Blog

  • சேய்நெஞ்சம் வேண்டும்!

    திங்கள்மேல் காட்டியே தித்திக்கச் சோற்றினில்
    தேன்கொஞ்சம் ஊற்றியன்பைச்
    … சேர்த்தென்றன் தாய்தரும் சேய்மைக்குள் இன்புறும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    செங்குன்றின் மேலொரு தீப்பந்தம் போலெழும்
    சீர்வண்ணச் சூரியன்றன்
    … செவ்வண்ணஞ் சேர்கடற் செந்நீர்கண் டின்புறச்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    தெங்கங்காய் சீவிநீள் கோல்சேர்த்துச் செய்தொரு
    தேய்வண்டி வீதியோட்டிச்
    … செல்கின்ற போதினிற் சிந்திக்கா தின்புறும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    சங்கொன்றில் நீரினைக் கொண்டூத வாய்வழிச்
    சத்தங்கள் கொப்பளிக்கச்
    … சாமத்தின் தேரைவாய்ச் சந்தத்தில் இன்புறும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்

     

    தென்றல்கண் டாடிடும் தொய்ந்துப்பின் ஏறிடும்
    செவ்வானின் கண்கயல்போல்
    … செல்லுங்காற் றாடியின் நூல்பற்றி இன்புறும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    தென்னம்பூ வீழ்ந்திட தோட்டத்தின் வேலியைச்
    சேர்ந்தோங்கும் மாமரத்தின்
    … சில்லென்ற நீழலில் தீயிலிட் டின்புறும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    தென்மாட வீதியில் சேர்ந்தாட மாமயில்
    சென்றீந்த தோகையொன்றின்
    … சேய்வேண்டி புத்தகத் தேயிட்டுக் காத்திடும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    தின்கின்ற போதெலாம் தன்பங்கி லேதுளி
    தெய்வத்தின் பாகமென்றே
    … தின்னாமல் பிள்ளையார் சீர்பாதம் சேர்த்திடும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்

     

    செக்கொன்றைச் சுற்றிடும் செங்காளை மாடெனச்
    செல்வண்டிச் சக்கரத்தைத்
    … தேய்த்துந்திச் சுற்றியே தோட்டத்தில் இன்புறும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    திக்கெங்கும் பார்வையில் சட்டென்று தோன்றிடச்
    சென்றென்றன் தந்தையின்தோள்
    … தொட்டென்னைத் தூக்கிடச் செய்தின்பம் கண்டிடும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    துக்கங்கள் சேர்ந்துளம் துன்புற்ற போதெலாம்
    தூக்கித்தன் தோளமர்த்தும்
    … தூய்நெஞ்சத் தாயவள் தோயன்பில் இன்புறும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    சிக்கல்கள் ஆயிரம் சேர்ந்தென்னைத் தாக்கியும்
    சேதங்கள் யாவினையும்
    … சீர்செய்யும் சற்குரு சேய்மைக்குள் இன்புறச்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்

     

    முட்டுங்கள் வாழ்வெலாம் முன்செல்ல என்றெனை
    முட்டித்தான் முன்னெழுந்தே
    … முன்னேறும் என்மகள் கால்பற்றி இன்புறும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    பட்டங்கள் பெற்றுமென் பல்லக்கில் வந்துமென்
    பாரெங்கும் சென்றுமென்ன
    … பாசத்தைப் பிள்ளைகள் பாற்கொட்டி இன்புறும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    திட்டங்கள் தீட்டியென் செல்வத்தைத் தேடியென்
    தேடற்கண் தேய்வதற்கோ
    … சின்னப்பெண் வாயெழும் தேன்சொல்லி லின்புறச்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    கட்டங்கள் வென்றுமென் கைவிட்டுப் போயுமென்
    காலத்தின் வீதியெங்கும்
    … கால்தத்தும் என்மகள் கால்பற்றி இன்புறும்
    … சேய்நெஞ்சே வேண்டுமென்பேன்

     

    Share
  • இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்! [மீள் பதிப்பு ]

    (Earth Quake Giant Sea Waves Attack South Asian Countries 2004)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    காலக் குயவனின் மேளமிது! கோணிக்
    கைகள் வார்த்துள்ள கோளமிது!
    கடலில் மிதக்கும் கொட்டையிது! மையக்
    கருவில் வெடித்துக் கொப்பரையில்
    கடல் மதிலால் தாக்கும் ஞாலமிது!

    Picture1

    முன்னுரை: ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை நூலில் கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை ஆகியோர் வாழ்ந்த வரலாற்றுப் புகழ் படைத்த பூம்புகார் என்னும் காவிப்பூம்பட்டினம் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டின் கிழக்குக் கரையில் கடல் பொங்கி அழிந்து போனதாகக் கூறப்பட்டுள்ளது! அதுபோன்று 21-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பூத அலை மதில்கள் 9.0 ரிக்டர் அளவில் இந்தோனிசியாவின் ஜாவா தீவுக்கு அருகே கடலடியில் நில நடுக்க மையம் கொண்டு [Earthquake Epicenter] நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு யாரும் எதிர்பாராத சமயத்தில், எந்தவித எச்சரிக்கை அறிவிப்பு மின்றி 2004 டிசம்பர் 26 ஆம் தேதி தலைநீட்டி ஆயிரக்கணக்கான மக்களைத் தாக்கி மரணம் உண்டாக்கி இருக்கிறது. தெற்காசியாவில் பதினொரு நாடுகளில் இதுவரை (டிசம்பர் 29) 80,000 பேர் உயிரிழந்ததாக அறியப்படுகிறது.

     

    Picture2

    கடந்த பல நூற்றாண்டுகளில் இது போன்ற ஓர் அசுரச் சுனாமி ஒன்று 9.0 ரிக்டர் அளவில் கடல் அடித்தளத்தில் பூகம்பத்தை உண்டாக்கி, அதிர்ச்சி அலைக் குமிழி ஒன்று எழுந்து பூத வடிவம் அடைந்து, எட்டுத் திக்கும் பரவி பல நாடுகளை ஒரே சமயத்தில் தாக்கியது வரலாறுகளில் காண முடியாது! கிழக்கிந்தியக் கடற்கரைப் பகுதிகளான சென்னை, ஆந்திரா, ஒரிஸா ஆகிய பரப்புகள் தாக்கப் பட்டாலும், நல்ல வேளையாக கல்பாக்கம் அணுவியல் ஆராய்ச்சித் தளங்கள் கடல் வெள்ளத்தால் உடைபட்டுக் கதிரியக்கப் பாதிப்புகள் நேராமல் தப்பிக் கொண்டன! பதினொரு நாடுகளைப் பயங்கரமாகத் தாக்கிய சுனாமியின் வலுவைக் கணிக்கும் போது, சுமாத்திரா பூகம்பம் சுமார் பத்து அணுகுண்டுகளைக் கடலடியில் வெடித்த ஆற்றலுக்குச் சமமானது என்று விஞ்ஞானிகளால் அனுமானிக்கப் படுகிறது!

     

    Picture3

    தெற்காசியாவில் கேள்விப்படாத முதல் சுனாமிக் கொல்லி

    2004 டிசம்பர் 26 ஆம் தேதி தெற்காசியாவின் பதினொரு நாடுகளில் அடித்துக் கொன்ற சுனாமியில் இன்றுவரை (டிசம்பர் 29) 77,000 பேர் என்றும், அந்த எண்ணிக்கை 100,000 ஆகலாம் என்றும் கனடாவின் டொரான்டோ ஸ்டார் [Toronto Star] நாளிதழ் தகவல் ஒன்று பறைசாற்றிகிறது! சுனாமியைப் போன்று மக்களுக்கும், சுற்றுப் புறத்துக்கும் இன்னல்கள் இழைக்கும் இயற்கைக் கொல்லி வேறு எதுவும் கிடையாது! பிரம்மாண்டமான கடல் வெள்ளத்தை அலைகள் மூலம் ஜெட்விமான வேகத்தில் (மணிக்கு 500 மைல்), கடத்திச் செல்வதைக் கண்களுக்குக் காட்டாமல், கடற்கரையை அண்டியதும் திடாரென அசுர வடிவம் எடுத்து 120 அடி உயரம் வரை நாகம்போல் படமெடுத்து, கரைவாழ் மக்களை மூழ்க்கி அடித்து, இரண்டு அல்லது மூன்று மைல் [2 கி.மீ] தூரம் உள்நாட்டுக்குள் நுழைந்து, கைப்பட்ட அனைத்தையும் வழித்து அழிக்கும் சுனாமியின் கோரக் கொடுமைகளுக்கு ஈடு இணையே கிடையாது!

