அமெரிக்க-கியூபா உறவு
நாகேஸ்வரி அண்ணாமலை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் – அதாவது 1898-இல் – ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்த கியூபா ஸ்பெயினை எதிர்த்துப் போராடி சுதந்திரம் பெற்றது. அந்த சுதந்திரப் போராட்டத்தின்போது அமெரிக்கா தன் கப்பல் ஒன்றை கியுபாவுக்குப் பக்கத்தில் நிறுத்தியிருந்தது. அந்தக் கப்பல் மூழ்கியபோது அதற்கு ஸ்பெயின்தான் காரணம் என்று கூறி அமெரிக்கா ஸ்பெயின் மீது போர்தொடுத்தது. (ஸ்பெயின் மீது போர்தொடுப்பதற்காக அமெரிக்காவே தன் கப்பலை மூழ்கடித்ததாகவும் கூறப்படுகிறது.) அ,மெரிக்க-ஸ்பெயின் போர் முடிந்த பிறகு கியூபா அமெரிக்காவின் அதிகாரத்தின் கீழ் வந்தது. 1902-இல் கியூபாவுக்கு அமெரிக்கா சுதந்திரம் கொடுத்தாலும் தனக்கு வேண்டியவர்களை அரசில் அமர்த்தி அவர்களில் ஒருவரைச் சர்வாதிகாரியாக்கித் தன் நலன்களுக்கு ஏற்றவாறு ஆட்சி புரியுமாறு செய்துகொண்டது. அமெரிக்கப் பெரும் பணக்காரர்கள், நடிக, நடிகைகள் கியூபாவில் உல்லாசப் பொழுது போக்கினர். கியூபாவின் தலைநகரான ஹவானாவில் அமெரிக்க சொகுசுக் கார்கள் உலா வந்தன. சுமார் அறுபது ஆண்டுகள் அமெரிக்காவுக்குச் சாதகமாக நடந்துகொண்டு தங்கள் பைகளையும் நிரப்பிக்கொண்ட தலைவர்களை ஒழித்துக் கியூபாவின் மக்களுக்கு அந்நாட்டின் வளம் போய்ச் சேர வேண்டும் என்று ஹவானா பல்கலைக்கழகச் சட்டத்துறையைச் சேர்ந்த மாணவர்கள் போராட ஆரம்பித்தனர். இவர்களில் தலையானவர் ஃபிடல் கேஸ்ட்ரோ. அவருக்குத் துணை நின்றவர்கள் அவருடைய தம்பி ராவுல் கேஸ்ட்ரோவும் இன்னும் சில நண்பர்களும்.
இவர்கள் அப்போது கியூபாவில் ஆதிக்கத்தில் இருந்த சர்வாதிகாரியால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு அமெரிக்காவும் மிகவும் உதவியது. ஆயினும் இறுதியில் 1959-இல் இவர்கள் கியூபாவைச் சர்வாதிகாரியிடமிருந்து மீட்டுத் தங்கள் ஆட்சியை அமைத்தனர். அப்போது கியூபாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் லட்சக்கணக்கானவர்கள் தஞ்சம் புகுந்தனர். இவர்களுக்கு தங்கள் நாடான கியூபாவிற்குத் திரும்பிச் சென்று கேஸ்ட்ரோவின் ஆட்சியைக் கவிழ்த்து தங்கள் ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஐஸன்ஹோவர் இவர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்க அனுமதி கொடுத்தார். 1960-இல் ஆட்சிக்கு வந்த கென்னடியின் காலத்தில் இவர்கள் எப்படியாவது அமெரிக்க உதவியுடன் கியூபாவைப் பிடித்துவிட வேண்டும் என்று ரகசியமாகத் திட்டமிட்டு கியூபாவின் மீது படையெடுத்தனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு 1961-இல் அமெரிக்கா கியூபாவுடனான உறவைத் துண்டித்துக்கொண்டது. கியூபா மீது வணிகத் தடைகளைப் போட்டது. (இந்த உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி தன் உதவியாளர் ஒருவரிடம் தனக்கு 12,000 கியூபா சுருட்டுகள் வாங்கிவைக்கும்படி கேட்டுக்கொண்டாராம்.) ஐ.நா. சபையில் எப்போதும் அமெரிக்கா கியூபாவுக்கு எதிராக ஓட்டளித்தது.
கியூபாவை விட்டு வந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் அவ்வப்போது கேஸ்ட்ரோவின் ஆட்சியைக் கவிழ்க்க நினைத்த போதெல்லாம் தோல்வியையே தழுவினர். கேஸ்ட்ரோ கியூபாவின் அரசுக்கு சோஷலிஸக் குடியரசு என்று பெயர் சூட்டினார். ரஷ்யாவைப்போல் கியூபாவும் கம்யூனிஸ நாடானது. தனக்குப் பக்கத்திலேயே – அமெரிக்கத் தென் கோடியிலிருந்து கியூபா 90 மைல் தூரம் மட்டுமே – கம்யூனிஸ நாடு ஒன்று இருப்பதை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியுமா என்ன? கியூபாவின் மேல் பல பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்தது. கேஸ்ட்ரோவின் புரட்சிக்குப் பிறகு அங்கிருந்து அமெரிக்காவுக்கு அடைக்கலம் தேடிவந்தவர்கள் எப்படியாவது கேஸ்ட்ரோவை அகற்றிவிட்டுத் தாங்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று முயன்றனர். 600 தடவைகளுக்கு மேல் அமெரிக்கா கேஸ்ட்ரோவைக் கொலைசெய்ய முயன்றது. ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. 1990 வரை கேஸ்ட்ரோ சோவியத் யூனியனின் உதவியுடன் பல இன்னல்களைச் சமாளித்து வந்தார். சோவியத் யூனியன் விழுந்ததும் கியூபாவின் பொருளாதாரம் இன்னும் நலிவுற்றது. இருப்பினும் கேஸ்ட்ரோ எப்படியோ கியூபாவை கம்யூனிஸ நாடாகத் தொடர்ந்து நடத்திவந்தார்.
