மார்கழி மலர்கள் – வாசலே இல்லாத குடிலில் (பாடல்)
இசைக்கவி ரமணன்
[mixcloud]//https:www.mixcloud.com/Vallamai/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%A4/[/mixcloud]
வாசலே இல்லாத குடிலில்
வந்துநட மாடுமிளங் களிறே!
நேசமே தள்ளாடும் அன்பே!
நெஞ்சுகொள் ளாத என் அழகே!
பேசவே அறியாத நாவில்
பெருவெள்ளம் கங்கை போல் பெருக
ஈசனே நீயாக வருக
இனியென்னை நீங்காமல் வருக!
ஆசையாய் உனைப்பாட வருக
அமிழ்தூறும் செந்தமிழைத் தருக
ஏதுமே இல்லா பேதையேன் ஐயே
ஏழையின் வாழ்வே வருக!
ஈசனே எனக்காக வருக வருக (வாசலே)
திருந்தாத வருந்தாத உள்ளம், அதில்
திருமயிலைக் காபாலி வருக
பொருந்தாத உறவு புரிந்ததென்றாலும்
போகுமோ நீ தந்த மோகம்? நீ
வாராமல் தாராமல் தீராது தாகம் (வாசலே)
திருஞான சம்பந்தன் உயிர்தந்த தமிழ்வாழும்
தென்கயிலை தானெந்தன் மயிலை
திரைவீசும் கடலோரம் திசைகாட்டும் சுடராகத்
திகழ்கின்ற தேதேனின் திவலை
அருள்செய்ய வேநிற்கும் அன்னையென் அன்னையவள்
அன்பென்னும் அலைவீசும் குளமே, அதன்
அந்தப் புறம்நின்று சொந்தக் கதைசொல்லி
அழுகின்ற மழலையுன் மகனே! அதை
ஆதரித் தருள்வதுன் கடனே!
26.12.2014 / வெள்ளி / 9.15