     

    Picture4

    ஹவாயியில் அமைக்கப்பட்டுள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கைச் சமிக்கை, சுமாத்திரா அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தைப் பதிவு செய்து, இந்தோனேசியா, தாய்லாந்து உள்பட ஆசியாவில் 29 நாடுகளுக்கு விஞ்ஞானிகள் 15 நிமிடத்தில் தொலைபேசிகள் மூலமாக அறிவித்ததாக நியூ யார்க் டைம்ஸ் [The New York Times] நாளிதழ் கூறுகிறது! ஆனால் ஆசிய நாடுகளில் பூகம்ப, சுனாமி அபாய எதிர்பார்ப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவையும் இல்லாததால், எந்த விதத்திலும் இந்த கோர விளைவுகளைத் தடுக்க முடியவில்லை!

     

    Picture11

    1945 இல் இந்தியாவை அலைமதில் தாக்கி நூற்றுக் கணக்கான மாந்தர் உயிரிழந்தாலும், 2004 ஆண்டு சுனாமிபோல் எட்டுத் திசைகளிலும் மோதி அடித்து 80,000 பேர் இறந்ததாக அறியப்பட வில்லை! கரையைத் தாக்கி, விரைவாய் ஊருக்குள் நுழைந்து, இல்லங்களைக் கொள்ளை அடித்துக் கொன்று குவித்த சுனாமிக் கொல்லியை மனிதர் எதிர்த்துப் பாதுகாத்துக் கொள்ள முடியுமா ? ஊரை விட்டு மீளும் போது, சுனாமியின் பயங்கரக் கரங்கள் வீடுகளை, பாலங்களை, வீதிகளை, குடிசைகளை, கடைகளை, வயல்களை அனைத்தையும் உடைத்துத் துண்டுகளாக்கி இழுத்துக் கொண்டுபோய், முடிவில் கடல் கிடங்கில் முடக்குகின்றன!

     

    Picture12

    ஓடும் இரயில் வண்டிகள், பஸ்கள், மோட்டர் வாகனங்களைக் குப்புறக் கவிழ்த்தி குடைசாய்க்கும்! அல்லது அவற்றையும் இழுத்துக் கொண்டு போய்க் கடலில் புதைக்கும்! எதிர்பாராமல் தாக்கியதால் ஏராளமான பேர் உயிரிழந்தனர்! பசிபிக் கடலில் 1965 ஆண்டு முதல் கண்காணித்து வரும் சுனாமி எழுச்சி எச்சரிக்கை உள்ளது போல் இந்து மாகடலிலும் இருந்திருந்தால், ஆயிரக் கணக்கான மக்கள் தப்பிப் பிழைத்திருக்கலாம்! கரைகளை அடிப்பதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே சுனாமிகள் எழுவதைக் கண்டுபிடிப்பது எளிது என்று விஞ்ஞானி காலோவே [Galloway] சொல்கிறார்!

     

    Picture13

    பாதிக்கப்பட்ட பதினேழு தென்னாசிய நாடுகளில், ஸ்ரீலங்கா தீவின் கரைமுகத்தில் இருந்த பல கிராமங்கள் கடல் பொங்குமதிலில் வழிக்கப் பட்டு, தீவிர கோர மரணத்தில் 25,000 உயிர்கள் (டிசம்பர் 29 தகவல்) அழிக்கபட்டதாக அறியப்படுகிறது! அதற்கடுத்த இன்னல் அடைந்தது இந்தோனேசியாவில் இறந்தவர் எண்ணிக்கை: 19,000. மூன்றாவது பாதிப்பான இந்தியாவில் 15,000 பேர் (இந்தியப் பரப்பு: 7000+ அந்தமான் நிக்கோபார் தீவுகள்: 8000) மாண்டதாக அறியப்படுகிறது. தமிழ் நாட்டில் மட்டும் மரணம் அடைந்தவர் எண்ணிக்கை: 3925.

    அடுத்து தாய்லாந்தில் மாண்டவர்: 2000 பேர்கள். 2004 ஆண்டில் மட்டும் சுமத்திரா தீவுக்கருகில் இதற்கு முன்பு 8.9 ரிக்டர் அளவில் ஒரு பூகம்பம் எழுந்துள்ளது. தெற்காசிய சுனாமி தாவிய உயரம் 30 அடி [10 மீடர்] ஆக அளவில் குறைந்ததாக இருந்தாலும், ஜன நெருக்கம் மிகுந்த கரைப் பிரதேசங்களில் 1.5 மைல் [2 கி.மீ] தூரம் சென்று, அலை மதில்கள் செய்த கோரக் கொடுமைகள் அனைத்தையும் ஒரு கட்டுரையில் விவரிக்க முடியாது!

    உலகத்தில் இதுவரை ஏற்பட்ட பூகம்பத்தில் மிக்க உச்சமான நடுக்கம் 9.5 ரிக்டர் அளவில் தென்னமெரிக்காவின் சில்லி நாட்டில் 1960 இல் நேர்ந்தாலும், அது அந்த நாட்டை மட்டும் தாக்கி இறந்தவர் எண்ணிக்கை 5700 ஆகக் கணக்கிடப் பட்டது. கடந்த நூற்றாண்டில் (8.5-9.5) ரிக்டர் அளவில் 12 பயங்கரப் பூகம்பங்கள் உலகத்தில் நிகழ்ந்துள்ளன! ஆனால் அதே காலத்தில் பூகம்பக் கொல்லிகள் [Killer Earthquakes] எனப்படும் பத்து அசுர நிலநடுக்கங்கள் குறைந்த (7.2-8.6) ரிக்டர் அளவில் குலுக்கிப் பல்லாயிரம் மக்களைக் கொன்றுள்ளன!

    Picture14

    சைனாவில் ஏற்பட்ட பூகம்பங்களில் 1920 இல் காங்சூ [Gansu, China] நகரில் 200,000 நபர்களும், 1927 இல் ஷிங்கையில் 200,000 பேர்களும் 1976 இல் தங்ஷான் [Tangshan, China] நகரில் 255,000 பேரும் மாண்டனர்! ஆயினும் 2004 டிசம்பர் 26 ஆம் தேதியில் எதிர்பாராமல் இந்து மாகடலில் அடித்தளப் பூகம்பம் ஏற்பட்டு, அதிர்ச்சி அலைகளைப் படைமதில் போல் அணிவகுத்து எழுப்பிப் பதினோரு நாடுகளைப் பாதித்த சுனாமி போன்று வேறெதுவும் வரலாறுகளில் இருந்ததாகத் தெரியவில்லை!

    சுமாத்திரா தீவின் கடலடியில் வெடித்து, பில்லியன் கணக்கான டன் வெள்ளத்தைக் கொந்தளிக்கச் செய்த 9.0 ரிக்டர் பூகம்பம், ஈழத் தீவைப்போல் சுமார் ஐந்து மடங்கு பெரிய சுமாத்திரா தீவையே 30 மீடர் தூரம் தென்மேற்குத் திசையில் நகர்த்தி விட்டதென்று டொரான்டோ ஸ்டார் நாளிதழ் கூறுகிறது! சுமாத்திரா தீவை அசைத்து இழுத்த பூகம்பத்தின் பேராற்றலை எத்தனை பேரளவு சக்தி படைத்தது என்று சொல்வது ? அசுர வல்லமை படைத்த அந்த பூகம்பக் கடற்தள அதிர்ச்சியே கடல் வெள்ளத்தைச் செங்குத்தாய்த் தூக்கி அனுப்பி, நடுவே கடலில் குறையழுத்தம் உண்டாக்கி, சுமாத்திரா தீவையே தென்மேற்குத் திக்கில் இழுத்திருக்கிறது!

