Blog

  • மனத்தினால் வரவேற்போமே!

     -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    NYG1

     

           

     

     

     

     

     

          

            இரண்டாயிரத்துப் பதினைந்தை
            இன்பமுடன் வரவேற்போம்
            எங்களது வாழ்வினிலே
            ஏற்றமுற வேண்டுமென்று!

            சங்கடங்கள் போவதற்கும்
            இங்கிதங்கள் வருவதற்கும்
            பொங்கிவரும் புதுவருடம்
            புதுமருந்தாய் அமைந்திடட்டும்!

            வங்கக்கடல் கடைந்த
            மாதவனைக் கேசவனை
            வாழ்த்திநின்ற மார்கழியை
            மனமார வணங்கிடுவோம்!

            எங்களது வாழ்விலினிலே
            மங்கலமே வருகவென
            சங்குகொண்டு ஊதிநின்று
            சந்திப்போம் புதுவரவை!

           மனங்களில் மாற்றம்வந்து
           மதங்களால் அமைதிவந்து
           தினம்தினம் எங்கள்வாழ்வு
           திருந்திட வேண்டிநிற்போம்!

           புலர்ந்திடும் பொழுதுபோல
           பூரிப்பு வந்துசேர
           மலர்ந்திடு வருடமென்று
           மனத்தினால் வரவேற்போமே!

    Share
  • ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய….

    கிரேசி மோகன்


    images
    ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய….

    திருவா திரையில் திருச்சுழி ஊரில்
    கருவாய் அழகம்மை கர்பம் -உருவாய்
    பெருந்தவம் செய்த பகவான் ரமணர்
    பிறந்து துறந்தார் பிறப்பு….(1)….

    பேரூழி காலத்தில் பாராழி புக்காது
    நீரோய சூலன் நிறுத்திய -ஊராம்
    திருச்சுழி தோன்றினன், தாயழ கம்மை
    கருக்குழியில் கர்மம் கழித்து….(2)….கிரேசி மோகன்….

    சொக்கப்ப நாய்க்கர் மதுரை சந்தில்இ
    லக்கம் பதிணொன்னில் லீலையாய் -மிக்கதோர்
    அச்சமாம் காலனை துச்ச மெனவுதைத்த
    அச்சிறுவன் தாளே அரண்…

    Share
  • நன்றி! நன்றி! நன்றி!

    பவள சங்கரி

    வல்லமை

    இனிமையான 2014ம் ஆண்டை வாழ்த்தி விடைகொடுத்து வளமான 2015ம் ஆண்டை வேண்டி வரவேற்போம்!

    ‘வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கு – சொல்லடி சிவசக்தி’ என்ற மகாகவி பாரதியின் உள்ளார்ந்த வேண்டுதலுக்கு ஏற்ப தங்களுடைய வல்லமைகள் மூலமாக நம் ‘வல்லமை’ இதழை அடுத்த உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ள அனைத்து நல்லிதயங்களுக்கும் வல்லமையின் மனமார்ந்த பாராட்டுகள். வெற்றிகரமான பல படைப்பாளர்களை உருவாக்கும் விதமாக நம் வல்லமை இதழில், கவிதாயினி திருமதி மதுமிதா அவர்களால் முன்னெடுக்கப்பட்ட புத்தக மதிப்புரை போட்டி – http://www.vallamai.com/?p=41898 , திருமதி தேமொழி அவர்களால் முன்னெடுக்கப்பட்ட, ‘கடித இலக்கியப் போட்டி’ – http://www.vallamai.com/?p=44563 மற்றும் கவிஞர் திரு காவிரி மைந்தன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட, ‘என் பார்வையில் கண்ணதாசன்’ – http://www.vallamai.com/?p=47553 என்ற கட்டுரைப்போட்டியும், இப்போட்டிகளுக்கு நடுவர்களாக இருந்து அற்புதமாகத் தங்கள் பணியை நிறைவேற்றியுள்ள, தமிழ் எழுத்துலகை அரை நூற்றாண்டுக் காலமாகக் கவனித்து எழுதி வரும் மூத்த விமர்சகர் வெங்கட் சாமிநாதன், பதினாறாம் அகவையில் தம் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்து, இன்று இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனிப்பட்ட இடத்தையும் பிடித்து, தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் சொற்பொழிவாற்றலும், இலக்கிய மன்றங்கள், கவியரங்கம், தொலைக்காட்சித் தொடர்கள் என அனைத்துத் தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் திரு இசைக்கவி இரமணன் அவர்கள் மற்றும் மாபெரும் பேச்சாளரும், கவிஞருமான, முனைவர் வ.வே.சுப்பிரமணியன் (கவிஞர் வ.வே.சு.) ஆகியோரின் தன்னலமற்ற பங்களிப்பினால் தம் இலக்கியப் பணியில் நம் வல்லமை இதழ் அடுத்த உச்சத்தை எட்ட முடிந்துள்ளது. நம் வல்லமை இதழில் தொடர்ந்து தங்கள் ஆய்வுக் கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள், ஓவியங்கள் என்று தொடர்ந்து அற்புதமான படைப்புகளை வழங்கி நம் வாசகர்களுக்கு இனிய விருந்தை படைத்துக்கொண்டிருக்கும், திரு கோதண்டராமன், விஞ்ஞான, இலக்கிய, நாடகப் படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வரும் திரு ஜெயபாரதன், திரு. இன்னம்பூரான், திரு.இசைக்கவி ரமணன், திரு.கிரேசி மோகன், திரு. கேசவ், திரு சு.ரவி, திரு கே.ரவி, திரு. திவாகர், திருமதி விசாலம், திரு. மாதவன் இளங்கோ, திருமதி. சுபாஷிணி டிரெம்மெல், திருமதி மேகலா, திருமதி தேமொழி, திரு தமிழ்த்தேனீ, திரு செண்பக ஜெகதீசன், கவிஞர் காவிரிமைந்தன், திரு ரிஷான் ஷெரீப், திரு சத்தியமணி, திருமதி. சுபாஷிணி திருமலை, திரு சுதாகர் செல்லதுரை, திரு வினைதீர்த்தான், திரு. கோபாலன், திரு அமீர், திரு பழமைபேசி மற்றும் ஏனைய பல படைப்பாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

    வல்லமை இதழை செவ்வனே நடத்தும் விதமாக, எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல், தங்கள் பொன்னான நேரத்தை வழங்கி, அரும்பணியாற்றி வரும் திருமதி தேமொழி, திருமதி மேகலா மற்றும் திருமதி பர்வதவர்தினி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. அனைத்திற்கும் மேலாக நம் அனைத்துப் படைப்பாளர்களையும் உற்சாகமும், ஊக்கமும் கொடுத்து மேலும், மேலும் சாதனை படைக்கத் தூண்டும் அனைத்து வாசகப் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இனி வரப்போகும் நாட்களிலும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் நாடியிருக்கிறோம். நம் வல்லமையின் வழங்கி நிர்வாகி, திரு. ஆமாச்சு (எ) ஶ்ரீராமதாஸ், தள மேலாளர், திரு. ஸ்ரீநிவாசன் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்கள் , திரு. காமேஷ், திரு. செல்வ முரளி, ஆலோசகர்கள், திரு. இன்னம்பூரான், திரு. மறவன்புலவு க. சச்சிதானந்தன், திரு. விஜய திருவேங்கடம் மற்றும் திரு. விசாகப்பட்டினம் வெ. திவாகர் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

    Share
  • 2015 புத்தாண்டு சபதம்

    தமிழ்த்தேனீ

    images (1)
    2014 ஆம் ஆண்டு நிறைந்து 2015 ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது. ஜனவரி ஒன்றாம் தேதி முதல்.

    ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கு முன்னாலே வா வாவா என்றொரு பாட்டு உண்டு.

    உண்மைதான் ஒரு ஆண்டு கழிந்தால் ஒரு வயது ஏறுகிறது, ஆகவே வயது மட்டும் ஏறினால் போதுமா? அப்படி ஒரு வயது ஏறுகிறது என்றால் ஒரு ஆண்டு அனுபவமும் நமக்குள் நிறைகிறது என்று பொருள், ஆகவே ஓராண்டு என்பது 12 மாதங்கள் அல்லது கிட்டத்தட்ட 50 வாரங்கள், 366 நாட்கள், அல்லது 8784 மணி நேரம் ,அல்லது 527040 நிமிடங்கள், அல்லது 31,622,400 வினாடிகள் ,

    அடேயப்பா ! இவ்வளவு வினாடிகள் நாம் செலவழித்திருக்கிறோம். அது சரி ஆனால் நாம் செல்வழித்த இந்த 31,622,400 வினாடிகளில் எவ்வளவு வினாடிகள் நாம் உண்மையாக உருப்படியாக நல்ல செயல்களுக்கோ நாட்டின் முன்னேற்றத்துக்காகவோ, அல்லது வருங்கால சந்ததிகளின் முன்னேற்றத்துக்காகவோ செலவிட்டோம் என்று எண்ணிப் பார்ப்போமா?

    பன்னிரெண்டு ஆழ்வார்களில் ,முக்கியமான ஆழ்வாராகிய தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஒருநாளில் அதாவது 24 மணி நேரத்தில் பாதியும் உறங்கிப் போம் என்கிறார்.

    “வேதநூற் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்,
    பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
    பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்
    ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே “
    என்று திருவரங்கனிடம் வேண்டுகிறார்.

    நாம் நூறு வயது வாழ்ந்தால் பாதியும் உறங்கிப் போகும் அதாவது ஐம்பது வருடங்கள் உறக்கத்திலேயே கழிகிறது, 15 ஆண்டுகள் பேதை பாலகனாகவே அறிவு முதிர்ச்சியோ அனுபவ முதிர்ச்சியோ இல்லாமல் இருக்கிறோம்.
    ஆக மொத்தம் 65 ஆண்டுகள் வீணாகக் கழிக்கிறோம்

    65 வயதுக்கு பின்னர் இயல்பாக வரும் மூப்பு பிணி போன்றவைகளால் அவதிப் படவே நேரம் போகிறது
    இப்படி இருக்க ஒரு ஆண்டு கழிந்து புது வருடம் பிறந்தால் நம் ஆயுளிலே ஒரு வருடம் குறைகிறது

    ஆகவே நமக்கு கொடுக்கப்பட்ட ஆயுளுக்குள் நாம் ஏதேனும் நற்காரியம், ஏதேனும் சாதனைகள் செய்ய வேண்டாமா?

