சின்ன சின்ன நடை நடந்து… பி.கே. முத்துசாமி – கே.வி.மகாதேவன்
காவிரி மைந்தன்
இதயம் தொடுகின்ற பாடல்களை இன்னிசைப் பாடல்கள் என்று சொல்கிறோம்! இசையுடன் கவிதை கைகோர்த்து வரும் அழகை எண்ணி எண்ணி மகிழ்கிறோம்! ஒரு சில பாடல்களில் பாடல் வரிகள் முன்னணியில் அமைகின்றன! இன்னும் சில பாடல்களில் இசை நம்மை வசமாக்குகிறது! இரண்டையும் பின்னிறுத்தி.. பாடிய குரல்கள் பரவசம் காட்டிவிடுகின்றன! இவையெல்லாம் திரைக்குப் பின்னால் அமைகிற காரணிகள்.. திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் பாடலுக்கு ஒளிவடிவம் தந்து நம் கருத்தில் பதிந்துவிடுகின்றனர்! பி.கே. முத்துசாமி அவர்கள் இயற்றிய பாடலுக்கு இசை வடிவம்.. திரையிசைத் திலகம் கே. வி. மகாதேவன்…திரையில் நட்சத்திரங்கள்.. வளையாபதி முத்துக்கிருஷ்ணன் மற்றும் சௌகார் ஜானகி. ஏ கே. வேலன் இயக்கத்தில் உருவான திரைப்படம்..
பழைய பாடல்கள் என்கிற பெயரைச் சுமந்தாலும் இனிய பாடல்கள் என்றால் இன்றும் அவைதானே என்பது எல்லோரும் அறிந்த ஒன்று! பட்டியலிட்டுப் பார்த்தால் ஒரு பெளர்ணமி வெளிச்சம் கிடைக்கும் அழகிய பாடல்களின் அணிவகுப்பு.. வகைவகையாய் வளர்ந்திடும் அன்பை.. பாசத்தை.. நேசத்தை.. நெஞ்சில் ஏந்தி வரும் பேரழகை.. குறிப்பாக சிறுமழலையைத் தாலாட்டும் பாடல்கள் சிற்றிலக்கியம்போல புகழ்பெற்றுவிடுகின்றன!
‘கல்யாணியின் கணவன்’ என்கிற திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் இன்னிசைப்பண்ணாக இதயத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையமைப்பில்.. இந்த வரிகள்
அம்மாவென்று நீ அழைத்தால் அமுத கானம் பொழியுமடா
என்று இன்பத்தேனை பொழிகின்றது!
கட்டித்தங்க மேனிகொண்டு கண்கள் இரண்டும் கருணையென்று தத்தித்தத்தித் தவழும்மழலை.. முதன்முதலாய் அம்மா என்று அழைக்கும் நொடிதானே.. தாயின் நெஞ்சில் பால்வார்க்கும்! வாழ்வில் இனிமை தான்கூட்டும்! அள்ளிமகிழும் பிள்ளைநிலாவை.. அரவணைத்து ஆசையுடனே.. கொஞ்சிடும் தாயின் அன்பினிலே எல்லையெங்கே? எல்லாம் நீயடா என்பதன்றி வேறு என்ன சொல்ல? பாசம் என்கிற வார்த்தைக்கு இறைவன் அளித்த அர்த்தங்கள் முழுமையாய் புரிவது பால்மழலை சிந்தும் சொற்களிலேதானே!
இதயத்தைத் தழுவிக்கிடக்கும் இப்பாடல் பி.சுசீலாவின் குரலில் வருகிறது கேளுங்கள்! கண்கள் மயங்க யாரோ கவிதை சொன்தைப் போலிருக்கும்! வயதை மறந்து நாமும் கூட குழந்தையாகும் மந்திரம் இந்தப் பாடலில் உள்ளது! அமுதம் என்பது இதுவன்றி வேறெப்படி இருக்க முடியும்?
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
—
அம்மாவென்று நீ அழைத்தால்
அமுத கானம் பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா
—
ஆடி வரும் தென்றல் என்பார்
பாடி வரும் அருவி என்பார்
ஆடி வரும் தென்றல் என்பார்
பாடி வரும் அருவி என்பார்
—
தேடி வரும் செல்வம் உன் போல்
தெய்வம் வேறு இல்லையடா
தேடி வரும் செல்வம் உன் போல்
தெய்வம் வேறு இல்லையடா
—
கொஞ்சும் அழகை கேட்கையிலே
குழலும் யாழும் பொய்யன்றோ
கொஞ்சும் அழகை கேட்கையிலே
குழலும் யாழும் பொய்யன்றோ
மேவும் தமிழே உன்னையன்றி
வேறு சொந்தம் இல்லையடா
மேவும் தமிழே உன்னையன்றி
வேறு சொந்தம் இல்லையடா
—
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
—
அம்மாவென்று நீ அழைத்தால்
அமுத கானம் பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா!!
http://www.inbaminge.com/t/hits/Hits%20Of%20Solo%20By%20P%20Susheela%20Vol%20-%204/
http://music.cooltoad.com/music/song.php?id=218474