    பூகம்ப அரக்கியின் கழுத்தணியான ‘தீ வளையத்தில் ‘ [Ring of Fire] உள்ள ஓரு நாடு, இந்தோனேசியா! அடிக்கடி பூகம்பங்கள் அதன் தீவுகளில் நேர்ந்து, மக்கள் பாதிக்கப்படுவது புதிதான தகவல் அல்ல. ஆனால் தற்போது சுமாத்திரா தீவுக்கருகில் நிகழ்ந்துள்ள நில நடுக்கத்தால் கடல்மீது சுனாமி தூண்டப்பட்டு அலைமதில் வட்டங்கள் அடுக்கடுக்காகக் கிளம்பி பதினொரு நாடுகளைப் பாதித்தது, தெற்காசியக் கடலில் நேர்ந்த முதல் நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது! சுமாத்திராவின் வடமேற்குப் பகுதி எப்போதும் தீவிர பூதளக் கொந்தளிப்புகள் மிக்க அரங்குகளில் ஒன்று! மணிக்கு 500 மைல் வேகத்தில் [800 கி.மீ] பயணம் செய்து, சில பகுதிகளில் 30 அடி உயரத்துக்குத் தாவிய சுனாமியின் பேரளவைக் கணித்து, சுமாத்திராவின் வடமேற்குப் பகுதியில் சுமார் 100 மைல் [180 கி.மீ] நீட்சிக்கு கடலின் அடித்தளத் தட்டுகள், பூகம்பத்தால் முறிந்துபோய் இருப்பதாக அனுமானிக்கப் படுகிறது!

    சுனாமியால் பதினொரு நாடுகளில் 80,000 பேர் மரணம் அடைந்து, அவர்களின் அன்பிற்கினிய உற்றார், பெற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் தீராத, ஆறாத, மறக்க முடியாத மனவேதனைகளில் தள்ளிவிடப் பட்டுள்ளனர்! இப்போது எழுந்துள்ள முக்கியமான நீண்ட கால இமாலயப் பிரச்சனை இதுதான்: வீடிழந்து, பொருளிழந்து, பணமிழந்து, பண்ட பாத்திரம் இழந்து, உடை இழந்து, வாகனம் இழந்து, குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றித் தவிக்கும் உயிர் தப்பிய கோடான கோடி மக்களுக்குத் தினமும் எவ்விதம் குடிநீர், உணவளிப்பது! எவ்விதம் உடைகள் அளிப்பது ? எவ்விதம் குடியிருக்க இல்லங்கள் அமைப்பது ?

    அடுத்து வீடுகள், வீதிகள், மரங்கள் இடிந்து குப்பை கூளங்களை தெருக்களில் நீக்கி, வாழப் புது குடியேற்ற நிலம் அமைத்துக் குடிநீர் வசதியை எவ்விதம் கொடுப்பது ? உப்புக் கடல் நீர் பரவி, மலக்கழிவுகள் வெளிப்பட்டுக் கலந்து நீர்வளம், நிலவளம் நாசமாகி கோடிக் கணக்கில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு நோய் வராமல் எவ்விதம் தடுப்பது ? மேலும் காயம் பட்டவர்களுக்குச் சிகிட்சை அளிக்க மருந்தும், மருத்துவர்களும், மருத்துவ மனைகளும் தேவைப்படும். பல உலக நாடுகளும், பல உதவி நிறுவகங்களும் தென்னாசிய நாடுகளுக்குப் உதவிப் பணிபுரிய முன்வந்துள்ளன.

     

    Picture16

     

    ******

    [S. Jayabarathan (Dec 29, 2004)]

     

    Share
  • மார்கழி மலர்கள் – பராசக்திக்கு நினைவூட்டல்

    இசைக்கவி ரமணன்

    images

    அன்புநெஞ்சில் கண்விழிக்கும் அன்னை சக்தியே!
    அழகு மயிலை பழகி வளரும் ஆற்ற லரசியே!
    என்னைப் பெற்றெ டுத்து விட்டு எங்கு சென்றனை?
    ஏறெ டுத்தும் பார்ப்ப தில்லை என்ன சிந்தனை?

    கண்மு ழுக்கக் கனல் தெறிக்கும் கவிதைகள் தந்தாய்
    காளிமகன் கவிஞனென்னும் கர்வமும் தந்தாய்
    பண்மு ழுக்க பவனிவரும் பரவசம் தந்தாய்
    பலர்வாழப் பாடிடுமோர் பரவசம் தந்தாய்

    விண்ணளக்கும் என்னைப்போய் வீட்டில் பூட்டினாய்
    வீதியிலே மேடையிலே வித்தை காட்டினாய்
    எண்ணமறி யாதவர்கள் ஏசிட வைத்தாய்
    என்னைப்போய் பிறர்முன்னில் கூசிட வைத்தாய்

    என்தமிழைக் கேட்டுபோதை ஏறிவிட்டதா? இல்லை
    எவர்சொல்லோ கேட்டுமனம் மாறிவிட்டதா?
    என்னம்மா? இன்றுனக்கு என்ன ஆனது? உன்
    இடைவிடாத நேசமின்று எங்கு போனது?

    அந்த நாளைப் போலவந்து ஆடிட வேண்டும், நீ
    சந்தம் தந்து தலையசைக்கப் பாடிட வேண்டும்
    நொந்த நெஞ்சை மொந்தையாக்கி நுங்கிட வேண்டும், எந்த
    நொடியும் நீயே எந்தன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்!
    23.12.2014 / செவ்வாய் / 13.10 /ப்ருஹத்வனி

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?- 37

    சு. கோதண்டராமன்

     

    யக்ஞமும் உயிர்ப்பலியும்

    பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யக் கூடாது என்ற அஹிம்ஸைக் கொள்கை புத்த ஜைன மதங்களின் தாக்கத்தால் ஏற்பட்டது. இதை ஒப்புக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டியதில்லை. தன் தவறைத் திருத்திக் கொள்ளாத சமயம், பிறரிடமிருந்து நல்லதை எடுத்துக் கொள்ளாத சமயம் அழிந்து விடும். வைதிக சமயம் காலப் போக்கில் பல நல்ல விஷயங்களை மற்றவர்களிடமிருந்து ஏற்றுக் கொண்டதால்தான் இன்றளவும் உயிரோடு இருக்கிறது.

    மனிதன் இயற்கையில் சர்வ பட்சிணி. காட்டு மிராண்டியாக வாழ்ந்த காலத்தில் அவன் பழங்கள், கிழங்குகளை உண்பதோடு, சாதுவான மிருகங்களையும் கொன்று உண்டுதான் உயிர் வாழ்ந்தான். நாகரிக வளர்ச்சி பெற்று விவசாயம் செய்யும் காலத்தில் அவனுக்கு குதிரை, மாடு, ஆடு முதலிய கால்நடைகளால் பயிர் அழிவு ஏற்பட்ட போது இந்தக் கால்நடைகளைக் கொல்வது பயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், உணவுத் தேவையை நிறைவு செய்யவும் அவசியமாக இருந்தது. அவன் இறை வழிபாடு செய்யத் தொடங்கிய போது தான் உண்டதையே தன் தெய்வத்துக்கும் படைத்தான்.