    அப்படியானால் நேரத்தை நாம் எப்படி திட்டமிட்டு கழிக்க வேண்டும்?

    ஒவ்வொரு நொடியும் நமக்கு பொன் போன்றது அல்லவா? அதனால்தான் காலம் பொன் போன்றது என்கிறார்கள்

    நான் மேற்கூறிய அனைத்துமே நாம் நூறு வருடங்கள் முழுமையாக வாழ்ந்தால்தான் . ஆனால் நம்மில் எத்தனைபேர் நூறு வருடம் வாழ்கிறோம்? பிறப்பதும் இறப்பதும் நம் கையில் இல்லை. ஆகவே நமக்கு விதிக்கப்பட்ட ஆயுள் எவ்வளவு என்று நமக்குத் தெரியாது அப்படியானால் நமக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது நல்லவைகளைச் செய்ய?

    ஆகவே நாம் வாழும் காலம் எவ்வளவு வருடங்கள் என்று எண்ணிப் பார்ப்பதைவிட வாழும் காலத்துக்குள் நல்லவைகளை நிறைவேற்ற வேண்டும் என்னும் பொறுப்பு நமக்கு கூடுகிறது அல்லவா?

    பல நல்ல மனிதர்கள், நாட்டுக்கு உழைத்தவர்கள் நன்மை செய்தவர்கள், மஹாகவி பாரதியார், கணிதமேதை இராமானுஜம் அவர்கள் போன்ற பலர் மிகக் குறுகிய காலமே வாழ்ந்தாலும் வாழும் காலத்திலே நல்லது செய்துவிட்டு என்றும் மக்கள் மனதிலே நீங்காத இடம் பெற்றிருக்கிறார்கள் ..அதாவது அவர்கள் வாழ்ந்த குறுகிய காலத்துக்குள்ளாக திட்டமிட்டு நன்மைகளை செய்திருக்கிறார்கள், நல்ல நோக்கத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள்.

    அப்படியானால் நாம் இந்த வருட தொடக்கம் முதல் எப்படி வாழவேண்டும் என்று திட்டமிட்டு அப்படி வாழ வேண்டுமல்லவா?
    அப்போதுதானே நேர விரயத்தை குறைத்து நாமும் பல நன்மைகளைச் செய்ய முடியும்?
    சிந்திப்போமா?

    இந்த வருட தொடக்கத்தில் நாமும் ஒரு புது சபதம் எடுப்போமா?

    இனி என் வாழ்நாளில் ஒரு வினாடியையும் வீணாக்க மாட்டோம், இயன்றவரை நல்லதே செய்வோம், அனைவருக்கும் உதவியாய் இருப்போம், நாம் பிறந்த நாட்டை முன்னேற்ற நம்மால் இயன்ற அளவு பாடுபடுவோம். நாட்டை வளர்ச்சிப் பாதையிலிருந்து திசை திருப்பி பலகீனமாக்கும் லஞ்சம் , ஊழல், போன்றவற்றை களைய சிறிதேனும் முயற்சி எடுப்போம்.

    இளைஞர்களை நல் வழிதிருப்பி நாட்டின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் அறிவுறுத்தி அவர்களின் ஆக்க பூர்வமான அரிய சக்தியை நல்ல வழியில் செலவழிக்க அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

    நாட்டில் மனிதர்களே முக்கியம், சாதிப் பிரிவினை, மொழிப் பிரிவினை, போன்றவை மனிதர்களை பலகீனப்படுத்துகிறது என்பதை உணரவைத்து ஒற்றுமையே மேன்மை என்பதை வலியுறுத்துவோம்

    மனிதமே மேன்மையானது, மனித நேயமே எப்போதும் வாழவைக்கக் கூடியது. ஆகவே மனிதம் காப்போம் , என்று உறுதி எடுப்போமா? ஜாதி இன மொழி பேதமில்லாமல் அனைவருக்கும் 2015 ஆம் ஆண்டு நல்ல வாழ்க்கையை அமைத்து தரவேண்டி அனைவரும் ப்ரார்த்தனை செய்வோம் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 38

    சு. கோதண்டராமன்

    ருதம் என்பது என்ன?

    மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொற்களில் மூன்றாவதான ‘ருதம்’ என்ற சொல், ரிக் வேதத்தில் 600 தடவைகளுக்கு மேல் வருகிறது.
    அகராதியில் ஸத்யம், ருதம் என்ற இந்த இரண்டு சொற்களுக்கும் உண்மை என்றே பொருள் சொல்லப்படுகிறது. ஸத்யமும் ருதமும் ஒன்றா என்றால் இல்லை.

    பரிஷேசன மந்திரம் “ஸத்யமே, உன்னை ருதத்தால் நனைக்கிறேன்” என்கிறது. வேத இலக்கியத்தில் ருதம் வரும் இடங்களில் எல்லாம் ஸத்யமும் கூடவே வருகிறது.

    ருதம் வதிஷ்யாமி, ஸத்யம் வதிஷ்யாமி
    ருதம் அவாதிஷம், ஸத்யம் அவாதிஷம்
    ருதம் ஸத்யம் பரம் ப்ரம்ம

    ருதத்தை அனுசரித்து, அங்கிரஸ்கள் ஸத்யத்தை அடைந்தனர். (5.45.7)
    மருத்துகள் ருதம் வழியாக ஸத்யத்தை அடைகின்றனர். (7.56.12)
    கடும் தவத்தின் விளைவாக ருதமும் ஸத்யமும் தோன்றின. (10.190.1)
    மேற் கண்ட மந்திரங்களிலிருந்தும் ருதமும் ஸத்யமும் வேறு வேறு

    பொருள் கொண்டவை என்பதும் அவை ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்ட இரட்டைகள் என்பதும் தெரிகிறது.
    ருதம் என்பதன் அடிப்படைப் பொருள் இயற்கை நியதி என்பது. அதைத் தெரிந்து கொள்ள அச் சொல் பயன்படும் எல்லா இடங்களையும் தொகுத்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்ததால் கிடைத்த முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

    ரிஷிகளுக்கு வியப்பை ஊட்டிய மூன்று விஷயங்கள் ருதம் என்ற சொல்லோடு தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன.

    ஆறுகள்

    ஆறுகள் ஆண்டாண்டு காலமாக இடைவிடாமல் குறிப்பிட்ட திசையிலேயே ஓடிக் கொண்டிருக்கின்றன. அவை ஒரு போதும் திசை மாறி, அதாவது கீழிருந்து மேலாக, ஓடுவதில்லை. தன்னிடமுள்ள நீரைக் கடலில் சேர்ப்பதால் அவை வற்றுவதில்லை. எவ்வளவு நீர் வந்தாலும் கடல் நிரம்புவதில்லை. அது தன் நீரை ஆவியாக்கிக் கொடுத்து விடுகிறது. ஆவியாவதால் கடல் வற்றுவது இல்லை. புதிய புதிய மேகங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மேகங்கள் தன்னிடமுள்ள நீரைப் பொழிந்து கொண்டிருக்கின்றன.

    இது ருதத்தின் வேலை என்று ரிஷிகள் நினைக்கிறார்கள். அதனால் ஆறுகளை ருதாவரி என்று அழைக்கிறார்கள். ஆறுகள் கொண்டு வரும் நீரையும் அதற்குக் காரணமான மழையையும் மேகத்தையும் ருதம் என்றே அழைக்கின்றனர்.

    ஆறுகள் தங்கள் வெள்ளப் பெருக்கில் ருதத்தைக் கொண்டு வருகின்றன. (1.105.12)

    “மேகம் எப்பொழுதும் தாவரங்களுக்கு நீர் தந்து கொண்டிருக்கிறது. அதனிடத்தில் அசையும் பொருள் அசையாப் பொருள் எல்லாவற்றின் உயிரும் இருக்கிறது. அதுதான் ருதம். (7.101.6)

    ருதத்தின் காரணமாக தெய்விக ஆறுகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. (4,3.12)

    சவிதாவிற்காகவோ இந்திரனுக்காகவோ ஆறுகள் நிற்பதில்லை. அவை ஓடத் தொடங்கி எவ்வளவு காலம் ஆகியிருக்கும்?(2.30.1)

    ஆறுகள் வருணனின் ருதத்தால் ஓடுகின்றன. அவை நிற்பதில்லை, ஓய்வெடுப்பதில்லை. (2.28.4)

    ஆறுகள் எவ்வளவு வெள்ளம் கொண்டு வந்தாலும் கடல் நிரம்புவதில்லை. அதற்குக் காரணமான சிறந்த அறிவுடைய அந்தத் தேவனின் மாயா சக்தியை ஒருவரும் தடுக்க முடிந்ததில்லை. (5.85.6)

    இடையறாத இயக்கமும், அதில் காணப்படும் ஒழுங்கு முறையும், தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும் தன்மையும் ருதத்தின் பண்புகள் ஆகும்.

    சூரியன்

    விண் வெளியில் சூரியன் இடைவிடாமல் இயங்கி இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்துக்கு முன் உஷை தோன்றி உயிரினங்களைச் செயல்படத் தூண்டுகிறாள். நம்முடைய முன்னோர் பலர் இதைப் பார்த்துச் சென்று விட்டனர். நம்முடைய சந்ததியினர் பலர் இதைக் காணப் போகிறார்கள். ஆதி அந்தம் இல்லாத, இடையறாத இந்த சூரிய உதயம் ரிஷிகளுக்கு ருதத்தின் அடையாளமாகத் தோன்றுகிறது. அதனால் சில சமயங்களில் சூரியனை ருதம் என்ற பெயரால் குறிப்பிடுகின்றனர். உஷஸ் ருதாவரீ (ருதத்தோடு கூடியவள்) எனப்படுகிறாள்.

    கீழ்க்கண்ட மந்திரங்களைக் கவனியுங்கள்.

