நல்லருளை எப்போதும் தருவாயே!            13.

    வேத மந்திரங்கள் எண்திசையும் ஒலிக்க
    மாதவன் கண்ணனின் குழலிசையில் மிதக்க
    சாதகப் பறவைகள் விண்ணில் பறக்க
    ஓதுவோம் நின்புகழ் நாவென்றும் இனிக்க.            14.

    காவி அணிந்திட்ட துறவுநிலை வேண்டா
    பாவித்துத் தலைமேல் கற்றை முடிவேண்டா
    ஆவிக்கு உற்றதோர் கருணையொன்றே போதும்
    பாவிகள் எம்மைக் கரையில் சேர்த்திடு.               15.

    தவமென்று பிரிதொரு சாதனையும் வேண்டா
    சிவத்தை மனத்திலேற்றி சிந்தையை நேராக்கி
    தவத்துக்கு அன்னையே நின்னையே துணைகொண்டு
    பவமே துலங்கிடப் பேரருள் தருவாய்.                16.

    சக்தியென்ற நின்பெயரை நித்தநித்தம் ஓதுவதால்
    சக்திதந்து எம்மனத்தில் உறுதிபட நின்றிருப்பாய்
    சக்தியின் சந்நிதியில் மனமுருக வேண்டிநின்றால்
    சக்திநீ பராசக்தி என்றும் துணையிருப்பாய்.           17.

    நலம்புரியும் சக்தீ, அரையபுரம் காளீ
    வலம்வந்தோம் நின்னைச் சரணடைந்தோம் நின்னை
    விலக்கிடுவாய் மக்கள் துன்பங்கள் எல்லாம்
    புலப்படுவாய் கண்ணில் பாமரராம் எமக்கு.           18.

    உயிரோடு உணர்வையும் ஓங்கி வளர்த்திடுவாய்
    பயிர்களை வளர்ப்பதுபோல் பத்ரகாளீ நீயும்
    வயிரம்போல் உடலையும், வண்ணமுறு மனத்தையும்
    பாவித்து நலம்புரிவாய் அன்னையே தினமும்.         19.

    உலகினைக் காத்திட ஆதவனாய்த் திரிவாய்
    மலையிலும் மண்ணிலும் மாரியாய் உதிர்வாய்
    நலங்கள் அனைத்தையும் நல்கிடும் காளீ
    குலத்தொடு மாண்பையும் கொடுத்திடு தாயே.         20.

    அன்புறு சோதியாய் அருள்தரும் காளியாய்
    இன்பமே என்றும் இருந்திடச் செய்வாய்
    பன்பலிநீக்கி பயனுறு செயல்கள் ஊக்கி
    மின்படு சக்தியாய்நீ மாநிலம்தனைக் காப்பாய்.        21.

    நயம்படு செயல்களைச் செய்துனை வணங்கி
    தயங்கிடா மனமும் திடங்கொண்ட பணிவும்
    தயவுடன் நின்னைப் பணிந்தெழும் எம்மை
    வியப்புறு வண்ணம் காத்திடல் நின்கடன்.             22.

    நினைக்கும் பொழுதினில் நின்னுரு தோன்றவும்
    ஊனினை உருக்கிநின் மாமலரடி பணியவும்
    தானெனும் அகந்தையை அகழ்ந்தே எடுக்கவும்
    தேனென ஒழுகும்நின் திருவருள் அருந்துவோம்.           23.

    விட்டில்பூச்சிகள் விளக்கிடை வீழ்தல் போல்
    மட்டில் கேடுகள் விளைக்கும் செயல்களைக்
    கூட்டியெம் வாழ்க்கையைத் துயர் கடலாக்கி
    வாட்டும் நிலைமையை மாற்றிட விழைகிறோம்.           24.

    வல்லவர் வெல்லவும் வண்மைகள் பெருகவும்
    நல்லவராக நாநிலத்து மக்கள் வாழவும்
    வல்லமை மிக்க வீரமாசக்தி பத்ரகாளீ
    நல்லருள் புரிவாய், நலங்களை அருள்வாய்.          25.

                                             நூற்பயன்
    நலம் தருவாள், குணம் தருவாள், நீண்ட வாழ்வருள்வாள்!

    பலம் தருவாள், கல்வியும் செல்வமும் கணக்கின்றித் தான்தருவாள்!
    நல்லோர் துணை தருவாள், கருணை மழை பொழிவாள்!
    வல்லமைமிக்க அரையபுரம் காளி வீரமாசக்தியை வணங்குவோர்க்கே!

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 148

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

    மதுரை நகரைக் காண வேண்டும் என்னும் தனது விருப்பத்தைக் கவுந்தியடிகளிடம் கோவலன் தெரிவித்தல்

    தவநெறியில் இருந்த கவுந்தியடிகளிடம்
    கோவலன் சென்று,
    “அடிகளாரே! அறநெறியில் இருந்து நீங்கிக்
    கயவன் போல சிறுமையுடையவன் ஆகி,      kovalan
    இந்த அறியாத புதிய தேசத்தில்
    நறுமலர் மேனியுடைய இக்கண்ணகி
    நடுங்கித்துயர் உறும் வண்ணம்,
    பல கொடிய வழிகளை எல்லாம் கடந்து வந்து
    சிறுமையுடையவனாகி நிற்கின்றேன்;

    பழம்பெருமை வாய்ந்த மதுரை நகரில்
    மன்னர்க்கு அடுத்தபடியான நிலையில் இருக்கின்ற
    பெருவணிகரைக் கண்டு
    என் நிலைமை உணர்த்திவிட்டு,
    மீண்டும் நான் இங்கே வரும் வரையிலும்
    இப்பைந்தொடிப்பெண் முன்போலவே
    உங்கள் பாதுகாப்பில் இருக்கட்டும்;
    அப்படியிருந்தால் இவளுக்குத் துன்பம் ஏதும்
    நேராதன்றோ?” என்று கேட்டான்.

    கவுந்தியடிகள் ஆறுதல் மொழி கூறி, ஊர் கண்டு வருமாறு பணித்தல்

    இங்ஙனம் தன் செயலுக்காய் வருந்தி நின்ற கோவலனிடம்
    கவுந்தியடிகள் கூறலானார்:

    “தவமாகிய அறத்திலிருந்து சற்றே தவறிய காரணத்தால்
    காதலி தன்னோடு பெருந்துயர் எய்திய கோவலனே!
    ‘தீவினைகளில் இருந்து விடுபட்டு உய்யுங்கள்;
    இல்லையேல், அவை தீய பலனைத் தந்து நிற்கும்’ எனத்
    தங்களின் வாயாகிய பறையை
    நா என்னும் தடி கொண்டு
    உரக்க அறைந்து கூவினாலும்,
    மனத்திண்மை இல்லாத மாக்கள்,
    தமது இழி இயல்பு காரணமாய்
    அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    பின், அத்தீங்குடைய வெவ்வினை
    தனது துன்பத்தின் பயனைத் தந்து நிற்கும்போது,
    இது தாம் முன்செய்த வினையால் வந்தது என்றறியாமல்
    தமது அறியாமையையே பின்பற்றி வாழ்ந்து கலங்குவர்.
    ஆனால் கற்று அறிந்த திறமுடைய அறிவுடையவர்கள்
    இத்தகைய பெருவினைத் துன்பங்களை அனுபவிக்கும்போது,
    செயலற்றுக் கலங்கி நிற்க மாட்டார்கள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 15 – 34
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி:
    http://omsakthionline.com/?katturai

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

     

    ஹனுமன் ஜெயந்தி 

    கடல்தாண்டிச் சென்று ,கணையாழி தன்னை,
    திடல்தீவில் தேவிக்குத் தந்த, -அடலேறே,
    ஆவின் குளம்படி, ஆழி உனக்கய்யா:
    தாவிய தாளென் தலை’’….கிரேசி மோகன்….

    Share
  • உழவனின் காதல்!

    விடியும் வேளை
    … விடியல் தேடி
    … வியர்வை விடுகின்றான் – உழவன்
    … விதையை இடுகின்றான்
    முடிவில் லாமல்
    … முன்செல் ஏர்ப்பின்
    … முயன்று நடக்கின்றான் – உழைப்பை
    … முதலாய்க் கொடுக்கின்றான்
    மடியில் லாமல்
    … மாடாய்த் தானும்
    … மண்ணை உடைக்கின்றான் – அதனுள்
    … மர்மம் படைக்கின்றான்
    அடியும் நுனியும்
    … அனைத்தும் பார்த்தே
    … அன்பால் வளர்க்கின்றான் – பயிராய்
    … அவனே துளிர்க்கின்றான்

    ஆளே இல்லா
    … அர்த்த சாமம்;
    … அல்லும் அழுகிறது – பனியாய்
    … அதுவே விழுகிறது
    காளை உழவன்
    … காணாப் பயிரும்
    … கண்கள் விழிக்கிறது – கனவாய்க்
    … கண்டு கழிக்கிறது
    நீளும் இலையை
    … நீட்டிப் பயிரே
    … நிலவை அழைக்கிறது – உழவன்
    … நிலையை உரைக்கிறது
    மூளை மயங்கி
    … முத்துப் பனியில்
    … முங்கி நனைகிறது – அதனால்
    … மோகம் தணிகிறது

    அல்லை விரட்டி
    … அன்போ(டு) உழவன்
    … அங்கே விரைகின்றான் – கண்டே
    … அல்லோன் மறைகின்றான்
    சொல்லில் லாமல்
    … சொக்கும் பயிரின்
    … தோகை பார்க்கின்றான் – பனியின்
    … தோய்வால் வேர்க்கின்றான்
    புல்லே முத்தம்
    … பொழிந்த தென்றே
    … பொங்கிச் சினக்கின்றான் – நெஞ்சம்
    … பொருமக் கனக்கின்றான்
    கல்லாய் ஆகிக்
    … கலங்கி உள்ளம்
    … கதறிக் கரைகின்றான் – புல்லைக்
    … களைந்தே எறிகின்றான்

    வீசுங் காற்றில்
    … விளைந்த பயிரும்
    … வெற்றாய்ச் சலசலக்கும் – அதிலும்
    … விஷயம் பலவிருக்கும்
    பாசத் தோடு
    … பழகும் உழவன்
    … பாடும் பாட்டிருக்கும் – காதற்
    … பரிசாய்ப் பூப்பிருக்கும்
    நேசங் கொண்டே
    … நெஞ்சோ டிணையும்
    … நினைவுச் சேகரிப்பும் – உணர்வில்
    … நிலவும் தீஎரிக்கும்
    ஆசைக் காதல்
    … அடைந்தே உள்ளம்
    … அனலாய் உறைந்திருக்கும் – அதனால்
    … அதில்நெல் நிறைந்திருக்கும்

    தோகை வெளுக்கத்
    … தொய்ந்தே பயிரும்
    … தொலையும் நாள்நெருங்கும் – உழவன்
    … தூக்கத் தோளுறங்கும்
    மோகம் கொடுத்த
    … மொத்தப் பரிசாய்
    … முத்துச் சரமிறக்கும் – பின்
    … முடிவை வரவேற்கும்
    சோகம் கசக்கும்
    … துவைக்கும் நெஞ்சை
    … துண்டித் ததுபோகும் – நினைவே
    … துணையாய் அசைபோடும்
    வேகும் நெஞ்சின்
    … வேதனை தீர்க்கும்
    … விதமாய் பணியிருக்கும் – கையில்
    … விதைநெல் மணியிருக்கும்

     

    Share
  • கம்பனில் ஓர் சொல்: அலங்கல் = குதிரையின் அலங்கு உளை (பிடரிமயிர்)

    நா. கணேசன்

    அலைத்தல் என்ற வினைச்சொல்லை விரிவாக்கி அலங்கு/அலக்கு என்ற சோடிச்சொற்கள் தோன்றியுள்ளன.