    இத்தகைய காலத்தில்தான் வேதம் உருவாயிற்று. குதிரைகளையும் ஆட்டையும் வேள்வியில் பலி இடுவது பற்றிய மந்திரங்கள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ரிக் வேதத்தில் உள்ளன. (1.162, 3, 21)

    பழைய காலத்தில் பசுக்களும் காளைகளும் பலி கொடுக்கப்பட்டிருப்பது அக்னிக்கு வழங்கப்படும் உக்ஷான்ன (காளையை உண்பவர்), வசான்ன (மலட்டுப் பசுக்களை உண்பவர்) என்ற பெயர்களிலிருந்து தெரிகிறது. (8.43.11) பசுவைக் கத்தியால் வெட்டுவது போல என்று உவமை வருகிறது. பசுத் தோலைத் தான் வில்லுக்கு நாணாகவும், உட்காருவதற்கு ஆசனமாகவும், சோம பானம் வடிகட்ட அடித்தளமாகவும் பயன்படுத்தினர். பசுவே, உன் உடம்புதான் எனக்கு மருந்து என்கிறது ஒரு மந்திரம். (10.100.10)  இதிலிருந்து பசுக் கொலை சர்வ சாதாரணமான நிகழ்ச்சி என்பதை அறியலாம்.

    பசுவைக் குறிப்பிடும்போது 20 இடங்களில் அக்ன்யா என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். (4.1.6, 1.30.19) அக்ன்யா என்றால் கொல்லத் தகாதது என்று பொருள். பசு என்று சொல்லாமல் கொல்லத் தகாத மிருகம் என்று அழைப்பதற்குக் காரணம் என்ன?

    காளைகளும் மலட்டுப் பசுக்களும் மட்டுமே கொல்லத் தக்கவை. பால் தரும் பசுக்கள் கொல்லத் தகாதவை என்ற கருத்து ஏற்பட்டிருப்பது தெரிய வருகிறது. பால் பொருட்களை மிகுதியாகப் பயன்படுத்தத் தொடங்கியபின் பசுவின் பொருளாதார மதிப்பை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.
    விவசாயத்துக்குக் குதிரைகளைப் பயன்படுத்தியதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன. காளைகளைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை. எனவே இன விருத்திக்கு மட்டுமே காளைகள் தேவைப்பட்டிருந்தன. அதற்கு மந்தைக்கு ஒன்று போதுமே, மற்றவை பயனற்ற சுமை தானே என்ற நிலை நிலவி இருக்க வேண்டும்.

    விவசாயம் செய்த பயிர்களைக் காப்பாற்றுவதற்காக தேவையற்ற மலட்டுப் பசுக்களையும் காளைகளையும் கொல்வது அவர்களுக்கு அவசியமாக இருந்தது. அதனால் அவர்களது உணவுத் தேவையும் நிறைவு பெற்றது. இச்செயலில் அகிம்சை, கருணை என்ற கோட்பாடுகள் குறுக்கிடவில்லை.

    அதற்கும் பிந்திய காலத்தில், மாடுகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த பின் அவற்றைக் கொல்வதற்கு எதிரான இயக்கம் தோன்றி இருக்க வேண்டும். இருப்பினும் சமயச் சடங்குகளை உடனடியாக மாற்றுவது என்பது எக்காலத்திலும் கடினமான செயல் தான். எனவே யாகங்களில் மட்டும் மிருகங்களைக் கொல்வது தொடர்ந்து நடைபெற்றிருக்க வேண்டும்.

    புத்த ஜைன மதங்கள் அகிம்சைக் கொள்கையைப் பரப்பியபோது வேத சமயம் அதை உடனடியாக ஏற்றுக் கொண்டிருக்காது. ஆரம்பத்தில் அதற்கு எதிர்ப்பு இருந்திருக்கும். நாளடைவில் அது வேத சமயத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. வேதக் கருத்துக்கு மாறான கருத்தை வேத சமயம் எப்படி ஏற்றுக் கொண்டது?

    உண்மை என்னவென்றால் அகிம்சை வேத சமயத்துக்கு முற்றிலும் விரோதமான கருத்து அல்ல. வேதத்தில் பல இடங்களில் சம் த்விபதே சம் சதுஷ்பதே என்ற வாசகம் காணப்படுகிறது. இரண்டு கால் பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும். நான்கு கால் பிராணிகளுக்கு நலம் உண்டாகட்டும் என்று பிரார்த்தனை செய்யப்படுகிறது. அந்த மந்திரத்தின் பொருளை ஆழ்ந்து சிந்தித்தவர்கள் அகிம்சையை ஏற்றுக் கொண்டிருப்பர்.

    மேலும், வேதத்தில் பெரிதும் வலியுறுத்தப்படும் ருதம் என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் படிக்க இருக்கிறோம். ருதம் என்பது சார்ந்தாரைக் காத்தலைக் குறிக்கும். எனவே நம்மைச் சார்ந்து வாழும் மிருகங்களைக் காப்பாற்றுவது முக்கியமான தர்மமாகக் கருதப்பட்டது.

    வண்டி இழுக்கும் நல்ல குதிரை- நெல்லு
    வயலில் உழுது வரும் மாடு
    அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு- இவை
    ஆதரிக்க வேணுமடி பாப்பா – பாரதி

    இவ்விரு கருத்துகளின் விரிவாக்கம் தான் அகிம்சைக் கொள்கை. வேதத்தில் சுருக்கமாகச் சொல்லப்பட்டுக் கண்ணுக்குப் புலப்படாமல் இருந்த இதை விளக்கிச் சொன்னார்கள் புத்தரும் மகாவீரரும். ஒரு வகையில் அவர்களும் வேத ரிஷிகளுக்கு நிகரானவர்கள்தான். அவர்கள் தங்கள் கருத்தைப் பாலி மொழியில் சொல்லாமல் வேத மொழியில் சொல்லியிருந்தால் அவையும் வேதத்தில் சேர்க்கப் பட்டிருக்கும்.

    வீரர்கள் பல நிறமுள்ள காளையைச் சமைத்தனர். அவை முற்கால தர்மமாக இருந்தன (1.164.43) என்று கூறப்படுவதும், வேள்வி செய்யும் மனிதனுடைய பசுக்கள் பயமின்றி மேய்ச்சல் தரையில் சஞ்சரிக்கட்டும், யக்ஞ பலி பீடங்களுக்கு அவை போகாமல் இருக்கட்டும் (6.28.4)  என்ற பிரார்த்தனையும் மிருக பலிக்கு எதிரான எண்ண அலை உருவாகி வளர்ந்த வரலாற்றைக் குறிக்கும். வேறு சில மந்திரங்களில் பசுவைக் கொல்லாதீர்கள் என்ற வேண்டுகோள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. (8.101.15, 16)

    இந்த மந்திரங்கள் புத்த ஜைன மதங்களுக்கு முந்திய காலத்ததாகவும் இருக்கலாம். பிற்காலத்தில் எழுதப்பட்டு வேதத்தில் நுழைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.

    மிருக பலி பற்றிய குறிப்புகள் குறைவாகவும் ஒரு சில சூக்தங்களில் மட்டும் குவிந்ததாகவும் உள்ளன. தானிய ஹவிஸ் பற்றிய குறிப்புகள் மிகுதியாகவும், பரவலாகவும் இருப்பதிலிருந்து பலியிடுவது வர வரக் குறைந்து கொண்டு வந்திருக்கக் கூடும் என்று ஊகிக்க இடம் தருகிறது.

    Share
  • இங்கிலாந்திருந்து ஒரு மடல் . . . . . (136)

    சக்தி சக்திதாசன்

    அன்பினிய உள்ளங்களே !

    அன்பிற்கோர் திருநாளாம் நத்தார் தினத்திலே இம்மடலின் வாயிலாக கனத்த இதயத்துடன் உங்களுடன் மனம் திறக்கிறேன்.

    இப்புனித நாளிலே கனத்த உள்ளத்துடன் மறைந்த இயக்குனர் சிகரம் கே.பி அவர்களின் மறைவுக்கான இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சினிமா என்பது வெறும் ஆடம்பரப் பொழுது போக்குக்கான ஒரு ஊடகம் அல்ல அது வாழ்க்கையின் யதார்த்தங்களை எமக்குப் புலப்படுத்தும் ஒரு ஜனரஞ்சகமான ஊடகம் எனும் உண்மையை ஆழமாகப் புரிய வைத்தவர் இயக்குனர் சிகரம் கே.பி.