    ருதத்தால் பூட்டப்பட்ட குதிரைகளைக் கொண்டு உஷஸ் உலகம் முழுவதும் உறங்கும் மக்களை, பறவைகளை, மிருகங்களைத் துயிலெழுப்பிக் கொண்டு பயணிக்கிறாள். (4.51.5)

    கிழக்கே உஷஸ் தோன்றுகிறாள். அவள் ருதத்தின் பாதையைப் பின்பற்றுகிறாள். அவள் ஒரு போதும் தவறுவதில்லை. (1.124.3)

    உலகம் தோன்றிய நாள் பற்றி உஷஸ் அறிவாள். அவள் ருதத்தை மீறுவதில்லை. நாள் தோறும் குறித்த இடத்துக்கு வந்து விடுகிறாள்.(1.123.9)

    ருதத்தின் பாதை கிரணங்களால் அமைக்கப்பட்டுள்ளது. (1.136.2)

    வருணன் சூரியனுக்கு ஒரு பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அவர் கடலை நோக்கிச் செல்லும் ஆறுகளின் அலைகளை உண்டாக்கினார். ருதத்தை அனுசரித்து அவர் இரவையும் பகலையும் பிரித்து வைத்தார்.(7.87.1)

    ருதத்தின் அடிப்படையில் உஷையை முன் தள்ளிக் கொண்டு விண்ணிலும் மண்ணிலும் சூரியன் தோன்றினார். மித்திர வருணர்களின் அற்புதச் செயலை அவர் நிறைவேற்றினார். (3.61.7)

    ருதத்திலிருந்து தோன்றியது ருது. பருவ காலங்கள் குறித்த நியதிப்படி ஆண்டு தோறும் வந்து செல்வதால் அவை ருது எனப்படுகின்றன.
    இடையறாத இயக்கமும் அதில் காணப்படும் சீர்மையும் ருதத்தின் பண்பு என்பதை இதுவும் உறுதிப்படுத்துகிறது.

    பசுக்கள்

    ரிஷிகள் கவனித்து வியந்த மூன்றாவது விஷயம் – பசுங் கன்று மாடாக வளர்ந்து இனிய பாலைக் கொடுப்பது. அது வரையில் இல்லாதிருந்த பால் கன்று ஈன்றதும் சுரப்பது அதிசயம். மாடு எந்த நிறத்தில் இருந்தாலும் பால் மட்டும் வெள்ளையாகவே உள்ளது மற்றொரு அதிசயம் என வியக்கிறார்கள்.

    கன்றாக இருந்தது பால் கொடுக்கத் துவங்குகிறது. மாடு கறுப்பாக இருந்தாலும் அதன் பால் வெள்ளையாக இருக்கிறது. ருதத்தால் நிர்ணயிக்கப்பட்ட இந்த ருதத்தைப் போற்றுகிறேன். (4.3.9)

    தன்னைச் சார்ந்து வாழும் கன்றுக்கு உணவளிக்கும் உந்துதலும் அதற்குரிய வசதிகளும் தானாகவே பசுவுக்கு ஏற்படுகின்றன.
    பசு என்பது ஒரு உதாரணம்தான். உண்மையில் எல்லாப் பிராணிகளுக்கும் மனிதருக்கும் இத் தன்மை பொருந்தும்.
    எனவே ருதம் என்பது இடையறாத தொடர்ச்சி, சுழற்சி, வளர்ச்சி, ஒழுங்கு முறை, தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும் இயல்பு, சார்ந்தாரைக் காத்தல் ஆகியவை கொண்ட இயற்கை நியதியைக் குறிப்பது அறியப்படுகிறது.

    ருதத்தின் தாய்மார்கள்

    பூமியும் ஆகாயமும் ருதத்தின் தாய்மார்களாகக் கூறப்படுகின்றனர். அவ்வாறே இரவும் பகலும் ருதத்தின் தாய்மார்களாகக் கூறப்படுகின்றனர். இரண்டு தாய்கள் என்பதே பொருந்தாக் கூற்று. இரண்டு ஜோடித் தாய்மார்கள் என்பது முரண்பாடு போல் தோன்றுகிறது அல்லவா?

    வேத மொழி நடையின் தனிச் சிறப்பை நாம் அறிவோம். தாய் என்று சொன்னால் அதை அப்படியே நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. ருதம் என்னும் கருத்துருவை ரிஷிகளுக்குத் தந்தவை விண்ணும் மண்ணும். அதே போல இரவும் பகலும் உதவியிருக்கின்றன. விண்ணையும் மண்ணையும் உற்று நோக்கி அதில் காணப்படும் ஒழுங்கு முறையைக் கவனித்து ருதம் என்னும் கருத்துருவைப் பெற்றனர் அவர்கள். அதே போல இரவும் பகலும் மாறி மாறி வருவதில் நிலவும் சீர்மை அவர்களுக்கு இதில் ஒரு இயற்கை நியதி உள்ளது என்பதைப் புரிய வைத்தது.

    Share
  • பிராயச்சித்தம்

    எம்.ரிஷான் ஷெரீப்

    தூங்கிக் கொண்டிருந்த அவரது பருத்த வயிற்றின் மேல் யாரோ ஏறி அமர்ந்துகொண்டார்கள். இரு கைகளையும் மாற்றி மாற்றி நெஞ்சில் ஓங்கிக் குத்தினார்கள். கனவில் வந்திருந்த குதிரைப்படைகள் அடி தாங்காது அலறித் திசைக்கொன்றாகத் தெறித்தோடின. புலனுணர்ந்து பதறித் துடித்து விழித்துப் பார்த்தபொழுது மகன் வயிற்றுப்பேரன் அவர் வயிற்றிலமர்ந்து தன் இரண்டரை வயதுப் பிஞ்சுக் கைகளால் அவரது நெஞ்சில் குத்திக் கொண்டிருந்தான். ‘அச்சு அச்சு’ எனத் தன் அக்காவைப் பற்றி ஏதோ குற்றம் சொல்லவிழைந்தான்.

    அவசரமாக விழித்ததில் பரபரத்து அவர் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினார். தூக்கத்தில் சிவந்த கண்களை அப்படியும் இப்படியுமாக உருட்டினார். குழந்தை பயந்துபோனது. அவரது தொப்பை வயிற்றை நனைத்தபடி அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகை கேட்டு எட்டிப் பார்த்த அதன் அம்மா திண்ணைக்கு ஓடிவந்து பாயில் காற்றாடப் படுத்திருந்த மாமனாரின் வயிற்றில் அமர்ந்திருந்த குழந்தையைக் கடிந்தவாறே அள்ளித் தூக்கிக் கொண்டாள். சமையலறையில் வேலையாக இருந்திருக்கவேண்டும். உடுத்திருந்த புடவை இழுத்துச் செருகப்பட்டிருக்க, உடலிலும் துணியிலும் அரிசி மாவு வெள்ளை படிந்திருந்தது.

    குழந்தையைப் பார்த்துக் கொள்ளாமல் என்ன செய்கிறாயென்பது போன்ற ஏதோவொரு வசவு வெளியே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த சிறுமியை நோக்கி ஏவப்படுவது மெலிதாகக் கேட்டது. மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு தினமும் இப்படி திண்ணையில் காற்றாடச் சாய்ந்துகொள்வது அவரது வழமைதான். இன்று சற்று நேரத்துடன் விழித்துக் கொண்டுவிட்டார். குழந்தை வந்து குழப்பாமல் விட்டிருந்தால் இன்னும் நன்றாகத் தூங்கியிருக்கலாம். மூத்திர வீச்சம் நாசிக்கு எட்டத் தொடங்கியது. எழுந்து ஒரு கை ஊன்றி பாயிலேயே அமர்ந்து கொண்டார். துவைத்துக் காய்த்தெடுத்த வெள்ளை சாரமொன்றை மருமகள் கொண்டு வந்து அருகிலிருந்த சாய்வு நாற்காலியில் வைத்து உடை மாற்றிக் கொள்ளச் சொல்லி நகர்ந்தாள்.

    முத்துராசு தூரத்தே இருந்த படலையை விலக்கிக் கொண்டு உள்ளே வருவதைக் கண்டார். அவனுக்கும் இப்பொழுது ஐம்பது வயது கடந்திருக்கும். கல்யாணமாகியிருந்தால் தன்னைப் போலவே பேரன் பேத்திகளைப் பார்த்திருப்பானென எண்ணிக் கொண்டார். பெருமூச்சு விட்டார். காலம் காலமாகக் குற்றவுணர்ச்சியில் சிக்கிச் சுழன்ற நெடுமூச்சு. இருவருடைய வாழ்க்கைகளைச் சீரழித்த பெரும்பாவத்தின் உஷ்ணமூச்சு.

    மெதுவாக எழுந்துகொண்டார். முத்துராசு அதற்குள் திண்ணைக்கே வந்துவிட்டிருந்தார். வெள்ளைச் சாரம், வெள்ளைச் சட்டை. எண்ணைய் தேய்த்து இடப்புற வகிடெடுத்து ஒரு பக்கமாக அழுத்தி வாரப்பட்ட தலைமயிரில் வெள்ளிக்கம்பிகள் கலந்திருந்தன. வயதானாலும் ஆளின் கம்பீரமும் மிடுக்கும் இன்னும் குறையவில்லை என்பதைப் போல நின்றிருந்தார். நேரில் பார்க்கும் யாரும் அவரை சித்தம் பிசகியிருந்து, முப்பது வருடங்களாக மனநல மருத்துவமனையிலிருந்து கடந்த வருடம்தான் விடுவிக்கப்பட்டவரென உடனே அனுமானிக்க முடியாது. மாதத்தில் ஓரிரு நாட்கள் ஏதோ பேய் பிடித்தாட்டுவதைப் போல நடந்துகொள்ளுமவர் மற்ற நாட்களில் மிகவும் சாதாரணமாகவும் இயல்பாகவுமிருந்தார்.

