புதியதோர் உலகம் செய்வோம்! – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
காவிரிமைந்தன்
புதுவைதந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இயற்றிய கவிதை வரிகள் .. திரைப்படத்திற்காக கையாளப்படும்போது பாடல் வரிகளாக மாறின! இந்தப் பாடலை எம்.ஜி.ஆர் அவர்கள் இரண்டு முறை பயன்படுத்தியிருக்கிறார்! ஆம்.. சந்திரோதயம் திரைப்படத்திலும்.. பல்லாண்டு வாழ்க என்னும் திரையோவியத்திலும்.. சந்திரோதயம் திரைப்படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் பாடப்பட்ட இப்பாடல் பெற்ற வடிவம் வேறு! பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.செளந்திரராஜன் பாடிய இப்பாடல் பெற்ற வடிவம் வேறு! ஆக மொத்தம் பாரதிதாசனின் பாடல் ஒன்றிற்கு இசை வடிவங்கள் வெவ்வாறாக அமைந்தபோதும் இரண்டும் வெற்றி பெற்றதை இங்கே குறித்தாக வேண்டும்!
யுகங்களில் வாழும் கவிஞர்களின் எண்ணங்கள்.. குறுகிய அளவில் இல்லாமல்.. அடுத்தத் தலைமுறைகளையும் எண்ணும் எண்ணமே மிகச் சிறந்தது! அதுவும் புதிய தலைமுறைக்காக கவிஞரின் நெஞ்சம் பூபாளமிசைத்திருக்கிறது பாருங்கள்! புதியதோர் உலகம் செய்வோம் என்று அவரின் சிந்தனை வீச்சு பற்றி மக்கள் எங்கும் பேச்சு!
புரட்சியின் விளைவுகளாய் ஏற்படும் நன்மைகளின் பட்டியல் பாடலாகிறது! புரட்சித்தலைவர் பாடும் கொள்கை முழக்கத்திற்கு ஊட்டம் கிடைக்கிறது! பொதுவுடைமைக் கொள்கைக்கு ஊட்டம் தரும் உணர்ச்சிமிகு வரிகளால் சமுதாய அக்கறையின் வெளிப்பாடாய் உயர்வுக்கு என்ன வழிகள் என்கிற உத்திகளும் உள்ளடக்கி புதிய உலா வருகிற பாடலாய்.. ஆம்.. விடிவெள்ளிப் பாடலாய்!
புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்.
இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
‘இது எனதெ’ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள்தனி’எனும் மனிதரைச் சிரிப்போம்!
இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்
“புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்
இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்
இதுஎனதென்றுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்”. – பாரதிதாசன்