சக்தி சக்திதாசன்

அன்புமிக்க வல்லமை வாசக நெஞ்சங்களே!

அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு வாரத்திலே உங்களுடன் இம்மடல் மூலமாக மனம் திறக்க விழைகிறேன்.

மிகவும் இளம் வயதிலேயே எனது தாய்மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்த என்னை தத்துப்பிள்ளையாக ஏற்றுக்கொண்ட இவ்விங்கிலாந்து மண்ணிலிருந்து வாரமொரு மடல் நாம் பார்க்க விழைவது நிகழ்வுகள், நினைவுகள், அனுபவங்கள் என்பவையே.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி இங்கிலாந்தில் நான் கால் பதித்து நாற்பது வருடங்கள் பூர்த்தியாகின்றன.

18 வயது இளைஞனாக வாலிபக் கனவுகளோடு இங்கிலாந்து எனும் இந்தப் பரந்த தேசத்தினுள் இலங்கை எனும் புள்ளியிலிருந்து தூக்கி வீசப்பட்டவன் நான்.

சராசரி அறிவும், சராசரிக் கல்வித் தகமைகளும் மட்டுமே கொண்ட எனக்கு வாழ்வில் பல அனுபவங்களைக் கொடுத்ததோடு வாழ்வாதாரத்திற்கான சகல சந்தர்ப்பங்களையும் வேற்றுமை காட்டாது நல்கிய ஒரு நன்னிலம் இங்கிலாந்து தேசம்.

அதற்காக இந்நாட்டில் வெளிநாட்டிலிருந்து வந்த குடியேற்றவாசிகளான எம்மை நோக்கிய துவேஷம் நிறைந்த நிகழ்வுகள் எதுவுமே நிகழவில்லை என்று சொன்னால் என்னைப் போன்ற முட்டாள் இருக்க முடியாது.

ஆனால் நான் பிறந்த தாய்மண்ணிலேயே ஒரே மண்ணின் மைந்தர்களுக்குள்ளேயே பலவிதமான வேறுபாடுகளினூடாக உருவான முரண்பாடுகள் காணப்படுகின்றவேளையில் வேற்றுநிற மனிதர்கள் தம் நாட்டில் வந்தேறு குடிகளாய் லட்சணக்கணக்கில் வந்திறங்கும் போது ஒரு சிலர் துவேஷத்தைக் காட்ட முற்படுவது இயற்கைதானே.

அதை ஏற்றுக்கொண்டு அதற்கு ஈடு கொடுத்து நாம் முன்னேறும் பாதைதான் எமக்குப் பல அனுபவப்பாடங்களை அளிக்கும் பள்ளியாக அமைகிறது..

இங்கிலாந்திலே பொதுத்தேர்தல் 2015ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறவிருக்கிறது. அரசியல்களம் மிகவும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற இங்கிலாந்துப் பிரஜை எனும் வகையில் இந்நாட்டின் அரசியலோடு எமது வாழ்க்கை பின்னிப் பிணைந்துள்ளது.

பல புலம்பெயர் தமிழர்கள் உட்பட்ட ஆசிய இனத்தவர் இங்கிலாந்து அரசியல் கட்சிகளுக்குள் அங்கத்துவம் பெற்று தமது பங்களிப்புகளைச் செய்யத் தொடங்கியுள்ளார்கள்:

இவ்வரசியல் களத்தின் மாற்றங்கள், அம்மாற்றங்கள் எமது வாழ்வினில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்களைப் பற்றி நாம் பாராமுகமாக இருந்து விட முடியாது.

இங்கிலாந்தில் குடியுரிமை பெற்று வாழ்கின்ற முதலாவது தமிழர் தலைமுறையின் சந்ததியினர் இத்தளங்களில் தான் தமது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராட வேண்டியுள்ளது.