    ” அண்ணா.. தூங்கிட்டிருந்தீங்களோ ? “

    ” ஓமடாப்பா..சின்னவன் என்ர மேல ஒண்ணுக்கடிச்சிட்டான். இரு..மேல் கழுவிக் கொண்டு வாரன் “

    அவர் வெளியே இறங்கி திண்ணைப்பக்கமாகவே சுற்றிக் கொண்டு கொல்லைப்புறக் கிணற்றடிக்கு நடந்தார். முத்துராசுவும் அவரைப் பின் தொடர்ந்தார். முற்றத்து மாமரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் பேத்தி, சின்னவனை மடியிலமர்த்தி ஆடிக் கொண்டிருந்தவள், முத்துராசுவைக்கண்டதும் கால்களை ஊன்றி ஊஞ்சலை நிறுத்தி பயந்த கண்களால் அவரைப் பார்த்திருந்தாள். குழந்தையைக் கண்டதும் முத்துராசு அருகில் சென்று குனிந்து அதன் கன்னத்திலொரு முத்தம் கொடுத்தார். அது தன் கையைப் பொத்தி முத்தமிடப்பட்ட கன்னத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு தன் அக்காவைப் பார்த்தது. எட்டு வயதுச் சிறுமி பயத்துடனேயே புன்னகைத்து வைத்தாள். முத்துராசு அகன்றதும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவசர அவசரமாக வீட்டுக்குள் ஓடினாள். சில நாட்களுக்கு முன் அவருக்குப் பேய்பிடித்து தன் வீட்டார் பட்டபாடு அவளுக்குத் தெரியும்.

    அந்த வீட்டில் முத்துராசுவுக்கு மதிப்பு அவரது அண்ணனிடம் மட்டும்தான். அண்ணியோ, அவர்களின் மகனோ, மருமகளோ அவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. முத்துராசு வீட்டுக்கு வந்து நின்றால், தோலில் ஒட்டிக் கொண்ட அட்டையை அது இரத்தமுறிஞ்ச முன் அகற்றத் தவிப்பதுபோல அகற்றிடவும் அவ்வுறவை துடைத்து வழித்தெறிந்திடவும் அவர்கள் துடித்தார்கள். அதுவும் முத்துராசு வந்து தனது அண்ணாவிடம் ஏதும் வாங்கிப்போகும் நாளில் அவரது அண்ணியின் முணுமுணுப்புக்கள் நாள்முழுதும் அவ்வீட்டினுள் எதிரொலித்தபடி அலையும்.

    முத்துராசு கிணற்றடியிலிருந்த புளித்தோடை மரத்தடியில் அண்ணா உடல்கழுவி முடியும்வரை காத்திருந்தார். தெள்ளிய நீர் கொண்ட அகன்ற கிணறு. அண்ணாவும் முத்துராசுவும் பிறக்கும் முன்னரே அவர்களது அப்பாவால் தோண்டப்பட்ட கிணறு. இருவருக்கும் சொந்தமான, பல அறைகளைக் கொண்ட அந்தப் பெரிய வீட்டைக் கட்டும் பொழுது நீர்த்தேவைக்கெனத் தோண்டப்பட்ட கிணறு, இன்றுவரையும் அள்ள அள்ள ஊறி நிறைந்துகொண்டே இருக்கிறது. குளிக்கவும் துவைக்கவும் பயன்படும் நீர் வழிந்து கொல்லைப்புறமிருந்த கீரைப்பாத்திக்கு ஓடிற்று. பின்னரும் அதன் வழியே போய் அவர்களுடைய பரந்த வயலின் வாய்க்காலில் கலந்தது. ஐந்தாறு ஏக்கர்களுக்கும் அதிகமான அந்த வயல்காணியை ஒரு காலத்தில் பராமரிக்கவென வந்து வயல் காணியின் மத்தியிலே குடிசை போட்டுக் குடியிருந்த சின்னமணிதான் அந்தக் கிணற்றை வெட்டிக் கொடுத்தவர்.

    சின்னமணி அவர்களிருவரும் பிறக்கும் முன்பே அங்கு தங்கியிருந்து அந்தக் குடும்பத்துக்கெனவே உழைத்து வந்தவர். வயல்வேலை நடக்கும் காலங்களில் அதற்கென ஆள் சேர்ப்பது, கண்காணிப்பது, விதைப்பது, விளைந்தவற்றைப் பத்திரமாகக் களஞ்சியத்தில் சேர்ப்பதென மிகவும் நேர்மையோடு உழைத்தவர். தோட்டத்தில் தேங்காய் பறிப்பது, விறகு பிளந்து போடுவது எல்லாம் அவர் பொறுப்புத்தான். அவரது மனைவியும் இப் பெரிய வீட்டிலேயே சமையல், வீட்டு வேலைகளைச் செய்து வந்தாள். முத்துராசுவைப் பெற்ற அன்னை, பிரசவம் கண்ட சில நாட்களிலேயே ஜன்னி கண்டு பினாத்திக் கிடந்தநாட்களில் அவரை முழுமையாகப் பராமரித்துப் பார்த்துக்கொண்டது அவள்தான். ஜன்னி குணமாகாமலேயே அவர் செத்துப் போனார்.

    முத்துராசு இப்பொழுது என்ன நோக்கத்துக்காக வந்திருக்கிறாரென யோசித்துக் கொண்டே கிணற்றிலிருந்து நீரை அள்ளி உடம்பில் வார்க்கத் துவங்கினார். குளிர்ந்த நீர் படப்பட மேனி சிலிர்த்தது. துண்டை எடுத்துக்கொண்டு ஓடி வந்த சிறுமி வந்த வேகத்திலேயே கிணற்றுக்கட்டில் அதை வைத்துவிட்டு ஓடிப் போனாள். சலனமுற்றவர் திரும்பிப்பார்த்தார். சமையலறை யன்னலினூடாகத் தன் மனைவி இருவரையும் கண்காணித்தவாறிருப்பதைக் கண்டார். அவர் பார்ப்பதறிந்ததும் அவளது பார்வை கிணற்றடியிலிருந்த அகத்தி மரத்துக்குத் தாவியது.

    போன முறை வாக்குவாதம் இப்படித்தான் ஆரம்பித்தது. அப்போது அவர் அங்கிருக்கவில்லை. அண்ணாவைப் பார்த்துப் போகவென வந்த முத்துராசு, அந்த வீட்டுத் தோட்டத்தில் நன்கு காய்த்து மரத்திலேயே பழுத்திருந்த பப்பாளிப்பழமொன்றை முனையில் சிறு கத்தி கட்டிய நீண்ட கம்பால் பறித்தெடுத்து, தனது வீட்டுக்குக் கொண்டு போவதற்காக எடுத்துவைத்தார். உண்மையில் அது வீடு அல்ல. குடிசை. சின்னமணியின் குடும்பம் தாங்கள் வாழ்வதற்கென்று ஓலையும், களிமண்ணும் கொண்டு கட்டி வைத்திருந்த குடிசை. முப்பது வருடங்களுக்கும் முன்பொரு நாள் எல்லோருமாகக் குடும்பத்தோடு விரட்டியடிக்கப்பட்ட அந் நாளில், எரிந்தது பாதியும் எரியாதது மீதியுமாகத் தீ தின்ற குடிசை. எல்லா அநீதங்களையும் தீக் கண்களால் பார்த்திருந்த குடிசை. எல்லாவற்றையும் மறைத்துப் பூசி மெழுகப்பட்ட அதன் ஒரு அறைக்குள்தான் முத்துராசு தன் ஆடைகளோடும் சமையல் பாத்திரங்களோடும் முடங்கிப்போயிருந்தார்.

    பப்பாளிப்பழத்தைப் பறித்து அவர் தன்னோடு வைத்துக் கொண்டதைக் கண்ட அவரது அண்ணி, தனது பருத்த உடம்பைச் சுற்றியிருந்த புடவையை வரிந்து கட்டிக் கொண்டு முற்றத்துக்கு வந்தாள். பின்னாலேயே மருமகளும் குழந்தையை இடுப்பில் செருகிக் கொண்டு வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவள்தான் அவர் பழம் பறிப்பதைக் காட்டிக் கொடுத்தவள். நீண்ட நாட்களின் பின்னர் நகரத்திலிருந்து வரப்போகும் தன் கணவனுக்காக மரத்திலேயே பழுக்கட்டுமெனப் பழத்தினை விட்டு வைத்தவள் அவள்தான்.

    விடயத்தைச் சொல்லித் தன்மையாகக் கேட்டிருந்தால் முத்துராசு தானாகவே பழத்தினைக் கொடுத்திருக்கக் கூடும். பெரும் எரிச்சலோடு வந்த அண்ணி காரசாரமாக ‘இப்படிக் கேட்காமல் பார்க்காமல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுபோனால் நாங்கள் குடும்பத்தோடு வீதிக்கிறங்கிப் பிச்சைதான் எடுக்கவேண்டும்’ எனச் சத்தமிடத் தொடங்கியதில்தான் அவரது உள்ளிருந்த ஆற்றாமையும் கோபமும் கலந்த பேய் விழித்துக் கொண்டது.

    பழத்தினைத் தூக்கி அப்படியே நிலத்தில் அடித்து, அதன் மேல் ஏறி நின்று மிதித்து சத்தம் போட்டுக் கத்தத் துவங்கினார். தனக்கும் இந்த வீட்டில், தோட்டத்தில், வயல்காணியில் பாதிப் பங்கிருப்பதாகச் சத்தமிட்டுக் கொண்டிருந்தார். இரு பக்கமும் வார்த்தையாடல்கள் தடித்தன. கொம்பு சீவப்பட்ட, வீரமிக்கவொரு எருமைமாட்டினைப் போலக் கோபத்தோடு, பெரிதாய்ச் சப்தமெழ மூச்சுவிட்டபடி முத்துராசு அங்குமிங்குமாக நடந்து அண்ணியைத் தாக்கவென ஆயுதமொன்றைத் தேடினார். வேலிக்கு மேலால் எட்டி எட்டி அயலவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன விபரீதம் நடக்கப்போகிறதோவென அறியும் ஆவல் அல்லது தாம் பார்க்க விபரீதம் நடக்கவேண்டுமென்ற ஆவல் அவர்கள் கண்களில் மிதந்தது. மருமகள் குழந்தையை சிறுமியிடம் கொடுத்துவிட்டு மல்லுக்கு நிற்கும் மாமியாரின் கைப்பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டிருந்தாள்.