    2010ம் ஆண்டு என எண்ணுகிறேன் எனது நூலான “தீஞ்சுவைத் திருக்குறள் கதைகள் ” நூலை சென்னைப் புத்தக விழாவில் வெளியிட்டு வைத்தவர் ஜயா கே.பி அவர்கள்.

    எனது சார்பில் அவ்விழாவில் எனக்காக கலந்து கொண்ட எனது மாமனார்(மனைவியின் தந்தை) அவர்களை கெளரவித்து பூந்துவாலை போர்த்தினார் இவ்வுயர்ந்த மனிதர்.

    அவ்விழாவில் துரதிருஷ்ட வசமாகக் கலந்து கொள்ள முடியாததினால் மறுமுறை சென்னை வந்த போது அவரைச் சந்தித்து எனது அன்பான நன்றிகளைத் தெரிவித்து அவரது ஆசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக அவரைச் சந்தித்த போதுதான் நான் அவரை முதன்முறையாகச் சந்தித்தேன்.

    மிகவும் எளிமையான ஒரு மனிதர் தான் ஒரு இயக்குனர் சிகரம் என்று எவ்விதமான பெருமையும் கொள்ளாது விலாசமேயற்ற ஒரு எளிய எழுத்தாளனை அன்புடன் வரவேற்று உபசரித்த ஓர் உயர்ந்த உள்ளத்தின் சொந்தக்காரர்.

    kb and me

    எனது மனைவியின் ஆர்வ மிகுந்த பல கேள்விகளுக்கு பொறுமையுடன் ஆழமிக்க கருத்துக்களை பதிலாகத் தந்த ஒரு பண்பாளர் ஜயா கே.பி அவர்கள்.

    ஒரு மனிதன் எத்தனை செல்வம் சேமித்தான் என்பது பெருமையல்ல அவனால் எத்தனை பேருடைய வாழ்வில் நேர்மறையான மார்றங்கள் நிகழ்ந்தன என்பதுவே முக்கியம்.

    இவ்வரிய உயர்ந்த அற்புத கலைஞனினால் திரைவானில் உதித்து இன்றும் மிளிர்ந்து கொண்டிருக்கும் கலை நட்சத்திரங்கள் எத்தனை, எத்தனை ?

    அன்னாரின் மறைவுக்காக அவரது குடும்பத்தினருக்கும், அவ்ரை இழந்து தவிக்கும் தமிழக திரையுலக உறவுகளுக்கும், அவ்ரால் பண்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட உன்னதக் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அவர் ஆத்மசாந்திக்காக அனவர்க்கும் பொதுவான இறையின் பாதம் பணிந்து வேண்டுகிறேன்

    திரையுலக வானில் ஒரு விடிவெள்ளி

    திரும்பப் பெறமுடியாத நவரத்தினம்

    இயக்குனர்களின் சிகரமாய்த் திகழ்ந்த

    இனிய எம் கே.பி ஜயா மறைந்தாரா ?

    மலையொன்று சரிந்ததினால் இன்று

    மனங்கள் பல புதைந்தன துயரச் சேற்றினுள்

    விலையென்ன கொடுத்தாலும் பெறமுடியா

    வியத்தகு வித்தகரை நாமின்று இழந்தோமே

    திரையுலகம் தனில் விரிந்த வானத்தில்

    திறமை மிக்க நட்சத்திரங்களின்

    ஒளிர்விற்கு காரணமாயிருந்த

    ஓருயர்ந்த சிற்பியின் மறைவு

    மனம் விட்டகலா பல திரைப்படங்கள்

    மிளிரக் காரணமான இயக்குனர் சிகரம்

    மறைந்து விட்டாரென அறிந்ததும்

    மனமெங்கும் ஏதோ இனம் புரியா வேதனை

    பிறப்பதும் அவர்கள் பின் இறப்பதும்

    மானிட வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள்

    இருப்பினும் சிலரே மக்கள் மனதில் நீங்கா

    இருப்பிடம் வரைந்து செல்வார் என்பதே உண்மை

    அன்றொரு நாள அவர்தம் இல்லத்தில்

    அடியேனைச் சந்தித்து மனம் மகிழ அளவளாவி

    இதயம் அகலா கணங்களை பரிசளித்து

    இயக்குனர் சிகரமும் ஒரு மனிதனே

    எனும் உண்மை உணர்த்திய உயர்ந்தவர்

    என்று இனி அவர் போல யார் வருவார் ?

    கனக்குது இதயம் கலைஞனின் மறைவறிந்து

    துடிக்குது விரல்கள் சிதறுது கவிதை வரிகள்

    அண்ணாமலையான் பாதம் பணிகிறேன்

    அன்னார் ஆத்மசாந்திக்காயும் அவர்தம்

    குடும்பம் நண்பர் உறவினர் மனங்களில்

    கூடட்டும் சாந்தி என்பதற்காகவும்.

    மீண்டும் அடுத்த மடலில்

    துயரத்துடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • புதியதோர் உலகம் செய்வோம்! – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

    காவிரிமைந்தன்

    atmsபுதுவைதந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இயற்றிய கவிதை வரிகள் .. திரைப்படத்திற்காக கையாளப்படும்போது பாடல் வரிகளாக மாறின! இந்தப் பாடலை எம்.ஜி.ஆர் அவர்கள் இரண்டு முறை பயன்படுத்தியிருக்கிறார்! ஆம்.. சந்திரோதயம் திரைப்படத்திலும்.. பல்லாண்டு வாழ்க என்னும் திரையோவியத்திலும்.. சந்திரோதயம் திரைப்படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் பாடப்பட்ட இப்பாடல் பெற்ற வடிவம் வேறு! பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.செளந்திரராஜன் பாடிய இப்பாடல் பெற்ற வடிவம் வேறு! ஆக மொத்தம் பாரதிதாசனின் பாடல் ஒன்றிற்கு இசை வடிவங்கள் வெவ்வாறாக அமைந்தபோதும் இரண்டும் வெற்றி பெற்றதை இங்கே குறித்தாக வேண்டும்!

    யுகங்களில் வாழும் கவிஞர்களின் எண்ணங்கள்.. குறுகிய அளவில் இல்லாமல்.. அடுத்தத் தலைமுறைகளையும் எண்ணும் எண்ணமே மிகச் சிறந்தது! அதுவும் புதிய தலைமுறைக்காக கவிஞரின் நெஞ்சம் பூபாளமிசைத்திருக்கிறது பாருங்கள்! புதியதோர் உலகம் செய்வோம் என்று அவரின் சிந்தனை வீச்சு பற்றி மக்கள் எங்கும் பேச்சு!

    புரட்சியின் விளைவுகளாய் ஏற்படும் நன்மைகளின் பட்டியல் பாடலாகிறது! புரட்சித்தலைவர் பாடும் கொள்கை முழக்கத்திற்கு ஊட்டம் கிடைக்கிறது! பொதுவுடைமைக் கொள்கைக்கு ஊட்டம் தரும் உணர்ச்சிமிகு வரிகளால் சமுதாய அக்கறையின் வெளிப்பாடாய் உயர்வுக்கு என்ன வழிகள் என்கிற உத்திகளும் உள்ளடக்கி புதிய உலா வருகிற பாடலாய்.. ஆம்.. விடிவெள்ளிப் பாடலாய்!

    புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட barathy
    போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.

    பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
    புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்.

    இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
    ‘இது எனதெ’ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்

    உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
    ஒருபொருள்தனி’எனும் மனிதரைச் சிரிப்போம்!

    இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
    ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்

    “புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
    போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
    பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
    புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்
    இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்
    இதுஎனதென்றுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்”. – பாரதிதாசன்

    Share
  • சென்னை சுனாமி !

    அப்துல் வதூத்

    images (2)
    இன்றுதான்
    அது நடந்தது

    கரையெல்லாம்
    கடல்!
    கடலெல்லாம்
    உடல்!