சரி இன்றைய அரசியல்களத்தை நோக்கி ஒரு மேலோட்டமான பார்வையை வீசுவோம்,

2015.3

நாம் இதனைச் சாதித்தோம் அதனைச் சாதித்தோம் எனப் பதவியிலிருக்கும் கூட்டரசாங்காத்தின் பிரதான கட்சியான கன்சர்வேடிவ் கட்சி கூப்பாடு போடத் தொடங்கியுள்ளது.

அட போங்கப்பா, நாம் உங்களோடு கூட்டுச் சேர்ந்து அரசமைத்துக் கொண்டிருந்திருக்காவிட்டால் நீங்க எதைப் பெரிசாச் சாதித்திருக்க முடியும்? என்கிற பாணியில் பதிலுக்கு இரைகிறார்கள் இக்கூட்டரசாங்கத்தின் சிறுபான்மைக் கட்சியான லிபரல் டெமகிரட்ஸ் கட்சி.

அடிப்படைக் கொள்கையிலே எதிருக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட இரு கட்சிகள் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்தது இங்கிலாந்தின் அரசியல் வரலாற்றிலே இதுதான் முதலாவது தடவையாகும்.

2015.2

உலகம் முழுவதுமே பொருளாதாரச் சிக்கல்களின் மத்தியில் உழன்று கொண்டிருக்கும்போது இங்கிலாந்து என்ற தள்ளாடிக் கொண்டிருக்கும் கப்பலை நேர் செய்து கரையை நோக்கிச் செலுத்தும் பணியில் தமது கொள்கைகளை விட்டுக்கொடுத்து நாட்டின் நன்மையை முதன்மைப்படுத்தினார்கள் என்று இக்கூட்டராசாங்க ஆரம்பத்தில் அவர்களுக்கு செல்வாக்கு இருந்தது உண்மையே.

ஆனால் நாட்பட, நாட்பட அவர்களுக்கு இடையில் இருந்த கொள்கை வேறுபாடு அங்காங்கே தலைவிரித்தாடியது.

சர்வகலாசாலை மாணவர்களின் கட்டணத்தை அறவே ஒழிக்கப்பாவதாகக் கூறி தேர்தலில் கணிசமான அளவு வாக்குகளைப் பெற்ற லிபரல் டெமகிரட்ஸ் கட்சி இக்கொள்கையை கைவிட்டதன் பிரதிபலிப்பு அவர்களின் செல்வாக்கு பாதளத்தை நோக்கிப் பாய்ந்தோடியது.

இடையிடையே அரசாங்கம் கொண்டுவந்த வரிவிலக்குச் சட்டங்கள் தமது ஆதிக்கத்தினாலேயே கிடைத்தது என்று லிபரல் டெமகிரட்ஸ் கட்சி தம்பட்டம் அடித்தும் இறங்கிய அவர்களது செல்வாக்கு உயரவில்லை.

அரசாங்கக் கதிரையில் இருந்து மக்களால் பதவியிறக்கப்பட்ட லேபர் கட்சி இத்தேர்தல் தோல்வியினால் சரியான பாடத்தைக் கற்றுக் கொண்டதா? என்பது சந்தேகமே!

பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்காக பல மூர்க்கமான செலவுக் கட்டுப்பாட்டுகளை விதித்ததினால் மக்களின் வாழ்க்கைத்தரம் குன்றியிருந்தும் அதனால் அவர்களுக்குக் கிடைத்த ஆதரவின் முழு அனுகூலத்தையும் பெற முடியாமல் லேபர் கட்சி அல்லாடுகிறது.

காரணம் என்ன ?

ஒரே காரணம் அக்கட்சியின் தலைவர் “எட் மில்லிபாண்ட்” என்கிறார்கள் ஒரு சாரார். தமது கட்சியின் நிலைப்பாட்டை மக்களின் முன்னால் சரிவர எடுத்துச் செல்லும் திறமை இவருக்கில்லை என்பதுவே பலரினது குற்றச்சாட்டு.

வரும் தேர்தலில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போவது “யூகிப் (UKIP)” என்றழைக்கப்படும் ஜக்கிய இராச்சிய விடுதலை முன்னணி கட்சியாகும்.