    நல்லவேளையாக வெளியே போயிருந்த அண்ணா ஆட்டோவில் வந்திறங்கினார். அண்ணாவைக் கண்டதும் ‘இப்பவே என்ர பங்கைப் பிரிச்சுக் கொடு’ என முத்துராசு, அண்ணனை நோக்கிச் சப்தமிடத் தொடங்கினார். அண்ணாவுக்கு அவரை அடக்கத் தெரியும். அவ்விடம் வந்து தன் மனைவியை, சப்தம் போடாமல் உள்ளே போகும்படி ஏசினார். தம்பியைத் தோளோடு சேர்த்தணைத்து ஆட்டோவுக்கு அழைத்துப் போய் பின்னர் அதிலேயே வயல்காணிக் குடிசைக்கு அழைத்துப் போனார். அவன் அமைதியாகும்வரை அங்கேயே இருந்து பேசிவிட்டு கிளம்பிவந்தார்.

    இன்று என்ன பிரச்சினை எழப்போகிறதோ எனத் தெரியவில்லை. துண்டை எடுத்து உடல் துடைத்துக் கொண்டவர் புதுச் சாரத்தை அணிந்துகொண்டார். வந்த வழியே திண்ணைக்கு வந்து சாய்மனைக் கதிரையில் அமர்ந்துகொண்டார். அது பழங்காலக் கதிரை. அவர்களது தந்தையார் வழி வந்தது. அவர் அவ்வூர்ப் பெரிய மனிதர். நாலெழுத்துப் படித்தவர் என்பதால் மட்டுமல்ல. வழிவழியாக வந்த உயர் வம்சத்தைச் சேர்ந்தவர். முன்னொரு காலத்தில் அந்த முழுக் கிராமமே அவர்களது மூதாதையருக்குச் சொந்தமாக இருந்தது. அவர்கள் குடும்பத்துக்குச் சேவை செய்ய வந்தவர்களெல்லாம் சேர்ந்துதான் அது ஒரு கிராமமென ஆகியிருந்தது. அந்த பரம்பரை மரியாதையும் கௌரவமும் நன்றி விசுவாசமும் ஊரில் இன்னும் அந்தக் குடும்பத்துக்கு இருந்து வருகிறது. வீதியில் இறங்கி அவர் நடந்தால் எதிர்ப்படுபவர்கள் தலைதாழ்த்தி, வணக்கம் சொன்னார்கள்.

    முத்துராசுவும் பின்னாலேயே வந்து திண்ணைக் கட்டில் அமர்ந்து கொண்டார். மழை வரும்போல இருந்தது. அந்தி வெயிலற்று மப்பும் மந்தாரமாகவும் இருந்தது. கொஞ்ச நாளாக அந்திசாயும் பொழுது மழை பெரிதாய், இடி மின்னலோடு அடித்துப் பிடித்து வருகிறது. பருவம் தப்பிய மழை.

    ” தம்பி, ஏதாச்சும் குடிக்கிறியோ? “

    தன் கை விரல்நகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர் ஒருவிதப் பணிவோடு தலைநிமிர்ந்து புன்னகைத்தார். வாசற்கதவுக்குப் பின்னால் மறைந்திருந்து அண்ணி பார்த்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார்..

    ” வேண்டாமண்ணே..நான் வந்தது…மழை பெய்றதால கூரையெல்லாம் நைந்துபோய் கடுமையா ஒழுகுது. தண்ணியெல்லாம் வீட்டுக்குள்ள வருகுது. யாரையாவது அனுப்பி ஓலை மாத்தித் தந்தால் புண்ணியமாப் போகும்” என்றார்.

    ” சோதர பாசத்தால பார்க்க வந்திருப்பாரெண்டு நெனச்சால், இப்பவும் வாங்கிப் போகத்தான் வந்திருக்கிறார் ” அண்ணி உள்ளே இருந்து ஒரு விதக் கிண்டல் தொனியோடு குரல் கொடுத்தார்.

    அண்ணா, அவரைச் சத்தம் போடாமல் உள்ளே போகும்படி மிரட்டினார். ‘இதற்கொன்றும் குறைச்சலில்ல’ என்பது போன்ற முணுமுணுப்போடு அண்ணியின் குரல் அடங்கியது.

    ” தம்பி, நான் அன்றைக்கு அங்க வந்தபோதே கவனிச்சேன். கட்டாயம் நாளைக்கே ஆளனுப்புறேன். நானும் வருவேன். அரிசி,பருப்பெல்லாம் இருக்குதா, முடிஞ்சு போச்சுதா? நாளைக்கு அதையும் எடுத்துக் கொண்டுவரலாம். தனியாச் சமைச்சுச் சாப்பிடறத விட்டுட்டு எங்களோடு வந்து இரு எண்டாலும் கேக்குறாயில்ல “

    “அப்ப நாளைக்கு வாங்கோ அண்ணே..பார்த்துக் கொண்டிருப்பேன்” முத்துராசு புன்னகையோடு எழுந்து நடக்கத் தொடங்கினார். அண்ணா பார்த்துக்கொண்டே இருந்தார். அவசரமானதாகவும் அதேவேளை சீரானதாகவும் ஒரு நடை. மழை பெய்யுமுன்பு வீட்டுக்குப் போய்விடும் அவசரமாக இருக்கக் கூடும். அண்ணி முன்னால் வந்தார். பின்னாலேயே மருமகளும் வந்து மாமியாரின் பின்னால் மறைந்து, எட்டிப் பார்த்தாள்.

    “அப்ப நாளைக்கு மகாராஜாவோட வீட்டுக்குப் போகப் போறீங்களோ?” மனைவியின் குரலில் எகத்தாளம் வழிந்தது.

    ” இப்படி ஒழுக்கம் கெட்டதுக்கெல்லாம் வாரி இரைச்சிக் கொண்டிருந்தால் எங்கட பிள்ள குட்டிகளுக்கு நாங்க என்னத்தக் கொடுக்கிறது?”

    “அவன் எண்ட உடன்பிறப்பு. நாந்தான் கொடுக்கவேணும். அவனுக்கும் இந்த வீட்டில, வயலில, தோட்டத்துல எல்லாத்திலயும் சமபங்கு இருக்குது. அவனுக்குக் கேட்கவும் உரிமை இருக்கு “

    ” ஓஹ்.. அப்படியே இருக்குறதையெல்லாம் முழுசாக் கொடுத்தாலும் பைத்தியக்காரனுக்கு அதை வச்சிக் கொண்டு என்ன செய்யத் தெரியும்? “

    புருவத்துக்கு மேலால் நெற்றி சுருங்கக் கோபத்தோடு விழிகள் தெறிக்க மனைவியைப் பார்த்தார். அவரது கோபம் பற்றி மனைவிக்குத் தெரியும். அப்படியே திரும்பி முணுமுணுத்தபடி உள்ளே போனாள். மருமகளும் பின்னாலே போனாள். அடுத்த அறைக்குள் பெண்கள் இருவரும் கிசுகிசுப்பாகக் கதைத்துக் கொள்வது கேட்டது. பெண்களின் கதைகளுக்கு முடிவுகளில்லை. அது வாலாக நீளும். ஒன்றின் முனையைப் பற்றி இன்னொன்று. அதன் முனையைப் பற்றி இன்னொன்று எனப் பழைய காலங்களுக்குள் மீளச் சுழலும்.

    கதிரையில் சாய்ந்திருந்து விழ ஆரம்பித்திருந்த தூறலைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு சுந்தரி நினைவு வந்தது. அவள் மேல் காதலும் மோகமும் கொண்டு திரிந்த அவரது இளமைக்காலம் கண் முன் வந்தது . சுந்தரி சின்னமணியின் மகள். அவர் வீட்டுக்கு அவளது அம்மாவுடன் சமையல் வேலைக்கு உதவிக்கென வரும் அழகி. ஏதேனுமொரு நாட்டுப்புறப் பாடலைத் தன் எழில் குரலில் வழியவிட்டபடியே சமைப்பவள் அவரது கண்களில் பட்டுத் தொடர்ந்த காதல் வார்த்தைகளில் மயங்கிப் போனாள். கோபுரத்தில் வாழ்பவனுக்கும் குடிசையில் சீவிப்பவளுக்கும் வரும் காதல் இணையும் வழியற்றதென அவள் சிறிதும் யோசிக்கவில்லை. அல்லது காதல் அவளை மயக்கியிருந்தது. காதலின் பொய்கள் சொல்லி அவளை வீழ்த்தினார்.

    அந்தக் குடும்பத்தின் வாரிசு அவ் ஏழைப்பெண்ணில் வளரத் துவங்கியபொழுது அவளால் எதையும் மறைக்க முடியவில்லை. ஆனால் அவரால் எல்லாவற்றையும் மறுக்க முடிந்தது. முடியாப் பட்சமொன்றில் எல்லாப் பழிகளையும் தம்பி மேல் போட்டார். மூத்தவன் சொல்லும் எதையும் நம்பும் அப்பா, அம்மாவை விழுங்கிப் பிறந்த இளையவனிடம் என்னவென்றே விசாரிக்காது மிகவும் வன்மமாகவும் குரூரமாகவும் அடித்து உதைத்து வீட்டை விட்டே விரட்டிவிட்டார். அதே இரவில் சின்னமணி குடிசையையும் எரித்து, ஊரை விட்டே குடும்பத்தோடு ஓடச் செய்தார். அன்றைய இரவில் துரோகமும், வீண்பழியும், ஒரு பேருண்மையும் தீயோடு தாண்டவமாடியது. ஊர் முழுதும் பார்த்திருக்கப் பட்ட அவமானமும், இழைக்கப்பட்ட அநீதியும் முத்துராசுவை மனநிலை தவறச் செய்தது. சொந்த வீட்டுக்கே கல்லெறிந்தபடி, ஊர் எல்லைக்குள்ளேயே வீதியோரங்களில் புரண்டலைந்தவரை அண்ணன்தான் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அந்தக் குற்ற உணர்ச்சி இன்னும் மனதிற்குள் அலையடித்தது. விரட்டி விரட்டித் தொடரும் அலை. ஆழங்களுக்குள் இழுத்துப்போகவெனப் பின்னாலேயே துரத்தும் உக்கிர அலை. அறைக்குள் இன்னும் பெண்களின் கிசுகிசுப்புக் கேட்டது. இவர் எழுந்து கொண்டார். அவர்களிருந்த அறை வாசலில் போய் நின்றார்.