    எப்போதும்
    ஆர்பரிக்கும் அலைகடல்!
    இன்று
    உயிர்பறித்த கொலைக்கடல்!
    காலில் விழுந்த அலைகள்
    காலைச்சுற்றிய பாம்பானதே
    காலையில்!

    பிணங்களின் மீது அலைகள்
    போர்த்தியது வெள்ளைத்துணி!

    தலைவர்கள் சமாதி!
    மீண்டும்
    தண்ணீரில் சமாதி!
    ஓ! இறப்பிலும் புதுப்பிப்பு
    இவர்களுக்குத்தானா?
    “செத்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே!”

    ஏற்றத்தாழ்வு இருக்குமா
    இறப்பில்?
    மரணம் வந்தால் எல்லோருக்கும்
    6 அடி தானே
    இவர்களுக்கு மட்டுமேன்
    50 அடியில் வந்தது..!?
    இயற்கைக்கும் உண்டோ
    முரண்பாட்டில் உடன்பாடு!

    கடலே!
    ஏனிந்த பெருங்கோபம்?
    உன்னிடம்
    முத்துக்குளித்தற்காகவா
    எங்களை
    செத்துக்குவித்தாய்
    ஆழியே!
    உன்னிடம்
    சங்கு எடுத்ததற்க்க்காகவா
    எங்கள் சங்கருத்தாய்?
    உன் மீன்களை தரையில்
    குவித்ததற்காகவா
    எங்கள் பிணங்களை கரையில்
    குவித்தாய்?
    பாற்கடலே! நீ
    அளிக்க தோன்றியவையன்றி
    அழிக்க தோன்றவில்லை!

    இனிய இயற்கையே!
    மனிதனால் உனக்கு
    நிறைய இழப்பு!
    உன்னால் மனிதனுக்கு
    நிறைய இறப்பு!
    அதற்காக வேண்டாம்
    இப்படி
    சுனாமி ‘ செட்டில்மெண்ட்!’

    இதுகேள் மனிதா!
    உயிரினங்களிலேயே
    நீ ‘பெரும்புள்ளி’ தான்
    ஆனால்
    இயற்கைக்கு முன்
    நீ ‘வெரும்புள்ளியே’

    “என் வளங்களை அழிக்காதே!”
    இது சுனாமி வழியே
    இயற்கை உனக்கு
    சாவால் விட்ட சவால்!

    (இந்த கொடூரம் நிகழ்ந்த போது திருவல்லிக்கேணி நல்லதம்பி தெருவில் தான் இருந்தேன்.ஆழிப்பேரலையின் நாக்கு இன்னும் 200 மீட்டர் நீண்டிருந்தால் கூட என்னையும் அள்ளிக்கொண்டோடிருக்கும்.பத்தாண்டுகள் கடந்தும் பதைபதைக்க வைத்த அனுபவங்களைத்தான் இங்கே பதிவுசெய்திருக்கிறேன்.)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    20091307 krishna
    ‘மத்ஸ்யகந்தி ”MyGirl மதனகாம ராஜியிவள்”
    உத்ஸவ மூர்த்தியாய் ஊதுகிறாள், -கஸ்யப
    கோத்திரத்தில் வந்த குறுவா மனன்இவரை
    தோத்தரிப்பான்(கேசவ்) தூரிகையில் தோய்த்து’’….கிரேசி மோகன்….

    Share
  • தேவன் துதிப்பாடல்..

    நாகினி

    G6

    போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்
    போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்

    மரியன்னை வயிற்றில் உதித்து
    மாட்டுத் தொழுவத்தில் பிறந்த
    கருணை நிறைந்த தேவனை
    போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்..

    பாவங்களை ரட்சிக்கும் மேய்ப்பரவர்
    மாசு மன இருள் அகற்றும் தூயவரவர்
    பாதம் சரணடைந்து அருள் ஒளி பெறவே
    போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்..

    அன்பெனும் விளக்காகி
    பண்பின் வழிநடக்க பாதையாகி
    கிருபைகள் நாளும் வழங்கி
    புவி கிரகத்தில் வழிநடத்தும் தேவனை
    போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்..

    முள் முடி தரித்து
    சிலுவை சுமக்க வைத்த
    இருள் மனபாவிகளின் பாவங்களை
    அருள் தோளில் சுமந்து
    சிலுவையில் மரித்த தேவனை
    போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்..

    வன்ம இரும்பாணிகள் உயிரைக் குடித்தாலும்
    திண்ம நம்பிக்கை ஒளிவடிவாய்
    வன்மங்களைத் துண்டாட
    தரணியில் உயிர்த்தெழுந்த தேவனை
    போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்…!!

    … நாகினி

     

    Share
  • நீ யாரோ (பாடல்)

     

    இசைக்கவி ரமணன்

     

    [mixcloud]//http:www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%B0/?utm_source=widget&utm_medium=web&utm_campaign=base_links&utm_term=resource_link/[/mixcloud]

     

    lord-shiva

    நீ யாரோ ஏதும் அறியேனே
    மனமெனும் பனியில் குலவிடும் கதிரே
    மலையிலும் மனதிலும் மருவிடும் குளிரே
    அருளே பரிவே அழகிய சிவனே! (நீ யாரோ)

    அருகில் வருவதும் விரல்தொடும் நொடியினில்
    விலகி விலகி நீ விரைவதும்
    விண்ணை மீறி நீ விரிவதும்
    உருகி உருகி நான் கரைவதும், உயிர்
    பருகிப் பருகி நீ மகிழ்வதும்
    அருவி பெருகுவதும் குருவி திணறுவதும்
    அன்பு கொடுமையென மனது பதறுவதும்
    நீ தலைவன் நான் அடிமை என்றே
    நீயே நீயே கதி என்றே
    ஆவியினுள்ளே தாவிடும் களியே
    அள்ளிட வந்த என் அழகிய சிவனே!

    ஆனந்தமே உன் ஓரியல்பா! என்
    அன்பே அன்பே உன்வடிவா!
    நானென தென்பதும் நடனங்களா! அவை
    நடந்தடங்கும் அரங்கம் சுடலையிலா?
    தானந்தம் இல்லாத ஜோதி, அது
    நான்சொந்தம் என்றான தென்ன நீதி!

    தேன்சிந்தும் வானந்தி மேனி
    தான்தந்து தான்கொண்ட தேவி
    ஊன் காண ஆனேறி வருமே
    நான்காணும் என் அழகிய சிவனே

    21.12.2014 / 7.45 / ஹைதராபாத்

    Share
  • தாய்மை அழகே அழகு!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    மழலையைத் தாங்கிச் செல்லும்
    மாதினில் உண்மையான
    அன்பினைக் கண்டேன் மண்ணில்
    அழகெனிற் தாய்மைப் பேறே…..!

    “குளு குளு” மழலை தன்னைக்
    கொஞ்சிடும் அழகு –  மற்றும்
    அழுகையைப் பாட்டினிலே
    அணைப்பதும் அழகு காண்பீர்…..!

    உலகினில் கருணை வெள்ளம்
    உருகிடும் தாய்மை யுள்ளம்
    மலரவள் குழந்தை பெற்றாள்
    மலர்ந்திடல் மொட்டுத்தானே…..!

    தாய்மையே பெண்மை வாழ்வில்
    தனிநிகர் கனிவு ஆகும்
    காய்களா அழகு இல்லை
    கனிகளா அழகு சொல்வீர்…..!

    விளை நிலம் அழகா சொல்வீர்
    வெறு நிலம் அழகா சொல்வீர்
    அழகில் தாய்மை மேலே
    அடுத்தவை யாவும் கீழே…..!

    Share
  • ரகசிய முடிச்சு அவிழ்ப்பதற்கில்லை…நாம் வெறும் பொம்மையம்மா!

    -கவிஞர் காவிரிமைந்தன்

    எந்த இடத்தில் இந்த மூச்சு நிற்கப்போகிறதோ
    எந்த நொடியில் இந்த ஓட்டம் களைத்துவிழுகிறதோ
    அந்த இடமும் அந்த நொடியும் ஆண்டவன் கையிலம்மா
    ரகசிய முடிச்சு அவிழ்ப்பதற்கில்லை…நாம் வெறும் பொம்மையம்மா!

