இங்கிலாந்திருந்து ஒரு மடல் . . . . . (136)
சக்தி சக்திதாசன்
அன்பினிய உள்ளங்களே !
அன்பிற்கோர் திருநாளாம் நத்தார் தினத்திலே இம்மடலின் வாயிலாக கனத்த இதயத்துடன் உங்களுடன் மனம் திறக்கிறேன்.
இப்புனித நாளிலே கனத்த உள்ளத்துடன் மறைந்த இயக்குனர் சிகரம் கே.பி அவர்களின் மறைவுக்கான இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சினிமா என்பது வெறும் ஆடம்பரப் பொழுது போக்குக்கான ஒரு ஊடகம் அல்ல அது வாழ்க்கையின் யதார்த்தங்களை எமக்குப் புலப்படுத்தும் ஒரு ஜனரஞ்சகமான ஊடகம் எனும் உண்மையை ஆழமாகப் புரிய வைத்தவர் இயக்குனர் சிகரம் கே.பி.
2010ம் ஆண்டு என எண்ணுகிறேன் எனது நூலான “தீஞ்சுவைத் திருக்குறள் கதைகள் ” நூலை சென்னைப் புத்தக விழாவில் வெளியிட்டு வைத்தவர் ஜயா கே.பி அவர்கள்.
எனது சார்பில் அவ்விழாவில் எனக்காக கலந்து கொண்ட எனது மாமனார்(மனைவியின் தந்தை) அவர்களை கெளரவித்து பூந்துவாலை போர்த்தினார் இவ்வுயர்ந்த மனிதர்.
அவ்விழாவில் துரதிருஷ்ட வசமாகக் கலந்து கொள்ள முடியாததினால் மறுமுறை சென்னை வந்த போது அவரைச் சந்தித்து எனது அன்பான நன்றிகளைத் தெரிவித்து அவரது ஆசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக அவரைச் சந்தித்த போதுதான் நான் அவரை முதன்முறையாகச் சந்தித்தேன்.
மிகவும் எளிமையான ஒரு மனிதர் தான் ஒரு இயக்குனர் சிகரம் என்று எவ்விதமான பெருமையும் கொள்ளாது விலாசமேயற்ற ஒரு எளிய எழுத்தாளனை அன்புடன் வரவேற்று உபசரித்த ஓர் உயர்ந்த உள்ளத்தின் சொந்தக்காரர்.
எனது மனைவியின் ஆர்வ மிகுந்த பல கேள்விகளுக்கு பொறுமையுடன் ஆழமிக்க கருத்துக்களை பதிலாகத் தந்த ஒரு பண்பாளர் ஜயா கே.பி அவர்கள்.
ஒரு மனிதன் எத்தனை செல்வம் சேமித்தான் என்பது பெருமையல்ல அவனால் எத்தனை பேருடைய வாழ்வில் நேர்மறையான மார்றங்கள் நிகழ்ந்தன என்பதுவே முக்கியம்.
இவ்வரிய உயர்ந்த அற்புத கலைஞனினால் திரைவானில் உதித்து இன்றும் மிளிர்ந்து கொண்டிருக்கும் கலை நட்சத்திரங்கள் எத்தனை, எத்தனை ?
அன்னாரின் மறைவுக்காக அவரது குடும்பத்தினருக்கும், அவ்ரை இழந்து தவிக்கும் தமிழக திரையுலக உறவுகளுக்கும், அவ்ரால் பண்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட உன்னதக் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அவர் ஆத்மசாந்திக்காக அனவர்க்கும் பொதுவான இறையின் பாதம் பணிந்து வேண்டுகிறேன்
—
திரையுலக வானில் ஒரு விடிவெள்ளி
திரும்பப் பெறமுடியாத நவரத்தினம்
இயக்குனர்களின் சிகரமாய்த் திகழ்ந்த
இனிய எம் கே.பி ஜயா மறைந்தாரா ?
—
மலையொன்று சரிந்ததினால் இன்று
மனங்கள் பல புதைந்தன துயரச் சேற்றினுள்
விலையென்ன கொடுத்தாலும் பெறமுடியா
வியத்தகு வித்தகரை நாமின்று இழந்தோமே
—
திரையுலகம் தனில் விரிந்த வானத்தில்
திறமை மிக்க நட்சத்திரங்களின்
ஒளிர்விற்கு காரணமாயிருந்த
ஓருயர்ந்த சிற்பியின் மறைவு
—
மனம் விட்டகலா பல திரைப்படங்கள்
மிளிரக் காரணமான இயக்குனர் சிகரம்
மறைந்து விட்டாரென அறிந்ததும்
மனமெங்கும் ஏதோ இனம் புரியா வேதனை
—
பிறப்பதும் அவர்கள் பின் இறப்பதும்
மானிட வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள்
இருப்பினும் சிலரே மக்கள் மனதில் நீங்கா
இருப்பிடம் வரைந்து செல்வார் என்பதே உண்மை
—
அன்றொரு நாள அவர்தம் இல்லத்தில்
அடியேனைச் சந்தித்து மனம் மகிழ அளவளாவி
இதயம் அகலா கணங்களை பரிசளித்து
இயக்குனர் சிகரமும் ஒரு மனிதனே
—
எனும் உண்மை உணர்த்திய உயர்ந்தவர்
என்று இனி அவர் போல யார் வருவார் ?
கனக்குது இதயம் கலைஞனின் மறைவறிந்து
துடிக்குது விரல்கள் சிதறுது கவிதை வரிகள்
—
அண்ணாமலையான் பாதம் பணிகிறேன்
அன்னார் ஆத்மசாந்திக்காயும் அவர்தம்
குடும்பம் நண்பர் உறவினர் மனங்களில்
கூடட்டும் சாந்தி என்பதற்காகவும்.
—
மீண்டும் அடுத்த மடலில்
துயரத்துடன்
சக்தி சக்திதாசன்