    ” என்னோட உசுருள்ளவரைக்கும் தம்பிக்கு என்னால முடிஞ்சதைச் செய்யத்தான் போறேன். இதைப் பத்தி இனிமே இந்த வீட்டுல யாராவது ஏதாச்சும் பேசினீங்களெண்டால் கொலைதான் விழும்” என்றார் ஊருக்கெல்லாம் கேட்கப் போல மிகச் சத்தமாக.

    – எம். ரிஷான் ஷெரீப்,
    இலங்கை
    mrishanshareef@gmail.com

    Share
  • மார்கழி மலர்கள் – இது மாசுகள் நிறைந்த உலகம் (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

    [mixcloud]//https:www.mixcloud.com/Vallamai/%E0%AE%87%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE/[/mixcloud]

    36b30z-dhakshinamurti

    இது
    மாசுகள் நிறைந்த உலகம், இதில்
    மாண்புகள் எங்கே ஜெயிக்கும்
    காசுகள் தானே நம்மைப் பார்த்துக்
    கையைக் கொட்டிச் சிரிக்கும்

    விதி
    ஆசையை நம்பிப் பிழைக்கும், அதன்
    ஆட்சி வேறெங்கு பலிக்கும்
    ஈசா நீதான் கதியென நின்றேன்
    என்கதை எப்படி நடக்கும்

    ஏதோ தெருவில் ஏதோ பாடி
    எங்கோ செல்வது நன்று
    ஏழையென்றாலும், பசியென நின்று
    ஏந்தாதிருப்பது நன்று
    ஆதரவிங்கே யாரும் இல்லை
    அவரவர்க் கவரவர் பாடு
    அன்பே தெய்வம் என்றே பாடி
    அழகாய்க் கண்ணை மூடு (இது)

    வென்றது கருமம் நின்றது தருமம்
    ஏதடி இதிலே மர்மம்
    வேதனை யாவும் வெகுமதி என்றே
    வேதம் பாடும் உள்ளம்
    சென்றது செலவு வந்தது வரவு
    ஏதடி உறவு பிரிவு
    சின்னஞ் சிறுவுயிர் சிறகு விரிக்க
    எத்தனை எத்தனை கதவு!

    அது
    ஆலய மணியின் ஓசை, அதன்
    ஓசையில் ஓயும் ஆசை
    காலன் வந்தெனைத் தழுவும் முன்னே
    கவிதையை முடிக்க ஆசை

    ஒரு
    தேகம் கொடுத்த ஈசா, மலைத்
    தேனாய் இனிக்கும் நேசா
    தாகம் பசியெனக் கையேந்தாமல்
    சாகும் தரத்தை நீ தா

    29.12.2014 / திங்கள் / 22.00

    Share
  • அன்பை அறுவடை செய்வோம்!

    -செண்பக ஜெகதீசன்

    சுழலும் காலச் சக்கரமும்
         சுற்றிச் சுற்றி வருகிறதே,
    நிழலும் நின்று நிலைப்பதில்லை
         நிலையா இன்ப துன்பமதாய்,
    பழகிடு நல்லதே செய்வதற்குப்
         புறத்தே கெட்டதைத் தள்ளிவிட்டே,
    அழைக்குதே புலரும் புத்தாண்டு
         அன்பின் அறுவடை செய்திடவே…!    

     

    Share
  • மனிதனின் தேடல்!

    -ரா.பார்த்தசாரதி 

    தேடல் என்பது சுவாசம் போன்றது,
    ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நிமிடமும்
    ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறான்…
    கருத்தரித்த பெண்ணிற்குப் பிள்ளையின்
    முகம் தேடல்
    தந்தைக்கோ பணம் தேடல்
    பிறக்கும் வரை உலகம் தேடல்
    பிறந்த பிறகு உணவு தேடல்
    வளரும் வரைப் படிப்பு தேடல்
    வளர்ந்த பின்பு பட்ட பாடம்தான் தேடல்
    காதல் இல்லாதவனுக்குக் காதலி தேடல்
    காதல் வந்தவனுக்குக் கல்யாணம்  தேடல்
    பிறக்கும் போது அலுத்துக் கொண்டே  பிறந்த நாம்
    இறந்த பிறகு மற்றவர்க்கு அந்த அழுகையைக் கொடுத்துச் செல்கிறோம்…

    ஒரு மனிதன்
    இருக்கும் வரை அன்பைத் தேடுகிறான்…
    இறக்கும் வரை அரவணைப்பைத் தேடுகிறான்…
    இவ்விரண்டும் இல்லாதவன் அனாதையாகிறான்!

     

    Share
  • அத்தைமடி மெத்தையடி..

    காவிரி மைந்தன்

    அம்மாவின் மடியில் கண்ணுறங்கும் குழந்தை.. அவள் தரும் தாலாட்டில் தானுறங்கும் என்பது எல்லோரும் அறிந்தது!  ஆனால் அதற்கு இணையாக.. அத்தை என்னும் உறவும்கூட அக்குழந்தையை தாலாட்டுவதில் பங்குபெறுகிறது என்பதை இப்பாடல் மூலம் தெளிவுபடுத்தும் கவிஞரின் கைவண்ணம் போற்றத்தக்கது!

    நான் குழந்தையாய் இருந்தபோது.. என் தம்பிக்கு தாலாட்டு பாடிய போதெல்லாம் இப்பாடல் என் தாயாரால் பாடப்பட்டது மட்டுமின்றி விவரம்தெரிந்த நாளில் என் தாய் பாட.. ஒரு அலுமினிய தட்டை வைத்துக்கொண்டு நான் தாளம் போட.. வாழ்க்கையோடு வசியப்பட்ட பாட்டு.. அடிக்கடி உச்சரித்து உள்ளம் மகிழ்ந்திடும் பாட்டு!

    கற்பகம் திரைப்படத்திற்காக வாலி அவர்கள் வரைந்த கீதமிது!  பி.சுசீலா என்கிற தென்றல் உள்ளம் வருட பாடிய பாட்டு!  விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரின் இசையில் .. அனைவரும் மயங்கும் பாட்டு!!

    கற்பனையில் கவிஞரின் சிந்தனை எத்தனை அழகாய் விளையாடுகிறது பாருங்கள்!  தாலாட்டு கீதம் என்பதால் காலங்களைக் கடந்து ஒவ்வொரு வீட்டிலும்.. ஒவ்வொரு தொட்டிலிலும் உறவாடும் பாடலாய்.. நம் உள்ளம் தொடும் பாடலாய்.. வழங்கிய வாலியை வாழ்த்தலாமே!!

    http://www.youtube.com/watch?v=T6XAdv2DIEo

    அத்தை மடி மெத்தையடி

    k.r..v..

    அத்தை மடி மெத்தையடி
    ஆடி விளையாடம்மா
    ஆடும் வரை ஆடி விட்டு
    அல்லி விழி மூடம்மா

    அத்தை மடி மெத்தையடி…
    ஆடி விளையாடம்மா
    ஆடும் வரை ஆடி விட்டு
    அல்லி விழி மூடம்மா
    அத்தை மடி மெத்தையடீ.

    மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
    முல்லை மல்லிகை மெத்தையிட்டு
    தேன் குயில் கூட்டம் பண் பாடும்
    மான் குட்டி கேட்டு கண் மூடும்
    அதை மான் குட்டி கேட்டு கண் மூடும்

    ம்ம்ம்.. அத்தை மடி மெத்தையடி
    ஆடி விளையாடம்மா
    ஆடும் வரை ஆடி விட்டு
    அல்லி விழி மூடம்மா
    அத்தை மடி மெத்தையடீ…

    வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
    வேறோர் தீபத்தை ஏற்றவில்லை

    வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
    வேறோர் தீபத்தை ஏற்றவில்லை

    அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன்
    அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்
    அதில் அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்

    அத்தை மடி மெத்தையடி
    ஆடி விளையாடம்மா
    ஆடும் வரை ஆடி விட்டு
    அல்லி விழி மூடம்மா
    அத்தை மடி மெத்தையடி

    பாடல்அத்தை மடி மெத்தையடி
    திரைப்படம்கற்பகம் (1963)
    இசைஎம்.எஸ்வி & டி.கேராமமூர்த்தி
    பாடியவர்பி.சுசீலா
    வரிகள்வாலி

    Share
  • ஸ்ரீரமண ஜோதி – (மீ.விசுவநாதன்)

    கிரேசி மோகன்

    images

    ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய….

    திருவா திரையில் திருச்சுழி ஊரில்
    கருவாய் அழகம்மை கர்பம் -உருவாய்
    பெருந்தவம் செய்த பகவான் ரமணர்
    பிறந்து துறந்தார் பிறப்பு….(1)….

    பேரூழி காலத்தில் பாராழி புக்காது
    நீரோய சூலன் நிறுத்திய -ஊராம்
    திருச்சுழி தோன்றினன், தாயழ கம்மை
    கருக்குழியில் கர்மம் கழித்து….(2)….கிரேசி மோகன்….

     

    ஸ்ரீரமண ஜோதி
    (மீ.விசுவநாதன்)

    பிள்ளையாரின்
    அருட்கை போட்டது
    ஒரு சுழி ! அதுவே
    திருச்சுழி!

    நான் யார்?
    எனக்கேட்ட பிள்ளையாரின்
    கருக்குழியான
    “திருச்சுழி”

    தன் தவத்தால் திறந்தது
    அருள்வழி!
    பூத உடல்
    இறந்த பின்பு
    சவத்தால் என்ன பயன்
    எனக்கேட்டு வெளியில் கண்டது
    ஞானவழி!

    மரத்தடி ஒன்றில் ஒருநாள்
    அமர்ந்து செய்தார்
    ரமணர் உபன்யாசம்!
    அது மன ரணம் தீர்க்கும்
    சுகவாசம்!