    இதுபோன்ற தன்வினை/பிறவினைத் தொகுதிகள் தமிழில் மிகப் பல:

    (1) உலங்கு/உலக்கு < உலை-,
    (2) வணங்கு/வணக்கு < வளை-,
    (3) திரங்கு/திரக்கு < திரை-, (திரக்கு = crunch time)
    (4) அணங்கு/அணக்கு (= அணுங்கு/அணுக்கு) < அழு-/அணு-
    அணு என்னும் பெயர்ச்சொல் வடமொழிக்கு த்ராவிடமொழி தந்தது.

    அழுங்கல் = அணுங்கல். (கிறித்துவநூல்களில் ஒன்று, கித்தேரியம்மாள் அழுங்கல் அந்தாதி).
    அணுங்கு (அ) அழுங்கு = Indian pangolin http://en.wikipedia.org/wiki/Indian_pangolin
    அணங்கு/அணுங்கு – வருத்துவது. சங்கத் தமிழர் சமயம் அரசன் – பெண் – தலித் என்னும் மும்முனைகளைக் (triad) கொண்டது. சங்க இலக்கியத்தில் உள்ள ஒரு மிக முக்கியமான சொல்லான அணங்கு இந்த மும்முனைக் கோட்பாட்டுடன் இயங்கியுள்ளது. காலப்போக்கில் அந்தணன் என்ற தமிழ்ச்சொல் அடையும் மாற்றங்கள் ஹிந்து சமயத்தின் வளர்ச்சியை ஆராயப் பயன்படும்.

    (5) விடங்கு/விடக்கு < விடை- (விடைத்தல், விறைத்தல். விதை/விரை). விடங்கர் (> இடங்கர்) என்ற சொல் சிந்து-கங்கை முதலைக்கும், சிவனுக்கும் ஆதல்பற்றி கட்டுரைகள் அச்சாகியுள்ளன. விடங்கர்/விடக்கர் > இடங்கர்/இடக்கர் சொற்றொகுதி இந்தியாவில் இலிங்க வழிபாட்டின் தோற்றுவாய், காமனுக்கு விடங்கர் (மகரம்) துவஜம் என்பன பற்றி அறிய உதவுவன.

    (6) கலங்கு/கலக்கு < கலை-
    ….

    அலங்கல் = அலங்குதல் = அசைதல். எனவே,அலங்கல் மாலை, அலங்கல் கோதை, அலங்கல் தொடலை, அலங்கல் கண்ணி, … என்றெல்லாம் இலக்கியத்தில் மாலையை வருணிப்பது அலங்கல் = அசைதல் என்பதால்தான். “அலங்கல் மாலை” = அசையும் மாலை. சீவக சிந்தாமணி: ’பிறங்கு இணர் அலங்கல் மாலை – விளங்கும் பூங்கொத்துக்களையுடைய அசையும் மாலை’. அலங்கல் = அலங்குதல் என்னும் தொழிலால் பிறக்கும் பெயர்ச்சொல். அசையும் மாலை எனப் பொருள். அழகர் அந்தாதி, அரங்கத்தந்தாதி உரைகளில் வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியர் விளக்கியுள்ளார்கள்: ”அலங்கல் – தொங்கியசைதல்: மாலைக்குத் தொழிலாகுபெயர்; இதில், அல் – கருத்தாப்பொருள்விகுதி யெனினும் அமையும்.” அலைக்கும் தொழிலால் அலங்கல் என்பதே மாலைக்கு ஒரு தொழிலாகுபெயர் ஆகிவிட்டது. ஏராளமான இடங்களில் ’அலங்கல் மார்பன்’ என்றிருக்கும். மாலையுடைய மார்பன் என்று அங்கே பொருள்.

    அலங்கல் = அசைதல், சில சங்ககால உதாரணங்கள்:
    (I) அகநானூறு 262-ஆம் பாடல் பார்ப்போம்
    http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=262&y=195&bk=82&z=l1270634.htm

    அழாஅம் உறைதலும் உரியம் பராரை
    அலங்கல் அஞ்சினைக் குடம்பை புல்லெனப்
    புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந் தாங்கு 25

    23-7. பரு அரை அலங்கல் அம் சினைக் குடம்பை புல்என – பருத்த அரையிற் கிளைத்த அசையும் அழகிய கிளையிலுள்ள தன் கூடு பொலிவற்றொழிய, புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு – தான் பெயர்ந்து போக எண்ணிய புலத்தடத்துப் பறவை புறப்பட்டுச் சென்றாற் போல,

    (II) குறுந்தொகை 76:

    http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=76
    ”சிலம்பிற் சேம்பின் அலங்கல் வள்ளிலை”

    (ப-ரை.) தோழி—, சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை – மலைப் பக்கத்திலுள்ள சேம்பினது அசைதலையுடைய வளவிய இலையை

    (III) குறுந்தொகை 79:
    ”பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை அலங்கல் உலவை யேறி ”
    பொரிதாள் ஓமை – பொரிந்த அடியையுடைய ஓமைமரத்தினது, வளிபொரு நெடுசினை அலங்கல் உலவை – காற்று அடிக்கும் நெடிய கிளையினது அசைதலையுடைய வற்றற்கொம்பில் ஏறி

    (IV) சிலம்பில் போகிய செம்முக வாழை அலங்கல் அம்தோடு, அசைவளி உறுதொறும், பள்ளி யானைப் பரூஉப்புறம் தைவரும் நல்வரை நாடனொடு … (அகநானூறு 302)

    சிலம்பில் போகிய செம்முக வாழை – மலையில் நீண்ட வளர்ந்த செவ்வாழையின், அலங்கல் அம் தோடு – அசையும் அழகிய இலைகள்

    —————-

    அசையும் தொழிலால் அலங்கல் = மாலை. இதே போல, நெற்கதிர் முற்றிக் காற்றில் அசைதலால் அலங்கல் = நெற்கதிர் என்று அகநானூற்றில் காண்கிறோம்:
    ”கழனி நெல்லின் கவை முதல் அலங்கல் ”- வயல் நெல்லின் பலவாகக் கிளைத்த முதலிலிருந்து தோன்றிய நெற்கதிர்,

    சென்னைப் பேரகராதி:
    அலங்கல் alaṅkal , n. < அலங்கு-. 1. Wreath, garland; பூமாலை. (பிங்.) 2. Wreath for the hair; மயிர்ச்சூட்டுமாலை. (பிங்.) 3. Sprout; தளிர். (பிங்.) 4. Waving ear of corn; அசையுங் கதிர். (அகநா. 13, உரை.) 5. Regularity, arrangement, order; ஒழுங்கு. (குருபரம். ஆறா. 121.)

    அலங்கல் என்னும் சொல்லுக்கு இப் பொருள்களுடன் குதிரையின் அலங்கு உளை (= பிடரிமயிர்) என்றும் சேர்த்தலாம். இப்பொருளில் கம்பர் பாடியிருக்கிறார்.
    ஆயிரம் தேரை, ஆடல் ஆனையை, அலங்கல் மாவை,
    ஆயிரம் தலையை, ஆழிப் படைகளை, அறுத்தும், அப்பால் .

    கடுமையான போர் நடக்கிறது. அப்போது மாலை அணிந்து குதிரைகள் இருக்கமாட்டா. போரின் உச்சகட்ட வேகத்தைக் காட்ட குதிரைகளின் பிடரி மயிர் அசைதலைப் பாடுகிறான் கம்பன். புரவிகளுக்கு அழகே பிடரியில் அலங்கும் மயிர் உளை தான். இதனைச் சங்க காலத்திலிருந்து எல்லா இலக்கியங்களும் பாடுகின்றன. அலங்கல் மா = அலங்கு உளைப் புரவிகள்.

    “அலங்குசெந்நெற் கதிர்வேய்ந்த ஆய்கரும்பின் கொடிக்கூரை”- புறநானூறு. எனவே, அலங்கல் = அசைகிற நெற்கதிர் என்று சங்க இலக்கியங்களில் பாடப்படுகிறது. அதுபோல, அலங்கு மயிர்ப் புரவி என்று பற்பல பாடல்களில் உள்ளதால், ’அலங்கல் மா’ என்பதற்கான பொருள் ’அலங்கு உளை (பிடரிமயிர்) கொண்ட குதிரை’ என்றால் சாலவும் பொருத்தமாய் அமையும்.

    ahor

    ​குதிரையின் ராஜலக்ஷணங்களில் ஒன்று: அலங்கு உளை (பிடரிமயிர்) அலங்கல் மா = mane of horse. அழகான குதிரைகளும், அதன் அலங்கல்களும் (mane) இங்கே பாருங்கள்:

    https://www.google.com/search?espv=2&biw=1280&bih=923&tbm=isch&sa=1&q=mane+of+a+horse&oq=mane+of+a+horse&gs_l=img.3..0.2896.9197.0.9440.19.14.0.5.5.0.49.546.13.13.0.msedr…0…1c.1.60.img..1.18.545.3G92PrhubG8

    ​அலங்கு செந்நெல் கதிரை அலங்கல் என்றே சொல்கிறது சங்க இலக்கியம். அலங்கும் காந்தளை அலங்காந்தள் என்பது கலித்தொகை. தோளிலே அலங்கும் மலர்மாலையை அலங்கல் என ஆயிரக்கணக்கான இடங்களில் தமிழ் குறிக்கிறது. தமிழனின் வாழ்க்கையில் ஒவ்வொரு மலருக்கும் ஒரு code உண்டு, வாகை என்றால் வெற்றி, உழிஞை என்றால் போர், … Flower semiotics and symbolism தமிழிலே பெரிது. வடமொழிக்கு உள்ளுறையும், இறைச்சியும் தொனி என்ற கோட்பாடாகக் கொடுத்த மொழி தமிழ்.

    ahorse

    அலங்கு உளை (பிடரிமயிர்) = அலங்கல்
    குதிரைகளின் அலங்கல் உளையை/பிடரிமயிரை விவரிக்கும் இலக்கிய வரிகள் சில:

    (1)
    ”அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ” (புறநானூறு 2):
    http://www.tamilvu.org/slet/l1281/l1281per.jsp?sno=2&file=l1281a16

    (2) ”குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி” (அகநானூறு 4)
    http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=13&y=16&bk=4&z=l1270949.htm

    (3) ”நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்.
    பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி” (புறநா. 4).