    எவரின் கணக்கு எத்தனை நாட்கள் விவரம் தெரியாமல்
    எத்தனை ஆசைகள் எத்தனை ஆணவம் எதற்கிங்கே அர்த்தமுண்டு?
    கொடுத்தவன் கேட்கிறான்…கொட்டியே கவிழ்க்கிறான்!
    கணக்கினில் பேதமில்லை! சமத்துவம் சாவதில்லை!!
    நினைத்து நீ பார்க்கவே நெஞ்சத்தைக் கொடுத்திட்டான்!
    வருத்தங்கள் மாறவே மறதியைச் சேர்த்திட்டான்!
    அடுத்த நொடியிலே நடப்பதுகூட அத்தனை ரகசியமாய்
    படைத்தவன் வகுத்ததால் சுழலும்சக்கரம் தடுப்பவர் யாருமில்லை!!

    Share
  • மார்கழி மலர்கள் – காதலிலே வரும் கண்ணீர்த் துளியும் (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

    [mixcloud]//http:www.mixcloud.com/Vallamai/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE/[/mixcloud]

    1443Krishna

    கண்ணன்
    காதலிலே வரும் கண்ணீர்த் துளியும்
    கவிதை நாடும் கானமாகும்
    காந்தனவன் தரும் தாபத்திலே எழும்
    தாகம் கூட ராகமாகும்
    பனிகுளிரும் அவன் பாதத்திலே மன
    மோகம் கூட மோகனமாகும்

    ஒரு மார்கழி மாதக் காலைப் பொழுது
    பாதையெங்கும் பனி விழுது, அதில்
    உருவாய் அருவாய் ஒரு நீலக் கதிர்
    உருக்கும் உயிரை உழுது
    அது
    குழலோ கன்னக் கோலோ? அதில்
    கொள்ளை போகவே உயிரோ? வெறும்
    விழலாய்க் கிடந்த வெற்று மனத்தினில்
    வீணை நரம்புகள் விம்மிவிம்மி எழ
    விண்ணைக் குடைந்தது காற்று, அதில்
    வீழ்ந்து போனதடி நேற்று, அந்தக்
    கண்ணனென்னும் என் மன்னவன் அன்புக்
    கண்களே யாவுமம்மா! அவன்
    கனவிலும் காவலம்மா! நிரந்தரக்
    களவுதான் காதலம்மா!

    பட்ட மரத்தில் பல பாரி ஜாதங்கள்
    கொட்டமடிக்கும் கதை உண்டோ?
    சொட்டச் சொட்ட நனைந்தும் முட்டிமுட்டி உயிரைச்
    சுட்டுப் பொசுக்கும் தாகம் உண்டோ?
    கிட்டவந்தால் விலகி எட்டிநின்றால் நெருங்கித்
    தொட்டுச் சிரிக்கும் மாயம் உண்டோ?
    அட்டக் கறுப்பில் மின்னும் வட்டக் கரியவிழி
    திட்டமெதுவும் அதில் உண்டோ?

    மாதவன் வந்ததும் நொந்த மனத்தினில்
    நந்தவனம் பல பூக்கும், அவன்
    மயிலிறகும் விழியும் இதழும் அதன்
    செவ்வரியும் எனைத் தாக்கும்
    இங்கு
    உயிரே இலையெனும் போது, அதில்
    உறவுகள் உரிமைகள் ஏது? ஒரு
    உணர்வே தவமாய் வரமாய் லயமாய்
    ஒருகுழல் ஊதிடும் போது
    கண்ணன் என்றொரு மயக்கம், அவன்
    காலடி மிகவும் பழக்கம், அவன்
    காதல் பரம்பரை வழக்கம், அந்தக்
    கள்வனே நெஞ்சில் நெருக்கம்

    19.12.2014 / வெள்ளி / 15.00

    Share
  • சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்

    தஞ்சை வெ. கோபாலன்

    ராஜாஜி அவர்களுடைய நினைவு தினத்தையொட்டி அவரைப் பற்றிய சுவாரசியமான இரு நிகழ்வுகளை நினைவுகூரலாம் என நினைக்கிறேன். 1930 வேதாரண்யம் சென்று உப்பு அள்ளும் சத்தியாக்கிரகம் செய்வதற்காக நூறு தொண்டர்களுடன் ராஜாஜி திருச்சியிலிருந்து பதினைந்து நாட்கள் நடைப்பயணமாக ஊர் ஊராக நடந்து சென்றார். அப்படி அவர் கும்பகோணம் சென்றபோது அங்கு சத்தியாக்கிரகிகளை கும்பகோணம் நகர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருக்கருகாவூர் பந்துலு ஐயர் என்பார் வரவேற்று இப்போதைய காந்தி பூங்கா இருக்குமிடத்தில் அப்போதிருந்த திடலில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் தொடங்குமுன்பாக தொண்டர்கள் உண்டியல் குலுக்கி வசூல் செய்து கொண்டிருந்தனர். அப்போது சுயமரியாதை இயக்கத்தார் சிலர் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர். பின்னர் கூட்டம் தொடங்கும் சமயம் கூச்சலிட்டு மண்ணை வாரி இறைத்து இடையூறு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் விநியோகித்த துண்டுப் பிரசுரத்தில் “ராஜகோபாலாச்சாரியே! உன் பெயரோடு சக்கரவர்த்தி என்று போட்டுக் கொண்டிருக்கிறாயே, நீ எந்த நாட்டுக்கு சக்கரவர்த்தி?” என்று இருந்தது.

    rajajiகூட்டம் தொடங்கும் சமயம் ராஜாஜி மேடையேறிப் பேசத் தொடங்கினார். அப்போது ரகளையில் ஈடுபட்டவர்கள் அதே கேள்வியைக் கேட்டு கூச்சலிட்டனர். அப்போது ராஜாஜி சொன்னார், நான் இப்போது உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லப் போவதில்லை. நான் வேதாரண்யம் சென்று உப்பு சத்தியாக்கிரகம் செய்யச் சென்று கொண்டிருக்கிறேன், ஆகையால் என் கவனம் முழுவதும் அதில்தான் இருக்கும். ஆனால் உங்கள் கேள்விக்குப் வேறொரு நாளில் நான் பதில் சொல்வேன், பதிலாகவோ அல்லது செயலாகவோ அது இருக்கும் என்றார். அப்போது அவர் என்ன சொல்கிறார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் அவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்ற பிறகு முதன் முதலில் சென்னைக்கு வந்தபோது அவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாராக வந்திறங்கியபோதுதான் தெரிந்தது அவர் இப்போது இந்தியாவுக்கே சக்கரவர்த்தி என்பது. அதை அன்று ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் புரிந்து கொண்டார்களோ என்னவோ தெரியவில்லை.

    இன்னொரு சம்பவம். 1943இல் சென்னையில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆண்டுவிழாவில் திரு வி.க. கலந்து கொள்ள முடியாததால் அவருக்குப் பதிலாக பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தத்தை நிர்வாகி ராமானுஜாச்சாரியார் என்பார் பேச அழைத்திருந்தார். விழாவுக்கு ராஜாஜி தலைவர். டி.எம்.பி.மகாதேவன் ஆங்கிலத்திலும், தெலுங்கில் ஒருவரும், தமிழில் அ.ச.ஞா. அவர்களும் பேசினர். கூட்டம் தொடங்கியதிலிருந்து மேடையில் உட்கார்ந்திருந்த ராஜாஜி அருகில் வீற்றிருந்த அ.ச.ஞானசம்பந்தத்தை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தார். ஏன் அவர் இப்படிப் பார்க்கிறார் என்பது பேராசிரியருக்குப் புரியவில்லை. அழைப்பிதழில் பேராசிரியரின் முதலெழுத்துக்களாகிய அ.ச. என்று போடாமல் வெறுமனே ஞானசம்பந்தம் ஆஃப் பச்சையப்பாஸ் என்று போடப்பட்டிருந்தது.