    மனச்சுமை இறக்கி வைக்கும்
    உரைகேட்க
    நாற்காலி ஏறி அமர்ந்தார்
    ஓர் வெளிநாட்டார் !
    ஆஸ்ரமத்து நிர்வாகி
    இதைப் பார்த்தார்!
    விரைந்து ஓடி அவரிடம்
    ஏதோ பேச அந்த
    வெளி நாட்டார்
    வெளிநடந்தார்!
    ரமணர் இதைப் பார்த்தார்!
    நிர்வாகியைப் பக்கம்
    அழைத்துக் கேட்டார்!

    “கால் மூட்டு வலியால்
    கீழே அமர முடியாது, அதனால்
    நாற்காலி மேலே
    அமர்ந்தேன் என்றார் !
    நான் அவரைக்
    கீழேதான் அமரவேண்டும்
    ரிஷிக்கு
    மேலே யாரும் இல்லை என்றேன் !
    அவரோ உடனே
    வெளிநடந்தார் ! ” என்றதும்

    ஞானி சிரித்தபடி
    ‘அதோபார் மேலே’
    மரத்தின் கிளையைக் காட்டினார்
    மனத்தின் கிளையை வெட்டிய முத்தன் !
    எவர்க்கும்
    கரத்தை நீட்டும் கருணை நித்தன் !

    நிர்வாகி
    மரத்தின் கிளையில்
    ஒரு குரங்கைப் பார்த்தார் !
    அது,
    தன் மனக் குரங்கு
    அக்ஞானச் சிரங்கைச்
    சொரிந்த ரணமாய்க் கண்டார் !
    அறிந்து செய்த தவறாய்க் கொண்டார் !
    அதற்கு மருந்தாய் ரிஷியைப் பார்க்க,

    மரத்தடி மகான்,
    “இப்ப அந்தக் குரங்கை நீ என்ன பண்ணுவாய் ?
    அது எனக்கு மேலே இல்லையா ?”
    வெட்டெனச் சொன்னார் சந்நியாசி !
    வெட்கிப் போனார் நிர்வாகி !

    “நான்” உணர்ந்தால்
    அமரலாம் எங்கும் ,
    அமரத்துவமாகலாம் யாரும் !
    ஞானத்திற்கு,
    மேடை முக்கியமில்லை
    ஆடை முக்கியமில்லை
    மனதின்
    ஊனம் அழித்தலே முக்கியம் !”
    என்று
    ரமண ரிஷி எழுந்தார் !
    அவர் காலில்
    மற்றவர் விழுந்தார் !”

     

    (“மனித நேயம்” என்ற எனது கவிதைத் தொகுப்பில் இருந்து)

    இன்று ஸ்ரீ ரமண பகவானின் அவதார தினம் (30.12.2014)

     

     

     

    Share
  • பனிப்புயல்

    பவள சங்கரி

    snow-Wallpaper
    அடாது வீசிக்கொண்டிருக்கிறது பனிப்புயல்
    குளிராடையின்றி அலையோரம் அலையுமனது
    நடுங்கியபடி கடக்கிறது காலங்களை
    தெருமுனை வழிகாட்டியின் அருகில்
    நோட்டமிட்டவாறு கூரிய அம்புகள்
    பனிப்புயலையும் குத்திக் கிழிக்கும்
    வல்லமை கொண்டததன் முனைகள்
    கதிரொளியால் உருகி வழியப்போகும்
    அப்பனிப்புயல் ஏதோவொரு நேரம்
    நீராய்ப் பெருகி ஓடக்கூடியது

    வீசியபடி வெருண்டெழுகிறது பனிமழை
    பதறியபடி பறந்தெழுகிறது வல்லூறுகள்
    கதறியபடி துடித்தெழுகிறது நீர்த்திவலைகள்
    தடுத்து நிறுத்தும் குடையில்லை என்மனத்திடம்
    நனைந்தபடி தொடரும் நடையின் வேகத்தில்
    குளிர் விட்டுப் போயிருந்தது.
    குடையிப்போது கரம்மாறி பனிப்புயலின்
    சிரசில் காளிங்க நர்த்தனமிட்டபடி
    அமைதியாக்கியிருந்தது அனைத்தையும்!
    அன்பில் நனைந்த மலர்கள் அகம் குளிரும்!

    Share
  • அம்மானை அழகுமிகும் கண்மானை

    காவிரி மைந்தன்

    தமிழ் இலக்கியத்தில் அம்மானை என்கிற விளையாட்டு அதுவும் பெண்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டு மிகவும் பிரபலம்!  தோழியரிடையே போட்டிகள் நடக்கும்! அறிவும் இதிலே இணைந்து சிரிக்கும்!  கவிதைநயமும் இருபொருள்படும்படி சிலேடை நயமும் எனத் துள்ளிவரும் என்பதால் ஆடுவோர் மட்டுமின்றி ஆட்டத்தை ரசிப்பவர்களும் சுவை பெறுகின்ற விளையாட்டாகும்!

     amaaanai

    இதுவே பிற்காலத்தில் புதிர் விடுவிக்கும் போட்டியாக மாறியது என்று கூட தோன்றுகிறது!  புதிர் விடுவிப்பதில் ஆண்களும் பெண்களும் கலந்து பங்கேற்பது அம்மானை ஆட்டத்திலிருந்து வேறுபட்டதாகும்!

    அவன் ஒரு சரித்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடிகை மஞ்சுளா திரையில் தோன்ற பின்னணி குரல்களாக டி.எம்.செளந்திரராஜன், வாணி ஜெயராம்.. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்த இசையில் முழங்கும் காதல் பாடல்!  நாகரீக வார்த்தைகள் மட்டுமின்றி சங்கத்தமிழ் இன்பத்தமிழாக வழிகிறது பாருங்கள்!!

    வண்ணத்தமிழில் காதல்கனிரசம் கொட்டுகிற பாடலிது! கவியரசு கண்ணதாசன் எழுதிய திரைப்பாடல்களில் இலக்கிய நயங்கள் மிளிருகின்ற பாடல்களில் இது முக்கிய இடம்வகிக்கிறது! அன்பின் பரிமாணம் அழகுடன் சங்கமிக்கும் இருவரின் உள்ளங்களும் ஒன்றெனக் கலந்திருக்க.. இன்பராஜ்ஜியத்தில் இசையல்லவா மீட்டியெடுக்கிறது!

    இயற்கை எழில்கொஞ்சும் சூழல்களில் இதயம்குளிர்விக்கும் பாடல் கேட்க இந்தப் பாடலைக் கேட்கலாமே!

    vaanijeyaramஅம்மானை
    அழகுமிகும் கண்மானை
    ஆடிவரும் பெண்மானை
    தேடிவரும் பெருமானை
    தேடிவரும் பெருமானை

    நம்பிய பெண் ஒரு தாரகை
    அவள் நாடிய நீ ஒரு வானகம்
    நம்பிய பெண் ஒரு தாரகை
    அவள் நாடிய நீ ஒரு வானகம்
    விண்ணகம் மாறிய போதிலும்
    இந்தப் பெண்ணகம் மாறுவதில்லையே
    விண்ணகம் மாறிய போதிலும்
    இந்தப் பெண்ணகம் மாறுவதில்லையே

    அம்மானை
    அழகுமிகும் கண்மானை
    ஆடிவரும் பெண்மானை
    தேடிவரும் பெருமானை
    தேடிவரும் பெருமானை

    பாலினுள் மறைந்துள்ள சுவையென
    விழி பளிங்கினுள் மறைந்தது உன் முகம்
    பாலினுள் மறைந்துள்ள சுவையென
    விழி பளிங்கினுள் மறைந்தது உன் முகம்

    ஆழியில் மறைந்துள்ள மணியென
    உன் ஆசையில்
    மறைந்துளதென் மனம்
    ஆழியில் மறைந்துள்ள மணியென
    உன் ஆசையில்
    மறைந்துளதென் மனம்

    கன்னியின் நால்வகை சாத்திரம்
    தன் காதலன் கண்களில் மாத்திரம்
    உன்னிடம் நான் ஒரு பாத்திரம்
    அதில் ஊற்றிய தேன்மழை உன் முகம்
    உன்னிடம் நான் ஒரு பாத்திரம்
    அதில் ஊற்றிய தேன்மழை உன் முகம்

    அம்மானை
    அழகுமிகும் கண்மானை
    ஆடிவரும் பெண்மானை
    தேடிவரும் பெருமானை
    தேடிவரும் பெருமானை

    பொன்னிற வண்டுகள் பாடின
    அவை பூவெனும் மெத்தையில் கூடின
    என்னிரு கண்களும் தேடின
    அவை ஏக்கத்தில் உன்னிடம் ஓடின

    மங்கலச் சங்குகள் அழைத்தன
    இரு மந்திர முல்லைகள் இழுத்தன
    உன்னுடன் உடல் உயிர் கலந்தன
    இங்கு ஒன்றுமில்லை இனி எனக்கென

    அம்மானை
    அழகுமிகும் கண்மானை
    ஆடிவரும் பெண்மானை
    தேடிவரும் பெருமானை
    தேடிவரும் பெருமானை

    http://www.youtube.com/watch?v=RMqFp9rzqVM

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கேசவ் அபாரம்….யானைப் பசிக்கு சோளப்பொரி போல உனது கண்ணன் பசிக்கு இது கவளம்….ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமே….. சூப்பர்…. கிரேசி மோகன்….
    KRISHNA FOR TODAY….
    ———————————–

    crazy

    ‘’கவலையால் பீடித்த கம்சனின் ஆனை,
    குவலயா பீடத்தின் கொம்பை, – திவலையாய்
    ஒசித்த கண்ணனின் ஓவியம், கேசவ்தன்,
    பசித்தசிந் தைக்கு பொரி’’….கிரேசி மோகன்….