    (4) ”அலங்கு உளை அணி இவுளி
    நலங் கிள்ளி நசைப் பொருநரேம்” (புறநானூறு 382)
    http://www.tamilvu.org/slet/l1280/l1280spg.jsp?no=382&file=l12806c4.htm

    (5) கந்தபுராணம்:
    மாறு இலா அருக்கன் நாப்பண் வைகிய பரமனே போல்
    ஆறு மா முகத்து வள்ளல் அலங்கு உளைப் புரவி மான் தேர்
    ஏறினான் வீரவாகு இலக்கரோடு எண்மர் ஆகும்

    (5) கொங்குவேளிர் பெருங்கதை:
    அலங்குமயிர் எருத்தின்
    வயமாப் பண்ணி வாய்க்கயிறு பிணித்துக்
    அசையாநின்ற மயிரினையுடைய பிடரியினை உடையதொரு சிறந்த புரவியைப் பண்ணுறுத்தி வாய்க்கயிறிட்டுக் கட்டி .

    (6) பெருங்கதை:

    http://www.tamilvu.org/slet/l3600/l3600son.jsp?subid=3613

    உதயண குமரன் உரிமை தழீஇ
    35 அடல்பேர் யானையும் அலங்குமயிர்ப் புரவியும்
    படைக்கூழ்ப் பண்டியும் பள்ளி வையமும்
    நடைத்தேர் ஒழுக்கும் நற்கோட்டு ஊர்தியும்
    இடைப்படப் பிறவும் இயைந்தகம் பெய்து

    “அடல்பேர் யானையும், அலங்குமயிர்ப் புரவியும்” எனக் கொங்குவேள் சொல்வதை
    சில நூற்றாண்டுகள் சென்றபின் கம்பர் “ஆடல் ஆனையை, அலங்கல் மாவை” என்கிறார்.

    alion

    கம்பன் வழியில் ஆண் சிங்கத்தை “அலங்கல் அரிமா” எனலாம்.

    நா. கணேசன்

    Share
  • அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய அமெரிக்க விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    Glenn Seaborg  (1912-1999)

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3iJAet5p450

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ooM_zduS9Lo

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hSFBByH9uTI

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2RpMnNg90Zk

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2uX1Twr9gkk

    பூமண்டலத்தைச் சிதைத்துவிடப் போர்கள் மூண்டு விடுமா, அல்லது மனித இனத்தை உயர்நிலைக்கு மேம்படுத்த அமைதி நிலவி விடுமா என்று மாந்தருக்கு அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் ஒரு பெரும் இக்கட்டான நிலை நாம் தவிர்க்க முடியாத ஒரு காலப் போக்காகும்!

    கெலென் ஸீபோர்க்

    இதுவரை மனித ஆற்றலால் படைக்க முடிந்த ஒரு பேரழிவு மூலச் சாதனத்தை [புளுடோனியம்] உண்டாக்க நான் உதவி செய்தேன் என்றாலும், அணுவிலே அதை விட இன்னும் பேரளவு அமைதி வழி ஆக்க சக்தியும் மறைந்து உள்ளதென்று நான் உறுதி யூட்டுகிறேன்.

    கெலென் ஸீபோர்க்


    நாகசாகில் போட்ட இரண்டாம் அமெரிக்க அணுகுண்டு [Fatman]

    1945 ஆகஸ்டு 9 ஆம் தேதி இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாயில், ஜப்பான் நாகாசாகியின் மீது அமெரிக்கா ‘ஃபாட் மான்’ [Fat Man, Code Name] என்னும் அணுகுண்டை வீசி பெரும் உயிர்ச் சேதத்தையும், பொருட் சேதத்தையும் உண்டாக்கியது! அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, முதல் அணுகுண்டு ‘லிட்டில் பாய்’ [Little Boy, Code Name] ஹிரோஷிமாவில் வெடித்து பெரும் சேதத்தை விளைவித்தது! அவை இரண்டும் வெவ்வேறான அணுப்பிளவு உலோகத்தைக் கொண்டவை. முதல் அணுகுண்டில் பயன்பட்ட அணுஎரு, யுரேனியம் 235 ! இரண்டாவது அணுகுண்டில் வைத்திருந்தது, புளுடோனியம் 239 ! புளுடோனியத்தை முதன் முதல் தயாரித்துப் பிளவுப் பிண்டமாய்ப் [Fissile Material] பயன்படுத்த உதவிய ரசாயன விஞ்ஞானி, டாக்டர் கெலென் ஸீபோர்க்! 1940 ஆம் ஆண்டில் பெர்கெலி, காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் ‘சுழல் விரைவாக்கியில்’ [Cyclotron] யுரேனியம் 238 மூலகத்தை நியூட்டிரான் கணைகளால் தாக்கிப் புதிய மூலகம் ஒன்றைப் படைத்தவர், ஸீபோர்க்! அதற்குப் ‘புளுடோனியம்’ என்று முதலில் பெயர் வைத்தவரும், ஸீபோர்க்!

    Plutonium Bomb [Fatman]

    ஸீபோர்க் கண்டு பிடித்த போது, அந்த உலோகம் அதி விரைவில் தீவிர அணு ஆயுதத்துக்குப் பயன்படப் போவதையோ அல்லது ஆக்க வினைகளில் எதிர் காலத்தில் அணுமின்சாரம் தயாரிக்கப் பயன்படப் போவதையோ அவர் எள்ளளவும் அறிய மாட்டார்! அணுப்பிளவு எருக்கள் அனைத்தையும் [யுரேனியம் 235, யுரேனியம் 233, புளுடோனியம் 239], ஒப்பு நோக்கினால் புளுடோனியம் 239 உலோகத்தைத் தயாரிப்பது, தனித் தெடுப்பது யாவும் மற்றவற்றை விட எளியது! சிக்கனச் செலவில் ஆக்க வல்லது! சிறிய அளவே பூரணத் தொடரியக்கத்தைத் [Ciritical Chain Reaction] தூண்ட வல்லது! அரிய அணுசக்தி மூலகம் ‘புளுடோனியம்’ கண்டு பிடித்த தற்கு 1951 ஆம் ஆண்டு டாக்டர் கெலென் ஸீபோர்க் அவரது துணையாளி டாக்டர் எட்வின் மெக்மில்லன் [Edwin McMillan] ஆகியோர் இருவரும் ரசாயன விஞ்ஞானத்துக்கு மகத்தான நோபெல் பரிசைப் பெற்றார்கள்!

    Glenn Seaborg

    விஞ்ஞான உலகில் கிலென் ஸீபோர்க் சாதித்தவை என்ன ?

    மேரி கியூரி 1898 ஆம் ஆண்டில் பிட்ச்பிளண்டி [Pitchblende] தாதுக் கற்களில் ரசாயன முறையில் சுத்திகரித்து இயற்கையான போலொனியம், ரேடியம் [Polonium, Radium] ஆகிய புதிய கதிரியக்க மூலகங்களைக் [Radioactive Elements] கண்டு பிடித்து அவற்றைப் பிரித்தெடுத்தார். மேரி கியூரியின் புதல்வி ஐரீன் கியூரி ஆல்ஃபாக் கணைகளை ஏவி மூலகங்களைத் தாக்கி, 1934 இல் புதிதாகச் செயற்கைக் கதிரியக்க மூலகங்களை உண்டாக்கினார்! பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் [James Chadwick] 1932 இல் அணுக்கருவினுள் இருந்த நியூட்டிரான் பரமாணுவைக் கண்டு பிடித்து அணுயுகத்தில் ஓர் புரட்சியைத் தூண்டினார்! நியூட்டிரான் கணைக்கு ஆஃல்பா, பீட்டா கணைகள் போன்று மின்கொடை [Electrical Charge] எதுவும் இல்லை! இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மி, ஐரீன் கியூரியைப் பின்பற்றி 1934 இல் யுரேனியத்தை முதன் முதலாக நியூட்டிரான் கணைகளால் தாக்கிப், புதிய கதிரியக்க மூலகங்கள் விளைவதைக் கண்டார்! அப்போது நேர்ந்த அணுப்பிளவை [Nuclear Fission] அறியாமல் போனதுடன், விளைந்த புது மூலகங்கள் யாவற்றையும் பிரித்து விபரம் தெரியாமல் போனார், என்ரிகோ ஃபெர்மி! அப்பணி ஜெர்மன் விஞ்ஞானி ஆட்டோ ஹானுக்கும் [Otto Hahn], அமெரிக்க விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்கும் ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்து, இருவருக்கும் நோபெல் பரிசையும் வாங்கித் தந்தது!

    சுழல்விரைவாக்கி யந்திரம்

    1940 ஆம் ஆண்டில் பெர்கெலி, காலிஃபோர்னியா பலகலைக் கழகத்தில் ஸீபோர்க் ‘சுழல் விரைவாக்கியில்’ [Cyclotron] யுரேனியம்238 மூலகத்தை நியூட்டிரான் கணைகளால் தாக்கி ஓர் புதிய மூலகத்தைப் படைத்தார்! அது ரேடியத்தைப் போன்று தீவிர ஆல்ஃபாக் கதிர்வீச்சை [Alpha particle emitter] எழுப்பியது! அது யுரேனியத்தைப் போல் மிகக் கனமானது! மேலும் யுரேனியம் 235 மூலகத்தைப் போல் புது உலோகம் எளிதில் நியூட்டிரான்களால் பிளக்கப்பட்டு [Fissionable] அளவற்ற வெப்பசக்தியை உண்டாக்க வல்லது! அவர் 1940-1955 ஆண்டுகளில் மூலகங்களின் அணி அட்டவணையில் [Periodic Table of Elements] யுரேனியத்திற்குப் பின் அமையும் பத்து புதிய கன மூலகங்களையும் [Heavy Elements], அவற்றைச் சார்ந்த நூற்றுக் கணக்கான செயற்கைக் கதிர் ஏகமூலங்களையும் [Radio Isotpoes] சுழல்வீச்சு யந்திரங்களிலும், அணு உலைகளிலும் ஆக்கி யிருக்கிறார்!

    அணு எண்கள் [Atomic Numbers (Proton Numbers in Nucleus)] 94 முதல் 102 வரை மற்றும் 106 உட்பட அப்பத்து மூலகங்கள் செயற்கையான முறையில் ஆக்கப் பட்டன! அவற்றில் தனித்துவம் கொண்ட புளுடோனியம் 239 பெரும் பான்மையாக அணு ஆயுத வெடிப்புக்கும், சிறு பான்மையாக அணு மின்சக்தி ஆக்கத்திற்கும் உலக நாடுகளில் உபயோக மாகிறது. ஸீபோர்க் இரண்டாம் உலகப் போரின் சமயம் சிகாகோ பல்கலைக் கழகத்தின் உலோகவியல் ஆய்வுக்கூடத்தின் [Metallurgical  Laboratory] ஒரு பகுதிக்கு அதிபராய்ப் பணி செய்து, புதிய அணு ஆராய்ச்சி, உலையில்

    Parts of A Cyclotron

    [Atomic Research Reactor] புளுடோனியத்தை உண்டாக்கி, அதைக் கதிரியக்க பிளவு விளைவுத் துணுக்குகளி லிருந்து [Radioactive Fission Products] பிரித்தெடுத்து, ஆயுதத் தரமான புளுடோனி யத்தைத் [Weapon grade Plutonium] தயாரித்தார். அந்தப் புளுடோனியம் பின்னால் நியூ மெக்ஸிகோ லாஸ் அலமாஸில், 1945 ஜூலை 16 இல் சோதித்த முதல் அணு குண்டாகவும், அடுத்து நாகசாக்கியில் போட்ட ஆகஸ்டு 9 இல் ‘ஃபாட் மான்’ அணுகுண்டாகவும் வெடித்தது!

