கிரேசி மோகன்

images

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய….

திருவா திரையில் திருச்சுழி ஊரில்
கருவாய் அழகம்மை கர்பம் -உருவாய்
பெருந்தவம் செய்த பகவான் ரமணர்
பிறந்து துறந்தார் பிறப்பு….(1)….

பேரூழி காலத்தில் பாராழி புக்காது
நீரோய சூலன் நிறுத்திய -ஊராம்
திருச்சுழி தோன்றினன், தாயழ கம்மை
கருக்குழியில் கர்மம் கழித்து….(2)….கிரேசி மோகன்….

 

ஸ்ரீரமண ஜோதி
(மீ.விசுவநாதன்)

பிள்ளையாரின்
அருட்கை போட்டது
ஒரு சுழி ! அதுவே
திருச்சுழி!

நான் யார்?
எனக்கேட்ட பிள்ளையாரின்
கருக்குழியான
“திருச்சுழி”

தன் தவத்தால் திறந்தது
அருள்வழி!
பூத உடல்
இறந்த பின்பு
சவத்தால் என்ன பயன்
எனக்கேட்டு வெளியில் கண்டது
ஞானவழி!

மரத்தடி ஒன்றில் ஒருநாள்
அமர்ந்து செய்தார்
ரமணர் உபன்யாசம்!
அது மன ரணம் தீர்க்கும்
சுகவாசம்!

மனச்சுமை இறக்கி வைக்கும்
உரைகேட்க
நாற்காலி ஏறி அமர்ந்தார்
ஓர் வெளிநாட்டார் !
ஆஸ்ரமத்து நிர்வாகி
இதைப் பார்த்தார்!
விரைந்து ஓடி அவரிடம்
ஏதோ பேச அந்த
வெளி நாட்டார்
வெளிநடந்தார்!
ரமணர் இதைப் பார்த்தார்!
நிர்வாகியைப் பக்கம்
அழைத்துக் கேட்டார்!

“கால் மூட்டு வலியால்
கீழே அமர முடியாது, அதனால்
நாற்காலி மேலே
அமர்ந்தேன் என்றார் !
நான் அவரைக்
கீழேதான் அமரவேண்டும்
ரிஷிக்கு
மேலே யாரும் இல்லை என்றேன் !
அவரோ உடனே
வெளிநடந்தார் ! ” என்றதும்

ஞானி சிரித்தபடி
‘அதோபார் மேலே’
மரத்தின் கிளையைக் காட்டினார்
மனத்தின் கிளையை வெட்டிய முத்தன் !
எவர்க்கும்
கரத்தை நீட்டும் கருணை நித்தன் !

நிர்வாகி
மரத்தின் கிளையில்
ஒரு குரங்கைப் பார்த்தார் !
அது,
தன் மனக் குரங்கு
அக்ஞானச் சிரங்கைச்
சொரிந்த ரணமாய்க் கண்டார் !
அறிந்து செய்த தவறாய்க் கொண்டார் !
அதற்கு மருந்தாய் ரிஷியைப் பார்க்க,

மரத்தடி மகான்,
“இப்ப அந்தக் குரங்கை நீ என்ன பண்ணுவாய் ?
அது எனக்கு மேலே இல்லையா ?”
வெட்டெனச் சொன்னார் சந்நியாசி !
வெட்கிப் போனார் நிர்வாகி !

“நான்” உணர்ந்தால்
அமரலாம் எங்கும் ,
அமரத்துவமாகலாம் யாரும் !
ஞானத்திற்கு,
மேடை முக்கியமில்லை
ஆடை முக்கியமில்லை
மனதின்
ஊனம் அழித்தலே முக்கியம் !”
என்று
ரமண ரிஷி எழுந்தார் !
அவர் காலில்
மற்றவர் விழுந்தார் !”

 

(“மனித நேயம்” என்ற எனது கவிதைத் தொகுப்பில் இருந்து)

இன்று ஸ்ரீ ரமண பகவானின் அவதார தினம் (30.12.2014)

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.