2006-இல் நோய்வாய்ப்பட்ட கேஸ்ட்ரோ கியூபாவின் தலைவர் பதவியிலிருந்து இறங்கி அவருடைய தம்பி ராவுல் கேஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்தார். இவர் அரசில் சில மாற்றங்கள் கொண்டுவந்தாலும் அமெரிக்கா கியூபாவின் மீதுள்ள தன் பிடியைத் தளர்த்தவில்லை. இப்போது ஒரு வருடமாக கனடாவைச் சேர்ந்த ஒருவரின் முயற்சியாலும் தலையீட்டாலும் இரு நாடுகளுக்கும் இடையே ரகசியமாக நடந்த பேச்சுவார்த்தைகளால் அமெரிக்க அதிபர் ஒபாமா திடீரென்று அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே உறவு ஏற்படும் என்றும் சீக்கிரமே கியூபாவில் அமெரிக்கத் தூதரகம் அமையும் என்றும் கூறியிருக்கிறார். அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே ஏற்படப் போகும் புதிய உறவுக்குப் போப் ஃபிரான்ஸிஸும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. போப் பிரான்ஸிஸ் நாடுகளுக்கிடையேயும் மதங்களுக்கிடையேயும் நல்லிணக்கம் ஏற்படத் தன்னால் முயன்ற அளவு முயற்சி செய்கிறார். அதிலும் அவர் தென்அமெரிக்காவிலுள்ள அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவராதலால் அருகிலுள்ள கியூபா மீது அதிக அக்கறை செலுத்தியதாகத் தெரிகிறது. கியூபாவிலும் நிறைய கத்தோலிக்கர்கள் இருக்கிறார்கள். கத்தோலிக்கர்களுக்குத் தலைவரான போப் கியூபாவிலுள்ள கத்தோலிக்கர்களின் நலன்களுக்காவும் முயன்றிருக்கலாம்.
ஒபாமாவின் சாதனைகள் என்று எதுவும் இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிவரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பலருக்கும், கேஸ்ட்ரோவின் புரட்சிக்குப் பிறகு கியூபாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கும் அமெரிக்கா கியூபாவுடன் தூதரக உறவு வைத்துக்கொள்வதில் கிஞ்சித்தும் விருப்பம் இல்லை. முந்தையவர்கள் அமெரிக்க-கியூபா உறவில் இது ஒரு முக்கிய நிகழ்வு என்பதால் அதற்குரிய பெருமை ஒபாமாவைச் சேரக் கூடாது என்று நினைக்கிறார்கள். பிந்தையவர்களோ கியூபாவில் புரட்சியைக் கொண்டுவந்து தாங்கள் கியூபாவை விட்டு வெளியேறியதற்குக் காரணமாக இருந்த கேஸ்ட்ரோவை இனி தாங்கள் பழிவாங்க முடியாது என்று நினைக்கிறார்கள். மேலும் கம்யூனிஸ நாடான கியூபாவை அமெரிக்கா ஏற்றுக்கொண்டு அதனுடன் தூதரக உறவை ஏற்படுத்திக்கொள்ளப் போவதால் இதுவரை அங்கு நடந்துவந்த கம்யூனிஸ அரசை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுவிட்டதாக அர்த்தம் என்றும் இனி அங்கு ஜனநாயகம் எப்போதுமே வரப் போவதில்லை என்றும் கூறுகிறார்கள்.
ஜனநாயக அரசு கியூபாவில் ஏற்படப் போகிறதோ என்னவோ அமெரிக்க முதலாளித்துவப் பொருளாதாரம் அங்கு பரவும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. அமெரிக்கக் கம்பெனிகள் அங்கு போய்ப் பணம் பண்ணப் பார்ப்பார்கள். அமெரிக்கச் சாமான்கள் அங்கு நிறையவே கிடைக்கும். இதற்காகவே ஏங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு அந்த ஆசை நிறைவேறலாம். ஆனால் இப்போது கியூபாவில் எல்லோருக்கும் கல்வி, மருத்துவ வசதிகள் எந்தப் பாரபட்சமும் இல்லாமல் கிடைத்துவருகின்றன. கியூபாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அமெரிக்க மாணவர்களே பயில்கிறார்கள். கியூபாவில் எல்லோருக்கும் உள்ள சமத்துவத்திற்கும் சம உரிமைகளுக்கும் பங்கம் வரலாம். ஒபாமாவின் இந்த முடிவை எதிர்ப்பவர்கள் இதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அமெரிக்காவின் தாக்கம் கியூபாவில் நிறைய இருக்கும் என்றாலும் கியூபா தன்னுடைய தனித்தன்மையை இழக்காமல் இருந்தால் சரி.