    ஸீபோர்க் குழுவினர் ஆக்கிய மற்ற புதிய கன மூலகங்கள்: அமெரிக்கியம், கியூரியம், பெர்கெலியம், காலிஃபோர்னியம், ஐன்ஸ்டைனியம், ஃபெர்மியம், மெண்டெலிவியம், நொபெலியம், உன்னில்ஹெக்ஸியம் [Americium (95), Curium (96), Berkelium (97), Californium (98), Einsteinium (99), Fermium (100), Mendelevium (101), Nobelium (102), Unnilhexium (106)]. 1944 இல் ஸீபோர்க் அறிவித்த ‘ஆக்டினைடு கோட்பாடு’ [Actinide Concept] மூலக அணி அட்டவணையில் [Periodic Table of Elements] இறுதியில் அமையும் அப்புதிய கன மூலகங்களின் பண்புகள், இடங்கள் [Properties, Places] ஆகியவற்றைச் சீராக இணைத்து ஒழுங்கு படுத்தியது! அக்கோட்பாடின் முறைப்படி ஆக்டினியத்தை [Actinium] விடக் கனமான 14 கதிரியக்க மூலகங்கள், அணி அட்டவணையில் தனிக் குழுவைச் சேர்ந்தவை யாகக் கருதப் படுகின்றன.

    புதிய யுரேனியச் சந்ததி மூலகங்கள் :

    Transuranium Elements  [First Made]

    கெலென் ஸீபோர்க்கின் மகத்தான வாழ்க்கை வரலாறு

    அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தின் இஸ்பெமிங் [Ishpeming, Michigan] என்னும் சிற்றூரில் 1912 ஏப்ரல் 19 ஆம் தேதி கெலென் ஸீபெர்க் பிறந்தார். சிறுவன் கெலென் பத்து வயதாகும் போது, குடும்பம் காலிஃபோர்னியாவுக்கு மாறியது. 1929 இல் லாஸ் ஏஞ்செலஸ் டேவிட் ஸ்டார் ஜார்டன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். 1934 இல் லாஸ் ஏஞ்செலஸ் காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் B.A. பட்டம் பெற்றுப் பிறகு, 1937 இல் ரசாயனத்தில் Ph.D. பட்டத்தைப் பெர்கெலி காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் பெற்றார். அங்கே பயிற்சி ஆசிரியராகச் சேர்ந்து, 1941 இல் உதவிப் பேராசிரியராகி, அதன் பின் 1945 இல் ரசாயனப் பேராசிரியராக உயர்பதவி அடைந்தார். அதே சமயத்தில் லாரென்ஸ் கதிர்வீச்சுக் கூடத்தில் [Lawrence Radiation Laboratory] அணுக்கரு ரசாயன ஆராய்ச்சிப் [Nuclear Chemical Research] பிரிவகத்தின் ஆணை யாளராகவும் பணி யாற்றினார். 1942 இல் கெலென் ஸீபோர்க் ஹெலென் கிரிக்ஸ் [Helen Criggs] என்னும் மாதை மணந்து கொண்டார். அவர்களுக்கு நான்கு ஆண், இரண்டு பெண் ஆக ஆறு குழந்தைகள்!

    Periodic Table of Elements

    1942-1946 வரை இரண்டாம் உலகப் போரின் தறுவாயில், ‘மறைமுக மன்ஹாட்டன் திட்டத்தில்’ [Secret Manhattan Project] அணு ஆயுதத் தயாரிப்புக்குப் புளுடோனிய உலோக உற்பத்திப் பிரிவில் சேர்ந்தார். 1946 இல் ஜனாதிபதி ட்ரூமன் ஸீபோர்க்கை அணுசக்திப் பேரவையின் [Atomic Energy Commission] ஆலோசக ராக நியமித்தார். ஜனாதிபதி ஜான் கென்னடி 1961 இல் பதவி ஏற்றதும், ஸீபோர்க்கை அணுசக்திப் பேரவையின் அதிபதி யாக்கினார். அப்போது ஜனாதிபதியின் விஞ்ஞான ஆலோசனைக் குழுவினருள் ஒருவராகவும் பணி செய்தார்.

    கெலென் ஸீபோர்க் ஏறக்குறைய 200 விஞ்ஞான வெளியீடுகளை வெளியிட்டிருக்கிறார். ரசாயனத்தை பற்றியும், மூலகங்களைப் பற்றியும் [Chemistry & Elemets] அநேக புத்தகங்கள் எழுதி யிருக்கிறார். கெலென் ஸீபோர்க் தனது 87 ஆவது வயதில் காலிஃபோர்னியா லாஃபாயட் [Lafayette, Calif] நகரில் காலமானார்.

    முதல் செயற்கைப் புளுடோனிய உலோகம் கண்டுபிடிப்பு

    அணு ஆயுத உற்பத்திக்கு உதவியா யிருக்கும் புளுடோனியம் பூமியில் இயற்கையாகக் கிடைப்ப தில்லை! யுரேனியத்தை [U238] நியூட்ரான்களால் தாக்கி அதை அணு உலைகளிலோ அல்லது விரைவாக்கி யந்திரங்களிலோ செயற்கை முறையில் உண்டாக்கிப் பிரிக்க வேண்டும்! அம்முயற்சியில் வெற்றி பெற்ற விஞ்ஞானிகள் இருவர்! பெர்கெலி காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய ரசாயன விஞ்ஞானிகள் கெலென் ஸீபோர்க், எட்வின் மெக்மில்லன் [Edwin McMillan] இருவரும் இணைந்தே யுரேனியத் தொடர் மூலகங்களை [Transuranium Elements] ‘சுழல் விரை வாக்கியில்’ [Cyclotron] ஆராய்ந்து வந்தனர். மெக்மில்லன் முதலில் யுரேனியம்238 மூலகக் குறியை நியூட்ரான் கணைகளால் தாக்கிய போது, ஒரு புதிய சேய்மூலகம் [Daughter Element] உண்டானது. அணு எண் 93 [Atomic Number 93] கொண்ட அப்புதிய மூலகத்திற்கு ‘நெப்டியூனியம்’ [Neptunium (Np)] பெயரிட்டார், மெக்மில்லன். சூரிய மண்டலத்தில் ‘யுரானஸ்’ கோளுக்கு அப்பால் சுற்றும் ‘நெப்டியூன்’ கோளின் பெயரை அதற்குத் தேர்ந்தெடுத்தார், மெக்மில்லன்!

    92[யுரேனியம்]238 + 0[நியூட்ரான்]1 —> 92[யுரேனியம்]239 + காமாக் கதிர்கள்

    92[யுரேனியம்]239 – 1[பீட்டா துகள்]0 —-> 93[நெப்டியூனியம்]239

    ஸீபோர்க் குழுவினர் [Glenn Seaborg, Joseph Kennedy, Arthur Wahl] 1940 இல் தொடர்ந்து நெப்டியூனியத்தை ஆராய்ந்தனர். அது அடுத்து ஒரு பீட்டாத் துகளை வெளியேற்றி மற்றுமொரு புதிய சேய்மூலகத்தை ஈன்றது! மேலும் பெர்கெலியில் உள்ள 60 அங்குல ‘சுழல் விரைவாக்கி’ யந்திரத்தில், யுரேனியம்238 மூலகத்தைக் குறியாக வைத்து, டியூட்ரான்களால் [Deuterons] தாக்கிய போது, அப்புதிய மூலகத்தின் ஏகமூலம் [Isotope] உண்டானது! டியூட்ரான் என்பது கன ஹைடிரஜன் [Heavy Hydrogen-Deuterium]. ஏகமூலங்கள் [Isotopes] என்றால் ஒரே புரோட்டான் எண்ணிக்கை கொண்டு [Atomic Numbers] வெவ்வேறு பளு எண்ணிக்கை [Mass Numbers] யுள்ள மூலகங்கள். ஒரு மூலகத்தின் ஏகமூலங்கள் அனைத்தும் மூலக அணி அட்டவணையில் ஒரே இடத்தைப் பெறுபவை. [‘Iso’ ‘tope’ means Same Place].

    93[நெப்டியூனியம்]239  -1[பீட்டா துகள்]0 –>94[புளுடோனியம்]239

    92[யுரேனியம்]238 + 1[கன ஹைடிரஜன்]2 –>93[நெப்டியூனியம்]238 + 0நியூட்ரான்]2

    93[நெப்டியூனியம்]238 – 1[பீட்டா]0 —>  94[புளுடோனியம்]238

    94[புளுடோனியம்]239 இன் ஏகமூலம், 94[புளுடோனியம்]238.

    ஸீபோர்க் புது மூலகத்துக்கு நெப்டியூனுக்கு அப்பால் சூரிய மண்டலத்தில் சுற்றும் கோள் ‘புளுடோவின்’ பெயரைத் தீர்மானித்து, ‘புளுடோனியம்’ [Plutonium (Pu)] என்று பெயர் வைத்தார்! அதைப் பின் தொடர்ந்து, 1944 இல் ஸீபோர்க் குழுவினர் புளுடோனியத்தை ஆல்ஃபா கணைகளால் தாக்கி, அணு எண் 95 உடைய அடுத்த புது மூலகத்தை ஆக்கினர். அதற்கு ‘அமெரிகியம் ‘ [Americium (Am)] என்று பெயரிட்டனர். அணு எண் 96 உடைய புது உலோகம் ‘கியூரியம்’ [Curium (Cm)] என்று மேரி கியூரி நினைவாகப் பெயரிடப் பட்டது. 1950 இல் ஆல்ஃபா கணைகளை அமெரிக்கியம் மீது ஏவி, அணு எண் 97 கொண்ட புது உலோகம் ‘பெர்கெலியம்’ [Berkelium (Bk)] உண்டாக்கப் பட்டது. சுழல்வீச்சு யந்திரத்தில் கியூரியத்தை ஆல்ஃபா கணைகளால் தாக்கி, அணு எண் 98 பெற்ற ‘காலிஃபோரினியம்’ [Californium (Cf)] உண்டானது.