    கூட்டம் தொடங்கியது; முதலில் டி.எம்.பி.மகாதேவன் ஆங்கிலத்தில் பேசி முடித்துவிட்டார். அடுத்துப் பேச பேராசிரியரை ராஜாஜி அழைக்க வேண்டும். அப்படி அவர் அழைத்தபோதே ஏதோ வேண்டா வெறுப்பாக, “இப்போ மகாதேவன் பேசி முடிச்சுட்டார், அடுத்து ஞானசம்பந்தமாம், பச்சையப்பாவாம், அவர் இப்போ தமிழில் பேசுவார்” என்று அறிவித்தார். இதைக் கேட்டு பேராசிரியருக்கு வருத்தம் ஏற்பட்டது. எத்தனை பெரிய தலைவர், தன்னை இப்படி இளக்காரமாக அறிவித்து விட்டாரே என்று மனம் வருந்தி நேரடியாக அவையினரை விளித்துப் பேசாமல் பேசத் தொடங்கினார்.

    மேடையில் வைக்கப்பட்டிருந்த ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் படங்களை அவையோருக்குச் சுட்டிக் காண்பித்துவிட்டு அவர் பேசியது: “தயை கூர்ந்து எல்லோரும் இவ்விரு படங்களையும் கூர்ந்து கவனியுங்கள். இதில் தலையில் முண்டாசு கட்டிக்கிட்டு இருக்கிறாரே அவர் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அறிவே வடிவானவர். இதோ இங்கு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறாரே கூட்டத்தின் தலைவர் அவரைப் போல அறிவில் சிறந்தவர். இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா என்கிறீர்களா? அதற்காகத்தான் சொன்னேன், இத்தனை பெரிய அறிவின் வடிவம், அருகில் இருக்கிறதே ஒரு படம் தெய்வீகப் புன்னகையோடு ஒருவர், தற்குறி நம்பர் ஒன், இதை நான் சொல்லவில்லை, சுவாமி விவேகானந்தரே “You are the greatest illiterate in the world” என்று அவரிடமே நேரில் சொன்னார். அவருடைய காலில் போய் விழுந்தார் அறிவாளியான விவேகானந்தர். அதுதான் ஆச்சரியம். இந்த அறிவு எல்லாம் ஒரு பைசாவுக்குக்கூட பயன்படாது. அறிவைவிட உயர்ந்தது உணர்வு. அதைவிட உயர்ந்தது இறையுணர்வு; அதனையும் விட உயர்ந்தது இறையனுபவம். அந்த நிலையை அடைந்துவிட்டவர்கள் திருவடிகளில் அறிவுக் களஞ்சியங்கள் போய் விழுவதில் புதுமையொன்றுமில்லை” இப்படிப் பேசத் தொடங்கினார் அ.ச.ஞா.

    இருபது நிமிஷம் பேசியபின் பேராசிரியர் உட்கார்ந்துவிட்டார். ராஜாஜி இவரிடம் “இன்னும் கொஞ்சம் பேசலாமே!” என்றார். இல்லை எனக்கு இருபது நிமிஷங்கள்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனால் முடித்துவிட்டேன் என்றார் அ.ச.ஞா. ராஜாஜி சொன்னார், நான் தலைவர் என்கிற முறையில் இன்னொரு இருபது நிமிஷங்கள் தருகிறேன் பேசுங்கள் என்றார்; கூட்டத்தினரும் அதனை ஆமோதித்தனர். அ.ச.ஞா. இன்னொரு இருபது நிமிஷம் பேசும் வரை கூர்ந்து கேட்டார் ராஜாஜி.

    பேசி முடித்து உட்கார்ந்ததும் ராஜாஜி அ.ச.ஞா.விடம் கேட்ட கேள்வி, உங்கள் இனிஷியல் என்ன என்பது. அவர் அப்படி ஏன் கேட்டார் என்பது பேராசிரியருக்குப் புரிந்து விட்டது. உடனே அவர் ராஜாஜியிடம் “ஐயா, என்னுடைய இனிஷியல் T.L. அல்ல அ.ச. என்பதுதான்” என்றார். இவருடைய பேச்சு சாமர்த்தியத்தைப் புரிந்து கொண்ட ராஜாஜி “தஞ்சாவூர் ஜில்லாவோ?” என்றார். “இல்லை ஐயா, அரசங்குடி, திருச்சியை அடுத்த கல்லணைக்கு அருகில் உள்ள ஊர், தந்தையார் சரவண முதலியார்” என்றார் பேராசிரியர். பின்னர் ராஜாஜி பேச எழுந்து விட்டார். பேராசிரியர் பேசிய அதே தலைப்பைத் தொடர்ந்து ராஜாஜியும் விரிவாகப் பேசினார்.

    இது என்ன? ராஜாஜி பேராசிரியரை முறைத்துப் பார்த்ததற்கும், இவ்விருவருக்குமிடையே நடந்த உரையாடலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? சம்பந்தம் இருக்கிறது. ராஜாஜி முதன் மந்திரியாக இருந்த சமயம் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த T.L.திருஞானசம்பந்தம் என்பார் ஒரு பெரிய மண் சட்டியில் மலத்தைக் கரைத்துக் கொண்டு வந்து ராஜாஜியின் வீட்டு வாசலில் போட்டு உடைத்தார். அந்த மனிதர்தான் இவர் என்று ராஜாஜி அ.ச.ஞானசம்பந்தத்தை நினைத்து விட்டார். அந்த மனிதருக்கு வயது அதிகம் இருக்குமே, இவர் இளைஞராக இருக்கிறாரே என்பதை நினைத்துத்தான் ராஜாஜி முறைத்து முறைத்து இவரைப் பார்த்திருக்கிறார். அவர் மலச் சட்டியைப் போட்டு உடைத்த கோபம் அவர் அறிமுகம் செய்து வைத்ததிலும் தெரிந்தது. இவர் வேறு ஆள் என்பதும், இவர் பேச்சில் இருந்த அழகும் ராஜாஜியைச் சிந்திக்க வைத்தது, போதாதற்கு அ.ச.ஞா. தன்னுடைய இனிஷியல் T.L. இல்லை அ.ச. என்றதும் புரிந்து கொண்டார் ராஜாஜி. இவ்விரு மேதைகளும் அடுத்தவர் அறியாமல் அரியதொரு நாடகத்தையே அங்கு அரங்கேற்றி விட்டனர். இந்த செய்தியை “நான் கண்ட பெரியவர்கள்” எனும் நூலில் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்களே எழுதியிருக்கிறார்.

    Share
  • இனிய கிறித்துமசு தின நல்வாழ்த்துகள்

    பவள சங்கரி

    christmas

    உண்மை, அன்பு மனித நேயம் போன்ற அனைத்தையும் போதித்தவர் இயேசுபிரான். இயேசுபிரான் பிறந்த தினம் கிறித்துமசு விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தேவ குமாரன் அவதரித்த இந்நன்னாளில் நாமும் நம் சக மனிதர்களிடம் அன்பு பாராட்டி, ஒற்றுமையும், நல்லிணக்கமும் வளர்த்து நாட்டில் போட்டி, பொறாமைகள் அகன்று, பூரண அமைதி நிலவவும் உறுதி எடுப்போம். மகிழ்ச்சிகரமான இந்த கிறித்துமசு நாளில் தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறித்துவ பெருமக்களுக்கும் நம் வல்லமையின் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மனித நேயத்தை வளர்க்கும் இணைப்புச் சங்கிலி அன்பு ஒன்றுதான் என்பதே இயேசுபிரானின் அவதார நோக்கம் மற்றும் அவருடைய போதனையும் அதுதான். நம் மனங்களில் அன்பும் அமைதியும் தழைத்தோங்கி பிரிவினைகளும், பேதங்களும் மறைந்து சமத்துவமும், சகோதரத்துவமும் தழைத்தோங்க மனமார பிரார்த்திப்போம்.

    Share