மார்கழி மலர்கள் – இது மாசுகள் நிறைந்த உலகம் (பாடல்)
இசைக்கவி ரமணன்
[mixcloud]//https:www.mixcloud.com/Vallamai/%E0%AE%87%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE/[/mixcloud]
இது
மாசுகள் நிறைந்த உலகம், இதில்
மாண்புகள் எங்கே ஜெயிக்கும்
காசுகள் தானே நம்மைப் பார்த்துக்
கையைக் கொட்டிச் சிரிக்கும்
விதி
ஆசையை நம்பிப் பிழைக்கும், அதன்
ஆட்சி வேறெங்கு பலிக்கும்
ஈசா நீதான் கதியென நின்றேன்
என்கதை எப்படி நடக்கும்
ஏதோ தெருவில் ஏதோ பாடி
எங்கோ செல்வது நன்று
ஏழையென்றாலும், பசியென நின்று
ஏந்தாதிருப்பது நன்று
ஆதரவிங்கே யாரும் இல்லை
அவரவர்க் கவரவர் பாடு
அன்பே தெய்வம் என்றே பாடி
அழகாய்க் கண்ணை மூடு (இது)
வென்றது கருமம் நின்றது தருமம்
ஏதடி இதிலே மர்மம்
வேதனை யாவும் வெகுமதி என்றே
வேதம் பாடும் உள்ளம்
சென்றது செலவு வந்தது வரவு
ஏதடி உறவு பிரிவு
சின்னஞ் சிறுவுயிர் சிறகு விரிக்க
எத்தனை எத்தனை கதவு!
அது
ஆலய மணியின் ஓசை, அதன்
ஓசையில் ஓயும் ஆசை
காலன் வந்தெனைத் தழுவும் முன்னே
கவிதையை முடிக்க ஆசை
ஒரு
தேகம் கொடுத்த ஈசா, மலைத்
தேனாய் இனிக்கும் நேசா
தாகம் பசியெனக் கையேந்தாமல்
சாகும் தரத்தை நீ தா
29.12.2014 / திங்கள் / 22.00
அன்பு ரமணன் ஜி இனிய புத்தாண்டு வாழ்த்துகள் .கவிதை மிக அருமை .