    1952 இல் பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் [Eniwetok] தீவில் அமெரிக்கா சோதனை செய்த முதல் வெப்ப அணுக்கரு ஆயுத [Thermo Nuclear Weapon ‘ஹைடிரஜன் குண்டு’] வெடிப்பில் சிதறிய கதிரியக்க பிளவுத் துணுக்குகளில் [Fission Products], அணு எண்கள் 99, 100 கொண்ட மூலகங்கள் காணப் பட்டன! ஸீபோர்க் குழுவினர் அவற்றைப் பெர்கெலியில் தனியாகச் செய்து காட்டினர்! அணு எண் 99 உடைய மூலகம் ஐன்ஸ்டைன் நினைவாக ‘ஐன்ஸ்டைனியம்’ [Einsteinium (Es)] எனப் பெயரிடப் பட்டது! முதல் அணுக்கருத் தொடரியக்கம் நிகழ்த்திய என்ரிகோ ஃபெர்மி நினைவாக, அணு எண் 100 உள்ள உலோகம் ‘ஃபெர்மியம்’ [Fermium (Fm)] என்று அழைக்கப் பட்டது.

    Half-Lives of Transuranium Elements [Plutonium]

    அடுத்து ஆல்ஃபா துகள்களை ஐன்ஸ்டைனியம் மீது தாக்கி அணு எண் 101 கொண்ட புது உலோகம் 1955 இல் படைக்கப் பட்டது. ரஷ்ய ரசாயன விஞ்ஞானி மென்டிலீஃப் [Mendeleef (1834-1907)] நினைவாக, அது ‘மென்டிலிவியம்’ [Mendelevium (Md)] என்று பெயரிடப் பட்டது! மென்டிலீஃப் மூலக அணிக் கோட்பாடை [Periodic Law] உருவாக்கி, ஒழுங்கு படுத்தி அணி அட்டவணையை 1869 இல் [Periodic Table] அமைத்தவர். 1958 இல் ‘நேர்போக்கு விரைவாக்கியில்’ [Linear Accerator] கியூரியத்தைக் கரி அயனி களால் [Cabon Ions] தாக்கி அணு எண் 102 உள்ள மூலகம், ஆல்ஃபிரட் நோபெல் நினைவாக ‘நொபெலியம்’ [Nobelium (No)] என்று பெயர் வைக்கப் பட்டது!

    Fissile Experiment Assembly

    ஸீபோர்க் யுரேனியத்தொடர் உலோகங்களின் [Transuranium Metals] ‘அரை ஆயுட்கள்’ [Half Lives] ஓர் ஒழுங்குச் சீர் முறையில் குறைவதைக் [Progressively Shorter] கண்டார்! ‘அரை ஆயுள் ‘ என்பது கதிரியக்க மூலகம் ஒன்று கதிர்வீசித் தேயும் போது பாதி எடையாக மாறும் காலத்தைக் குறிக்கிறது. புளுடோனியம் 239 இன் அரை ஆயுள் 24,360 ஆண்டுகள். அமெரிகியத்தின் அரை ஆயுள் 7370 ஆண்டுகள்! காலிஃபோர்னியத்தின் அரை ஆயுள் 800 ஆண்டுகள்! கியூரியத்தின் அரை ஆயுள் 18 ஆண்டுகள்! மென்டிலிவியம் மூலகத்தின் அரை ஆயுள் 60 நாட்கள்! ஃபெர்மியத்தின் அரை ஆயுள் 3 மணி நேரங்கள்! நொபெலியத்தின் அரை ஆயுள் 3 விநாடிகள்! ஸீபோர்கியம் என்று பெயரிடப் பட்ட அணு எண் 106 கொண்ட உன்னில்ஹெக்ஸியத்தின் அரை ஆயுள் 1 விநாடிக்கும் குறைந்தது!

    அணு ஆயுதத் தயாரிப்பில் ஸீபோர்க்கின் முக்கிய பங்கு

    இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த சமயத்தில் கெலென் ஸீபோர்க், சிகாகோ பல்கலைக் கழகத்தின் உலோக ஆராய்ச்சிக் கூடத்தில் 1942 முதல் 1946 வரை, மன்ஹாட்டன் அணு ஆயுதத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டார். ரசாயனக் கூடத்தில் 1941 இல் புளுடோ னியத்தைக் கண்டு பிடித்த போது, மிக மிகச் சிறிய அளவைத்தான் அவர் கையாண்டார். ஆனால் அணு ஆயுதத்திற்கு கிலோ கிராம் கணக்கில் புளுடோனியம் தேவைப் பட்டதால், தனி அணு உலை ஒன்று அமைக்கப் பட்டுப் புளுடோனியம் தயாரிக்கப் பட்டது!

    Relative Energy Requirement of Fissile Materials

    ஹெலென் ஸீபோர்க்கின் ரசாயனக் குரு நோபெல் பரிசு பெற்ற ஜெர்மன் விஞ்ஞானி ஆட்டோ ஹான் [Otto Hahn]! ஆட்டோ ஹான் யுரேனிய அணுவைப் பிளந்ததாக முதலில் உலகுக்கு அறிமுக மானவர்! அவரே இருபதாம் நூற்றாண்டில் ‘கதிர்வீச்சு ரசாயனப் பிதா’ [Father of Radiochemistry] வென்று போற்றப் படுபவர்! யுரேனியத்தொடர் மூலகங்களின் [Transuranium Elements] இயக்கங்களில் விளைந்த சிக்கலான கதிரியக்க மூலக்கூறுகளைப் [Molecules] பிரித்தெடுப்பதில் அவர் மிகவும் சாமர்த்திய மானவர்! ஆட்டோ ஹானின் ரசாயன முறைகளைப் பின்பற்றிதான், ஸீபோர்க் தூய்மையான புளுடோனியத்தைப் பிரித்தெடுத்தார்!

    யுரேனியத்தின் திணிவு [Density] 18.7 gm/c.c., புளுடோனியத்தின் திணிவு 19.8 gm/c.c. [ஒப்பு நோக்க இரும்பின் திணிவு 7.9 gm/c.c]. யுரேனியம் 235 மூலகத்தைப் ‘பரவும் வாயு முறையில்’ [Gaseous Diffusion Process] தனித்தெடுப்பதை விட, ரசாயன முறையில் புளுடோனியம் 239 மூலகத்தைப் பிரிப்பது எளியது! சம எடையுள்ள புளுடோனியம் 239, யுரேனியம்235 இரண்டையும் நியூட்ரான் கணைகளால் பிளந்தால், புளுடோனியமே அதிக அளவு வெப்ப சக்தியை வெளியிடுகிறது! காரணம், புளுடோனியம் 239 மூலகத்தின் பிளவு முகப்பரப்பு [Fission Cross Section], யுரேனியம் 235 இன் முகப்பரப்பை விட 28% மிகையானது!

    பிளவு முகப்பரப்பு என்றால் நியூட்டிரான் கணைகள் குறிமூலகம் ஒன்றைத் [யுரேனியம் 235 அல்லது புளுடோனியம் 239] தாக்கி அணுப்பிளவு நிகழ்த்தும் ஓர் எதிர்பார்ப்பு அளவைக் [Prabability of Fission] குறிக்கிறது. யுரேனியம் 235 மூலகத்திற்குப் பிளவு முகப்பரப்பு 580 பார்ன்ஸ் [580 barns] என்றால், புளுடோனிய [Pu239] உலோகத்துக்கு 740 பார்ன்ஸ் [740 barns]! அதாவது சிறிதளவு புளுடோனிய உலோகத்தால் பூரணத் தொடரியக்கம் [Critical Chain Reaction] நிகழ்த்த முடியும்!

    சிகாகோ பலகலைக் கழகத்திற்கு ஸீபோர்க் அவரது 30 ஆவது பிறந்த நாளன்று [1942 ஏப்ரல் 19] வந்து சேர்ந்தார். டிசம்பர் 2 ஆம் தேதியில் என்ரிகோ ஃபெர்மி முதல் யுரேனிய அணு உலையில் அணுக்கருத் தொடரியக்கத்தை [Nuclear Chain Reaction] நிகழ்த்திக்குக் காட்டிய பின், பிளவுப் பண்டங்களைப் பிரித்துப் புளுடோனியத்தைத் தனித்தெடுப்பது, ஸீபோர்க்கின் பொறுப் பானது! அணு உலைகளிலும், சுழல்வீச்சு யந்திரங்களிலும், இராப் பகலாய் யுரேனியத்தை நியூட்ரான்களால் தாக்கித் தேவை யான புளுடோனியம் ‘ஃபாட் மான்’ அணுகுண்டு தயாரானது!

    Nobel Prize Winners

    நியூமெக்ஸிகோ லாஸ் அலமாஸில் 1945 ஜூன் 11 ஆம் தேதி அணு ஆயுதங்கள் தயாராக இருந்த தறுவாயில் உடன் பணி செய்த விஞ்ஞானி ஜேம்ஸ் ஃபிராங்க் [James Franck (1882-1964)] குழுவினருடன் தானும் சேர்ந்து, ஜப்பானில் அணுகுண்டு போடப் போவதைத் தடுக்க ஸீபோர்க் முயன்றார்! 1925 இல் நோபெல் பெற்ற ஜேம்ஸ் ஃபிராங்க், பயங்கர அணுகுண்டைப் பற்றி ஜப்பானி யருக்கு முன்னறிவிப்பாக எச்சரிக்கை விடாமல், அவர்கள் மீது வீசக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தார்! அக்கருத்தை வலுயுறுத்த ‘ஃபிராங்க் விண்ணப்பம்’ என்ற வேண்டுகோள் ஒன்றை எழுதி, ஸீபோர்க் உட்பட பலரது கையெழுத்துக்களுடன் அமெரிக்க யுத்தச் செயலாளர், ஸ்டைமனுக்குப் [Secretary of War, Stimon] போர்க் காலத்தில் அனுப்பினார்!  ஆனால் அது நிறைவேறவில்லை.

    விண்ணப்பத்தின் அறிவிப்பு இதுதான்: ‘முன்னெச்சரிக்கை எதுவு மின்றி ஜப்பான் மீது அணு ஆயுதங்களைப் போடுவது, நியாய மற்றது என்று நாங்கள் நம்புகிறோம்! மனித இனத்தின் மீது கருணை எதுவுமின்றி கண்மூடித்தன மாக அமெரிக்கா முதன் முதலாக அணுகுண்டை வீசினால், உலக மாந்தரின் ஆதரவை இழக்க நேரிடும்!  அப்புறம் அணு ஆயுதப் பெருக்கத்துக்கு அது வழி வகுக்கும்!  அடுத்து அகில நாடுகளின் அணு ஆயுதக் கட்டுப்பாடுக்கு அமெரிக்கா உடன்பட வேண்டிய திருக்கும்! மனிதரற்ற ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே அணுகுண்டை வெடித்துக் காட்டி ஜப்பானுக்கு முன்பாகவே எச்சரிக்கை செய்தால், பலனுள்ள சேதார மற்ற, வெற்றிகரமான சமாதானத்தைச் சாதிக்க முடியும்’

    யுத்தச் செயலாளரோ, அல்லது ஜனாதிபதி ட்ரூமனோ அந்த முக்கிய விண்ணப்பத்தைப் படித்ததாக அறியப் படவில்லை! அவ்வாண்டு ஜூலை முதல் தேதியே, ஜப்பானில் அணுகுண்டு வீச்சு முடிவும், போடப் போகும் இடங்களும் தீர்மானமாகி விட்டன என்பது பின்னால் தெரிய வந்தது! ஜேம்ஸ் ஃபிராங்க், கெலென் ஸீபோர்க் குழுவினர் பெரும் ஏமாற்றம் அடைந்தாலும், ஜப்பானில் அணு ஆயுதங்கள் விளைவிக்கப் போகும் கோரச் சேதங்களைத் தடுக்க முற்பட்டோம் என்று மன ஆறுதல் அடைந்தனர்!