    Share
  • அமெரிக்க-கியூபா உறவு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    141218113913_cuba_640x360_reuters_nocredit

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் – அதாவது 1898-இல் – ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்த கியூபா ஸ்பெயினை எதிர்த்துப் போராடி சுதந்திரம் பெற்றது. அந்த சுதந்திரப் போராட்டத்தின்போது அமெரிக்கா தன் கப்பல் ஒன்றை கியுபாவுக்குப் பக்கத்தில் நிறுத்தியிருந்தது. அந்தக் கப்பல் மூழ்கியபோது அதற்கு ஸ்பெயின்தான் காரணம் என்று கூறி அமெரிக்கா ஸ்பெயின் மீது போர்தொடுத்தது. (ஸ்பெயின் மீது போர்தொடுப்பதற்காக அமெரிக்காவே தன் கப்பலை மூழ்கடித்ததாகவும் கூறப்படுகிறது.) அ,மெரிக்க-ஸ்பெயின் போர் முடிந்த பிறகு கியூபா அமெரிக்காவின் அதிகாரத்தின் கீழ் வந்தது. 1902-இல் கியூபாவுக்கு அமெரிக்கா சுதந்திரம் கொடுத்தாலும் தனக்கு வேண்டியவர்களை அரசில் அமர்த்தி அவர்களில் ஒருவரைச் சர்வாதிகாரியாக்கித் தன் நலன்களுக்கு ஏற்றவாறு ஆட்சி புரியுமாறு செய்துகொண்டது. அமெரிக்கப் பெரும் பணக்காரர்கள், நடிக, நடிகைகள் கியூபாவில் உல்லாசப் பொழுது போக்கினர். கியூபாவின் தலைநகரான ஹவானாவில் அமெரிக்க சொகுசுக் கார்கள் உலா வந்தன. சுமார் அறுபது ஆண்டுகள் அமெரிக்காவுக்குச் சாதகமாக நடந்துகொண்டு தங்கள் பைகளையும் நிரப்பிக்கொண்ட தலைவர்களை ஒழித்துக் கியூபாவின் மக்களுக்கு அந்நாட்டின் வளம் போய்ச் சேர வேண்டும் என்று ஹவானா பல்கலைக்கழகச் சட்டத்துறையைச் சேர்ந்த மாணவர்கள் போராட ஆரம்பித்தனர். இவர்களில் தலையானவர் ஃபிடல் கேஸ்ட்ரோ. அவருக்குத் துணை நின்றவர்கள் அவருடைய தம்பி ராவுல் கேஸ்ட்ரோவும் இன்னும் சில நண்பர்களும்.

    இவர்கள் அப்போது கியூபாவில் ஆதிக்கத்தில் இருந்த சர்வாதிகாரியால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு அமெரிக்காவும் மிகவும் உதவியது. ஆயினும் இறுதியில் 1959-இல் இவர்கள் கியூபாவைச் சர்வாதிகாரியிடமிருந்து மீட்டுத் தங்கள் ஆட்சியை அமைத்தனர். அப்போது கியூபாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் லட்சக்கணக்கானவர்கள் தஞ்சம் புகுந்தனர். இவர்களுக்கு தங்கள் நாடான கியூபாவிற்குத் திரும்பிச் சென்று கேஸ்ட்ரோவின் ஆட்சியைக் கவிழ்த்து தங்கள் ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஐஸன்ஹோவர் இவர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்க அனுமதி கொடுத்தார். 1960-இல் ஆட்சிக்கு வந்த கென்னடியின் காலத்தில் இவர்கள் எப்படியாவது அமெரிக்க உதவியுடன் கியூபாவைப் பிடித்துவிட வேண்டும் என்று ரகசியமாகத் திட்டமிட்டு கியூபாவின் மீது படையெடுத்தனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு 1961-இல் அமெரிக்கா கியூபாவுடனான உறவைத் துண்டித்துக்கொண்டது. கியூபா மீது வணிகத் தடைகளைப் போட்டது. (இந்த உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி தன் உதவியாளர் ஒருவரிடம் தனக்கு 12,000 கியூபா சுருட்டுகள் வாங்கிவைக்கும்படி கேட்டுக்கொண்டாராம்.) ஐ.நா. சபையில் எப்போதும் அமெரிக்கா கியூபாவுக்கு எதிராக ஓட்டளித்தது.

    கியூபாவை விட்டு வந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் அவ்வப்போது கேஸ்ட்ரோவின் ஆட்சியைக் கவிழ்க்க நினைத்த போதெல்லாம் தோல்வியையே தழுவினர். கேஸ்ட்ரோ கியூபாவின் அரசுக்கு சோஷலிஸக் குடியரசு என்று பெயர் சூட்டினார். ரஷ்யாவைப்போல் கியூபாவும் கம்யூனிஸ நாடானது. தனக்குப் பக்கத்திலேயே – அமெரிக்கத் தென் கோடியிலிருந்து கியூபா 90 மைல் தூரம் மட்டுமே – கம்யூனிஸ நாடு ஒன்று இருப்பதை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியுமா என்ன? கியூபாவின் மேல் பல பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்தது. கேஸ்ட்ரோவின் புரட்சிக்குப் பிறகு அங்கிருந்து அமெரிக்காவுக்கு அடைக்கலம் தேடிவந்தவர்கள் எப்படியாவது கேஸ்ட்ரோவை அகற்றிவிட்டுத் தாங்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று முயன்றனர். 600 தடவைகளுக்கு மேல் அமெரிக்கா கேஸ்ட்ரோவைக் கொலைசெய்ய முயன்றது. ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. 1990 வரை கேஸ்ட்ரோ சோவியத் யூனியனின் உதவியுடன் பல இன்னல்களைச் சமாளித்து வந்தார். சோவியத் யூனியன் விழுந்ததும் கியூபாவின் பொருளாதாரம் இன்னும் நலிவுற்றது. இருப்பினும் கேஸ்ட்ரோ எப்படியோ கியூபாவை கம்யூனிஸ நாடாகத் தொடர்ந்து நடத்திவந்தார்.

    2006-இல் நோய்வாய்ப்பட்ட கேஸ்ட்ரோ கியூபாவின் தலைவர் பதவியிலிருந்து இறங்கி அவருடைய தம்பி ராவுல் கேஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்தார். இவர் அரசில் சில மாற்றங்கள் கொண்டுவந்தாலும் அமெரிக்கா கியூபாவின் மீதுள்ள தன் பிடியைத் தளர்த்தவில்லை. இப்போது ஒரு வருடமாக கனடாவைச் சேர்ந்த ஒருவரின் முயற்சியாலும் தலையீட்டாலும் இரு நாடுகளுக்கும் இடையே ரகசியமாக நடந்த பேச்சுவார்த்தைகளால் அமெரிக்க அதிபர் ஒபாமா திடீரென்று அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே உறவு ஏற்படும் என்றும் சீக்கிரமே கியூபாவில் அமெரிக்கத் தூதரகம் அமையும் என்றும் கூறியிருக்கிறார். அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே ஏற்படப் போகும் புதிய உறவுக்குப் போப் ஃபிரான்ஸிஸும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. போப் பிரான்ஸிஸ் நாடுகளுக்கிடையேயும் மதங்களுக்கிடையேயும் நல்லிணக்கம் ஏற்படத் தன்னால் முயன்ற அளவு முயற்சி செய்கிறார். அதிலும் அவர் தென்அமெரிக்காவிலுள்ள அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவராதலால் அருகிலுள்ள கியூபா மீது அதிக அக்கறை செலுத்தியதாகத் தெரிகிறது. கியூபாவிலும் நிறைய கத்தோலிக்கர்கள் இருக்கிறார்கள். கத்தோலிக்கர்களுக்குத் தலைவரான போப் கியூபாவிலுள்ள கத்தோலிக்கர்களின் நலன்களுக்காவும் முயன்றிருக்கலாம்.

    ஒபாமாவின் சாதனைகள் என்று எதுவும் இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிவரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பலருக்கும், கேஸ்ட்ரோவின் புரட்சிக்குப் பிறகு கியூபாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கும் அமெரிக்கா கியூபாவுடன் தூதரக உறவு வைத்துக்கொள்வதில் கிஞ்சித்தும் விருப்பம் இல்லை. முந்தையவர்கள் அமெரிக்க-கியூபா உறவில் இது ஒரு முக்கிய நிகழ்வு என்பதால் அதற்குரிய பெருமை ஒபாமாவைச் சேரக் கூடாது என்று நினைக்கிறார்கள். பிந்தையவர்களோ கியூபாவில் புரட்சியைக் கொண்டுவந்து தாங்கள் கியூபாவை விட்டு வெளியேறியதற்குக் காரணமாக இருந்த கேஸ்ட்ரோவை இனி தாங்கள் பழிவாங்க முடியாது என்று நினைக்கிறார்கள். மேலும் கம்யூனிஸ நாடான கியூபாவை அமெரிக்கா ஏற்றுக்கொண்டு அதனுடன் தூதரக உறவை ஏற்படுத்திக்கொள்ளப் போவதால் இதுவரை அங்கு நடந்துவந்த கம்யூனிஸ அரசை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுவிட்டதாக அர்த்தம் என்றும் இனி அங்கு ஜனநாயகம் எப்போதுமே வரப் போவதில்லை என்றும் கூறுகிறார்கள்.

    ஜனநாயக அரசு கியூபாவில் ஏற்படப் போகிறதோ என்னவோ அமெரிக்க முதலாளித்துவப் பொருளாதாரம் அங்கு பரவும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. அமெரிக்கக் கம்பெனிகள் அங்கு போய்ப் பணம் பண்ணப் பார்ப்பார்கள். அமெரிக்கச் சாமான்கள் அங்கு நிறையவே கிடைக்கும். இதற்காகவே ஏங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு அந்த ஆசை நிறைவேறலாம். ஆனால் இப்போது கியூபாவில் எல்லோருக்கும் கல்வி, மருத்துவ வசதிகள் எந்தப் பாரபட்சமும் இல்லாமல் கிடைத்துவருகின்றன. கியூபாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அமெரிக்க மாணவர்களே பயில்கிறார்கள். கியூபாவில் எல்லோருக்கும் உள்ள சமத்துவத்திற்கும் சம உரிமைகளுக்கும் பங்கம் வரலாம். ஒபாமாவின் இந்த முடிவை எதிர்ப்பவர்கள் இதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அமெரிக்காவின் தாக்கம் கியூபாவில் நிறைய இருக்கும் என்றாலும் கியூபா தன்னுடைய தனித்தன்மையை இழக்காமல் இருந்தால் சரி.

    Share