நான் அறிந்த சிலம்பு – 148

-மலர் சபா

மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

மதுரை நகரைக் காண வேண்டும் என்னும் தனது விருப்பத்தைக் கவுந்தியடிகளிடம் கோவலன் தெரிவித்தல்

தவநெறியில் இருந்த கவுந்தியடிகளிடம்
கோவலன் சென்று,
“அடிகளாரே! அறநெறியில் இருந்து நீங்கிக்
கயவன் போல சிறுமையுடையவன் ஆகி,      kovalan
இந்த அறியாத புதிய தேசத்தில்
நறுமலர் மேனியுடைய இக்கண்ணகி
நடுங்கித்துயர் உறும் வண்ணம்,
பல கொடிய வழிகளை எல்லாம் கடந்து வந்து
சிறுமையுடையவனாகி நிற்கின்றேன்;

பழம்பெருமை வாய்ந்த மதுரை நகரில்
மன்னர்க்கு அடுத்தபடியான நிலையில் இருக்கின்ற
பெருவணிகரைக் கண்டு
என் நிலைமை உணர்த்திவிட்டு,
மீண்டும் நான் இங்கே வரும் வரையிலும்
இப்பைந்தொடிப்பெண் முன்போலவே
உங்கள் பாதுகாப்பில் இருக்கட்டும்;
அப்படியிருந்தால் இவளுக்குத் துன்பம் ஏதும்
நேராதன்றோ?” என்று கேட்டான்.

கவுந்தியடிகள் ஆறுதல் மொழி கூறி, ஊர் கண்டு வருமாறு பணித்தல்

இங்ஙனம் தன் செயலுக்காய் வருந்தி நின்ற கோவலனிடம்
கவுந்தியடிகள் கூறலானார்:

“தவமாகிய அறத்திலிருந்து சற்றே தவறிய காரணத்தால்
காதலி தன்னோடு பெருந்துயர் எய்திய கோவலனே!
‘தீவினைகளில் இருந்து விடுபட்டு உய்யுங்கள்;
இல்லையேல், அவை தீய பலனைத் தந்து நிற்கும்’ எனத்
தங்களின் வாயாகிய பறையை
நா என்னும் தடி கொண்டு
உரக்க அறைந்து கூவினாலும்,
மனத்திண்மை இல்லாத மாக்கள்,
தமது இழி இயல்பு காரணமாய்
அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

பின், அத்தீங்குடைய வெவ்வினை
தனது துன்பத்தின் பயனைத் தந்து நிற்கும்போது,
இது தாம் முன்செய்த வினையால் வந்தது என்றறியாமல்
தமது அறியாமையையே பின்பற்றி வாழ்ந்து கலங்குவர்.
ஆனால் கற்று அறிந்த திறமுடைய அறிவுடையவர்கள்
இத்தகைய பெருவினைத் துன்பங்களை அனுபவிக்கும்போது,
செயலற்றுக் கலங்கி நிற்க மாட்டார்கள்.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 15 – 34
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

படத்துக்கு நன்றி:
http://omsakthionline.com/?katturai

 

1 thought on “நான் அறிந்த சிலம்பு – 148

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க