    கெலென் ஸீபோர்க் பெற்ற பெரும் வெகுமதிகள்

    அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி ஸீபோர்க்கை 1961 இல் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதி [Chairman, Atomic Energy Commission] ஆக்கினார்! ஸீபோர்க் அப்பதவியில் பத்து வருடங்கள் [1961-1971] பணி யாற்றினார். அவர் காலத்தில்தான் ஆக்க வினைகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்த அமெரிக்காவில் அணு மின்சக்தித் தொழிற் திட்டங்கள் பல முளைத்தெழுந்து, நூற்றுக் கணக்கான அமெரிக்க அணுசக்தி நிலையங்கள் அமெரிக்காவிலும், அகில நாடுகளிலும் நிறுவனம் ஆகி வேரூன்றின!

    ஸீபோர்க் 1951 இல் ரசாயனத்துக்கு நோபெல் பரிசு பெற்றார். 1959 இல் அமெரிக்காவின் மதிப்புயர்ந்த ‘என்ரிகோ ஃபெர்மிப் பரிசு’ [Enrico Fermi Award] ஸீபோர்க்கு அளிக்கப் பட்டது. மற்றும் ஸீபோர்க் 1948 இல் அமெரிக்க சுவீடிஷ் எஞ்சினியர்கள் அளித்த ‘ஜான் எரிக்ஸன் தங்கப் பதக்கம்’, அமெரிக்க ரசாயனக் குழுவினரின் ‘நிகோலஸ் பதக்கம்’, 1957 இல் அமெரிக்க ரசாயனத் தொழிற்துறை களின் ‘பெர்கின் பதக்கம்’ 1963 இல் ஃபிலடல்ஃபியா ஃபிராங்கலின் ஆய்வுக்கூடம் அளித்த ‘ஃபிராங்கலின் பதக்கம்’ ஆகியவற்றையும் பெற்றார்!

    1994 ஆம் ஆண்டில் ஸீபோர்க் முன்பு [1940-1955] செயற்கை முறையில் ஆக்கிய உன்னில்ஹெக்ஸியம் [Unnilhexium(106)] மூலகம் அவரது பெயரில் ‘ஸீபோர்கியம்’ [Seaborgium (SG)] என்று பெயரிடப் பட்டது !

    Glenn Seaborg

    ****************

    தகவல்:

    1.  http://en.wikipedia.org/wiki/Glenn_T._Seaborg  [December 10, 2014]

    2. http://www.britannica.com/EBchecked/topic/530808/Glenn-T-Seaborg  [September 9, 2014] 

    +++++++++++++++++++

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) December 16, 2014  (R-3)

    Attachments area
    Preview YouTube video Glenn Seaborg: Shaking Up the Periodic Table

    Glenn Seaborg: Shaking Up the Periodic Table

    Preview YouTube video Glenn Seaborg 1 Remembering Plutonium 238 1997

    Glenn Seaborg 1 Remembering Plutonium 238 1997

    Preview YouTube video Glenn Seaborg Discoverer of TEN Elements Biography LANL Pt1

    Glenn Seaborg Discoverer of TEN Elements Biography LANL Pt1

    Preview YouTube video Glenn Seaborg Ten Elements Plutonium discovered Berkeley Labs LANL Pt2

    Glenn Seaborg Ten Elements Plutonium discovered Berkeley Labs LANL Pt2

    Preview YouTube video Bogdan Maglich – 50 Years with Nuclear Fission @ TEAC3

    Bogdan Maglich – 50 Years with Nuclear Fission @ TEAC3

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 36

    சு.கோதண்டராமன்.

    முரண்பாடான கருத்துகள்

     

    Five_great_Yagnas

     

    சென்ற பகுதிகளில் யக்ஞம் பற்றிக் கூறப்பட்டவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவோம்.

    தேவர்களைக் குறித்து அக்னியில் ஆகுதி செய்வது தான் யக்ஞம். இதனால் தேவர்கள் மகிழ்கிறார்கள். இது உணவு, சந்ததி, ஆயுள் முதலான எல்லா நலன்களையும் தரும். இதுவே உலகின் மையப்புள்ளி. யக்ஞம் செய்யாதவர்கள் அழிகிறார்கள் என்று சொல்லப்பட்டது.

    ஆகுதி மட்டுமே யக்ஞம் ஆகாது. பிரார்த்தனை இல்லாமல் யக்ஞம் பயனில்லை. ஆனால் யக்ஞம் இல்லாமல் பிரார்த்தனை மட்டுமே பலன் தரும் என்ற கூறப்படுவதைப் பார்த்தோம்.

    இதற்கு மாறாக, வெறும் தோத்திரங்கள் பலன் தரா, ஹவிஸும் அவசியம் என்றும் கூறுகிறது வேதம். (8.9.6)

    யக்ஞம் செய்தால் மட்டும் போதாது, கடுமையாக உழைக்கவும் வேண்டும். பிறர் நலனுக்காகச் செய்யப்படும் அருஞ்செயலான சமீகள் யக்ஞத்தை விட மேலானவை. யக்ஞம் செய்யாதவருக்கும், சமீகள் தேவ பதவியைக்கூடப் பெற்றுத் தரும் என்று சொல்லப்பட்டிருப்பதையும் பார்த்தோம்.

    இப்படி ஒன்றுக்கொன்று முரணான செய்திகள் காணப்படுவதால் குழப்பமே ஏற்படும். வேதத்தில் ஏன் இப்படிக் குழப்பம்? அதனுடைய உண்மையான நிலை என்ன? தீ மூட்டி வழிபாடு செய்வதா, வேண்டாமா? ஆராய்வோம்.

    வேதத்தில் இருவகையான எண்ண ஓட்டங்கள் காணப்படுவது உண்மை. சடங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மந்திரங்களும் உள்ளன. சடங்கை விட பக்தி மனோபாவம், உழைப்பு இவைதான் முக்கியம் என்று கூறும் மந்திரங்களும் உள்ளன.

    வெவ்வேறு ரிஷிகள் வெவ்வேறு விதமாகப் பேசினால் இது அந்தந்த ரிஷியின் கருத்து என்று விட்டுவிடலாம். ஒரே ரிஷியின் பெயரால் வழங்கும் சூக்தத்திலேயே இருவகைக் கருத்துகளும் வரும்போது அதற்குக் காரணம் என்ன என்று ஆராயத் தோன்றுகிறது.

    வேதம் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு ரிஷிகளால் இயற்றப்பட்டது, வியாசரால் தொகுக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம்.

    வேத இலக்கியத்தின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். ரிக் வேதத்திலும் அதன் ஆறாவது மண்டலம் மிகப் பழமையானது. இந்த ஆறாவது மண்டலம் இயற்றப்படுவதற்கு முன்பும் மக்கள் இருந்தார்கள். நாகரிகம் இருந்தது. மொழி இருந்தது. அதற்கு ஒரு இலக்கணம் இருந்தது. இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும். யாப்பிலக்கணமும் இருந்தது. சந்தஸ்கள் வரையறுக்கப்பட்டிருந்தன.

    இவ்வளவு வளர்ச்சி பெற்ற மக்களிடம் கடவுள் பற்றிய ஏதோ ஒரு கோட்பாடும் இருந்திருக்க வேண்டும். அக்னியையும் இந்திரனையும் வேத ரிஷிகள் புதிதாகக் கண்டு பிடித்துச் சொல்லவில்லை. முன்பே அந்தத் தேவர்களும் இருந்தார்கள், அவர்களுக்கான ஏதோ ஒரு வழிபாட்டு முறையும் இருந்திருக்கிறது.

    வேத ரிஷிகள் இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகிறார்கள். ரிஷிகளின் வாக்கில் “நாம் ஒரு புதிய பிரார்த்தனை படைப்போம்” என்ற கருத்து அடிக்கடி காணப்படுகிறது. (6.17.13, 6.18.15) அப்படிப் புதிய பிரார்த்தனை புதிய கருத்துகளுடன் படைக்கும்போது அவர்கள் பழைய கருத்துகளுடன் மோதவில்லை, தவறு என்று ஒதுக்கவில்லை. நான் சொல்வது மட்டுமே உண்மை என்று கூறாமல், ஒரே உண்மையைப் பலர் பலவிதமாகக் காண முடியும் என்பதை ஏற்றுக் கொண்டு பழைய கருத்துகளையும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறார்கள்.

    ஒரே மந்திரம் வெவ்வேறு ரிஷிகளின் பெயரால் வழங்கப்படுகிறது. (உ-ம் 1.23.20 – 10.72.2) இதிலிருந்து பழைய ரிஷிகளின் மந்திரங்கள் பிற்காலத்தவரால் தங்கள் புதிய படைப்புகளுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன என்று நாம் அறிகிறோம்.

    ஒன்று உள்ளது. அதைப் பலரும் பல விதமாகப் போற்றுகிறார்கள் என்பது அவர்கள் கொள்கை. (1.164.46) எனவே பழைய கருத்துகளை அலட்சியம் செய்யாமல் அதையும் சேர்த்துக் கொண்டு புதியதும் படைக்கிறார்கள். இதுதான் இந்த இரு வகையான வேறுபட்ட எண்ண ஓட்டங்களுக்குக் காரணம்.

    தீ மூட்டி வழிபடுவது பழைய வழக்கமாக இருக்கக் கூடும். புதிய ரிஷிகள் அதைக் கண்டிக்கவில்லை. அத்துடன் கூடத் தங்கள் கருத்துகளையும் சொல்கிறார்கள். யக்ஞத்தை விட சமீ மேலானது, யக்ஞம் மட்டும் போதாது, உழைக்கவும் வேண்டும், ஆகுதி மட்டுமே யக்ஞத்தை முழுமை ஆக்காது, பிரார்த்தனையும் நமஸ்காரமும் புத்தியும் அவசியம் என்று வருபவை தாம் அந்தப் புதிய கருத்துகள்.

    புதிய கருத்துகளைத் தனி அத்தியாயமாகப் பிரித்து வைக்காமல் ஒரே சூக்தத்திலேயே முந்திய ரிஷிகள் செய்த பழைய பாடல்களையும் போற்றுகிறார்கள், புதிய கருத்துகளையும் சொல்கிறார்கள். பிறருடன் முரண்படாமல் தன் கருத்தைக் கூறும் இந்த முறை ரிக் வேதத்தின் சிறப்பு.

    இதை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா? எப்பொழுதும் எந்தப் புதிய கருத்துக்கும் வரவேற்பு இருப்பதும் எதிர்ப்பு இருப்பதும் இயற்கை. அது போல, ரிக் வேத ரிஷிகளின் இந்தப் புதுமைகளைச் சிலர் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும். சிலர் புறக்கணித்துப் பழைய முறைகளையே அனுசரித்து இருக்கக் கூடும். அவரவர் இஷ்டம் போல் வழிபடலாம் என்ற சுதந்திரம் இருந்ததால் இந்த இரு சாராரிடையே பிணக்குகள் பிளவுகள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் அதே வேதத்தைப் பின்பற்றி வந்தனர்.

