விடியும் வேளை
… விடியல் தேடி
… வியர்வை விடுகின்றான் – உழவன்
… விதையை இடுகின்றான்
முடிவில் லாமல்
… முன்செல் ஏர்ப்பின்
… முயன்று நடக்கின்றான் – உழைப்பை
… முதலாய்க் கொடுக்கின்றான்
மடியில் லாமல்
… மாடாய்த் தானும்
… மண்ணை உடைக்கின்றான் – அதனுள்
… மர்மம் படைக்கின்றான்
அடியும் நுனியும்
… அனைத்தும் பார்த்தே
… அன்பால் வளர்க்கின்றான் – பயிராய்
… அவனே துளிர்க்கின்றான்

ஆளே இல்லா
… அர்த்த சாமம்;
… அல்லும் அழுகிறது – பனியாய்
… அதுவே விழுகிறது
காளை உழவன்
… காணாப் பயிரும்
… கண்கள் விழிக்கிறது – கனவாய்க்
… கண்டு கழிக்கிறது
நீளும் இலையை
… நீட்டிப் பயிரே
… நிலவை அழைக்கிறது – உழவன்
… நிலையை உரைக்கிறது
மூளை மயங்கி
… முத்துப் பனியில்
… முங்கி நனைகிறது – அதனால்
… மோகம் தணிகிறது

அல்லை விரட்டி
… அன்போ(டு) உழவன்
… அங்கே விரைகின்றான் – கண்டே
… அல்லோன் மறைகின்றான்
சொல்லில் லாமல்
… சொக்கும் பயிரின்
… தோகை பார்க்கின்றான் – பனியின்
… தோய்வால் வேர்க்கின்றான்
புல்லே முத்தம்
… பொழிந்த தென்றே
… பொங்கிச் சினக்கின்றான் – நெஞ்சம்
… பொருமக் கனக்கின்றான்
கல்லாய் ஆகிக்
… கலங்கி உள்ளம்
… கதறிக் கரைகின்றான் – புல்லைக்
… களைந்தே எறிகின்றான்

வீசுங் காற்றில்
… விளைந்த பயிரும்
… வெற்றாய்ச் சலசலக்கும் – அதிலும்
… விஷயம் பலவிருக்கும்
பாசத் தோடு
… பழகும் உழவன்
… பாடும் பாட்டிருக்கும் – காதற்
… பரிசாய்ப் பூப்பிருக்கும்
நேசங் கொண்டே
… நெஞ்சோ டிணையும்
… நினைவுச் சேகரிப்பும் – உணர்வில்
… நிலவும் தீஎரிக்கும்
ஆசைக் காதல்
… அடைந்தே உள்ளம்
… அனலாய் உறைந்திருக்கும் – அதனால்
… அதில்நெல் நிறைந்திருக்கும்

தோகை வெளுக்கத்
… தொய்ந்தே பயிரும்
… தொலையும் நாள்நெருங்கும் – உழவன்
… தூக்கத் தோளுறங்கும்
மோகம் கொடுத்த
… மொத்தப் பரிசாய்
… முத்துச் சரமிறக்கும் – பின்
… முடிவை வரவேற்கும்
சோகம் கசக்கும்
… துவைக்கும் நெஞ்சை
… துண்டித் ததுபோகும் – நினைவே
… துணையாய் அசைபோடும்
வேகும் நெஞ்சின்
… வேதனை தீர்க்கும்
… விதமாய் பணியிருக்கும் – கையில்
… விதைநெல் மணியிருக்கும்

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க