2015 புத்தாண்டு சபதம்
தமிழ்த்தேனீ
2014 ஆம் ஆண்டு நிறைந்து 2015 ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது. ஜனவரி ஒன்றாம் தேதி முதல்.
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கு முன்னாலே வா வாவா என்றொரு பாட்டு உண்டு.
உண்மைதான் ஒரு ஆண்டு கழிந்தால் ஒரு வயது ஏறுகிறது, ஆகவே வயது மட்டும் ஏறினால் போதுமா? அப்படி ஒரு வயது ஏறுகிறது என்றால் ஒரு ஆண்டு அனுபவமும் நமக்குள் நிறைகிறது என்று பொருள், ஆகவே ஓராண்டு என்பது 12 மாதங்கள் அல்லது கிட்டத்தட்ட 50 வாரங்கள், 366 நாட்கள், அல்லது 8784 மணி நேரம் ,அல்லது 527040 நிமிடங்கள், அல்லது 31,622,400 வினாடிகள் ,
அடேயப்பா ! இவ்வளவு வினாடிகள் நாம் செலவழித்திருக்கிறோம். அது சரி ஆனால் நாம் செல்வழித்த இந்த 31,622,400 வினாடிகளில் எவ்வளவு வினாடிகள் நாம் உண்மையாக உருப்படியாக நல்ல செயல்களுக்கோ நாட்டின் முன்னேற்றத்துக்காகவோ, அல்லது வருங்கால சந்ததிகளின் முன்னேற்றத்துக்காகவோ செலவிட்டோம் என்று எண்ணிப் பார்ப்போமா?
பன்னிரெண்டு ஆழ்வார்களில் ,முக்கியமான ஆழ்வாராகிய தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஒருநாளில் அதாவது 24 மணி நேரத்தில் பாதியும் உறங்கிப் போம் என்கிறார்.
“வேதநூற் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்,
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே “
என்று திருவரங்கனிடம் வேண்டுகிறார்.
நாம் நூறு வயது வாழ்ந்தால் பாதியும் உறங்கிப் போகும் அதாவது ஐம்பது வருடங்கள் உறக்கத்திலேயே கழிகிறது, 15 ஆண்டுகள் பேதை பாலகனாகவே அறிவு முதிர்ச்சியோ அனுபவ முதிர்ச்சியோ இல்லாமல் இருக்கிறோம்.
ஆக மொத்தம் 65 ஆண்டுகள் வீணாகக் கழிக்கிறோம்
65 வயதுக்கு பின்னர் இயல்பாக வரும் மூப்பு பிணி போன்றவைகளால் அவதிப் படவே நேரம் போகிறது
இப்படி இருக்க ஒரு ஆண்டு கழிந்து புது வருடம் பிறந்தால் நம் ஆயுளிலே ஒரு வருடம் குறைகிறது
ஆகவே நமக்கு கொடுக்கப்பட்ட ஆயுளுக்குள் நாம் ஏதேனும் நற்காரியம், ஏதேனும் சாதனைகள் செய்ய வேண்டாமா?
அப்படியானால் நேரத்தை நாம் எப்படி திட்டமிட்டு கழிக்க வேண்டும்?
ஒவ்வொரு நொடியும் நமக்கு பொன் போன்றது அல்லவா? அதனால்தான் காலம் பொன் போன்றது என்கிறார்கள்
நான் மேற்கூறிய அனைத்துமே நாம் நூறு வருடங்கள் முழுமையாக வாழ்ந்தால்தான் . ஆனால் நம்மில் எத்தனைபேர் நூறு வருடம் வாழ்கிறோம்? பிறப்பதும் இறப்பதும் நம் கையில் இல்லை. ஆகவே நமக்கு விதிக்கப்பட்ட ஆயுள் எவ்வளவு என்று நமக்குத் தெரியாது அப்படியானால் நமக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது நல்லவைகளைச் செய்ய?
ஆகவே நாம் வாழும் காலம் எவ்வளவு வருடங்கள் என்று எண்ணிப் பார்ப்பதைவிட வாழும் காலத்துக்குள் நல்லவைகளை நிறைவேற்ற வேண்டும் என்னும் பொறுப்பு நமக்கு கூடுகிறது அல்லவா?
பல நல்ல மனிதர்கள், நாட்டுக்கு உழைத்தவர்கள் நன்மை செய்தவர்கள், மஹாகவி பாரதியார், கணிதமேதை இராமானுஜம் அவர்கள் போன்ற பலர் மிகக் குறுகிய காலமே வாழ்ந்தாலும் வாழும் காலத்திலே நல்லது செய்துவிட்டு என்றும் மக்கள் மனதிலே நீங்காத இடம் பெற்றிருக்கிறார்கள் ..அதாவது அவர்கள் வாழ்ந்த குறுகிய காலத்துக்குள்ளாக திட்டமிட்டு நன்மைகளை செய்திருக்கிறார்கள், நல்ல நோக்கத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள்.
அப்படியானால் நாம் இந்த வருட தொடக்கம் முதல் எப்படி வாழவேண்டும் என்று திட்டமிட்டு அப்படி வாழ வேண்டுமல்லவா?
அப்போதுதானே நேர விரயத்தை குறைத்து நாமும் பல நன்மைகளைச் செய்ய முடியும்?
சிந்திப்போமா?
இந்த வருட தொடக்கத்தில் நாமும் ஒரு புது சபதம் எடுப்போமா?
இனி என் வாழ்நாளில் ஒரு வினாடியையும் வீணாக்க மாட்டோம், இயன்றவரை நல்லதே செய்வோம், அனைவருக்கும் உதவியாய் இருப்போம், நாம் பிறந்த நாட்டை முன்னேற்ற நம்மால் இயன்ற அளவு பாடுபடுவோம். நாட்டை வளர்ச்சிப் பாதையிலிருந்து திசை திருப்பி பலகீனமாக்கும் லஞ்சம் , ஊழல், போன்றவற்றை களைய சிறிதேனும் முயற்சி எடுப்போம்.
இளைஞர்களை நல் வழிதிருப்பி நாட்டின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் அறிவுறுத்தி அவர்களின் ஆக்க பூர்வமான அரிய சக்தியை நல்ல வழியில் செலவழிக்க அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.
நாட்டில் மனிதர்களே முக்கியம், சாதிப் பிரிவினை, மொழிப் பிரிவினை, போன்றவை மனிதர்களை பலகீனப்படுத்துகிறது என்பதை உணரவைத்து ஒற்றுமையே மேன்மை என்பதை வலியுறுத்துவோம்
மனிதமே மேன்மையானது, மனித நேயமே எப்போதும் வாழவைக்கக் கூடியது. ஆகவே மனிதம் காப்போம் , என்று உறுதி எடுப்போமா? ஜாதி இன மொழி பேதமில்லாமல் அனைவருக்கும் 2015 ஆம் ஆண்டு நல்ல வாழ்க்கையை அமைத்து தரவேண்டி அனைவரும் ப்ரார்த்தனை செய்வோம் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்