    நாளடைவில் பழைய சடங்குக் கட்சியினரின் கை ஓங்கியிருக்க வேண்டும். அவர்கள் ரிக் வேத மந்திரங்களில் பலவற்றை வேள்விக்குப் பயன்படும் வகையில் ஆங்காங்கு மாற்றிக் கொண்டனர். அதில் வேள்வியை வலியுறுத்தும் பல புதிய மந்திரங்களையும் சேர்த்துக் கொண்டனர். தங்கள் சந்ததியினருக்கு அதை மட்டுமே சொல்லிக் கொடுத்தனர். இந்தப் புதிய தொகுப்பு யஜுர் வேதம் (வேள்விக்கான வேதம்) என்று பெயரிடப்பட்டது.

    யஜுர்வேதத்தில் பிரார்த்தனையை விட, மனோபாவத்தை விட அக்னியில் செய்யப்படும் ஆகுதிச் சடங்குக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. யாக குண்டம் எப்படி அமைய வேண்டும், எத்தனை செங்கற்கள் அடுக்கப்பட வேண்டும், ஹவிஸ்ஸாக என்னென்ன பொருள் சமர்ப்பிக்கப்பட வேண்டும், அப்பொழுது என்ன மந்திரம் சொல்லப்பட வேண்டும் என்பது பற்றிய தகவல்களே மிகுதியாகக் கொண்டது யஜுர்வேதம். பிராமண இலக்கியங்களில் இது மேலும் விரிவடைந்தது. இவை வேத மந்திரங்களின் பொருளை யாகத்திற்குப் பயன்படும் வகையில் விளக்கின.

    யாகங்கள் மிகுதியாகப் பெருகியதால் இவை சாமானிய மக்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக ஆயின. அந்நிலையில் தான் யாக முறைகளைக் கண்டிக்கும் புத்த சமண சமயங்கள் தோன்றின. யாகங்களுக்குப் புதிய தத்துவ விளக்கம் தந்து அவற்றை மறைமுகமாக எதிர்க்கும் உபநிடதங்கள் தோன்றின.

    இந்திரனைத் துதிக்கும்போது நீயே முதல் தெய்வம் என்று கூறுவதும் அவ்வாறே அக்னியைப் போற்றும்போது நீயே பரம்பொருள் என்று பேசுவதும் முரண்பாடு போல நமக்குத் தோன்றும். ஆனால் அவை முரண்பாடு அல்ல, எப்பெயரிட்டு அழைத்தாலும் தெய்வம் ஒன்று என்பதன் அடிப்படையில் சொல்லப்பட்டது என்பதை முன்பு பார்த்தோம்.

    அதே போல யக்ஞம் செய்து வழிபடுவதும் யக்ஞம் செய்யாமல் வழிபடுவதும் இரண்டுமே ஒன்றுதான். வழிபாடு தான் முக்கியமே தவிர, முறை முக்கியம் அல்ல என்பதே வேதத்தின் கருத்து.

     

     

     

    படம் உதவி: விக்கிபீடியா

    Share
  • என் மார்கழி மாதக் கவிதைகள்!

    -அ.வெற்றி

    மழை வேண்டாமென
    மண்டியிடுகின்றன
    முற்றத்தில்                                                           kolam

    *மாக்கோலங்கள்*

    ========

    கோலத்தின் அழகை
    மிஞ்சிவிட்டன
    சுற்றிவந்த குழந்தையின்

    *பாதச்சுவடுகள்*

    ==========

    அவளைப்போலவே
    வளைந்து நெளிந்து அழகாய்
    அவளிட்ட

    *சிக்குக் கோலம்*

    ========

    காலநிலை மாற்றதிலும்
    மாறாமல் பூக்கும்
    மார்கழிப் பூக்கள்

    *கோலங்கள்*

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . . (135)

    சக்தி சக்திதாசன்

    அன்புமிக்க வல்லமை வாசக நெஞ்சங்களே!

    அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு வாரத்திலே உங்களுடன் இம்மடல் மூலமாக மனம் திறக்க விழைகிறேன்.

    மிகவும் இளம் வயதிலேயே எனது தாய்மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்த என்னை தத்துப்பிள்ளையாக ஏற்றுக்கொண்ட இவ்விங்கிலாந்து மண்ணிலிருந்து வாரமொரு மடல் நாம் பார்க்க விழைவது நிகழ்வுகள், நினைவுகள், அனுபவங்கள் என்பவையே.

    2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி இங்கிலாந்தில் நான் கால் பதித்து நாற்பது வருடங்கள் பூர்த்தியாகின்றன.

    18 வயது இளைஞனாக வாலிபக் கனவுகளோடு இங்கிலாந்து எனும் இந்தப் பரந்த தேசத்தினுள் இலங்கை எனும் புள்ளியிலிருந்து தூக்கி வீசப்பட்டவன் நான்.

    சராசரி அறிவும், சராசரிக் கல்வித் தகமைகளும் மட்டுமே கொண்ட எனக்கு வாழ்வில் பல அனுபவங்களைக் கொடுத்ததோடு வாழ்வாதாரத்திற்கான சகல சந்தர்ப்பங்களையும் வேற்றுமை காட்டாது நல்கிய ஒரு நன்னிலம் இங்கிலாந்து தேசம்.

    அதற்காக இந்நாட்டில் வெளிநாட்டிலிருந்து வந்த குடியேற்றவாசிகளான எம்மை நோக்கிய துவேஷம் நிறைந்த நிகழ்வுகள் எதுவுமே நிகழவில்லை என்று சொன்னால் என்னைப் போன்ற முட்டாள் இருக்க முடியாது.

    ஆனால் நான் பிறந்த தாய்மண்ணிலேயே ஒரே மண்ணின் மைந்தர்களுக்குள்ளேயே பலவிதமான வேறுபாடுகளினூடாக உருவான முரண்பாடுகள் காணப்படுகின்றவேளையில் வேற்றுநிற மனிதர்கள் தம் நாட்டில் வந்தேறு குடிகளாய் லட்சணக்கணக்கில் வந்திறங்கும் போது ஒரு சிலர் துவேஷத்தைக் காட்ட முற்படுவது இயற்கைதானே.

    அதை ஏற்றுக்கொண்டு அதற்கு ஈடு கொடுத்து நாம் முன்னேறும் பாதைதான் எமக்குப் பல அனுபவப்பாடங்களை அளிக்கும் பள்ளியாக அமைகிறது..

    இங்கிலாந்திலே பொதுத்தேர்தல் 2015ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறவிருக்கிறது. அரசியல்களம் மிகவும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

    இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற இங்கிலாந்துப் பிரஜை எனும் வகையில் இந்நாட்டின் அரசியலோடு எமது வாழ்க்கை பின்னிப் பிணைந்துள்ளது.

    பல புலம்பெயர் தமிழர்கள் உட்பட்ட ஆசிய இனத்தவர் இங்கிலாந்து அரசியல் கட்சிகளுக்குள் அங்கத்துவம் பெற்று தமது பங்களிப்புகளைச் செய்யத் தொடங்கியுள்ளார்கள்:

    இவ்வரசியல் களத்தின் மாற்றங்கள், அம்மாற்றங்கள் எமது வாழ்வினில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்களைப் பற்றி நாம் பாராமுகமாக இருந்து விட முடியாது.

    இங்கிலாந்தில் குடியுரிமை பெற்று வாழ்கின்ற முதலாவது தமிழர் தலைமுறையின் சந்ததியினர் இத்தளங்களில் தான் தமது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராட வேண்டியுள்ளது.

    சரி இன்றைய அரசியல்களத்தை நோக்கி ஒரு மேலோட்டமான பார்வையை வீசுவோம்,

    2015.3

    நாம் இதனைச் சாதித்தோம் அதனைச் சாதித்தோம் எனப் பதவியிலிருக்கும் கூட்டரசாங்காத்தின் பிரதான கட்சியான கன்சர்வேடிவ் கட்சி கூப்பாடு போடத் தொடங்கியுள்ளது.

    அட போங்கப்பா, நாம் உங்களோடு கூட்டுச் சேர்ந்து அரசமைத்துக் கொண்டிருந்திருக்காவிட்டால் நீங்க எதைப் பெரிசாச் சாதித்திருக்க முடியும்? என்கிற பாணியில் பதிலுக்கு இரைகிறார்கள் இக்கூட்டரசாங்கத்தின் சிறுபான்மைக் கட்சியான லிபரல் டெமகிரட்ஸ் கட்சி.

    அடிப்படைக் கொள்கையிலே எதிருக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட இரு கட்சிகள் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்தது இங்கிலாந்தின் அரசியல் வரலாற்றிலே இதுதான் முதலாவது தடவையாகும்.

    2015.2

    உலகம் முழுவதுமே பொருளாதாரச் சிக்கல்களின் மத்தியில் உழன்று கொண்டிருக்கும்போது இங்கிலாந்து என்ற தள்ளாடிக் கொண்டிருக்கும் கப்பலை நேர் செய்து கரையை நோக்கிச் செலுத்தும் பணியில் தமது கொள்கைகளை விட்டுக்கொடுத்து நாட்டின் நன்மையை முதன்மைப்படுத்தினார்கள் என்று இக்கூட்டராசாங்க ஆரம்பத்தில் அவர்களுக்கு செல்வாக்கு இருந்தது உண்மையே.

    ஆனால் நாட்பட, நாட்பட அவர்களுக்கு இடையில் இருந்த கொள்கை வேறுபாடு அங்காங்கே தலைவிரித்தாடியது.

    சர்வகலாசாலை மாணவர்களின் கட்டணத்தை அறவே ஒழிக்கப்பாவதாகக் கூறி தேர்தலில் கணிசமான அளவு வாக்குகளைப் பெற்ற லிபரல் டெமகிரட்ஸ் கட்சி இக்கொள்கையை கைவிட்டதன் பிரதிபலிப்பு அவர்களின் செல்வாக்கு பாதளத்தை நோக்கிப் பாய்ந்தோடியது.

    இடையிடையே அரசாங்கம் கொண்டுவந்த வரிவிலக்குச் சட்டங்கள் தமது ஆதிக்கத்தினாலேயே கிடைத்தது என்று லிபரல் டெமகிரட்ஸ் கட்சி தம்பட்டம் அடித்தும் இறங்கிய அவர்களது செல்வாக்கு உயரவில்லை.

    அரசாங்கக் கதிரையில் இருந்து மக்களால் பதவியிறக்கப்பட்ட லேபர் கட்சி இத்தேர்தல் தோல்வியினால் சரியான பாடத்தைக் கற்றுக் கொண்டதா? என்பது சந்தேகமே!

    பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்காக பல மூர்க்கமான செலவுக் கட்டுப்பாட்டுகளை விதித்ததினால் மக்களின் வாழ்க்கைத்தரம் குன்றியிருந்தும் அதனால் அவர்களுக்குக் கிடைத்த ஆதரவின் முழு அனுகூலத்தையும் பெற முடியாமல் லேபர் கட்சி அல்லாடுகிறது.