அட அப்படி என்ன இக்கட்சியின் மகத்துவம் என்கிறீர்களா ?

அப்படி மகத்துவம் ஒண்ணும் இல்லீங்க ! எல்லாத்துக்கும் நாமதான் காரணம்.

என்ன சக்தி “நாம” என்கிறீங்களே அப்படி நீங்க என்னதான் செஞ்சிட்டீங்க ?”என்னு கேட்காதீங்க . இக்கட்சியோட அடிப்படைக் கொள்கையே “வெளிநாட்டுக் குடியேற்றக்காரரை” கட்டுப்படுத்துவதே. அத்துடன் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜக்கிய இராச்சியம் வெளியேற வேண்டுமென்பது இவர்களுடைய அடுத்த கொள்கை.

2015.4

“வேலையில்லாத் திண்டாட்டம்” “வீடில்லாத் திண்டாட்டம்” “தம் குழந்தைகளுக்குத் தாம் விரும்பிய பள்ளியில் இடம் கிடைக்காமை” எனப் பல்வேறு அங்கலாய்ப்புகளின் மத்தியில் வாழும் இங்கிலாந்து நாட்டு மக்களுக்கு இதற்கெல்லாம் காரணம் இந்நாட்டின் கட்டுப்பாடற்ற “வெளிநாட்டுக்காரரின் வருகை” எனும் கோஷம் மிகவும் இலகுவாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வாதமாகிறது.

பிரதான கட்சிகளான “கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சி” என்பன இவ்வெளிநாட்டுக் கட்டுப்பாடு எனும் வாதம் இனத்துவேஷ அடிப்படியில் எழுந்தது என்பது போன்ற பாணியில் இது போன்ற விவாதங்களைத் தவிர்த்து வந்தது மக்களின் ஆர்வத்தை “யூகிப்” போன்ற கட்சியின் பால் திருப்பி விட்டது என்றே கூறலாம்..

இங்கிலாந்து அளவில் சிறிய நாடு. தொடர்ந்தும் அளவு கணக்கற்ற முறையில் வெளிநாட்டிலிருந்து அதுவும் குறிப்பாக ஜரோப்பிய யூனியனின் புது வருகைகளான கிழக்கு ஜரோப்பிய நாட்டிலிருந்து மக்கள் இங்கே வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.

தமது நாடுகளில் வறுமையின் எல்லைக்கோட்டில் வாழ்ந்த இவர்கள் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு பணிபுரிய சித்தமாகவிருக்கிறார்கள். இதனால் இங்கிலாந்து நாட்டு மக்களை பணிக்கு அமர்த்துவதை விட இவர்களை பணிக்கு அமர்த்துவதன் மூலம் வியாபார முதலாளிகள் தமது இலாபத்தை பெருக்கிக் கொள்வதால் இங்கிலாந்து நாட்டு மக்கள் வேலையில்லா பட்டியலை நோக்கி அதிவிரைவாகத் தள்ளப்படுகிறார்கள்.

இது ஒரு சாராரின் வாதம்.

எது எப்படி இருப்பினும் வரும் பொதுத்தேர்தலில் இப்பிரச்சனையே முதலிடம் வகிக்கப் போகிறது. தற்போதைய கருத்துக்கணிப்புகளின்படி”யூகிப்” எனும் கட்சி கூட்டரசாங்கத்தில் இடம்பெறும் வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.

2015.1

எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் புலம் பெயர் தமிழன் எனும் ரீதியில் இந்தத் தேர்தல் இதுவரையிலுமான தேர்தல்களை விட அதிமுக்கியமானதொன்றாகிறது எனலாம்.

“போகப் போகத் தெரியும் இப்பூவின் வாசம் புரியும்” எனும் பாடல் வரிகளுக்கெற்ப வரும் 2015 பொதுத்தேர்தல் எனும் பூவின் வாசத்தை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உணரலாம்.

அடுத்தொரு மடலில் மேலும் பார்ப்போம்

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.