    காரணம் என்ன ?

    ஒரே காரணம் அக்கட்சியின் தலைவர் “எட் மில்லிபாண்ட்” என்கிறார்கள் ஒரு சாரார். தமது கட்சியின் நிலைப்பாட்டை மக்களின் முன்னால் சரிவர எடுத்துச் செல்லும் திறமை இவருக்கில்லை என்பதுவே பலரினது குற்றச்சாட்டு.

    வரும் தேர்தலில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போவது “யூகிப் (UKIP)” என்றழைக்கப்படும் ஜக்கிய இராச்சிய விடுதலை முன்னணி கட்சியாகும்.

    அட அப்படி என்ன இக்கட்சியின் மகத்துவம் என்கிறீர்களா ?

    அப்படி மகத்துவம் ஒண்ணும் இல்லீங்க ! எல்லாத்துக்கும் நாமதான் காரணம்.

    என்ன சக்தி “நாம” என்கிறீங்களே அப்படி நீங்க என்னதான் செஞ்சிட்டீங்க ?”என்னு கேட்காதீங்க . இக்கட்சியோட அடிப்படைக் கொள்கையே “வெளிநாட்டுக் குடியேற்றக்காரரை” கட்டுப்படுத்துவதே. அத்துடன் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜக்கிய இராச்சியம் வெளியேற வேண்டுமென்பது இவர்களுடைய அடுத்த கொள்கை.

    2015.4

    “வேலையில்லாத் திண்டாட்டம்” “வீடில்லாத் திண்டாட்டம்” “தம் குழந்தைகளுக்குத் தாம் விரும்பிய பள்ளியில் இடம் கிடைக்காமை” எனப் பல்வேறு அங்கலாய்ப்புகளின் மத்தியில் வாழும் இங்கிலாந்து நாட்டு மக்களுக்கு இதற்கெல்லாம் காரணம் இந்நாட்டின் கட்டுப்பாடற்ற “வெளிநாட்டுக்காரரின் வருகை” எனும் கோஷம் மிகவும் இலகுவாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வாதமாகிறது.

    பிரதான கட்சிகளான “கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சி” என்பன இவ்வெளிநாட்டுக் கட்டுப்பாடு எனும் வாதம் இனத்துவேஷ அடிப்படியில் எழுந்தது என்பது போன்ற பாணியில் இது போன்ற விவாதங்களைத் தவிர்த்து வந்தது மக்களின் ஆர்வத்தை “யூகிப்” போன்ற கட்சியின் பால் திருப்பி விட்டது என்றே கூறலாம்..

    இங்கிலாந்து அளவில் சிறிய நாடு. தொடர்ந்தும் அளவு கணக்கற்ற முறையில் வெளிநாட்டிலிருந்து அதுவும் குறிப்பாக ஜரோப்பிய யூனியனின் புது வருகைகளான கிழக்கு ஜரோப்பிய நாட்டிலிருந்து மக்கள் இங்கே வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.

    தமது நாடுகளில் வறுமையின் எல்லைக்கோட்டில் வாழ்ந்த இவர்கள் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு பணிபுரிய சித்தமாகவிருக்கிறார்கள். இதனால் இங்கிலாந்து நாட்டு மக்களை பணிக்கு அமர்த்துவதை விட இவர்களை பணிக்கு அமர்த்துவதன் மூலம் வியாபார முதலாளிகள் தமது இலாபத்தை பெருக்கிக் கொள்வதால் இங்கிலாந்து நாட்டு மக்கள் வேலையில்லா பட்டியலை நோக்கி அதிவிரைவாகத் தள்ளப்படுகிறார்கள்.

    இது ஒரு சாராரின் வாதம்.

    எது எப்படி இருப்பினும் வரும் பொதுத்தேர்தலில் இப்பிரச்சனையே முதலிடம் வகிக்கப் போகிறது. தற்போதைய கருத்துக்கணிப்புகளின்படி”யூகிப்” எனும் கட்சி கூட்டரசாங்கத்தில் இடம்பெறும் வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.

    2015.1

    எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் புலம் பெயர் தமிழன் எனும் ரீதியில் இந்தத் தேர்தல் இதுவரையிலுமான தேர்தல்களை விட அதிமுக்கியமானதொன்றாகிறது எனலாம்.

    “போகப் போகத் தெரியும் இப்பூவின் வாசம் புரியும்” எனும் பாடல் வரிகளுக்கெற்ப வரும் 2015 பொதுத்தேர்தல் எனும் பூவின் வாசத்தை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உணரலாம்.

    அடுத்தொரு மடலில் மேலும் பார்ப்போம்

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • சின்ன சின்ன நடை நடந்து… பி.கே. முத்துசாமி – கே.வி.மகாதேவன்

    காவிரி மைந்தன்

    இதயம் தொடுகின்ற பாடல்களை இன்னிசைப் பாடல்கள் என்று சொல்கிறோம்! இசையுடன் கவிதை கைகோர்த்து வரும் அழகை எண்ணி எண்ணி மகிழ்கிறோம்! ஒரு சில பாடல்களில் பாடல் வரிகள் முன்னணியில் அமைகின்றன!  இன்னும் சில பாடல்களில் இசை நம்மை வசமாக்குகிறது!  இரண்டையும் பின்னிறுத்தி.. பாடிய குரல்கள் பரவசம் காட்டிவிடுகின்றன!  இவையெல்லாம் திரைக்குப் பின்னால் அமைகிற காரணிகள்.. திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் பாடலுக்கு ஒளிவடிவம் தந்து நம் கருத்தில் பதிந்துவிடுகின்றனர்!  பி.கே. முத்துசாமி அவர்கள் இயற்றிய பாடலுக்கு இசை வடிவம்..  திரையிசைத் திலகம் கே. வி. மகாதேவன்…திரையில் நட்சத்திரங்கள்.. வளையாபதி முத்துக்கிருஷ்ணன் மற்றும் சௌகார் ஜானகி.  ஏ கே. வேலன் இயக்கத்தில் உருவான திரைப்படம்..

    பழைய பாடல்கள் என்கிற பெயரைச் சுமந்தாலும் இனிய பாடல்கள் என்றால் இன்றும் அவைதானே என்பது எல்லோரும் அறிந்த ஒன்று!  பட்டியலிட்டுப் பார்த்தால் ஒரு பெளர்ணமி வெளிச்சம் கிடைக்கும் அழகிய பாடல்களின் அணிவகுப்பு.. வகைவகையாய் வளர்ந்திடும் அன்பை.. பாசத்தை.. நேசத்தை.. நெஞ்சில் ஏந்தி வரும் பேரழகை.. குறிப்பாக சிறுமழலையைத் தாலாட்டும் பாடல்கள் சிற்றிலக்கியம்போல புகழ்பெற்றுவிடுகின்றன!

     kalyaniyin kanavan

    ‘கல்யாணியின் கணவன்’ என்கிற திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் இன்னிசைப்பண்ணாக இதயத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.  குறிப்பாக திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையமைப்பில்.. இந்த வரிகள்

    அம்மாவென்று நீ அழைத்தால் அமுத கானம் பொழியுமடா

    என்று இன்பத்தேனை பொழிகின்றது!

    கட்டித்தங்க மேனிகொண்டு கண்கள் இரண்டும் கருணையென்று தத்தித்தத்தித் தவழும்மழலை.. முதன்முதலாய் அம்மா என்று அழைக்கும் நொடிதானே.. தாயின் நெஞ்சில் பால்வார்க்கும்! வாழ்வில் இனிமை தான்கூட்டும்!  அள்ளிமகிழும் பிள்ளைநிலாவை.. அரவணைத்து ஆசையுடனே.. கொஞ்சிடும் தாயின் அன்பினிலே எல்லையெங்கே?  எல்லாம் நீயடா என்பதன்றி வேறு என்ன சொல்ல? பாசம் என்கிற வார்த்தைக்கு இறைவன் அளித்த அர்த்தங்கள் முழுமையாய் புரிவது பால்மழலை சிந்தும் சொற்களிலேதானே!

    இதயத்தைத் தழுவிக்கிடக்கும் இப்பாடல் பி.சுசீலாவின் குரலில் வருகிறது கேளுங்கள்!  கண்கள் மயங்க யாரோ கவிதை சொன்தைப் போலிருக்கும்!  வயதை மறந்து நாமும் கூட குழந்தையாகும் மந்திரம் இந்தப் பாடலில் உள்ளது!  அமுதம் என்பது இதுவன்றி வேறெப்படி இருக்க முடியும்?

    ke.vi.em.

    சின்ன சின்ன நடை நடந்து

    செம்பவள வாய் திறந்து

    சின்ன சின்ன நடை நடந்து

    செம்பவள வாய் திறந்து

    அம்மாவென்று நீ அழைத்தால்

    அமுத கானம் பொழியுமடா

    அமுத கானம் பொழியுமடா

    ஆடி வரும் தென்றல் என்பார்

    பாடி வரும் அருவி என்பார்

    ஆடி வரும் தென்றல் என்பார்

    பாடி வரும் அருவி என்பார்

    தேடி வரும் செல்வம் உன் போல்

    தெய்வம் வேறு இல்லையடா

    தேடி வரும் செல்வம் உன் போல்

    தெய்வம் வேறு இல்லையடா

    கொஞ்சும் அழகை கேட்கையிலே

    குழலும் யாழும் பொய்யன்றோ

    கொஞ்சும் அழகை கேட்கையிலே

    குழலும் யாழும் பொய்யன்றோ

    sowcar

    மேவும் தமிழே உன்னையன்றி

    வேறு சொந்தம் இல்லையடா

    மேவும் தமிழே உன்னையன்றி

    வேறு சொந்தம் இல்லையடா

    சின்ன சின்ன நடை நடந்து

    செம்பவள வாய் திறந்து

    சின்ன சின்ன நடை நடந்து

    செம்பவள வாய் திறந்து

    அம்மாவென்று நீ அழைத்தால்

    அமுத கானம் பொழியுமடா

    அமுத கானம் பொழியுமடா!!

    http://www.inbaminge.com/t/hits/Hits%20Of%20Solo%20By%20P%20Susheela%20Vol%20-%204/

    http://music.cooltoad.com/music/song.php?id=218474

    Share
  • வானமாய்…

    -செண்பக ஜெகதீசன்

    தினம் தினம் வரும்
    தினகரனும்
    மறைந்துவிடுகிறான் மாலையில்…          Beautiful-Sky

    வளர்ந்து தேய்ந்து
    வரும் நிலவும்
    ஓடிவிடுகிறது காலையில்…

    ஓட்டடையாய் ஒட்டிக்கொண்டு
    பலமுகம் காட்டும்
    மேகமும்
    வேகமாய்ச் சென்றிடும் காற்றில்…

    நிரந்தரமாய் நிற்பது,
    வானம் மட்டும்தான்…

    வாழ்க்கையில்,
    வந்துபோகும் உறவுகளுக்கிடையில்
    வானமாய்
    மாறாமல் என்றும் நிலைப்பது,
    தாய்மைதானே…!

     

    Share